Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

நற்றிணை - 2
ஒளவை துரைசாமி



 


1. நற்றிணை - 2
2. பதிப்புரை
3.  வெளியந்திண்ணனார்
4.  செம்பியனார்
5.  மருதன் இளநாகனார்
6.  பேரிசாத்தனார்
7.  முட்டத்திருமாறன்
8.  தொண்டைமான் இளந்திரையன்
9.  பெருவழுதியார்
10. இளவேட்டனார்
11. மீளிப் பெரும்பதுமனார்
12. பூதனார்
13. உலோச்சனார்
14. பெருங்குன்றூர் கிழார்
15. எயினந்தை மகனார் இளங்கீரனார்
16. தொல்கபிலர்
17. அம்மள்ளனார்
18. கந்தரத்தனார்
19. குன்றியனார்
20. பாலைபாடிய பெருங்கடுங்கோ
21. பெருங்குன்றூர் கிழார்
22. மாங்குடிகிழார்
23. ஒருசிறைப் பெரியனார்
24. செங்கண்ணனார்
25.காஞ்சிப்புலவனார்
26. மோசி கண்ணத்தனார்
27. கச்சிப் பேட்டுக் கதக்கண்ணனார்
28. ஓதலாந்தையார்
29. சீத்தலைச் சாத்தனார்
30. நற்சேந்தனார்
31. ஒளவையார்
32. நெய்தல் தத்தனார்
33. உலோச்சனார்
34. பெருங்கண்ணனார்
35. நற்றாமனார்
36. கருவூர்க் கதப்பிள்ளையார்
37. தூங்கல் ஓரியார்
38. நத்தங் கொற்றனார்
39. பெருங்கண்ணனார்
40. அம்மூவனார்
41. பெருங் கோசிகனார்
42. பூதங்கண்ணனார்
43. அரிசிலங் குமரனார்
44. இடைக்காடனார்
45. கண்ணகன் கொற்றனார்
46.கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
47. நம்பி குட்டுவன்
48. கந்தரத்தனார்
49. கொள்ளம்பாக்கனார்
50. கண்ணம் பாளனார்
51. உலோச்சனார்
52. கடுவன் இளமள்ளனார்
53. இளநாகனார்
54. ஆலம்பேரி சாத்தனார்
55.தனிமகனார்
56. நல்லாவூர் கிழார்
57. பாரதாயனார்
58. கண்ணங் கொற்றனார்
59. இளவேட்டனார்
60. வெள்ளைக்குடி நாகனார்
61.கண்ணம் புல்லனார்
62. வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
63. பெருந்தலைச் சாத்தனார்
64. நெய்தல் தத்தனார்
65. தாயங்கண்ணனார்
66. பேயனார்
67. நல்வெள்ளியார்
68. மருதன் இளநாகனார்
69. உலோச்சனார்
70. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
71. இடைக்காடனார்
72. பரணர்
73. செங்கண்ணார்
74. நக்கீரனார்
75. பிரமன் காரி
76. பாலை பாடிய பெருங்கடுங்கோ
77. மதுரைக் கணக்காயனார்
78. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார்
79. பெருந்தலைச் சாத்தனார்
80. பூதன் தேவனார்
81. உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
82. கயமனார்
83. உம்பற்காட்டு இளங்கண்ணனார்
84. அதியன் விண்ணத்தனார்
85. கயமனார்
86. நெய்தல் தத்தனார்
87. பரணர்
88.அறுவை வாணிகன் இளவேட்டனார்
89. ஒளவையார்
90. கண்ணகனார்
91. இடைக்காடனார்
92. நக்கண்ணையார்
93. உலோச்சனார்
94. பரணர்
95. நற்றாமனார்
96. மதுரை மருதன் இளநாகனார்
97. பெருங்குன்றூர் கிழார்
98. வெள்ளைக்குடி நாகனார்
99. நக்கீரர்
100. கயமனார்
101. பேரிசாத்தனார்
102.கூடலூர்ப் பல் கண்ணனார்

 


நற்றிணை - 2

 

ஒளவை துரைசாமி

 

 

நூற் குறிப்பு
  நூற்பெயர் : நற்றிணை – 2
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 15
  உரையாசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 8 + 496 = 504
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 315/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர்: ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தரா கவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ்அறிஞரின்107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

நற்றிணை
மூலமும் விளக்கவுரையும்

வெளியந்திண்ணனார்


இச்சான்றோர் வெளியன் என்பாற்கு மகனாவர். வெளியன், வெளிமான் என்ற பெயருடைய மக்கள் பலர் பண்டை நாளில் இருந்துள்ளனர். திண்ணன் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றி வேறு வரலாற்றுக் குறிப்புக்கள் கிடைத்தில. இவர் பெயர் திண்ணனார் என்றும், வெள்ளியந் திண்ணனார் என்றும் காணப்படுகிறது.

தலைமகட்குத் தன்பால் காதலுண்மை துணிந்த தலைமகன் அக்காதல் முறுகிப் பெருகும் வண்ணம் களவொழுக்கத்தை மேற்கொள்ள விரும்பினான். அதற்கு அவளுடைய உயிர்த் தோழியின் துணைமை இன்றியமையாதென உணர்ந்து அவளது துணைபெறல் வேண்டித் தனக்கு அவளால் தீரத் தகுவதொரு குறையுடையவன் போலச் சொல்லாடலுற்றான். தலைமகட்கும் அவனுக்கும் தனிமையில் தோன்றிப் பொலியும் காதலுறவைத் தோழி அறியாமையால் தொடக்கத்தில் அவனை அணுகவிடாது பேசலுற்றாள். அவன் பன்முறையும் தொடர்ந்து தன்குறை தோன்ற உரையாடியது தோழியின் உள்ளத்தில் ஆராய்ச்சி பிறப்பித்தது. தலைமகளுடைய நோக்கமும், அவன் வரவால் அவள்பால் விளங்கும் கிளர்ச்சியும் அவளது அறிவை நன்கு பணிகொள்ளத் தொடங்கின. இதுகாறும் அயலான் போலத் தலைவனைக் கருதிய அவளது உள்ளம், அன்பு செய்தற் குரியான் எனக் கருதி நோக்கும் அளவிற்கு நெகிழ்வதாயிற்று. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைமகன், தன் மனக் காதலைச் சில சொற்களால் தோழி அறிய உரைக்கலுற்று, “பரதவர் மகளாகிய தலைமகளது மான் போன்ற நோக்கம் எனக்கு வாய்ப்பதன் முன்பெல்லாம் இக்கடற்றுறை யிடத்திலுள்ள பாக்கமும் அதனைச் சார்ந்த கானற் சோலையும் யான் உறைதற்கு மிக்க இன்பமாக இருந்தன; இப்போது அவை மிகவும் இரங்கத்தக்க நிலையைப் பயந்துள்ளன. இதற்கு என் செய்வேன்” என அவள் செவிப்பட மொழிந்தான். தன் முகத்தை உயர்த்திக் கண் பார்வையை விரித்துத் தலைமகனை வியப்போடு நோக்கினாள் தோழி. இந்நிகழ்ச்சியைத் திண்ணனார் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

முற்றா மஞ்சட் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கிப்
புன்னையங் கொழுநிழல் முன்னுய்த்துப் பரப்பும்
1துறைநணி இருந்த பாக்கமும் உறைநனி
இனிதுமன் அளிதோ தானே 2முனிவின்று
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள் மானமர் நோக்கம் காணா வூங்கே.

இது, பின்னின்ற தலைமகன் தோழி கேட்பச் சொல்லியது.

உரை
முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்ப - முற்றாத மஞ்சட் கிழங்கின் பசிய புறத்தைப் போல; சுற்றிய பிணர - உடலைச் சுற்றிப் பிணர் பொருந்திய; சூழ்கழி இறவின் - கடற்கரையைச் சூழவுள்ள கழியில் வாழும் இறாமீன்களை; கணங் கொள் குப்பை - கூட்டமாகக் குவித்த குவியல்; உணங்குதிறன் நோக்கி - வெயிலில் உலரும் வகையை எண்ணி; புன்னையங் கொழு நிழல் முன்னுய்த்துப் பரப்பும் - புன்னை மரங்களின் கொழுவிய நிழற்கண் முன்னர்க் கொண்டு சென்று பின்னர் வெயில் வந்தவுடன் பரப்பி உலர்த்தும்; துறைநணி இருந்த பாக்கமும் - கடற்றுறைக்கு அணித்தாக இருக்கும் பாக்கமும்; உறைநனி இனிதுமன் - உறைவதற்கு மிக்க இனிதாக இருந்தது; தான் முனிவின்று அளிது - அதுதானும் இப்போது வெறுக்கப்படுவ தன்றாயினும் இரங்கத் தக்க தாயிற்று. காண்; அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் - அகன்ற அல்குலையும் மெல்லிதாய் அமைந்த இடையினையு முடைய; மீன் எறி பரதவர் மட மகள் - மீன்களை வேட்டையாடிப் படுக்கும் பரதவருடைய இளைய மகளுடைய; மான் அமர் நோக்கம் காணவூங்கு - மான்போன்று அமர்த்த கண்களைக் காணாமுன்பு. எ-று.

மடமகள் நோக்கம் காணா வூங்கு, பாக்கம் உறைநனி இனி துமன் அளிது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முற்றிய மஞ்சட் கிழங்கின் புறம் நிறம் ஒவ்வாமையின், முற்றா மஞ்சள் என எடுத்தோதினார். பிணர், சருச்சரை, கடற்கானலைச் சூழ்ந்து கிடப்பது பற்றிக் கழி. சூழ்கழி எனப்பட்டது. இறவு, இறாமீன், கணங்கொள் குப்பை என்றது, மிகுதிபற்றி ஞாயிற்றின் கதிர் நுழையாவாறு செறியத் தழைத்திருக்கும் புன்னையின் நீழலைக் கொழுநிழல் என்றார். “முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்1” என்ப பிறரும். கடற்றுறையின் அணிமையில் இருக்கும் திறம் தோன்ற துறைநணி யிருந்த பாக்கம் என்றார். பாக்கம் நெய்தல் நிலத்து ஊர், உறை, முதனிலைத் தொழிற் பெயர். இனிதுமன் என்றது. இப்போது இனிதன்று என்பதுபட நிற்றலின், ‘மன்’, கழிவின்கண் வந்ததாம். தன் உள்ளத்தின் சிதைவு பிறர்க்குப் புலனாகாவாறு மறைத்து நோக்குதலின், காதற் புதுநோய் தீண்டிய பரதவர் மகளது பார்வையை மானமர் நோக்கம் என்றார். கழித்துறையும் கானற் சோலையும் தழீஇ நிற்றலின் பாக்கமும் என்றவிடத்து உம்மையை எச்சமாகக் கோடலு மொன்று, பிணர என்னும் பெயரெச்சம் இறவின் என்னும் பெயர் கொண்டு முடிந்தது.

பின்னின்று உழலும் தன் காதன்மையும் வருத்தமும் நோக்காது கடற்றுறையையும் பாக்கத்தின் சிறப்பையும் நோக்கிச் செம்மாந்து இயலும் தோழியை மதியுடம்படுக்கும் குறிப்பால் நாடோறும் வந்து பின்னின்று வருந்துகின்றா னாகலின், தன் வருத்தமிகுதி புலப்பட, துறைநணி யிருந்த பாக்கமும் உறைநனி இனிது மன் என்றான். தான் கொண்டு வருந்தும் காதற்பெருக்கைத் தலைமகள்அறிந்து தன்பால் அருளும் குறிப்பினளாயினள்; ஆகவே அவள்பால் என் குறையை உரைத்தல் நன்று என்பான், மீனெறி பரதவர் மடமகள் மானமர் நோக்கம் என்றும், தலைமகள் பார்வைக் கண் விளங்கும் மருட்சி நின்னை மதியுடம்படுக்கும் குறிப் பிற்று என்பது தோன்ற, மானமர் நோக்கம் என்றும் சிறப் பித்துக் கூறினான். நோக்கம் பெற்றபின், அவள் கூட்டம் நல்காமையின் துறையும் பாக்கமும் உறைவு இனிய அல்ல வாயின என்பது குறிப்பு. இறவின் குப்பையது உணங்குதிறன் நோக்கிப் பாக்கத்து உறையும் பரதவர் அதனைப் புன்னை நிழலில் முன்னுய்த்துப் பரப்புவர் என்றது, தலைமகளது மானமர் நோக்கத்தால் வருந்தி உணங்கும் தன்திறம் நோக்கித் தலைமகளைப் புன்னை நீழற்கண் கொண்டுய்த்தல் வேண்டும் எனத் தலைமகன் தன்கருத்தைக் குறிப்பாய்த் தோழிக்குச் சொற்றவாறு, மீனெறியும் பரதவர் மகள் என்றது, தன் நோக்கத்தால் என் வலியை எறிந்து என்னை வருந்தச் செய்தல் தலைமகட்கு இயல்பாயிற்று என்றவாறு. அல்குல், ஐதமை நுசுப்பு என்று எடுத்து மொழிந்தது; தலைமகளது மாண்பைத் தோழிக்கு வரைந்து காட்டியவாறு.

“ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை, ஆனா வகைய திணைநிலைப் பெயரே1” என்ற நூற்பா வுரையில் இதனைக் காட்டி, “இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது”என்பர் நச்சினார்க் கினியர்.

செம்பியனார்


செம்பியன் என்பது சோழர்குடிக் குரிய பெயர்களுள் ஒன்று. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்றொரு சோழன் பண்டைநாளில் வாழ்ந்தமை நாடறிந்தது. சோழன், வளவன், சென்னி, என்பன போலச் ‘செம்பியன்’ என்பதும் பயில வழங்கு வது. இவ்வாறே செம்பியன் என மக்கட்குச் சிறப்பாகப் பெய ரிட்டு வழங்குவதும் தொல்வழக்கு. தஞ்சை மாவட்டத்தில் செம்பியன் இருப்பு, செம்பியன் காட்டூர்2 செம்பியன் நல்லூர்3 செம்பியன் மணலி4 என்ற ஊர்களும் செம்பியன் என்ற பெயரைச் சிறப்பாகக் கொண்டு விளங்குதலை நோக்கின், இவை ஒருகால் இச்சான்றோர் பெயரால் தோற்றினவோ எனவும் நினைத்தற்கு இடமுண்டாகிறது. இவர் பாடியதாக இப்பாட்டு ஒன்றுதான் இத்தொகை நூலில் காணப்படுகிறது.

களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகும் தலைமக்களிடையே காதலுறவு பெருகி ஒருவரையொருவர் இன்றியமையாத அளவிற் சிறந்து நிற்பவும், தலைமகன் வரைந்து கோடலை நினையாது களவே விரும்பி ஒழுகினான். அதனால் தலை மகட்குக் காதலுணர்வு பெருகிக் கையறவு தருகுவதாயிற்று. அந்நிலையில் உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் கருதிக்கொண்டு நெஞ்சொடு பேசுதலும், கேட்டல் உரைத்தல் முதலிய செயல் இல்லாத அஃறிணைப் பொருள்களை அவை உடையன போலக் கருதிக் கேட்குமாறும், உரைக்கு மாறும், உரைநிகழ்த்துதலும்; காமக் காதலால் கையறவு பட்டார் பால் நிகழ்வது இயல்பு. அதனால் தலைமகள் மறுபடியும் தான் தினைப்புனம் காத்தற்கு வந்தபோது புனத்திற்படியும் கிளி களை நோக்கி, “கிளிகளே, இப்புனத்திற்கு போந்து நுங்கட்கு வேண்டுவனவாகிய உணவுப் பொருளைப் பெற்றுக் கொண்டு போவதில் என்பொருட்டு நீவிர் இனி அஞ்ச வேண்டா; ஆனால் ஒன்று; நீவிர் திரும்பிச் செல்லும் போது என் பொருட்டு ஒன்று செய்யுமாறு நும்மைக் கைதொழுது வேண்டுவேன்; அஃது யாதெனின், பலாமரங்கள் நிறைந்த சாரலையுடைய, அதோ தோன்றும் மலைப்பக்கம் செல்குவீராயின், அங்கே உறையும் என் காதலரைக் கண்டு, அவர்பால் யான் இம்மலைச் சாரற் புனத்தில் தினைக்காவல் பூண்டுள்ளேன் என்ற செய்தியை அன்பு கூர்ந்து தெரிவிப்பீர்களாக,” என உரைக்கலுற்றாள்.

பண்டு தினைக்காவல் மேற்கொண்ட போது காதற்றொடர்புற்றுக் களவொழுக்கத்தை மேற்கொண்ட காதலன் கடிதின் வரைவு மேற்கொள்ளாமைக்குச் சிறிதும் வெறுப்புறாது, அவனைத் தலைப்பெய்து பெறும் காதற்கூட்ட இன்பத்தையே மேலும் விழைந்து அறந்தலைப் பிரியாது ஒழுகும் நல்லொழுக்கம், அவளது இவ்வுரைக்கண் வெளிப்படுவது கண்ட செம்பியனார், இப்பாட்டின்கண் அதனை அழகுறத் தொடுத்துப் பாடுகின்றார்.

கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப்1 பசுங்கிளி
அஞ்சல் ஓம்பி ஆர்பதம் கொண்டு
நின்குறை முடித்த பின்றை என்குறைச்
2செல்லல் வேண்டுமால் கைதொழு திரப்பல்
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
நின்கிளை 3மருங்கினிற் சேறி யாயின்
அம்மலை கிழவோற் குரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவ லாயினள் எனவே
இது காமம் மிக்க கழிபடர் கிளவி.

உரை
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பசுங்கிளி - முற்றித் தலைவளைந்து நிற்கும் தினைக்கதிர்களை உண்ட சிவந்த வாயையும் பசுமையான நிறத்தையு முடைய கிளியே; அஞ்சல் ஓம்பி - அச்சமின்றி; ஆர்பதம் கொண்டு - வேண்டும் உணவுப் பொருளை நிரம்பக் கொண்டுசென்று; நின்குறை முடித்த பின்றை - நினக்கு இன்றியமையாத பணியைச் செய்து
முடித்தபின்பு; என்குறை செல்லல் வேண்டுமால் - எனது குறையொன்றையும் முடித்துத் தரல் வேண்டிச் செல்லவேண்டுவேன்; கைதொழுது இரப்பல் - அது குறித்து யான் நின்னைக் கைதொழுது கேட்டுக் கொள்ளுகிறேன்; அவர் நாட்டு பல்கோள் பலவின் சாரல் - அவரது நாட்டின் பலவாகிய குலைகளையுடைய பலாமரங்கள் நிறைந்த சாரலில்; நின்கிளை மருங்கினில் சேறியாயின் - நின்னுடைய சுற்றமாகிய கிளிகள் வாழும் இடத்திற்குச் செல்கின்றாயாகலின்; அம்மலை கிழவோற்கு - அந்த மலைக்கு உரியனாகிய என் காத
லற்கு; உரைமதி - எடுத்துச் சொல்லுவாயாக; இம்மலைக் கானக் குறவர் மடமகள் - இம்மலையிடத்தே வாழும் கானவேட்டுவருடைய இளமகள்; ஏனல் காவல் ஆயினள்
என - மீட்டும் தினைப்புனங் காவலை மேற்கொண்டாள் என்று எ-று.

பசுங்கிளி, அஞ்சல் ஓம்பி, ஆர்பதங் கொண்டு, நின்குறை முடித்த பின்றை, அவர்நாட்டுச் சாரல் சேறியாயின், அம்மலை கிழவோற்கு இம்மலை மடமகள் ஏனல் காவல் ஆயினள்
என உரைமதி; என்குறை இதனைச் செய்தற்குச் செல்லல் வேண்டும்; அதற்காக நின்னைக் கைதொழுது இரப்பல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முற்றியவழித் தினைமணிகளின் பொறை ஆற்றாது கதிர்கள் தலை சாய்ந்து விடுவதுபற்றி, கொடுங்குரல் என்றும், அக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லும் இயல்பின வாகலின் குறைத்த என்றும் கூறினார். கொடுங்குரலைக் குறைக்கும் வாய் செவ்விதாகல் வேண்டும் என்ற நயம் தோன்றக் கொடுங்குரல் குறைந்த செவ்வாய்ப் பசுங்கிளி என்றார். கிளியின் வாய் சிவந்திருத்தல் இயல்பு. பிறர் விளைத்த கதிரைத் தான் கொய்து சேறல் குற்றமாதலை உணராது புனத்திற் படிதலால், தினைகவரும் கிளிகளை அச்சுறுத்தி ஓப்புவராகலின் கிளிகட்கு அச்சம் இயல்பு ஆயிற்று. ஆர்பதம், உண்ணும் செவ்வியுடைய உணவுப்பொருள், கதிர் கொய்து சென்று பெடைக்கும் பார்ப்புகட்கும் நல்கும் இன்றியமையாத பணியாதலின் கிளியின் செயலைக் குறை என்றார். குறை - இன்றியமையாத பொருள்; தன்குறை முடிக்காமல் பிறர் குறை முடிக்கக் கருதுதல் நன்
றன்று என்பது பற்றியும், என்குறையை முடித்தபின் நின்குறையை முடிக்க என்றல் குறையிரப்போர்க்கு முறையன்று என்பது பற்றியும்; நின்குறை முடித்த பின்றை எனல் வேண்டிற்று; கோள், குலை; கிளையுமாம்; பன்முறையும் காயும் கனியும் கொள்ளப்படுவதுபற்றி பல்கோட் பலவு எனப்பட்டது என்றுமாம்; “பல்கோள் நெல்லி1”என்றாற்போல.

காதல்வேட்கை மீதூர்தலால் கழிபடர் உற்றுச் செய்வகை அறியாது கிளியைக் காதலன்பால் தூதுவிடக் கருதுகின்றாள். ஆகலின் உயர்சொற் கிளவியால் கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பசுங்கிளி என்றாள். தன்னைக் காணினும் தன்மொழி கேட்பினும் பலவாய்ப் போதரும் கிளியினம், தன் கைக்கவணுக்கும் தட்டைக்கும் அஞ்சி நீங்குதலின், அஞ்ச வேண்டா எனத் தேற்றுவாள், அஞ்சல் ஓம்பி என்றும் அச்சமிகுதியால், வேண்டுவன குறையக் கொள்ளாது நிரம்பக் கொண்டு செல்க என்பாள். ஆர்பதம் கொண்டு என்றும், பிறர் விளைத்த பொருளைத் தான் காவலிகந்து கவர்ந்தேகுதல் முறையன் றாயினும், அது நினக்கு இன்றியமையாதது என்பது பற்றிச் செய்கின்றனை யாகலின், அதனை விரும்பிய வண்ணமே, செய்க என்பாள், நின்குறை முடித்த பின்றை என்றும் கூறினாள். தமக்குற்ற குறையொன்றை முடிக்குஞ் செயலில் ஈடுபட்டோர் அதனை முடித்தல்லது பிற எதனையும் கருத்திற் கொள்ளாமை இயற்கை யாதலின் நின்குறையை முதற்கண் முடிக்க என்பாள் நின்குறை முடித்த பின்றை என்றும், நின்குறை முடிதற்குயான் உதவுவது போல என்குறை யொன்று உளது, அதனை நீ முடித்துத் தருதல் வேண்டும் என்பாள்; என்குறை செல்லல் வேண்டுமால் என்றும், அஃது நினக்கு அரியதொன் றன்று; நின்குறை முடிந்தபின், கிளையாகிய கிள்ளையினத்தைக் காணச் செல்குவை யாகலின், அப்பொழுது என்பொருட்டு என் காதலன்பால் செல்லுதல் வேண்டும்; இதுவே எனக்கு நீ செய்யக் கூடிய உதவி என்பாள். நின்கிளைமருங்கினில் சேறியாயின் என்றும், செல்லல் வேண்டுமால் என்றும், இதனைப் புறக்கணியாது செய்தல் வேண்டும் என்பாள், கைதொழுது இரப்பல் என்றும் கூறினாள். என் காதலனும் மிக்க சேய்மையி லுள்ளவனல்லன்; அதோ அண்மையில் தோன்றும் மலைக்குரியன் என்பாள் அம்மலைகிழவோன் என்றும், அவன்பால் சென்றவிடத்து, யான் பண்டுபோல் ஏனல் காவலை மேவினேன் என்பதனை மாத்திரம் உரைத்தல் வேண்டும் என்றற்கு அம்மலை கிழவோற்கு உரைமதி இம்மலைக் குறவர் மடமகள் ஏனல் காவல் ஆயினள் என என்றும் கூறினாள். பண்டு ஏனல் காவல் மேவிய போது இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தமை நினைப்பித்தற்குத் தினைக்காவலை எடுத்து மொழிந்தாள், இம்மலை, முற்றிய தினைமணிகளை யுடைத்தாதல் போல, அம்மலை பல்கோட் பலவினை யுடைத்து; ஆகவே ஆண்டுச் செல்வதால் நீயும் பயன்பெறுகுவை என்றற்குப் பல் கோட் பலவின் சாரல் எனச் சிறப்பித்தாள்.

“மறைந்தவற் காண்டல்”1 எனத் தொடங்கும் நூற்பா வுரையில் “அன்னபிற” என்றதனால் “இன்னும் தலைவி கூற்றாக இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க” என்று கூறி, இப்பாட்டைக் காட்டி, “இது பகற் குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

மருதன் இளநாகனார்


இல்லிருந்து நல்லறம் புரிந்துவரும் புதுமண வாழ்வில் தலைமகன் பொருள் குறித்துப் பிரியவேண்டிய தொரு கடமை யுடையனானான். கடமைக்கும் காதலுக்கும் கடும்போர் நிகழுமிடம் இளமைச் செவ்வியாகலின், அப்போர்க்கு இடமான அவனது நெஞ்சின்கண் கடமை வென்றது; காதலிபால் அரிதின் விடைபெற்ற அவன் நெடுவழி கடந்து செல்வானாயினன். வழியில் சுரத்தின் அருமையும் வெம்மையும் ஒருபால் வருத்
தினும், ஒருபால் ஆங்காங்கு வாழும் விலங்கும், புள்ளும் ஆகிய உயிரினங்களிடையே நிகழும் காதலின்பக் காட்சிகள் தலைமகன் மனத்தைக் கலக்கிக் கவல்வித்தன. வெம்மை மிகுதியால் நீர்ப்பசையற்றுத் தோன்றிய சுரத்தின்கண், ஒருபால் களிற்று யானை ஒன்று சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றதாக; அவ்வழியே போந்த செந்நாய் ஒன்று சிறுநீர் ஈரத்தைக் கண்டு அதன்கட் கிடந்து தன் வெம்மையைத் தணித்துக் கொள்ள முயலவும்; அதனைக் கூடி இன்புற்றுப் பிரிந்த ஆண்நாய் தன் பிணவின் பொருட்டு வேட்டைக்குச் சென்றது. பெண்ணாய் அதன் இன்பவரவை நினைந்து வருந்திக் கொண்டு கிடந்தது. இக்காட்சி தலைமகன் உள்ளத்தில் அவனுடைய காதலியை நினைப்பித்துக் காதல்வேட்கையைக் கிளரச் செய்து வருத்தத் தொடங்கிற்று. வருத்த மிகுதியால் ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சை நோக்கி, “இந்த நெடுஞ்சுரத்துத் தனித்துப் போந்த நெஞ்சமே! மேற்கொண்டு போந்த வினை குறித்து யாம் தொடர்ந்து செல்வதா? அன்றி இடையில் மடங்கி மீளத் திரும்பி நம் காதலிபால் செல்வதா? செய்யத் தக்கதனை ஒரு தலையாகத் துணிந்து கூறுக” என்று வினவலுற்றான்.

காதல் விளைக்கும் வருத்தத்தினும் கடமையை இகழ்ந்தாற் பிறக்கும் இளிவரவுக்கு அஞ்சிக் கடமை வழியொழுகிப் புகழ்பெறுவது தலைமக்களின் தலைமைச் செயல்; அதனால் தலைமகன் மீளுவதின்றி மேலும் தொடர்ந்து சென்று கடமை முடிவில்
தான் மீள்கின்றான். ஆயினும் இடையில் அவன் தன் தன்மைக்கு மாறாகக் கடமையை நெகிழ்ந்து காதற்காம வயப்பட்டுக் காதலி யிருக்கும் மனைநோக்கி வரத் துணிந்தான் போல நிகழும் அவனுடைய உரையின்கண் அவனது தலைமை மாண்பு தக்காங்கு வெளிப்படுவது கண்ட மருதன் இளநாகனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

ஒன்றுதெரிந் துரைத்திசின் நெஞ்சே! புன்கால்
சிறியிலை வேலின் 1பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறுநின் றிறந்த நீரல் லீரத்துப்
பால்வீ தோன்முலை அகடுநீலஞ் சேர்த்திப்
பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்
2மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபிற் புணர்வு 3நினைந் திரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே.
ஆள்வினைக் ககல்வாம் எனினும்
மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே.

இது, பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.

உரை
நெஞ்சே - ஒன்று தெரிந்து உரைத்திசின் - யாதேனும் ஒன்றினைத் துணிந்து சொல்வாயாக; சிறியிலை வேலின் பெரிய கொன்று - சிறிய இலைகளையுடைய வேல மரங்களில் பெரியவற்றை வீழ்த்து; கடாஅம் செருக்கிய - மதம் செருக்கித் திரியும்; கடுஞ்சின முன்பின் களிறு நின்றுஇறந்த நீரல் ஈரத்து - மிக்க சினமும் வன்மையுமுடைய களிறு கழித்து ஒழிந்த சிறுநீரால் உளதாகிய ஈரத்தின் கண்; பால்வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி - பால் வற்றித் தோல் சுருங்கிய முலையையுடைய வயிற்றை நிலத்திற் படிவித்து; பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய் - பசி வருத்துதலால் சுருண்டு கிடக்கும் செந்நாயின் பொருட்டு; மாயா வேட்டம் போகிய கணவன் - கெடாத வேட்டை மேற் சென்ற கணவனாகிய ஆண்நாயின்; பொய்யா மரபின் புணர்வு நினைந்து இரங்கும் - தப்பாத முறைமையால் மீண்டுவரும் வரவை நினைந்து வருந்தி யுறையும்; விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாம் - புதுமை யுடைத்தாகிய வெவ்விய காட்டிடையே நினைந்து வருந்துகின்றோம் யாமாக; ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் - மேற்கொண்டவினை குறித்து மேலும் செல்வ தாயினும்; மீள்வாம் எனினும் - வினை கருதாது மீளத் திரும்பிச் செல்வதாயினும்; நீ துணிந்தது - நீ கொண்ட துணிவினை எ.று.

வெங்காட்டு வருந்துதும் யாம்; ஆகலின், அகல்வாம் எனினும், மீள்வாம் எனினும், நீ துணிந்தது ஒன்று, நெஞ்சே, தெரிந்து உரைத்திசின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செந்நாய், கணவன் புணர்வு நினைந்து இரங்கும் என இயையும், ‘சின்’ முன்னிலைக்கண் வந்த அசை; கடாஅம் செருக்கி மதி மருண்டமையின், புல்லிய காலையும் சிறு சிறு இலைகளையுமுடைய வேலமரத்தைக் களிறு கொன்று சாய்த்ததென்க. வெயில் வீற்றிருந்த வெம்பல் அருஞ்சுரத்தில் குளிர்ந்த நிழல் தரும் மரங்கள் இன்மையின் களிறு கழித்த சிறுநீரால் உளதாகிய ஈரத்தில் செந்நாய்ப் பிணவு வீழ்ந்து கிடந்ததாம். வெயில் வெம்மை மிக்கு வருந்துங்கால், நாயினம் ஈரநிலம் கண்டவிடத்துத் தன் வயிறு நிலத்திற் படியக் கிடப்பது இயல்பு. பாலின்றி வற்றிய முலைத்தோல் திரங்கித் தோன்றுதலின் பால்வீ தோல்முலை என்றார். செந்நாய், நாயினத்துள் ஒன்று. வேட்டை குறித்துச் செல்லும் செந்நாய் அதன் கண் தப்புவ தின்மையின் மாயாவேட்டம் என்றும், தன்பால் அன்பு செலுத்தும் ஆணின் நன்றியினை மறவாது அதன் இன்ப வரவு நோக்கும் இயல்பு தோன்றப் பொய்யா மரபின் புணர்வு, என்றும், புணர்வு நினையப் பிறக்கும் இன்பத்தினும் வேட்டம் நினைய எய்தும் வருத்தம் மிக்கு நிற்றலின், புணர்வு நினைந்து என்றும், அந்நினைவு தோன்றியதும் புணர்வு பெறுதல் கூடாமையால் வருந்துதல் தோன்ற இரங்கும் என்றும் கூறினார். பசியும், வெயில் வெம்மையும் மிக்கு வருத்தும் வெவ்விய காட்டின்கண் துணையின் வரவை நினைதல் உயிர்க்கு இயல்பாயினும், செந்நாயின் பிணவு அது. செய்வது புதுமையாக இருத்தலின் விருந்தின் வெங்காடு எனப்பட்டது. நெஞ்சினை உளப்படுத்
துரைத்தலின் வருந்துதும் எனப் பன்மை வினை தரப்பட்டது.

மனத்தின்கண் நிகழும் காதற்காமப் பூசலுக்கு ஆற்றாது தன் நெஞ்சினை நெருங்கிக் கூறுகின்றானாதலால், எடுத்த எடுப்பிலேயே ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே என்றான். மேற்கொண்ட வினைமேற் சேறல் நன்று என ஒருகாலும், காதலியை நோக்கிச் செலவு விடுத்து மீளல் நன்று என ஒருகாலும் நினைந்து தெளிவின்றித் கலங்கிக் கையறுதல் பற்றி ஒன்று தெரிந்து என்றும், மேற்சேறல் மீளல் என்ற இரண்டு நினைவுகட்கும் இடையே நெஞ்சம் செயலற் றொழிவது கண்டு உரைத்திசின் என்றும் உரைத்தான். புன்காற் சிறியிலை வேலின் பெரிய மரங்களைக் கொல்வதால் களிற்றுக்குப் பயன் யாதும் இல்லை என்பது தோன்றப் புன்காற் சிறியிலை வேலின் பெரிய கொன்று என்றும்; எனினும், களிறு அதனைச் செய்தற்குக் காரணம் கடாஅம் செருக்கிய தன்றிப் பிறிது இன்மையின் கடாஅம் செருக்கிய என்றும்; கடுஞ்சினமும், பெருவலியும் காரணமாக வேலின் பெரிய மரங்களைக் கொன்றது என்பதற்கு அவற்றை விதந்தும் கூறினான். கடுஞ்சின முன்பின் களிறு கடாஅம் செருக்கித் திரியும் போது அதனது சிறுநீர் அளவிற் பெருகித் தீ நாற்றம் மிக்கு நிற்குமாதலின், அதன் ஈரத்தை ஈயும் ஏறும்புமல்லது பிற எவ்வுயிரும் நாடாவாகப் பசி மிகுதியால் உடல்வாடி, ஓய்வுற்ற செந்நாய், தன்மெய் வெதுப்புத் தணிதற் பொருட்டுக் களிற்றின் சிறுநீர் செய்த ஈரத்தின்கட் கிடப்பது கண்டு கூறுவான், களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப் பால்வீ தோன்முலை அகடு நிலஞ் சேர்த்திப் பசியட முடங்கிய என்றான். பசி மிகுதியால் உடல் வாடிக் கிடக்கும் இடத்தின் தீமை நினையாது ஆங்கே இருந்து வருந்தும் செந்நாய்ப் பிணவின் நிலைகண்ட
அதன் கணவன், அதன்பசி தணிப்பது குறித்து வேட்டம் சென்றமையின் வேட்டம் போகிய கணவன் என்றும், வேட்டத்தில் பெறக் கருதியதனைப் பெற்றன்றி மீளாத பெருந்தகைமை தோன்ற, மாயாவேட்டம் என்றும், வேட்டம் முடிந்து மீள்வது ஒருதலையாயினும் இடையே உண்டாகும் தனிமையால் துயரும், பொறுக்கலாகாமையால் மெலிவும் கொண்டு இரங்குவது கண்டு, பொய்யா மரபிற் புணர்வு நினைந்து இரங்கும் என்றும் கூறினான். பிணவின் பசி தணித்தற் கண் அது பொய்த்தல் இன்மையின், பொய்யா மரபிற் புணர்வு எனச் சிறப்பிக்கின்றான். வறுமையால் வாடிப் பசியால் மெலிந்து கிடக்கும் பிணவின் பொருட்டுச் செந்நாயின் ஆண் வேட்டம் செல்வதையும், பிரிவாற்றாத பிணவு தனிமை நினையத் தோன்றும் வருத்தத்தில் அதன் உள்ளம் செல்வதையும் தலைமகன் எடுத்தோதியது. வறுமையின் கொடுமையை முற்பட நினைந்து பொருள்வயிற் பிரிந்து போதரும் தன் பிரிவை ஆற்றாது மனையின்கண் ஒப்பனையின்றிப் புழுதிபடிந்த நிலத்திற் கிடக்கும் தலை மகளது நிலையைச் செந்நாய்ப் பிணவின் கிடக்கை காட்ட, வேட்டம் போகிய கணவனது வரவு நினைந்து அது இரங்கு வது அவளது மனநிலையை எதிர்பெய்து காட்டக் கண்ட காட்சிப் பயன் என அறிக. வெயில் வெம்மையும் பசிக் கொடுமையும் மிக வருத்திய போதும், காதல் வேட்கை அவற்றால் பொன்றாது நின்று உயிர்வாழ்க்கையை நிலை பெறுவிக்கும் புதுமை தலைமகனது தலைமையறிவை மருட்டு தலின் விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே என்றான். சுரத்திடைக் கண்ட செந்நாயின் காட்சி, வினைமேற் செல்வது அதனைத் தவிர்த்து மீள்வது என்ற இருவகை நினைவு
களைத் தலைவன் உள்ளத்தில் எழுப்பி, ஒன்றும் துணியா வகையில் அவனை அலைத்தமையின், ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் என்றும், துணி
யாமை ஆண்மைக்கு இழுக்கும் காலக்கெடும் பயத் தலின், நீ துணிந்ததுவே என்றும் கூறினான். இக்கூற்றின் கண் ஆள்வினைக்கு அகல்வாம் என்ற கருத்தே முற்பட்டு நிற்றலின், பொருள் வயிற் பிரிந்த தலைவன் அதனை முடித் தல்லது மீளான் என அறிக.

பேரிசாத்தனார்


தலைமைப்பண்பு நிறைந்த நன்மக்கள் இருவரிடையே இயற்கை நெறியிற்றோன்றிய காதல் தொடர்பு அவர்கள் மேற்கொண்ட களவொழுக்கத்தால் நாளும் வளர்ந்து சிறந்துவருகையில், அவள் தன் தோழிபால், அவனது இன்றியமையாமையைப் புலப்படுத்தி அவனது உள்ளம் வரைவின்கண் ஈடுபடுதற்கு வேண்டுவன உரைக்குமாறு தெரிவித்தாள். தோழி அதனை நன்குணர்ந்து தலைமகனை எதிர்ப்படும் போதெல்லாம், குறிப்
பாகவும் வெளிப்படையாகவும் வரைவுகடாவு வாளாயினள். ஆயினும் தலைவிபால் தோன்றிய காதலன்பு மேலும் பெருகிச் சிறப்பது வேண்டித் தலைவன் தான் மேற்கொண்ட கள
வொழுக்கத்தை நீட்டித்துவரலானான். இரவினும் பகலினும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் தலைமகன் களவு வெளிப்படின் வரும் ஏதத்துக்கும் இரவின்கண் தான் வரும் வழியிடை எய்தும் இடையூற்றுக்கும் பிறவற்றிற்கும் அஞ்சாதுவருவதுதலைமகட்குப் பெருவருத்தத்தை விளைவிப்பத் தனது ஆற்றாமையை
யும்; அச்சத்தையும் தோழிக்குப் பன்முறை தெரிவித்தாள். தோழியின் முயற்சி, கருதிய பயனை உடன் விளைவியாமையால், தலைமகட்கு அச்சமும் அவலமும் அடையத் தோன்றி அவளது மனத்தை அலைக்கலுற்றன. இரவுக்குறிக்கண் ஒருகால் தலை
மகன் சிறைப்புறமாக வந்திருப்பது உணர்ந்த தலைமகள், தோழியொடு சொல்லாடுபவள் போலத் தானே குறிப்பாகத்தலைமகனை வரைவு கடாவுவாளாயினள், “தோழி,உயரியமலைகளும் பிளந்து கெடுமாறு இடியேறு முடுகி எறியும் பெருமழை பொழிதலால், நீர் பெருகிச் செல்லும் நெறியியல்பு தெரியாத இம்மழைக்காலத்தில், மிக்க இருள்பரவிய நள்ளிரவில், என் காதலன் மார்புதரும் இன்பத்தையே நினைந்து உயிர் வாழ்கின்றே னாகலின், இக்கார்மழை பொழியும் நள்ளிரவில் அவர் வரும் வழியின் கொடுமையையும் அருமையையும் நினையாது தன்னலமே பேணுவோர் என்னைப்போல் பிறர் யாவர் உளர் ஒருவரும் இலர்” என்றாள்.

இவ்வுரையின்கண், தலைமகளது வரைவுவேட்கையை இதுகாறும் தோழி வாயிலாகக் கேட்டு வந்த தலைமகன். தானே தலைமகளது இன்றியமையாத பெருங்காதல் நிலையை உணர்ந்து கோடற்குரிய குறிப்பும், தன்பொருட்டுத் தன் இனிய உயிரையும் பொருள் செய்யாது நெறியினது ஏதம் நோக்காது தலைமகன் வருதலைத் தலைமகள் எண்ணித் தன்னை நொந்து கொள்ளும் குறிப்பும் இனிது விளங்கக் கண்ட பேரிசாத்தனார்இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

பூம்பொறி உழுவைப் போழ்வாய்1 ஏற்றை
தேங்கமழ் சிலம்பிற் களிற்றொடு பொரீனே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த2
தொண்டகச் சிறுபறைப் பாணி அயல3
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும்
ஆர்கலி வெற்பன் மார்புநயந் துறைதலின்4
யானே யன்றியும் உளர்கொல் பானாட்
பாம்புடை விடர ஓங்குமலை மிளிர
உருமுச்சிவந் தெறியும் பொழுதொடு பெருநீர்
போக்கற விலங்கிய சாரல்
நோக்கருஞ் சிறுநெறி நினையு மோரே.

இது, தலைவி ஆறுபார்த்துற்ற அச்சத்தாற் சொல்லியது.

உரை
பூம்பொறி உழுவைப் போழ்வாய் ஏற்றை - அழகிய பொறிகளையுடைய புலியினது பிளந்தாற்போல் அகன்ற வாயையுடைய ஆண்; தேங்கமழ் சிலம்பில் - தேனினது மணம் நாறும் மலைப்பக்கத்தில்; களிற்றொடு பொரின் - மேயும் களிற்றி யானையுடன் போர் செய்யுமாயின்; துறுகல் மீமிசை - பக்கத்தே நிற்கும் உயரிய பெரிய பாறையின் மேலே இருந்து கொண்டு; உறுகண் அஞ்சா - தமது செயலால் தமக்கு வரக்கூடிய தீங்கிற்குச் சிறிதும் அஞ்சுதலின்றி;குறக்குறுமாக்கள் - குறவருடைய இளஞ்சிறுவர்கள்; புகற்சியின் எறிந்த - அப்போர் காணும் மகிழ்ச்சியால் முழக்கிய; தொண்டகச் சிறுபறைப் பாணி - தொண்டகம் என்னும் சிறுபறையைக் கொட்டுவதால் உண்டாகும் ஓசை; அயல பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும் - மறுபக்கத்தேயுள்ள பசிய தாளையுடைய சிவந்த மணிகளைக் கொண்ட தினைப்புனத்தே படியும் கிளிகளை வெருட்டி யோட்டும்; ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறைதலின் - ஆரவாரத்தையுடைய மலை
நாடனாகிய தலைமகனது மார்புதரும் இன்பமொன்றே நினைந்து ஈண்டு உயிர்வாழ்கின்றே னாகலின்; யானே யன்றியும் உளர்கொல் - தன்னலமே கருதும் என்னைத் தவிர வேறு எவரேனும் இவ்வுலகில் உளராவரோ; பானாள் - நள்ளிரவும்; பாம்புடை விடர - பாம்புகள் உறையும் முழைஞ்சுகளையுடைய; ஓங்குமலை மிளிர - உயர்ந்த மலை பிளந்து கெடும்படி; உருமுச் சிவந்து எறியும் பொழுதொடு - இடியேறு மின்னி முடுகி எறியும், இடியும் கார்ப்பருவமும் கலந்த இக்காலத்தில், பெருநீர் போக்கற விலங்கிய சாரல் - மழையாற் பெருகிய நீர் போக்கற்றுத் தேக்குறுமாறு குறுக்கிட்டு நிற்கும் மலையினது சாரற்கண்; நோக்கருஞ் சிறுநெறி நினையுமோர் - கண்டறிந்து செல்லுதற் கரிய அகல மில்லாத சிறுநெறிபற்றி வருதலின் அருமையையும் கொடுமையையும் நினைந்து அஞ்சுபவருள் எ-று.

வெற்பன் மார்பு நயந்துறைதலின் பானாட் பொழு
தொடு சாரல் சிறுநெறி நினையுமோருள் யானே யன்றியும் உளர்கொல்; ஒருவரும் இரார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஏற்றை களிற்றோடு பொரின் குறக்குறுமாக்கள். உறுகண் அஞ்சாது எறிந்த பாணி அயல செந்தினைப் படுகிளி ஓப்பும் ஆர்கலி வெற்பன் என இயையும். பிளந்தாற் போல அகன்று தோன்றுதலின்; புலியின் வாய் போழ்வாய் எனப்
பட்டது. “பொறிகிள ருழுவைப் போழ்வா யேற்றை1” என ஒளவையாரும் கூறுவர். மக்கள் வழக்கு அருகிய பெருமலைச் சாரல் என்றற்குத் தேங்கமழ் சிலம்பு என்றார் களிறும் உழுவையும் பெருஞ் சினங் கொண்டு போர் செய்யுமிடத்துத் தமது இருப்புப் புலனாயின் அவை தமக்கும் ஊறு செய்யும் என்று நினையாது குறக்குறு மாக்கள் தொண்டகச் சிறு
பறையை முழக்குதலின், உறுகண் அஞ்சா என்றும், அப்
போர் நிகழ்ச்சி அக்குறுமாக்களின் உள்ளத்தில் அச்சம் தோற்றாது உவகை தோற்றுவித்தது என்றற்குப் புகற்சியின் எறிந்த என்றும் கூறினார். போரெனிற் புகலும்மறமாண்புடைய மக்கள் என்பது இதனால் வற்புறுத்தப்படுவது காண்க. “தொண்டகம், குறிஞ்சி நில வாணருடைய சிறுபறை வகை;”தொண்டகச் சிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும்2" எனப் பிறரும் கூறுப பாணி, ஈண்டுப் பறையினது முழக்கின் மேற்று. மார்பு ஆகுபெயர்; பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது கொல் - ஐயப்பொருட்டு. பெருகிய நீர் வழிந்து நீங்குதற்குரிய போக்கு உண்டாகாவாறு உயரிய மலை குறுக்கிட்டு நிற்றலின், பெருநீர் போக்கற விலங்கிய சாரல் என்றும், போதிய அகலமின்றி ஒற்றையடிப் பாதையாக உள்ள வழி என்பது தோன்றச் சிறுநெறி என்றும் அதுதானும் நீர் பெருகிப் போக்கற்றுத் தேங்கியதனால்மறைந்தொழிந்தமையின், நோக்கருஞ் சிறுநெறி என்றும், அது மனக்
கண்ணுக்கன்றிப் புறக்கண்ணுக்குத் தோன்றாது மறைந்தமையின்நினையுமோர் என்றும் கூறினார். சிறுநெறி என்றது ஆகுபெயரால் அதன்கண் விளையும் ஏதத்தையும் குறித்தது.

உள்ளுறையால், வரையாது ஒழுகும் தலைமகன் இரவின்கண் தனித்து வருவதனால் எய்தும் ஏதம் நினையாதுஇவ்வூரவர் பேரலர் விளைவிப்பர் என்றும், அதுதலைமகனைத் தான் எதிர்ப்படாவாறு இற்செறிப்பும் அதுவாயிலாக இறந்துபாடும் எய்துவிக்கும் என்றும் குறிக்கின்றாளாகலின், தலைமகள் உழுவைப் போழ்வாயேற்றைகளிற்றொடு பொரின் குறக்குறு மாக்கள் உறுகண் அஞ்சாது புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறுபறைப் பாணி, அயலே
யுள்ள செந்தினைப் படுகிளியை ஓப்பும் திறத்தை எடுத்து மொழிந்தாள். மகளிர்க்குக் காதலன் மார்பின்கண் பேரார்வம் உளதாதல் இயல்பாதலின் அதனையே சிறப்பாகவிழைந்துறையும் தன்னை, ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறைதலின் என்றாள். ’தீம்பெரும் பொய்கை யாமையிளம் பார்ப்புத் தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு, அதுவே ஐயநின் மார்பே, அறிந்தனை ஒழுகுமதி அறனுமாரதுவே“1 என்றும்,”புளிங்காய் வேட்கைத் தன்று நின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே2" என்றும் மகளிர் உரைத்தல் காண்க.

கார்காலத்தே இக்களவு நிகழ்தலின், அப்போது பகற்காலத்தும் கார்மழை பரந்து கதிரவனை மறைத்தலின், இரவுப்போது போல இருண்டு தோன்றுமாக, நள்ளிரவில் பேரிருளும் பெருமுழக்கொடு கூடிய இடியும் மழையும் கலந்து இயங்குவோர்க்கு மிக்க இடுக்கண் செய்யும் என்பதை நெஞ்சால் நினைத்துக் கலங்குகின்றா ளாகலின், பானாள் பாம்புடை விடர ஓங்குமலை மிளிர, உருமுச் சிவந்து எறியும் பொழுது என்றாள். இருட்கும் மழைக்கும் அஞ்சாராயினும், யாவரும் இடியேற்றின் வன்மைக்கு எதிரேற்று நிற்பது இலர் என்பதனால் அதன் வன்மையை ஓங்குமலை மிளிர உருமுச் சிவந்து எறியும் என்றாள். செல்லும் நெறியியல்பைச் சிறக்க உணர்ந்து செல்வோர்க்குப் பானாளிரவும் கார்மழையின் இடியேறும் பேரச்சம் பயந்து இடையூறு செய்யாவாயினும், சென்னெறி சிறிதாயும் மழைநீர் பெருகியும் போக்கற நிறைந்து மறைக்கப்படுமாயின், செல்லுதல் சிறிதும் இயலாததொன்று என்றும், அந்
நெறிபற்றிச் செல்வோர் எப்படியும் நெறியிழந்து பெருந்தீங்கிற் குள்ளாவர் என்பது தெளிவாதலின், இரவுவரும் தலைமகன் அவ்வேதம் எய்துவன் கொல் என எண்ணி அலமருகின்றா ளாதலால், சிறு நெறியின் இயல்பு நினைவோர் உயிர்
வாழாராகத் தன்னலமே பேணி யான் ஒருத்தியே உயிர்தாங்கி உறைகின்றேன் என்பாள், நோக்கருஞ் சிறுநெறி நினையு
மோருள் யானே யன்றியும் உளர்கொல் என்றாள். என் பொருட்டு எம்பெருமானாகிய தலைமகன் இத்துணை ஏதத்
துக்கு உள்ளாகி வருந்துவதை இனி ஆற்றேன் என்றாளாயிற்று. இனி யானே யன்றியும் உளர்கொல் என்றது, தலைமகன் இரவுக்குறிக்கண் வருதலின் உளவாகும் ஏதத்தை நினையாது தோழி இரவுக்குறி சுட்டியது நன்றன்று என்பதுபட உரைத்
தலு மொன்று. இதனாற் பயன் தலைமகன் விரைந்து வரைந்து கோடலை மேற்கொள்வானாவது.

முட்டத்திருமாறன்


முட்டத் திருமாறன் என்ற இச்சான்றோர் பெயர் அச்சுப்
பிரதியில் முடத்திருமாறன் எனக் காணப்படுகிறது. முடத்
திருமாறன் என்ற பாடத்தினும் முட்டத் திருமாறன் என்பது சிறந்து தோன்றுகிறது. முட்டம் என்பது “தென்னாட்டு வள்ளுவ
நாட்டில்”1 உளது; இது முதல் இராசராசன் காலத்தில் மும்முடிச் சோழநல்லூர் எனப் பெயர் மாற்றம் எய்தியது கல்வெட்
டாராய்ச்சியாளர் நன்கறிந்தது. இவர் தமது நாட்டுச் சேர
மன்னனான குட்டுவனைச் சிறப்பிப்பதே இதற்குச் சான்று. இவர் பெயர் மாறன் என இருப்பது கண்டு, இவர் பாண்டியர் குடியில் தோன்றிய அரசர் எனக் கருதுவோரு முண்டு. தென்னாட்டுத் தமிழ்ப் பகுதியிலுள்ள முட்டம் என்னும் ஊர்க்குரியராய்ப் பாண்டி வேந்தர்களால் திருமாறன் என்ற சிறப்புப் பெற்றவராக எண்ணுதற்கும் இடமிருக்கிறது. இவர் பாடியனவாக இரண்டு பாட்டுக்கள் இத்தொகை நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன.

அன்புடைக் காதலரான தலைமக்கள் கடிமணம்
புணர்ந்து கற்புக் கடன்பூண்டு இல்வாழ்வு நடாத்தி வருகையில், காதலனாகிய தலைமகன் பொருள்வயிற் பிரிந்தேகும் கடமை
யால் காதலிபால் விடைபெற்றுச் செல்வானாயினன். ஒருவரை யொருவர் இன்றியமையா உண்மை அன்பினராகலின், காதலி
பால் உண்டாகிய காதற்றொடர்பு, பிரிந்து ஏகும் காதலன் உள்ளத்தில் கழிபடர் விளைவித்து அறிவு கலக்கமுறச் செய்தது. தன் கடிமனையின் நீங்கி நெடுஞ்சுரத்தில் மிக்க சேணிற் சென்றா னாயினும், அவனது நெஞ்சு கரைகழி காதலால் கையறவுப்பட்டு மேற்கொண்ட செலவைக் கைவிட்டு, மீளத் தன் காதலி உறையும் கடிமனைக்கே திரும்பி விடுமாறு தூண்டுவதாயிற்று. தொடங்கிய வினைக்கண் இடையே மடங்கிப் பின்சேறல் ஆண்மைக்கு இழுக்கு என்பதை அவனது தலைமையறிவு எடுத்துக்காட்டி வற்புறுத்தவும், அவன் தன் நெஞ்சினை நோக்கி, “நெஞ்சே மனைக்கண் உறையும் நம்காதலி அரும்படர் உற்று ஆற்றாது வருந்துவள் என்பது காரணமாக இடைச் சுரத்தே மீள்வது கருதுகின்றாய்; மேற்கொண்ட செலவு கடத்தற்கரிய சுரங்களைக் கடந்து போதற் குரியது என்பதனைத் தொடக்கத்தே எண்ணாதொழிந்தனை; இப்போது நெடுந்தொலைவு வந்துள்ளாய்; அங்ஙனமிருக்க, நீ இவ்விடத்து மீளக் கருதுவது நன்றன்று, வாழி எனத் தெருட்டி மேற்கொண்ட செலவிற்கு அதனை ஒருப்படுப்பானாயினான்.

அவனது கூற்றின்கண், காதல்வாழ்வின் கலக்குறு சிறப்பும், பொருள் கருதிச் செல்லும் கடமையின் உயர்வும், மேற்கொண்ட வினை இடையறவுபடின் எய்தும் ஏதத்துக்கு அஞ்சும் அச்சமும், அந்நிலையில் அல்லது கூறிக் காதலுணர்வுக்கு அடிமைப்
படுத்தும் நெஞ்சினைத் தெருட்டி அறிவு துணையாக ஆண்மை பற்றுக் கோடாக ஆள்வினையே நோக்கித் தொடர்ந்து செல்லும் மனத்திட்பமும் மாண்புற விளங்குதலின், அவற்றை வியந்து இப்பாட்டின்கண் அமைத்து ஆசிரியர் முட்டத் திருமாறனார் பாடுகின்றார்.

முளிகொடி வலந்த முள்ளரை இலவத்
தொளிர்சினை அதிர வீசி விளிபட
வெவ்வளி வழங்கும் வேய்பயில் மருங்கிற்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண்
அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன்
குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
தண்கமழ் ஓதி1 அரும்படர் உறவே.

இஃது, இடைச்சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.

உரை
முளிகொடி வலந்த முள்ளரை இலவத்து - உலர்ந்த கொடிகள் பின்னிக் கொண்டு கிடக்கும் முள் பொருந்திய அடியினையுடைய இலவமரத்தின்; ஒளிர்சினை அதிர விளிபட வீசி - விளங்குகின்ற கிளைகளை அசைத்து முறியுமாறு வீசி; வெவ்வளி வழங்கும் - வெவ்விய காற்று மோதும்; வேய்பயில் மருங்கில் - மூங்கில்கள் நிறைந்த பகுதியில்; கடுநடை யானை கன்றொடு வருந்த - விரைந்த செலவினையுடைய பிடியானை தன் கன்றொடு கூடி நின்று வருந்த; நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண் - நெடுந்தூரம் நீர் சிறிதும் இன்றிவற்றிய நிழலில்லாத அவ்விடங்கள்; அருஞ்சுரக் கவலைய - கடத்தற் கரிய கவர்த்த வழிகளையுடைய; என்னாய் - என்பது முன்பே நினையாமல்; நெடுஞ்சேட்பட்டனை - நெடுந்தொலைவு வந்துவிட்டாய்; நெஞ்சே - வாழிய; குட்டுவன் குடவரைச் சுனைய - குட்டு
வனுடைய குடமலைக் கண் உள்ள சுனையிடத்து மலர்ந்த; மாயிதழ்க் குவளை - கரிய இதழ்களையுடைய குவளையின்; வண்டுபடு வான்போது கமழும் - வண்டு, மொய்க்கும் பெரிய பூவினது மணம் வீசும்; தண்கமழ் ஓதி - தண்ணிய மணம் கமழும் கூந்தலையுடையவளான நம் காதலி; அரும்படர் உற - நீங்குதற் கரிய வருத்தத்தை எய்தி வருந்த எ.று.

நெஞ்சே, நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண் அருஞ்சுரக் கவலைய என்னாயாய், தண்கமழ்ஓதி அரும்படர் உற, நெடுஞ்
சேட்பட்டனை யாக இப்போது மீளலுறுவது என்னை, வாழிய, எனக் கூட்டி வினை முடிவு செய்க. முளிகொடி - வற்றியுலர்ந்த கொடி; வலத்தல் - சுற்றிக் கொள்ளுதல், இலவமரம் முள்ளுடைய தாகலின் முள்ளரை இலவம் என்
றார்; முள்ளிலவு என்பது உலக வழக்கு. முறிந்து கெடுதல் விளிதலாதலின் விளிபட என்றார். மூங்கில்கள் புதர்புதராக வளர்ந்து நிற்கும் இயல்பின வாதலின் மூங்கிற்காடு வேய்
பயில் மருங்கு எனப்பட்டது. யானைகள் விரைந்த நடை
யுடைய என்பவாகலின், கடுநடையானை எனச் சிறப்பித்தார். “கால்கிளர்ந் தன்ன வேழம்”1 என நக்கீரரும் கூறுவர். நீரற்ற ஆங்கண், நிழலில் ஆங்கண் என இயையும், நெடுமையைச் சுரத்துக் கேற்றினுமாம். எளிதிற் கடக்க லாகாமைபற்றி அருஞ்சுரக் கவலைய என்றார். கவலை, கவர்ந்த வழிகள், வாழிய குறிப்புமொழி, குவளை வான்போது, வண்டுபடு வான்போது என இயைக்க, வான் போது, அழகிய மலர்.

வெவ்வளி இலவின் சினை யதிர வீசி வழங்கும் வேய்பயின் மருங்கில் நின்ற யானை கன்றொடு வருந்தி நிற்பது கண்ட தலைமகற்கு, தன் பிரிவினால் உண்டாய வருத்தம் அலைத்
தலால் தலைமகள் தன் புதல்வனொடு நின்று மனைக்கண் எய்தும் துயரம் நினைவிடைத் தோன்றவும். அந்நிலையில் வேட்கை வயப்பட்ட அவன் நெஞ்சம் மேற்செல்வதை விடுத்து மீள்வாம் என உரைக்கலுற்றது; அதனால், “நெஞ்சே நீ கருதுவது தவறு; சுரத்தின் வெம்மையும், அருமையும் நோக்கி மேற் செலவு முனிந்தனை யாயின், இதனை முன்னரே எண்ணியிருத்தல் வேண்டும்; தொடங்கிய செயல் இடையில் மடங்குதல் இழுக்கு என்பதை நினையாயாயினை என்பான். அருஞ்சுரக் கவலைய என்னாய் என்றும், மேற்கொண்ட வினை முடித்தற்கு நெடுஞ்சேண் போந்த நீ, மடங்கி மீளலுறுவ
தனால் பொருட்கேடும் வசையும் எய்தும் என்பதை அறிந்
திலை; நின் அறியாமை இருந்தவாறு என்னே! என்பான்.. நெடுஞ்சேண் பட்டனை என்றும், வாழிய என்றும் கூறி
னான். இதனை நீ தொடக்கத்தே நினையாமையான் நம் காதலி பெருந்துயர் உழப்பாளாயினள் என்பான், தண்கமழ் ஓதி அரும்படர் உற என்றும், தொடங்கும் நிலையில் என் காத
லிக்கும், சுரத்திடை மீளலுறுவதால் எனக்கும் நற்றுணை யாயினாயல்லை என்றற்கு வாழிய என்றும் குறித்துரைத்தான். இதனால் தலைவனது தலைமைமாண்பு வெளிப்படுதல் காண்க.

தொண்டைமான் இளந்திரையன்


மனையறம் புரிந்தொழுகும் மாண்புடைய தலைமக்கள் வாழ்வில் ஒருகால் தலைமகன் தன் காதலியின் நீங்கிச் செயற்குரிய வினை குறித்துப் பிரிந்து போயினன். சென்ற விடத்துத் தான் மீளுதற்குக் குறித்த பருவம் வந்தது; மேற்கொண்ட வினையும் முடிதலால் அவன் உள்ளம் தன் காதலிபால் செல்வதாயிற்று வினையிடத்துக் காதல் வேட்கையை நினையாத அவன் உள்ளத்
தில், வினைமுடிவில் வேறு நினைத்தற் கின்மையின், ஆழ்ந்
திருக்கும் காதல் நினைவு மேற்பட்டு எழுந்து அவன்
உணர்வு முற்றும் சூழ்ந்து கொண்டது; பண்டைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. அந்நிலையில் மேற்கொண்ட வினை குறித்துப் பிரிய வேண்டிய கடமையும், செவ்வியும் எய்திய போது, அதனை அவட்கு உரைத்து அவளது விடைபெற்ற நிகழ்ச்சி அவன் மனநிலையில் மாண்புற்று நின்றது. ஒருநாள் கடற்கரைக்குத் தான் தன் காதலியுடன் தேரேறிச் சென்றதும், அங்கே அவள் அலைகளாற் கொழித்து ஒதுக்கப்பட்ட
எக்கர் மணலில் மேய்ந்த சிறுசிறு நண்டுகளை அலைத்து விளை
யாடியதும்; அவன் மனக் கண்ணில் காட்சியளித்தன. பன்முறை
யும்; பல்லிடத்தும் அலவன்பின் ஓடி அலைந்தமையால் சிறிது போதில் அவட்கு அசைவு தோன்றவே, அவளை அணுகி, ஆர்வ மொழி வழங்கி ஆற்றுவித்த தலைமகன், அவள் அயர்ச்சி நீங்கி அன்பால் இன்புற்ற நிலையில் தான் பிரிய வேண்டிய நிலைமை
யினை மெல்லக் கூறி விடை வேண்டினன். போன சுரத்தைப் புளியிட்டழைத்தாற் போலக் கழிந்த அவலம் அவள்பால் மீளத் தோன்றினமையின், அவள் மறுமொழி வழங்குதற் கேற்ற வலி
யிழந்து அருகில் நின்ற ஞாழற் பொதும்பிற்குச் சென்று அதன் இணர்களைக் கொய்து அவற்றைக் கையாற் பிசைத்து உதிர்க்கு முகத்தால் தனது ஆற்றாமைமிகுதியையும் பிரிவருமையின் பெற்றியினையும், வருத்தத்தையும் அவன் காணத் தெரிவித்தாள். பின்னர், அவள் தெளியத் தகுவன கூறித் தன் மனைக்குக் கொண்டு சென்றான்.

இக்கூற்றின்கண் அன்பாற் பிணிப்புண்டு ஒருவரை யொருவர் இன்றியமையாராய் ஒழுகும் காதலர் வாழ்வில், பிரிவு தோன்றின் அஃது இருவர் உள்ளத்திலும் நின்று எய்துவிக்கும் அவலச் செய்கையையும் வினைமுடிவில் தோன்றி அவரது காதலை மாண்புறுத்தும் சிறப்பையும் கண்ட தொண்டைமான் இளந்
திரையன் பெருவியப் புற்றானாக, அவனது புலமையுள்ளத்தை இவை பணிகொள்ளவே இப்பாட்டு வெளிப்படுவதாயிற்று.

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறிதிரை கொழீஇய1 எக்கர் வெறிகொள
ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றா2
தசைஇ3 ஒழிந்த வசைதீர் குறுமகட்
குயவினென் சென்றியான் உண்ணோ உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறுமலர்
ஞாழல் அஞ்சினைத் தாழிணர் கொழுதி
முறிதிமிர்ந் துதிர்த்த கையள்
அறிவஞர் உறுவி ஆய்மட நிலையே.

இது, பிரிவிடைப் பருவவரவின்கட் பண்டு நிகழ்ந்த தோர் குறிப்பு உள்ளிய தலைமகன் அதனைத் தாங்கற் கில்லானாய் மீள்கின்றான் தேர்ப்பாகற்குச் சொற்றது.

உரை
பாக-; அறிதலும் அறிதியோ-நீ இதனை நன்கு அறி
வாயன்றே; பெருங்கடல் எறிதிரை கொழீஇய எக்கர் வெறி
கொள-பெரிய கடலிடத்தே எழுந்து வீசும் அலைகளால் கொழிக்கப்பட்ட நுண்மணற் பரப்பு நுடங்குமாறு; ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது-விளையாடுகின்ற வரி
பொருந்திய நண்டுகள் ஓடி யொளிக்கும் இடத்துத் தான் அவற்றின் முன்னே ஓடமாட்டாது; அசைஇ-தளர்ந்து; ஒழிந்த வசைதீர் குறுமகட்கு-அலவனாட்டும் விளையாடலைக் கைவிட்டிருந்த குற்றமில்லாத செயற் பண்புடைய இளைய
வட்கு; உயவினென் சென்று-வருத்தமுடையேனாய்ச் சென்று நெருங்கி: யான் உள் நோ உரைப்ப-என் உள்ளத்தே தோன்றிய பிரிவு கண்ணிய என் மன நோயை மெல்ல உரைத்தேனாக; மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள்-மறுமொழி யொன்றும் கூற இயலாதவளாய்; நறுமலர்ஞாழல் அஞ்சினைத் தாழ்இணர் கொழுதி-நறிய பூக்களைத் தாங்கிய ஞாழலின் அழகிய கிளையிடத்தே தாழ்ந்த பூங்கொத்துக்களைக் கோதி; முறி திமிர்ந்து உதிர்ந்த கையள்-இளந்தளிர்களைப் பறித்துக் கையாற்பிசைந்து உதிர்க்கும் செயலைச் செய்து; அறிவு
அஞர் உறுவி-கண்ட என் அறிவுக்கு வருத்தத்தை உண்டு
பண்ணின அவளது; ஆய்மடநிலை-அழகிய இளமைச் செய்கை நிலையை (எ.று).

பாக எக்கர், அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇ
ஒழிந்த குறுமகட்கு உயவினென் சென்று யான் உள்நோ உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் இணர்கொழுதி முறிதிமிர்ந்து உதிர்த்தகையள், உறுவி, ஆய்மட நிலையை அறிதலும் அறிதியோ எனக்கூட்டி வினைமுடிவு செய்க. அறிதலும் அறிதி என்றது. தெளிய அறிவாயன்றோ என்பது
பட நின்றது. “பெருவரை நாடனைஅறியலு மறியேன்1” எனப் பிறரும் இவ்வாய்பாடே வழங்குமாறு காண்க. வெறி மணமுமாம் அசைதல் தளர்தல், வசை, குற்றம், எக்கரிடத்து மேயும் அலவனை அலைக்கும் விளையாட்டில் அதன் உயிர்க்கோ உடற்கோ சிறுதீங்கும் எய்தாவாறு அலைப்பது பற்றித் தலைமகளை வசைதீர் குறுமகள் என்றார். மறு
மொழி பெயர்த்தல் ஆற்றாள் என்றது, மறுமொழி வழங்கக் கருத்துண்டாயினும் நா எழாமை தோன்ற நின்றது. அஞர், துன்பம், உறுவிப்பாளை உறுவி என்றார். ‘எவன் செய்தனள் இப்பேரஞருறுவி’ என்றும், “செலவுதலைக் கொண்ட பெரு
விதுப்புறுவி2” என்றும் சான்றோர் உரைப்பது காண்க.

பிரிந்துறையும் தலைமகன் உள்ளத்தில் பருவவரவும் வினைமுடிவும் தலைமகளை நினைப்பித்தலின் பிரி
வுணர்த்திய ஞான்று அவள் எய்திய வேறுபாடு மனக்
கண்ணில் தோன்றக் கண்டு, அறிதலும் அறிதியோ பாக எனத்தன் பாகற்குக் கூறினான். தன் பிரிவுக் குறிப்பை முதற்கண் கடற்கரை எக்கர் மணலில் அலவனை அலைத்து விளை
யாட்டயர்ந்த போது உணர்த்தினமையின், அதனை விதந்து, எக்கர்வெறிகொள ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇ ஒழிந்த வசைதீர் குறுமகள் என்றும், அதனை மிக்க வருத்தத்துடன் தான் சென்று அவட்கு உரைத்த குறிப்பை, உயவினென் சென்று யான் உள்நோ உரைப்ப என்றும். மொழிந்தான். நோ, வருத்தம்; நோயுமாம். எத்துணைத் திண்ணியோர்க்கும் காதலரைப் பிரிந்துறைவது மிக்க துன்பந் தருவதொன் றாகலின், உயவினன் சென்று எனவும், பிரிவால் உளதாகும் வருத்தத்தை உண்ணோ எனவும் உரைத்தலின் அருமை தோன்ற உரைப்ப எனவும் எடுத்து மொழிந்தான். துயர் கலந்த சொற்களால் தலைமகன் தன் பிரிவுக்குறிப்பைப் புலப்படுத்தியதும், தலைவியது உள்ளம் வருத்தம் நிறைந்து நாப்புடை பெயரா வகையில் அவளது உணர்வு முழுவதும் கவர்ந்து கொண்டமையின் மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் என்றும், தன் எதிர் நிற்கவும் மாட்டாதுகானற் சோலைக்கண் அருகில் நின்ற ஞாழற் பொதும்பரிடைச் சென்று தன் கலங்கிய நிலையை மறைக்க முயன்ற திறத்தை நறுமலர் ஞாழல் அஞ்சினைத் தாழிணர் கொழுதி என்றும், காதல் வேட்கை நிறைந்த போதும் இச்செயல் மகளிரிடத்தே நிகழ்தல் இயல்பாகலின் பிரிவுக் குறிப்பால் நிகழ்ந்த வேறுபாடு விளங்க, முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் என்றும் கூறினான். காதற்கூட்டம் கண்ணிய நிலையாயின், நறுமலர் கொய்து இன்ப விளையாட்டு மேற்கொள்ளப்படு மென அறிக. முறிதிமிர்ந்து உதிர்த்தல், உள்ளத்தில் தோன்றிய துன்பம் காரணமாகப் பிறந்த முனிவு மெய்ந் நிறுத்தல்தலைவியது மென்மையும், இளமையும் சுட்டுதற்கு ஆய்மடநிலை என்றும் வினையே ஆண்மைக்கு உயிரென்றும், காதலரைப் பிரிந்து செய்யும் வினையினும் வீறுமிக்க வினை
யாண்மை பிறிதில்லை யென்றும், தன் இளமையால் அறியாமையும்; பிரிவு நிகழ்தற்கு முன்பே அது நிகழ்ந்தது போலக் கருதி, மேனி வேறுபடும் மென்மையும் விளங்க ஆய்மடநிலை என்றும், அவள்பால் அப்போழ்து வெளிப்
பட்ட பண்பும் செயலும் என் அறிவைப் பெரிதும் கலக்கி
விட்டன என்றற்கு அறிவு அஞர் உறுவி என்றும் உரைத்தான் எனக் கொள்க. இதனாற் பயன், பாகன் கேட்டுத் தேரை
விரைந்து செலுத்துவானாவது.

பெருவழுதியார்


இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்களிடையே தலைமகன் கடமை குறித்துப் பிரிந்து சென்று உறைய வேண்டியவனானான். காதலியை உடன் கொண்டு சேறல் அறமன்மையின் தலைமகள் மனைக்கண் இருந்து தனக்குரிய கடன்களை ஆற்றி வந்தாள் ஆயினும் அவள் உள்ளத்தில் வேட்கைநோய் அடிக்கடி எழுந்து அலைத்தமையின் உண்டியிற் சுருங்கியும் உறக்க மின்றியும் காலம் கழிந்தமையின் அவளது உடம்பு மெலிந்தது; எனினும், கடமை குறித்துச் சென்ற காதலனாகிய தலைமகன் தன் தலைமைப் பண்புக்கு ஏற்ப மேற்கொண்ட வினையை நன்கு ஆற்றிப் புகழ் மிகுந்து வரும் செய்தியைக் கேட்குந் தோறும் அவளுடைய நெஞ்சம் இன்பம் சிறந்து இனிது மகிழ்வதாயிற்று. இவ்வண்ணம் உடற்கண் மெலிவும் உள்ளத்தே உவகையும் நின்று திகழவே ஒருநாள் தலைமகள் அதனை நினைந்து வியந்து நகைத்தாளாக. அவள் கருத்தறியாத தோழி அவல மிகுதியாற் பிறந்த ஆற்றாமையால் தலைவி தனக்குள்ளே நகைத்து வருந்துகின்றாள் எனக் கருதி வேண்டுவகூறி அவளை வற்புறுத்தலுற்றாள். அந்நிலையில் தலைமகள் தோழியை நோக்கி புலி முதலிய கொடிய விலங்குகள் இயங்கும் அருஞ்சுரம் கடந்து சென்ற காதலர்பொருட்டு அவரைப் பின் தொடர்ந்து சென்ற என் நெஞ்சம் தான் செய்த நல்வினைப் பயத்தால்அவருடைய வினைநலம் கண்டு வியந்து இன்புறாநிற்ப அத்தகைய நலம் இல்லாத என் உடம்பு சுருங்கி, பிறர்கண்டு அலர்கூறுமாறு தீவினைப் பயனாகிய துன்பத்துக்கு உறையுளாயிற்று; என் ஒருத்தியிடத்தே நெஞ்சம் நல்வினை
செய்து இன்பத்துக்கு உரியதாகலும் உடம்பு தீவினை செய்து துன்பத்துக்குரியதாகலும் கண்டு நினைக்குந் தோறும் எனக்கு நகை தோன்றா நின்றது, காண் என்றாள்.

இக்கூற்றின் கண்ணே தலைமகளது கடமை பற்றிய மன
நலமும், பிரிவாற்றாமை பற்றிய மெல்லியற் பொறை நலமும், தனித்தனியே விளங்குதல் கண்ட பெருவழுதியார் இப்பாட்டின்
கண் அழகுறத் தொடுத்துப் பாடுகின்றார்.
உள்ளுதொறும் நகுவென் தோழி வள்ளுகிர்ப்
பிடிபிளந் திட்ட நாரில் வெண்கோட்டுக்
கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைக்
கடுவளி1 தூக்கலின் இலைதீர் நெற்றம்
கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
புல்லிலை ஓமைய புலிவழங் கத்தம்
சென்ற காதலர்பின்றைப்2 பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டொழிந்
தானாக் கௌவை3 மலைந்த
யானே தோழி நோய்ப்பா லேனே

பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொற்றது.

உரை
தோழி-; உள்ளுதொறும் நகுவன்-நினைக்குந்தோறும் என்னையே நினைந்து நகுவேனாயினேன்; வள்ளுகிர்ப் பிடி-பெரிய நகங்களையுடைய பிடியானையால்; பிளந்திட்ட நாரில் வெண்கோட்டுக் கொடிறு போல் காய-பிளக்கப்பட்டுத் தோல் உரிக்கப்பட்டதனால் நாரின்றி வெண்மையாய்த் தோன்றும் கிளைகளையும் குறடு போன்ற காய்களையு
முடைய; வால் இணர்ப்பாலை-வெள்ளிய பூங்கொத்துக்
களைத் தாங்கி நிற்கும் வெட்பாலை மரமும்; கடுவளி தூக்க
லின்-மிக்க காற்றுப் போந்து தூக்கி அசைத்தலால்; இலைதீர் நெற்றம் கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - இலையுதிர நின்ற நெற்றுக்கள் மலையினின்று வீழும் அருவிபோலச் சலசல என ஒலிக்கும்; புல்லிலை ஓமைய-புல்லிய இலை
களையுடைய ஓமை மரங்களும் உடைய; புலி வழங்கு அத்தம்-புலிகள் உலாவும் வழிகளைக் கடந்து; சென்ற காதலர் பின்றைப்பட்ட-சென்ற நம் காதலர் பின்னே சென்றொழிந்த; நெஞ்சு நல்வினைப்பாற்று - என் நெஞ்சம் நல்வினை
யின் பாற்பட்டு இன்புறுதற்கு உரியதாக; ஈண்டு ஒழிந்து-இம்மனையிடத்தே இருந்து; ஆனாக் கௌவை மலைந்த யான்-பிறர் ஈரமின்றிக் கூறுதலான் பொறுத்தற்கரிய அலரை ஏற்றுறையும் யான்; நோய்ப்பாலேன் - தீவினைப் பாற்பட்டுத் துன்புறுதற் குரியளாகிய எனது நிலையை எ-று.

தோழி காதலர் பின்றைப்பட்ட என் நெஞ்சு நல்வினைப் பாற்றாய் இன்புறுதற்குரியதாக. ஈண்டொழிந்து கௌவை மலைந்த யான் நோய்ப்பாலேனான நிலையை உள்ளுதொறும் நகுவென் காண். எனக் கூட்டி வினை முடிவு செய்க. யானை
யின் காலடியில் உள்ள நகம் கூர்மையும், பெருமையும் உடைமையின், வள்ளுகிர்ப் பிடி என்றார். “கானயானை கதுவாய் வள்ளுகிர். இரும்பனை இதக்கையின் ஒடியும்1” என்று பிற சான்றோர் கூறுவது காண்க. வாலிணர்ப்பாலை எனவே வெட்பாலை மரமாயிற்று பிடியானை பாலை
மரத்தின் கிளையைப் பற்றி ஈர்த்தலால், மேற்பட்டை நீங்கித் தோன்றும் உட்பகுதியை விதந்து, நாரில் வெண்கோடு என்றார். பிளந்திட்ட என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு கொடிறு. கொல்லன் ஏந்தும் கைக்குறடு. காய் முற்றிப் பழுத்துள்ளவை நெற்று எனப்படும் உலர்ந்த நெற்றின்கண் உள்ளுறையும் விதையும் தோடும் பிரிந்து காற்று அலைக்கும் போது ஒலித்தல் இயல்பு. கடுவளி போந்து கிளைகளையும், நெற்றுக்களையும் தூக்கி அலைத்தலால் உண்டாகும் ஓசை, சலசலவென இருத்தலின், அதற்கு மலைப்பாறைகட் கிடையே சிறுசிறு கற்களை அலைத்துக் கொண்டு இறங்கும் அருவி ஒலியை எடுத்துக்காட்டி, இலைதீர்நெற்றம் கல்லிழி யருவியின் ஒலிக்கும் என்றார். கௌவை, அலர்; “ஊரவர் கௌவை எருவாக; அன்னை சொல் நீராக நீளும் இந்நோய்2” என்பது காண்க.

தலைமகனது பிரிவாற்றாது மேனி மெலிந்து தோன்றும் தலைமகளைக் கண்டு தோழி வருந்தினாளாக, அவளைத் தேற்றித் தான் ஆற்றியிருக்கும் திறத்தை வெளிப்பட மொழிகின்றாள் ஆதலின், உள்ளுதொறும் நகுவென்
தோழி என்றாள். எனவே தன் மனத்தே ஆற்றாமைக் குரிய வருத்தமின்மை ஓரளவு தெரிவித்தவா றாயிற்று. தலைமகன் சென்ற சுரத்தருமை கூறுவாள். வால்இணர்ப் பாலையின் இலைதீர் நெற்றம் கடுவளி தூக்கலின் கல்லிழி அருவியின் ஒலிக்கும் என்றும், புலிவழங்கு அத்தம் என்றும் கூறினாள். நெற்றம் அருவியின் ஒலிக்கும் என்றது. சுரம் புலிவழங்கும் கடுமையுடையதாயினும் செலவு இனிதாம் என்றும், அதனால் நெஞ்சம் இன்புறுதற்கு உரியது ஆயிற்று என்றும் குறித்தவாறு நெஞ்சம் அவரையே நினைந்து அவருடைய குணஞ் செயல்களைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் இருப்பது உரைப்பாள், சென்ற காதலர் பின்றைப்பட்ட நெஞ்சே நல்வினைப் பாற்று என்றாள் மேனி மெலிவு கண்டு ஆற்றாத தோழிக்கு உரைத்தலின். ஆனாக் கௌவை மலைந்த யான் என்றாள். இஃது ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் உடன் செல்லாது மனையிடத்தே இருந்தொழிந்த என் உடம்போடே தங்கிப் பிரிவுத் துன்பம் உழப்பது பற்றித் தன் உயிர் துன்பத்துக் கேதுவாகிய தீவினைப் பாற்படுவதாயிற்று என்பாள், நோய்ப் பாலேன் என்று கூறினாள். உடலொடு கூடி இயங்கும் உயிர்க்குத் துணையாய் நின்று செய்வன தவிர்வனவற்றை உணர்த்தும் நெஞ்சம், அவர்பின் சென்று இன்புறுவதும் அதனைத் தன்வரை நிறுத்திப் பயன் கொள்ளுதற் குரிய உயிர் அது செய்யாது உடம்பிடை நின்று வருந்துவதும் காண அவற்றின் மடமை தோன்றி நகை விளைவிக்கின்றது என்பாள் உள்ளுதொறும் நகுவென் என்றாள். இவ்வாற்றால் தலைமகளின் பொறையும், நிறையும் கண்டு தோழி வியந்து மகிழ்வாளாவது பயன்.

இளவேட்டனார்


தலைமைப் பண்புகளால் மேன்மையுற்ற தலைமக்கள் தம்மிற்றாம் தனித்துக் காணப் பிறந்த காதலால் கருத்து ஒருமித்துக் களவின்கண் அக்காதற் பைங்கூழை வளர்த்து வந்தனர். ஒருவரை யொருவர் கண்டவழித் தோன்றும் இயற்கையீர்ப்புக்காதல் போலத் தோன்றினும்; அது நன் முறையில் வளராவிடின் உயிரொன்றிய கேண்மையாய் நலம் பயவாது.உண்டுவிளையாடி வளரும் இளமையுடல் தன்னைப் போல்வேறுஉடம்புகளை நல்கும் செவ்வீ யெய்துவதும் அக்காலத்தே ஆணுடம்பு பெண்ணையும், பெண்ணுடம்பு ஆணையும் ஈர்த்து உடம்புதரு செயற்கண் ஈடுபடுத்துவதும், ஆணும் பெண்ணுமாய்க் காணப்
படும் உயிரினத்துக்கு இயற்கை. இந்த இயற்கை யீர்ப்பு மாவும் புள்ளுமாகிய உயிரினத்துள் எங்கும் காணப்படுவதுண்டு; ஆயி
னும், இவ்வாறு ஈர்ப்புண்டு இணைந்து இயலும் இயைபு. உடம்புதரு செயல்முடிந்ததும் நிலையின்றி ஒழிவது விலங்கினத்
துள்ளும், புள்ளினத்துள்ளும் பொதுவாகக் காணப்படும்; ஒருசில புள்ளினங்களே இவ்விதிக்கு விலக்காக உள்ளன. மக்களினம் இவற்றின் வேறாய் உயர்ந்து ஒரு காலத்தில் இயற்கையீர்ப்புக்கு உள்ளாகி ஒன்றுபட்டவை; பின்பு ஒன்றி னொன்று பிரியா
திருக்கும் பெற்றி வாய்ந்துள்ளன. பிரியா வகையில் மக்கள் உயிரைப் பிணித்து நிற்கும் அன்பு காதலன்பு எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. காதல் நிறைந்து ஒன்றையொன்று இன்றி
யமையாத அளவில் பெருகி நிற்கும் போது, அது காதற்காமம் எனப் பண்டை நூல்களில் போற்றி யுரைக்கப்பட்டது. அது
பற்றியே காதலன்பு நிறைந்த நிலை காமக்காதல் என்றும் கட்டுரைக்கப்படுகிறது. ஆணும், பெண்ணுமாய் நிற்கும் இள
மக்களுள், உடம்புதரு செவ்வியில் இயற்கையீர்ப்புக் குள்ளாகி இணைவுறும் மக்களிடையே பண்பால் சிறந்த மக்களாயினார். தம் இருவரில் தோன்றிய ஈர்ப்பு, காதலாய் காதற்காமமாய் நிறைவுற்று; ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலைமை
யினை எய்துதற்கு முயல்வர். அம்முயற்சி அவர்க்கும், பிறர்க்கும் தெரியாத வகையில் நடைபெறுவது இயற்கை. அக்காலத்தே பெருமையும், அறிவுரனும் பெருகவுடைய ஆண்மகன் இயற்கை
யீர்ப்புக்கு இரையாகிக் கூடி நீங்கும் விலங்கு போலாது; தன் உடம்புக்கு உயிர்போல உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத வாழ்க்கைத் துணையாக அப்பெண்ணுயிர் நின்று நிலவுதற் பொருட்டு; அதன்பால் தோன்றிய காதலை வளரச் செய்
வதையே குறிக்கோளாகக் கொண்டொழுகுவன்; அது நிறைந்
தாலன்றி அவள் அவனுக்கும் அவன் அவளுக்கும் வாழ்க்கைத் துணையாக அமைவதில்லை. அதனை முற்றுவிக்கும் வரையில் களவொழுக்கம் இயங்கும்; அது முற்றிய வழியே வாழ்க்கைத் துணையாய்ப் பலரறிய அமையும் திருமணம் நிகழும்; அதன் பின்னர் அமைவது கற்புவாழ்வு. உடம்புதரு செய்கைக் குரிய கூட்டம் கற்பிலன்றிக் களவின்கண் நிகழ்தல் இல்லை. அதனால் களவின்கண் ஒழுகும் காதலரிடையே, இயற்கையீர்ப்பு விஞ்சி நின்று கற்புநெறிக் குரிய கடிமணத்தை முடித்துக் கோடற்குரிய வேட்கையை மிகுத்தவண்ணம் இருக்கும். இயற்கையீர்ப்பு வழிச் செல்லும் உள்ளத்தை நிறுத்தித் தன் அறிவு வழிச் செலுத்தும் தலைமைப்பண்பால் தலைமகன், காதலன்பு சிறப்பது கருதிக் கடிமணத்துக் குரிய முயற்சியை நீட்டிப்பன். வேற்று வரைவு நினைந்தும் ஊரவர் கூறும் அலருக்கு அஞ்சியும், இரவின்கண் தன்னைக் காண்டற்கு வரும் தலைமகற்கு இடையில் உளதாகும் ஊறு நினைந்தும் வேட்கை மிகுதியால் ஆற்றாமையால் மெலிந்
தும் தலைமகள் மிக்க வருத்தமெய்தி விரைவில் வரைந்து
கொள்ளுமாறு தலைமகனைத் தோழி வாயிலாகத் தூண்டுவாள்.

தலைவியது குறிப்பின்வழி யொழுகும் தோழி, ஒருநாள் தலைமகனை எதிர்ப்பட்டு, “பெரும, நீயோ நினது நாட்டுக் குறவர் தாம் விளைத்த தினைப்புனத்துக்கு யானை மேய வருவது காணின்: கணையும், கவணும் கொண்டு, பேராரவாரம் செய்து அதனை வெருட்டி யச்சுறுத்திப் போக்கும் நாடு என்றது. பகைப்
பொருளாயினும் நன்கு பழகியவழிப், பிரியுங்கால் அதனால் விளையும் துன்பம் பொறுத்தற் கரிதாம்; நீ எங்ஙனம் இவள் தொடர்பை மறந்து கைவிட்டனையோ, யான் அறிகிலேன்; நின் பிரிவால் இவள் நுதல் பசந்து பெரிதும் வருந்தி நின் தொடர்பை மறவாது நினைந்து வருந்துகின்றாள்; இதற்கிடையே யான் செய்வகை யறியாது மிகவும் வருந்தாநின்றேன்” என்று கூறினாள்.

இக்கூற்றின்கண் தினைப்புனத்தை யானை நெருங்கக் கண்ட குறவர், கவணும், கிணையும், விளியும் கொண்டு வெருட்டுவர் என்ற குறிப்பு, தலைவியின் நலம்பெறக் கருதி வரும் நின்வரவை ஈண்டு எம் தந்தை தன்னையர் அறியின் பெருந்தீங்கு விளைவிப்பர் என்பதை உள்ளுறுத்தி, நீ இவளை வரையாது நீட்டித்தலின் இவள்பால் நின் தொடர்பைக் கைவிட்டாய் போல்கின்றாய்; அது நினக்கு எவ்வாறு இயன்றது; பழகிவிட்டால் பகையும் பிரிவின்கண் பெருந்துன்பம் தருமே, அது நின்பால் பொய்ப்
பட்டது போலும் என்றது. பெண்மையின் ஒட்பத்தை உயர்த்தி நிற்பது கண்ட ஆசிரியர் இளவேட்டனார் அவற்றை இப்
பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

மலையயற் கலித்த மைபடு வியன்புனம்1
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அங்குடிக் 2கானவர்
கணையர் கிணையர் கைபுனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட3
பழகிய பகையும் பிரிவின் னாதே
முகையேர் இலங்கெயிற் றின்னகை மடந்தை
சுடர்புரை திருநுதல் பசப்பத்
4தொடர்பியாங்கு விட்டனை நோகோ யானே

இது வரையாது நீட்டித்து ஒழுகலை ஆற்றாளாய தோழி தலைமகளது ஆற்றாமை கூறி வரைவுகடாயது.

உரை
மலை அயல் கலித்த மைபடு வியன்புனம் - மலைக்கு அயலிடத்தே யுள்ள புனத்தின்கண் தழைத்துள்ள முகில் படியும் அகன்ற தினைக்கொல்லையில்; துணையின் தீர்ந்த கடுங்கண் யானை - துணையாகிய தன் பிடியினின்று நீங்கின மிக்க சினம் பொருந்திய களிறு; அணையக் கண்ட அக்குடிக் கானவர் - நெருங்குவது கண்ட சிறிய குறிச்சிகளில் வாழும் குறவர்; கணையர் கிணையர் கைபுனை கவணர் - அம்பு செலுத்திக் கிணைப்பறை கொட்டிக் கையிலுள்ள கவணாற் கல்லை எறிந்து; விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட - விளிக் குரலை எழுப்பித் தம் ஊர்க்குப் புறத்தே நின்று ஆரவாரம் செய்து வெருட்டும் மலைநாடனே; பழகிய பகையும் பிரிவு இன்னாது - உட்பகை யுடையராயினார் நெடிது பழகிப் பின் நீங்குவராயின் அவரது பிரிவும் பிரிவின்கண் துன்பமாக இருக்கும்; முகையேர் இலங்கெயிற்று இன்னகை மடந்தை - முல்லைஅரும்பு போல் விளங்கும் பற்களையும் இனிய முறு
வலையு முடைய மடந்தையாகிய இவளது; சுடர்புரை திரு
நுதல் பசப்ப - சுடர்போல் ஒளிசெய்யும் அழகிய நெற்றி பசலை பாய; தொடர்பு யாங்கு விட்டனை - இவளது நட்பை எவ்
வாறு கைவிட்டனை; யான் நோகு - யான் வருந்துகின்றேன்
(எ-று).

நாட, பகையும் பிரிவு இன்னாது; அற்றாக, மடந்தை நுதல் பசப்ப, தொடர்பு யாங்கு விட்டனை, யான் நோகு எனக் கூட்டி வினைமுடிவு செய்க. யானை அணையக் கண்ட கானவர் ஆர்க்கும் நாட என இயையும். மலையயல், மலைச்
சரிவிலும் அடியிலும் உள்ள இடம். மைபடுவியன்புனம், கரிய மழைமுகில் படியும் புனக்கொல்லை. மலையயலிலுள்ள புனக்கொல்லைகள், விதைத்தன தழைத்து விளைதற்கேற்ற வளமும் ஈரமும் உடைமை தோன்ற, மலையயற் கலித்த வியன்புனம் என்றார். யானை தனியாது இனத்தோடே கூடி வாழும் இயல்பின தாதலால் தனித்து வருவதனைத் துணை
யின் தீர்ந்த யானை எனவும், அதன் உள்ளத்தே இனத்தோடு கூடி உறைதற்குரிய அன்பும் ஈரமும் இன்மையின் கடுங்கண் யானை எனவும் விதந்தோதினார். அதன் வருகை கண்ட கானவர் நேர் நின்று பொருதல் கூடாமையின், கணை முத
லாயின கொண்டு அதனை அச்சுறுத்தி வெருட்டுவாராயினர் என்றற்குக் கணையர் கிணையர் கைபுனை கவணர் விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட என்றார். கணையர் கிணையர் என்பன “கச்சினன் கழலினன் செக்சைக் கண்ணியன் குழலன் கோட்டன்1” என்றாற் போல நின்றமையின் இவ்வாறு உரை கூறப்பட்டது. குடியின் அகத்தேயிருந்து ஆர்ப்பின், புனம் அணைய வரும் கடுங்கண் யானை தாம் வாழும் குடிக்குட் புகுந்து அதனை முற்றவும் அழித்துவிடும் என்பதனால் புறக்குடி ஆர்க்கும் என்றார். பழகிய பகை என்றதனால், உட்பகையாதல் புலனாயிற்று. பேயோடாயினும் பிரிவு இன்னாது என்னும் பழமொழியை2 உட்கொண்டு நின்றது. பேய்ப்பண்பாதல், பகைமைப் பண்பாதல், இன்றி உயிரொன்
றிய கேண்மை யுடையளாதல் தோன்ற, முகையேர் இலங்
கெயிற்று இன்னகை மடந்தை என்று கூறினார். கண் காணத்தோன்றும் போது பெருகி நிற்கும் உள்ளன்பே, காணாப்போது நினைந்த வழியும் தோன்றி நிற்கும் இயைபினைத் தொடர்பு என்றார்.

தனித்து வரும் யானை தாம் விளைத்த புனத்தை அணையக் காணும் கானவர் கணையும் கவணும் கொண்டு துன்புறுத்திக் கிணையும் விளியும் கொண்டு அச்சுறுத்தி வெருட்டுவர் என்றதனால், தனித்து வரும் நின்னைக் காணின் எம்முடைய தந்தை தன்னைய ராகிய தமர் துன்புறுத்தி வருத்துவர் என உள்ளுறுத்து உரைத்த வாற்றால் தோழி, இனி இக்களவினைக் கைவிட்டு நீ வரைந்து கோடலே செயற்பாலது என்றாளாம். வரைதலை மேற்கொள்ளாது, நீட்டித்தலை நோக்கின், நீ தலைமகளின் தொடர்பைக் கைவிட்டாய் போலும் என்பாள். தொடர்பு விட்டனை என்றும், நீ வாராத பொழுது எய்தாத பெருந்துய ரெல்லாம் எய்தி வருந்தினும் அதனால் நுதல் பசத்த லல்லது வேறுபட யாதும் நினையாள் எனத் தலைவியது காதல் மாண்பு வெளிப்பட, முகையேர் இலங்கெயிற்று இன்னகை மடந்தை சுடர்புரை திருநுதல் பசப்ப என்றும், இத்துணைப் பெருங்காதல் உடையாளது தொடர்பு நின்னை இன்றியமையாமை விளங்கவும், நீ அத்
தொடர்பினை மறந்து வரையாது நீட்டிக்கின்றனை; இஃது அன்புடையார்க்கு எளிதின் இயலுவ தொன்றன்றே என்பாள், தொடர்பு யாங்குவிட்டனை என்றும், விடற்கு இய
லாமையை வற்புறுத்தற்கு ஏதுவாக பழகிய பகையும் பிரி
வின்னாதே என்றும், நின் ஒழுக்கத்துக்கு இதுகாறும் துணை
புரிந் தொழுகிய யான் இப்பொழுது செய்வகை அறியாது வருந்துகின்றேன் என்பாள் நோகோ யானே என்றும் கூறினாள். பகையும் பிரிவு இன்னாதாயின் என்ற உம்மையால் அன்புருவாய் தலைமக்களைப் பிரிந்தொழுகல் பெருங் கொடுமை யுடைத்தாம் என்பது பெறப்படும். துணையின் நீங்கித் தனித்து வரின் கானவர் வெருட்டுவர் என்ற குறிப்பு, துணையொடு கூடிவரின் வெருட்டப் படாது என்பது படநின்று. நீ மகட்கொடை வேண்டிச் சான்றோர் துணை பெற்றுவரின் எம் தமர் வரவேற்று மகட்கொடை நேர்வர் என்பது உணர நின்றது. திருநுதல் பசப்ப என்றது,பசலைபாய்தல். இது கேட்டுத் தலைமகன் விரைந்து வரைவு மேற்கொள்வானாவது பயன்.

மீளிப் பெரும்பதுமனார்


பெரும்பதுமனார் என்ற பெயருடைய சான்றோர் வேறு உண்மையால் இவர் மீளிப் பெரும் பதுமனார் என்று சிறப்பிக்கப் பெறுகின்றார். மீளி என்பது மீளிக்குன்று என்னும் மூதூரின் சுருக்கம். இது தென் பெண்ணைக் கரையில் மகத மண்டலம் எனக் கல்வெட்டுக் கூறும் நாட்டிலுள்ளதோர் ஊர். மலையமான்
களுக்குரிய மாநாடு பிற்காலத்தே சேதி நாடு எனவும் மகதநாடு எனவும் இரண்டாகப் பிரிந்து நிலவிற்று: அப்பிரிவினுள், மகதநாடு மகத மண்டலம் எனவும் வழங்குவதுண்டு1. மீளிக்
குன்று, மலாடான சனநாத வளநாட்டுப் பெண்ணைத் தென்கரை மகதமண்டலத்துப் பழங்கூர்ப்பற்றில் உள்ளதெனக் கல்வெட்டுக்
கள் கூறுகின்றன. பெரும் பதுமனார் என்பது இச்சான்றோ
ருடைய இயற்பெயர். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்
தான் தொகை நூல்களிற் காணப்படுகிறது. பெரும் பதுமனார் என வேறொரு சான்றோர் இத்தொகை நூலுட் காணப்படுவது கொண்டு அவரே இவரெனக் கருதினோரும் உண்டு.

உண்மையன்பால் உள்ளம் பிணிப்புற்று ஓருயிரும் ஈருடம்
பும் போல் ஒன்றி வாழ்ந்த காதலர் இருவருடைய இல்வாழ்வில், காதலனாகிய தலைமகன் கடமை குறித்துப் பிரிவானாயினான். பிரிந்தவன் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் வருந்துணையும் பிரிவுத்துயரை ஆற்றியிருந்த தலைமகட்கு அப்பருவம் வரவும் அவன் வாராமையால், ஆற்றாமை மிகுந்தது; நுதல் பசந்தது; மேனி மெலிந்தது; தொடியும் வளையும் நெகிழ்ந்து நீங்கின. அது கண்ட தோழி, குறித்த பருவம் வந்தும் தலைமகன் வாராமையால் தலைமகள் துயர்மிகுதல் அறிந்து வருந்துவாளாயினாள். பொழுது கழியக் கழியத் தோழி வருத்தம் மிக்குத்தலைவியது ஆற்றாமையை எண்ணி மனம் துளங்கினாள். தலைமகளோடு சொல்லாடலுற்று, “பிரிவுற்றார் எய்தும் பேதுறவு இத்தன்மைய போலும்” எனப் பேசவும். தலைமகள் அவளை நோக்கி, தோழி, என்னைப் பன்முறையும் வினவுவதிற் பயன் என்? யான் எய்திய வருத்தம் வாய்விட்டு உரைக்கும் எல்லையைக் கடந்துவிட்டது. வாடைக் காற்று வந்துலவும் இருள்மாலைப் போதில் வேறிடத்தே கொண்டுவிட வேண்டிய நல்லான் பசுவை, அவ்வாறு செய்யாது அது நின்ற தொழுவின்கண் தலை சேறு படிந்தமையால் கீழே படுக்க இயலாதபடி தலைக் கயிற்றை ஈர்த்துக் கூரையின் உச்சியில் கட்டிக் கீழே குனியாவாறு நிமிர்த்து நிறுத்திப் பிணிக்கப்
பெற்ற வழி, அஃது எந்நிலையில் வருந்துமோ அந்நிலையில் தனியளாகிய யான் மனம் கலங்கிப் புலம்புகின்றேன்; இம்மனக் கலக்கத்தோடே எனக்குப் பகற்போதும் இருண்மாலைப் போதும் கழிகின்றன; இவற்றைக் காணும் யான் எவ்வண்ணம் மனவமைதியுடன் ஆற்றி யிருப்பேன்" எனக் கூறினாள்.

இதன்கண், தலைமகள் தனது நிலையினை விளக்குங்கால், சேறு பட்ட தொழுவிலுள்ள நல்லான் கீழே குனியாவாறு தலைக்கயிற்றால் நிமிர்த்துத் தொழுவின் மேல் கூரை உச்சியிற் கட்டப்பெற்றமையால் தரையில் படுக்கவும் இயலாது, வேறு இடத்துக்குப் போகவும் இயலாது வருந்தும் துன்ப நிலையினைக் கூறியது மீளிப் பெரும்பதுமனாருடைய புலமையுள்ளத்தைத் தொட்டமையின் அதன் விளைவாக இப்பாட்டு உருப்பட்டு வெளிவருவதாயிற்று.

ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பிற்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்
1றன்ன வாயின நன்னுதல் நிலையென
வினவ லானாப் புனையிழை கேள்இனி
உரைக்க லாகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள்கூர் பொழுதின்
தொளியுடைத் தொழுவிற் 2றூணில் அற்றத்
துச்சிக் கட்டிய கூழை ஆவின்
3நிலையினின் ஒருவே னாகி
உலமரக் கழியும்இப் பகன்மடி பொழுதே

இது பிரிவிடை ஆற்றாளாய தலைவியது நிலைகண்டு வருந்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது.

உரை
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்-உடலால் இருவராகிய யாம் உயிரால் ஒருவராயினேம் என்று வற்புறுத்திய பிறப்பொடு தொடரும் பழமைத்தாகிய நட்பினின்று; காதலர் அகன்றென-காதலராகிய தலைவர் பிரிந்து சென்றதாகக் கருதி; கலங்கிப் பேதுற்று-மனம் கலக்கமுற்று அறிவு மயங்கி; அன்னவாயின நன்னுதல் நிலையென-அத்தன்மைய வாயின நல்ல நெற்றியினை யுடைய தலைமகளின் நிலைத்த பண்புகள் என்று சொல்லி; வினவலானாப் புனையிழை-மேலும் பல கேட்டல் அமையாத அழகிய இழை யணிந்த தோழி; இனி கேள்-இப்பொழுது கேட்பாயாக; உரைக்கலாகா எவ்வம்-வாய்விட்டுச் சொல்ல முடியாதனவாயின என் துன்பம்; இம்மென வாடை இரைக்கும் இருள்கூர் பொழுதில் - இம்மென்ற ஓசையுடன் வாடைக் காற்றுப் போந்து அலைக்கும் இருள் நிறைந்த இரவுப் போதில்; தொளியுடைத் தொழுவில்-சேறுபடிந்த தொழுவின்கண்; தூணில் அற்றத்து-தூண் இல்லாத குறையால்; உச்சிக் கட்டிய கூழை ஆவின்-தலைக்கயிறு தொழுவின் கூரை யுச்சியிலே கட்டப்பெற்ற குறுமையான பசுவினுடைய; நிலையினின் ஒருவேனாகி-நிலைமையைப் போல நிற்கவும் கிடக்கவும் மாட்டாத நிலையுற்று; உலமர-உள்ளம் சுழன்று வருந்துமாறு; இப்பகல் மடி பொழுது-இப்பகல் மறைய வரும் மாலைப்போது கழியாநின்றது, காண் (எ-று).

புனையிழை, கேள், இனி, எவ்வம் உரைக்கலாகா; கூழை ஆவின் நிலையினின் ஒருவேனாகி உலமரப் பொழுது கழியும் எனக் கூட்டி வினை முடிவு செய்க. காதலர் அகன்றென, கலங்கி, பேதுற்று நன்னுதல் நிலை அன்னவாயின என வினவல் ஆனாப் புனையிழை என இயையும். தொன்றுபடு நட்பு, பிறப்புத்தோறும் தொடரும் நட்பு; இனி, களவுக் காலத்து இயற்கைப் புணர்ச்சி பெற்ற ஞான்று “பிரியேன் பிரியின் உயிர் தரியேன்” என்று வற்புறுத்தித் தலைமகன் செய்த நட்பினை ஈண்டு ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பு என்றார் என்றலு மொன்று. அகன்றென என்றது செய்தென என்னும் எச்சவினை. அன்ன வாயின என்றது, தலைவி எய்திய கலக்கத்துக்கும், பேதுறவுக்கும் ஏற்ற செயல் வகைகளை கூட்டத்திற் பிறக்கும் இன்பம் கூறலாகாமை பற்றி அகம் எனப்பட்டாற் போலப் பிரிவின்கண் உளதாகும் துன்பமும் அப்பெற்றித் தாகலின், உரைக்கலாகா எவ்வம் என்றார். தொளி, சேறு, “தொளிபொரு பொருட்டுந் தோன்றுவன மாய1” என்று பிறரும் வழங்குப. நற்றூண் இல்லாத குறையால் ஆவின் தலைக்கயிறு தொழுவின் கூரையில் கட்டப்பட்டது. கூழை போதிய உயரமில்லாதது. உச்சிக் கட்டிய ஆவின் தலைக்கயிறு: கூரையிற் கட்டப் பெற்றமையின் தொழுவில் சுழன்று திரியுமே யன்றித் தொளி உடைமையின் கிடக்கவும், கட்டப் பெற்றமையின் நீங்கவும் இயலாது வருந்துமென அறிக. தலைக்கயிறு கூரை யுச்சியிற் கட்டப்பெற்ற மையின் கூழை யாவிற்குக் கிடக்க மாட்டாமையும் தரை சேறுபடிந் திருத்த
லால் நிற்க மாட்டாமையும் கொண்டு தொழுவில் சுழன்று திரிவது போலத் தலைமகள் காதலனொடு அன்பால் பிணிக்கப்பட்ட மையின் பிரிவாற்றி இருத்தலாற்றாமையும் வாடை வருத்துதலால் உறக்கமில்லாமையும் எய்தி வருந்துமாறு கொள்க.

பண்டு களவின்கட் கூடிய ஞான்று நமது இந்நட்பு பிறப்புத் தோறும் தொடர்ந்து வரும் பழமையான நட்
பாதலின், இன்று நாம் ஓருயிரும் ஈருடலுமாய்ப் பொருந்தினே
மாக, இனி யான் பிரியேன் பிரியின் உயிர் தரியேன்" என்று வற்புறுத்தினமை தோன்ற, ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பு என்றும், பொருள் வினை பற்றிய கடமை குறித்து நிகழ்ந்த பிரிவு தொன்றுபடு நட்பிற்கு மாறாக நிகழ்த்தும் பிரிவு எனக் கருதினமை தோன்ற, காதலர் அகன்றெனக் கலங்கி என்றும், மனம் கலங்கிய வழி அறிவு பேதுறுவது பயனாகலின், பேதுற்று என்றும், கலக்கப் பேதுறவுகட் கேற்பச் சொல்லத்தகாதன, செய்யத்தகாதன செய்தொழுகுதலின் தோழி வருந்துமாறு தோன்ற, அன்னவாயின நன்னுதல் நிலை
யென என்றும், அவள் பொருட்டுத் தான் செய்யத் தகுவன யாவை எனப் பன்முறையும் தோழி வணங்கிக் கேட்குமாறு விளங்க, வினவலானாப் புனையிழை என்றும் தலைமகள் கூறினாள். பன்முறை இறைஞ்சிக் கேட்டும் தலைமகள் தான் ஒன்றும் உரையாமைக்குக் காரணம் கூறுவாளாய், “இனிக் கேள் உரைக்கலாகா எவ்வம்” என்றாள். துன்பம் மிக்குச் சொல்லின் எல்லை கடந்தமையின் உரைக்கலாகாதாயிற்று. வாடையின் வருத்தம் இரவுப் போதில் மிகுந்து எவ்வுயிரையும் வருத்துதலின், தொளியுடைத் தொழுவில் நின்ற கூழை ஆவிற்கும் பொருந்துமாறு கூறி, ஆவின் நிலையும் தன் நிலையும் ஒன்றாய் அமைந்தவாறுபற்றி, ஆவின் நிலையின் ஒருவேனாகி என்றாள். உலமரல், அலமருதல், ஆவுக்கு உலமரல் தொழுவின்கண் சுழன்று வருதல்; தலைமகட்கு உலமரல், தலைமகனைப் பற்றியே நினைந்து நினைந்து வருந்துதல். துன்பம் மிகுந்து சொல்வரை இறந்ததாயினும், பொழுது கழிந்தவண்ண மிருத்தலின், எனது ஆற்றாமை கண்டு வருந்தற்க எனத் தோழியை ஆற்றுவிப்பது பயன்.

பூதனார்


இவர் பெயர், அச்சுப்படியிலும், மதுரைத்தமிழ்ச்சங்க ஏட்டிலும் போதனார், பொத்தனார் எனக் காணப்படினும்; ஏனை ஏடுகளில் பூதனார் என்றே காணப்படுகிறது. பூதனார் என்பது பயின்ற வழக்கிற்றாகலின், அதுவே ஈண்டுக் கொள்ளப்பட்டது. இப்பூதன் என்ற பெயர் மக்களிடையே கி.பி. பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுவரை வழங்கி வந்தமை கல்வெட்டுக்
களால் அறிகின்றோம். பூதனார் என்பதே இப்பாட்டைப் பாடிய சான்றோர் பெயராயின், நற்றிணை 29-ஆம் பாட்டைப் பாடியோரும் இவரும் ஒருவர் என்பது பெறப்படும். இனி, பொத்தனார் என்பதே பாடமாயின், பொத்தன் என்பது இவரது இயற்பெயராம், பொத்தனது ஊர் என்ற பொருளில் பொத்தனூர் என்று ஓர் ஊர் காவிரி வடகரையில் மழநாட்டில் திருவெயிலூர்க்கு அண்மையில் உளது; திருவெயிலூர் இப்போது வேலூர் என வழங்குகிறது.

களவுநெறியில் காதலுற்றுச் சிறந்து பின் கடிமணம் செய்து கொண்டு கற்புக்கடம் பூண்டு நல்லறம் செய்யத் தொடங்கிய தலைமகளை, மனையறம் தொடங்கிய சின்னாட் கெல்லாம் அவளை வளர்த்த செவிலி அவளது மனைக்குச் சென்று கண்
டாள். அங்கே தலைமகள் செய்யும் மனையறத்தின் மாண்பை நேரிற் கண்டு பெருவியப்புற்றாள். தான் வளர்த்த மகள் கற்பும், காமமும், நற்பாலொழுக்கமும், மெல்லியற் பொறையும், நிறையும், விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும் ஆகிய நற்பண்புகளால் சிறந்து விளங்குவது காணப் பிறக்கும் இன்பத்தினும்; மிக்கது பிறிதின்மையின் செவிலியின் உள்ளம் உவகை நிறைந்தது. பின்னர் அவள் தலைமகள்பால் விடை பெற்றுக்கொண்டு அவள் பிறந்துவளர்ந்த தொன்மனைக்கு வந்தாள். அங்கே தலைவியைப் பெற்ற நற்றாய் தன் மகளுடைய மனைநலத்தை அறிய விரும்பின ளாக, செவிலி, “தலைமகளை யான் கண்டதும், அவள் சிறுபெண்ணாகக் காலில் பொற்சிலம் பணிந்து விளையாடும் செவ்வியில் பால் கலந்த சோற்றை ஒரு வள்ளத்தி லேந்தி, ஒரு கையில் சிறுகோல் கொண்டு, இச்சோற்றை உண்க என அச்சுறுத்
தினால், நரைமுது செவிலியர் ஓடிப் பற்ற முடியாது மெலிந்து அயருமாறு பூம்பந்தரிடையே ஆட்டங் காட்டிய நிலை என் நினைவுக்கு வந்தது; அத்துணை இளையளாகிய அவளுடைய இன்றைய நிலையை நோக்கின், அவள்பால் அறிவும், ஒழுக்கமும், சிறந்து தோன்றுகின்றன; அவற்றை எப்பொழுது எவ்வாறு உணர்ந்தாள் என என் நெஞ்சில் வியப்பின் மேல் வியப்பு வீறு கொண் டெழுந்தது; தன்னைக் கொண்ட கணவனுடைய குடி ஒருகால் வறலுற்றது. அதனை அறிந்த அவள் தந்தை அவட்கு வேண்டும் உணவுப் பொருளைக் கொடுத்து விட்டானாக, அதனை வேண்டா என விலக்கிவிட்டுத் தன் கொழுநன் தேடித் தந்தது சிறிதாயினும், அதனைப் பொழுது மறுத்துண்டு வாழும் பொற்புறு மானமாண்புடையளாக விளங்குகின்றாள்; என்னே அவளது மனைமாண்பு!” என்றாள்.

இக்கூற்றின்கண் விளங்கும் தலைமகளது மனையறச் சிறப்பு மகளிர் அனைவர்க்கும் மாண்புதரு செயலாக விளங்குதலின், இதனை ஆசிரியர் பூதனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை ஏந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரீப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
1பரிமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த 2தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே.

இது மகள்நிலை யுரைத்தது; மனைமருட்சியுமாம்.

உரை
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்-தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பாலை; விரிகதிர் பொற்கலத்து ஒருகை ஏந்தி-விரிந்த கதிரொளியையுடைய பொன்னாற் செய்யப்பட்ட வள்ளத்திற் பெய்து ஒரு கையில் ஏந்திக் கொண்டு; புடைப்பின் சுற்றும் - ஓங்கிய வழி வளைந்து சுழலும்; பூந்தலைச் சிறுகோல்-மெல்லிய நுனியையுடைய சிறு
குச்சியை; உண் என்று ஒக்குபு புடைப்ப - உண்கிறாயா இல்லையா என அச்சுறுத்தி ஓச்சிய வழி; தெண்ணீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப-தெளிந்த நீர்மையையுடைய முத்துக்களை அரியாகப் பெய்த அழகிய காற்சிலம்பு ஒலிக்க; தத்துற்று - துள்ளி யோடி; அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் - மென்மையாக நரைத்த கூந்தலையும் செம்மையான மனத்தையுமுடைய முதிய செவிலியர்; பரி மெலிந்து ஒழிய - தொடர்ந்து பற்ற முடியாமல் வருந்தி அயர்ந்து நின்றொழிய; பந்தர் ஓடி - முல்லைக்கொடி வளரவிட்டு நிற்கும் பந்தரின் காற்கீழ் ஓடிநின்று; ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி - இட்ட ஏவலைத் தலையசைத்து மறுக்கும் சிறு விளையாட்டுப் பெண்ணாகிய இவள்; அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉ’99ர்ந்தனள் கொல் - அற்றம் காக்கும் கருவியாகிய நல்லறிவும் விழுப்பந்தரும் நல்லொழுக்கமும் எவ்விடத்து எப்போது கற்றாள் கொல்லோ அறியேன்; கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென - தன்னை மணந்து கொண்ட கணவனது குடி வறுமை யுற்றதாக அறிந்து; தந்தை கொடுத்த கொழுஞ்சோறு உள்ளாள் - அது நீங்குதற்கெனத் தன் தந்தை நல்கிய கொழு
விய பொருளை ஏலாது; ஒழுகுநீர் நுணங்கறல் போல - துளித்தொழுகும் நீர் துளிக்க நனைந்து உடனே புலரும் நுண்மணல் போல; பொழுது மறுத்துண்ணும் சிறு மதுகையள் - பசித்த பொழுது உண்ணாது ஊண் கிடைத்த பொழுது உண்ணும் கற்புவலியு முடைய ளாயினாள், காண் (எ-று).

செவிலியர் ஏந்தி, ஒக்குபு புடைப்ப, ஒலிப்ப, தத்துற்று, அவர் மெலிந்தொழிய ஓடி மறுக்கும் சிறு விளையாட்டி யாண்டு உணர்ந்தனள் கொல்; சிறுமதுகையளு மாயினாள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிரசம், தேன், நிறப் பண்பையும் இனிமைப் பண்பையும் விதந்து கூறலின் வெண் சுவைத் தீம்பால் என்றார். மிக மெல்லிய கோல் என்றற்குப் புடைப்பின் சுற்றும் சிறுகோல் எனப்பட்டது. இனிய சொற்களுக்குச் செவிசாய்க்காவழி அச்சுறுத்துவது இயல்பாகலின், உண்ணென்று ஓக்குபு புடைப்ப என்றார். பொற்சிலம்பு என்றவிடத்துப் பொன்மை அழ கென்னும் பொருட்டு; பொன்னுக்கு ஓசை இன்றென அறிக. அரி, மென்மை; “அரியே ஐமை1” என்பர் ஆசிரியர். செம்முது செவிலியர் என்றவிடத்துச் செம்மை மனத்துக்கும், முதுமை உடற்கும் அமைந்தன. சிறு பெண் இனிது நுழைந்தோடும் பந்தர்க்கீழே தாம் செல்ல இயலாமையின் செவிலியர் பரி மெலிந்து ஒழிந்தனர். பரி, செலவு, பந்தர், மனைகளில் வளர்க்கப் பெறும் முல்லை வயலை முதலிய கொடிகள் இனிது ஏறிப் படருமாறு அமைக்கப் பெறுவன; இப்பந்தர்கள் சிறுசிறு கால்கள் நிறுவப்பெற்றன வாகலின், சிறுபெண்கள் ஓடி விளையாடுதற்கு எளியவாய், முதியோர் இயங்குதற்குக் கூடாவாய் உள்ளன. சிறு விளையாட்டல்லது வேறொன்றம் செய்யாத இளமைச் செவ்வி குறித்து, சிறு விளையாட்டி என்றார். சிறுமை, உடலின் சிறுமை; சிறுமதுகையள் என்புழியும் இதுவே கொள்க. அறிவும் ஒழுக்கமும் தலைமகள்பால் அவள் விளையாட்டுப் பண்போடு உடன்வளர்ந்தன வாயி னும், செவிலி அவ்விளையாட்டே, நோக்கினமையின் அறிவு ஒழுக்கங்களின் வளர்ச்சி அவள் அறியப்படாமையான் இப்போது விளையாட்டு ஒடுங்க அவை விளங்கித் தோன்றக் கண்டு வியந்து மகிழ்வாளாயினள். கொழுஞ்சோறு, மிக்க உணவுப் பொருள் பொழுது மறுத்துண்டல், உண்டற்குரிய பொழுதில் உணவு இன்மையின் உணவு கிடைத்த போது பொழுது நோக்காது உண்டல். “பொழுது மறுத்துண்ணும் இன்னா வைகல்2” என்று சான்றோர் கூறுவதும், வறுமையுற்று வாடுவோன் “பொழுது மறுத்துண்ணும் உண்டியேன்3” என்பதும் காண்க.

தலைமகள் நடத்தும் மனையறத்தின் மாண்பு கண்டு வியப்பு மிகக் கொண்ட செவிலிக்குத் தலைமகளின் இளமை உருவம் நெஞ்சின்கண் தோன்றுதலின், அக்காலத்து அவள் செய்த செயல்வகைகளை நினைந்து முறையே கூறுகின்ற மையின், முதற்கண் அவள் பாலுணவு மறுத்தோடிய திறத்தை, தீம்பால் பொற்கலத்து ஒருகை ஏந்திச் செவிலியர் கொடுப்ப அதனை மறுத்து அவர்கள் பரி மெலிந்தொழியப் பந்த ரோடி மறுக்கம் சிறுவிளையாட்டி என்றாள். மறுத்தற் காகாவாறு இனிமை மிகத் தேன் கலந்த தீவிய பால் என்பாள், பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் என்றும், கண்கவரும் ஒளியும் தூய்மையுமுடைய கலத்தில் அப்பாலைத் தந்தமை தோன்ற, விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி என்றும், மேனி மேற்படின் நோய் செய்யாவகையில், ஒருகையில் சிறுகோல் ஏந்தினமையின், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் என்றும், பாலுணவைப் பன்முறையும் மறுத்தலின் அச்சுறுத்தி உண்பிப்பது கருதி, உண்ணென்று ஓக்குபு புடைப்ப என்றும், அதற்கும் அஞ்சாது அவள் முல்லைப் பந்தர்க்கீழ் ஓடியது நினைந்து, பந்தர் ஓடி என்றும், ஓடுங்கால் அவளுடைய காற்சிலம்பு ஒலித்ததும் செம்முது செவிலியர் அவளைப் பற்றமாட்டாராய் அயர்ந்தமை யும் தோன்றத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தந்துற்று என்றும், செம்முது செவிலியர் பரிமெலிந் தொழிய என்றும் செவிலியர் அயர்ச்சி தனக்கு வெற்றி தந்தமை யின் அவரது ஏவலை மறுத்து விளையாடுவதே செயலாகக் கொண்டனள் என்றற்கு, ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி என்றும் கூறினாள். செல்வமிகுதி தோன்ற, தெண்ணீர் முத்து அரிப் பொற் சிலம்பு என்றும், தலைமகளது செய்கை யால் செவிலியர் தமது முதுமை காரணமாக மெலிந்தா ராயினும், அவள் எவ்வாற்றாலேனும் பாலை யுண்டு பசிதீர்தல் வேண்டும் என்ற செம்மை மனப்பண்பில் தீர்ந்திலர் என்றற்கு அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் என்றும் சிறப் பித்தார். தன் சொற் செயல்களில் சோர்வு உண்டாகாமல் தற்காத்துத் தற்கொண்ட தலைமகனைப் பேணி நிற்கும் பெருந்தகைமை கண்டு வியந்து மகிழ்தலின், அறிவும் ஒழுக்க மும் யாண்டு உணர்ந்தனள் கொல் என்றாள். இளமைச் செவ்வி முழுதும் தன்னோடே இருந்தமையின், யாண்டு உணர்ந்தனள் கொல் என்றாள். தன்னைக் கொண்ட கணவ னுக்குத் தன்னைப் பொருளாகப் பெற்ற தந்தை தனக்குத் தருவனவற்றைக் கோடற்கு உரிமை யுண்டாயினும், அது கொண்டு செய்யும் மனையறம் தான் உழந்து செய்யும் தனியறம் போல் சிறவாமைப் பற்றி, கொண்ட கொழுநன் குடிவறனுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் என்றாள், கொண்ட கொழுநன் என்றது.. கொழுநர்க்குக் கொளற்குரிமையும், கொடுத்த தந்தை என்றது. தந்தைக்குக் கொடை உரிமையும் இயல்பாய்க் கிடந்தவாறு சுட்டினாள். தந்தையும் உயர் நிலையில் வைத்தே கொழுஞ் சோறு அளித்தான் என்றற்கு ஈத்த என்றாதல் தந்த என்றாதல் கூறாது கொடுத்த தந்தை என்றாள். மறுத்தற் காகாத சிறப்பும் மிகுதியும் தோன்றக் கொழுஞ்சோறு எனச் சிறப்பிக்கப் பட்டது. வறுமை சுடச்சுட வருத்தினும் வாட்டமுறாத மனத் திட்பத்தை எண்ணி மதுகையள் என்றாளாயினும், இளமைப் பண்பையும் உடன் பாராட்டிச் சிறுமது கையள் என்றாள். பிறர் தன்னைப் பன்முறை இறைஞ்சி உண்பிக்க உண்ணும் சிறுவிளையாட்டி இன்று தன் காதலனைப் பரிந்து உண்பிக்கின்றாளாகலின் இவட்கு இவ்வறிவு எங்ஙனம் தோன்றிற்று என்பதும், இளமையில் செவிலியர் முதலா யினோருடைய ஏவல் மறுத்தொழுகிய இவள், தன் கொழுநன் ஏவற்குறிப்பைக் கூறாமை உணர்ந்து அவன் உள்ளம் உவகை மிகுமாறு செய்தொழுகும் சீர்த்த ஒழுக்கமுடையளாயது எங்ஙனம் என்பதும் செவிலி உள்ளத்தைத் திகைப்பித்தன என அறிக.

“கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும், செவிலிக் குரிய வாகு மென்ப1” என்பதன் உரையில் “ஆகும்” என்றதனாலே செவிலி நற்றாய்க்கு உவந்துரைப்பனவும் கொள்க என்று கூறி, இப் பாட்டைக்காட்டி, “இது மனையறம் கண்டு மருண்டு உவந்து கூறியது” என்றும், “சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு, அனைநால் வகையும் சிறப்பொடு வருமே”2 என்பதன் உரை யில் இதனைக்காட்டி, “இது குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

உலோச்சனார்


தலைமகன் கடமை காரணமாகப் பிரிந்திருந்தானாக, அவன் குறித்த பருவவரவு நோக்கித் தலைமகள் ஆர்வமுற் றிருந்தாள், பருவவரவு பற்றிய குறிப்புக்கள் பல இயற்கையில் நிகழவும் அவற்றைக் கண்ட தலைமகட்குக் காதலன்பால் கருத்து மிகுவ தாயிற்று. பிரிவால் உளதாகிய மேனி மெலிவு ஒருபுறம் வருத்தவும் பருவவரவு, எதிரே தோன்றி உள்ளத்தில் காதல் நினைவுகளை எழுப்பி அவளை வருத்தின. அது கண்டு ஆற்றாமை மிக்க தோழி, தலை மகனுடைய வரவு குறித்துப் பெருமுது பெண்டிரை விடுத்து விரிச்சி கேட்டாள். அவர்களும் அதனைச் செய்து தலைமகன் குறித்த பருவத்தில் தவறாது தாழாது வந்து சேர்வன் என வற் புறுத்தினர். அது கேட்டு உவகையுற்ற தோழி தலைமகள்பால், “அன்னாய், கடலில் மீன்வேட்டம் புரியும் பரதவர் சிறுவர் திமில் மேற்கொண்டு சென்று சுறவும் பிறவுமாகிய மீன்களைப் பிடித்து அவற்றுட் பரியனவற்றைத் தம் திமிலிடம் கொள்ளுமாறு துண்டித்துக் கொணர்ந்து கரையிலுள்ள மணற் பரப்பில் இறக் குவர் என விரிச்சி கூறினமையின், நமது காதலர் தாழாது வருவர்” என மொழிந்தாள்.

தோழியினது இக்கூற்றின்கண் தான் கேட்ட விரிச்சியைப் பட்டாங்கு எடுத்துரைக்கு முகத்தான் தலைமகளை ஆற்றுவிக்கும் குறிப்பைக் கண்ட உலோச்சனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு 1தொகுமீன் பெறீஇயர் வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்
மரன்மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையர் வேட்டெழுந் தாங்குத்
திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி
வாள்வாய்ச் சுறவோடு2 வயமீன் கெண்டிய
நிணம்பெய் தோணியர்3 ஒண்மணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே.

இது விரிச்சி பெற்றுப் புகுந்த தோழி தலைவிக்கு உரைத்தது.

உரை
அத்த இருப்பைப் பூவின் அன்ன - வழிக்கரையில் நின்ற இருப்பைமரத்தின் பூவைப் போன்ற; துய்த்தலை இறவொடு - தலையில் துய்யினை யுடைய இறாமீனுடனே; தொகுமீன் பெறீஇயர் -பலவாய்த் தொக்க வேறு மீன்களையும் பெறும் பொருட்டு; வரி வலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்-வரிந்து கட்டப்பட்ட வலையையுடைய பரதவர் இனத்து வன் றொழில் புரியும் இளையவர்கள்; மரன் மேற் கொண்டு மான்கணம் தகைமார்-மரங்களின் மேல் ஏறியிருந்து வெளியில் மேயும் மான்கூட்டத்தைத் தடுக்கும் பொருட்டு; வெந்திறல் இளையர் வேட்டெழுந் தாங்கு-வெவ்விய வலியையுடைய வேட்டுவ இளைஞர்கள் விரும்பி எழுந்தாற்போல; திமில் மேற்கொண்டு-படகின் மேல் ஏறிக்கொண்டு; திரைச்சுரம் நீந்தி-அலைகள் எழுந்து மோதும் கடலகத்தே சென்று; வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டிய -வாள் போன்ற வாயையுடைய சுறாமீன்களோடு வலிய பெருமீன்களைப் பிடித்துத் தம் படகு கொள்ளுமாறு துண்டித்த; நிணம்பெய் தோணியர்-துண்டங்களாகிய ஊன் பெய்த தோணிகளோடு வந்து; ஒண்மணல் இழிதரும்-ஒள்ளிய மணற்பரப்பில் இறக்கும்; பெருங்கழிப் பாக்கம் கல்லென-பெரிய கழியரு குள்ள பரதவர் வாழும் பாக்கம் கல்லென்று ஆரவாரிக்க; தோழி-; கொண்கன் தேர் வரும்-நம் தலைவனது தேர் வரும், காண் (எ-று).

தோழி, சிறாஅர், மீன்பெறீஇயர், இளையர் வேட்டெழுந் தாங்குக் கொண்டு, நீந்தி, கெண்டிய நிணம் பெய் தோணியர், இழிதரும் பாக்கம் கல்லெனக் கொண்கன் தேர் வரும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அத்தம், வழி, கூட்டம் கூட்டமாக மேயும் ஏனைமீன்களைத் தொகுமீன் என்றார். கருவினை என்ற விடத்துக் கருமை வன்மை குறித்து நின்றது; “கருங்கைக் கானவன்”1 என்றாற் போல பரதவர் இனத்து இளையரைச் சிறாஅர் என்றார். நாற்புறமும் பார்த்து ஓடாதவாறு தகைத் தற்கு மரத்தின் மேல் ஏறிக் கொண்டனர் என்பார், மரன்மேற் கொண்டு மான் கணம் தகைமார் என்றார். வயமீன் உடல் பரிய வலிய மீன், கெண்டுதல் துண்டித்தல்; “இன்சிலை யெழிலேறு கெண்டிப் புரைய, நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்தெடுத்து2” எனச் சான்றோர் வழங்குவது காண்க. திரைச்சுரம், கடற்பரப்பு; “திரைச் சுரம் உழந்த திண்டிமில்1” என வருதல் காண்க. தோணி பாய் கட்டிய படகு, சுறாமீனின் வாய், வாள் போற் கூரிய பற்களுடன் நீண் டிருத்தலால், வாள்வாய்ச் சுறவு என்றனர்; “வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி2” என்று சான்றோர் கூறுவது காண்க. கெண்டிய பெருமீன் துண்டங்கள் நிணம் வெளிப்பட்டுக் கிடத்தலின் நிணம் எனப்பட்டன.

தலைமகனது பிரிவாற்றாது வருந்தும் தலைமகள் பொருட்டு, விரிச்சி நிற்பான் சென்ற தோழிக்கு, விரிச்சி நிற்கும் பெருமுது பெண்டிர் உரைத்ததனைக் கொண்டெடுத்து மொழிகின்றா ளாகலான். பரதவர் மகளான முதுபெண்டு, தான் அறிகிளவியாகிய பரதவர் செயலையே உரைக்கின்றாள். இறவும் பிறவுமாகிய மீன்கள் பலவாய்த் தொக்குக் கூட்டம் கூட்டமாய் மேய்தலின் அவற்றைக் கண்ட பரதவர் திமில் மேற் சென்றது. பொருள்வினைகட் குரிய காலமும் இடமும் ஒருங்கு வாய்ப்பக் கண்ட தலைமகன் ஏவலிளையரும் பிறரும் உடன் வரச் சென்ற குறிப்பையும் பரதவர் வாள்வாய்ச் சுறவும் வயமீனும் பிறவும் தோணியிற் பெய்து கொணர்ந்து ஒண் மணற்கண் இறக்குவது. பிரிந்து சென்ற தலைமகன் தான் சென்ற நாட்டில் ஈட்டிய பொன்னையும் பொருளையும் கொணர்ந்து மனைக்கண் இறக்குதலையும், பரதவர் செயலின் நலம் கண்ட பாக்கத்தவர் செய்த ஆரவாரம், தலைவி மனைக் கண் நிகழும் விருந்தையும் குறித்து நிற்றலின், அவற்றைத் தோழி விரியக் கூறக் கருதி, இவ்வாறு விரிச்சி கூறுதலின், தலைமகன் தாழாது வருதல் ஒருதலை என்பாள், வருமே தோழி கொண்கன் தேரே என்றாள். இதனால், தலை மகனது நல்வரவைத் தலைவி உணர்ந்து ஆற்றியிருப் பாளாவது பயன்.

பெருங்குன்றூர் கிழார்


கார்ப்பருவ வரவில், வினைமுற்றி மீண்டு வருவதாகச் சொல்லிப் பிரிந்த தலைமகனது சொல்வழி நின்று தலைவி தனக்குரிய கடன்களை இனிது ஆற்றி வந்தாள். அவன் குறித்த பருவமும் எய்துவதாயிற்று; ஆயினும், அவன் வரவுபற்றிய குறிப்பொன்றும் தலைமகட்கு எய்தாதாகவே, அவட்கு ஆற்றாமை மிகுந்தது. கார்ப்பருவ வரவு நோக்கி வேனிலின் வெம்மை சிறிது சிறிதாகத் தணிந்து, அவட்குப் பருவவரவின் பண்பைத் தெளிவித்துவிட்டது. ‘ஆடவர்க்கு வினையே உயிர்’ என்பதையும், மேற்கொண்ட வினையை முடித்தல்லது அவர் இடையில் மடங்கி மீளார் என்பதையும் தோழி நன்கு அறிந்தவள்; ஆதலால், அவற்றை எடுத்தோதி வற்புறுத்துவதை விடுத்து, வெம்மை தணிந்து வரும் வேனிலின் இறுதிக்காலம் கார்ப்பருவ மன்று; பெருமழை பெய்யும் காலமாகிய அதுவே தலைமகன் வரவு குறித்த காலம் எனச் சொல்லி ஆற்றுவித்து வந்தாள். சின்னாட்களில் மேற்கொண்ட வினையை வெற்றிபெற முடித்துத் தலைவன் மீள்கின்ற செய்தி தோழிக்குத் தெரிந்தது; அவன் குறித்த மழைக்காலமும் உடன் வந்தது. அதனால் மகிழ்ச்சி மீதூர்ந்த தோழி, தலைமகளை நோக்கி, தலைமகன் வினைமுடித்து வீறுகொண்டு விளங்கும் செய்தியினும், அவனது ஆற்றாமை தீர்தற்கு மருந்தாவது அவனது வரவல்லது பிறிதின்மையின், வினைவென்றியை உள்ளுறுத் துரைத்து, “அன்னாய், பெருங்கல் நாடனாகிய தலைமகன். நினக்கு வற்புறுத்த சொல் பொய்யாது வருவானாயினன்; அவனது வரவை முன்னறிந்து பெரிதும் விரும்பிய மழைமுகில் கடலகம் சென்று நீர் மிகக் கொண்டு, நிறம் கருத்துத் தொகுதியுற்று, மலையகம் படர்ந்து கண்ணிமைப்பது போல் மின்னி இடித்து மழை பெய்வான் வந்துள்ளது காண். இனி அவன் வருதல் ஒருதலை யாகலின், நீ வருந்துதல் ஒழிந்து தூதாகப் போந்து அவன் வருகையைத் தெரிவித்த இம்மழைக்கு எத்தகைய விருந்து செய்வாம் கூறுக” என்றாள்.

இக்கூற்றின்கண், தலைமகனுடைய வினையின் வென்றி விளக்கத்தையும் குறித்த பொழுதின் கண் மீண்டு போதரும் அவனது வாய்மைச் சிறப்பையும் விதந்து கூறும் தோழி. தலை மகட்கு அவனது வருகையை மழைவரவின் வாயிலாகக் காட்டி அம்மழைக்கு எத்தகைய விருந்து யாம் செயற்பாலது என நகை அரும்பிக் கூறியது, பெருங்குன்றூர் கிழாரது பெரும்புல மையைத் தூண்டிற்றாக இந்த அழகிய பாட்டுத் தோன்றுவ தாயிற்று.
விருந்தெவன் செய்வாம் 1தோழி சாரல்
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக்2 களிறட்
டுரும்பில் உள்ளத் திரும்புலி3 வழங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணிநிறக் கருவித்
தாழ்நீர் நனந்தலைஅழுந்துபடச்4 சாஅய்
மலையிமைப் பதுபோல் மின்னிச்
சிலைவல் லேற்றோடு சேர்ந்த5 இம்மழைக்கே

இது, பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

உரை
விருந்து எவன் செய்வாம்-விருந்தாக யாம் யாதனைச் செய்வாம், கூறுக; தோழி-; சாரல் அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை-சாரலிடத்து அரும்பு சிறிதும் இல்லையாக முழுதும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கைமரங்கள் நிற்பதால்; சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப-வண்டுகள் ஒலிக்கும் மலைப் பக்கங்கள் எதிரொலி செய்ய; களிறு அட்டு-களிற்றி யானையைக் கொன்றும்; உரும்பில் உள்ளத்து இரும்புலி வழங்கும்-நலிவில்லாத உள்ளத்துடனே பெரிய புலி உலாவு கின்ற; பெருங்கல் நாடன் வரவு அறிந்து-பெரிய மலை நாட னாகிய நம்முடைய தலைமகன் பொய்யாது வருதலை முன் னறிந்து; விரும்பி-தானும் அவனை விரும்பியது போல; மாக்கடல் முகந்து மணிநிறக் கருவி-பெரிய கடல்நீரைக் குடித்து நீலநிறமுடைய மழைத்தொகுதியாகி; தாழ்நீர் நனந் தலை அழுந்துபட -தாழ்ந்த நிலைமையினையுடைய அகன்ற இடமெல்லாம் மேலும் ஆழ்ந்து தாழுமாறு; சா அய்-மெலி வித்து; மலை இமைப்பது போல் மின்னி-மலைமுடிகள் கண்இமைப்பதுபோல மின்னி; சிலைவல் ஏற்றொடு சேர்ந்த இம்மழைக்கு - முழங்குதலையுடைய வலிய இடியோடு வந்து சேர்ந்த இம்மழை முகில்களுக்கு (எ-று).

தோழி, நாடன் வரவறிந்து விரும்பி. முகந்து, கருவியாகி, நனந்தலை அழுந்துபட, சாஅய், மின்னி, சேர்ந்த இம்மழைக்கு விருந்து எவன் செய்வாம். கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இரும்புலி, அடுக்கம் புலம்ப, அட்டு, வழங்கும் என்க. சிலை வல்லேறு என்பதனுள் வன்மையை இடைப்பிற வர லாக்கி சிலையேறு என்பதனை வினைத்தொகையாகக் கொள் ளினும் அமையும், பூக்களின் செறிவும் மிகுதியும் தோன்ற, அரும்பற மலர்ந்த என்றார். “அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை1” எனப் பிறரும் கூறுதல் காண்க. வேங்கை மரத்தின் அடிமுதல் கருநிறமுடைமையின் கருங்கால் வேங்கை எனப் பட்டது; “கருந்தாள் வேங்கை2” என்று பிறாண்டும் வருதல் காண்க. மலைப்பக்கத்தே வேங்கைமரங்கள் நிறைந்த காட்டின் கண் புலியும் களிறும் பொருமிடத்து எழும் முழக்கம் மலை யகம் எங்கும் எதிரொலிக்குமாறு விளங்க, சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு என்றார். உரும்பு, நலிவு “உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்து தொழில் வயவர்3” எனச் சான்றோர் குறிப்பது காண்க. வரவு அறிந்து விரும்பி என்னும் தொடராற்றலால், முன்னறிந்து விரும்பினாற்போல எனப் பொருள் தந்தது. மாக்கடலை முகந்தமையின் முகில் மணிநிறம் கொண்டது என்று கொள்க. கருவி, தொகுதி ஆழ்ந்துபட என்பது அழுந்துபட என வந்தது. சாஅய் என்றது சாய்வித்து எனப் பிறவினைப் பொருட்டு. மழை முகில் மின்னுதலை இமைப்பதற்கு ஒப்பாகக் கூறல் சான்றோர் மரபு; “துஞ்சுவது போல இருளி விண்பக இமைப்பது போல மின்னி4” என வருதல் காண்க.

தலைமகன் தன்னைப் பிரிந்து சென்ற காலையில் வற் புறுத்திச் சென்ற பருவம் வரக் கண்ட தலைமகள், ஆற்றாளாய் மிகவும் வருந்துகின்றா ளாகலின், அவட்கு அவனது வருகைக் குறிப்பை முன்னுணர்ந்து போந்த தோழி, அவட்கு அதனை மெல்ல உணர்த்தும் கருத்தினளாய், விருந்து எவன் செய்வாம் தோழி என்றாள். மனையறத்தின் மாண்புக்குரிய உயர்ந்தோர் வரினும், அவர் வருகை யுணர்த்தும் தூது வரினும், அவர்கட்கு விருந்து செய்து சிறப்பிப்பது தமிழ் வாழ்வின் தனிப் பண்பு; அதனாற்றான், விருந்து எவன் செய்வாம் எனத் தோழி எடுத்து மொழிந்தாள். “வினைகலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை அயர்கம் விருந்து1” என்று தலைவி கூறுவது காண்க. புகழும் இன்பமும் பெருக்கும் பெருஞ்செல்வம் வேண்டிச் சென்ற தலைமகன், வேண்டியவாறே சுற்றமும் துணையும் புகழ்ந்து பரவப் பொருளை ஈட்டி இசை பெறு கின்றான் என்பதை உள்ளுறுக்கும் குறிப்பினால் வேங்கை மலர்ந்த சாரலில் வேட்டம் புக்க இரும்புலி அடுக்கமெல்லாம் புலம்பக் களிறட்டு வழங்கும் என்றாள். உரும்பில் உள்ளத்து இரும்புலி என்றாள், அதனால் தலைமகனது வினைமாண்பை விதந்து குறித்தல் கருத்தாகலின், இதுகாறும் இல்லாதிருந்த மழைமுகில் இப்பொழுது இருள்படச் செறிந்து வருதற்குக் காரணம் இது என்பாள். வரவறிந்து விரும்பி என்றும்; பெய்த நீர் பள்ளத்தே சென்று தங்குதல் இயல்பாகலின், தாழ்நீர் நனந்தலை அழுந்துபட என்றும் கூறினாள். பொருளின்மை
யால் தாழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் இரவலர் கூட்டத்துக்கும் ஈட்டி வரும் செல்வத்தை ஈந்து வாழ்விக்கும் தலைமகனது ஏற்றம் இதனால் சுட்டியவாறு. தலைமகன் போந்து தான் ஈட்டிய பொருளைப் பகுத்துண்டு மகிழ்வதன் முன்னே, அவன் செங்கோல் வழி நிற்கும் மழைமுகில் தான் மாக்கடல் சென்று நீர் முகந்து மணிநிறம் பெற்றுப் போந்து மலைத்தலை யமர்ந்து மழை பெய்வான் சமைந்ததாக நீ ஆற்றாமை கொண்டு அயர்ச்சி யுறுவது ஆகாது என்பாள், மலை இமைப்பது போல் மின்னிச் சிலைவல் லேற்றொடு சேர்ந்த இம்
மழைக்கே என்றாள். தலைமகன் வருகிறான் என்று சொல்லிய வழிக் கேட்கும் தலைமகள் உள்ளம் ஏலாது எதிர்மறைக் குறிப்புக் கொண்டு வருந்துதற் கிடமுண்மையின், அவளது உள்ளந்தானே அவன் வரவை உய்த்துணர்ந்து கொள்ள வைக்கும் திறம் தோழி கூற்றில் அமைவது காண்க. தலைவி அவனது வரவுணர்ந்து மகிழ்வாளாவது இப்பாட்டின் பயனாதல் அறிக.

எயினந்தை மகனார் இளங்கீரனார்


மணம் புணர்ந்த சின்னாட்கெல்லாம் தலைமகன் மேற்
கொண்ட பிரிவு தலைமகள் உள்ளத்தில் பெருவருத்தத்தைத் தோற்றுவித்தது. யான் நின்னிற் பிரிந்து செல்லுதல் வேண்டும் என்று அவன் கூறிய சொல் தலைமகள் செவியிற் புகுதலும், அவட்கு ஆற்றாமை பெரிதாயிற்று; மைதீட்டிய கண்களில் நீர்ஆறாகப் பெருகிற்று; நெய்பெய்து நீவிய கூந்தல் நெகிழ்ந்து சரிந்து அவள் முகத்தை மூடிவிட்டது; குழலினும் இனிய இசையின் நலம் வாய்ந்த தன் குரலெடுத்து அழத் தொடங்கினாள். அது காணப்பொறாத தலைமகன்’ அவளை மெல்லிய இனிய சொற்களால் ஆற்றுவித்தா னாயினும். அழுது நின்ற அவளது தோற்றம், அவன் நெஞ்சக்கிழியில், வல்லோன் எழுதிய உயிரோவியம் போல ஒன்றிவிட்டது. அதனால் அவன் பிரிந்து சென்றுகொண்டிருக்கையில், சுரத்திடையே நிலவிய காட்சிகளுட் சில, அவன் நெஞ்சில் நிலவும் அவளது உருவைத் தோற்றுவிக்கவே, அவனது மனநிறை சிறிது கலங்கிற்று. யாம் பெருங்காடுகள் பல கடந்து இத்துணை நெடுந்தொலையில் வந்
துள்ளோம்; நம் காதலியைப் பிரிந்த ஞான்று விளங்கிய அவளது தோற்றம் நம்போல் நெடுஞ்சுரங்களைக் கடந்து வந்துளதே; இஃது என்னே! என வியந்து தனக்குள்ளே கூறிக்கொண்டான்.

இக்கூற்றின்கண், காதலாற் பிணிப்புண்டு கடமை வயப்பட்டு நீங்கிச் செல்லும் கட்டிளங்காளையின் அறம் திரியா உள்ளம் எய்தும் கலங்கஞர் நிலை வடித்துக் காட்டப்படுவது கண்ட எயினந்தை மகனார் இளங்கீரனார், அதனை யாவரும் கண்டு இன்புறுமாறு இப்பாட்டினால் சொல்லோவியம் செய்கின்றார்.

உழையணந் துண்ட இறைவாங் குயர்சினைப்
புல்லரை இரத்திப்1 பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்கா டிறந்தும் எய்தவந் தனவால்
அருஞ்செயற் பொருட்பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான்றன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தன் மறையினள் பெரிதழிந்
துதியன் 2மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத் தியவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.

இஃது இடைச்சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.

உரை
உழை அணந்து உண்ட இறைவாங்கு உயர்சினை-மானினம் தலையை நிமிர்த்துத் தாழ்த்தி மேய்தலால் சிறிதே வளைந்திருந்து பின் நிமிரும் உயர்ந்த கிளைகளையும்; புல்லரை இரத்தி-புல்லிய அடியினையுமுடைய இலந்தை மரத்தினுடைய; பொதிப்புறப் பசுங்காய்-பொதி போலும் புறந்தோல் பொருந்திய பழுக்காய்கள்; கல் சேர் சிறுநெறி மல்கத் தாஅம்-கற்கள் செறிந்த சிறுவழிகள் நிறைய உதிர்ந்து கிடக்கும்; பெருங்காடு இறந்தும்-பெரிய காடுகளைக் கடந்து இவண் வந்தே மாயினும்; எய்த வந்தனவால்-இவ்விடத்தும் நம்மோடே வந்து தோன்று கின்றனவே; அருஞ்செயல் பொருட்பிணி முன்னி - எளிதில் செய்தற்கரிய பொருளைச் செய்வது கருதி; யாம் சேறும் மடந்தை என்றலின்-யாம் செல்கின்றோம், மடந்தையே, என்று சொன்னேமாக; தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூர-தான் தன்னுடைய நெய்தற்பூப் போல மையுண்ட கண்களில் வருத்தம் மிக; பின்னிருங் கூந்தல் மறையினள்-பின்னப்பட்ட கரிய கூந்தலால் முகத்தை மறைத்துக்கொண்டு; பெரிது அழிந்து -பெரிதும் மனம் தளர்ந்து; உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் -பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் மேற்கொண்டு சென்று செய்த ஆரவாரத்தையுடைய போரில்; பெருங்களத்துஇயவர்-போர்க்களம் பாடும் இசைவாணர்கள்; இம்மென ஊதும் ஆம்பலங்குழலின் -இம்மென்ற ஓசை உண்டாக இசைக்கும் ஆம்பலென்னும் குழலிசை போல; ஏங்கி-அழுது; கலங்கஞர் உறுவோள்-அறிவு கலங்குதற்கேதுவாகிய துயர மெய்திய காதலியின்; புலம்புகொள் நோக்கு-தனிமைத் துன்பம் பயந்த அழுகை பொருந்திய நோக்கங்கள் (எ-று).

மடந்தை, சேறும் என்றலின், தன் உண்கண் பைதல்கூர, மறையினள் பெரிதழிந்து, குழலின் ஏங்கி, அஞர் உறுவோள் நோக்கு, பெருங்காடு இறந்தும் எய்தவந்தன என்னே, எனக் கூட்டி வினை முடிவு செய்க. ‘ஆல்’ அசை, ஆட்டினம் போல மான்களும் குழை மிகுந்த மரச்சினைகளைத் தலைநிமிர்த்துப் பாய்ந்து பற்றித் தாழ்வித்து மேயும் இயல்பின வாதலால், உழை அணந்து உண்ட என்றும், மேய்ந்து விட்டவழி, தாழ்ந்து நின்ற கிளை சிவ்வென்று மேலே உயர்தல்பற்றி, இறைவாங்கு உயர்சினை என்றும் கூறினார். அணத்தல், நிமிர்தல், இறை, சிறிது இரத்தி, இலந்தைமரம். “இரத்தி நீடிய அகன்றலை மன்றம்1” என்பது காண்க. இரத்திக்காயின் புறத் தோல் பொதியின் புறம்போலத் தோன்றுதலின், பொதிப் புறப் பசுங்காய் எனப்பட்டது. போதிய அகல மில்லாத வழி என்றற்குச் சிறுவழி என்றார். பெருங்காட்டில் மக்கள் வழக் காறு சுருங்கி யிருத்தல் பற்றிச் சிறுவழியே உளதாயிற் றென்க. உயிரிற் சிறந்த காதலரைப் பிரிந்து சென்று செய்யப்படும் அருமைபற்றி, அருஞ்செயற் பொருள் என்றும், பொருட் பற்று மிக்கவழி உள்ளத்தைப் பிணித்துத் தன்னை ஈட்டுதற்கே பணிகோடலின், அதனைப் பொருட்பிணி என்றும் கூறினார். பொருளின் சிறப்புணராது அது குறித்துப் பிரிதலை விரும்பா தொழுகலின், மடந்தை என்றார். மடந்தை அண்மை விளி, துயர் மிகுதியை, கண் கலுழ்ந்தும் நோக்கம் வேறுபட்டும் காட்டுதலின், பைதல் கூர என்றார். பைதல், துயரம், சேர வரசிற் குரிய குடிவகையில் உதியர்குடி ஒன்று; உதியன் எனப் பொதுப்படக் கூறினமையின் அக்குடியில் சிறந்து விளங்கிய பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்பது கொள்ளப் பட்டது, ஒருகால் உதியன் கொண்கான நாட்டிற்குப் போர் குறித்துச் சென்ற போது, அந்நாட்டுப் பகைவர் தமது இசை நலத்தால்படை மறவரை மயக்கிவிட்டமையின், மேலும் அவ்வாறு நிகழாமை கருதி இனிய குழலும் யாழும் நல்கும் இன்னிசை கொண்டே மறவருடைய மறத்தீ அவியாவண்ணம் மாற்றம் செய்து போர்செய்து வென்று வான வரம் பனானான்; ஆகலின் அந்நிகழ்ச்சியை நினைந்து, உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பில், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலங் குழல் ஈண்டுக் கூறப்பட்டது2" வேய்ங் குழல், கொன்றையங் குழல், ஆம்பலங்குழல் என மூவகைப்படுதலின், ஆம்பலங்குழல் எனச் சிறப்பித்தார்3“. உயர்நிலை மகளிரின் குரல் குழல் போலுதலின், குழலிசை, அழுகை யொலிக்கு உவமமாயிற்று”. “குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே4” எனப் பிறரும் கூறுதல் காண்க.

தன்னால் நலன் நுகரப்பட்டதனால் தன்பால்அன்பால் தாழ்ந்து கற்பால் உயர்ந்த தலைமகள், நலத்தால் தன் நெஞ்சில் இடங்கொண்டதே யன்றித் தான் பிரிவு முன்னிட்டு விடை வேண்டிய காலத்து ஆற்றாது கண்கலுழ்ந்து வருந்திய நிலை யினை இந்நெடுஞ்சுரத்தினிடையும் காணத் தோற்று விக்கின்ற திறத்தை நினைக்கின்றான்; அதனை இறைச்சி வாயிலாக வெளிப்படுப்பான், உழை யணந்துண்ட இறைவாங்கு உயர்சினையையுடைய இரத்தி தன் பசுங்காயைக் கல்சேர் சிறுநெறியில் உதிர்த்து வழிச்செல்வோர்க்கு வருத்தம் விளை விக்கின்றதென்றான். எளிதில் எய்தலாகாத பெருங்காடு இறந்து தான் வந்திருத்தலை நினைப்பவன், தன் மனக் கண்ணில் தோன்றும் தலைவியது உருவெளிப்பாட்டை உண்மை என மருண்டு, பெருங்காடு இறந்தும் எய்த வந்தனவால் என்று வியந்துரைக்கின்றான். எளிதில் யாவரும் செய்தற்குரியதாயின், அதனைச் செய்தல் தன் தலைமைக்குச் சிறப்பாகாமையின், அருஞ்செயற் பொருட்பிணி முன்னி என்றும், இப்பொழுது எண்ணி வருந்தும் நெஞ்சம் அப் பொழுது பிரிவுக்கு உடன்பட்டமையின், யாமே என்றும், பொருட்பிரிவின் இன்றியமையாமை நினையாது பிரிவுக் குறிப்பு உணர்ந்து வருந்துவது பற்றி மடந்தை என்றும், பிரிந்து சென்று செய்தலின் சிறப்பு வேறில்லை என்பது பற்றிச் சேறும் என்றும் கூறினான். பிரிவு ஆற்றாமையான், நெய்தல் உண் கண் பைதல்கூர என்றும், அதனை அவன் அறியாவாறு கூந்தலால் மறைத்தலின், பின்னிருங் கூந்தல் மறையினள் என்றும், அதனோடமையாது தனது இனிய குரலை எடுத்து ஆம்பற் குழலிசைபோல் வாய்வெருவி அழுதமையின், ஆம்பலங்குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள் என்றும் இசைத்தான். உதியன் மண்டிய ஞாட்பின் பெருங்களத்து இயவர் ஊதிய ஆம்பலங்குழலை எடுத்தோதினான். ஆம்பலங் குழல் மறவரது மறத்தீயை அவியாதவாறு போலப் பொருண் மேற் சென்ற பிரிவுள்ளம் மடங்காது செலவே புரிந்தமையின், தலைமகன் பொருட்பிரிவு மேற்கொண்டு சென்றானாயினும் செல்வுழிச் செல்லும் மெய்ந்நிழல் போல விடாது தொடரும் காதலன்பின் மாண்பு இதனால் புலப்படுத்தவாறு காண்க.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை1” எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் மீட்டுவர வாய்ந்த வகையின்கண்" தலைவன் நிகழ்த்தும் கூற்றுக்கு இதனைக் காட்டி, “இஃது உருவு வெளிப்பட்டுழிக் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

தொல்கபிலர்


காப்பியர் என்பாருள், தொல்காப்பியர் எனவும், பல்காப்பியர் எனவும் குடிவகை இருந்திருப்பது போலக் கபிலர் குடிவகையில் தொல் கபிலர் ஒருவராதல் வேண்டும். கரையைப் “புள்ளித் தொல் கரை” என்று சிறப்பித்ததனால், தொல்கபிலர் எனப்பட்டாரென்று பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கூறுவர். அஃது உண்மையாயின், இவர் பெயர் தொல்கபிலர் எனப்படாது தொல்கரையார் என்றோ தொல்கரைக் கபிலர் என்றோ இருத்தல் வேண்டும். இவர் பாடியனவாக ஏனைத் தொகை நூல்களுள்ளும் பல பாட்டுக்கள் உள்ளன.

யானையின் வெண்கோடு கொண்டு பொன் அகழும் கானவன் நன்பொன்னும், கண்பொருது இமைக்கும் திண் மணியும், மருப்பிடை உக்க தெண்ணீர் ஆலி கடுக்கும் முத்து மாகிய மூவேறு தாரமும் ஒருங்குடன் பெறுவன் என்பதும்; ‘கன்று ஈன்ற மடப்பிடிக்குக் களிற்றி யானை புறங்காக்கும்’ என்பதும் அறிய வேண்டுவனவாம். பிரிந்த தலைவன் பொருட்டு இல் லிருந்து அறம்புரிந் தொழுகும் மகளிர், “வல்லே வருக வரைந்த நாள்என, இல்லுறை, கடவுட்கு ஒக்குவதும் பலியே” என்று இசைப்பதும், மணவினைக்கண். மணமகனை “நல்லோள் கணவன் இவன்” என வாழ்த்துவதும், குன்றவர் தம் குறிச்சிக்கு வரும் விருந்தினரை ஓம்பும் திறத்தை, “சேந்தனை சென்மதி நீய பெருமலை, வாங்கமைப் பழுநிய நறவுண்டு. வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே” என்பதும் இத்தொல்கபிலர் உரைக்கும் சிறப்புடைய செய்திகளாம்.

தனித்த நிலையில் ஒருவர் ஒருவரைக் கண்டு காதலுற்ற தலைமக்கள் இருவரும் பன்முறையும் நேரிற்கண்டு அளவளா வினாலன்றி அவரது காதல் வளர்ந்து மாண்புறுதற்கு வழியில்லை. ஆதலால் தலைமகன் தலைமகளுக்கு உயிர்த் தோழியைக் கண்டு அவளது நட்பைப் பெற்றுத் தன் காதற்குறிப்பை உணர்த்துவான். அறிவும், அன்பும், அறமும் ஆகிய மூன்றும் திரண்டு ஒரு வடிவு கொண்டாற் போன்ற தோழி தலைமகள் உள்ளத்தை ஆராய்ந்து, அவட்கும் அவன்பால் காதலுண்மை தேர்ந்து கொண்டு, அவள் அறியாத வகையில் இருவரையும் ஓரிடத்தில் நேரில் தனித்துக் காணுதற்கேற்ற வாய்ப்பினை அமைத்துத் தருவள். அதன்பின் தோழியறியத் தலைமக்களிடையே காதல் வளரத் தொடங்கும். தோழியும் அதன் வளர்ச்சிக்கு ஊறுண்டாகா வண்ணம் ஆக்க
மும், அரணும் செய்தொழுகுவள். இவ்வொழுக்கத்தில் சின்னாள் கழிந்ததும், பகற் போதில் ஓரிடத்தே தலைமகளைக் கண்டு பயிலும் தலைமகனை, இரவின்கண் தலைமகளது மனைப்புறத்தே வந்து காணுமாறு தோழி அறிவுறுத்துவள். அவ்வேற்பாடு சில காலங்களில் இருவரும் காண முடியாதவாறு தவறிப்போதலுமுண்டு. இந்த இடையீட்டால் மனம் சோர்வுறும்; அக் காலையில், தலைமகன் உள்ளத்தில் தலைமகளை மணந்து கோடல் வேண்டுமென்ற நினைவு எழுமாறு தோழி தன் சொல்லாலும், செயலாலும் முயல்வள். தொடக்கத்தில் தோன்றிய காதல், உடம்புகளின் இயற்கை யீர்ப்பால் உளதாகும் தொடர் பாதலைத் தலைமகன் தன் நல்லறிவின் சீர்த்த ஆராய்ச்சியால் துணிந்து, அது முறுகி உயிரும் உயிரும் ஈர்ப்புண்டு நிற்கும் தொடர்பாய், உண்மைக் காதலாய் உயருமாறு முயல்வான். அது நாளடைவில் நிகழும் செயல் வகைகளால் பெருகி ஒருவரை யொருவர் இன்றியமையாத அளவில் சிறந்த போது, அவன் அவளை மணம் செய்து கொள்வன். ஆணுடம்பினும் பெண் ணுடம்பு மெல்லிதாகலின், தலைவிபால் உருக்கொண்ட காதல் விரைவிற் பெருகித் திருமணத்தால் உண்டாகும் அழவில் கூட்டம் பெறுதற்கு அவாவி நிற்கும். தோழியும் பெண் ணாதலின் அதனையே தானும் எய்தித் தலைமகனை விரைந்து மணம்புரிந்து கொள்ளுமாறு தூண்டும் முயற்சியில் ஈடுபடுவாள். அதனைச் செயற்படுத்தற்குப் பகலில் வரும் தலைவனை இரவில் வருக என்றும், இரவில் வரும் போதும், வழியருமையும், தலை மகற்கு ஊறு உண்டாகும் என்னும் அச்சமுண்மையும் காட்டி, ஊரவர் அறிந்து அலர் கூறுவரென்றும்; தாயர், தன்னையர் அறியின் ஏதம் பெரிதாம் என்றும் தோழி கூறி, விரைய வரைந்து கோடல் தக்கதென அவன் உணர்ந்து கொள்ளும் வகையில் உரையாடியும் குறிப்புரையால் உய்த்துணர்வித்தும் ஒழுகுவாள். இந்நிலையில் ஒருநாள் இரவு தலைமகன் முன்னரே குறித்துக் கொண்ட குறியிடத்திற்கு வந்து நின்றானாக. அவன் வரவறிந்த தோழி அவனைக் கண்டும் காணாதாள் போன்று அவன் செவியிற் கேட்கும் அளவில் மறைந்து நின்று தலைமகளோடு உரையாடு வாளாய், “தோழி, முந்தைநாள் பெய்த இடி மின்னல்களோடு கூடிய மழையில் மலைப்பக்கத்தே மேய்ந்து கொண்டிருந்த களிற்றியானை யொன்றின்மேல் இடி விழுந்ததாக, அது வீழ்ந்து இறந்தது; கண்ட அதன் பிடியானை பெரிதும் அஞ்சி வருந்திப் புலம்பிக் கொண்டு சென்றது. விடிந்து பகற்போது வரவும், அக்களிறு இறந்து கிடப்பது கண்ட கானவர் கூட்டமாய்ச் சென்று அதன் கோடுகளை எடுத்து அகன்ற பாறைமேல் கிடத்திப் புலர்வித்தனர்; சிலர் அதன் உடலைப் பிளந்து வளவிய ஊனை எடுத்து வெயிலிடை வைத்து உணக்குவாராயினர்; அதனால் ஊர் முழுதும் பேராரவாரம் உண்டாயிற்று; அதனை எண்ணாது, அவ்விரவுப் போதில் நம் காதலனாகிய தலைமகன் வந்து சேர்ந்தா னாகலின், அவன் வரவினை ஆரவாரிக்கும் ஊரவர் அறிந்து கொள்வரோ என அஞ்சியும் அவன் வந்த இரவின் கொடுமையை யும், காட்டாற்றின் நீர்ப் பெருக்கையும் நினைந்து யான் மிகவும் மனம் பதறி அறிவு மயங்கிப் போனேன். இதற்கு என் செய்வேன்” என்று கூறினாள்.

இக்கூற்றின்கண், இரவுக்குறி வரும் தலைமகற்கு வழியில் யானை முதலிய விலங்குகள் வழங்குவதால் உண்டாகும் தீமை யும், மழை இடிகளால் உண்டாகும் ஏதமும், ஊரவர் உறக்கமின்றி ஆரவாரம் செய்வதால் பிறக்கும் அச்சமும் அழகுறக் கூறித் தலைமகனை வரைந்து கொள்ளுமாறு உய்க்கும் தோழியின் சொல் நலத்தைக் கண்ட ஆசிரியர் தொல்கபிலர் இப்பாட்டில் சொல்லோவியம் செய்கின்றார்.

வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும் 1பச்சூன் கெண்டி வள்ளுரம்2 உணக்கவும்
மறுகுதொறும் புலாஅஞ்3 சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந் திசினே
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளிபெயல்4 பொறித்த புள்ளித் தொல்கரை
பொருதிரை நிவப்பின் வரும்யா றஞ்சுவல்
ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல்லேறு
பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி1
மையின் மடப்பிடி இனையக்
கையூன்று பிழிதரு களிறெறிந் தன்றே

இஃது ஆறுபார்த் துற்ற அச்சத்தால் தோழி தலைவிக் குரைப்
பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

உரை
வெண்கோடு கொண்டு வியல்அறை வைப்பவும்-வெள்ளிய கோடுகளைப் புய்த்தெடுத்து அகன்ற பாறை மேல் உலர வைப்பதனாலும்; பச்சூன் கெண்டி வள்ளுரம் உணக்கவும்-பசிய ஊனை அறுத்தெடுத்து வளவிய தசையை உலர்த்து வதனாலும்; மறுகுதொறும் புலாஅஞ் சிறுகுடி அரவம்-தெருக்கள் தோறும் புலால் நாற்றம் கமழும் சிறு குடியிலுள்ளார் செய்யும் ஆரவாரத்தை; வைகிக் கேட்டுப் பையாந்திசின்-வேறு தொழில் நோக்காதே யிருந்து கேட்டு வருந்துவேனாயினும்; குன்ற நாடன் மன்ற வந்தோன்-மலை நாடனாகிய தலைமகன் தெளிவாகக் குறியிடத்தே இரவில் வந்தமையால்; தோழி-; அளிது அல்கல்-அவன் வந்த இரவுப் போது இரங்கத் தக்கதொன்று காண்; துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை-துளிக்கும் மழைநீரால் பொறித்து வைத்தாற் போல் பள்ளமாகிய புள்ளி பொருந்திய பழைமையான கரையை; பொருதிரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்-அலைக்கும் திரைகள் உயர்ந்து வரும் காட்டாற்றுப் பெருக்கினை நினைந்து அஞ்சுவே னாயினேன்; ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல்லேறு-குளிர்ந்த மழையொலி யுடனே தோன்றும் உருமாகிய பெருமுழக்கத்தையுடைய பெரிய இடியேறு இடித்து; பாம்புகவின் அழிக்கும்-மலைப் பக்கங்களில் வாழும் பெரும் பாம்புகளின் நலம் அழிந்து கெடச் செய்து; ஓங்குவரை பொத்தி-உயர்ந்த மலையை யடைந்து; மையின் மடப்பிடி இனைய-மைபோற் கரிய நிற முடைய இளம்பிடி கண்டு புலம்பித் துயருற; கையூன்றுபு இழிதரு களிறு எறிந்தன்று-தன் துதிக்கையை யூன்றி அப்பிடி இறங்குதற் பொருட்டுத் துணைபுரிந்து அஃது இனிது இறங்கச் செய்யும் களிற்றியானையின் மேல்இடிவீழ்ந்து கொன்ற தனால் எ-று.

தோழி: உருமின் ஆர்கலி நல்லேறு ஓங்குவரை பொத்தி, மடப்பிடி இனைய, களிறு எறிந்தன்று; அதனால் வியலறை வைப்பவும், வள்ளுரம் உணக்கவும், புலாஅம் சிறுகுடி அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசின், ஆயினும், குன்றநாடன் வந்தான்; ஆகலான் வருகை அளிது; அவன் வரும் வழி யிடத்தே யாறு அஞ்சுவல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உருமேற்றால் வீழ்த்தப்பட்ட களிற்றியானையின் வெண்கோடும் ஊனும் என்பது பின்னே விளங்க நிற்றலின், வாளா வெண்கோடு கொண்டு என்றும், பச்சூன்கெண்டி என்றும் கூறினார். வள்ளுரம் வளவிய ஊன்தசை. இது முழுத்தசை எனவும் வழங்கும். “புள்ளி, நீழல், முழூஉ வள்ளுர முணக்கு மள்ள1” என்றார் பிறரும். பையாத்தல், வருந்துதல், “வெறுநாள் யாண ருள்ளிப் பையாந்து2” எனச் சான்றோர் வழங்குதல் காண்க. “பைத லொக்கல்3” என்பதற்கு அதன் பழைய வுரைகாரர் “பையாப்புற்ற சுற்றம்” என உரைத்தது ஈண்டு நோக்கத் தக்கது. அளிதோ என்றது வியப்பின்கண் வந்தது. மன்ற, தேற்றப்பொருட்டு, கனவிய மழைத்துளி வீழ்ந்த இடம் ஆழ்ந்து புள்ளி போறலின், துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை என்றார். புதுக்கரை யாயின் சரிந்து போம் என்பது பற்றி, கரையைப் பொருது உயர்ந்தெழுந்து நிரம்பி வரும் காட்டாறு கடத்தற் கரிய தென்பது பற்றி, பொருதிரை நிவப்பின் வரும் யாறு என்று கூறப்பட்டது. நிவப்பு, உயர்ச்சி, மழைமுகிலின் குமுறுகுரலை ஈர்ங்குரல் என்றார். ஆர்கலி, முழக்கம், பெருமுழக்கத்தோடு கூடிய பேரிடி ஈண்டு ஆர்கலி நல்லேறு எனப்பட்டது. இடியோசை கேட்ட பாம்பு தன் படம் விரித்து அவிந்து கெடும் என்ப வாகலின், பாம்பு கவின் அழிக்கும் என்றார். கவின், ஈண்டுப் படத்தின் பொலிவு, மை, கருமை, இன்னுருபு ஒப்பின்கண் வந்தது. மடப்பிடியின் நிறம் கரிதாதலின், மையின் மடப்பிடி என்றும், அதன்பால் கொண்ட பெருங்காதலால் அஃது இனிது இறங்குதற் பொருட்டுக் களிறு, தன் கையை ஊன்றி உதவினமை தோன்ற, கையூன்றுபு இழிதரு களிறு என்றும் கூறினார், இழிதருதல், ஈண்டுப் பிறவினைப்பொருட்டு என்க. இனி, களிற்றிற்கு ஏற்றினும் அமையுமாயினும், பொருட்
சிறப்பின்மை யறிக. தான்இனிது இறங்குதற்குக் கைதந்து உதவிய காதற்களிறு தன் கண் முன்னே இடியால் எறியப்
பட்டது கண்டு ஆறாத் துயருற்று உழக்குமாறு தோன்ற மடப்பிடி இனைய என்பது கூறப்பட்டது.

இரவுக்குறி வந்தொழுகும் தலைமகனை இனி அதனைக் கைவிட வேண்டு மென உரைக்கும் கருத்தினால் சொல்லாடல் தொடங்குகின்ற தோழி, பகற்குறிக்கண் அவனைத் தலைப் பெய்யாமைக்குக் காரணம் சிறுகுடி வாழ்நரது ஆரவாரம் என்பாள், சிறுகுடி யரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசின் என்றாள். அவ்வரவத்துக்குக் காரணம் இவை என்று விளக்கு தற்கு வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும். பச்சூன் கெண்டி வள்ளுரம் உணக்கவும் என்பாளாயினள். பகற்குறி கூடாதாயின் இரவுக்குறி நன்றெனக் கருதி வந்த தலைமகற்கு, அதனையும் மறுக்கும் கருத்தால், அளிதோ தானே தோழி அல்கல் என்றாள். இரவுப் பொழுதின் ஏதம் கூறலுற்று. இரவில் கருமுகில் பேரிடியும் மின்னலும் கொண்டு தோன்றி இடியெறிந்து மழைநீர் மிகப் பெய்ததனால், மடப் பிடியொடு கூடி யுலவிய களிற்றியானை இடியால் தாக்குண்டு இறந்துபட்ட தென்பாள் ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல்லேறு ஓங்குவரை பொத்தி மடப்பிடி இனையக் களிறு எறிந்தன்று என்றும், மிக்க மழையால் காட்டாறு நீர்ப்பெருக் கெடுத்து கரைபுரண் டோடுகிற தென்பாளாய், துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரை பொருதிரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் என்றும் கூறினாள். இடியேறுண்டு தன் காதற்களிறு இறந்தது கண்ட மடப்பிடி வருந்திய வருத் தம் கண்டுவைத்தும், இச் சிறுகுடியினர் அதன்பொருட்டு இரக்கங் கொள்ளாது, அக்களிற்றின் வெண்கோடு கொள்வ திலும், வள்ளுரம் உணக்குவதிலும் ஈடுபட்டுத் தம் நலமே நினைந்து ஆரவாரித்தது. எனக்குப் பெருங் கலக்கத்தைத் தந்த தென்றற்குச் சிறுகுடியரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசின் என்றும், இத்தகைய கொடிய இரவில் நம் தலைவர் வருவரோ என அஞ்சிக் கிடந்தேனுக்கு அவர் யான் தெளிவாகக் காணுமாறு வந்து நின்றார் என்பாள். வந்தோன் மன்ற குன்ற நாடன் என்றும், அளிதோ தானே தோழி அல்கல் என்றும், அவர் வரும் வழியில் உள்ள காட்டாறு நீர்பெருகிக் கரையை அலைத்துக் கொண்டு கடுகிச் செல்லு மாகலின் அதனை அவர் கடந்து வருதல் வேண்டும் என நினைந்து அச்சம் மிகுந்து வருந்துவே னாயினேன் என்பாள் பொருதிரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் என்றும் கூறினாள். இதனாற் பயன், வரும் பொழுதும் வழியும் தீங்கு மிகவுடையவாயிருத்தலின் இவ் வொழுக்கத்தைக் கைவிட்டுத் தலைமகன் வரைந்து கோடலே தக்கதெனக் குறிப்பால் தோழி வரைவு கடாவியவாறு.

அம்மள்ளனார்


கண்வழிப் புகுந்து கருத்திடை முளைத்த காதலைக் களவின் கண் அறத்திற் றிரியாது வளர்த்து வரும் தலைமக்கள் பால் கடிமணம் செய்து கற்புநெறி மேற்கொள்ளுதற்கு இடையேயும், வினை காரணமாகவும், பொருள் காரணமாகவும் தலைமகற்குப் பிரிவு நிகழ்வதுண்டு. வினை செய்தலும், பொருளீட்டலும் பிறக்கும் போதே உடன்தோன்றும் கடமைகளாகும். அவற்றைக் காளைப்பருவத்தே தோன்றும் காதலுணர்வு விலக்கும் மதுகை யுடைய தன்று. கடனாற்றற்கண், காதலும் அதனோடு இயை புடைய பிறசெயல்களும் இடைப்புகுந்து தடுத்தற்கு உள்ளம் இடம்தருவது அறமாகாது. வரைவு இடைவைத்த பிரிவு, வினைபற்றியும், வரைபொருள் பற்றியும் இருக்குமாதலால்,; தலைமகன் பிரிந்து செல்லுங்கால், தலைமகள் பிரிவு ஆற்றி யிருப்பது, அவளது இயற்கைக் கற்பறனாகும். பிரிந்து செல்லும் தலைமகன், தான் மீண்டு திரும்புதற்கு ஒரு காலம் குறிப்பிட்டு, அது தவறாமல் வந்து சேர்வன். அக்காலை, மேற்கொண்ட பொருள் வினைகளை முடித்தல்லது, மீளான் என்பதை நாம் நினைவிற் கோடல் வேண்டும். அஃது ஆண்மையின் பண்பு. இம்முறையில் தலைமகன் பிரிந்திருந்த போது, தலைமகட்கு ஆற்றாமை பெரிதாயிற்று. அவனோடு கூடிப் பெறும் அழிவில் கூட்டத்து அயரா இன்ப நுகர்ச்சி குறித்து உடலிடத்து உண் டாகும் துடிப்பும், உள்ளத்து முறுகிப் பெருகியிருக்கும் காதல் உணர்வும், இளமை உள்ளங்களை மிகவும் அலைத்து வருத்தும். அறக்காவலும், ஆண்மைத் திண்மையும் இல்வழி அவை தீநெறி யிற் செலுத்தி, மக்களை மாக்களாக்கிவிடும். தலைமைப் பண்பும் தலைமை ஒழுக்கமும் உடைய தலைமக்கள் அந்த அலைப்புக்கு உட்பட்டு வருந்தித் தம் திண்மையால் தாங்கி, முடிவில் பேரின் பம் எய்துவர். அதனால் தலைமகட்குத் தலைவன் பிரிவால் உண்டான மன நோய், அவன் குறித்துச் சென்ற பருவம் எய்து வதற்குள் பெருந்துயரை எய்துவித்தது. அவள் உண்டியிற் சுருங்கி, உறக்கம் குன்றி, மேனி வேறுபட்டு மெலிவுற்றாள். நெற்றி முழுதும் பசந்து தோன்றுவதாயிற்று.அது காணும் உயிர்த்தோழி ஆவன கூறி அவளை ஆற்றுவிக்க முயல்வாள்.

பிரிந்த காதலனது காதல்மாண்பையும், கட்டுரை வன்மை யையும் எடுத்தோதிக், காமமிக்கு வருந்தும் அவளது கலக் கத்துக்குத் தெளிவு தோற்றுவிப்பாள். காதலனுடைய காதற் சிறப்புக்கு மிக்கதும் ஒப்பதும் வேறு யாதும் இல்லை யெனவும், இயற்கையில் தோன்றும் எல்லா நிகழ்ச்சிகளும் இயற்கை நெறிக்கும் முறைக்கும் மாறின்றி நிகழ்வனவாயினும், அவற்றின் முறைமையும் ஒழுங்கும் நேர்மையும் தலைமகனான காதல னுடைய நேர்மை ஒழுக்கங்கட்குப் பின்னே நிற்பனவே யன்றி; ஒத்தும் உயர்ந்தும் அமைவனவல்ல என்பது காதலொழுக்கத்தின் கற்பனை யறம். அதனால் இயற்கை நிகழ்ச்சிகளைக்காட்டி இது தலைமகன் பிரியுங்கால் குறித்த பருவத்தின் வருகைக் குறிப் பாதலின், இனித் தலைவர் வருகை தப்பாது; நீ ஆற்றியிருத்தல் வேண்டு மெனத் தோழி தேற்றுவாள். தலைவிபால் தோன்றும் வேறுபாடும் மறைந்த ஒழுக்க நெறிகளும் தாய்க்குப் புலனாகி அவளுடைய மனவமைதியைக் குலைக்கும்; ஓரொரு கால் தலைவியின் செயலைச் சினந்து கடிதலும் செய்வள். இரவுப் பொழுது நெடிது கழியினும் கண்ணுறங்காமை தலைவிபால் நீடுவது காணும் தாய் பெரிதும் வெகுண்டு அவளை உறங்கு விப்பள்.

அதனைக் காணும் தோழி தலைவியை நெருங்கித் “தோழி நம்மோடு கூடி விளையாடும் ஆயமகளிரும் உறங்கிவிட்டனர்; அன்னையும் சினம் சிறிது தணிந்ததனால் ஒடுங்கினாள்; நொச்சி வேலியிற் படர்ந்த முல்லைக் கொடி அந்நொச்சியுடனே முகை யரும்பி மலரத் தொடங்கிவிட்டது; இது கார்ப்பருவ வரவு காட்டும் குறி; இதுவே நம் காதலர் குறித்த பருவம். அவர்குறித்த கார்ப்பருவம் வந்தமையின் இனி அவரதுவருகைதவறாது; மேலும், அவர் நம்பால்பெருங்காத லுடைய ராகலின் அவர் எத்துணை நெடிது சென்றிருந்தா ராயினும் குறித்த காலம் தவறாமை அவரதுகுறிக்கோள்; அன்றியும், குறித்த பொழுது தவறுவதால் என்றும் பொன்றாத பெரும்புகழ் அவர்க்கு எய்து மாயினும் அதனை அவர் பொருளாக மதித்துத் தமது வருகை தவிரார் என அறிக” என்று வற்புறுத்தி, “இது கார்ப்பருவமே என்பதை வானத்தே மழைமுகில் மின்னி இடிப்பது கேட்டலின் நீ அயர்வது ஒழிக” என்று இயம்புகின்றாள்.

இக் கூற்றின்கண் தலைமகனது பிரிவின்கண் தலைவி ஆற் றாமையால் நிலை கலங்கித் தலைவன்பால் கொண்ட நன் மதிப்பில் ஊற்றம் குன்றா வகையில் அவன் குறித்த பருவவரவை எடுத்துக் காட்டி அவற்குப் பொன்றாது நிற்கும் புகழ் பெறு வதிலும், நின் காதலன்பாற் பிறக்கும் இன்பம் பெறுவதே சிறப்பு என்பது கருத்தென உரைப்பதும், அதனால் காதற்காம நெறிக்கண் இயலும் இளமை, ஏனை, அறம், பொருள்களை விட இன்பத் துக்கே ஏற்றம் தந்தொழுகும் என்ற கருத்து வெளிப்படுவதும் கண்ட அம்மள்ளனார் இப் பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

மலர்ந்த பொய்கைப் பூக்குற் றழுங்க
அயர்ந்த ஆயம் கண்ணினிது படீஇயர்
அன்னையும்1 சினந்தணி துயிலினள் தெண்ணீர்த்
தடங்கடல் வாயில் உண்டு2 வான் இடங்கொள
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழக்
காரெதிர்ந் தன்றாற் காலை காதலர்
தவச்சேய் நாட்ட ராயினும் மிகப்பேர்
அன்பினர் வாழி தோழி நன்புகழ்
3தாழ்ப்பின்று பெறினும் தவிரலர்
4கேட்குவெ னல்லனோ விசும்பின் றகவே.

இது வரைபொருட் பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறீஇயது.

உரை
மலர்ந்த பொய்கைப் பூக்குற்று-பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கையில் அப்பூக்களைக் கொய்து; அழுங்க அயர்ந்த ஆயம் கண் இனிதுபடீஇயர்-நம்முடனே கண்சிவந்து மேனி வருந்த நீரில் விளையாட்டயர்ந்த ஆயமகளிர் இனிது கண்உறங்குதற்பொருட்டு; அன்னையும் சினம் தணி துயி லினள் - நம்மைச் சினந்து கொண்ட அன்னையும் அது தணிந்து துயில்வா ளாயினள்; தெண்ணீர்த் தடங்கடல் வாயில் உண்டு-தெளிந்த நீரையுடைய பெரிய கடலில் வாய் வைத்து உண்டாற்போல நீரை முகந்து; வான் இடங்கொள - மழைமுகில் வானிடத்தே பரவுதலால்; மயிலடி இலைய மாக்குரல் நொச்சி-மயிலின் காலடி போலும் இலைகளை யுடைய கரிய கொத்துக்களோடு கூடிய நொச்சியும்; மனை நடு மௌவலொடு-மனையிடத்து நட்டு நொச்சியிற் படர விட்டிருக்கும் முல்லையும்; ஊழ்முகை அவிழ-முற்றிய அரும்பு கள் மலர்ந்து மணம் கமழ; காலை கார் எதிர்ந்தன்று-காலமும் கார்ப்பருவத்தைச் செய்யாநின்றது; காதலர் தவச்சேய் நாட்ட ராயினும்-நம் காதலர் மிக்க சேய்மைக்கண்ணுள்ள நாட் டிடத்தே இருந்தா ராயினும்; மிகப்பேர் அன்பினர்-மிக்க பெரிய அன்புடைய ராகலான்; தோழி-; வாழி-; நன்புகழ் தாழ்ப்பின்று பெறினும் தவிரலர்-நல்ல புகழ் சிறிதும் தாழாது பெறப்படுவதாயினும் வினைமுற்றிய பின் ஆண்டுத் தங்கு தலைச் செய்யாது தாம் குறித்த கார்ப்பருவம் நோக்கி விரைந்து வருவர்; விசும்பின் தகவு கேட்குவெனல்லனோ-மழைமுகிலின் முழக்கத்தை இப்பொழுது கேட்கின்றேன், காண் எ-று.

தோழி, வாழி, ஆயம், கண் இனிது படீஇயர், அன்னையும் சினந்தணி துயிலினள்; வான் தடங்கடல் வாயில் உண்டு இடங்கொள, நொச்சி மௌவலொடு முகை அவிழக், காலை கார் செய்தன்று; காதலர் சேய் நாட்டா ராயினும், பேரன் பினர் ஆகலான், புகழ் பெறினும் தவிரலர்; யான் விசும்பின் தகவு கேட்குவெனல்லனோ - எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பூக்கள் மலர்ந்து விளங்கும் பொய்கையைக் காணின் இளமகளிர்க்குப் பூக்கொய்து நீரிற் படிந்தாடுதற்கு விருப்பு மிகுமாதலின், அவற்றைச் செய்து கண் சிவந்து மேனி துவண்ட மகளிரை, மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க அயர்ந்த ஆயம் என்றும், இனிது உறங்கினாலன்றி அத்து வட்சி நீங்காமையின், கண் இனிது படீஇயர் என்றும், நீர் நீடாடிக் கண்சிவந்து பொலி வழிந்திருப்பது காணின் தாயர்க்குச் சினம் பெருகுமாதலின் அன்னையும் சினம் தணி துயிலினள் என்றும் கூறினார். எக்காலத்தும் கடல்நீர் தெளிந் திருப்பது பற்றித் தெண்ணீர்த் தடங்கடல் என்றும் வாயி னால் உண்டாற் போல முகந்த செயலை வாயில் உண்டு என்றும், நீர் முகந்து கறுத்த முகில் வானமெங்கும் பரந்து நின்றதனை வானிடங் கொள என்றும் கூறினார். முன்னும் பின்னுமாக முக்கிளையாய் விரிந்து நிற்கும் நொச்சியிலைக்கு மயிலின் காலடி உவமை யாயிற்று. “மயிலடி அன்ன மாக்குரல் நொச்சியும்1” என்றும், “மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி2” என்றும் சான்றோர் கூறுவது காண்க. மனையின் கண் முல்லைக் கொடி நட்டு அதனை நொச்சிமேற் படர விடுதல் பண்டையோர் வழக்கு; “மனைய, தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும் மௌவல்3” என்பது காண்க. தன்னுள் தேனும் மணமும் சிறக்கப் பெருகுமளவும் இதழ் கூம்பி முறுக்குற் றிருக்கும் அரும்பு, அது விரியும் செவ்விக்கண் ஊழ்முகை எனப்படும்; பயன்தரும் வகையில் முற்றியிருக்கும் வினையை ஊழ்வினை என்றாற் போல, மழை முகிலில் தோன்றும் மின்னும் இடியும் ஈண்டு விசும்பிற்குத் தகவு எனக் கருதப் பட்டன.

மகள் வேறுபாடு கண்டு காரணம் காணமாட்டாது மனம்கலங்கிய தாய்க்கு ஆயமகளிரது மிக்க செயல் பெருஞ் சினத்தை விளைவித்தது என்றற்கு அன்னையும் சினந்தணி துயிலினள் என்றாள். இளமகளிர்க்குப் பூக் கொய்தலும் நீராடலும் விளையாட்டாயினும் அதனை நெடிது செய்து வருந்தி மேனி வாடினமை புலப்பட அழுங்க அயர்ந்த ஆயம் என்றும், அவ்வயர்ச்சிக்கு மருந்து இனிய உறக்கமாகலின் கண்ணினிது படீஇயர் என்றும், மகளிர் உறங்கிய போதும் தலைமகள் உறங்காமை கண்டு சினந்தமையின் அன்னையும் சினந்தணி துயிலினள் என்றும் கூறினள். உள்ளம் கவர்ந்து ஓங்கி நிற்கும் சினம் உறக்கத்தால் தணிந்தொழிவது இயல்பாதலால் சினந்தணி துயிலினள் என்றாள். ஆயமும் தாயும் துயின்ற போழ்தும், தலைமகள் தலைவன் பிரிவு பற்றிய நினைவால் உறக்கமின்றி வருந்தினாள் ஆதலின், அவளை உறங்குவிக்கும் கருத்தால் அவன் குறித்த பருவம் வந்தமை காட்டுவாளாய், வானத்தின்கண் மழைமுகில் பரந்து இடங் கொண்டமை காட்டிக் கார் எதிர்ந் தன்றால் காலை என்றாள். வானத்திற் பரவிய கருமுகில் பெருமழையைப் பெய்வது கண்டு தடங்கடல் வாயில் உண்டு எனவும், மழைநீர் தெளிந்திருப்பது அதற்கு முதலாய கடனீரின் தெளி வென வற்புறுத்தற்குத் தெண்ணீர்த் தடங்கடல் எனவும் சிறப்பித்துரைத்தாள். நொச்சியும் மௌவலும் கார்ப்பருவத்தே மலர்வனவாகலின், மாக்குரல் நொச்சி மனைநடு மௌவ லொடு ஊழ்முகை அவிழ என்றாள். மனையில் நட்ட மௌவல் நொச்சிமேற் படர்ந்து மலர்வது கூறியது, இம் மனைக்கண் வளர்ந்த நீ தலைமகனை மணந்து இன்புறுவாய் என்ற கருத்தை உள்ளுறுத்து நின்றது. அதுகேட்டுத் தலை மகனது பிரிவு நினைந்து வருந்திய தலைமகள் மகிழுமாறு அவனது அன்பின் பெருமையை எடுத்துரைப்பாள், காதலர் தவச்சேய் நாட்டராயினும் மிகப் போன்பினர் வாழி தோழி என்றாள். காதலர்க்குக் காதலியைப் பிரிந்து சென்று வினைசெய்வதினும் நல்ல புகழ் தருவது பிறிது யாதும் இல்லையாகலின், அவர்க்குப் புகழ்வேட்கை பெரிது எனத் தலைமகள் சொல்லி வருந்தினாளாக, அவட்கு, நன்புகழ் தாழ்ப்பின்று பெறினும் தவிரலர் என உரைத்து, மௌவல் மலர்வது கொண்டு கார்ப்பருவம் வந்தது எனக் கோடல் பொருந்தாது என்ற தலைமகட்குக் கேட்குவெனல்லனோ விசும்பின் தகவே என்பதனால் வற்புறுத்தினாள். இதனாற் பயன், தலைமகள் குறித்த கார்ப்பருவம் வந்தமையின் அவர் வருதல் ஒரு தலையாகலின், நீ இனி வருந்துதல் ஒழிக எனத் தோழி தெரிவித்தவாறும் தலைவி ஆற்றியிருப்பாளாவதுமாம்.

கந்தரத்தனார்


கந்தரத்தனார் என்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இத்தொகை நூல்களுள் வேறே காணப்படுகின்றார். இருவரையும் வேறுபடுத்துணர்தற்குப் பண்டையோர் அவரை ஊர்ப்பெயராற் சிறப்பித்து உரோடகத்துக் கந்தரத்தனார் எனவும், இவரை வாளா கந்தரத்தனார் எனவும் குறித்திருக்கின்றனர். சிலர் இருவரையும் ஒருவராகவே கருதுகின்றனர்; அதனை வற்புறுத்தும் சான்று ஒன்றும் அவர்களாற் குறிக்கப்படவில்லை. இவர் பாடியனவாக இத்தொகை நூலில்தான் பாட்டுக்கள் உள்ளன.

தலைமகன் காதல் சிறப்பது குறித்துக் களவை நீட்டித்து வந்தான். தலைமகட்கு அது மிக்க வருத்தத்தைச் செய்தது. தோழி, தலைமகளை ஆற்றுவிக்கு மாற்றல் தலைவனது அன்பின் திறத்தையும், தலைமைப் பண்புகளையும் எடுத்தோதி வற்புறுத்தினாள். அதனால் தலைமகளது மனம் அமைதியுறாது அலையத் தொடங்கிற்று. தலைமகனுடைய அன்பும், ஒழுக்கமும், உண்மையாயின் களவொழுக்கத்தை நீட்டித்தல் வேண்டாவே; அவன் அதனைச் செய்தலால் அவற்கு என்பால் இருந்த அன்பு நீங்கி யொழிந்தது என்று தெளிவாக அறியலாம். அது தெரிந்து கொள்ளாது இவ்வூர்ப் பெண்டிர் வறிதே என்மேல் அலர் கூறுகின்றனர்; தீமை செய்வோருடைய தீமையை நேரிற் காணி னும், ஏதுக்களாலும், எடுத்துரைகளாலும் நன்கு ஆராய்ந்து உணர்வதே பெரியோர் செயல்; இவ்வூரார் அதனை எண்ணு கின்றா ரில்லை என எதிர்த்து மொழிந்தாள்.

இக்கூற்றின்கண், தலைமகன்பால் கொண்ட பெருங் காதலால் உள்ளத்திற் புலவியரும்பி அவன் வரையாது நீட்டிப் பதன் கருத்தைத் திரியக் கொண்டு, அன்பு இடையறவு பட்ட தாகத் துணிந்துரைப்பதும், அலர்கூறும் மகளிர்பால் அறந்தெரி பெருஞ்செயல் இல்லை என்பதும், இளமையுள்ளத்தின் இயற்கைச் செய்கையாதலைக் கண்ட கந்தரத்தனார் இப்
பாட்டின்கண் அவற்றைக் கோத்துப் பாடுகின்றார்.

தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாமறிந் துணர்ப1 என்ப மாதோ
வேய்மிடை அழுவ2 நாப்பண் ஏமுற்
றிருவெதிர் ஈன்ற வேற்றலைக்3 கொழுமுளைச்
சூன்முதிர் மடப்பிடி4 நாண்மேய னாரும்
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினைத் துறந்த1 கோண்முதிர் பெரும்பழம்2
விடாளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச்
சேணும் சென்றற் றன்றே3 அறியா
தேக லடுக்கத் திருங்கோற் குறிஞ்சி4
மன்னும் நல்லூர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார் என்றிறத் தலரே.

இது வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.

உரை
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாம் அறிந்து உணர்ப என்ப-தீமை செய்வோரிடத்துத் தீமையை நேரிற் கண்ட பொழுதும் பெரியராயினார் அதனை அறநெறிக்கு ஒப்ப ஆராய்ந்து கொள்வர் என்று சான்றோர் உரைப்பர்; வேய்மிடை அழுவ நாப்பண்-மூங்கில்கள் நிறைந்த காட்டின் நடுவே; ஏமுற்று -மயங்கி; இருவெதிர்ஈன்ற வேற்றலைக் கொழுமுளை-பெரிய வெதிரென்னும் மூங்கில் வகையி னிடத்துத் தோன்றிய வேற்படை போன்ற இலையையுடைய கொழுவிய முளையை; சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும்-சூல் நிரம்பிய இளைய பிடியானை நாட்காலையிற் சென்று மேய்ந்துண்ணும்; மலைகெழு நாடன் கேண்மை-மலைகளையுடைய நாடனாகிய தலைவனது நட்பு; பலவின் மாச்சினை துறந்த-பலாவின் பெரிய கிளையினின்றும் காம் பற்று வீழ்ந்த; கோள்முதிர் பெரும்பழம்-நன்கு காய்த்து முதிர்ந்த பெரிய பழம்; விடரளை வீழ்ந்து உக்காங்கு-மலைப் பிளவில் அமைந்த முழைஞ்சினுள் எவர்க்கும் பயன்படாத வாறு வீழ்ந்து ஒழிந்தது போல; தொடர்புஅறச் சேணும் சென்றற் றன்று-பின்னே தொடர்பு இல்லாதபடி பன்னாட்கு முன்னே சென்று அற்றது; அறியாது-அதனை ஆராய்ந் தறியாமல்; ஏகல் அடுக்கத்து-உயர்ந்த மலைப் பக்கத்திலுள்ள; இருங்கோற் குறிஞ்சி-கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரங்கள் நின்ற; நல்லூர்ப் பெண்டிர்-இந்த நல்ல ஊரிலுள்ள மகளிர்; என் திறத்து அலர் இன்னும் ஓவார்-என்பொருட்டு அலரெடுத்துரைப்பதை இப்பொழுதும் கை விடுகின்றார் இல்லை, காண் எ-று.

பலவின், பெரும்பழம், விடரளை வீழ்ந்து உக்காங்கு, மலைகெழு நாடன் கேண்மை, தொடர்பறச் சேணும் சென்று அற்றன்று; பெரியோர், கண்டோர் திறத்தும் தீமை அறிந்து உணர்ப என்ப. நல்லூர்ப் பெண்டிர் என்திறத்து அறியாது இன்னும் அலர் ஓவார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செய்யப்படும் தீமையைச் செய்வோரிடத்து நேரிற் காணினும், இடம், காலம் முதலிய தொழின்முதலைகளை உடன் வைத்து அறநாற் பொருட்கு ஒப்ப ஆராய்ந்தல்லது பெரியோர் உண்மை துணிந்து உரையாராகலின், தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தரம் அறிந்து உணர்ப என்ப என்றும், இது பெரியோரது பெருஞ் செயல் என்றும், இஃது அவர்பால் வழிவழியாய் வந்து கொண்டிருத்தலின் என்ப என்றும் கூறினார். வேய்மிடை அழுவம், மூங்கில்கள் செறிந்த காடு; “வேய்பயில் அழுவம்1” என்று பிறரும் கூறுப, ஏமுற்று மேய லாரும் என இயைக்க. வெதிர், மூங்கில் வகையுள் ஒன்று; இதன்கட் பெறப்படும் மூங்கிலரிசி சிறந்த உணவாய்ப் பயன்படும் என்பது பற்றி “புல்லிலை வெதிர நெல்விளை காடு2” எனவும். “சிறியிலை வெதிரின் நெல்விளையும்மே3” எனவும் சான்றோராற் சிறப்பித்துக் கூறப்படுகின்றது. மூங்கி லின் முளைகளைத் தின்பதில் யானைகட்குப் பெரு விருப்புண்டு என்பர். “கழைதின் யாக்கை விழைகளிறு4” “முளைமேய் பெருங்களிறு5” எனச் சான்றோர் கூறுப. கன்றீன்ற யானைக்குக் களிறு மூங்கில்முளையைக் கொடுக்கும்; “ஈன்று நாள் உலர்ந்த மென்னடை மடப்பிடி, கன்றுபசி களைஇய பைங்கண் யானை, முற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்6” என்பதனால் ஈதறியப்படும்; இது கொண்டு சூல் கொண்ட பிடியானை மூங்கில் முளையைத் தின்றால் அதன் கருச்சிதைந்து விடும் என்று ஒரு கொள்கையும் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. சூன்முதிர் மடப்பிடி ஏமுற்றதனால் வெதிரின் கொழுமுளையை மேயலாரும் என்க. கோள், காய் கோள்முதிர் பெரும்பழம் என்றதற்குக் கொள்ளப்படுதற் கேற்பப் பழுத்து முதிர்ந்த பெரிய பழம் என்று உரைப்பினு மமையும். ஏகல், பெரிய கற்கள்; “ஏகல் சூழ் வெற்பன்1” என்று பிறரும் கூறுதல் காண்க. சென்றறுதல் சென்று தேய்ந்தொழிதல்; “இன்குர லெழிலி தென்றிசை மருங்கிற் சென்றற்றாங்கு2” என்றும், “பெய்து புறந் தந்து, பொங்கலாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றறாலியரோ பெரும3” என்றும் வழங்குமாறு அறிக. அற்றன்று, அணிந்தன்று, வந்தன்று என்றாற் போலும் முற்று வினைத் திரிசொல். “கருங்கோற் குறிஞ்சி4” என வழங்குத லுண்மையின், “இருங்கோற் குறிஞ்சி” என்றார். இருமை, கருமை, பெண்டிர் என்பது முன்னிலைப் புறமொழியாய்த் தோழியையும் அகப்படுத்தி நின்ற மாதும், ஓவும் அசைநிலை.

தீமை செய்வோரது தீமையைக் கையும், கைவினையமாக நேரிற் காணினும், ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி ஆகிய வற்றைக் கண்டு ஆராய்ந்து அல்லது தீர்ப்புக் கூறுதல் சான் றோர் முறையின்மையின், பெரியோர் தாம் அறிந்துணர்ப என்றும், இம்முறை சான்றோரால் வழிவழியாக வற்புறுத்தப் படும் நீதி என்றற்கு என்ப என்றும் கூறினாள். மலைகெழு நாடன் கேண்மை சென்றற்றமை அறியாது இன்றும் என்பால் உளது போலக் கொண்டு அலர் கூறுகின்றனர். இவ்வலர்ப் பெண்டிர்; இவர்கட்கு அப்பெரியோர் செயல் தெரியா தொழிந்தமை என்னே என முடிக்கின்றாளாகலின், தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்ப என்ப என எடுத்து மொழிந்தாள். வரைவினை நீட்டித்து ஒழுகுதல் தன் கேண்மை தேய்ந்தொழிதற்கு ஏதுவாதலை அறியாமல் அதனையே தலைமகன் மேற்கொண்டு ஒழுகுதல் கூடாது என உள்ளுறையால் வரைவு கடாவுகின்றாளாதலின், வேய்மிடை யழுவம் நாப்பண் ஏமுற்று இருவெதிர் ஈன்ற வேற்றலைக் கொழுமுளை சூல்முதிர் மடப்பிடி நாண்மேயல் ஆரும் என்றாள். வேய்மிடை அழுவம் என்றது, ஒன்றோடொன்று இழைந்து தீப்பிறப்பித்துத் தீங்கு பயக்கும் குற்றமுடைய இடம் எனச் சுட்டி, அலர் விளைவித்து இற்செறிப்புப் பயந்து தீங்கு பயக்கும் குற்றமுடையது. இவ்வூர் என்பதை உட்கொண்டு நின்றது. சூல்முதிர் மடப்பிடி எனச் சிறப்பித்தது, தலைமகன் உள்ளத்துத் தலைவிபால் நிறைந்துள்ள காதலன்பை உணர்த் திற்று. கேண்மை சென்றற்றது இன்று நேற்றன்று; பன்னாட்டு முன்பும் சேணும் சென்றற்றன்று என்றாள். அலர் கூறும் பெண்டிர், பெரியோர் போல அறிந்துணராது வல்லாங்குக் கூறுதல் முறைமையன்று என்றற்கு, அறியாது இன்னும் ஓவார் என்திறத்து அலர் என்றாள். இஃது அலரச்சம் கூறி வரைவு கடாயது.

“மறைந்தவற் காண்டல்”1 எனத் தொடங்கும் நூற்பாவின் கண் “அருமைசெய் தயர்ப்பினும்” என்பதற்கு இப்பாட்டைக் காட்டி, “தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின், நாம் அரியே மாகியது பற்றித் தாமும் அரிய ராயினார் போலும் என அவ்விரண்டும் கூறினாள்” என்பர் நச்சினார்க்கினியர்.

குன்றியனார்


குன்றியனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தொண்டி நகரைக் குறிப்பதனால் இவர் சேரநாட்டுப் பொறை நாட்டவராகக் கருதப்படுகின்றார். ஆயினும், மாலை மறையும் ஞாயிற்றை “ஞான்ற ஞாயிறு குடமலை மறைய” எனவும் “செல்சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் கல்சேர்பு நண்ணி” எனவும் கூறுதலை நோக்கின் இவர் சேரநாட்டார் அல்லர் என்பதே தெளிவாகின்றது. இவர் பாடியனவாக ஏனைத் தொகை நூல்களிலும் பாட்டுக்கள் சில காணப்படுகின்றன.

காதலன்பால் பிணிப்புண்ட தலைவனும் தலைவியும் பிரிந் திருந்த விடத்து ஒருவரையொருவர் நினைந்து கூறும் கூற்றாக இவர் கூறுவன மிக்க நயமுடையவாகும். பிரிந்த தலைமகன் தலைவியின் நலனழிவு நினைந்து, “காடணி கொண்ட காண்டகு பொழுதின், நாம்பிரி புலம்பின் நலஞ்செலச் சாஅய், நம்பிரி பறியா நலனொடு சிறந்த நற்றோள் நெகிழ வருந்தினள் கொல்லோ” என்பதும், தலைமகளது நினைவு முற்றும் அவன் பாலே ஒன்றி நிற்பதனை “துறைவன் இன்றுயில் மார்பிற் சென்ற என் நெஞ்சு” என்றும் “துயரம் செய்து நம் அருளாராயினும், மறாஅலியரோ அவருடைய கேண்மை, அளியின்மையின் அவணுறை முனைஇ, வாரற்க தில்ல தோழி” என்றும் கூறுவனவும் மிகவும் இன்பம் செய்வனவாம்.

தலைவியுள்ளத்திற் காதலன்பு நன்கு முறுகிப் பெருகித் தன்னையின்றி அமையாத வளர்ச்சியை எய்தியிருப்பதை உணர்ந்த தலைவன் அவளை வரைந்துகோடற்கண் தன் கருத்தைச் செலுத்துவா னாயினன். தனது தாளாண்மையால் ஈட்டிய பொருள்கொண்டு தலைவியை வரைந்து மணம் செய்து கொள்வதே தனக்குச் சிறப்பு என்று எண்ணி வரைவு நிகழ்தற் குள்ளாகவே தலைவன் பொருள் ஈட்டற்கு அவளிற் பிரிந்து சென்றான். சென்ற பொழுதில் தான் மேற்கொண்ட வினையை முற்றுவித்துத் திரும்பி வருவதற்குரிய காலமும் அவனாற் குறிக்கப் பட்டது. அதனை மனத்திற்கொண்டு ஆற்றியிருந்த தலைமகட்கு அவனது பிரிவு மிக்க துன்பத்தைச் செய்தது. அதன்மேலும் அவன் குறித்த காலமும் சிறிது நீண்டு தோன்றுவதாயிற்று; அதனால் தலைமகட்கு ஆற்றாமையும் மிகுந்தது. அது கண்ட அவளுடைய தோழி தலைமகனுடைய வாய்மையையும், முயற்சியது பெருமை யையும் எடுத்து இனிமையுற மொழிந்து; தலைமகனது பிரிவை ஆற்றி யிருத்தலினும் பெருமை தருவது தலைமகட்கு வேறு ஒன்று மில்லை யென வற்புறுத்தினாள். தோழியது வன்புறையால் தலைவியது மனக்கொதிப்பு பெருகிற்றே யன்றிச் சிறிதும் தணிவு பெறவில்லை. மலர் போலக் காதற்காம நோயும் மாலையில் பெருகிப் பிரிந்த காதலரைப் பெரிதும் பேதுறுவிக்கும் இயல் பிற்று; இதனை நம் காதலர் மனத்திற் கொள்ளாது பிரிந்தே கழிவராயின், கடல் ஒரு பால் முழங்க, கானல் எல்லாம் மலர, நெய்தல் கூம்ப, புள்ளினம் தம் பொதும்படைய, செஞ்ஞாயிறு தன் செஞ்சுடரைச் சுருக்கி மலைவாய் அடைந்து மறைய, வரும் இம் மாலைப்போது செய்யும் வருத்தத்தால்; என் மேனி மெலிவு காண்போர் இதற்குக் காரணமாய பிணி முருகன் முதலாய தெய்வங்களால் ஆயிற்றெனப் பேசுவர். காதலன் பொருட்டு உளதாய என் வேறுபாட்டைப் பிற தெய்வங்களின் மேலேற்றிப் பழி கூறுதல் நமது தலைமைக்குப் பண்பாகாது. பண்புகெட வாழ்தல் அறமன்மையின் யான் இனிப்பன்னாள் உயிர் வாழ் கிலேன் காண்; எனத் தோழியை மறுத்துரைத்தாள்.

இவ்வுரையின்கண் மாலை மலரும் காமநோயால் விளையும் மேனி மெலிவுக்குப் பிற முருகு முதலாய பிற தெய்வங்கண்மேல் ஏற்றிக் கூறப்படுதல் பண்பன்று எனக் கருதித் தன் தலைமைப் பண்பு காக்கும் சால்பினால் நெடிது உயிர்வாழ்தல் நீர்மை யன்று எனக் கருதும் தலைமகளின் சிறப்புத் தமிழ் மகளிரின் கற்புத்தகைமையை இனிது புலப்படுத்தக் கண்ட சான்றோராகிய குன்றியனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடு கின்றார்.

பெருங்கடல் முழங்கக் கானல் மலர
இருங்கழி யேதம் இல்லிறந்து மலிர
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள் உடங்கு1
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச்
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம்
கல்சேர்பு நண்ணிப் படரடைபு நடுங்கப்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
2அன்னார் உன்னார் கழியிற் பன்னாள்
வாழலென் வாழி தோழி என்கண்
துனிபிறி தாகக் 3கூறிற்
பிணிபிறி தாகல் பண்புமார் அன்றே.

இது வரைவுநீட ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது, சிறைப்புறமுமாம்.

உரை
பெருங்கடல் முழங்க-பெரிய கடல் அலைமிக்கு முழக்கம் செய்ய; கானல் மலர-கானலிடத்துப் பூக்கள் மலர; இருங்கழி ஓதம் இல்லிறந்து மலிர-கரிய கழியின்கண் கடனீர் மிகுந்து நம் மனை யெல்லையைக் கடந்து பெருக; வள்இதழ் நெய்தல் கூம்ப-வளவிய இதழையுடைய நெய்தற்பூக்கள் இதழ் குவிய; புள் உடங்கு கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேர-புள்ளினம் தம்மிற் கூடிப் பூவின் மணம் கமழும் பொதும்புகளிலுள்ள தம் கூட்டையடைய; செல்சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண் டிலம்-முன்செல்லும் ஒளிக் கதிர் மழுங்குதலால் சிவந்த நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து வீழும் ஞாயிறு; கல் சேர்பு நண்ணி-மலைவாய் அடைந்து மறைவதால்; படர் அடைபு நடுங்க-நாம் துன்பமுற்று உடல் நடுங்க; புலம்பொடு வந்த புன்கண் மாலை-தனிமைப்பட வந்த புன்கண்மையை உடைய மாலைப்போது விளைவிக்கும் துன்பத்தை; அன்னார் உன்னார் கழியின்-அப்பெற்றியர் ஆகிய நம் தலைவர் நினையா தொழுகுவராயின்; தோழி-; வாழி-; பன்னாள் வாழலென்-யான் பன்னாட்கள் உயிர் வாழேன்; என் கண் துனிபிறிதாகக் கூறின்-எனக்கு உண்டாகிய ஊண் வெறுப்பைக் கண்டு இது முருகு முதலியவற்றால் உண்டாயது எனக் கருதி ஊரவர் கூறுவராயின்; பிணி பிறிது ஆகல் பண்பு அன்று-காதலன் பொருட்டு வேட்கை நோய் உண்டாவது நமக்குப் பண் பாகாது, காண் எ-று.

மாலை உன்னார் கழியின், தோழி பன்னாள் வாழலென், வாழி; என் கண் பிணி பிறிதாகக் கூறின, பழி பிறிதாகல் பண்பு அன்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க, முழங்க, மலர, மலிர, கூம்ப, சேர, நண்ண, நடுங்க, வந்த மாலை என்க. நண்ணி என்பது காரணப் பொருளில் வந்த வினை யெஞ்சு கிளவி. மக்களும், விலங்கும், புள்ளும், ஆகிய உயிர்களின் இயக்கத்தால் உண்டாகும் பேரொலியால் வேறுபடத் தோன்றாதிருக்கும் கடல் முழக்கம்; மாலைப்போதில் அவற்றின் ஒடுக்கத்தால் விஞ்சி நின்றலின், பெருங்கடல் முழங்க என்றும்; கானற் சோலையிடத்துக் காலையரும்பிப் பகலெல்லாம் போதாகிய பூக்கள் மாலையில் மலர்வதால் கானல் மலர என்றும் கூறினார். நெய்தல் நிலத்துக் குடியிருப்புக்கள் கழிக்கரையில் அமைந்திருத்தலால், மாலைப் போதில் திங்கள் எழப் பெருகும் கடல்நீர் கழி அடைந்து பெருகிப் பாய்வதுபற்றி இருங்கழி யோதம் இல்லிறந்து மலிர என்றும், நெய்தல் வைகறையில் மலர்ந்து மாலையில் கூம்புவது பற்றி, நெய்தல் கூம்ப என்றும் எடுத்துரைத்தார். பொதும்பர், பூம்புதர், மரச்செறிவுமாம். கட்சி, ஒதுக்கிடம், கூடுமாம் “கான மஞ்ஞை கட்சிச் சேக்கும்1” என வருவது காண்க. செல் சுடர் என்றற்கு ஞாயிற்றின் பின்னே செல்லும் கதிர் எனினு மமையும். எழுந்து விளங்கிய ஞாயிறு தாழ்ந்து மறைவது பற்றிச் சிவந்து வாங்கு மண்டிலம் என்றார். காதலுணர்வு தோன்றிப் பிரிவினால் உள்ளத்தைச் சுடுதலின் உடற்புறம் குளிர்கொண்டு நடுங்குவ
தனால் படர் அடைபு நடுங்க என்றார். புலம்பு, தனிமை, ஒளிகுன்றி இருள் பரந்து துன்பத்தோற்றம் பெறுதலின் மாலை புன்கண் மாலை எனப்பட்டது. பிறிது, முருகு முதலியவற்றால் உளதாகும் காரணம், மார், அசைநிலை.

காதலனைப் பிரிந்துறையும் தலைமகட்கு அவனைத் தலைப்பெய்து கூடி விளையாடிய இடங்களான கடலும், கழிக்கரையும், கானற்சோலையும் மாலைப்போதில் ஒளி யிழந்து, பொலிவின்றித் தோன்றும் காட்சி அவள் எய்திய வருத்தத்தை மிகுதிப்படுத்துதலின் அவற்றை விதந்து பெருங் கடல் முழங்கக் கானல் மலர இருங்கழி யோதம் இல் லிறந்து மலிர என்றாள். இளையோற்குத் தழையுதவும் இயல்பிற்றாகலின் நெய் தலைக் கண்டு வள்ளிதழ் நெய்தல் கூம்ப என்றும், புள்ளினம் தம் கூடு நோக்கிச் சேறல் தலை மகன் வாராமையை நினைப்பித்தலின் புள்ளுடங்கு கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேர என்றும் இயம்பினாள். ஞாயிற்று மண்டிலம் மலைவாய் அடைந்து மறையக் கண்ட தலை மகட்குக் காதல் நினைவு மிக்கெழுந்து வருத்துதலால் படர் அடைபு நடுங்க என்றும், புலம்பொடு வந்த புன்கண் மாலை என்றும் மொழிந்தாள். தனித்தார்க்கு அத்தனிமை மாலைப் போதில் விளங்கித் தோன்றுவது பற்றி புலம்பொடு வந்த மாலை எனவும், தனக்குண்டாகிய புன்கண்மையை மாலைப் போதின் மேலேற்றிப் புன்கண் மாலை எனவும் கூறித் தன்னைச் சேர்ந்தவர் துயர் தீர்ப்பது தலையாயவர் கட னாகவும், அதனைத் தன் வரவால் போக்காது செலவே கருதினான். தலைமகன் என்பாளாய், அன்னார் உன்னார் கழியின் என்றும், அதனாற் பெருகும் பிரிவுத்துயர் மிக்கு நாளடைவில் தன் உயிரை உண்டொழியும் என்ற கருத்தால், பன்னாள் வாழலென் என்றும், தோழி அது கேட்கப் பொறா ளாதல் பற்றி வாழி தோழி என்றும் கூறினாள். தனக்கு உளவாகிய துயிலின்மை, பசிபட நிற்றல், முதலிய வெறுப்புக் கட்குத் தாயர் வெறி முதலியன செய்து, முருகு முதலியன காரணமெனக்கூறி வருந்துவர் என்றற்குத் துனிபிறிதாகக் கூறின் எனவும்; அவர் கருதுவது காரணமாயின் தலைவன் பொருட்டு எனக்கு இப்பிணி யுண்டாதல் நன்றன்று என்பாள். பண்புமாரன்று எனவும் இசைத்தாள். ’அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி, வெறிகமழ் நெடுவேள் நல்குவனே யெனின், செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிதே1" எனப் பிறாண்டும் தலைவி கூறுதல் காண்க.

இதனால், தலைவி தன் மனநிறை அழிக்கும் வருத்த மிகுதியை வாய்விட்டுரைத்து ஆறுதல் பெறுவாளாவது
பயன் என உணர்க.

பாலைபாடிய பெருங்கடுங்கோ


வினைகுறித்துத் தன் மனைவியிற் பிரிந்து செல்லும் கடமை மேற்கொண்ட தலைவன், வினையை முற்றுவித்துக் கொண்டு வேனிற் பருவத்தே மீண்டு வருவதாக வற்புறுத்திச் சென்றான். வேனிற்பருவம் வந்தது. அதன் வரவு நோக்கி அவன் வற்புறுத்த சொல்லைத் தேறிப் பிரிவாற்றியிருந்த தலைமகட்குப் பருவ
வரவில் வாராமல் அவன் தாழ்த்தது மிக்க வருத்தத்தைச் செய்வ
தாயிற்று. வேனில் வரவில் மாமரங்கள் புதுத்தளிர் ஈன்று பொலி
வுற்றன; அம்மரச்சினைகளில் குயிற்சேவல் தன் பெடையுடன் கூடி எதிரெதிர் இருந்து இனிமையுறப் பாடலுற்றன; சின்னாட்கள் கழிந்ததும் மாவின் பூங்கொத்துக்கள் உதிர்ந்தன; காய்கள் தோன்றிக் கனியத் தலைப்பட்டன; இங்ஙனம் இளவேனில் கழிய முதுவேனில் தோன்றி நிலவுங்கால் மாலைப் போதில் பூ விற்கும் மகளிர் பாதிரிப் பூக்களைக் கொணர்ந்து தெருக்களில் விற்பாராயினர். தலைமகன் வாராமையால் தலைமகட்கு அவற்றை வாங்கித் தலையிற் சூடி இன்புறுதற்கு வாய்ப்பு இல்லையாயிற்று. தன் வனப்புக் கண்டு மகிழ்தற்குரிய தலைமகன் இல்வழித் தான்; தன்னைப் பூக்களால் ஒப்பனை செய்து கோடல் கற்புடை மகளுக்கு ஆகாத செயலாகலின், அவள் மனம் வருந்திற்று. வருத்த மிகுதி கண்டு வாடிய தோழியை நோக்கி, “தோழி, இளவேனில் கழிந்து முதுவேனில் வந்தும் காதலர் நம்மை மறந்தே போனா
ரென எண்ணுமாறு அவர் வாராராயினர்; அதனால் உண்டாகும் வருத்தத்தினும் பூவிலைப் பெண்டு வறிது செல்வதன் பொருட்டு என் நெஞ்சம் மிக்க வருத்தமுறுகிறது” என்றாள்.

இக்கூற்றின்கண் தலைமகன் குறித்த பருவவரவில் வாராமை காணப் பிறந்த தன் வருத்தத்தைப் பூவிலையாட்டியின் மேல் வைத்துக் கூறுமுகத்தால் தலைமகள் தன் மெல்லியற்பொறை வெளிப்படுப்பது கண்ட பாலைபாடிய பெருங்கடுங்கோ இப்பாட்டின்கண் அக்கருத்தைப் பெய்து பாடுகின்றார்.

அடைகரை மாஅத் 1தலங்குசினை ஒலிப்பத்
தளிர்கவின் எய்திய தண்ணறும் பொதும்பிற்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றெதிர் ஆலும் பூமலி காலையும்
2இணருகு புடைவதன் றலையும் புணர்வினைக்
ககன்றோர் மன்றநம் மறந்திசி னோரென3
ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதும லாட்டிக்கு நோமென் நெஞ்சே

இது பருவங் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது,

உரை
அடைகரை மாஅத்து அலங்குசினை ஒலிப்ப - ஆற்றங்
கரையிலுள்ள மாமரத்தின் அசைகின்ற கிளைகள் தழைத்
தமையால்; தளிர் கவின் எய்திய தண்ணறும் பொதும்பில் - தளிர் மிக்கு அழகு பொருந்திய குளிர்ந்த நறிய சோலைகளில்; சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் - தன் காதற் சேவலொடு கூடியுறையும் சிவந்த கண்ணையுடைய கரிய குயிற்பேடை; புகன்று எதிர் ஆலும் பூமலி காலையும் - ஒன்றனை யொன்று விரும்பி எதிரெதிர் இருந்து கூவி மகிழும் பூக்கள் நிரம்பிய இளவேனிற் பருவத்தும்; இணர் உருபு உடைவதன்தலையும் - பூங்கொத்துக்கள் காய்ந்து உதிரும் முதுவேனிற் பருவத்தும்; புணர்வினைக்கு அகன்றோர் நம் மறந்திசினோர் மன்ற என - மேற்கொண்ட வினை குறித்துப் பிரிந்துசென்ற காதலர் நம்மைத் தெளிவாக மறந்தேபோனார் என எண்ணுமாறு; ஓவமாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய துகி லிகை யன்ன - ஓவிய மெழுதுவோரது ஒள்ளிய செவ்வரக்கின் குழம்பிடைத் தோய்த்த எழுதுகோல் போல; துய்த்தலைப் பாதிரி - தலையிலே துய்யினையுடைய பாதிரியின்; வால் இதழ் அலரி - வெள்ளிய இதழோடு கூடிய பூவை; வண்டுபட ஏந்தி - வண்டு சூழ்ந்தொலிக்க ஏந்திக் கொண்டு; புதுமலர் தெருவு தொறும் நுவலும் - புதுப்பூக்களைத் தெருக்கள்தோறும் சென்று விற்கும்; நொதுமலாட்டிக்கு - பூவிலைப் பெண்டின் பொருட்டு; என் நெஞ்சு நோம் - எனது நெஞ்சம் வருந்துகிறது, காண் எ-று.

குயில் ஆலும் பூமலி காலையும், உடைவதன்றலையும், புணர்வினைக்கு அகன்றோர் நம் மறந்திசினோர் மன்ற என எண்ணுமாறு அலரி ஏந்தி நுவலும் நொதுமலாட்டிக்கு என் நெஞ்சு நோம் எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஆற்றுப் படுகையிலும், கரையிலும் வளமுறத் தழைக்கும் இயல்பின வாகலின், அடைகரை மாஅத்து அலங்குசினை ஒலிப்ப என்றார். அலங்குதல், அசைதல், ஒலித்தல், தழைத்தல், மென்மையும் ஒளியும் கொண்டு விளங்கும் மாந்தளிர் அழகிய காட்சி வழங்கிக் குளிர்ந்து தோன்றுதல் பற்றி, தளிர் கவின் எய்திய தண்ணறும் பொதும்பு என்றார். பொதும்பு, ஈண்டுச் சோலை மேற்று, குயில் இயல்பாகவே கரிய மேனியும் சிவந்த கண்ணும் உடைமையின், செங்கண் இருங்குயில் எனப் பட்டது. மாமரம் தளிரீனும் காலத்திற் குயிலினம் தங்கி இளந்தளிர் கோதி இன்புறு மாகலின் மாவின் பொதும்பில் செங்கண் இருங்குயில் இருத்தலை எடுத்தோதினார். “அந் தளிர் மாஅத்து அலங்கன் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவறக் கூவும் இன்னிள வேனில்”1 எனப் பிறரும் கூறுதல் காண்க. குயிற்பெடையும் சேவலும் கூடி எதிரெதிர் இருந்து இனிமை மிகக் கூவுதல் இயற்கையாதலால் இருங்குயில் புகன்று எதிராலும் என்றார். பிறாண்டும் ’இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று“2 என்பது காண்க. முதுவேனிலில் மாமரம் காய்த்துக் கனிதலின் பூக்கள் உதிர்ந்தொழிவது பற்றி, அதனை, இணர்உருபு உடைவதன் றலையும் என்றார். மறந்திசினோர் என்றது, என்றி சினோர் உணர்ந்திசினோர் என்றாற்போல வரும் முற்றுவினைத் திரிசொல். ஓவியத்தைஓவ மெனவும், ஓவிய மெழுதுதலை ஓவச் செய்தி”1 ஓவினை2" எனவும் வழங்குத லுண்மையின், ஓவியம் எழுதுவோரை ஓவமாக்கள் என்றார். துகிலிகை, எழுதுகோல் அலரி பூ நொதுமலாட்டி அயலவள், குவ்வுருபு பொருட்டுப் பொருளது, மன்ற, தேற்றப் பொருட்டாய இடைச் சொல்.

தனக்கு உயிர்போற் சிறந்த வினை குறித்துப் பிரிந்த தலைமகன் வற்புறுத்திய வேனிற் பருவவரவு நோக்கி இருந்த தலைமகளுக்கு; அவ்வேனிலின் வரவை மாமரம் புதுத்தளிர் ஈன்று பொலிந்து காட்டுதலின், அதனையே முற்பட விதந்து அடைகரை மாஅத்து அலங்குசினை ஒலிப்பத் தளிர் கவின் எய்திய தண்ணறும் பொதும்பில் என்றாள். மாவின் சினை தழைத்தலால் தளிர் தோன்றி அழகு செய்யப் பொதும்பு தட்பமும் நறுமணமும் கொண்டு சிறக்கின்ற தென்றது, தன் மேனி மெலிதலால் வேறுபாடு தோன்றி வருத்தம் எய்துவிக்க மனையகம் பொலிவின்றிப் புலம்பு மிக்குள்ளது எனத் தலைமகள் தன் ஆற்றாமையைக் குறிப்பால் தானே சுட்டிய வாறாயிற்று. இது சுட்டு என்னும் உள்ளுறை வகை. குயிற்பெடை தன் சேவலோடு கூடி அதன் எதிர் இருந்து ஆலுவது கண்டாட்குத் தானும் தன் காதலனுடன் கூடி யிருந்து மகிழ்தற்கு இல்லாமை நினைந்து தலைமகள் அவலிப் பதைக் குறித்தலின், அதனை, “சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் புகன்று எதிராலும் என்றாள். செங்கண் இருங்குயில் எனக் குயிற்பெடையைச் சிறப்பித்தது, அது பெற்று மகிழும் இன்பங் குறித்து; இதனால் தலைவிபால் பொறாமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. இள வேனிலைப் பூமலி காலை என்றாள், பல்வேறு மரமும் செடியும் கொடியும் பூத்துப் பொலியும் காலமாதல் பற்றி, பூமலி காலையில் இல்லுறை மகளிர் அவற்றை இனிது சூடிக் கணவனொடு கூடி இன்புறுதல் முறை யாகலின், அக் காலத்தே வருவல் என உரைத்த காதலன் வராமை அறமன்று என இதனால் சுட்டினாள். முதுவேனிலை, இணர் உகுபு உடைவதன்றலையும் என்றாள், தளிர் முற்றிப் பூத்துணர் உதிர்ந்து காய்த்துக் கனிந்து பயன்படும் மா முதலிய மரங் களின் செயல் காட்டியது. தானும் மனைவாழ்வில் மாண்பயன் எய்தற்குரிய தகுதி காட்டியவாறு. இதனால் இளவேனிற் போதில் வாராதொழியினும் முதுவேனிற் பருவத்தேனும் தவிராது வருதற் குரிய தலைமகன் வராமையை எடுத்தோதி, இவ்வாற்றல், தலைமகன் வினைமேற் சென்ற விருப்பத்தால் மனைமேற் சேறற்குரிய காதலை மறந்தொழிந்தான் என்பது தேற்றமெனத் தான் கருதியதனைச் சாதிப்பாளாய், புணர் வினைக்கு அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என்றாள். இஃது அவன்வயிற் பரத்தமை சுட்டி நின்றது. தலைமகன் மனை மறந்தொழிந்தமையும் அதனால் தான் பூச்சூடிப் பொற்புறுதற் கில்லாமையும் அறியாது, பூவிலைப் பெண்டு அதனை வண்டினம் சூழ்ந்து பாட ஏந்தி வருதற்கு இரங்கு வாளாய்ப் புதுமலர் தெருவுதொறும் நுவலும் நொது மலாட்டிக்கு நோம் என் நெஞ்சு என்றாள். வேண்டாக் காலத்துப் பூவிற்கும் மகளிர்க்கு மனைமகளிர் இரங்கி,”அளியள் தானே பூவிலைப் பெண்டே1" எனவும், “துய்த்தல் இதழ பைங்குருக் கத்தியோடு, பித்திகை விரவுமல நொள்ளீரோ வென, வண்டுசூழ் வட்டியள் திரிதரும், தண்டலை உழவர் தனிமட மகளே2” எனவும் கூறுமாறு காண்க. இதனால் தலைவி தன் ஆற்றாமை கூறி அயாவு யிர்ப்பாளாவது பயன்.

பெருங்குன்றூர் கிழார்


களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகன், அதற்குரிய நெறியில் ஒழுகி வருங்கால், பகற்குறியிடத்தும் இரவுக்குறியின் கண்ணும் தலைமகளைக் கண்டு இன்புறும் அவனது உள்ளம் வரைந்து கோடலை நினையாது; களவின்பத்தையே நாடி நின்றது. அதனை உணர்ந்த தோழி அவனை விரைந்து மணந்து கொள்ளுமாறு தூண்டும் கடமையுடையளாய் அவன் வரவை எதிர்நோக்கி யிருந்தாள். ஒருநாள் இரவுக்குறி கருதி வரும் தலைமகன்; தலைமகள் மனைக்குப் புறத்தே ஒரு சிறையின் கண் வந்து நிற்பது கண்டாள். அவன் மார்பில் மாலையும் முடியிற் கண்ணியும் அணிந்து இனிது தோன்றக் கண்ட தோழி, தலைமகட்கு உரைப்பாள் போல் அவன் செவியிற் கேட்குமாறு, “தோழி மலைநாடனாகிய தலைவன் யார் தருவிக்க ஈண்டு வந்தானோ, தெரியேன்; யார்தர வந்தானாயினும் தலையிற் கண்ணி திகழ வந்துள்ளான்; வந்தவன் எப்படியும் தன் காதலியின் முயக்கத்தைப் பெறுகுவானல்லன். அவள் இல்லின்கண் மிகவும் செறிப்புண்டு அவனைத் தனித்துக் காணும் வாய்ப்பின்றி யுள்ளாள்; இனி, அவன் தன் மலைபோலும் சலியாத திண்மை யால் அறிவைத் துணை கொண்டு செய்யத் தக்கது வரைந்து கோடலன்றிப் பிறிதுயாதும் இல்லை என்பதை உணர்ந்து அதற் குரியன செய்வானாக”என்றாள்.

இக்கூற்றின்கண் தலைமகன் தலைமகளைத் தலைப்பெய்து முயக்கம் பெறாதவாறு இற்செறிப் புண்டாயதும், உள்ளுறையால் அது தோன்றுதற்குரிய காரணமும் தலைமகன் களவே விரும்பி யொழுகுவதும்; இனி அதனை விடுத்து வரைந்து கோடலே செயற்பால தென்பதும்; குறிப்பு; வெளிப்படை என்ற இரு வழியானும் அவுவிறுத்தும் அழகு கண்டு வியந்த பெருங் குன்றூர் கீழார் இப்பாட்டின்கண் அக்கருத்துக்களைத் தொகுத்துப் பாடுகின்றார்.

தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்
1ஆர்தர வந்தன னாயினும் படப்பை
இன்முசுப்2 பெருங்கலை நாண்மேய3 லாரும்
பன்பலர்க் கான்யாற் றும்பர்க் 4கடும்பாட்டுக்
கருங்கலை வருடையொடு தாவுவன உகளும்
பெருவரை 5நீணறைப் பவர்வண் குளவியொடு
6கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவ னல்லன்
7வியங்கொ ளீஇயர்தன் மலையினும் பெரிதே.

இது சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீ இயது.

உரை
தினையுண் கேழல் இரிய - தான் வித்திய தினையை உண்ண வரும் காட்டுப்பன்றிகள் அஞ்சி நீங்கும் பொருட்டு; புனவன் பெருங்கல் அடாஅர் மாட்டிய சிறுபொறி - குறவன் பெரிய கற்பலகை கொண்டு அமைத்த சிறுபொறியின்கண்; ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன் - ஒள்ளிய நிறத்தையுடைய வலிய புலி போந்து அகப்படும் நாடனாகிய தலைமகன்; ஆர்தர வந்தன னாயினும்; யாவரால் தருவிக்கப்பட்டு இவண் வந்தானாயினும்; படப்பை இன்முசுப் பெருங்கலை நாண்மேய லாரும் - படப்பைக்குட் போந்து இனிய முசுவாகிய பெரிய கருங்குரங்குகள் நாட்காலத்து உணவு கொள்ளும்; பன்மலர்க் கான்யாற்று உம்பர் - பலவாகிய மலர்கள் பொருந்திய காட்டாற்றின் மேலிடத்ததாகிய; கடும்பாட்டுக் கருங்கலை வருடையொடு தாவுவன உகளும் - செல்லுதற்கரிய இடத்தின் கண் பெரிய கலைமான்கள் சுற்றத்தோடு கூடிய வருடை மான்களோடே தாவிக் குதித்தோடும்; பெருவரை நீள்நறைப் பவர் - பெரிய மலையிடத்து மூங்கிற்காட்டில் வளரும் நீண்ட நறைக்கொடியால்; வண்குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் - வளவிய காட்டுமல்லியுடன் கூதாளி மலர் செறியத் தொடுத்த கண்ணியைச் சூடிக்கொண்டு வரும் அவன்; யாவதும் முயங்கல் பெறுகுவனல்லன் - தன் காதலியின் முயக்கத்தைப் பெறுகுவானல்லன்; வியம் கொளீஇயர் - தன் அறிவைப் பணி கொள்வானாக; தன் மலையினும் பெரிது - அஃது அவன் மலையினும் திண்மையாற் பெரிது காண் எ-று.

நாடன் வந்தனனாயினும், கண்ணியனாகிய அவன் முயங் கல் பெறுகுவனல்ல னாகலின், இனி அவன் தன் மலையினும் பெரிதாகிய மனத்திண்மையால் புலவியம் கொளீஇயர் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. குறிஞ்சி நிலத்தினைப் புனவர் செம்மை செய்து விளைத்த தினையைக் கேழற் பன்றிகள் போந்து மேய்தல் இயல்பாதலின் தினையுண் கேழல் என்றார்; “மென்றினை மேய்ந்த தறுகட்பன்றி, வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்1” என்று பிறரும் கூறுவர். கல்லடார், கல்லாலாகிய பலகை; கற்பலகையைப் பெட்டி போல நிறுத்தி உள்ளே பொறி அமைத்துக் கேழல், புலி முதலிய கொடுமை செய்யும் விலங்குகளை அகப்படுத்துவது குறவர் செயல் வகை. “புனவன் சிறுபொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்” என இவர் கூறியது போலவே, சூடபுல வியனாரும், “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய, பெருங்கல்லடார்1” என்று கூறுவர், தருதல், ஈண்டு வருவித்தல். முசுக்கலை கருங்குரங்கு; முசுவினம் முகம் கறுத்திருப்பதுபற்றி, மைப்பட்டன்ன மாமுக முசுவினம்“2 என்றும்”கருமுக முசுவின் கானத்தானே3" என்றும் சான்றோர் வழங்குவர். இம்முசு வினைக் கலை என்றே வழங்குதலுமுண்டு; “கலையுணக்கிழிந்த முழவுமருள் பெரும் பழம்4” என்பது காண்க. இவ்வழக்காறு பற்றியே “இன்முசுப் பெருங்கலை” எனப் பிரித்துச் சிறப் பித்தார். நாண்மேயல், விடிந்த அணிமையாகிய இளங் காலைப்போது; அப்போது போந்து தனக்குரிய உணவை நாடு மாகையால் நாண் மேயலாரும் என்றார். கடும்பாடு என்ற விடத்துக் கடுமை, அருமையும், பாடு இடத்தையும் குறித்து நின்றன. கான்யாற்று உம்பர்த்தாய இடம் மக்களும் விலங்கு களும் எளிதில் வழங்கலாகாமை பற்றிக் கடும்பாடு எனப் பட்டது. இனிக் “கடும்பாட் டீரத்துத் தடந்தாள் வாழை5” என்ற விடத்துக் கடும்பாடு,மிகவுண்டாதல் என்னும் பொருட்டு, நறைப்பவர், நறைக்கொடி “தண்கமழ் நறைக் கொடி6” என வரும். இதன் நாரைக் கொண்டு கண்ணியும் மாலையும் தொடுப்பது பண்டையோர் மரபு. “நறைநார் வேங்கைக் கண்ணியன்7” எனச் சான்றோர் உரைப்பது காண்க. கூதளம் ததைந்த கண்ணியன் என்றது இங்கே சுட்டு மாத்திரையாய் நின்றது. கூதளம், கூதாளி. இது கூதாள மெனவும் வழங்கும்; “வெண் கூதாளத் தலங்குகுலை யலரி8” எனவும், “குளவியோடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்9” எனவும் வருதல் காண்க. முயங்குதல், இறுகப் புல்லுதல்; “முயங்குதொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்குவ மன்னோ10” எனவரும் இப்பொருண்மை துணியாது பிற்காலத் தறிஞர் சிலர். மகப்பேற்றுக் குரிய மெய்யுறு புணர்ச்சி யெனக் கொண்டு மயங்கித் தலைமக்களின் தலைமைப் பண்புக்கு இழுக்குரைத்துத் தமிழ் வழக்கை மாசுபடுத்தினர். வியம், ஏவல், புலம், அறிவு.

தலைவியது காதல்மிகுதியைத் தெருண்டு விரைய வரைந்து கோடலை நினையாது களவே விரும்பி யொழுகும் தலைமகன், சிறைப் புறமாக வந்து நிற்பது உணர்ந்த தோழி, மனைப்புறம் போந்து தலைமகனைத் தலைப்பெய்யா வண்ணம் தலைவி இற்செறிப்புண்டு கிடப்பதும், வேற்றோர் வரைதல் வேண்டி வந்துள்ளமையும் உள்ளுறையால் தலை மகற்கு உரைக்கின்றா ளாகலின், தினையுண் கேழல் இரியப் புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் ஒண்கேழ் வயப்புலி படூஉம் என்றாள். கேழல் இரியுமாறு புனவன் பெருங்கல் அடாஅர் மாட்டிய சிறுபொறி என்றது, தலைமகனைத் தலைப் பெய்யாவாறு தலைவி இல்லின்கண் செறிப்புண்டது. அறிவித்தவாறு, அச்சிறு பொறியின்கண் வயப்புலி படூஉம் என்றது, அவ்விற்செறிப்பின்கண் வேற்றோர் வரைவு வேண்டி வந்தமை உள்ளுறுத்து நின்றது. குறிவழி வருதற் பாலனாயினும், அக்குறியிடம் தலைமகளாற் சுட்டப் படுதல் வேண்டும்; “களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும்” என்பது விதி. செறிப்புண்டமையின் தலைவி அறியாமே தலைமகன் வந்தமை தோன்ற, ஆர்தா வந்தனன் என்றாள். வந்தானாயினும் இற்செறிப்பு மிகுதியால் தலைமகளைக் கண்டு அவளது முயக்கம் பெறுவா னல்லன் என்று விளம்பு கின்றா ளாகலான், அதற்குரிய ஏதுவினை, முசுக்கலை முதலிய வற்றின்மேல் வைத்து உள்ளுறுத் துரைக்கின்றாள். படப்பைக் கண் முசுக்கலை நாண்மேய லார, கருங்கலை வருடையொடு தாவுவன உகளும் என்றதனால், தலைவியை வரைந்து கொண்டு தலைமகன் இன்புறக் கண்டு தாயரும், தமரும், ஆயமும், பிறரும் மகிழ்ச்சி மலியக் கடவ ரென்பது உணர்த்தி, அது நினையாது ஒழுகுதலால் முயங்கல் பெறுகு னல்ல னாயினன் எனத் தோழி கூறுவாளாயிற்று, ஆயினும் தான் மேற்கொண்ட களவொழுக்கின்கண் தோன்றிய பல்வகை முட்டுக்களையும் பொருளாகக் கொள்ளாத மனத்திண்மை தலைமகன்பால் உண்மையினை அறிந்துளா ளாகலின், அதனை விதந்து மேல் அவன் செய்தற் குரியது இது வென்பாள், புலவியங் கொளீஇயர் என்றும், தன் மலை யினும் பெரிதே என்றும் கூறினாள். உள்ளுறையால் உணர்த்தப்பெற்ற வேற்றுவரைவு நினைந்து தான் வரைதலைத் தாழ்த்த லாகாதென்ற கருத்தினால், களவின்பமே கன்றி நிற்கும் உள்ளத்தை மாற்றல் வேண்டும் என்பாள், புலம் வியங் கொளீஇயர் என்றும், அவனது உரனுடமையைப் பாராட்டி மலையினும் பெரிது என்றும் கூறினாள். தலைவன் கேட்டு விரைந்து வரைவானாவது பயன்.

“பொழுதும் ஆறும் காப்பும்1” எனத் தொடங்கும் நூற் பாவுரையில், இதனைக் காட்டி, “இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

மாங்குடிகிழார்


மாங்குடிகிழார் என்பார் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் காலத்தில், அவனது அவைக்களத்துச் சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர். மாங்குடி மருதன் என்று இவர் அப்பாண்டியானால் சிறப்பித்துக் கூறப்படுகின்றார் மதுரைக் காஞ்சியான நெடிய காஞ்சிப்பாட்டை அப்பாண்டியன் மேற் பாடிக் கிழார் என்று அவனால் சிறப்பிக்கப் பெற்றமையால், மாங்குடி மருதனார் மாங்குடிகிழார் ஆயினர் என அறிஞர் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்து மாங்குடி என்னும் ஊரும் அதனை அடுத்துள்ள மருதனூரும் நமது மாங்குடி கிழாரை நினைப்பித்தலின் மாங்குடிகிழார் அப்பகுதியினராதல் வேண்டும் என்பது இனிது விளங்குகிறது. அப்பகுதி சோழ நாட்டின் வடகீழ்ப் பகுதியை அடுத்து இருப்பது, அப்பகுதியில் உள்ள வாட்டாத்திக்கோட்டை யென வழங்கும் ஊர். பண்டை நாளைய வாட்டாறாகலாம் என்பர். அங்கே வாழ்ந்த எழினி ஆதன் என்னும் வேளிர் தலைவனை நம் மாங்குடிகிழார் பாடி, ‘மாரி வானத்து மீனாப்பண், விரிகதிர வெண்டிங்களின், விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை’ என்று வாழ்த்தியுள்ளார். “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின், புலவர்” என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவானாயின், இவரது புலமை நலத்தை நாம் கூறுவது மிகை. இந்நூலிலும் ஏனைத் தொகை நூல்களிலும் மாங்குடி மருதனுடைய பாட்டுக்கள் தொகுக்கப் பட்டுள்ளன.

மனைவாழ்க்கையில் மாண்பு மிக்கு விளங்கும் தலைமகன் வரலாற்றில் ஒருகால் அவற்குப் புறத்தொழுக்கம் தோன்றிற்று. அதனை அறிந்த தலைமகட்கு உள்ளத்தே பொறாமை காரண மாகப் புலவியும், ஊடலும் பொங்கி எழுந்தன, மாசு மறுவற்ற தன் காதலன் உள்ளத்தில் பரத்தை யொருத்தி இடம்பெற்றா ளெனின், அதனால் தன் குடிப்புகழ் மாசுபடுவது காண ஆற்றாளாய்த் தலைமகள் கண் சிவந்து வாயிதழ் துடித்து மேனி வியர்த்து மிக்க சினங்கொண்டு உறைவாளாயினள். அவளுடைய பொறாமையும் ஆற்றாமையும் கேள்வியுற்ற தலைமகன் தெருண்டு தன் மனைக்கு மீண்டு வரலானான்; நேரிற் செல்லின் அவள் பெரிதும் வருந்து வள் என அஞ்சிப் பாணன் முதலிய வாயில்களை விடுத்தான்; அவர்தம் முயற்சி அனைத்தும் பயன்படா தொழிந்தன; அவர் கட்குச் சிறிதும் அவள் வாயில் நேரவில்லை. தலைவன் வாயில் பெறும் வழியின்றி வருந்திநிற்கும் அந்நிலையில் விருந்தினர் ஒருவர் அவன் மனைக்கு வந்தணைந்தார்; அவர் வரவறிந்த தலைமகன் அவரோடு தன் மனைக்குட் சென்றான். இன்முகமும் இன் சொல்லும் கொண்டு வந்த விருந்தை வரவேற்றுப் புறந் தருதல் மனையறமாகலின், அது சிறிதும் குன்றாதவகையில் தலைமகள் வரவேற்றது அவற்குப் பேரின்பத்தை விளைவித்தது. விருந்தொடு புக்க காதலன்பால் இன்சொல் வழங்கி, இனிய உணவு சமைப்பாளாய்த் தலைமகள் அட்டிற்சாலையில் அடிசில்
வினையை மேற்கொண்டாள். அடிசிற்புகை அழகிய கண்களிற் படிய, பிறைநுதலில் வியர்வை பொடிப்ப, அதனைத் தன் முன்றானையால் துடைத்துக் கொண்டு அவள் செய்வன செய்து நின்ற திருவுடைத்தோற்றம் தலைமகன் உள்ளத்தில் நன்கு படிந்து நின்றது. அவளுடைய கட்பார்வை அவன்பாற் செல்லும் போது, அவள் உள்ளத்தே கிடந்த புலவிக்குறிப்பை இனிது காட்டிற்று. முகம் திரிந்து நோக்கின் விருந்து அகம் குழைந்து நீங்கும் என்ற அச்ச மிகுதியால் முள்ளெயிறு தோன்ற விளங்கும் முறுவல் கொண்ட முகத்துடன் விருந்தோடு ஓரொப்ப அவள் அவனையும் பேணினது தலைமகற்கு எல்லையற்ற இன்பம் தந்தது. அதுவே வாயிலாகத் தலைமகள் உள்ளத்துப் பொங்கி நின்ற புலவியும் வெம்மையும் அவிந்து போயின; அன்பும் அறனும் அயரா இன்பமும் மனையகம் முழுதும் மல்கின. அது கண்ட தலைமகன் விருந்தின் சிறப்பை வியந்து “எமக்கே வருகதில் அம்ம விருந்தே சிவப்பான்று சிறுமுள்ளெயிறு, தோன்ற, முறுவல் கொண்ட முகங்காண்கம்மே” என மொழிந்து இன்புற்றான்.

இந்நிகழ்ச்சிக்கண் அமைந்த மனைவாழ்க்கை நலத்தை இனிது கண்ட மாங்குடிகிழாரது புலமையுள்ளம் அப்படியே இப்பாட்டின்கண் அதனைச் சொல்லோவியம் செய்கின்றது.

தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற்
கொடுங்குழை பெய்த 1செழுஞ்செவிப் பேதை
2சில்காழ் செறித்த மெல்விரல் சேப்ப
3வாளை யீர்ந்தடி வல்லிதின் 4வகைஇப்
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகிற் றலையின் துடையினள் நப்புலந்
தட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே, 5வருகதில் லம்ம விருந்தே 6சிவப்பான்று
சிறுமுள்7 ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட 8முகங்காண் கம்மே.

இது விருந்து வாயிலாகப் புக்க தலைமகன் சொல்லியது.

உரை
தடமருப்பெருமை மடநடைக் குழவி - பெரிய கொம்பு களையுடைய எருமையின் இளநடையை யுடைய கன்றுகள்; தூண்டொறும் யாத்த காண்டகு நல்லில் -தூண்தோறும் கட்டப்பட்டுள்ள காட்சிக் கினிய நல்ல மனையின்கண்; கொடுங்குழை பெய்த செழுஞ்செவிப் பேதை - வளைந்த குழையணிந்த செழுவிய காதுகளையுடைய பேதையாவாள்; சில்காழ் செறித்த மெல்விரல் சேப்ப - சிலவாய கற்கள் பதித்த மோதிர மணிந்த மெல்லிய விரல் சிவக்குமாறு; வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ - வாளையினது குளிர்ந்த தசையை வல்லபடி வகைப்படுத்து; புகை யுண்டு அமர்த்த கண்கள் -அட்டிற் புகை படிந்து அமர்த்த கண்களையுடையளாய்; தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறு நுண் பல்வியர் -பிறைபோலும் நெற்றியில் அழகுறத் தோன்றிய சிறிய நுண் ணிய பலவாகிய வியர்வைத் துளியை; அந்துகில் தலையில் துடையினள் -அழகிய தன் புடைவையின் முன்றானையால் துடைத்து. நப்புலந்து-நம்பால் புலவி கொண்ட உள்ளத் தளாய்: அட்டிலோள் -அட்டிலிடத்தே யுள்ளாள்; அம்மா அரிவை -அழகிய மாமைநிற முடைய அரிவையாகிய அவள்; எமக்கே வருகதில் அம்ம விருந்து -எம்பால் நாளும் வருவாராக விருந்தினர்; சிவப்பான்று -வெகுளியால் கண் சிவத்தலின்றி; சிறுமுள்எயிறு தோன்ற -சிறிய முட்போற்கூரிய பற்கள் தோன்ற; முறுவல் கொண்ட முகம் காண்கம் -முறுவலித்து விளங்கும் முகத்தைக் காணலாம் எ. று.
நல்லில், பேதை, சேப்ப, வகைஇ, கண்ணளாய், துடை யினளாய், நப்புலந்து, அட்டிலாள்; எமக்கு விருந்து, வருகதில் அரிவை, சிவப்பான் முறுவல் கொண்ட, முகம் காண்கம் ஆகலான் எனக் கூட்டி வினை முடிவு செய்க.

எருமையின் மருப்பு மிக்க வன்மையுடைமை பற்றித் தடமருப் பெருமை யென்றார். தட என்னும் உரிச்சொல் பெருமைப் பொருட்டு. “தடவும் கயவும் நளியும் பெருமை1” என்ப. இருப்புக் குன்றென இயங்கும் புகைவண்டியையும் தடம் பிறழ்ந்து விழச் செய்யும் வன்மை எருமைக்கோட்டுக் குண்டு, எருமையை மேயவிட்டுக் கன்றுகளை மனையிடத்தே கட்டிவைப்பது என்று முள்ள மரபாதலின், தூண்டொறும் யாத்த காண்டகு நல்லில் என்றார். “மன்ற எருமை மலர் தலைக் காரான் கன்றுவிட்டு, ஊர்க்குறு மாக்கள் மேற் கொண்டு கழியும் பெரும்புலர் விடியல்2” என்று பிறரும் கூறுவது காண்க. தூய்மையும் அழகிய வேலைப்பாடும் அமைந்த செல்வமனை என்றற்குக் காண்டகு நல்லில் என்றார். கனவிய குழை யணிந்த வழியும் வலி இழவாது அழகு மிக்கிருக்கும் காது என்றற்குச் செழுஞ்செவி என்றார். பேதை, பருவப் பெயரன்று, காழ் போறலின் அழகிய மணிகளைக் காழ் என்றார். இறுகப்பற்றி அரிவதாலும், வாளைமீனின் குருதி யாலும் விரல் சிவத்தலின், மெல்விரல் சேப்ப என்றார். தடி, ஊன். பல்வேறு வகையாக சமைத்தலால் வல்லிதின் வகைஇ என்றார். தகைபெறப் பொறித்த என இயைக்க. தகை- அழகு. துகில்தலை - முன்றானை; விருந்தினரை விரைய உண் பித்தற்பொருட்டு அட்டிலிடத்தே நிற்றலின், அட்டிலோள் என்றார். செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று. அம்மா அரிவை என்றது முன்னர் நின்ற பேதையைச் சுட்டி யொழிந்தது. நப்புலந்து, “நப்புணர்வு1” என்றாற்போல. வருகதில் என்புழித் தில்லைச்சொல் விழைவின்கண் வந்தது, ‘அம்ம’, உரையசை. சிவப்பு - வெகுளி. “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள2” என்பர் இளமைச்செவ்வி கழியாமை தோன்றச் சிறு முள் ளெயிறு என்றார். ‘காண்கம்’, தனித்தன்மைப் பன்மை வினைமுற்று.

பரத்தையிற் பிரிந்திருந்து விருந்தொடு புகுந்த தலைமகன், தூண்தோறும் எருமைக்கன்றுகளை நிரல்படக் கட்டி வைத் திருக்கும் காட்சி கண்டு மகிழ்கின்றமையின், தடமருப் பெருமை மடநடைக் குழவி, தூண்டொறும் யாத்த காண்டகு நல்லில் என்றான். புறத்தொழுக்கம் ஆடவர்க் கியல்பு என்றும் அதனால் அஃது ஓராற்றால் அமைந்தது என்றும் நிலவிய அக்காலக் கொள்கையை நினையாது புலப் பதுபற்றி, தலைவியைப் பேதை என்று குறித்தான். காதிற் குழையும், கைவிரலில் மோதிரமும், அவன் கண்ணில் தோன்றி இன்பம் செய்ய, பேதைமையால், சிவந்து, தன்னை நோக்கா மலும், புறந்தருதற் கண் சென்ற முயற்சியில் கைவிரல் சிவந்து விளங்குதலை எண்ணாமலும், தலைமகள் அட்டிற்றொழிலில் ஆர்வமுற் றிருப்பதை வியந்து செழுஞ்செவிப் பேதை சில்காழ் செறிந்த மெல்விரல் சேப்ப என்று பாராட்டி னான். குழை யணிந்த செவியைச் செழுஞ்செவி எனச் சிறப்பித்தது, தன் பாராட்டுரையை அவள் செவியிலேற்றுச் சிவப்பாறுதல் வேண்டுமென்பது கருதி என அறிக. சமைக்கும் கறி நிறமும் சுவையும் கெடாத செவ்வி நோக்குதலின், ஆங்கு எழும் புகையைப் பொருள் செய்யாமை பற்றி, புகையுண்டு அமர்ந்த கண்ணள் என்றான். மெல்விரல் சேப்ப, கண்ணிற் புகை படிய, நுதல் வியர்ப்ப, அட்டிலில் நின்று ஆற்றும் அடிசில்வினைக்கண் ஈடுபட்டிருக்கும் அவனது நிலைமை கண்டு ஆற்றானாய் நெருங்கியவழி, அவள் உள்ளத்தில் நிலவிய புலவி வெளிப்பட்டுக் கண் சிவந்து புலப்பட்டமையின் நப்புலந்து என்றான், வெளிவரின் விருந்து காண, அன்புடைய மொழி வழங்கித் தன்பாற் படுப்பிப்பன் என நினைந்து அட்டி லிடத்தே அடங்கி யிருந்தமை தோன்ற, அட்டிலோளே அம்மா அரிவை என்றான், விருந்தோடிருந்து உண்டி கொள்ளச் சமைந்த போது புலவிக்குறிப்புச் சிறிது மின்றி இன்முகமும் இன்மொழியும் வழங்கித் தாயினும் பரிந்து உண்பித்தமையின், அதனைப் பெரிதும் வியந்து, எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறுமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே என்றான். இவ்வாறே விருந்து வாயிலாகப் புக்குப் புலவி தீர்த்துக் கூடிய தலைமகன், “விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு, உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த, வடமீன் கற்பின் மனையுறை மகளிர், மாதர் வாண்முகத்து மணித்தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும் மருந்தும் தருங்கொல் இம்மாநில வரைப்பு என” இளங்கோ1 கூறுவது காண்க. இதனால், தலைவி புலவி நீங்குவதும் தலைவன் மகிழ்வதும் பயனாம்.

“கரணத்தி னமைந்து முடிந்த காலை2” என்ற நூற்பாவில் வரும் “நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளின்” கண் நிகழும் தலைவன் கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி, “இத னுள் ஊடற் குறிப்பினளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பின ளாதலின் நன் னெறிப் படர்தல் ஆயிற்று” என்பர் இளம்பூரணர். இனி, நச்சினார்க்கினியர், “இதுவிருந்தொடு புக்கோன் கூற்று; செவிலி கூற்றுமாம்” என்று சொல்லி, “இந்நற்றிணை வாளை ஈர்ந்தடி வகைஇ என்றலின் வேளாண்வருணமாயிற்று3” என்பர்.

ஒருசிறைப் பெரியனார்


இச் சான்றோரது பெயர் ஒருசிறைப் பெயரியனார் என்றும், பெயரினார் என்றும் காணப்படுகிறது. இப்பாட வேறுபாடுகளுள் ஒருசிறை என்பது மாத்திரம் திரிபுபடாது இருப்பது நன்கு நினைவுறத் தக்கது. பெயரினார், பெயரியனார் என்பவற்றை நோக்கின் பெரியனார் என்பதே கொள்ளத் தக்கது; பெரியன் என்னும் பெயருடைய மக்கள் பண்டும் இருந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்துப் பொறையாறு என்னுமிடத்தே இருந்த பெரியன் என்னும் தலைவன் பொறையாற்றுக் கிழானாக இருந்ததனைப் புறநானூற்றில் அறிகின்றோம். இக்காலத்திலும் பலர் இப்பெயருடன் உள்ளனர். தென்பாண்டி நாட்டு இராச ராசபுரத்துக்குப் பிடாகையாக ஒருசிறை யென்றோர் ஊர் இருந்த தெனக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். இராசராசபுரம் திருநெல்வேலி மாவட்டத்து வள்ளியூர்ப் பகுதியில் இருப்ப தனாலும், வள்ளியூரிலிருந்து நாடுகாவல் புரிந்த நாஞ்சில் வள்ளுவனை இவர் பாடியிருப்பதாலும், அந்த ஒருசிறையே இவரது ஊர் எனத் துணிதற்கு இடந்தருகிறது. ஒருசிறை யென்பது ஒருபக்கம் என்னும் பொருளது; “அழிவு கொண்டு ஒருசிறை யிருந்தேன்” என வருதல் காண்க.

இப் பெரியனார் தமிழ் வேந்தர் மூவரினும் நாஞ்சில் வள்ளுவன் பால் பெருமதிப்பும் அன்பும் உடையவர், அவனை ஒருகால் பாட நேர்ந்தபோது, “இரங்கு முரசின் இளஞ்சால் யானை, முந்நீரேணி விறல்கெழு மூவரை இன்னும் ஓர்யான் அவாவறியேனே, நீயே முன்யான் அறியுமோனே” என்று சொல்லி, இறுதியில் “செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந, நீ வாழியர் நின் தந்தைதாய் வாழியர் நிற்பயந்திசினோரே” என்று வாழ்த்தினார்.

ஓர் அழகிய பூஞ்சோலையிற் தலைமகன் புகுதலும், அங்கே பெண்மைக் குரிய பண்பும், அழகும், ஒருங்கு திரண்டு உருக் கொண்டு நின்றாற் போல வந்து தனித்துத் தோன்றிய தலைவியைக் கண்டு கருத்திழந்து, காதல் வேட்கை கைம்மிக்குத் திரும்பினான். பின்பு அவன் தன் பாங்கனைக் கண்டு உற்றது கூறி, அந்நங்கையின் தோளைத் தான் தீண்டுதல் கூடுமோ! எனச் சொல்லிச் செயல்வகை நாடலானான். அப்போது அவளைத் தான் கண்டதையும், தன்னை அவள் கண்டதையும் உரைப் பானாய், வெளிப்பட விளம்புதற்கு நாணித் தன்னை ஒரு கலை மானாக உள்ளுறுத்து, “நனந்தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மடமான் நேர்படத் தன்னையர் சிலைமான் கடுவிசைக் கலைநிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண்டன்ன உண்கண்” என்று உரைக்கின்றான்; என இப்பெரியனார் பாடுகின்றார். இத்தகைய புலமை நலம் படைத்த இவர் பாடியன ஏனைத்தொகை நூல்களிலும் கோக்கப்பட் டுள்ளன.

தலைமகன் தன்நாட்டு அரசின் பொருட்டுத் தன் மனைவியிற் பிரிந்து செல்ல வேண்டியவனாகி, அவள்பால் விடைபெற்றுச் சென்றான். குறித்த காலத்தில் அவனது கடமையும் முடிவுற்றது. உடன் சென்ற வேந்தனும் மேற்கொண்ட வினை முடிந்தமை அறிவித்து யாவர்க்கும் விடையளித்து விடுத்தான். கடமை முடியுங்காறும் தன் காதலியைக் கனவிலும் நினையாதிருந்த தலைமகனது உள்ளத்தில் அது முடிந்தவுடன் அவளது காதலன் புருவாய காட்சி அவன் மனக் கண்ணில் இன்பமிகத் தோன்றவும், விரைந்து சென்று மனையின்கண் உறையும் அவளைக் காண்ப தற்கு அவா மிகுந்தெழுந்தது. அவன் தன் நெஞ்சை நோக்கி, “வினை முடிந்தமையின் வேந்தன் யாவர்க்கும் விடைதரு கின்றான் என்று கூறுகின்றனை; நெஞ்சே, நீயும் தலைவியின் அழகிய தோளைக் கூடும் இன்பம் நயந்து மனைவயின் செல்லு தற்குப் பெரிதும் விதும்புகின்றாய்; ஆதலால் காதலி உறையும் ஊர் ஆங்கே உள்ள முல்லை நிலத்திடையே உளது என்று பரியல்; பரிமாவை வண்பரி தயங்கச் செலுத்தி, அவள் நம்மை வர வேற்றுச் செய்யும் விருந்தினைப் பெற்று இன்புறலாம்” என்று மொழிந்தான்.

தலைமகனுடைய இக்கூற்றின்கண், வினைவழிச்சென்று, அதனை வெற்றியுற முடிப்பதில் ஈடுபடும் ஆண்டகை உள்ளம் அவ்வினைக்கண் ஒன்றி நின்று உயிர்த் துணையாய் இன்பம் நல்கும் காதலியை மறந்திருப்பதும்; வினை முடிந்தவழி மனைக்கு விளக்கஞ் செய்யும் மனைவியின் மாண்புறு காதலின்பத்தைப் பெறக் கருதுவதும்; விளங்கித் தோன்றி ஆண்மையின் தலைமை நலத்தை அழகுறக் காட்டக் கண்ட ஆசிரியர் ஒருசிறைப் பெரியனார், இப்பாட்டினகண் அக்காட்சியைத் தொடுத்துப் பாடுகின்றார். இப்பாட்டு ஏடுகளில் சிதைந்து காணப்படுகிறது.

விதையர் கொன்ற முதையற் பூழி இடுமுறை நிரப்பிய
ஈரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலை யங்காட் டிரலையொடு வதியும்
புறவிற் றம்மயாம்1 நயந்தோள் ஊரே
எல்லி விட்டன்று வேந்தெனச் சொல்லுபு2
பரியல் 3வாழி நெஞ்சே காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
வண்பரி தயங்க எழீஇத் தண்பெயற்
கான்யாற் றிடுமணற் 4கரைபிறக் கொழிய
5எல்விருந் தயரும் மனையோள்
மெல்லிறைப் பணைத்தோள் துயிலமர் வோயே

இது வினைமுற்றி மறுத்தரும் 6தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

உரை
விதையர் கொன்ற முதையற் பூழி - விதையை யுடையவ ராகிய முல்லை நிலத்தவர் பன்முறையும் உழுதுவைத்த பழமை யான புழுதியில்; இடுமுறை நிரப்பிய ஈரிலை வரகின் - விதைத்தற் கெனப் பக்குவப்படுத்தி வித்திய விதையிடத்துத் தோன்றிய குளிர்ந்த இலையையுடைய வரகினது; கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை - கவைத்த கதிர்களை மேய்ந்த அழகிய இளமான் பிணை; அரலை அம் காட்டு இரலையொடு வதியும் -அலரிக்கள்ளிகள் நிறைந்த காட்டின்கண் ஆண் மானோடு கூடியுறையும் புறவிற்று-முல்லைப் புறவின்கண் உளது; யாம் நயந்தோள் ஊர் - நாம் காதலிக்கப்பட்டவளாகிய மனைவி யுறையும் ஊர், வேந்து எல்லி விட்டன்று எனச் சொல்லுபு - வேந்தனும் நேற்றே நம் வினைமுடிந்தமையின் யாவரும் செல்க என ஏவினான், என்று சொல்லி; பரியல் - வருந்தாதே கொள்; நெஞ்சே - எனது நெஞ்சமே; வாழி; - காண்வர - அழகிதாக; விரியுளைப் பொலிந்த வீங்கு செலல் கலிமா - விரிந்த தலையாட்டம் அணிந்த விரைந்த செலவை யும், செருக்கினையுமுடைய குதிரை; வண்பரி தயங்க எழீஇ - வளவிய விரைவு விளங்கச் செலுத்தி; தண்பெயல் கான் யாற்று இடு மணல் கரை பிறக்கு ஒழிய - தண்ணியமழை பொழிந்த காட்டாற்றுப் பெருக்கினால் இடப்பட்ட கரையிடம் பின்னே கழிய முற்பட்டுச் சென்று; எல்விருந்து அயரும் மனையோள் - நமது வரவுணர்ந்து நமக்குச் சிறந்த விருந்தினைச் செய்யும் மனையாட்டியின்; மெல்லிறைப் பணைத்தோள் துயில் அமர் வோய் - மெல்லிய சந்து பொருந்தி மூங்கில் போலும் தோளிடத்தே கிடந்து பெறும் துயிலை விரும்பிப் பெறு வாயாக எ-று.

வேந்துவிட்டன்று, ஊர் புறவிற்று என்று சொல்லி, நெஞ்சே நீ பரியல்; வாழி, கலிமா எழீஇக் கரை பிறக் கொழியச் சென்று மனையோள் தோள்துயில் அமர்வாய் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. என வென்பதை முன்னும் கூட்டுக. வித்தி விளைவிக்கும் விருப்பினால் விதையைத் தொகுத்து வைத்திருக்கும் முல்லை நிலத்தவரை விதையர் என்றும், விதைப்புலத்தைக் காடுகொன்று அமைப்பது பற்றிக் கொன்ற என்றும், பன்முறை உழுது பண்படுத்தப்பட்ட புழுதியென்பது தோன்ற, முதையற் பூழி என்றும் கூறினார். நன்கு உணங்கிய புழுதி என்பது கருத்து. “தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்1” என்பது உழவுமுறை, இடுமுறை, விதைத்தற்குரிய முறை முதிர்ந்து உலர்ந்தவழி, வரகின் இலை நிறம் வேறுபட்டுப் போதலின் இளமை யிலையை, ஈரிலை என்றார். அரலையங்காடு, அரலி என்னும் கள்ளிகள் நின்ற காடு; அரலை, மரல் வித்துமாம்; விட்டன்று, இறந்த கால முற்று வினைத் திரிசொல்; விடை யளித்தான் என்னும் பொருட்டு பரிதல் வருந்துதல். பரியல் என்றது வருந்தற்க என்பது பொருளாக வந்த அல்லீற்று வியங்கோள், பரி, செலவு, காட்டாற்று நீர்ப்பெருக்குக் கொணர்ந்திட்ட மணலை கான்யாற்று இடுமணல் என்றார். ஊரவர் அனைவரும் ஒருங்கறியச் செய்யும் விருந்து என்பது பட எல்விருந்து என்றார், எல், விளக்கம், சென்றென்பது அவாய் நிலையால் வந்தது,

வினைக்கண் ஒன்றியிருந்த தலைமகன் உள்ளம் வினை முடிந்த அந்நிலையே தலைமகளின் தோளிடத்தே பெறும் இனிய துயிலைப் பெறவிழைந்து, அவள் உறையும் ஊர் புறவிடத்தே உண்மையை யுணர்ந்து வருந்துதலின், புறவிற்று அம்ம யாம் நயந்தோன் ஊரே என்றும், வேந்தன் பொருட்டு வந்தமையின், வினைமுடிந்தபின் அவன் பால் விடை பெற்றல்லது சேறல் சீரிது அன்மைபற்றி எல்லி விட் டன்று வேந்து என்றும், நெஞ்சு கூறியதனைக் கொண் டெடுத்து மொழிந்தான். அதனாற் பயன், பாகனைத் தேரை விரைந்து கடாவுக எனப் பணிப்பானாவது, மடப்பிணை வரைகின் ஈரிலை கறித்து இரலையொடு வதியும் என்றது, தலைவி தன்னொடு கூடி இன்புறற்பாலள் என்ற உள்ளுறை தோற்றுவித்து நின்றது. பின்னர், நெஞ்சினைத் தலைமகள் செய்யும் விருந்தேற்றுத் தோட்டுயில் பெறுகெனச் சொல்லி தெளிவிக்கின்றானாகலின், பரியல் என்று ஒழியாது, வாழி நெஞ்சே என்றான். வினையிடத்து உழன்றவழியும் குன்றாத செலவுடைமையை விதந்து வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க என்றும், தான் குறித்த பருவம் வந்தமை தோன்றத் தண் பெயற் கான்யாறு என்றும், கான் யாற்று இடுமணற் கரை யால் இடையீடு பட்டுத் தாழாது சென்றவழித் தலைமகள் வரவேற்றுச் சிறப்பிக்கும் நலத்தை எல் விருந் தயரும் மனையோள் என்றும் கூறினான். “வினை கலந்து வென்றீக வேந்து மனை கலந்து மாலை அயர்கம் விருந்து1” எனத் தலைமகள் விருந்தை விதந்து உரைப்பது காண்க. காதலியின் தோளினிடத்துப் பெறும் துயிலின் இனிமை பெரிதென்பது பற்றி மெல்லிறைப் பணைத் தோள் துயிலமர்வோயே என்றான். “தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு2” எனச் சான்றோர் உரைப்பது காண்க. இதனால் வினை மேற்கொண்டு பொருள் கருதிய ஆண்மையுள்ளம். அது முற்றியவழி இடையற வின்றி மனை யறத்தான் வரும் இன்பத்தை நாடும் இயல்பு தெரிவித்தவாறு.

செங்கண்ணனார்


செங்கண்ணன் என்பது இச்சான்றோரது இயற்பெயர், செங்கண்ணன், செங்கண்ணான் என்ற பெயர்கள் பண்டைநாளில் தமிழ் மக்களிடையே பயில வழங்கின, சோழன் செங்கண்ணான் பெயர் யாவரும் நன்கு அறிந்த தொன்று. களவழி நாற்பது என்ற நூல் செங்கண்சோழன் பெற்ற சிறந்த போர் வெற்றியையே பொய்கை யாரால் பாடப்பெற்றது. இச்செங்கண்ணன் என்ற பெயர் சோழபாண்டிய நாடுகளினும் மிகுதியாகச் சேர நாட்டிலும் சிறக்கப் பயின்றுளது; செங்கண்ணன், செங்கணான் என்பனவாய பெயர்கள் சேரநாட்டில் பெரு வரவினவாய் இருந்தமைக்கு ஆங்குக் காணப்படும் கல்வெட்டுக்களும் ஊர்ப் பெயர்களும் சான்று பகருகின்றன. திருவிதாங்கூர்ப் பேரரசில் செங்கணான் சேரி என்ற பேரூரைத் தலைமையாகக் கொண்ட மாவட்டமும்; செங்கண்ணூர் என்ற சிறந்த ஊரும் இப்போதும் விளக்கம் பெற்றுள்ளன. இவ்வாற்றால் நமது ஆசிரியர் செங் கண்ணனார் மேலைக் கடற்கரையில் சேரநாட்டின் தென் பகுதியில் வாழ்ந்த சான்றோர் ஆகலாம். சோழ வேந்தன் ஒருவன் இப்பெயர் தாங்கி இருந்தமை நன்கு தெரிந்த செய்தியாயினும் அப்பெயர் பூண்ட ஊர்கள் மிகுதியாகக் காணப்படாமையே மேலே கண்ட முடிவுக்குத் துணைசெய்கிறது. வேறே இவரைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. இவர் பாடியன ஏனைத் தொகை நூலிலும் உள்ளன.

தலைவி, தினைப்புனங் காவல் மேற்கொண்டு புனத்திடை இருந்து வருகையில் தினைக்கதிர்கள் முற்றின. தலைமகன் களவினையே விரும்பிப் புனத்துக்கு வருவதும், தலைவி குறித்த இடத்தே அவளைக் கண்டு இன்புறுவதும், ஆகிய இவ்வகைச் செயலையே செய்து போந்தான். அதனால் தலைவி உள்ளத்தில் முளைத் தெழுந்த காதல், முறுகிப் பெருகித் தலைவனை இன்றி யமையாத நிலையினை எய்திற்று. இந்நிலையில் அவள் காத்து வந்த தினைக் கதிர்கள் அறுக்கப்பட்டன. அவளும் தன் மனையகம் சென்று சேர வேண்டியவளானாள். கார் வரவால் இரவுப் போது, ’இருள் மிகுவதாயிற்று; இடி மின்னல் கலந்த மழையின் வரவால் இரவுப் போதில் தலைமகன் வரக் காண்பதில் இடையீடுகள் உண்டாயின, பின்னரும் தலைமகன் அவளை வரைந்து கொள்ள நினையாது ஒழுகியது, தோழியின் மனத்தில் கலக்கத்தை விளை வித்தது; தலைவன் இவளை வரையாதே போய் விடுவனோ என்ற அளவுக்கு அவளது ஐயம் சென்றது. தனது தடுமாற்றத்தைத் தலைவன் முன் எடுத்து இசைப்பதற்கு அவளது நிலைமை இடந்தரவில்லை. அதனால் தன் மனநிலையை அன்னைமேல் ஏற்றி என் அன்னை இவ்வாறு ஐயுற்று அலமருகின்றாள். அதனால் இற்செறிப்பு மிகுந்து கூட்டம் இடையீடுபடுகின்றது. இதற்கு ஏதேனும் செயல்வகை தேர்ந்து தெளிய வேண்டும் என்று தோழி நினைத்தாள். ஒருநாள் தலைவன் போந்த போது, அவனுக்கு நேரே உரையாளாய்த் தலைமகளோடு சொல்லாடு முகத்தால், அவன் செவிப்படத் தன் மனக் கருத்துக்களை நிரல்படக் கோத்து மொழிந்தாள்.

தோழியினுடைய இம்மொழியின்கண் தலைவியது காதல் வாழ்க்கையைப் பேணும் வகையில் உண்டாகிய கவலை மிகுதி யும் அது வாயிலாக அஃது அவனது வரைந்து கோடலை யல்லது பிறிது யாதனையும் வேண்டாத நிலையும், அவனை வரைந்து கொள்ளத் தூண்டும் செயலும், அச்செயலைத் தனது நிலைமைக் கேற்பத் தோழி செய்யும் திறமும் ஆசிரியர் செங்கண்ணனாரது புலமையை இப்பாட்டில் பணி கொள்கின்றன.

இருங்கல் அடுக்கத் தென்னையர் உழுத கருங்காற் செந்தினை கடியும் உண்டன
கல்லக வரைப்பிற் கான்கெழு சிறுகுடி
மல்லல் மருங்கின் மௌவலும் அரும்பின
1நரையுரும் உரறும் நாம நள்ளிருள்
வரையக நாடன் வரூஉம் என்ப
துண்டுகொல் அன்றுகொல் யாதுகொல்2 மற்றென்று
மதிவல் உள்ளமொடு3 மறைந்தவை நாடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூவேய் கண்ணியது4 பொருந்து மாறே

இது, சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.

உரை
இருங்கல் அடுக்கத்து - பெரிய மலைப்பக்கத்துக் கொல்லைகளில்; என் ஐயர் உழுத கருங்கால் செந்தினை - என் ஐயன்மார் உழுது விளைவித்த பெரிய அடியினையுடைய செந்தினைகள் முற்றினமையின்; கடியும் உண்டன - அறுக்கப் பட்டு விட்டன; கல்லக வரைப்பிற் கான்கெழு சிறுகுடி - மலைநாட்டிடத்துக் காடுகளிடையே பொருந்திய சிறு குடியின்; மல்லல் மருங்கில் மௌவலும் அரும்பின - வளமிக்க பகுதிகளில் முல்லைப்புதர்கள் அரும்புகளை எடுத்துள்ளன; நரையுரும் உரறும் நாம நள்ளிருள் - பெருமையினையுடைய இடி முழங்கும் அச்சம் பொருந்திய நள்ளிருளில்; வரையக நாடன் வரூஉம் என்பது - மலை நாடனாகிய தலைமகன் வருவான் என்பது; உண்டுகொல் - உண்மையோ, அன்று கொல் - பொய்யோ; மற்றுயாதுகொல் என்று - வேறு யாதோ என்று ஐயுற்று; மதிவல் உள்ளமொடு மறைந்தவை நாடி - ஆவன ஆராயவல்ல மதிவன்மை படைத்த உள்ளத் துடன் களவின்கண் நம்மிடை நிகழ்ந்தவற்றை ஆராய்ந்து அறிந்து; அன்னையும் அமரா முகத்தினள் - அன்னையும் வெகுண்ட முகத்தையுடையளாய் இராநின்றாள்; நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும். -ஆதலால் இனிச் செய்யத் தக்கதை நீயே நினைந்து செய்தல் வேண்டும்; பூவேய் கண்ணி - பூப் போலும் கண்களை யுடையாய்; அதுவே பொருந்துமாறு - அதுவல்லது பொருந்திய செய்கை வேறுஇல்லை, காண் எ-று.

பூவேய் கண்ணி, தினை கடியுண்டன; மௌவலும் அரும் பின; நாடன் வரூஉம் என்பது உண்டுகொல், அன்றுகொல், யாதுகொல் மற்று என்று உள்ளமொடு மறைந்தவை நாடி, அன்னை அமரா முகத்தின ளாயினாள்; ஆதலால் நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும்; அதுவே பொருந்துமாறு எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உழுது வித்தி விளைப்ப விளைந்த செந்தினையை, உழுத செந்தினை என்றார். இருங்கல், கருங்கற் பாறையுமாம்; “இருங்கல் வியலறை1” என்ப பிறரும். கடி, ஈண்டு அறுவடை மேற்று, மௌவல், புதர்முல்லை, நரையுரும் என்புழி நரை, பெருமை, “நரையுருமின் ஏறனையை”2 என வருதல் காண்க. மதி, இயற்கையறிவு, “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்னிற்பவை3” என்பது காண்க. இயற்கை யறிவால் பிறக்கும் மனத்திட்ப முடைமை தோன்ற மதிவல் உள்ளம் என்றார். இயல்பிலே நல்லறி வில்லார்க்கு நூலறிவும் பிறவும் திண்மை பயவாமையின், மதிவல் உள்ளம் விதந்தோதப்பட்டது. மறைந்தவை, ஆய மும் அன்னையும் அறியாவாறு தலைமகன் உறவு பெற்றதும், அதுவே பற்றுக்கோடாக நிகழ்ந்த செயல்வகையும் ஆம். அன்னை யென்றது ஈண்டுச் செவிலியை, “ஆய்பெருஞ் சிறப் பின் அருமறை கிளத்தலின், தாய் எனப் படுவோள் செவிலி யாகும்1” என ஆசிரியர் கூறுவது காண்க.

சிறைப்புறமாகத் தலைவன் வந்து நின்றமை யுணர்ந்து வரைவு கடாவும் கருத்தினளாகிய தோழி, பண்டுபோல் பகற்குறியின்கண் தலைமகனைத் தலைப்பெய்து கூட்டம் நிகழாவாறு தினை முற்றி விளைந்தமை கூறுவாள், கருங்காற் செந்தினை கடியும் உண்டன என்றாள். பகற்போதில் மனைப்புறத்தே யுள்ள பூக்கெழு கானம் பகற்குறியிடமாயினும், முல்லை யரும்பிக் கார்கால வரவினைக் காட்டுதலின், அதுவும் அமையா தாயிற்று என்றற்கு, மல்லல் மருங்கின் மௌவலும் அரும்பின என்றாள். இத்துணையும் பகற்குறி மறுத்தல், நரையுரும் உரறும் நாம நள்ளிருள் என்றது, இரவுக்குறியின் ஏதம் கூறி வரவு மறுத்தல். இனி நமது களவொழுக்கம் பிறர்க்குப் புலனாகி அலர் பயந்துவிட்டது என்பாள். வரையக நாடன் வரூஉம் என்பது என்றும், அதனால் நம்மில் உண்டான வேறுபாடு பிறர் அறியாவகை நாம் மறைக்க முயன்றேமாக அவற்றை அன்னை அறிந்து கொண்டனள் என்றற்கு உண்டுகொல், அன்றுகொல், யாதுகொல் மற்று என்று மறைந்தவை நாடி என்றும், அன்னையின் கூர்த்த அறிவு நமது ஒழுக்கத்தை நாம் அறிவியாமே உணரும் மாண் புடைத்து எனத் தாயறிந்தமை கூறி வரைவுகடாவுவாளாய் மதிவல் உள்ளமொடு நாடி என்றும், அன்னையும் அமரா முகத்தினள் என்றும் கூறினாள். எனவே, இற்புறத்தே இயங்கா வாறு செறிப்பு மிக்க தாகலின் யான் இனிச் செயற்பாலது ஒன்றுமில்லை எனக் கையறவு தோற்றுவிப்பாளாய். நின் னொடு நீயே சூழ்தல் வேண்டும் என்றாள். செவிலி, தோழியைப் பெற்ற தாயாயினும் நெருங்காவாறு சிவந் தொழுகுகின்றாள் என்பது பற்றியே அமரா முகத்தள் என்றாள். எனவே, தான் சூழ்ச்சித் துணையாகும் சிறப்பில ளானமை தோழி கூறினா ளாயிற்று. இந்நிலையில் தலை மகட்குச் சார்பு அவள் நெஞ்சு அமர்ந்த காதலனையன்றி வேறின்மையின் தலைவியை நோக்கி, “நீ அவனொடு ஆராய்ந்து விரைய வரைந்து கோடலை வேண்டுக; நின் தலைமைக்குப் பொருந்துவது அதுவே” என்பாள், பூவேய் கண்ணி அது பொருந்துமாறே என்றாள். பெருநாணின ளான தலைமகட்கு அஃது எளிதில் இயலாதாயினும், நாணி னும் சிறந்தது கற்பாதலின் அது நோக்க, நாண் நோக்காது அவனோடு ஆராய்ந்து வரைவுக்கு ஆவன சூழ்தல் பொருந்திய அறம் என்பாள், அது பொருந்துமாறே என மொழிந்தாள் எனக் கொள்க. தலைமகனை வரைந்து கொள்க எனத் தலை மகள் நேர்நின்று கடாவுமாறு கூறுதல், “அறக்கழிவுடைய” தாயினும், “பொருட்பயம் படவரின்” அமையுமாதலின், தோழி இவ்வாறு கூறினாள். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது.

காஞ்சிப்புலவனார்


காஞ்சிப் புலவனார் என்ற பெயர் மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனார்க்கு உரியதாகவே பலரும் கருதுகின்றனர். மதுரைக்காஞ்சி பெருங்காஞ்சி எனப்படுவதுண்டு; ஏனைத் தொகை நூல்களுட் காணப்படும் காஞ்சிப் பாடல்கள் பலவும் அளவினும் நலத்தினும் சிறுமையுடையவை; பெருங்காஞ்சி பாடிய சிறப்பால் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மருதனாரை மாங்குடி கிழாராகச் சிறப்பித்தான்; அதனால் அவர் மாங்குடிகிழார் எனவும் கூறப் படுகின்றார். இவ்வாற்றல் பெருங்காஞ்சி பாடி வேந்தனைச் சிறப்பித்தமைக்கு வேந்தன் மருதனாரை மாங்குடிகிழாராக்கி மகிழ்விக்க, உடனிருந்த சங்கச் சான்றோர் காஞ்சிப்புலவனார் என்று தமது நிலைமைக்கு இயையப் பாராட்டினர். அதனால் மருதனார் காஞ்சிப்புலவன் எனப்பட்டார் என்ப. வையத்தார் உள்ளுவ வெல்லாம் ஒழியாது ஓர்ந்துரைத்த திருவள்ளுவனாரைத் தெய்வப்புலவன் என்றும், பொய்யில் புலவன் என்றும் பாராட்டி னாற் போல, மருதனாரைக் காஞ்சிப்புலவன் என்றது மிகவும் பொருத்தமேயாகும். பத்துப்பாட்டு, குறுந்தொகை, அகம், புறம் என்ற ஏனைத் தொகை நூல்களில் இவர் பாடிய பாட்டுக்கள் உள்ளன.

தலைமகன் தலைவியுள்ளத்து உளதாகிய காதல்வேட்கை சிறப்பது குறித்து விரைய வரைந்துகோடலை நினையாது, களவே விரும்பி ஒழுகினான். தலைவியின் உள்ளத்திற் சிறக்கும் காமக் கதிர்ப்பால் மேனியில் தோன்றி விளங்கும் வேறுபாடு கண்ட அன்னை அவளை இல்லிடத்தே செறித்தாள். தலைவியது ஊர் நெய்தல் நிலத்துக் கடற்கரை இடத்ததாகலின் அவ்விடத்தே பரந்து விளங்கும் வெண்மணலில் விளையாடலும், ஆங்கே மேயும் சிறு நண்டுகளை அலைத்தலும் ஆகிய விளையாட்டுக்கள் வாயிலாகத் தலைமகனைக் காணும் அவ்வாய்ப்பை இழந்தாள். கழியின்கண் மலரும் நெய்தல் முதலிய பூக்களைக் கொண்டு தழை தொடுத்துத் தத்தம் இடையில் அணிந்து இன்புறும் சிறப் புக்கும் இடனில்லாது போயிற்று. இவ்வாற்றல் தலைமகட்கு உள்ளத்தே காதற்கவலை தோன்றி வருத்தத்தலைப்பட்டது. அதனைக் கண்ட தோழி, இவ்வருத்தம் மிகுமாயின் தலை மகள் மேனியில் மெலிவு தோன்றி இற்செறிப்பை மிகுவிக்கும்; ஊரிடத்தே அலர் வேறு பிறந்து அவலம் பிறப்பிக்கும்; இன்னோ ரன்ன செயல்களால் காதல்வாழ்வு இன்பம் பயவா தொழியும் என்றெல்லாம் எண்ணித் தலைமகனைக் காணுங்கால் அவற்கு இதனைக் குறிப்பாய்த் தெரிவித்து விரைவில் வரைந்து கொள்ளச் செய்வதே இனிச் செயற்பாலது எனத் துணிந்திருந்தாள். இந்நிலையில் ஒருநாள் இருண்மாலைப் போதில் தலைமகன் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நிற்கக் கண்டாள். அவன் செவியிற்படுமாறு தலைவியொடு சொல்லாடுபவள் போல, நிகழ்வனவற்றை நிரல்படத் தொடுத்து, “தோழி, ஆய மொடு கூடித் தழை தொடுத்து அணிந்து மணற்சிற்றில் புனைந்து அலவனை அலைத்து விளையாடும் அதனையும் கைவிட்டு வருந்திய உள்ளத்தோடு இருக்கின்றனை; நினைக்கு உண்டாகிய நோய் யாது? எனக்கு உரைப்பாயாக” என உரைக்கின்றாள்.

இவ்வுரையின்கண், தலைமகன் உள்ளத்தில் தலைவியது முறுகிய காதலை நினைப்பித்து இற்செறிப்பால் அவள் எய்தும் துன்பத்தைக் காட்டி, விரைந்து வரைந்துகோடலை யல்லது செயல் பிறிதில்லை என்பது விளங்கச் செய்யும் திறம் அமைந் திருப்பது கண்ட நம் மதுரைக் காஞ்சி பாடி மாண்புற்ற மருத னார் அதனை இப்பாட்டின் கட்பாடியுள்ளார்.

உரையாய் வாழி தோழி இருங்கழி
1இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி
வாங்குமடற் குடம்பைத் தூங்கிருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பைக்
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கட்கமழ் அலர தண்ணறுங் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றிற் பரிசிறந் தோடிப்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டற்
2சேர்ப்பேர் ஈரளை அலவற் பார்க்கும்
சிறுவிளை யாடலும் அழுங்க
3உறுபெருந் துயர்நினக் காகிய நோயே.

இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

உரை
தோழி:- வாழி:- உரையாய் - எனக்கு உரைப்பாயாக; இருங்கழி இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி - கரிய கழியின் கண் மீனாகிய இரையை மேய்ந்துண்ட நீர்ப்
பறவைகளின் நிரைநிரையாகச் செல்லும் கூட்டம்; வாங்கு
மடற் குடம்பை தூங்கிருள் துவன்றும் - வளைந்த மடலிடத்து அமைந்த கூடுகளில் மிக்க இருட்போதாகிய இரவில் நெருங்கி யுறையும்; பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை - பனை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் வெள்ளிய மணல் பரந்த படப்பையைச் சார்ந்த; கானல் ஆயமொடு - கானற் சோலை யில் விளையாட்டயரும் ஆயமகளிருடன் கூடிச் சென்று; காலைக் குற்ற கள்கமழ் அலர - காலைப்போதில் பறித்த தேன்கமழும் பூக்களையுடைய; தண்ணறுங் காவி அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ - தண்ணிய நறிய நெய்தல் முதலிய பூக்கள் விரவ அழகுண்டாகத் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்து; வரிபுனை சிற்றில்பரி சிறந்து ஓடி - கோலமிட்ட மணற்சிறு வீட்டில் விரைவு மிக ஓடி; புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் - புலால் நாறும் அலைகளால் அலைக்கப்பட்ட வளைந்த அடியை யுடைய கண்டல் மரங்கள் செறிந்த; சேர்ப்பு ஏர் ஈரளை - கடல்நிலத்துக் குளிர்ந்த வளையின்கண் வாழும், அலவன் பார்க்கும் சிறு விளையாடலும் அழுங்க - நண்டுகளைத் துரத்தி அலைக்கும் சிறுவிளையாட்டும் இல்லையாகலின்; உறுபெருந்துயர் நினக்கு ஆகிய நோய் - மிக்க பெரிய துயரத்தை உனக்குச் செய்த வேட்கை நோயை எ-று.

தோழி, வாழி, ஆயமொடு, தைஇ, ஓடி, பார்க்கும் சிறு விளையாடலும் அழுங்க, உறுபெருந் துயரமாகிய நோய் உரையாய் எனக் கூட்டி, வினைமுடிவு செய்க. இரையார் குருகு, இறந்தகாலம் தொக்க வினைத் தொகை; பகற்போதில் கழிக்கண் மீனாகிய இரையை மேய்ந்துண்ட குருகினம் மாலைப் போதில் குடம்பை நோக்கிச் சேறல் இயல் பாதலின் இரையார் குருகு என்றார். குருகு என்றது, ஈண்டு நாரை கொக்கு முதலிய நீர்வாழ் பறவையினத்தை, மாலைப் போதில் கூடு நோக்கிச் செல்லுங்கால் அவை நிரைநிரையாகப் பெயர்வது பற்றி, நிரைப்பறைத் தொழுதி என்றார். குடம்பை, கூடு, பெண்ணை, பனைமரம், படப்பை, தோட்டமு மாம், நெய்தலும் ஆம்பலுமாகிய பூக்கள் காலையில் மலர்வன வாதலின், காலைக் குற்ற கட்கமழ் அலர என்றார். அலர், மலர், காவி, நெய்தல், காவி என எடுத்துக் கூறினா ராகலின், இனமான ஆம்பல் குவளை முதலியன கொள்ளப்பட்டன; அவையும் தழை தொடுத்தற்குரிய வாகலின், “அளிய தாமே சிறுவெள் ளாம்பல், இளைய மாகத் தழையாயினவே1” என்பது காண்க. நெறி, பூவின் இதழ், பல்வேறு வண்ணங்களை யுடைய பூவும் தழையும் விரவுதலால் ஒன்றினொன்று மாறு பட்ட நிறமுடைமையின் பகைத்தழை எனப்படுகிறது. நெறிப் புற அமைந்த தழை நெறித்தழை எனப்பட்ட தெனினுமாம்; “வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை2” எனச் சான்றோர் குறிப்பது காண்க. சிற்றில், மணல்வீடு, வரி, அதன்கட் செய்யப் படும் கோலம். பரி, செலவு, கண்டல், கடற்கரையில் வளரும் மரவகை, “கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப3” என்றும், “கண்டல் வேலிக் காமர் சிறுகுடி”4 என்றும் வருதல் காண்க. சேர்ப்பு, நெய்தல் நிலம்; கழிக்கரையுமாம். “இருங்கழிச் சேர்ப்பு1 எனவும், இரு நீர்ச் சேர்ப்பு2 எனவும் வழங்குதல் அறிக. உறுபெருந்துயர், கழிபேரு வகை என்றாற்போல வந்தது.

விரைந்து வரைதலை நினையாது களவே விரும்பி ஒழுகும் தலைமகன் செய்கையால், உள்ளத்தே காதல் முறுகிப் பெருகி அவனது அழிவில் கூட்டத்தை அவாவி நிற்கும் தலைவியால், விளையாட்டு விருப்பும்; இற்செறிப்பில் வெறுப்பும் தோன்றி யிருத்தலை அறிந்ததோழி, சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்குமாற்றால், தலைவியை நோக்கி, இனிய சொற்கள்பல சொல்லவும், அவள் ஒருவிடையும் கூறாளாயினமையின், உரையாய் தோழி என்றும், அதனால் எழுந்த வருத்தம் புலப்பட வாழி என்றும் கூறினாள். அச்சொற்களைக் கேட்கும் தலைமகன் மேலே நிகழ்வனவற்றை அறிதற்பொருட்டுக் கருத்தைத் தன் செவிவழிப் படுத்தலும், பகற்போதில் தலை மகள் ஆயமகளிருடன் சென்று விளையாட்டயரும் இடத் துக்கு இற்செறிப்பால் செல்லுதல் தவிர்ந்தமை தோன்ற அதனை விதந்து பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை என்றும், காலைப் போதிற்சென்று பூக் கொய்து மகிழும் கானற் சோலையைக் கானல் ஆயம் காலைக்குற்ற என்றும், கொய்த பூக்களைக் கொண்டு தழை தொடுத்து அழகுற அணிந்து கோடலை, அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ என்றும், மணல்வீடு கட்டி விளை யாடியதும், அலவனை அலைத்து விளையாடிய திறமும் நிரலே கூறி, இனி அவ்வின்பம் பெறுவது இல்லையாய்க் கழிந்தது என்றாள். “அருவி ஆடியும், பல்லிதழ் நீலம் படு சுனைக் குற்றும், நறுவீ வேங்கை இனவண்டார்க்கும், வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும் காதலந் தோழி3” எனத்தோழி பிறாண்டும் கூறுதல் காண்க. உடம்பில் நோயும் உள்ளத்தில் வருத்தமும் இருந்தாலன்றி இளையவர் விளையாட்டில் விருப்பொழியாராகலின், தலை மகளை நோக்கி, உறுபெருந்துயர், நினக்கு ஆகிய நோய் உரையாய் என்றாள். இரைமேய்ந்துண்ட குருகினம் உடங்கு பெயர்ந்து குடம்பைக் கண் இனிது துவன்றுவது கூறியது. நினது அன்பை நிரம்பப் பெற்ற தலைவி நின்னுடன் மனைக் கண் இனிதிருக்க வேண்டு மாதலின், அதற்கேற்ப அவளை வரைந்து கொள்க எனத் தோழி குறிப்பால் வரைவு கடாய தென்க.

எனவே, அது கேட்டுத் தலைவிபால் தன்னை இன்றி யமையாத அளவில் காதல் பெருகியிருப்பதை அறிந்து கோட லும், இல்லிகவாதவாறு தலைவி இற்செறிப்புண்டு இருத் தலையும் தலைவன் உணர்ந்து, இனி வரைந்து கோடல் அல்லது செய்தற்குரியது வேறில்லை எனத்தெருள் வானா வதும் பயன்.

மோசி கண்ணத்தனார்


கண்ணத்தனார் மோசி என்பாருடைய மகனாதலால் மோசி கண்ணத்தனார் எனக் குறிக்கப்படுகின்றார். மோசி கீரனார் என்றொரு சான்றோர் இத்தொகை நூற்கண் காணப்படுகின்றார். அவர் தந்தையும் மோசி என்று கூறப்படுதலால் இக்கண்ணத்த னார் கீரனாருக்கு உடன் பிறந்தாராகக் கருதற்கு இடமுண்டா கிறது. அத்தன் என்பது அப்பன் என்னும் பொருளது; ஆகலின், கண்ணத்தன், பாலத்தன் என வரும் பழம் பெயர்கள் இக் காலத்துக் கண்ணப்பன், பாலப்பன், முதலியவாக வழங்கும் பெயர்களாகும். கீரத்தன் என்பதும் இவ்வியல் பிற்றேயாம். மதுரைக் கண்ணத்தனார் என்றொரு சான்றோர். இத்தொகை நூற்கண் வருதலால், அவரின் வேறுபடுத்த இவர் மோசி கண்ணத்தனார் என்று சிறப்பிக்கப் பெற்றார் எனக் கோடல் வேண்டும். இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் கிடைத் திருக்கிறது.

மனைக்கண் இருந்து மாண்புடைய அறம் புரிந்தொழுகும் தலைமகன் பிரிவரிதாகிய பெருங்காதலாற் பிணிப்புண் டிருக்கும் தலைவியைப் பிரிந்து சென்று ஆற்றுதற்குரிய கடமையொன்று உடையனானான். காதலைப் பேணிக் கடமையை நெகிழ விடுவது கட்டாண்மையுடைய காளைக்குக் கடனன்று; அதனால் அவன் உள்ளத்தில் காதலும் கடமையும் கடும்போர் உடற்றத் தலைப்பட்டன; கடமை யுணர்வு மீதூர்ந்தது. அவன் தன் பிரிவுக்குறிப்பைத் தலைமகள்பால் நேரில் கூறமாட்டாது தோழிக்குப் பைய உணர்த்தினான். தலைமக்கள் வாழ்வு தலைமைப் பண்பாட்டி னின்று சிறிதும் வழுவா வகையில் அறிவு கொளுத்தும் அமைதி சான்ற அத்தோழி, அவன் உள்ளம் கடமைத்துறையில் கலங்காது திட்பம் எய்துவது கருதியும், காதல்வெம்மையால் மென்மை மிக்கிருக்கும் தலைவியின் உள்ளம், வன்மையுற்று வாழ்வில் உளவாகும் இடையூற்றுக்கும், இடையீட்டுக்கும், தளர்வின்றி நடத்தும் மதுகையுடைத்தாதல் கருதியும், தலைவியைச் சார்ந்தும், தலைமகனை மறுத்தும் சொல்லாடு வாளாய். ’ஒன்றில் காலை உயிர்துறக்கும் அன்றில் போலும் அன்பு நிறைந்தவள் தலைமகள்; அதனால் நின் பிரிவு ஆற்றும் தகைமைய தன்று; அன்றியும், தலைமகட்கு நின் பிரிவை யான் எவ்வாறு தெரிவிப்பேன். கடமை யாற்றுதலே வாழ்க்கை யாதலின், அது குறித்துப் பிரிவென்பதும் தானாகவே வந்துவிட்டது; நீ பிரியின் எய்துவது கூதிர்காலம்; அரும்பனியும் குளிர்வாடையும் போந்து, தனித்தவரை மிகவும் வருத்தும் கொடுங்காலம்; காதலர்ப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் இருத்தலையே அக்காலம் வேண்டி நிற்பது. அதனால், ஐயனே, நீ பிரிதலைக் கைவிடுவதே தக்கது" என்று கட்டுரைக்கின்றாள்.

அவளது கூற்றின்கண், பிரிவாற்றுதலின் அருமையையும் அதற் கேதுவாகிய கூதிரின் வரவையும் வெளிப்பட மொழிந்து தலைவனைச் செலவழுங்குவிக்கும் திறத்தால் செம்மை யுறுவிப்பது கண்ட கண்ணத்தனார் இப்பாட்டினைப் பாடுகின்றார்.

ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண் டுறையும் புன்கண்வாழ்க்கை
1யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நொவ்வி நோன்குளம் பழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலங் கடுப்ப விருப்புறத்
தெண்ணீர்க் 2குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற் குரைத்தது.

உரை
ஒன்றில் காலை அன்றில் போல - சேவலும் பெடையு மாகிய இரண்டனுள் ஒன்று பிரிந்தகாலை ஒன்று ஆற்றாது உயிர்விடும் இயல்பினையுடைய அன்றிற் பறவைபோல; புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை - தனிமை யெய்தி வருத்தமுற்றிருக்கும் துன்ப வாழ்க்கையை; யானும் ஆற்றேன் - யானும் சிறிதும் ஆற்றுவேனல்லேன்; அது தானும் வந்தன்று - அத்துன்பநிலை தானும் யாவரும் வேண்டாமே தானாக வந்துள்ளது; ஐய - ஐயனே; நீங்கல் - இனி நீங்குதல் ஒழிவாயாக; வாழியர் - ; ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் - ஈங்கையின் அரும்பும், அதிரல் என்னும் புனமல்லிகையின் பூவும், உதிர்ந்து கிடக்கும் பெரிய மணல் பரந்த எக்கரின்கண்; நொவ்வி நோன்குளம்பு அழுந்தென - மானினது வலிய குளம்பு அழுந்திற்றாக உண்டான; வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப - வெள்ளியை உருக்குதற் குற்ற மூசைபோல; விருப்புற - காண்போர் மகிழ; தெண்ணீர்க் குமிழி இழிதரும் - தெளிந்த நீர்மையையுடைய குமிழி தோன்றி வழியும்; தண்ணீர் ததைஇ நின்றபொழுது - தண்ணீர் நிறைந்து சுவறி இருக்கும் கூதிர்காலம் எய்து மாகலான், எ-று.

அன்றில்போல உறையும் புன்கண் வாழ்க்கை, யானும் ஆற்றேனாயினும், அது தானும் வந்தன்று; தண்ணீர் நின்ற பொழுது ஆகலான், ஐய, நீங்கல், வாழியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க, அன்றில்1, நெடிய பனைமரங்களிலும் பெருமரங்களின் நெடிய கிளையுச்சியிலும் கூடு அமைத்து வாழும் புள்ளினம் “மையிரும் பனைமிசை பைதல வுயவும் அன்றில்2” என வருதல் காண்க. நெய்தல் பாலை ஆகிய நிலங்களில் பெரும்பாலும் பனைமரங்களில் கூடமைத்து வாழ்வது இதற்கு இயல்பு. இது கழுகினத்தைச் சேர்ந்தது இதன் வாய் கூரிதாய் நுனி வளைந்திருப்பது பற்றி, “பெண்ணைச் சேக்கும் கூர்வாய் ஒருதனி அன்றில்3”, எனவும் “ஓங்குவயிர் இசைய கொடுவா யன்றில்4”, எனவும் சான்றோர் குறிக்கின்றனர். இதன் வாயலகு பொன்னிறம் பெற்றிருக்கும். இவற்றுள் சில தலைசிவந் திருத்தல் பற்றி “நெருப்பி னன்ன செந்தலை யன்றில்5” என்றும், “எரியகைந் தன்ன செந்தலை யன்றில்6” என்றும் குறிக்கப்படுகின்றன. ஆணும் பெண்ணுமாய்க் கூடி வாழும் இவற்றுள் ஒன்று பிரியினும் ஒன்று உறக்கமின்றி வருந்தும் என்பர்; “மனைசேர் பெண்ணை மடிவா யன்றில் துணையொன்று பிரியினும் துஞ்சா காண்1” எனவரும். புலம்பு, தனிமை, புன்கண், துன்பம், யானும் ஆற்றேன் என்றவிடத்து உம்மை. தலைவியது ஆற்றாமையையும் தழீஇ நிற்றலின் எதிரது தழீஇய எச்சப் பொருட்டு, நீங்கல், அல்லீற்று எதிர் மறை வியங்கோள். அதுதானும் என்றவிடத்து உம்மை சிறப்பு. அதிரல், புனமல்லிகைக் கொடி; “வரிமென் முகைய நுண் கொடி அதிரல்2” என வருதல் காண்க. நவ்வி, மான், அது நொவ்வி என வந்தது. தண்ணீர் ததைந்த எக்கர்மேல் உதிர்ந்து கிடக்கும் பூக்களை மான் மிதிக்குங்கால் அதன் குளம்பு அழுந்தக் குழிந்த பூக்களிடையே தண்ணீர் கொப்புளித்து வருதலை, தெண்ணீர்க் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுது என்றார். ததைதல் - ஈண்டுச் சுவறுதல்; மேற்று - குழிந்த வெள்ளிய பூவின்கண் நீர் கொப்புளித்துத் தோன்றுவது; உருக்கிய வெள்ளி (மூசையின்கண் நீர்போல் உருகி நிற்கும் அவ்வெள்ளி) போல்கின்றது என்க.

தான் மேற்கொண்ட பிரிவுக்குத் தலைமகளை உடன் படுத்தும் கருத்தினால் தலைமகன் தோழிக்கு உணர்த்தி னானாக, அவள் பிரிவுக்கு உடன்படாமையினை யானும் ஆற்றேன் என்றும், ஆற்றாமைக்கு ஏதுக் கூறுவாள், ஒன்றில் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை என்றும் கூறினாள். துணைப்புள் பிரியின் ஆற்றாது உறக்கமின்றிப் புலம்பி யுறையும் அன்றிலைக் கூறி யது, தலைமகன் பிரியின் தலைமகள் அப்பிரிவாற்றாது வருந்துவள் என்பதை வற்புறுத்தற்கு, இடும்பையும் இன்பமும், இரவும் நண்பகலும் போல விரவியது பற்றி வாழ்க்கையைப் புன்கண் வாழ்க்கை என்றும், அஃது இன்பம் நல்கும் துணை வரை யில்லாயின் இடும்பையே யுருவாய் இடையறாத் துன்பத் துக்கே இடனாம் என்பது தோன்றப் புலம்புகொண்டுறையும் புன்கண் வாழ்க்கை என்றும், தலைவன் பிரிந்தவழி அத் தகைய புன் கண்வாழ்க்கை தலைமகட்கு எய்தும் எனவும், அதனை அவள் ஆற்றாள். அதனைக் காணின் தானும் ஆற்றா ளாவாள் எனவும் கூறுவாள், யானும் ஆற்றேன் என்றும், பிரிவுத்துன்பம் தலைமகற்கும் ஒத்ததாகலின், அவனும் அதனை நயவா னாயினும் அவனையும் கைகடந்து பிரிவு தோன்றி யுளதென்பாள், அதுதானும் வந்தன்று என்றும் கூறினாள். வாயாற் சொல்லுதற்கு விரும்பாமை தோன்றப் பிரிந்தவர் வாழ்வைப் புலம்பு கொண்டுறையும் புன்கண் வாழ்க்கை என்றாளாகலின், அது எனச் சுட்டி யொழிந்தாள். தானாக எய்தியது, எனவே, அது விலக்கும் தன்மைத் தன்று என்றும், பிரிந்தே தீர்தல் வேண்டும் என்றும் குறிப்பாய்த் தலைமகன் வினைக்கண் திண்ணிய மனமுடையனாதல் வேண்டி உரைத்தாளாயிற்று. இனி வருவது கூதிர்ப்பொழு தாகலின், தலைவியது ஆற்றாமையும், மென்மையும், நோக்கின் பிரியாமையே வேண்டுவது என்பாள் நீங்கல் ஐய என்றாள். இது வெளிப்படையாய்ச் செலவுமறுத்தது. பிரியாவழிப் படும் இழுக்கினை எண்ணி வாழியர் என்றாள், தண்ணீர் ததைந்த எக்கர்மேல் கிடந்த ஈங்கையும் அதிரலுமாகிய பூவின்கண் மான்குளம்பு அழுந்துதலும், தெண்ணீர்க் குமிழி தோன்றி இழிதரும் என்றது, இடையற வில்லாத இன்பம் நிலவும் மனைவாழ்க்கைக்கண் தலைமக்களிடையே பிரிவு தோன்று மாயின் இன்பம் குன்றுமெனத் தோழி குறிப்பாய்த் தலை மகனைச் செலவழுங்கு வித்தவாறு.

கச்சிப் பேட்டுக் கதக்கண்ணனார்


கச்சிப்பேடு என்பது இன்றைய கச்சிமாநகர்க்குப் பெயர் என்பது கல்வெட்டுக்களால்1 அறியப்படுகிறது. கதக்கண்ணன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயருடைய சான்றோர் ஒருவர் குறுந்தொகைக் கண் காணப்படுகின்றார். அவரின் வேறுபடுத்தற்கு இவர் கச்சிப்பேட்டுக் கதக்கண்ணனார் எனச் சிறப்பிக்கப் பெறுகின்றார். கதக்கண்ணன் என்றொரு தலைவன் பண்டைநாளில் இருந்தான் என்பது யாப்பருங்கல விருத்தி மேற்கோள் இலக்கியங்களால் தெரிகிறது. இக்கச்சிப்பேட்டுக் கதக்கண்ணனார் பெயர் அச்சுப் பிரதியிலும் மதுரைத் தமிழ்ச்சங்க ஏட்டிலும் விடுபட்டுள்ளது. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் இந்நூலுள் கோக்கப்பட்டிருக்கிறது.

களவின்கண் ஒழுகும் தலைமகன் விரைய வரைந்து கோடலை நினையாது நீட்டித்து வருவானாயினன். அது, தலைவியுள்ளத்து எழுந்த காதல் நன்கு வளர்ந்து சிறப்பது கருதிற்று என்பதை அறியாத தோழிக்கும் தலைவிக்கும் இரவின்கண் தலைமகன் வருவது நினைந்தவழி. வழியின் கொடுமையும், பகல்வரின் பிறர் அறிகுவர் என்ற அச்சமும் பிறவும் தோன்றிப் பெருந்துன்பத்தையும், கலக்கத்தையும் விளைவித்தன. அதனால் தலைமகட்கு ஆற்றாமை பெரிதாயிற்று. செய்வகை அறியாது திகைத்து நாளும் தலைமகள் கவல்வாளாயினாள், அவளை ஆற்றுவிப்பது கருதிய தோழி ஒரு நாள் தலைமகளை நோக்கி, “தோழி இன்றிரவு தலைமகன் வருவானாயின், இரவில் கரடிகள் பாம்பின் புற்றுக்களில் தலையை நுழைத்து ஆங்குள்ள ஈயல் களை ஊதியுண்ணும் கொடிய வழிகளை நடந்து நீ எம்பால் வருகின்றனை; ஆனால் அவ்வழியில் அக்கரடி முதலியவற்றால் உண்டாகும் ஏதத்தை எண்ணின் எமது நெஞ்சு அச்சத்தால் வருந்தி மெலிகிறது; ஆதலால், நீ விரைய வரைந்து கோடல் வேண்டுமென இரந்து கேட்போம்; கேட்டவழி, அவன் சான்றோர்களைக் கொண்டு நம்மனையில் நம்மை வதுவை செய்து கொண்டு தனது நாட்டுக்கு நம்மை உடன்கொண்டு செல்வது ஒருதலை” என்று சொன்னாள்.

அவள் கூற்றின்கண், களவு நெறியில் காதலரிடையே காதற் காமம் சிறந்து பெருகியவிடத்து விரைய வரைந்து கோடற்கண் வேட்கை மேம்பட்டு நிற்பதும், அதனைத் தலைமகன் தெருண்டு மேற்கொள்ளத் தாழ்க்கின், வெளிப்பட எடுத்து மொழிதற்குப் பெண்மைப் பண்பு தடுத்து நிற்பதும் விளங்குவது கண்ட கதக்கண்ணனார் இப்பாட்டின்கண் அவற்றைத் தொகுத்துப் பாடுகின்றார்.

இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்என
வரைந்துவால் இரக்குவ மாயின் நம்மனை1
நன்னான் வதுவை2 கூடி நீடின்று
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருதெறி களமர்
நிலங்கண் டன்ன அகன்கட் பாறை3
மென்றினை நெடும்போர் புரிமார்
4உறங்குகளி றெடுப்புந்தம் பெருங்கல் நாட்டே.

இது, வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

உரை
இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை - இரை தேடும் கரடியினது அகன்ற வாயையுடைய ஆண்; கொடுவரிப் புற்றம் வாய்ப்ப - வளைந்த வரி பொருந்திய புற்றொன்று காணப் பெற்றதாக; வாங்கி - அதனைக் கிளைத்து; நல்அரா நடுங்க உரறி - அதனுள்ளே வாழும் பெரிய பாம்பு அஞ்சி நடுங்கு மாறு முழங்கி; கொல்லன் ஊது உலைக் குருகின் உள்உயிர்த்து அகழும் - கொல்லன் உலைக்களத்துத் துருத்தி போல உள்ளே மூச்சுவிட்டு அகழ்ந்து அங்குள்ள ஈயல்களை உறிஞ்சி யுண்ணும்; நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என - நள்ளிரவில் நீ வருதலை யாம் அஞ்சுகின்றோம் என்று கூறுமாற்றால்; வரைந்து வரல் இரக்குவமாயின் - வரைந்து எய்தும்படி அவனை இரந்து கேட்போமாயின்; நம்மனை நீடின்று நன்னாள் வதுவை கூடி - இனியும் நீட்டித்த லின்றி நம் மனையில் நன்னாளில் மணம் செய்து கொண்டு; மெல்ல நம்மொடு செல்வர்மன் - மெல்ல நம்மைத் தம்மோடே கொண்டு செல்வார்; தோழி-; வேங்கைக் கண்ணியர் - வேங்கைப் பூவால் தொடுத்த கண்ணி சூடிய புனவர்; எருது எறி களமர் நிலம் கண்டன்ன - எருதுகளைக் கடாவிட்டு நெல்லடிக்கும் மருத நிலத்து உழவர் அமைத்த நெற்களம் போன்ற; அகன்கட் பாறை - அகன்ற இடத்தை உடைய பாறையின் மேல்; மென்றினை நெடும்போர் புரிமார் - மெல்லிய தினைக்கதிரைப் போரிட்டு அடிக்கும் பொருட்டு; உறங்குகளிறு எடுப்பும் தம் பெருங்கல் நாடு - உறங்குகின்ற களிற்றியானையைத் துயில் எழுப்பும் தமது பெரிய மலை நாட்டுக்கு எ-று.

தோழி, வருதல் அஞ்சுதும் யாம் என இரக்குவமாயின், நம்மனை நீடின்று வதுவை கூடித், தம் பெருங்கல் நாடு நம்மொடு செல்வர் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. “ஆற்ற லொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப1” வாகலின், கரடியின் ஆணை எண்கின் ஏற்றை என்றார். ஈயல் நிறைந்த புற்றுக்கள் பலவற்றையும் அகழ்ந்து உண்டமை தோன்ற, “கொடுவரிப் புற்றம் வாய்ப்ப” என்றார். புற்று, புற்றம் என அம்முப் பெற்றது. புற்றுக்களில் பாம்புகள் உறைவது உண்மையின் நல்லரா நடுங்க என்றார். அரவின் நஞ்சு கரடிக்குத் தீங்கு பயவா தென்பர். உரறுதல், முழங்குதல் கரடி, புற்றாஞ்சோறு எனப் படும், ஈயலை உறிஞ்சி உண்ணுங்கால் உருமுவது இயல் பாதல்பற்றி உரறுதல் கூறப்பட்டது. புற்றின் அடியில் தலையை நுழைத்துப் பெருமூச் செறிந்த விடத்து உள் ளிருக்கும் ஈயல் வெளிப்படும்; அப்போது கரடி தன் வாயை அங்காந்து வெளிவரும் ஈயல்களை உறிஞ்சிவிடும். அதனால், மூச்செறிந்து மீள இழுக்கும் அதன் செயற்குக் கொல்லனது ஊதுலைக்குருகு உவமமாயிற்று. நடுநாள் என்றது, ஈண்டு நள்ளிரவின் மேற்று, புற்றுண்ணுங்கால் வேற்று விலங்காதல், மக்களாதல், வரும் அரவம் கேட்கின், கரடி மிக்க சினங் கொண்டு தாக்கும் கொடுமையுடையது. வதுவை - திருமணம், செல்வர்மன் என்ற விடத்து மன்அசைநிலை; ஆக்கம் எனினு மாம், புரிமார், மாரீற்று - முற்றுவினை, எடுத்தல் ஈண்டுத் துயிலெழுப்புதல் குறித்து நின்றது; பெருங்கல், பெரிய மலை.

வரையாது நீட்டித் தொழுகும் தலைமகன் இரவுப் போதில் வருவது கண்டு குறிப்பால் தோழி, வரைவுகடாவவும், அவன் களவே விரும்பினமையின் வெளிப்படையாகத் தோழி அவன் சிறைப்புறத்தானாதலை உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், இரவுவருதலின் ஏதத்தை எடுத்து, எண்கின் ஏற்றை புற்றம் வாங்கி நல்லரா நடுங்க உரறி உள்ளுயிர்த்து அகழும் என்றும், அக்காலை அது மிகவும் கொடுமை செய்யும் என்பதை எண்ணி நடுநாள் வருதல் அஞ்சுதும் என்றும் கூறினாள். பிறாண்டும், “அஞ்சுவல் அரவின் ஈரளைப் புற்றம் காரென முற்றி, இரைதேர் எண்கினம் அகழும், வரை சேர் சிறுநெறி வாராதீமே1” என்பது காண்க. இரவின்கண் வருதலை மறுப்பின் தலைமகனைத் தலைப்பெய்தற்கு வேறு வாயில் இல்லையே என எழும் தலைவியின் ஐயம் அறுத்தற்கு, வரைந்து வரல் இரக்குவ மாயின் என்றும், வரைந்தவழி எய்தும் பயனை நம்மனை நன்னாள் வதுவை கூடி என்றும், வதுவைக்குப் பின் தாழாது தலைமகனது மனையடைந்து அழிவில் கூட்டம் பெறலாம் என்றற்கு நீடின்று நம்மொடு செல்வர்மன் என்றும் கூறினாள். வரைந்துவரல் என்றது வரைவு மலிவு தலைமக்கள் வாழ்வின் நலமே பேணித் தலைமகட்கு உயிர்த் துணையாகிய தோழி வரைவு நீட்டித்த வழி எய்தும் ஏதம் ஆய்ந்து முன்னுறக் கூறல் கடனாதலின், வரைவினை இரந்து கேட்கின்றாள் என அறிக. பிறாண்டும், தலைமகனை நோக்கி, “நும்போல் சால்பெதிர் கொண்ட செம்மையோரும், தேறா நெஞ்சம் கையறுபு வாட, நீடின்று விரும்பா ராயின், வாழ்தல் மற் றெவனோ தேய்கமா தெளிவே1” எனத் தோழி தலைமகன்பாற் கூறுதல் காண்க. எண்கின் ஏற்றை புற்றம் வாங்கி நல்லரா நடுங்க உரறி உள்ளுயிர்த்து அகழும் என்றது, தலைவியினுடைய தந்தை தன்னையரை உடன்படுவித்து அலர் கூறுவார் வாயடங்க மணமுரசு எழுப்பி வரைவொடு வருக எனக் குறிப்பால் உள்ளுறுத்து உரைத்தவாறு, புனவர் அகன்கட் பாறையில் மென்றினை நெடும்போர் இடுமார் உறங்குகளிறு எடுப்புவர் என்றது. களவின்கண் உழந்த இன்பப்பயனைப் பெறுதற் பொருட்டு நீட்டித் தொழுகும் தலைமகனை வரைந்து வரல் இரப்பது வேண்டிற்று என உள்ளுறையால் ஏதுக் கூறியவாறு. இது கேட்கும் தலைவன் வரைவு மேற்கொள்வா னாவது பயன்.

ஓதலாந்தையார்


சான்றோராகிய ஆந்தையார் ஓதலூர் என்னும் ஊரின ராதலின் ஓதலாந்தையார் எனக் குறிக்கப் பெறுகின்றார். ஓதலூர் சேரநாட்டுக் குட்டநாட்டுப் பகுதியில் உள்ளதோர் ஊர்; இப்போது அப்பகுதி மலையாள மாவட்டத்துப் பொன்னானி வட்டத்திலுள்ளது; அப்பகுதி அங்கு உள்ளவர்களால் இன்றும் குட்டநாடு என்றுதான் வழங்கப்படுகிறது. முடிநாகனார்க் குரிய முரஞ்சியூரும், பாலைக் கோதமனார்க் குரிய பாலையூரும் இக் குட்டநாட்டு ஊர்களேயாகும். ஆந்தை என்பது தொடக்கத்தில் ஆதனுக்குத் தந்தை எனக் காரணப் பெயராய்த் தோன்றிப் பின்னர் மக்கட்கு வழங்கும் இயற்பெயராக மாறியது. இவர்பாடியன வாக வேறு பாட்டுக்கள் தொகை நூல்களுள் உண்டு.

கடிமணம் புணர்ந்த சின்னாட் கெல்லாம் தலைமகன் பொருள்கருதித் தலைமகளிற் பிரிந்து செல்லும் கடமை யுடையனானான். கற்பின்கட் பெறலாகும் கடிமண இன்ப நுகர்ச்சிக்கண், காதல் வேட்கையே தலைமக்கள்பால் கன்றி நிற்றலின், அவரிடைப் பிரிவு தோன்றின் அது சாதலினும் பெருந்துன்பம் தருவதாகும். அக்காலைக் காதற் காமத்துக்கும் கடமைக்கும் கடும்போர் நடக்கும். காதலன்பால் கடமை வென்றி எய்துவதனால் அவன் தலைமகனாகின்றான். காதற்காம நெறிவழியோடாது கடமை நெறியைக் கைப்பற்றிக் காதலன் உரைத்த சொல்லைத் தேறிப் பிரிவாற்றி யிருத்தலால் காதலி யாவாள் கற்பால் பொற்பு மிகும் தலைமகள் எனப்படும் சால்பு பெறுகின்றாள். காதற்கடமைப் போரில், கடமை விஞ்சி நிற்குங்கால் தலைமக்கள் நெஞ்சம் காதலின் பக்கலில் நின்றும், காதல் மிக்கவிடத்துக் கடமையொடு நின்றும், வேண்டும் கருத்துக்களை வழங்கும் நீர்மை யுடையதாகும். அந்நிலையில் தலைமகன் உள்ளத்தில் கடமைவழி நின்ற நெஞ்சம் உடைமையது உயர்ச்சியும், இளமையது அருமையும், நாளது சின்மையும், அன்பினது அகலமும், எடுத்துரைத்துப் பிரிவே மேற்கோடற் பாலது என்று வற்புறுத்துகின்றது. அப்போது மிக்குநின்ற காதற் காமத்தின் வழி நின்ற தலைமகன், நெஞ்சம் நிகழ்த்திய ஏதுக் களையே எடுத்து மாறுபட மொழிந்து அதனை வீழ்த்த முயலு கின்றான். அந்த அழகிய அறிவுப் போரைக் கண்ட ஆசிரியர் ஓதலாந்தையார் இப்பாட்டின்கண் இனிமை மிகப் பாடுகின்றார்.

பைங்காய் 1நன்னிறம் ஒரீஇய செங்காய்க்
2கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி
இடுநீ றாடிய கடுநடை ஒருத்தல்
ஆட்பெறல் நசைஇ நாட்சுரம் விலங்கித்
3துனைதரும் வம்பலர்க் காணா 4வெஞ்சினம்
5பனைக்கான் றாறும் பாழ்நாட் டத்தம்
இறந்துசெய் பொருளும் இன்பம் தருமெனின்
இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்னர் வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்
நில்லாப் பொருட்பிணிச் சேறி
6வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே

இது, பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவழுங்கியது.

உரை
பைங்காய் நன்னிறம் ஒரீஇய செங்காய்-பசிய காயாய் இருந்த போதுள்ள நல்ல பசுமை நிறம் நீங்கிச் சிவந்த நிறம்பெற்ற செங்கா யாகி; கருங்கனி ஈந்தின்-கரிய நிற முடையனவாய்க் கனிந்த பழங்களையுடைய ஈத்த மரங்கள் நிற்கும்; வெண்புறக் களரி-வெண்மையான புழுதி புறத்தே பரந்து கிடக்கும் களர் நிலத்து; இடுநீ றாடிய கடுநடை ஒருத்தல்-காற்று அலைத்தலால் துகள் படிந்த மேனியும் விரைந்த நடையையுமுடைய யானை; ஆட்பெறல் நசைஇ-வழிச்செல்லும் மக்களைக் கொல்ல விரும்பி; நாள்-விடியற் காலத்தே; சுரம் விலங்கி-சுரத்தின் குறுக்கே நின்று; துனை தரும் வம்பலர்க் காணா வெஞ்சினம்-விரைந்து செல்லும் வழிப்போக்கர்கள் வரக் காணாமையால் எழுந்த வெவ்விய சினத்தை; பனைக்கு ஆன்று ஆறும் -பனைமரங்களைத் தாக்கித் தணித்துக் கொள்ளும்; பாழ்நாட்டு அத்தம்-பாழ்த்த நாட்டிற் செல்லும் வழிகளை; இறந்து செய்பொருளும் இன்பம் தரும் எனின்-கடந்து சென்று ஈட்டும் செல்வந்தானும் இன்பம் தருவது என்பாயாயின்; இளமையின் சிறந்த வளமையும் இல்லை-இளமைச் செவ்வியினும், சிறந்ததொரு செல்வமும் இல்லை; இளமை கழிந்த பின்றை-அவ்விளமை கழிந்து ஒழிந்து விடின்; வளமை காமம் தருதலும் இன்று ஆதலால்-ஈட்டிய செல்வம் இளமைக்குரிய காமஇன்பம் தருவது இல்லை யாகலான்; நில்லாப் பொருட்பிணிச் சேறி-அதனை உணராமல் நிலைபேறின்றிச் கழியும் பொருண்மேல் எழுந்த வேட்கையால் பிணிப்புண்டு செல்லக் கருதுகின்றாய்; நெஞ்சம்-நெஞ்சமே; நின் வினை வல்லே வாய்க்க-யான் வாரே னாயினும் நீ மேற்கொண்டு செல்லும் பொருள் பற்றிய வினை விரைந்து முற்றுவதாக எ.று.

நெஞ்சம், அத்தம் இறந்து செய்பொருளும் இன்பம் தரும் எனின், வளமை யில்லை; வளமை காமம் தருதலும் இன்று என்பது அறிந்திலை; அதனால் பொருட்பிணிச் சேறி; நின் வினை வல்லே வாய்க்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஈந்தின்காய் பசுமை நிறமும், செங்காய் செம்மை நிறமும், உடையன என்பதைச் “செங்கா யுதிர்ந்த பைங்குலை ஈந்து1” எனப் பிறரும் கூறுதல் காண்க. ஈந்தின் பழம் மிகக் கனிந்தவழிக் கருநிறம் பெறுதலின் கருங்கனி என்றார். ஈந்தில் சிற்றீந்து, பேரீந்து என இருவகை உண்டு; அவற்றுள் சிற்றீந்து கனி சிறுத்தும் பேரீந்து கனி பெருத்தும் இருக்கும் என அறிக. களரி, களர்நிலம். களர்நிலத்தே வெண்மையான உவர்மண் பூத்திருத்தல் பற்றி வெண்புறக் களரி எனப்படுகின்றது. நீறு, துகள், கரியமேனியில் வெள்ளிய துகள் படிந்திருப்பது தோன்ற, இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல் என்றார். ஒருத்தல், யானை, பகற்போது வெம்மை மிகுந்து செல்லுதற் கியலாதபடி வருத்துமாகலின், சுரத்திற் செல்வோர் நாட்காலையில் அதனைக் கடக்கும் செலவு மேற்கொள்வதை அறிந்திருந்தமையின் களிற்றொருத்தல் நாட்சுரம் விலங்கித் துனைதரும் வம்பலர்களை நோக்கி நின்றது என அறிக. இருள் நன்கு புலராத நாட்காலையில் சுரத்திடை நின்ற பனைகள் ஆட்களைப் போலத் தோன்றினமையின் அவற்றை ஆளென மருண்டு தாக்கிக் களிறு சினம் தணியும் என்றார். வளமை, செல்வம், இளமைச் செவ்வி எதிர்வில் வளர்ச்சியும் முதிர்வும் பெற்றுப் பொருளும் அறமும் புகழும் இன்பமும் விளைவிக்கும் ஆற்றல் முற்றும் கதிர்த்துத் தோன்றும் பொழுதாகலின், அதுவே சிறந்த வளமையாயிற்று. பொருட்பிணி, பொருள் மேற் செல்லும் பற்றுள்ளம். பொருட்கண் உளதாகும் பற்று ஒருவர்க்கு முதுமை எய்திய வழியும் உள்ளத்தை விடாது பிணித்து நிற்றலின், பொருட்பிணி எனப்பட்டது. பொருட்பற்று மிக்கவழிப் பிற எவற்றையும் நாடாவாறு உள்ளத்தைப் பிணிப்பதுபற்றிப் பிணியெனப்பட்டது எனினுமாம். வல்லே, விரைவு, வாய்த்தல், பயன் பெற முற்றுதல்.

கடமைவழி நின்று உடைமையது உயர்ச்சி கூறிப் பொருட் பிரிவை வற்புறுத்திய நெஞ்சினை மறுத்துப் பொருளின் சிறுமை உணர்த்துவான் புகுந்த தலைமகன், அது பெறுதற்குச் செல்லும் நெறியினது கொடுமையைக் கடுநடை ஒருத்தல் ஆட்பெறல் நசைஇ வம்பலர்க் காணா வெஞ்சினம் பனைக்கு ஆன்று ஆறும் பாழ்நாட்டு அத்தம் இறந்து செய்பொருள் என்று கூறுகின்றான். பொருளும் என்புழி உம்மை, இழிவுச்சிறப்பு. இத்தகைய பொருள், துன்பம் தருவதன்றி இன்பம் தருவதன்று என்பான். அத்தம் இறந்து செய்பொருளும் இன்பம் தரும் எனின் என்றான். இளமையிற் சிறந்த வளமையில்லை என்பது மேற்கோள்; இதனைச் சாதித்தற்குக் காட்டப்படும் ஏது, இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலுமின்றே அதனால் என்பது. பொருளை ஈட்டலும் துன்பம்; ஈட்டியவழிக் காத்தல் கடுந்துன்பம்; காத்துப் பேணிய வழியும் அதனால் காமவின்பம் தர இயலுவதில்லை என்றற்கு, வளமை காமம் தருதலும் இன்று என்றான். ஈட்டல் காத்தல்களால் தாராமையேயன்றிக் காத்தவழியும் இன்பம் தருதல் இல்லை என்பது பட நிற்றலின், உம்மை எச்சப்பொருட்டு, நில்லாமை பொருட்கு இயல்பா யினும் அதனைத் தலைமகன் எடுத்து மொழிந்தது. தனது உடன்பாடின்மை யுரைத்தற்கு, தனக்கு விருப்பமின்றாயினும் விரும்பிச் செலவு மேற்கொள்ளும் நெஞ்சினை விலக்காது பொருட்பிணிச் சேறி என்றும், வல்லே வாய்க்க நின் வினையே என்றும் கூறினான்.

ஈந்து காயாவழிப் பசுமை நிறமும், காய்த்தவழிச் செந்நிறமும், கனியுமிடத்துக் கருநிறமும் பெறும் என்றது; பிள்ளைமையிற் பசுமையும் இளமையில் எழிலும் செம்மையும், முதுமையில் நரையும் திரையும் எய்திக் கழியும் யாக்கையின் நிலையா இயல்பு கூறியது எனக்கொள்க. நச்சிய ஆள் பெறாமையால் களிற்றொருத்தல் வெஞ்சினம் கொள்ளும் என்றது, கருதிய அளவில் முற்றாதவழிப் பொருள் இளிவரவு தோற்றுவிக்கும் எனவும், அவ் வொருத்தல் தன் சினம் தணியுமாறு இயைபு இல்லாத பனையைத் தாக்குதல் கூறியது. அப்பொருள் இல்லையாயின் இரவலரும் பரிசிலருமாகிய மக்கள் வருந்துவர் எனவும் கொள்ள நின்றன. இவ்வாற்றால், பொருள் இன்பம் தருமாறில்லை எனச் சுட்டியவாறு உணர்க.

இவ்வாறு கூறியதனால், தலைவன் செல்லாதொழிவன் எனக் கொள்ளற்க. “செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்1” என்று ஆசிரியர் கூறுவது காண்க.

சீத்தலைச் சாத்தனார்


சீத்தலை என்பது மேலைக் கடற்கரைச் சேரநாட்டில் பண்டை நாளில் விளங்கிய ஊர்களுள் ஒன்று. இங்கிருந்த மாளிகைச் சிறப்பால் இதனைச் சீத்தலைமாளிகை என்று குடகு நாட்டுக் கல்வெட்டுக்கள்1 கூறுகின்றன. புதுப்பட்டி ஏட்டில் இப்பாட்டுச் சீத்தலைச் சாத்தனார் பாடியதெனக் குறிக்கப் பட்டிருக்கிறது.
பரத்தையர் சேரியினின்றும் தலைமகன் தன் மனையகம் புகுதல் வேண்டித் தன் பாணனைத் தலைவிபால் தூது செலுத்தி னான். பரத்தையர் சேரியுள் பரத்தைக்கும் தலைமகற்கும் நட்புண்டாக்கும் பணியை அப்பாணன் செய்வது மரபாதலால் அவன்பால் தலைமகட்கு வெறுப்புத் தோன்றுவது இயற்கை. தனக்கு உரியதாகிய தலைமகனது அன்பு வேறு மகளிர்பால் செல்லின், அது தலைமகள் உள்ளத்தில் பொறாமையும், வெகுளி யும், தோற்றுவிக்கும் காரண மாதலின்; தலைமகனது புறத் தொழுக்கத்துக்குத் துணையாகும் பாணன் வரக் காணின், அவ்வெகுளி மிகும்; அவனைத் தலைமகள் தன் மனையகம் நெருங்க விடாது மறுப்பள். ஒருகால், தலைமகன் பரத்தையர் சேரிக்கண் சென்றிருக்கையில், அங்கே ஒருத்தி கடற்கானற் சோலையில் விளையாடலை விரும்பி அவனை அழைத்தாள். அச்செய்தி தலைமகட்குத் தெரிந்ததும் அவட்குப் பொறாமையும், வெகுளியும், பொங்கி எழுந்தன. அந்நிலையில் தலைமகன் அப்பரத்தையின் நீங்கித் தன் மனைக்கு மீளக் கருதிப் பாணனை முன்னுறச் செலுத்தினான். அவன் வரவைக் கண்ட தோழி, அவனை வெகுண்டு, பாண, தன் தன்னையர் வேறொன்றும் கல்லாத கதவராகவும், நின் பரத்தை முன்பு தான் வண்டலாடிய கானற் சோலைக்குத் தலைவனை நோக்கி, “வருக, யாம் செல்வாம்” என அழைக்கின்றாளாம்; அங்ஙனம் பரத்தைக்கு உரியவனாகிய தலைமகன் எமது மனைக்கு வரக் கருதுவது யாது பயன்? ஆகவே, நீயும் அவனோடே செல்க" என்று மறுத்தாள்.

தோழியினது இக்கூற்றின்கண், தலைமகள்பால் உளதாகிய உண்மை யன்பு காரணமாகத் தலைவனது பரத்தமை பற்றி எழுந்த பொறாமை, மனையறம் விளைவிக்கும் மாண்புகழ்க்கு ஆக்க மாவது பற்றித் தோழி அவளது பக்கல் நின்று அறத்துக்குத் துணை செய்தலை வியந்து, இப்பாட்டின்கண் தொகுத்து ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் பாடுகின்றார்.

இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையிற் பனிக்கும் பாக்கத்
1துவன்வரின் எவனோ பாண 2பேதை
கொழுமீன் 3கொள்கையர் செழுநகர் 4கெழீஇய
கல்லாக் கதவர் தன்னைய ராகவும்
வண்டல் ஆயமொடு பண்டுதான் ஆடிய
ஈனாப் பாவை 5தலையிட் டோரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கான லானே

இது, பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

உரை
இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை-கரிய கழியிடத்தே நீரைத் துழாவி மீன்களைப் பிடித் துண்டலால் நனைந்த புறத்தையுடைய நாரை: இறகு எறி துவலையின் பனிக்கும் பாக்கத்து - சிறகுகளை உதறுதலால் தெறிக்கும் நீர்த் துளிகளால் குளிர்ப்பு மிகும் ஊரின்கண்: உவன்வரின் எவன் - நின் தலைவனாகிய கொழுநன் எம்மனை நாடி வருதலால் எய்தக் கடவ பயன் யாது: பாண-: பேதை - பேதையாகிய நின் பரத்தைத் தலைவி; கொழுமீன் கொள்கையர் செழுநகர் கெழீஇய - கொழுவிய மீனைப் பிடிக்கும் தொழிலை யுடை யராய்ச் செழித்த மனையின்கண் பொருந்திய; தன்னையர் கல்லாக் கதவராகவும் - தன் ஐயன்மார் பிறிது யாதும் கல்லாத சினமுடைய ராகவும் அதனை நினையாமல்; வண்டல் ஆய மொடு - வண்டல் விளையாடும் ஆயமகளிருடன் கூடி; பண்டு தான் ஆடிய - சிற்றிளம் பருவத்தில் தான் வைத்து விளை யாடிய; ஈனாப் பாவை தலையிட்டு - வண்டற் பாவையைத் தலையீடாகக் கொண்டு; மெல்லம் புலம்பன் அன்றியும் - நெய்தல் நிலத்தவனாகிய தலைமகன் உடன் வாரானாகவும், பன்முறையும் வற்புறுத்தி; கானலான் செல்வாம் என்னும் - கானற் சோலைக்கட் செல்வே மாக என்று வேண்டா நிற் கின்றாள், ஆகலான் எ-று.

பாண, தன்னையர் கதவராகவும், பண்டு ஆடிய பாவை தலையிட்டுப் புலம்பன் அன்றியும் கானற்குச் செல்வாம் என்னு மாகலான் உவன் வரின் எவனோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கதவர் தன்னையராகவும் என்றதனைப் பிரித்துக் கூட்டுக. திவலை, நீர்த்துளி, பாக்கம் நெய்தல் நிலத்து ஊர்கள் உவன், சுட்டு. எவன், வினா, தலையீடு, காரணம் ஈனாப்பாவை, வண்டற் பாவைக்கு வெளிப்படை. ‘ஓரும்’ அசைநிலை.

தலைமகன் பரத்தையர் சேரியின் நீங்கி வருவது கூறி வாயில் வேண்டினா னாகலின், உவன் வரின் எவனோ பாண என்றும், அதுகேட்ட பாணன். தலைவிபால்தலைமகன் கொண்ட பேரன்பினை எடுத்து மொழிந்தமையின் அவனை, மறுத்தற்கு, அவன் பரத்தை வழி நின்றொழுகும் இயல்பினன் என்பாள். மெல்லம் புலம்பன் என்றும் கூறினாள். பரத் தையைப் புலந்து கூறுகின்றமையின் பேதை என்றும், பண்டு சிற்றிளமைப் பருவத்தே சென்று விளையாடியது போல, இப்பொழுதும் கானற் சோலைக்குச் செல்லின், தன்னையர் தன்னை வெகுள்வர் என்பது எண்ணிற்றிலள் என்பாள், கல்லாக் கதவர் தன்னைய ராகவும் என்றும், அவரது கல்லாமை யெண்ணித் தலைமகன் வரவு உடன்படானாகவும், அவன் தன் வரைப்பினனாய் ஒழுகும் அன்புடைமை நோக்கிக் கானற் சோலைக்குச் சேறலை வற்புறுத்துகின்றாள் என்றற்கு மெல்லம் புலம்பன் அன்றியும் செல்வாம் என்னும் கானலானே என்றும் கூறினாள். இதனால், செல்வாம் எனப் பரத்தை வற்புறுத்தலால், தலைவன் அவளோடே கானற்குச் செல்வானேயன்றி ஈண்டு வாரானாகலின், அவன் பொருட்டு வாயில் வேண்டுவது என்னை என மறுத்த வாறு, ஆகவும், அன்றியும் என்ற உம்மையால், பரத்தை தன் பேதைமையால் தன்னையர் தன்மை உணராமையும், தலை மகன் நயவாததனைத் தானும் நயவா தொழியாது நயக்கும் சிறுமையும் உடையள் எனத் தோழி பரத்தையை இகழ்ந்தாள் என அறிக. ஆகவே, பேதைப் பரத்தை ஒருத்தியின் நலன் நயந்து, அவள் வரைப்பினனாகிய தலைமகன் அன்புடையன் எனவும், வருமெனவும் கூறி வாயில் வேண்டுவது பயனில் செயலாம்; எனத் தோழி பாணற்கு வாயின் மறுத்தவாறுமாம். கழி துழைஇய நாரை தன் ஈர்ம்புறத் திறகை எறிதலால் தெறிக்கும் திவலைகளால் எம் பாக்கம் குளிர்மிக்கு நடுங்கும் என்றதனால், பரத்தையர் சேரிக்கண் மகளிர் நலம் நயந் தொழுகும் ஒழுக்கத்திடை எழும் அலர் ஊரெங்கும் பரந்து எம்மை நாணால் நடுங்கச் செய்தது எனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறு காண்க. இது புறஞ்சொல் மாணாக் கிளவி. இது கேட்டுப் பாணன் மாறுவானாவது பயன்.

நற்சேந்தனார்


கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்றொரு சான்றோர் ஏனைத் தொகைநூல்களுட் காணப்படுகின்றார். அவரின் வேறு என்றற்கு இவர் நற்சேந்தனார் எனப் பொதுப்படக் குறிக்கப் பெறுகின்றார். சேந்தன் என்ற பெயர் தமிழகத்தில் மிகவும் பயில வழங்கிய தொன்று. தமிழகத்தில் மக்கட்பெயர் வட மொழிப்பட்டது சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு இல்லை, எனலாம். இந்நாள் வேதியரிடையே நிலவும் வடமொழிப்பெயரும் இடைக் காலத்தில் அவரிடையே வழங் கியது கிடையாது. இரண்டாம் இராசராசன் காலத்துக் குடுமி யான்மலைக் கல்வெட்டு ஒன்று, “சிவப்பிராமணன் பாரத்துவாசி மாறன் குன்றன்1” எனவும், திரிபுவனச் சக்கரவர்த்தி சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் காலத்துச் கல்வெட்டு ஒன்று, “சிவப்பிராமணன் அகத்திய கோத்திரத்துத் திருக்கொடுங் குன்றமுடையா னான நம்பிப்பிள்ளை2” எனவும் வருவன போதிய சான்றாகும். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பவர் மதுரைக்கு அண்மையிலுள்ள கொடிமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த பிராமணருள் வாதுளி கோத்திரத்தவர் என்றும் நற் சேந்தன் என்பது அவருடைய இயற்பெயர் என்றும் அறிதல் வேண்டும். நற்சேந்தனார் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் இத்தொகை நூற்கண் காணப்படுகிறது.

தலைமகன் ஒருகால் மலைச்சாரலில் உலவி அங்கே இருந்த பூம் பொழில் ஒன்றினுள் நுழைந்தான். அங்கே ஒருபால் மயி லொன்று தன் தோகையை விரித்துப் பெடையினம் காண நின்று இனிது ஆடிக்கொண்டிருந்தது. மற்றொருபால் இளநங்கையான தலைமகள் அம்மயிலின் ஆட்டங் கண்டு அசைவற நின்று நோக்கிக் கொண்டிருந்தாள். மாலைப்போதில் மலரிடைத் தவழ்ந்து போந்த மணங்கமழ் தென்றல், மாவும் புள்ளும் மக்களு மாகிய எல்லா வுயிர்க்கும் இன்பம் செய்து கொண்டிருந்தது. அந்நிலையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உண்பன போல உற்று நோக்கின. இருவர் உள்ளங்களிலும் இதுகாறும் எய்தி யறியாத இன்பவுணர்ச்சி புதிது தோன்றிக் கண்வழியாகப் புறப்பட்டு, ஒன்றையொன்று ஈர்த்தன. அவன் உள்ளத்தில் அவள் உருவும், அவள் உள்ளத்தில் அவனுருவும் இடம் பெற்று அடிக் கடி மனக்கண்ணில் எழுந்து இன்பம் செய்தன. சிறிது போதில் இளமகளிர் சிலர் அவண் வரவும், அவர்களுடன் அவள் சென்று மறைந்தாள். மறுநாள் மாலையில் முன்னாள் கண்டது போல அந்நங்கையைக் காண்டல் கூடும் என்ற வேட்கை துரப்ப அத்தலைமகன் பொழிலுக்கு வந்தான். அவற்கு முன்பே அவன் நினைந்தது போலவே நினைந்து தலைவியும் தனித்து வந்து நின்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு நோக்கிக் கருத்தால் ஒன்றுபட்டனர்; அவரவர் உள்ளத்தில் காதல் கருவுற்று வளரத் தலைப்பட்டது. இருவரும் பின்னர்ப் பிறர் அறியா வகையில் காண்டலும், அக்காட்சியிற் பிறக்கும் இன்பத்தை நுகர்தலும் செய்து சின்னாளைக் கழித்தனர். நாளடைவில் தலைமகன், அவளுக்கு உயிர் ஒத்த தோழியாவாளைக் கண்டு கொண்டான். அவளது துணைபெற்றா லன்றித் தலைமகளை அணுகிக் கண்டு இன்புறுதல் ஆகாதென உணர்ந்து, அத்தோழியின் நட்பினைப் பெறுதற்குரிய வழிகளை நாடினான். அன்பு, அறிவு, அறம், என்ற மூன்றையும்; மனமும் மொழியும் செய்கையுமாக வுடையவள் அத்தோழி. குறையுடையவன் போலத் தோழியைக் கண்டு உரையாடியும், தழையுடை முதலியன தந்தும், தலைவிபால் தான் கொண்ட காதற் குறிப்பைத் தெரிவித்தான். அவளும் அவனைப் பலவகையில் அலைத்து, அவனுடைய உணர்வு, உரை, செயல் ஆகிய மூன்றும் தலைவிபால் கொண்ட காதலின் திண்மையை உணர்த்தச் செவ்வே உணர்ந்து கொண்டாள். ஆயினும், தனது உள்ளத்தின் உண்மை நிலையைத் தலைவி அவட்கு உரையாமையால், தோழி வெளிப்பட உணரும் திறம் இலளானாள். எனினும், தலைவன் இயக்கத்தைத் தலைவி கண்காணக் காட்டி, அவள் உள்ளத்தில் தோன்றி உருவாகி வரும் காதலைத் தோழி அறிந்து கொண்டாள். அது மொழியுருவில் தன்முன் வெளிப் படாமையின் அத்துறையில் தோழி பெரிதும் முயல் வாளாயினாள். ஒருநாள் அத்தோழி தலைவியொடு உரையாடலுற்று, “ஆயிழாய், இயற்கையழகு இனிது நிலவும் இத்தினைப்புனத்தே எத்தகைய குறையும் இல்லையாகவும் நின் மேனி பகல்விளக்குப் போலப் பாயொளி வாடியுளது; நுத லொளியும் நுணுகியிருக்கிறது;இதற்குக் காரணம் இல்லாமற் போகாது; காரணமின்றிக் காரியம் பிறவாதென்பது உண்மை; நினக்கு யான் உயிரொத்த தோழியாகவும் அதனை நீ உரைத்தா யில்லை; உரைக்கின்றாயு மில்லை யான் அக்காரணத்தை அறிவேன்.” என்று சொல்லுமுன், தலைவி கண்களில் நீர் கலுழ்ந்தது; உடம்பில் அசைவு பிறந்தது. உடனே, தோழி அவள் கண்களைத் துடைத்து, “யான் அக்காரணத்தை அறிகுவேன் என்று எண்ணி நீ அழுதல் வேண்டா” என்று உரைப்பாளாய், “நேற்று இப்புனத்திடையே எனக்கு ஒன்று நிகழ்ந்தது கூறுவல், கேள்; இப்புனத்தின்கண் காவல் புரிந்து திரிந்து வருகையில், கட்டிளங் காளை யொருவன், முடியிற் கண்ணியும் அடியிற் கழலும் அணிந்து, மார்பில் மாலை கிடந்து அசைய என்பால் வந்து பின்னே நின்று என் முதுகைத் தழுவினான் என்றாள். உடனே தலைவி”ஆ" என்று சொல்லி தன் இருகண்களையும் பரக்க விழித்துத் தோழியை நோக்கினாள். “அதன்பின் அவன் அவ் விடத்தினின்றும் போய் விட்டான். அவன் தழுவக் குழைந்த என்பால் பிறந்த இன்பத்தையே நினைவேனாயினேன்; அதுவே என் நுதலும் மேனியும் வேறுபடுவதற்குக் காரணமான நோய்” எனத் தோழி கூறினாள். தலைவி உள்ளத்தில் ஒருபால் நாணம் தோன்றி அலைக்க, ஒருபால் தலைமகற்கும் தனக்கும் உண்டான காதற்றொடர்பை அவள் அறிந்துகொண்டு அவன் பொருட்டே தன்னோடு உரையாடுகின்றாள் எனத் தெளிந்து மகிழ்ச்சி சிறந் தாள். பின்னர் இருவரும் களவின்கண் காதலை வளர்க்கும் நல்லொழுக்கத்திற் கருத்தைச் செலுத்துவாராயினர்.

இந்நிகழ்ச்சியை நுனித்து நோக்கிய நற்சேந்தனார், தலைவியது பெண்மைப் பண்பின் பெருமையையும், அவள் உள்ளக் கருத்தில் உண்மை யோர்ந்து நாணம், அச்சம், என்ற தடைகளைக் கடந்து கருத்தில் நிலவும் காதலன் பொருளாகப் புறத்தே மொழி வழங்குமாறு தலைவியை ஒருப்படுத்தும் தோழி செயலின் அருமையையும்; நன்கு சூழ்ந்து அவள் சொல்லாடும் அறிவு நலத்தை வியந்து இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார்.

பகல்எரி சுடரின் மேனி சாயவும் பாம்பூர் மதியின் நுதல்ஒளி கரப்பவும்

எனக்குநீ உரையா 1யாயினை நினக்கியான்
உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின்
2அதுகண் டிசினால் யானே என்று நனி
3அழுத லான்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலின் இடையுற் றொருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறுபுறம் கவையின னாக அதற்கொண்
4டஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃதா கின்றியான் உற்ற நோயே

இது, குறைநேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியது: தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉமாம்.

உரை
பகல் எரி சுடரின் மேனி சாயவும் - வெயிலொளியில் எரியும் விளக்கொளிபோல மேனிநிறம் வேறுபடவும்; பாம்பூர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - இராகு வென்னும் பாம்பால் விழுங்கப்பட்ட திங்கள் ஒளி மழுங்குவது போல நுதலின் ஒளி குன்றவும்; எனக்கு நீ உரையாயாயினை - நேர்ந்த காரணத்தை எனக்கு நீ தெரிவியா தொழிந்தனை; நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆதலின் - ஓருயிர் ஈருடலிற் பகுக்கப்பட்டது போன்ற நட்புமாட்சி உன்பால் உடையே னாதலால்; யான் அது கண்டிசின் - யான் அக்காரணத்தை அறிவேன்; என்று நனி அழுதல் ஆன்றிசின் - என்று எண்ணி மிகவும் அழுதலைக் கைவிடுவாயாக; ஆயிழை - ஆய்ந்த இழையினை யுடையாய்: ஒலி குரல் ஏனல் காவலின் இடையுற்று - தழைத்த கதிர்களையுடைய தினைப்புனம் காவல் புரியுமிடத்துக்கு வந்து; ஒருவன் கண்ணியன் கழலன் தாரன் - ஒப்பில்லாதா னாகிய தலைமகன் முடியிற் கண்ணி சூடி அடியிற் கழல் பூண்டு மார்பில் மாலை அணிந்து கொண்டு: தண்ணெனச் சிறுபுறம் கவையின னாக-என்னை நெருங்கித் தண்ணிதாக என் முதுகைத் தழுவினானாக; அதற்கொண்டு - அதுவே பற்றுக் கோடாகக் கொண்டு; அஃதே நினைந்த நெஞ்சமொடு - அத்தழுவலையே நினைத்து வருந்தும் நெஞ்சத் தால்; இஃது ஆகின்று யான் உற்ற நோய் - இவ்வாறாயிற்று யான் எய்திய காமநோய். எ-று.

ஆயிழை, மேனி சாயவும், நுதலொளி கரப்பவும், உரையா யாயினை; ஆயினும் மாண்பினேனாகலின் யான் கண்டிசின் என்று அழுதல் நனி ஆன்றிசின்; ஏனல் காவலின் இடையுற்று ஒருவன், கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனக் கவையின னாக, அதற்கொண்டு, நெஞ்சமொடு, நோய் இஃதாகின்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. பகற்காலத்து ஞாயிற்று ஒளியின்முன் விளக்கின் ஒளி இறப்பவும் ஆற்றல் குறைந்த தாகலின், ஒளியிழந்த மேனிக்கு உவம மாயிற்று.. “பாயின பசலையால் பகற்கொண்ட சுடர் போன்றாள்1” எனச் சான்றோர் பிறரும் கூறுதல் காண்க. ஞாயிற்றைச் சூழ்ந்து நாளும் திரிந்து வரும் நிலவுலகு. திங்கள் மண்டிலத்துக்கும் ஞாயிற்றுக்கும் இடையே நேர்பட வருங்கால் நிலத்தின் நிழல் திங்களின் மேல் வீழ்வதால் அதனை நிலத்தின்கண் வாழும் நாம் காணமுடிவதில்லை. பண்டையோர், அந்நிழலை இராகு வென்னும் திப்பியப்பாம்பு எனவும், அஃது ஓரொரு காலத்துப் போந்து திங்களை விழுங்கும் எனவும், அக்காலை அத்திங்கள் ஒளி மழுங்கித் தோன்றுவது பற்றி அதனைப் பசலையால் ஒளி யிழந்த நுதலுக்கு உவமை கூறுப எனவும் அறிக. “அரவுநுங்கு மதியின் நுதலொளி கரப்ப2” என்பது காண்க. நம் நாட்டவர் நிலவுலக நிழலைப் பாம்பு என்றாற்போல, மேனாட்டவர் பலரும் பண்டைநாளில் வேறு தெய்வீக நிகழ்ச்சியாகக் கருதியதனைத் தேல்சு முதலிய பழங்கால விஞ்ஞானிகளின் வரலாற்றால் அறியலாம். திங்களைப் பாம்பு கொண்ட காலத்தைப் பிறிதொன்றாகக் கருதிய மேனாட்டவருட் சிலர் மரக் கட்டைகளை வெட்டி மலைபோற் குவித்துத் தீயிட்டு எரித்துத் திங்களைப்பற்றி மறைத்த தீயிருளைப் போக்க முயன்ற நிகழ்ச்சிகள் பல மேனாட்டவருடைய பண்டைய நூல்களில் காண்கின்றோம். நினக்கும், எனக்கும் உயிர் ஒன்று; என்றற்கு உயிர் பகுத்தன்ன மாண்பினேன் என்றதாகக் கொள்க. ஆன்றிசின், அமைக வென்னும் பொருள்பட வரும் முற்று வினைத் திரிசொல். “கச்சினன் கழலினன்1” என்றாற் போலக் கண்ணியன் கழலன் என்பதற்குக் கண்ணி சூடிக் கழலணிந்து எனப் பொருள் கூறப்பட்டன. அஃது, இஃது என்பன முறையே தலைமகன் செய்த தலையளியையும் தலைவி மேனி வேறு பாட்டையும் சுட்டி நின்றன.

தலைமகள் கருத்தறிந்து உடன்பட்ட தோழி தலைவியை உடன் படுவிக்க வேண்டும் என்ற குறிப்பால் சொல் லெடுக்கின்றா ளாகலின் தலைவியது வேறுபாட்டைத் தலை யீடாகக் கொண்டு பகல் எரி சுடரின் மேனி சாயவும் எனவும், பாம்பூர் மதியின் நுதலொளி கரப்பவும்" எனவும் கூறினாள். தலைமகள் குறையை நகையாடி உரைத்து முகம் புகுவதும், தலைமகளது வேறுபாடு காட்டி முகம்புகு வதும் என்ற இரு வகை நெறிகளுள், தோழி பின்னது மேற்கொண்டாள் என அறிக. “நெருநல் எல்லை ஏனல் தோன்றித் திருமணி யொளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, இரவல் மாக்களிற் பணி மொழி பயிற்றி… என் குறைப் புறநிலை முயலும். அண் கணாளனை நகுகம் யாமே2” என்றாற் போல்வது முன்னது. அதனைத் தலைமகள் கேட்டு மறுப்பாள் போல நோக்கலும், நினக்குற்ற வேறுபாடு நினக்கு ஒருகால் தோன்றாது போயி னும், யான் இனிது அறிய நிற்றலின் மறுத்தலாற் பயனின்று என்பாளாய். எனக்கு நீ உரையாய் ஆயினை என்றும், யான் அறிதற்கு ஏது, நின்னுயிரின் என்னுயிர் ஒரு பகுதியாய் வேறா காமை என்பாள். நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண் பினேன் ஆகலின் யான் அதுகண்டிசின் என்றும் கூறி னாள். அது கேட்ட தலைமகட்கு அச்சமும் நாணமும் மீதூர்தலால். கண் கலுழ்ந்து அழுதாளாகத் தோழி. அவளைத் தேற்றுதற்குத் தானும் அவள்போல் குற்ற மெய்தி வருந்துவ தாகப் படைத்துக்கொண்டு. ஒலிகுரல் ஏனல் காவலின் இடையுற்று ஒருவன் கண்ணியன் கழலன் தாரன் தண் ணெனச் சிறுபுறம் கவையினனாக என்றாள். “சூரர மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ எம் அணங்கியோய் உண்கெனச் சிறுபுறம் கவையினனாக1” எனவும், “இன்னுயி ரன்ன நின்னொடும் சூழாது முளையணி மூங்கிலிற் கிளை யொடும் பொலிந்த, பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவிச் செய்து பின்னிரங்கா வினையொடு மெய்யல பெரும் பழி எய்தினேனே2” எனவும் தோழி படைத்து மொழியுமாறு காண்க. அவன் செய்த செயலையும் அதனால் தன்பால் விளைந்த வேறு பாட்டையும் மீளவும் கூறுதற்கு நாணினமை தோன்ற, அஃதே நினைத்த நெஞ்சமொடு இஃதாகின்று எனச் சுட்டி யொழிந்தாள். அதனால் தலைவிபால் வியப்பும் நகையும் மெய்ப்பட்டுத் தோன்றுவன வாயின என்க.

“வரைவிடை வைத்த காலத்து வருந்தினும், வரையா நாளிடை வந்தோன் முட்டினும், உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும், தானே கூறும் காலமும் உளவே3” என்பதன் உரையில் “உம்மையால் தோழி வினவியவிடத்துக் கூறலே வலியுடைத்து” என்று கூறி இப்பாட்டைக் காட்டி. “இது தோழி வினாவியவழித் தலைவி கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

ஒளவையார்


ஒளவையார் என்ற பெயர் தாங்கிய பெண்பாற்புலவர் இருவர் நம் தமிழகத்தில் இருந்துள்ளனர்; அவருள் ஒருவர் சங்கத் தொகைநூற்காலத்தும், மற்றவர் இடைக்காலத்தும் வாழ்ந்தனர். சங்ககாலத்து ஒளவையார் சோழநாட்டில் பாணர்குடியில் தோன்றிச் செந்தமிழ்ப் புலமை சிறந்து செம்புலச்செல்வர் வரிசை யுள் நல்லிடம் பெற்று விளங்கினர். அந்நாளில் தகடூர் நாட்டில் அதியமான் நெடுமான் அஞ்சியும், தென்பாண்டி நாட்டு நாஞ்சில் நாட்டில் வள்ளுவனும் நாடு காவல் புரிந்து வந்தனர். சோழன் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சேரமான் மாவண்கோவும் ஒளவையார் காலத்துத் தமிழ்கெழு மூவேந்த ராவர். அதியமான் சேரர்குடியில் தோன்றிய தலைவன். அவனது தகடூர்நாடு சேலம் மாவட்டத்துத் தருமபுரியும் கிருஷ்ணகிரியும், கிழக்கில் சவ்வாது மலையெனப்படும் பவழமலையை எல்லையாகவுடைய பகுதி யும் கொண்டது; தகடூர் இப்போது தருமபுரி என வழங்குகிறது. அதியமான் முன்னோர் தமிழகத்துக்கு முதன்முதலாகக் கரும்பு கொணர்ந்த செய்தியும், அரிதிற் பெறப்பட்டதும் உண்டாரை நெடிது வாழப்பண்ணும் உறுதி படைத்தது மாகிய நெல்லிக் கனியை அவன் ஒளவையார்க்கு ஈந்து அழியாப் புகழ் பெற்றதும், அவன் கோவலூரை எறிந்த சிறப்பைப் பரணர் பாராட்டிப் பாடிய குறிப்பும், அவன் பொருட்டுத் தொண்டைமான்பால் ஒளவையார் தூது சென்ற குறிப்பும், அதியமான் போரிற் புண் பட்டு வீழ்ந்ததும், அவன் மகனான பொகுட்டெழினியின் கொடைநலமும் இவர் பாட்டுக்களில் சிறந்து விளங்குகின்றன. சேரமான் மாவண்கோ முதலிய முடிவேந்தர் மூவரும் மன மொத்த நண்பராய் ஒருங்கிருந்த காட்சியை அன்பு கனிய நோக்கி, “பாகார் மண்டிலம் தமவே யாயினும், தம்மொடு செல்லா, வேற்றோ ராயினும் நோற்றோர்க்கு ஒழியும்”; ஆகவே, “மகிழ்சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினை யல்லது ஆழுங்காலைப் புணை பிறிதில்லை” என அறிவுறுத் தியதும், அதியமான் வேலேறுண்டு இறந்த போது அவன் மார்பில் உருவிய நெடுவேல்," அருந்தலை இரும்பாணர் அகல் மண்டைத் துளையுரீஇ. இரப்போர் கையுளும் போகிப், புரப் போர் புன்கணும் பாவை சோர, அஞ்சொல் நுண்டேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று" என்று சொல்லி அவர் வருந்தியதும் படிப்பவர் நெஞ்சை உருக்குவனவாகும்.

இவர் பாட்டுக்களால் பல இயற்கை நலங்கள் நாம் அறிய விளங்குகின்றன. காட்டில் மலர்ந்த இலவம்பூ கார்த்திகைநாளில் மகளிர் எடுக்கும் விளக்கின் ஒழுங்கு போலத் தோன்றும் என்பதும் காயாம்பூவோடு கூடிய அதன் கொம்பு மயிலின் கழுத்துப்போல் இருக்கு மென்பதும், நீரிலிருக்கும் குவளை கோடை வெதுப்பினும் வாடாது என்பதும், தமிழ்நாட்டுக் கடற்றுறைக்கண் வேற்று நாட்டுக் கலங்கள் காற்றால் உந்தப்பட்டு வந்து நிற்கும் என்பதும், விழுப்புண் படாது வெறிதே வாழ்ந்து இறக்கும் மக்களைப் பண்டையோர், “மறம் கந்தாக நல்லமர் வீழ்ந்த, நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்க” எனச் சொல்லி, வாளால் போழ்ந்து அடக்கம் செய்வர் என்பதும், முதலை எளிதிற் கலங்கும் நீரையுடைய குழிக்கண் இருப்பினும் களிற்றியானையைக் கொன்றுவிடும் என்பதும், எவ்வழி ஆடவர் நல்லவரோ அவ்வழி நிலமும் சீர்பெறும் என்பதும், களர் நிலத்தைத் தோண்டி எடுத்த உவர்மண் கொண்டு வண்ணாத்தி உடை வெளுப்பாள் என்பதும் அறிவுக்கு மிக்க இன்பம் தருகின்றன.

பிரிவின்கண் தலைமகள் தலைமகனை நினைந்து வருந்தும் வருத்தத்தை முளையாகவும், ஊரவர் கூறும் அம்பலைச் சினை யாகவும், அதனாற் சிறக்கும் காதலைத் தளிராகவும், நாணின் மையை மரமாகவும், அதனால் எழும் அலரை அரும்பாகவும், உருவகம் செய்வது ஒளவையாரது புலமைக்குச் சீரிய எடுத்துக் காட்டாய் இலங்குகிறது. கார்காலத்தே காதலனைப் பிரிந் துறையும் ஒருத்தி கூற்றை, “மழையே, ஆரளியிலையே, நீயே பேரிசை, இமயமும் துளக்கும் பண்பினை, துணையிலர்அளியர் பெண்டிர் இஃது எவனோ” என்று இனிமையுறப் பாடிக் காட்டு வர். மக்கள் வழங்கும் சொற்கேட்டல் பெற்றோர்க்கு இன்பம் செய்யும் என்பதை, “யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாரா வாயினும், தந்தையர்க்கு அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை” என்று கூறுவர். அதியமான் தந்த நெல்லிக்கனியை உண்டபின் அதன் சிறப்பை அவன் கூறக்கேட்டு அவனது கொடையுள்ளத்தின் மாண்பை வியந்து வாழ்த்து மிடத்து, நஞ்சினைத்தா னுண்டு சாவா மருந்தாகிய அமுதினை இறைவன் பிறர் வாழ அளித்த அருட்செய்தியை உவமமாக்கி. “நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே” என்று ஒளவையார் கூறுவது எண்ணுந்தோறும் இன்பந் தருவதாகும். பரிசில் வாழ்க்கையின் இயல்பை, “வள்ளியோர் செவிமுதல் வித்தித், தாம் உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை” என எடுத்து மொழிவர். இவர் பாடிய பாட்டுக்கள் ஏனைத்தொகை நூல் களிலும் இந்த நற்றிணையிலும் உண்டு. இடைக்காலத்து ஒளவையார் இளஞ்சிறார் பொருட்டு ஆத்திசூடி. கொன்றை வேந்தன் மூதுரை முதலிய நூல்களைப் பாடினர்; திருச்செங்கோடு வட்டத்தில் சிறப்பிழந் திருக்கும் ஐவேல் என்னும் ஊரில் வாழ்ந்த அசதி யென்பவனைப் பாராட்டி அசதிக்கோவை என்ற நூலை யும், தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனத்தைச் சேர்ந்த பந்தமங்கலத்தில் வாழ்ந்த வணிகனான பந்தனைச் சிறப்பித்துப் பந்தனந்தாதி என்ற நூலையும் செய்தவர்; அதற்கு மகிழ்ந்த பந்தன் ஒளவைக்குத் தந்த ஊர் இப்போது ஒளவையார்குப்பம் என்ற பெயருடன் இருக்கிறது.

இனி, ஈண்டைக்குப் பொருளாகிய சங்ககால ஒளவையாரது இப்பாட்டின்கட் செல்வாம். இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமகன் நல்லதொரு கடமை குறித்துப் பிரிந்து செல்ல வேண்டியவனானான்; மணமாகிய சிறிது காலத்தேயே இப்பிரிவு தோன்றினமையின் உரனும், பெருமையும், உடைய தலைமகன் உள்ளமே தொடக்கத்தில் ஒருசிறிது அசைவு கொண்டது. கடமையின் இன்றி யமையாமையை நன்கறிந்த பெருமகனாகிய அவன், மனத்திட்ப முற்றுத் தன் பிரிவினைத் தலைமகள் ஆற்றாது மறுப்பள் என்று எண்ணித் தோழிபால் அதனை அறிவித்தான். அவளும், அதனை முதற்கண் ஏலாது மறுத்துத் தகுவன சில எடுத்துரைத்தாளாகத், தலைமகன் பிரிவின் சிறப்பை ஏதுக்களா லும், எடுத்த மொழியாலும் வற்புறுத்தினான். அறிவிற் சிறந்த தோழியும், அதனை உணர்ந்து தலைமகளைப் பிரிவுக்கு உடன் படுவிக்கும் முயற்சியில் தலைப்படுவாளாயினாள். பிரிவு என்பது ஒன்று உண்டு எனக் கனவிலும் நினைவின்றித் தலைமகள் இருந்து வருகின்றாள்; அது தோழிக்கும் நன்கு தெரியும். அதனால், தலைமகன் பிரிய வேண்டிய நிலையும் உண்டு என்பதை முதற் கண் தலைமகட்குத் தெரிவிக்க வேண்டிய முறைமை தோழிக்கு எய்துகின்றது. பிரிவு பற்றிப் பேசுதற்கேற்ற செவ்வி யொன்று ஒருநாள் எய்திற்றாக, அவள் அதனை நெகிழ விடாமல் தலை மளோடு சொல்லாட லுற்று, “தோழி, கேட்டாற் பெரிதும் நகைத்தற் குரிய செய்தி யொன்று வந்துள்ளது; அறிதியோ” எனத் தொடங்கி, “ஒருபொழுது காதலர் பிரிந்தாலும் ஆற்றாது வேறுபட்டு உயிர்நீங்கும் அத்துணை மென்மையுடையம் நாம்; அற்றாக, தலைவர் நம்மை இவண் தனிப்ப விட்டுத் தாம் சின்னாட்களுக்குப் பிரிந்து செல்வராம்; நாம் இம் மனையின் கண் நள்ளிரவிலும் கண்ணுறக்கமின்றிக் கருமுகிலின் இடிமுழக் கத்தைக் கேட்டுக்கொண்டு, அவர் மேற்கொண்டு சென்ற வினையை முடித்து மீளுங்காறும் தனித்து வாழ்வேமாம், கேட் டனையோ? காதலர் கனவிலும் கருதாத ஒன்றை இவ்வூரவர் கூறுவது எத்துணை நகைப்புக் குரியது, காண்” என்றாள்.

தோழியின் இக்கூற்றின்கண், தலைமகள் உள்ளத்தில் பிரிவு பற்றிய நினைவொன்றைத் தோற்றுவித்தலும், அது வாயிலாகத் தலைமகள் உள்ளத்தெழும் ஆற்றாமை யுணர்ச்சி கண்டு அஃது உண்மையன்று. பிறர் கூறும் பிதற்றுரை எனத் தேற்றுதலும் கண்ட ஒளவையார் இப்பாட்டின்கண் தோழியது பெண்ணறிவின் பெருமை நலத்தைப் பிறங்குவிக்கின்றார். அதனை இனிக் காணலாம்.

பெருநகை கேளாய் தோழி காதலர்
ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்
பொம்மல் ஓதி நம்மிவண் ஒழியச்
செல்ப என்ப தாமே 1செல்வோர்
2தாம்வினை முற்றி வரூஉம்வரை 3நாம்மனை
வாழ்தும் என்ப 4தாமே அதன்றலைக்
கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப்
படுமழை உருமின் உறுகுரல்
நடுநாள் 5யாமத்துத் தமியம் கேட்டே.

இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது.

உரை
பெருநகை கேளாய் - பெரிதும் நகைத்தற் குரிய தொன்றனை யான் சொல்லக் கேட்பாயாக; தோழி-; காதலர் ஒருநாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் - காதலர் விடியல் முதலாகவுள்ள அறுபொழுதினும் ஒரு சிறுபொழுது பிரிவாராயினும் உயிர்ப்பியல்பு திரியும்; பொம்மல் ஓதி - பெரிதும் செறிந்து நீண்ட கூந்தலையுடைய; நம் இவண் ஒழிய - நம்மை இவ்விடத்தே நிறுத்திவிட்டு; செல்ப என்ப - செல்லக் கருதுகின்றார் என்று ஊரவர் உரைக்கின்றனர்; செல்வோர் தாம் வினைமுற்றி வரூஉம் வரை - அவ்வாறு செல்பவர் தாம் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு மீண்டு வருந்துணையும்; நாம் மனை வாழ்தும் என்ப - நாம் இம் மனையின் கண்ணே உயிர் வாழ்ந்திருப்பேம் என்றும் உரைக் கின்றனர்; அதன்தலை - அதன் மேலும்; கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்ப - நல்ல நிறம் பொருந்திய படத்தின்கட் பொறிகளையுடைய பாம்பின் தலைநடுங்குமாறு; படுமழை உருமின் உறுகுரல் - மின்னியெழும் மழை முகிலின் இடையே தோன்றும் இடியினது பெருமுழக்கத்தை; நடுநாள் யாமத்துத் தமியம் கேட்டு - நள்ளிரவாகிய நடுவீயாமத்தே தனித்து அஞ்சாது கேட்டுக் கொண்டு எ.று.

தோழி நகை கேளாய், உயிர்வேறு படூஉம் நம் இவண் ஒழிய, காதலர் செல்ப என்ப; நாமும் கேட்டு வாழ்தும் என்ப எனக்கூட்டி வினைமுடிவு செய்க. நகைப்புக் குரியது நகை யெனப்பட்டது. நாள், ஈண்டுச் சிறுபொழுதின் மேற்று, உயிர் வேறுபடுதல், உயிர்ப்பு வேறுபடுதல்; அஃதாவது இறந்துபாடு எய்தும் நிலையினை அடைதல். பொம்மல், பெருமை; ஈண்டுச் செறிவும் நீட்சியும் குறித்தது. ‘தாமே’ முன்னது அசைநிலை; பின்னது கட்டுரைச் சுவைபட நின்றது. கேழ், நிறம். உத்தி, புள்ளியாகிய பொறி. படுமழை, மின்னலொடு தோன்றும் மழைமுகில். இடி முழக்கிற்குப் பாம்பு அஞ்சி நடுங்கும் என்பர்; “விரிநிற நாகம் விடருள தேனும். உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்1” என்பது காண்க. நடுநாள் - நள்ளிரவு. “நடுநாள் வருதல் அஞ்சுதும்”2 என்ப பிறரும்.

நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுள் மனத்தின் எழுச்சி பற்றி நகை, உவகை, பெருமிதம், வெகுளி என்ற நான்கும், வீழ்ச்சிபற்றி ஏனை நான்கும் நிகழ்வன; நகை முதலிய நான் கனுள் உள்ளத்தை உயர்த்தி மேல்வரும் உணர்ச்சிகளை ஏற்று நினைவன நினையச் செய்யும் நிலையில் நகை சிறந்தமையின், பெருநகை கேளாய் என்றாள். ஆணும் பெண்ணுமாகிய இருவர் உடம்பின் உருவாயிலாக இருவர் உயிரையும் ஈர்த்து இனம் பெருக்கி வளர்த்தலை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் உள்ளத்தில் எழுந்து பிணிக்கும் ஆற்றல் காதல் எனப்படுவதாகலின், அக்காதலை யுடைய ஒருவர் பிரியின், அவரது உடலுருவில் விளங்கி மற்றவர் உயிரைப் பிணித்து நிற்கும் அக்காதல் பிணிப்புண்ட உயிரை அது நின்ற உடம்பி னின்றும் வாங்கிக் கொண்டு செல்வது போல நீங்குவதால், அதன் நிலையினை நுனித்துணர்ந்த தோழி. காதலர் ஒரு நாள் கழியினும் உயிர் வேறு படூஉம் என்றாள். பெருத்துத் திரண்டு நீண்ட கருங்கூந்தல் தோழியின் கண்ணெதிரே தோன்றிக் கருத்தை அசைத்தலின். பொம்மல் ஓதி என்றும், நம்மை இங்கே இருத்திவிட்டுக் காதலர் மாத்திரம் பிரிந்து செல்வர் என்று பிறர் கூறுகின்றனர் எனத் தலைமகன் பிரிவை வெளியிடுகின்றாளாகலின், நம் இவண் ஒழியச் செல்ப என்ப என்றும், அது கேட்ட தலைமகள் திடுக்கிட்டு மேலும் யாது கூறுகின்றனர் என வினவுவாள் போல நோக்கினாளாக, செல்வோர் தாம் வினைமுற்றி வரூஉம் வரை நாம் மனை வாழ்தும் என்ப என்றும் கூறினாள். என்ப என அடுத்துக் கூறியது. இக்கூற்றுப் பிறரதே யன்றித் தலைமகனது அன்று என்பதனை யாப்புறுத்தற்கு. காதலரது காதல் மாண்பினை நாம் நன்கு அறிவோ மாகலின், அவர் “நம் இவண் ஒழியச் செல்ப” என்பதும், “செல்வோர் வினைமுற்றி வரூஉம் வரை நாம் மனை வாழ்தும்” என்பதும் நகைப்புக் குரிய பொருளா யினும், நாம் மனையிடத்தே உருமின் உறுகுரல் நடுநாள் யாமத்துத் தமியம் கேட்டு வாழ்தும் என்பது பெருநகைக்கு இடமாயிற்று என்றற்குப் பெருநகை கேளாய் என நுதலிப் புகுந்தாள். இதனால் தலைமகள் உள்ளத்தில் ஆராய்ச்சியும் உடம்பில் அசைவும் மெய்ப்படுமாறு காண்க.

நெய்தல் தத்தனார்


சான்றோராகிய தத்தனார்க்கு நெய்தல், என்பது ஊர்; நெய்தல் வாய், நெய்தல் வாயில், நெய்தலங்கானல், நெய்தற்றலை1 எனப் பெயரிய ஊர்கள் நம் தமிழகத்தில் உண்டு. நெய்தல், இடைக்காலக் கல்வெட்டுக்களில் சயங்கொண்ட சோழ மண்டல மான தொண்டை மண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்து நெய்தல் என்றும், நெய்தல் நெடுங்குன்றம்1 என்றும் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தே நாயக்கமன்னர் சிலர் இவ்வூரில் இருந்து நாடு காவல் புரிந்திருந்தனர் என்பது இங்கே குறிக்கத்தக்க தொன்று. இந்த நெய்தல் என்னும் ஊர் நெடுங்குன்றம் என்ற பெயருடன் வடஆர்க்காடு மாவட்டத்து வந்தவாசியிலிருந்து போளூர் செல்லும் பெருவழியில் இருக்கிறது. நெய்தலில் சிறந்து தோன்றிய சான்றோராதலால் நம் தத்தனார் நெய்தல் தத்தனார் என்றும் குறிக்கப்பெறுகின்றார். இவர் தந்தை கொடியூர்கிழார் என்பவ ராதலின், இவரை நெடுந்தொகை கொடியூர் கிழார் மகனார் நெய்தற் றத்தனார் என்று கூறுகிறது. கொடியூரும் இப்போது கொடூவூர் எனத் திரிந்து அத் தொண்டை நாட்டிலேயே திருக்கழுக்குன்றத்துக்கு அண்மையில் உளது2. இவர் பாடியதாக ஒருபாட்டு அகநானூற்றில் உள்ளது.

மனையறம் புரிந்தொழுகும் தலைமகன் பொருள் வேண்டும் கடமை காரணமாகப் பிரிந்து செல்ல வேண்டியவனானான். இன்ப வாழ்க்கைக்கு இன்றியமையாத காதலை நோக்கக் கடமை பெரிதாகலின், தலைமகள் பிரிவுக்கு உடன்பட்டு விடைதந்து விடுத்தாள். தலைமகனும் மகிழ்ச்சியுடன் சென்று சேர்ந்தான். நாட்கள் சில கழிந்தன. பிரிவுத் துன்பம் தோன்றித் தலைமகளை வருத்தத் தொடங்கிற்று. அவளது உடம்பு சுருங்கிற்று; மேனி வேறுபட்டது; உண்டியும் உறக்கமும் ஒரு சேரக் குறைந்தன. அவளது மேனியின் மெலிவு கண்ட தோழி மனம் வருந்தி, “அன்னாய், வாழ்க்கையில் நுகர்தற்குரிய இன்பம் பொருளால் விளைவது என்ற கடமை குறித்தன்றோ காதலர் பிரிந்து சென்றார்; அவர் வருந்துணையும் அவர் குறித்துரைத்த காலம் நோக்கி ஆற்றி இருப்பதுதான் கற்புமிக்க நினக்குக் கடன்” என்று வற்புறுத்தினாள். பிரிந்து சென்ற காதலரிடமிருந்து அவரது நலம் உரைக்கும் தூதுவரும் என்று எதிர்நோக்கி யிருந்தாள் தலைவி. அது வராமையின் அவட்கு வருத்தம் மிகுந்தது காதலனுடைய காதல் மிகுதியை எடுத்துரைத்து மறுபடியும் தோழி வற்புறுத்தி னாள். தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது. அவள், தன்னை வற்புறுக்கும் தோழியை நோக்கி, “தோழி, காதலர் நம்பால் எத்துணை அன்புடையராயினும், நம்மோடு உடனிருந்து செய்யும் இல்வாழ்க்கையினும் இனியது ஒன்று வேறே உலகில் உண்டோ? இல்லையன்றோ? அதனைக் காதலர் நினைக்கவே இல்லை. அதன் மேலும், நம்முடைய மெலிவும் வருத்தமும் அறிந்து பிரிந்துறையும் காலத்தை நீளவிடாது விரைந்து போந்து பெருந்துன்பத்துக்கு உறையுளாகிய இவள் ஏன் இவ்வண்ணம் ஆயினள் என்று உரைத்தாரும் இல்லை; என்பால் உற்ற வருத்தமோ நிலத்தினும் மாணப் பெரிது; என் துயரத்தை எண்ணி அது நீங்குதற்குரிய வாயில் ஆராய்ந்து செய்யும் துணைவரும் எனக்கு இல்லை; யான் என் செய்வேன்” என்று இசைத்தாள்.

தலைமகள் நிகழ்த்தும் இவ்வுரையின்கண் தான் மேற்கொண்டு ஆற்றும் இல்வாழ்க்கையினும் இனியது பிறிதில்லை என்ற கருத்தும், நிலவுலகில் பெறப்படும் பொருளினும் அந்நில வெல்லையினும் பரந்து மிக்குத் தோன்றும் தன் துன்பம் பெரி தாதலின் விரைந்து போந்து அதனைத் துடைப்பது தலைமகற்குச் செய்கையாம் என உரைக்கும் ஒட்பமும் தத்தனாரது புலமை யுள்ளத்தை அசைக்கின்றன; அதன் பயனாக இப்பாட்டு உரு வாகின்றது.

1வடுவின்றி யாத்த தெண்கண் மாக்கிணை
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்
கோலின் எறிந்து காலைத் 2தோன்றிப்
3பாடுநர்க் கீத்த பல்புகழ் மூதூர்த்
தமதுசெய் வாழ்க்கையின் இனிய துண்டோ
எனை விருப் புடைய ராயினும் நினைவிலர்
4நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன்செய் தனள்இப் பேரஞர் உறுவியென்
றொருநாள் கூறிற்றும் இலரே விரிநீர்
வையக வரையள விறந்து
எவ்வ நோய்பிறி துயவுத்துணை யின்றே

இது, பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.

உரை
வடுவின்று யாத்த தெண்கண் மாக்கிணை - குற்றமின்றாக வாரால் கட்டப்பட்ட தெளிந்த கண்ணையுடைய கிணைப் பறையை: கோலின் எறிந்து - கோலால் எறிந்து: மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப - வாயிடத்தே மடித்துப் போர்த்த தோலால் அமைந்த தண்ணுமை இடையிடை முழங்க இசைத்துக்கொண்டு; காலைத் தோன்றிப் பாடுநர்க்கு ஈத்த-நாட்காலையில் துயிலெடைநிலை பாடி வரும் கிணைப் பொருநர்க்கு வேண்டுவ கொடுத்தலாற் பிறக்கும்; பல்புகழ் மூதூர் - பலவாகிய புகழ்பெற்ற பழமையான ஊரின்கண் இருந்து: தமதுசெய் வாழ்க்கையின் இனியது உண்டோ - தமக்கு உரியது செய்து வாழும் இல்வாழ்க்கையினும் இன்பம் தருவது பிறிது உண்டோ, இல்லையன்றே: எனை விருப்புடைய ராயினும் - நம்பால் எத்துணையன்பு உடையராக இருப்பினும்; நினைவு இலர் - இப்போது காதலர் நம்மை நினைப்பது இலராயினர்; நேர்ந்த நெஞ்சும் - அவர் பிரிந்து சேறற்கு உடன்பட்ட என் நெஞ்சமும்; நெகிழ்ந்த தோளும் - அதனால் மெலிவுற்ற தோளும்; வாடிய வரியும் நோக்கி - வாடியதனால் மேனி திரங்கித் தோன்றும் வரிகளையும் பார்த்து; நீடாது - பொழுது நீட்டியாது: இப்பேரஞர் உறுவி எவன் செய்தனள் என்று - பெருந்துன்ப மெய்தி வருத்தும் இவள் என்ன காரியத்தைச் செய்துவிட்டாள் என்று: ஒருநாள் கூறிற்றும் இலர் - ஒருநாளேனும் வந்து. உரையாடுகின்றார் இல்லை; விரிநீர் வையக வரைஅளவு இறந்த எவ்வநோய் பிறிது - விரிந்த கடல் சூழ்ந்த நிலவுலகின் எல்லையினும் பெரிதாய் துன்பத்தைச் செய்வதாகிய நோய் வேறு வருத்தாநிற்கும்; உயவுத்துணை இன்று - நோயறிந்து உசாவி ஆற்றுவிக்கும் துணைவரும் எனக்கு இல்லை எ-று.

மூதூர்த் தமதுசெய் வாழ்க்கையின் இனியது உண்டோ; விருப்புடைய ராயினும் நினைவிலர்; நெஞ்சும் தோளும் வரியும் நோக்கி, நீடாது, எவன் செய்தனள் பேரஞர் உறுவி என்று கூறிற்றும் இலர். எவ்வநோய் பிறிது துணை இன்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வடு குற்றம். இன்று, இன்றாக என்னும் பொருட்டு தோல்வார் கொண்டு நன்கு யாத்தவழி யன்றித் தெளிந்த ஓசையினை நல்காமை பற்றி, வடுவின்று யாத்த தெண்கண் மாக்கிணை என்றார். கிணைப்பறையின் நடுவிடத்தே அமைந்த கரிய மார்ச்சனை கண்ணெனப்படும். “வீங்குவிசிப் புதுப்போர்வை தெண்கண் மாக்கிணை1 என்பது காண்க. கிணைப்பறையைத் தடாரி என்பதும் வழக்கு. இதனை நுண்ணிய கோல்கொண்டு அறை வது முறையென்றும், அக்கோல் அக் கிணையிடத்தே கட்டப் பெற்றிருக்கும் என்றும் சான்றோர் கூறுவர்.”தெண்கண் மாக்கிணை, கண்ணகத்து யாத்த நுண்ணரிச் சிறுகோல் எறிதொறும் நுடங்கியாங்கு2" என்பதனால் அறிக. கோலால் எறிவது பற்றியே கோலின் எறிந்து என்றார். தண்ணுமை, முழவு3. முழவுக்கும் தெளிந்த ஓசையினை எழுப்பும் கண் உள்ளமையின் கிணைப்பறையின் இடையே முழக்கப்படும் என அறிக. கிணைப்பறை பெரும்பாலும் விடியற்போதில் முழக்கப்படுவதுபற்றிக் காலைத் தோன்றி என்றார். “ஒண் பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து, தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர், நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி4” என்றும் “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி”5 என்றும் சான்றோர் குறிப்பது காண்க. தாம் உழந்து பெற்றுடையது தமது; “தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று6” என்ப செய்தல், ஈதலும் இசைபெறுதலுமாம்; இல்வாழ்க்கையின் பயன், இவையும் இவற்றால் எய்தும் புகழும் இன்பமும் ஆதலின் இனியது பிறிதில்லை என்றார். வையக வரையளவு, நிலப் பரப்பு, எவ்வநோய், ‘எவ்வம்’ காரணமாகப் பிறக்கும் நோய், உயவுத்துணை, கருத்தறிந்து சொல்லாடி ஆவன உரைக்கும் நெருங்கிய நண்பர்.

பிரிவின்றி உடனுறைதலையே நயந்த தலைமகள் சொல் லெடுக்கின்றா ளாகலின்; ஈதலும், இசையும், புரியும் இல் வாழ்க்கையைச் சிறப்பித்து அவ்வழிப் பொருநர், பாணர், புலவர், முதலிய பரிசிலர்க்கு அருங்கலம் வழங்கி மகிழும் அறத்துறையை முற்பட நிறுத்தி; பாடுநர்க் கீத்த பல்புகழ் மூதூர் என்றும்; அவ்வறத்தின்கண் தாம் முயன்று செய்து தமக்கே உரிய தாகப் பெற்ற பொருளை ஈத்துப் புகழ் நிறுவு தலே இனியதும் உரியதுமாகலின்: தமது செய் வாழ்க்கை யின் இனியதும் உண்டோ என்றும் தலைவி கூறுகின்றாள். பாடுநருள், வைகறைப் போதில் பாடி வருபவன் கிணைப் பொருந னாகலின், அவனையே விதந்து தெண்கண் மாக் கிணை கோலின் எறிந்து காலைத் தோன்றிப் பாடுநர் என்றாள். தன்னொடு பிரிவின்றிக் கூடி இல்லிருந்து செய்யும் அற வாழ்க்கையினும் பிரிந்து சென்று செய்யும் பொருள் வினை சிறப்பில என்பது உய்த்துணர வைத்து, அவற்றையே விரும்புகின்றான் தன் காதலன் எனத் தலைவி மொழிந்த காலத்துத் தோழி, அவளை மறுத்து நின்பாற் பெருங்காதலன் என்று வற்புறுத்தினாளாக, அதற்குத் தலைவி எதிராக மனம் அழிந்து உரைப்பாள்: எனை விருப்புடைய ராயினும் நினைவிலர் என்றும், மறவா நினைவின ராயின் நெஞ்சும் தோளும் முதலாயின நோக்கி நீடாது வந்திருப்பர்; அது செய்திலர்காண் என் பாளாய், நீடாது இப் பேரஞர் உறுவி எவன் செய்தனள் என்று ஒரு நாள் கூறிற்றும் இலரே என்றும், பொருள்வினைகள் இல்வாழ்க்கைக்கு இனியவை யாதலின் அவற்றின் பொருட்டு நிகழும் பிரிவினை ஆற்றி இருத்தலே மனையுறை மகளிர்க்கு மாண்பு என வற்புறுத்திய தோழியை மறுத்து எதிரழிந்து, இருத்தற்குரிய வலியினை அழித்து எவ்வநோய் மிக்கு நிற்கிறது என்பாள். விரிநீர் வையக வரையளவு இறந்து எவ்வநோய் பிறிது என்றாள், வையக வரைப்பில் ஆற்றியிருத்தற்குரிய வலியினும் எவ்வ நோய் அவ்வரையளவை இறந்து பெருகியிருத்தலின் அதனை அடக்கிச் சுருக்கி ஆற்றுதற் கேற்ற அளவுக்குள் நிறுத்தற்கு வேண்டிய அறிவுத் துணையும் இல்லை எனத் தோழியை வேறுபட நீக்கி, உயவுத்துணை இன்றும் என்றும் கூறினாள். விரிநீர் வையக வரையளவு என்றது. குறிப்பால் உயிரோடு வாழும் எல்லையையும், பிறிது என்றது இறந்துபாடு பயக்கும் அளவையும் சுட்டி நின்றன. “தோளும் அழியும் நாளும் சென்றன. நீளிடை யத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தவ்வின என்னீத்து, அறிவு மயங்கிப் பிறிதாகின்றே, நோயும் பேரும் மாலையும் வந்தன்று யாங்காகுவென்கொல் யானே1 என்று பிறாண்டும் தலைவி கூறுமாறு காண்க. இதனால், நெஞ்சில் மிக்கு நிற்கும் துயர் குறைந்து மனவமைதி எய்துவிப்பது பயன்.

உலோச்சனார்


களவின் வழித்தாகிய கடிமணம் புரிந்து கொண்டு மனை யறம் மேற் கொண்ட சின்னாட் கெல்லாம், தலைவியின் புது மனைக்குத் தோழி விருந்தென வந்தாள். அவளது வருகை கண்ட தலைமகன், அவளை அன்புடன் வரவேற்றுத் தன் உள்ளத்து எழுந்த நன்றியுணர்வினால், அவளை நோக்கி, “வரைபொருள் குறித்து யான் பிரிந்து ஒழுகிய காலத்தில் ஆற்றத் தகுவன கூறி இவளை நன்கு பேணி வந்தனை யாகலின், நீயே பெரியை” என்று பாராட்டிக் கூறுவா னாயினன். அது கேட்ட தோழி சிறிது நாணி," பெரும, களவுக் காலத்தே நின்னை யின்றி யாம் விளை யாடுதற் குரிய தொழிலும், நின்னையின்றித் தனித்து இனிது உறைதற் கேற்ற பொழிலிடமும், மீளவும் நினைத்தற் காகாது பிணக்குற்ற நெஞ்சமும் வேறே உடையேமல்லேம்; எப்பொழுதும் எவ்விடத்தும் நின்னையே நெஞ்சிற் கொண்டிருந்தமையின், ஆற்றுவது எமக்குப் பெரி தன்று காண்; மற்று எம்மின் நீங்கி நீ சென்ற விடத்து இடமும், செய்கையும், துணையும், பிறவும் எம் தோள் நெகிழ்ந்து வருந்துமாறு எம்மை மறந்துறைதற்கு ஏற்ப அமைந்திருக்கவும், அச்சூழ்நிலையால் உள்ளம் திரியாது எம்மை மறப்பின்றிப் பேணிச் சிறப்பித்தமையின் நீயே பெரியை" என மொழிந்தாள்.

தோழியது இம் மொழியின்கண், தலைமகள்பால் உரிமை யும், தலை மகன்பால் பரத்தைமையும் அமைதற்கேற்ற சூழ்நிலை இயல்பாகவே அமைந்திருக்கும் சிறப்பும், அதற்கு மாறாகத் தலைமகன்பால் விளங்கித் தோன்றும் உரிமையை எடுத்துரைக்கும் மாண்பும் கண்ட உலோச்சனார், அதனை இப்பாட்டின்கண் நிறுவிப் பாடுகின்றார். உரிமை என்றது தலைமக்கள்பால் ஒருவர் ஒருவரின் கண் நினைவு ஒன்றியிருக்கும் நேரிய மன நிலைமை; பரத்தைமை என்றது. தலைமகனது காதலுள்ளம் தலைமகள்பாலே ஒன்றி நில்லாது பரந்து பிறர் பாலும், பிற பொருள்களின் பாலும் படரும் பான்மை.

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா 1ஊடிய நெஞ்சமும்
2உடையமோ மற்றே உயர்மணற் சேர்ப்ப
3திரங்கு முதிர் அரைய தடந்தாள் தாழைச்
சுறவுமருப் பன்ன முட்டோ டொசிய
இறவார் இனக்குரு கிறைகொள இருக்கும்
நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன்
கட்கமழ் பொறையா றன்னஎன்
நற்றோள் நெகிழமன் துறத்தல்4 நுமக்கே

இது, மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன் வேறுபடாமை ஆற்றுவித்தாய், பெரியை காண் என்றாற்குத்தோழி சொல்லியது.

உரை
ஆடிய தொழிலும் - தனித்து நின்று ஆடுதற்குரிய விளை யாட்டுத் தொழிலும்; அல்கிய பொழிலும் - நின்னை யின்றித் தனித்துறைதற் குரிய பொழிலிடமும்; உள்ள லாகா ஊடிய நெஞ்சமும் - நினைத்தலைச் செய்யாது பிணங்கும் நெஞ்சமும்; மற்று உடையமோ - வேறே உடையேமல்லேம்; உயர் மணல் சேர்ப்ப - உயர்ந்த மணல் பரந்த கடல் நிலத் தலைவனே; திரங்கு முதிர்அரைய தடந்தாள் தாழை - திரைத்து முதிர்ந்த அடியையும் வளைந்த தாளையுமுடைய தாழை மரத்தின்; சுறவு மருப்பன்ன முள்தோடு ஒசிய - சுறாமீனின் மருப்புப் போல் முள் பொருந்திய மடல் சாய; இறவார் இனக்குருகு இறை கொள இருக்கும் - இறா மீனாகிய இரையை யுண்ட குருகுகளின் கூட்டம் இனிது தங்கி யிருக்கும்; நறவு மகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் - நறவுண்டு மகிழும் ஊரை யுடைய நற்றேர்ப் பெரியன் என்பானுக் குரிய; கள் கமழ் பொறையாறு அன்ன - தேன் மணக்கும் பொறையாறு என்னும் ஊரைப் போன்ற; என் நற்றோள் நெகிழத் துறத்தல் மன் நுமக்கு - என் தலைவியின் நல்ல தோள் மெலியத் துறப்பது நினக்கு அமைந்து கிடந்ததாயினும் அதனைச் செய்யாது பேணிக் கொண்டமையின் நீயே பெரியை, காண் எ-று.

சேர்ப்ப, தொழிலும், பொழிலும், நெஞ்சமும், நின்னை யின்றி மற்று உடையமோ? உடையேமல்லேம்; என் நற்றோள் துறத்தல் நுமக்கு அமைந்து கிடந்தது மன் என எஞ்சிய சொற்களைப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. இளை யோர்க்கு விளையாட்டல்லது வேறு தொழில் இன்மையின், அதனைத் தொழில் என்றார். விளையாட்டே வினையாம் ஆதலின், அது, தொழில் எனப்படுமென அறிக. உள்ளல், மறந்தது நினைத்தல் “உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள்1” என்று சான்றோர் உரைக்குமாறு அறிக. நெஞ்சிற்கு ஊடுதல், ஈண்டுத் துனியால் மறத்தல், மேற்று, மற்று, வினை மாற்று, வேரை ஒட்டிய பகுதி தாள் எனவும், அதற்கு மேலுள்ள பகுதி அரை எனவும் வேறுபடுத் துணர்க. தட, வளைவு; “தடவென் கிளவி கோட்டமும் செய்யும்2” என்பது தொல்காப்பியம். சுறா, சுறவு எனவும், இறா, இறவு எனவும் வந்தன; “குறியதன் இறுதிச் சினைகெட உகரம், அறிய வருதல் செய்யுளுள் உரித்தே3” என்பது காண்க. தோடு, மடல், இறை கொளல், தங்குதல், நல்ல பல தேர்களை யுடைமைபற்றிப் பெரியனை நற்றேர்ப் பெரியன் என்றார். பொறையாறு, சோழநாட்டுக் கடற்கரை யூர்களுள் ஒன்று; இது புறந்தை என மருவி வழங்குதலும் உண்டு. “பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப், புன்னையங் கானற் புறந்தை4” எனப் பிறாண்டும் இவரே கூறுதல் காண்க. துறத்தல் மன் என்புழி அமைந்தது என்றொரு சொற்பெய்து துறத்தல் அமைந்தது மன் என உரைக்க, துறத்தல், ஈண்டு உள்ளத்தே நினையா தொழி தலைக் குறித்து நிற்றலின் மறத்தற் காயிற்று. துறத்தல் அமைந்த தாயினும் துறவாது பேணிச் சிறப்பித்தனை யாகலின் நீயே பெரியை காண் என்பது ஒழிந்து நின்ற மையின், ‘மன்’ ஒழியிசை.

தலைமகள் மணமனை புகுந்த அணிமைக்கண்ணே இச் சொல்லாட்டு நிகழ்கின்றமையால், கடிமணத்துக்கு முன்னர் நிகழ்ந்த களவின் கண் தலைவி தலைவனொடு கூடி ஆடிய விளையாட்டினை நினைப்பித்துத் தோழி ஆடிய தொழில் என்றாள். களவின்கண் காதலொழுக்கத்தை வளர்த்தற்கு விளையாட்டு வகைகள் சீரிய தொழிலாய்ப் பயன் விளை வித்தலின், விளையாட் டென்னாது தொழில் என்று அவை குறிக்கப்படுகின்றன, விளையாட்டுக் குறித்தும், தலைப்பாடு குறித்தும். பகற்குறிக் கண் பெறலாகும் கூட்டம் கருதியும் தலைமக்கள் ஒருவர் ஒருவரை எதிர் நோக்கி யிருந்த இட மாகலின், அதனை, அல்கிய பொழில் என்று தோழி கூறினாள், மறத்தலும், உள்ளுதலும் இன்றி இடங்கழி காதலால் தலைவியது நெஞ்சின்கண் தலைவன் நினைவே இடையறாது நிலவிய செய்தியை நினைப்பிப்பாளாய், உள்ள லாகா ஊடிய நெஞ்சம் எனத் தோழி உரைத்தாள். விளை யாட்டும், பொழிலிருப்பும் தலைவனை யின்றி நிகழ்தல் இன்மையின், தொழிலும், பொழிலும், நெஞ்சமும் நின்னை யின்றி வேறே உடையே மல்லே மாகலின், ஒருவழித் தணத் தலும் வரை பொருட் பிரிவும் நிகழ்த்திய போழ்து யாம் ஆற்றியிருத்தல் எளிதாயிற் றாகலான். எம்பாடு பெருமை யில்லை என்றற்கு, உடையமோ மற்றே என்றாள். நீ பெரியை காண் எனத் தலைமகன் உரைத்த பாராட்டை நேரே மறுத்தல் அடித் தோழிக்கு அறமன்மையின் எம்பாடு பெருமை யில்லை என்பதை உய்த்துணர வைத்துக் கூறினாள். இவ்வண் ணமே, பெருமை தலைமகன் பாலே உளதென்பதனையும் நுமக்கு என் நற்றோள் நெகிழத் துறத்தல் மன் என்ற எஞ்சு பொருட் கிளவியால் எய்துமாறு இசைத்தாள். தலைவி தோளைத் தோழி என் தோள் என்றது. “ஒன்றித் தோன்றும் தோழி மேன1” என்பதனால் அமையும்.

கழிக்கண் இறாமீனை வயிறார உண்ட குருகுகள் தாழைமிசை இனஞ்சூழ இறைகொள இருக்கும் என்றது என் தோழியாகிய தலை மகளின் நலன்களை நனி நுகர்ந்த நீ நின் சுற்றம் பரவ அவளது நெஞ்சின்கண் நிறைந்து வீற்றிருக் கின்றாய் எனத் தோழி இனிதுகிளவி யால் உள்ளுறுத்துப் பாராட்டிய வாறு.

பெருங்கண்ணனார்


பெருங்கண்ணனார் என்ற பெயருடைய சான்றோர் சிலர், மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் எனவும், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் எனவும் பண்டை நாளில் உள்ளமையின், அவரின் முற்பட இவர் சிறப்புப்பெயர் இன்றி வெறிதே பெருங்கண்ணனார் என்று குறிக்கப் பெறுகின்றார். இவரது ஊரும் பிறவும் தெரியவில்லை. இவர்பாடியவாகச் சில பாட்டுக்கள் ஏனைத் தொகைநூல்களிலும் உண்டு.

காதலன்பு கொண்ட தலைமக்கள், களவொழுக்கினை மேற்கொண்டு தமது கருத்திடை முளைத்தெழுந்த காதற் பைங் கூழை வளர்த்து வருகையில், பகற்குறிக்கண் தம்மிற்றாம் தனித்துக் கண்டு இன்புற்றதனால் இரவினும் குறியிடம் வரைந்து கூடி ஒழுகினர். அந்நிலையில் தலைவியது செல்வமனைக்கண் காவல் மிகுவதாயிற்று; அவளுடைய மேனியில் தோன்றிய கதிர்ப்பு அக்காப்புமிகுதிக்கு ஏதுவாய்க் களவுநெறிக்கு இடையூறாக இலங்கிற்று. அதனைத் தலைவி கண்டாளாக, அவள் உள்ளத்தில் கவலையும் கையாறும் நிறைந்தன. காதலனைக் காண்டல் கூடாது போலும் என எழுந்த வருத்தத்தால் அவளுக்கு ஆற்றாமை தோன்றி அலைக்கலுற்றது. அதனை விரைந்து உணர்ந்த தோழி, தலைவியை ஆற்றுவித்தற்கு ஒரு சூழ்ச்சி கண்டாள். தலைமகட்கு உயிர்த் துணையாகிய தான் காப்புமிகுதி கண்டு ஆற்றாமை மிக்குற்றவள் போல முந்துற்றுத் தலைமகட்குச் சொல்லுவாளாய். “தோழி, இன்றுகாண்; ஊரவர் அனைவரும் இனிது உறங்கு கின்றனர்; நமது ஒழுக்கத்துக்கு இடையூறு செய்வார் ஒருவரும் இல்லை; காற்றும் மழையும் கலந்து பெய்தலால் குளிரால் நடுங்கி நாய்களும் வாயடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனம் என எண்ணி இன்புற்றேனாக, நம் படுக்கையறையின் பக்கமெல்லாம் செறிந்த காப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன்மேலும், நடுவியாமத்துக் காவலர் போந்து காப்புடை வாயிலை நன்கு போற்றுமின் என்பது போலத் தம்முடைய மணியை ஒலியாநிற்பர்; ஆகவே, யாம் குறியிடம் சென்று தலைமகனது தலையளி பெறுதல் அரிது போலும் என நினைக்கும் போது என் நெஞ்சம் ஆற்றாது மெலிகின்றது; ஆதலால், யான் இனி இறந்துபடும் நாள் இன்று போலும், யான் என் செய்வேன்” எனக் கண்கலுழ்ந்து கூறு வாளாயினாள். அதனைக் காணப்பொறாத தலைவி அவளது கண்ணீரைத் துடைத்து, “நீ இனிக் கவலற்க; இன்று நாம் தலைவரது கூட்டம் பெறேமாயினும் ஆற்றியிருப்பேன்”என ஆற்றுவித்தாள்.

இக்கூற்றின் கண், காப்பு மிகுதியால் இரவுக் குறிக்கண் கூட்டம் பெறாதொழிவது பற்றித் தலைவி எய்தக் கடவ ஆற்றாமையைத் தான் ஏறட்டுக் கொண்டு தோழி தலைமகளை ஆற்றுவிக்கும் சூழ்ச்சியும், மதிநுட்பமும் வெளிப்பட விளங்குவது பெருங்கண்ணனாரது புலமையைப் பணிகொள்ளவும், இப் பாட்டுத் தோன்றுவதாயிற்று.

பேரூர் துஞ்சும் யாரும் இல்லைத்
திருந்திறை1ச் சுறவ நீர்கான் றோய்யெனப்
பெருந்தெரு2 உரைஇய பெயலுறு தண்வளி
போர்ப்பமை3 கதவப் புரைதொறும் தூவக்
கூரெயிற் றெகினம் நடுங்கும் நன்னகர்
பயில்படை4 நிவந்த பல்பூஞ் சேக்கை
அயலும் மாண்சிறை யதுவே அதன்றலைக்
காப்புடை வாயில் போற்றோ என்னும்
யாமங் கொள்பவர் நெடுநா ஒண்மணி5
ஒன்றெறி பாணியின் இரட்டும்
இன்றுகொல் அளியேன்6 பொன்றும் நாளே.

இது, காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

உரை
பேரூர் துஞ்சும் - பெரிய மனைகளையுடைய ஊரவரும் உறங்குகின்றனர்; யாரும் இல்லை - நமது ஒழுக்கத்துக்கு இடையூறு செய்வாரும் ஒருவரும் இல்லை; திருந்து இறைச் சுறவம் நீர்கான்று - திருந்திய மனைக்கூரையின் மேல் சுறா மீனின் வாய்போல் செய்தமைத்த தூம்பு நீரைச் சொரிதலால்; ஒய்யென பெருந்தெரு உரைஇய பெயலுறு தண்வளி - விரைந்து பெரிய தெருவின்கண் நீர்பரந்து ஓடுமாறு பெய்த மழையொடு கலந்து வீசும் குளிர்காற்று; போர்ப்பு அமை கதவப் புரைதொறும் தூவ - ஒன்றோடொன்று பொருந்த நிறுத்திய இரட்டைக் கதவுகளின் பொருத்துவாய் வழியாக நீரைத் தூவுதலால்;கூரெயிற்று எகினம் நடுங்கும் - கூரிய புற்களை யுடைய நாய்களும் குளிர்மிக்கு உடல்நடுங்க ஒடுங்கிக் கிடக்கின்றன; நன்னகர் பயில்படை நிவந்த பல்பூஞ் சேக்கை அயலும் - நல்ல மனையின்கண் நன்கு கிடந்து உறங்குமாறு பண்படுத்தப்பட்டு உயர்ந்த பலவாகிய பூக்கள் பரப்பிய படுக்கை அமைந்த அறையின் அயலிடமும்; மாண் சிறையது -பெரிய காப்புடையதாக உளது; அதன்றலை - அதன்மேலும்; காப்புடைய வாயில் போற்று ஓ என்னும் - காத்தற் கமைந்த வாயிற் கதவுகளை நன்கு தாழிட்டுக் காத்துக் கொள்வீராமின் என்று இயம்புவது போல; யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி - நடுவியாமத்தில் போந்து காவல்புரியும் ஊர்க் காவலர் ஒலித்துவரும் நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியும்; ஒன்றெறி பாணியின் இரட்டும் - ஒற்றுமைப்பட இசைக்கும் தாளம் போல ஓசை செய்கின்றது; அளியேன் பொன்றும்நாள் இன்றுகொல் - இந்நிலையில் தலைவர் வாராராகலின் ஆற்றாமையால் அளிக்கத்தக்க யான் இறக்கும் நாள் இன்றுபோலும் எ-று.

ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; வளி தூவ, எகினம் நடுங்கும்; சேக்கை அயலும்; மாண் சிறையது; யாமம் கொள்பவர் ஒண்மணி பாணியின் இரட்டும்; அளியேன் பொன்றும் நாள் இன்று போலும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க. இறை, கூரை, சுறவின் வாய்போல் அமைந்தமை பற்றித் தூம்பு சுறவம் எனப்பட்டது. பொருத்துதல் போர்ப்பு எனப்பட்டது. உயரிய மரத்தால் நல்ல வேலைப்பாடமைந்த கதவுகள் மாசுராதவாறு மெல்லிய துகிலால் போர்த்தப் படுவது பற்றிப் போர்ப்பமை கதவம் என்றார் என்றுமாம். புரை, பொருத்து வாய் எகினம், நாய், “மேழகத் தகரொடு எகினம் கொட்கும்1” என்பர் பிறரும். சேக்கை, ஈண்டு ஆகுபெயராய்ச் சேக்கையிருக்கும் அறையைக் குறிக்கின்றது. சிறை, காவல், போற்றுமினோ என நீட்டிக் கூவுவோர், போற்றோ எனச் சிதைத்தனர், யாமந்தோறும் காவலர் முறையே மாறுவராதலால், நடுவியாமத்தே போந்து காவல் மேற்கொள்வோரை யாமம் கொள்பவர் என்றார். யாமந் தோறும் கழிவும் தோற்றமும் சுட்டி மணியிசைக்கும் முறைமை தோன்ற இவ்வாறு கூறினார் எனினுமாம், மணியின் அள வினும், காவலர் பற்றி இரட்டுதற்கேற்ப, நீண்ட நாவுடைமை பற்றி நெடுநா என்றார், பாணி, தாளம், இன், ஒப்புப் பொருட்டு.

பகற்குறிக்கண் தலைமகனைத் தலைப்பெய்து காதலின்பம் துய்த்தொழுகும், தலைமகள் இரவுக்குறிக்கண்ணும் அதனை எய்துவது விழைந்து அவனது வரவுநோக்கி உறங்காது விழித் திருக்கின்றா ளாதலால், ஊரவர் உறங்குவது உவகை தருதலின், பேரூர் துஞ்சும் என்றும், அதனால் மக்கள் வழக்கம் இன்றாதல் உணர்ந்து யாரும் இல்லை என்றும் எடுத்து மொழிந்தாள் தோழி. இரவுக் குறிக்கண் வரும் தலைமகனைப் பிறர் அறியாவகையில் தனது பெருமையால் நிழல் செய்து மறைத்துக் களவுநெறிக்குத் துணையாவது பற்றி ஊரவர் மனைகளைப் பேரூர் எனச் சிறப்பித்தாள் எனவும், அலர் கூறும் பெண்டிரும் அருங்கடிக் காவலரும் ஒடுங்கி இருக்குமாறு தோன்ற, யாரும் இல்லை என்றாள் எனவும் கொள்க. யாரும் இலரானதற்கு ஏது இது வென்பாள். காற்றுக் கலந்து வீசப் பெய்யும் மழையை விதந்து, திருந்திறைச் சுறவம் நீர்கான்று ஓய்யெனப் பெருந்தெரு உரைஇய பெயல்உறு தண்வளி என்றாள். மனையகத்தே உறைபவர்க்குப் புறத்தே பெய்யும் மழையளவினை, சுறவுவாய்த் தூம்பின்கண் ஒழுகும் நீரின் அளவு நன்கு காட்டுமாகலின், அதனைத் திருந்திறைச் சுறவம் என்றும், அதன் வாயினின்று ஒழுகும் சுறவம் வாய் திறந்து காலுவது போறலின், நீர்கான்று என்றும், பெரு மனைகள் இருபுறமும் நிற்ப, இடையே அகன்று கிடக்கும் தெருவின்கண் பரந்து செல்லும் நீரின் தோற்றம், இருமருங்கும் குன்றும் மலையும் நிற்ப இடையே நீர்நிறைந்தோடும் அகன்ற யாறுபோலத் தோன்றும் குறிப்பு விளங்கப் பெருந்தெரு உரைஇய பெயல் என்றும், பெயலிடையே பெருங்காற்று மோதி அலைப்பது தலைவன் வரவுக்கு இடையீடாதலின் அக்குறிப்பும் தோன்ற, பெயலுறு தண்வளி போர்ப்பமை கதவப் புரைதொறும் தூவ என்றும் தோழி கூறினாள். வெள்ளிடை இயங்குவாரை வருத்துவதோடு அமையாது, பெருமனைக்குள்ளே உறைபவரையும் தண்வளி கதவப் புரை வழியாக நீர்த்திவலைகளைத் தூவிக் குளிரால் வருத்தா நிற்கும் என்பது விளங்கக் கதவப் புரைதொறும் தூவ என்றாள், இரவின்கண் விழித்திருந்து காவல்புரியும் நாய்கள், இருள் நிறமுடைய நிழல் அசையினும் குரைத்துக் காட்டும் இயல்பின வாயினும், அவை குளிரால் நடுக்குற்று வாயடங்கி இரவுக் குறித்து இடையூறாகா தொழிந்தன என்றற்குக் கூரெயிற்று எகினம் நடுங்கும் என்றும், எனினும், இரவின்கண் வருந் தலைமகற்கு இடையூறாகச் சிறைப்புறம் மிக்க காவல் உடைத் தாயிற் றென்பாள், அயலும் மாண்சிறையதுவே என்றும், சிறைகாக்கும் காப்போடு யாமம் கொள்பவர் வரவு பெருங் காவலாய் முடிந்தமையின் அதன்றலை யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி இரட்டும் என்றும் கூறினாள். இவ் வாற்றால் தலைமகன் வருதல் அரிது என்பதும், வரினும் காப்புமிகுதியும், காவலர் இயக்கமும், காப்புடை வாயில் போற்றோ என்னும் முழக்கமும், மணியொலியும் பேரிடை யூறாயின என்று உரைத்து, இந்நிலையில் யான் தலைமகன் தலையளி பெறாது ஆற்றே னாகலின், எனக்கு இனி இறந்து பாடல்லது உய்தி வேறு இல்லை என்பாள். இன்று கொல் அளியேன் பொன்றும் நாளே என்றாள்; அது கேட்டு உளம் கலங்கிய தலைமகள், “தோழி நீ கவலற்க, நமது நிலைமை இதுவாயின் நாம் ஆற்றியிருத்தலே சிறப்பு” என்பாளாவது பயன்.

நற்றாமனார்


நல்லந்துவனார், நல்லுருத்திரனார், நல்விளக்கனார், நல் வேட்டனார் என்றாற் போல, இத்தாமனார் நற்றாமனார் என்று குறிக்கப் பெறுகின்றார்1. நற்றமனார் என்ற பாடம் ஏடெழுதி னோரால் நேர்ந்த பிழை; தாமன் என்ற இயற்பெயருடையார்; திருத்தாமனார் எனச் சங்க காலத்திலும், திருநாரையூர் நாட்டுச் சிற்றடி என்னும் ஊரில் தாமன் அமலனான நமசிவாயன் என இடைக்காலத்திலும்2 இருந்திருக்கின்றனர். தோன்றிக்குடித் தலைவனான தாமான் பெயரும் இத்தாமன் என்பதன் மரூஉவே, இவரைப் பற்றி வேறு குறிப்புக்கள் கிடைத்தில.

களவின்கண் ஒழுகும் தலைமகன், தலைவியை வரைந்து கோடற் பொருட்டுப் பொருட்பிரிவுமேற் கொண்டான். பெற் றோர் ஈட்டிய பெரும்பொருள் கொண்டு தன் வாழ்க்கைத் துணையை வரைந்து கோடல் பண்டைத் தமிழர் மரபன்று; தன் வாழ்க்கைக்குரிய துணையைத் தேடிக் கொள்வது தனது உரிமையாதலைக் கண்ட பண்டைத் தமிழன், தன் துணைவியை வரைந்து கோடற்குப் பெற்றோர் முதலிய பிறர் ஈட்டிய பொருளைப் பயன் கொள்ளல் தன் மாண்புக்கு ஒத்ததன்று என்று கருதினமையின், வரைதற்பொருட்டுப் பொருள் தேடிச் சேறல் அவற்கு முறையாயிற்று. அவன் அவ்வாறு பிரிந்து சென்றவிடத்துத் தலைமகட்கு ஆற்றாமை பெரிதாகும். களவின் வழித்தாகிய கற்புநெறிக் கண் பெறப்படும் அழிவில் கூட்டத்து அயரா இன்பத்தை அவாவி நின்ற தலைவியது உள்ளம், வேட்கை மிக்கு அவளை வெதுப்புதலும், உடம்பு சுருங்கலும், உறக்க மின்மையும், நுதல் பசத்தலும், எய்திக் கையறவுப்பட்டு வருந்த லுற்றாள். அது கண்ட தோழி தலைமகனது காதல் மாண்பும் கட்டுரை வன்மையும் எடுத்துக்காட்டி, குறித்த பொழுதின் வந்து வரைந்து கொள்வராகலின், காதலர் பிரிவெண்ணிக் கலங்கஞர் கொள்வது நன்றன்று என வற்புறுத்தினாள். அதுகேட்டுத் தலை மகள் வருத்தம் சிறிது தணிந்து, “தோழி, தோள் தொடி நெகிழ்ந்தன; கண்கள் மாவடுப் போலும் மாண்பிழந்தன; நுதலும் பசலையால் ஒளிகுன்றியது என்று இவ்வூர்ப் பெண்டிர் அலர் தூற்றும் அளவிற்கு நாம் அரிய துயரம் எய்துமாறு, தலைவர் வரவு நீட்டிப் பாரல்லர் என்று நீ கூறும் அன்புடை மொழியால், இரும்புசெய் கொல்லன் தன் மட்கலத்தினின்று தெளிக்கும் நீரால் உலையிடைக் காய்ந்த இரும்பின் வெம்மை தணிதல்போல, நோயுற்று வெதும்பிய என் உடம்பும் சிறிது தணிந்தது; என் உயிர்க்கும் சிறிது பாதுகாப்பாயிற்று, காண்” என மகிழ்ந்து கூறுகின்றாள்.

தலைமகளது இக்கூற்றின்கண், தலைமகனைக் காணா விடத்தும் அவனது காதல் மிகுதியைப் பிறர் கூறக் கேட்பதே தலைமை மகளிர் எய்தும் பிரிவுநோய்க்கு மருந்தாம் என்ற உண்மை இனிது விளங்குதல் கண்ட நற்றாமனார் இப் பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

தோளே 1தொடிகொட் பானா கண்ணே
வாளீர் வடியின் வடிவிழந் தனவே
நுதலும் பசலை 2பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல்
மணியேர் ஐம்பால் மாயோட் கென்று
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற
3நாம்அருந் துயரம் செய்யலர் என்னும்
4காமறு தோழி காதலங் கிளவி
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத்தெளித்த
5கோய்மட் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற் 6கேமமாம் சிறிதே.

இது, வரைவிடை வைத்துப் பிரிவாற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.

உரை
தோள் தொடி கொட்பு ஆனா - தோள்கள் தொடி நெகிழாமற் செறியக் கோடல் அமையாவாயின; கண்வாள் ஈர்வடியின் வடிவு இழந்தன - கண்கள் வாளால் போழப்பட்ட மாவடுவின் தோற்றப் பொலிவை இழந்துவிட்டன; நுதலும் பசலை பாயின்று - நெற்றியும் பசலை பாய்ந்து ஒளி குன்றியது; சில்பொறி அணிந்த பல் காழ் திதலை அல்குல் - சிலவாய பொறியமைந்து பல மணிகள் கோத்த மேகலை யணிந்து திதலை பரந்த அல்குலையும்; மணியேர் ஐம்பால் - நீலமணி போலும் கூந்தலையும்; மாயோட்கு - மாமை நிறமுடைய இவட்கு; என்று-; வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற - வெவ்விய சொற்களைப் பேசும் ஏதில் மகளிர் அலர்கூற; நாம் அருந்துயரம் செய்யலர் என்னும் - நாம் பொறுத்தற் கரிய வருத்தத்தை எய்தச் செய்யார் என்று வற்புறுக்கும்; காமரு தோழி - அறிவால் அழகிய தோழி; காதலங் கிளவி - அன் புடைய நின் மொழி; இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த - இரும்பு கொண்டு தொழில் செய்யும் கொல்லன் வெம்மை மிக்க உலைக்களத்தே காய்ந்த இரும்பின்கண் தெளித்த; கோய் மண் சின்னீர் போல - மட்கோயின்கண் உள்ள சிலவாகிய நீர் வெம்மையைத் தணிப்பது போல; நோய் மலி நெஞ்சிற்குச் சிறிது ஏமமாம் - நோய்மிக்கு வருத்தும் நெஞ்சிற்குச் சிறிது ஆறுதல் தாராநின்றது. எ-று.

மாயோட்குத் தோள், தொடி, கொட்பானா, கண் வடியின் வடிவிழந்தன; நுதலும் பசலைபாயின்று என்று, பெண்டிர் அலர் தூற்ற, நோய்மலி நெஞ்சிற்குக் காதலர், துயரம் செய்யலர் என்னும் தோழி, நின் காதலங்கிளவி, கோய்மட் சின்னீர் போலச் சிறிது ஏமமாம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கொட்பு. கொள்கை; கொட்பு ஆனா எனவே, நெகிழ்ந்து கழன்றோடுமாறு பெறப்பட்டது. வாள், ஈண்டுச் சுரிகையாகிய கத்தி மேல் நின்றது. வடி, மாவடு; “அலங்குசினை பொதுளிய நறுவடி மா1” என்று பிறகும் வழங்குப. பாயின்று, “அணிந் தன்று2” என்றாற்போல இறந்த கால முற்றுவினைத் திரிசொல். திதலை யல்குல் என இயைக்க. பல்காழ், ஈண்டு ஆகுபெய ராய் மேகலை என்னும் அணிமேல் நின்றது. மணி, நீலமணி; “மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாரி3” என்று சான்றோர் வழங்குப. மாயோள், மாமைநிற முடையவள். பிறர்பாற் காணப்படும் நலந்தீங்குகளுள் தீங்குகளை வரைந்தெடுத்துத் தூற்றும் வாயினர் என இழித்தற்கு வெவ்வாய்ப் பெண்டிர் என்றார். இவ்வாறே “வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வையிற் கலங்கி4” என்று சான்றோர் வழங்குப. எய்தி வருந்த என்பன இசையெச்சம். தலைமகளோடு ஒத்த அழிவுநலம் பெற்ற வளாதலின் காமரு தோழி என்றார். காதலங்கிளவி, விரிக்கும் வழி விரித்தல், கோய்மட் சின்னீர் என்றதனை மாறிக்கூட்டுக. கோய், சிறுகுடம், பேரூ ரட்ட கள்ளிற் கோரிற் கோயின் தேருமா னின்னே5" என வருதல் காண்க. சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது மரபு. ஏமம் - பாதுகாவல்.

வரைவிடை வைத்துத் தலைமகன் பிரிந்து சென்றமை யின் அவன் வரவு நோக்கிக் கண்ணுறக்கம் போதிய அளவு இல்லாமை யாலும், சிறிது உறங்கிய வழியும் காதலனைப் பற்றிய நினைவால் கனவு தோன்றி வருத்தினமையாலும், தன் உடம்பில் தோன்றிய வாட்டத்தால் தோளில் செறிந்து நின்ற தொடி நெகிழ்ந்து காட்டக் கண்ட தலைமகள்; அயன்மனை மகளிர் காணின் அலர் கூறுவர் என அஞ்சியவண்ணம் இருத்தலின் தோளே தொடிகொட் பானா என்றும், அரிந்த மாவடுப் போல் பரந்து தோன்றிய கண் போதிய உறக்க மின்மையின் இதழ் சுருங்கிக் கருகிக் காட்டுதலின், கண்ணே வாளீர் வடியின் வடிவிழந்தனவே என்றும், காதலன் இல்வழி மகளிர்க்கு ஒப்பனை செய்துகோடற்கண் கருத்துச் செல்லாமையின், நுதல் ஒளியிழந்து தோன்றுவ தறிந்து நுதலே பசலை பாயின்று என்றும் தன்னுட் கருதியவள், இவை ஏதில் மகளிர்க்கு நன்கு புலனாகி அவர்கள் அலர் கூறுதற்கு ஏதுவாம் எனத் துணிந்தமையின், வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்ற என்றும் கூறினாள். தொடி நெகிழ்வும் கண் வடிவிழப்பும் நுதற்பசப்பும் அலர் கூறுவார் கூற்றாய்க் கொண்டெடுத்து மொழியப்பட்டன. ஒருத்தியின் நலனழிவு கூறுவார். அஃது எய்துதற்கு முன்னிருந்த நலனைப் புனைந்து கூறுப வாகலின். அந்நெறியே பற்றித் தன்னை வேறுபட வைத்துத் திதலைச் சில்பொறி யணிந்த பல்காழ் அல்குல் மணியேர் ஐம்பால் மாயோள் என்று கூறினாள். நலன்அழிவு கூறுவார் முன்னை நலத்தைச் சிறந்து கூறுதலை, “விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கு,” “பூவொடு புரையும் கண்ணும் வேயென, விறல்வனப் பெய்திய தோளும் பிறை யென, மதிமயக் குறூஉம் நுதலும் நன்றும் நல்லமன்1” எனச் சான்றோர் கூறுவதனால் அறிக. தொடி நெகிழ்தல் முதலிய மெய்ப்பாடுகள் தன்கண் நிகழக் கண்ட தலைமகள், இவை யிற்றை ஏதில் மகளிர் கண்டு கவ்வை தூற்றுவர் எனக் கருதிக் கையற்று வருந்திய போழ்து, தோழி, நாம் ஆற்றாமை மிக்கு மேனி வேறுபட்டு வருந்து மளவிற்குத் தலைமகன் தன் பிரிவு நீட்டித்துப் பொறுத்தற் கரிய துன்பத்தைச் செய்யான் என வற்புறுத்தினமை தோன்ற, நாம் அருந்துயரம் செய்யலர் என்னும் காதலங்கிளவி எனத் தோழி கூற்றைக் கொண் டெடுத்து மொழிந்தாள். தோழியின் வன்புறை கேட்டுத் தெளிவுற்றாள் போலச் சொல்லெடுத்து மொழிதலின், கொல்லன் வெவ்வுலைத் தெளித்த கோய்மட் சின்னீர் போல நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாம் சிறிதே என்றாள்; எனினும், அவள் உள்ளத்தே நிலவும் பிரிவுத்துன்பம் நீங்காமையைச் சிறிதே என்றதனால் குறிப்பித்தவாறு காண்க.

“மறைந்தவற் காண்டல்1” என்று தொடங்கும் நூற்பாவில் வரும் “கூறிய வாயில் கொள்ளாக் காலையும்” என்பதற்கு இதனைக் காட்டி, இதனுள் “தோழிகூற்றை நன்கு மதியாது கூறினாள்” என்பர் நச்சினார்க்கினியர்.

கருவூர்க் கதப்பிள்ளையார்


கதப்பிள்ளையாரது கருவூர் மேலைக்கடற்கரையில் உள்ள கருவூர்ப்பட்டினமாகும். சேரமன்னர் படைத்தலைவனான பிட்டங் கொற்றனையும், நாஞ்சில் வள்ளுவனையும் சிறப்பித்துப் பாடியிருப்பதே இவர் மேலைக் கடற்கரை நாட்டவர் என்பதை வற்புறுத்துகிறது. அக்கருவூர் குட்டநாட்டைச் சேர்ந்தது. இவர் பெயர் கதப்பிள்ளை யெனவும், கதப்பிள்ளை சாத்தனார் எனவும் குறிக்கப் படுவது கண்டோர், சாத்தனார் என்பது இவரது இயற்பெயர் என்றனர். பண்டைய மக்கட்பெயருள், கதவன், கதக்கண்ணன், கதப்பிள்ளை என்னும் பெயர்கள் இடைக்காலச் சோழபாண்டியர் காலத்தும் வழக்கி லிருந்தமை கல்வெட்டுக் களால் தெரிகிறது. இவர் பெயர் கதப்பிள்ளை என்றே காணப் படுதலால், கதப்பிள்ளை சாத்தனார் என்பார் இவரின் வேறாவர்; ஒருகால் அவர் இக் கதப்பிள்ளையின் மகனாகலாமே யன்றி இருவரும் ஒருவரெனக் கோடற்கு வழியில்லை. அச்சுப்பிரதியில் இதனை அடுத்து வரும் பாட்டைப் பாடியவராக அதன்மேல் இக் கதப்பிள்ளையார் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. இந் நூலாராய்ச்சிக்கு கிடைத்த ஏடுகளுள் இரண்டில் 135-ஆம் பாட்டைப் பாடியவர் தூங்கல் ஓரியார் என்று குறிக்கப்படுகிறது. ஓர் ஏட்டில் இப்பாட்டைப் பாடியவர் தூங்கலோரியார் என்று காணப்படுகிறது. இக் கலக்கங்கள் ஏடெழுதினோரால் விளைவன. ஒரு கையில் ஏடும் ஒரு கையில் எழுத்தாணியும் பிடித்து எழுத வேண்டுதலின், ஏடு படித்தற் கென ஒருவர் தனியே வேண்டப் படுவர்; இடைக்காலத்தே கூலிக்கு ஏடெழுதுவோர் உளரானமையின் இன்னோரன்ன பிழைகள் தோன்றுவவாயின. “படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்ற பழமொழி இவ்வியைபு பற்றி எழுந்ததே யாகும். இவருடைய பாட்டுக்கள் ஏனைத் தொகைநூல்களிலு முண்டு.

களவின்கண் ஒழுகிவரும் தலைமகள், பகற்குறியிடத்தே அவனது தலையளியைப் பெற்றுவந்தாள். நாட்கள் சில கழிந்தன. பகற்போதில் குறியிடம் சேறற்கு இயலாதவாறு இடையீடுகள் மனையகத்தே உண்டாயின. அவற்றால் அலைப்புண்ட தலை மகள். தன்னை இனிப் பெற்றோரும் தமரும் இல்லிகவாவாறு மனையிடத்தே செறிப்பர் போலும் என நினைத்து தோழி பால் உரையாடிக் கவலலுற்றாள். அந்நிலையில் மனையகத்தே நிகழ்ந்த செய்தி யொன்று தோழிக்குத் தெரிய வந்தது. தலைவி யின் தாயும் தன்னையரும் தாம் விளைத்த தினைப்புனம் காத்தற்கு அவளைச் செலுத்துதல் வேண்டு மெனக் கூறிக்கொண்டனர். அது தலைமகட்கு ஐயத்தை எழுப்பி இற்செறிப்பு நிகழும் போலும் என எண்ணி மனம் கலங்கச் செய்தமையின், அதனைத் தாயுடன் சொல்லாடி அறிந்து வந்து, “தோழி இனிது நுகருங்கால் இனியன பல மேலும் தொடர்ந்து வரும் என்று சான்றோர் கூறுவ துண்டு; அஃது உண்மையே. நாம் நம் காதலரை இனிது பெறுதற்குக் குறித்த குறியிடமாகிய வரையகத்தே தினைப்புனத்திற் படியும் கிளிகளைக் கடிதற்குக் கொடிச்சியாகிய தலைமகள் தட்டையும் கவணும் கொண்டு புனத்திற்குச் செல்க என்ற நுந்தைசொல் கொண்டு, அன்னை என்னை நோக்கி, ’மகளே, நீவிர் புனத்திற்குச் சென்று வம்மின் என எனக்கு முத்தி கொடுத்து மொழிந்தாளாக, யான் அதனை விரும்பாதேன் போல உரையாடிப் போந்தேன், காண்” என்று தோழி யுரைத்தாள்.

தோழியினது இவ்வுரையின்கண் தலைவி மேற்கொண் டொழுகும் காதற் களவொழுக்கம் சிறப்பது குறித்துத் தோழிக் குள்ள உண்மை முயற்சியும் உயரிய துணைமையும் விளங்கித் தோன்றுவது காணும் கதப்பிள்ளையார் இப்பாட்டிடையே அவற்றை நிறுத்திப் பாடுகின்றார்.

இனிதின் இனிது1 தலைப்படும் என்பது
இதுகொல் வாழி தோழி காதலர்ப்
2பெறுகுறி செய்த3 வரையகச் சிறுதினைச்
செவ்வாய்ப் பாசினங் கடீஇயர் கொடிச்சி
அவ்வாய்த் தட்டையொடு 4கவணை கொள்கென
5ஏயினன் மன்னோ நுந்தை 6யாயும்
அம்மா மேனி7 ஆய்தொடிக் குறுமகள்
செல்லா யோநின் முள்ளெயி றுண்கென
மெல்லிய இனிய 8கூறலின்
ஒல்லேன் போல உரையா டுவலே.

இது தமர் இற்செறிப்பர் என ஆற்றாளாய தலைவியை அஃது இலர் என்பதுபடத் தோழி சொல்லியது.

உரை
இனிதின் இனிது தலைப்படும் என்பது இதுகொல் - இனிய தொன்று நுகரப்படுங்கால் இனிய ஒன்று மேலும் தொடர்ந்து தோன்றும் என்று சான்றேர் கூறுவது இது பற்றியே போலும்; தோழி-; வாழி-; காதலர்ப் பெறுகுறி செய்த-நாம் நமது காதலருடைய கூட்டம் பெறுவது கருதிக் குறித்த இடம் பொருந்திய; வரையகச் சிறுதினைச் செவ்வாய்ப் பாசினம் கடீஇயர்-மலைப்பக்கத்து வித்திய சிறுதினை கதிர் தாங்கினமையின் அவற்றைப் படிந்துண்ணும் சிவந்த வாயை யுடைய பச்சைக் கிளிகளை ஓப்புதற் பொருட்டு; கொடிச்சி அவ்வாய்த் தட்டையொடு கவணை கொள்கென ஏயினன் நுந்தை - அவ்விடத்து அத்தொழிற்குரிய தட்டை கவணை முதலிய கிளிகடி கருவிகளுடன் சென்று புனங்காவல் புரிவாளாகுக என்று நின் தந்தை ஏவினன்; யாயும்-அதுகேட்ட நின் தாயும்; அம்மா மேனி ஆய்தொடிக் குறுமகள்-அழகிய மாந்தளிர் போலும் மேனியும் ஆய்ந்தணிந்த தொடியுமுடைய இளையவளே; செல்லாயோ-செல்வாயாக; நின்முள்எயிறு உண்கு என-நின் முட்போலும் பற்களையுடைய வாயிடத்தே முத்தி கொள்வேனாக என்று; மெல்லிய இனிய கூறலின்-மெல்லிய சொற்களால் இனிமையுறக் கூறினாளாக; ஒல்லேன் போல உரையாடுவல்-உடன்படாதேன் போல யான் உரை யாடிப் போந்தேன், காண் எ-று.

இனிது தலைப்படும் என்பது இதுகொல், தோழி, வாழி, வரைய கத்து, கொடிச்சி, பாசினம் கடீஇயர் தட்டையொடு கவணை கொள் கென நுந்தை ஏயினன்; யாயும், குறுமகள் செல்லாய், எயிறுண்கு எனக் கூறலின் ஒல்லேன் போல உரையாடுவல் எனக் கூட்டிவினைமுடிவு செய்க. இனிது, இன்பநிகழ்ச்சி, ஒரு வினை நிகழுமிடத்துப் பிறிதொருவினை தோன்றித் தொடர்தல் போல, இனிய தொன்று நுகரப் படுமிடத்துப் பிறிதொன்று தோன்றித் தொடர்வது உலகியல் வாழ்க்கை நிகழ்ச்சி யாகலின், அதனைச் சான்றோர் மேல் வைத்து, இனிதின் இனிது தலைப்படும் என்பது என்றார். ‘இது’ என்னும் சுட்டு, புனங்காவல் மேற்று, செய்யுளாகலின், முற்படவந்தது. பெறுகுறி - காணப் பெறுதற்குற்ற வாய்ப்பு. மலைப்பக்குத்துச் சந்தனக் காட்டை அழித்துத் தினைக் கொல்லை அமைக்கப் பெறுவதுபற்றி; வரையகச் சிறுதினை என்றார். “சாந்தம் எறிந்து உழுத சாரற் சிறுதினை1” என்பது காண்க. பாசினம், கிளியினம், தினைக்கதிர் தாங்கிய மணி களைக் கவர வரும் கிளிக் கூட்டங்களை ஓப்புமாறு இள மகளிரைக் காவல் வைத்தல் குறிஞ்சி நிலத்தவர் இயல்பு. அச்செயற்குத் தட்டை கவண்முதலியன கருவிகளாகும். “செவ்வாய்ப் பாசினம் கவரும் இன்று அவ்வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்கென எந்தை வந் துரைத்தனனாக2” என்று பிறரும் கூறுதல் காண்க. இள மகளாதலின் கொடிச்சி என்றார்; குறிஞ்சி நிலத்து மகளுமாம். அவ்வாய், அவ்விடம், தட்டையாவது கையில் ஏந்திச் சுழற்றியவழி ஒலி செய்யுமாறு மூங்கிலாற் செய்யப் படுவதொரு கருவி. மன்னும் ஓவும் அசை, முத்தி கொள்ளு தலை எயிறுண்டல் என்பது மரபு. “இனி மடந்தை நின் கூரெயிறு உண்கென3” என்றும். “நின் முள்ளெயி றுண்கும்”4 என்றும் சான்றோர் உரைப்பது காண்க; இதனை வெறிதே உண்டல் வாய்பாட்டாற் குறிப்பதுமுண்டு. “எம் அணங்கி யோய் உண்கெனச் சிறுபுறங் கவை யினனாக5” என வரும்.

களவின்கண் தோழியிற் கூட்டம் பெற்றுத் தலைமகனைப் பகற்குறி யிடத்தே தலைப்பெய்து கூடி இன்புற்றொழுகும் தலைமகட்குத் தந்தையும் தன்னையரும் தாயும் தம்மிற் கலந்து தினைவிளைவு குறித்துச் சொல்லாடியது தன்னைக் குறித்தே அவர்கள் அது செய்கின்றனர் என்றும், தன்னை இனிப் புறத்தே செல்ல வொண்ணாத வகையில் இற்செறிப்பது அவர் சொல்லாட்டின் பயன் என்றும் வேறுபட எண்ணி அல்லலுற்று வருந்தினாளாகலின், அதுபற்றி உண்மையறிந்து போதரும் தோழி, அவள் வருத்தம் நீங்குதல் வேண்டி, இனிதின் இனிது தலைப்படும் என்பது இதுகொல் வாழி தோழி என்றாள். இற்செறித்தவழித் தலைவனைக் காண்பது அரிதாம் என்ற கவலை தலைமகள் உள்ளத்தே நிலவின மையின், அதனை முதற்கண் நீக்குவாளாய், தலைமகனது கூட்டத்தைப் பெறும் பொருட்டுப் பகற்போதில் தான் அறிந்த தோர் இடத்தைக் குறித்துரைப்பது தலைவியின் செயல்வகை யாகலின்; அதனை விதந்து காதலர்ப் பெறுகுறி செய்த வரையகம் என்றாள், ’களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும், தான் செலற்குரிய வழியாகலான1" என்பர் ஆசிரியர், தலை மகள் குறித்த குறியிடம் எதுவோ, அதுவே இனி அவள் சென்று தங்குதற்கு வாய்த்தமை பற்றித் தோழி, இனிதின் இனிது தலைப்படும் என்பது இதுகொல் என்றும், தலை மகள் குறிப்பு இவ்வகையில் இன்பம் பெருகும் நற்குறிப் பாதலைப் பாராட்டி, வாழி தோழி என்றும் கூறினாள். தினைக்கதிர் கவரும் கிள்ளையினத்தை ஓப்புவது தந்தைக்குக் கருத்தாகலின், தினைப்புனம் இருக்கும் இடம் சுட்டுதற்கு வரையகச் சிறுதினை என்றும், அங்கே சென்று உறையுமாறு ஏவுதற்குரிய காரணத்தை, செவ்வாய்ப் பாசினம் கடீஇயர் என்றும், கிளியோப்புவார்க்கு வேண்டும் கருவியாதலின், அவ்வாய்த் தட்டையோடு கவணை கொள்க என்றும், அவன் ஏவின செய்தல் அறமாகலின், ஏயினன் மன்னோ நுந்தை என்றும் கூறினாள், புனங் காவலால் தலைவி மேனி வருந்தும் எனவும், காத்தற் றொழிலுக்கு அமையாத அத் துணை இளையள் எனவும் அன்னை எண்ணி னாளாகலின், தலைவியை அம்மாமேனி ஆய்தொடிக் குறுமகள் என்றாள். தினைப் புனம் இருக்கும் வரையகம், காதலரைப் பெறுதற்கு நாம் குறித்த குறியிடம் என்பது அறியாமையால் ஆண்டுச் சென்று கிளிகடியும் தொழில் செய்தற்கு நீ விரும் பாய் போலும் எனக் கருதி நுந்தை ஏயினன்; நீவிர் சென்மின் என மென்மை சான்ற இன்சொற்களால் கூறினள் என்பாள். செல்லாயோ நின் முள்ளெயிறு உண்கு என மெல்லிய இனிய கூறினாள் எனவும், மொழிந்த தோழி கேட்ட துணையே புனங்காவற்கு உடன்படின், அஃது ஐயத்துக்கு இடனாம் என்று கருதி ஒல்லேன் போல உரையாடுவல் எனவும் தோழி கூறினாள் இதனாற் பயன் தலைமகள் ஆற்றாமை நீங்கி மகிழ்வாளாவது.

தூங்கல் ஓரியார்


தலைமக்கள் உள்ளத்தில் தோன்றி வளர்ந்த காதல், களவின் கண் தோழியிற் கூட்டம், குறிவழிச் சேறல் முதலிய நெறிகளில் சிறந்து வருங்கால் தலைமகனது அழிவில் கூட்டம் பெறுவதில் தலைமகட்கு வேட்கை பெருகுவதாயிற்று. தலைமகனோ, தலைவிபால் தோன்றிய களவுக்காதல் தன்னையின்றி அமையாத அளவு பெருகுவ தெண்ணிக் களவே விரும்பி யொழுகினான். இவ்வொழுக்கத்தை நெடிது தாழ்க்க விடாமல் விரைவில் வரைவின்கண் செலுத்த வேண்டுமென்ற கடமையைத் தோழி உணர்ந்தாள். தலைமகன் தலைவியது காதற் பெருக்கை அறியான் போலவும், தான் அதனை நன்கறிந்து தலைமகற் குணர்த்தும் தகுதி மிகவுடையாள் போலவும் நினைக்குமாறு, தோழி தலைமகன்முன் சென்று விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டுவது தனக்கு மிக்க செயலாம் என்பதை உணர்ந்தாள். ஆயினும், அவன் களவே விரும்பி யொழுகியது தலைவிபால் மேனி வேறுபாடும் ஆற் றாமையும் தோற்றுவித்தமையின். காலம் தாழ்ப்பது அவட்கும் ஆகாதாயிற்று. ஆகவே, தலைமகளை வரைந்து கோடல் வேண்டு மெனத் தலைமகனை வெளிப்படையாகக் கேட்பது முறைமை யன்றாயினும், குறிப்பால் உணர்த்துவது குற்றமாகாது எனத் தோழி உணர்ந்தாள். ஒருநாள், தலைமகன் தலைவியது பெரு மனையின் சிறைப்புறமாக வந்துநிற்பது உணர்ந்து, தலைவி யொடு சொல்லாடுவாளாய், “தோழி, நமதுஊர் சீறூ ராயினும் இங்கேயுள்ள தண்குடி வாழ்நர் தம்மை நோக்கி வரும் விருந் தினரைப் பேணித் தம்மிடமுள்ள பொருள்களைப் பாத்துண்டு வாழும் பண்புமேம்பட்டவர். கடல்திரை கொழித்த புதுமணல் பரந்த கானற்சோலைக்கண் வாலுளைப் புரவி பூட்டிய தேரின ராய் வந்த தலைவரொடு கூடி மகிழாத முன்பு, இச்சீறூர் உறை தற்கு மிகவும் இனிதாயிருந்தது; இப்போது அலர் உரைக்கும் பெரிய ஊராய் நம்மை வருத்தா நின்றது; இதற்கு என் செய்வேன்” என்று கூறுவாளாயினள்.

இக் கூற்றின்கண், வேட்கைமிகுதியால் மேனி வேறுபாடும் நுதற்பசலையும் எய்தி வருந்தும் தலைமகள் நிலைமை கண்ட அயல் மகளிர் எடுக்கும் அலருரையால் அச்சமும், அதனால் அவ்வூர் வாழ்தற்கு அமையாத இன்னாமையும் உடைய தாயிற்று எனக் குறிப்பால் தோழி யுணர்த்தும் சொன்னலத்தில் ஈடுபட்ட தூங்கல் ஓரியார் இப்பாட்டினைப் பாடுகின்றார்.

தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாவரை புதைத்த மணன்மலி முன்றில்
வரையாத் தாரம் வருவிருந் தயரும்
தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்
1இனிதுமன் அம்ம தானே பனிபடு
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும்
தார்மணிப் பொலிந்த புரவித்
தேரோர்2 தம்மொடு நகாஅ ஊங்கே3

இது, வரைவு நீட்டிப்ப அலராம் எனக் கவன்ற தோழி சிறைப் புறமாகச் சொல்லியது.

உரை
தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை - தொங்குகின்ற ஓலைகளையுடையதாய் உயர்ந்த மடல்கள் பொருந்திய பனையினது; மா அரை புதைத்த மணல்மலி முன்றில் - கரிய அடிமரப்பகுதி மறைய மூடியிருக்கும் மணல் பரந்த முற்றத் தின்கண்; வரையாத் தாரம் வருவிருந்தயரும் - வரையறை யின்றிப் பெருகிய தமது பொருளைத் தம்மை நோக்கி வரும் விருந்தினர்க்குப் பகுத்துண்டு மகிழும்; தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர் - குளிர்ந்த மனைகளில் வாழ்வோருடைய அழகிய குடிகள் நிறைந்த இச்சிறிய வூர்; இனிதுமன் - எமக்கு இனிதாய் இருந்தது, காண்; அம்ம - இதனைக் கேட்பாயாக; பனிபடு பல்சுரம் உழந்த நல்கூர் பரிய - பனியாற் குளிர்ந்த பல காடுகளைக் கடந்ததனால் வலிகுன்றிய செலவினையுடைய; முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும் - முழங்குகின்ற கடலலைகளால் ஒதுக்கப்பட்ட புதுமணற்கண் கால்கள் அழுந்துதலால் வருந்தும்; தார்மணி பொலிந்த புரவி - மாலைபோல் மணிகளாற் பொலிந்த குதிரைகளைப் பூட்டிய; தேரோர் தம்மொடு நகாஅ ஊங்கு - தேரூர்ந்து வந்த நம் தலைவருடன் கூடி மகிழ்வதற்கு முன்பெல்லாம் எ-று.

தேரோர் தம்மொடு, நகாஅ ஊங்கு, விருந்தயரும் அங்குடிச் சீறூர் இனிதுமன், இப்பொழுது அது கழிந்தது என, ஒழியிசையால் எஞ்சியதனைப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. கீழ்நோக்கித் தாழ்ந்து தொங்கும் ஓலையைத் தூங்கல் ஓலை என்றும், மடல்கள் தாழாமல் மேனோக்கி நின்றமை தோன்ற ஓங்குமடல் என்றும் குறிக்கின்றார். மா - கருமை, பனையின் அடிப்பகுதி முற்றும் மணலிற் புதைந்து மறைய நிற்பது குறித்து, மா அரை புதைத்த மணல்மலி முன்றில் என்றார். இத்துணை என அளவு காண இயலாத பொருட் பெருக்கம் வரையாத் தாரம் எனக் குறிக்கப்பட்டது. வறுமை யின் வெம்மை அறியாத குடி என்றற்குத் தண்குடி என்றார். குடிகளுட் பின்னது வீடுகளின் மேல்நின்றது. மன் - ஒழியிசை, பகலில் மிக்க வெம்மையும் இரவிற் பெரும்பனியும் உடைமை யின் பனிபடு பல்சுரம் என்றும், பாலைநிலத்து இயங்குவோர் இரவுப்போதிற் சேறல் இயல்பாகலின், பனிபடு சுரம் எனவும் கூறினார். நல்கூர்தல் - ஈண்டு வலியழிதல், பரி - செலவு, புதுமணற்பரப்பு மிகவும் மென்மையுடையதாகலின், குதிரை யின் கால்கள் நன்கு புதைந்து விடுதலால், தேரை ஈர்க்க மாட்டாது நாற்பக்கமும் திரும்பித் திரும்பிச் சுழலுவது கொண்டு கொட்கும் என்றார்.

விரைந்து வரைதலை மேற்கொள்ளாது தலைமகன் களவொழுக்கத்தை நீட்டித்தது பொறாது மெலியும் தலை மகள் பொருட்டுத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தே வந் திருப்பது உணர்ந்து அவனைக் காணாதாள் போலத் தலைவி யொடு சொல்லாடுகின்றாள். சீறூர்த் தண்குடி வாழ்நர் மனைமாட்சி யுற்றுத் தாம் ஈட்டிய பொருளால் வரு விருந்தோம்பி மாண்புறுவது காணும் யாவர்க்கும் அது மிக்க இன்பம் தந்து வந்தது என்பாள், அங்குடிச் சீறூர் இனிதுமன் அம்ம என்று பட்டாங்கு மொழிந்தாள். சீறூர்க்கண் சிறந்து தோன்றும் காட்சிகள் பல இருக்கவும், அவற்றை விடுத்துத் தண்குடி வாழ்நரது விருந்தோம்பும் திறத்தை விதந்தோதியது, தாமும் அவ்வாறு மணமுடித்து மனையறம் மேற்கொண்டு வருவிருந் தோம்பும் மாண்புபெறல் வேண்டும் என்ற விழைவைத் தலைமகற்குக் குறிப்பாய் உணர்த்தியவாறு, தலைமகனொடு கூடி மகிழ்வதற்குமுன் சீறூர் இனிதா யிருந்தது. எனவே, இப்போது அன்னதாகாது அலர் கூறி இன்னாமை செய்வதாயிற்று என்றாளாம். இனி, நெறியின்கட் புதுமணல் பரந்திருந்தமை அறியாது செலுத்தியதால், குதிரைகள் கால் புதையுண்டு மேலே செல்ல இயலாமல் வருந்தும் என்றது, தலைமகனது காதற்றொடர்பு அறியாது தலைவிபால் புதிது தோன்றிய வேறுபாடு கண்ட தாயரும் தமரும் உண்மை காணராய்க் கட்டினும் கழங்கினும் காந்த ளாகிய வெறியாட்டினும் முயன்று வருந்தாநின்றனர் எனக் குறிப்பாய்த் தோழி கூறினாளாம். ஆகவே, தலைமகன் தொடர்பு பெறுமுன் உறைதற்கு இனிதாயிருக்க இச்சீறூர், அலர் கூறி இன்னாமை செய்தவாறும், கட்டுங் கழங்கும் வெறியு மாகிய செயல்களால் மனையகம் வருத்தம் செய்த வாறும் கூறித் தோழி வரைதலை விரைந்து செய்க எனக் குறிப்பால் தலைவனை வற்புறுத்துவது பயனாயிற்று.

நத்தங் கொற்றனார்


இவர் பெயர் நற்றங் கொற்றனார் என்றும் காணப்படுகிறது, நத்தங் கொற்றனார் என்பது நத்தன் என்பார்க்கு மகனான கொற்றனார் என்று பொருள்படும். நத்தன் என்றோ நற்றன் என்றோ ஆண்மக்கள் பெயர் தாங்கியிருந்ததாக நூலுள்ளும் வழக்கினுள்ளும் இதுகாறும் காணப்படவில்லை. ஆகவே, நத்தம் என்னும் ஊரவரான கொற்றனார் என்று கொள்வது பொருத்த மாக இருக்கிறது. நத்தங் கொற்றனார் என்ற பாடமே பொருத்த மாகப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் திருத்தம் செய்தனர். நத்தம் என்று பெயர் கொண்ட ஊர்கள் பல இருத் தலின் இவரது ஊர் இன்ன நாட்டது என வரைந்து கூறற்கு இல்லை. இச்சான்றோர் நத்தம் என்னும் ஊரினராதலால் நத்தக் கொற்றனார் எனப்பட்டாராக, அவர் பெயர், பின்பு நத்தங் கொற்றனார் என்று ஆயிற்று. பண்டைத் தமிழ் மக்கள் இடையே சாத்தன். கொற்றன் என்ற இரு பெயர்களும் பெரிதும் பயின் றுள்ளன. சாத்தன் என்பது வணிகருள்ளும் கொற்றன் என்பது போர் புரிந்தொழுகும் மறவர் இடையிலும் சிறந்து தோன்றுவன. வணிகர் திரளுக்குச் சாத்து என்பதும் வெற்றிக்குக் கொற்றம் என்பதும் தூய தமிழ்ப் பெயர்கள். பகைவர் தோற்று உயி ருய்ந்து ஓட வெல்வது வெற்றி; அவர்களைக் கொன்று அழிப்பது கொற்றம். மக்கட் பெயரும் ஊர்ப்பெயரும் வடமொழியாக மாறத் தொடங்கிய பிற்காலத்தே, கொற்றன் என்பது விசயன் என மாறியதனால், அப்பெயர் இந்நாளில் வழக்கு வீழ்ந்து போயிற்று. சாத்தன் என்பது மாத்திரம் இன்றும் நாட்டுக் கோட்டை நகரத் தார் குடியில் சாத்தப்பன் என்று பயில வழங்கிவருகிறது. இச் சான்றோர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில.

தலைமக்களில், தலைவியின் உள்ளத்தில் தோன்றி வளர்ந்த காதல் நன்கு முறுகிப் பெருகுமாறு, தலைமகன், களவு நெறி யினையே விரும்பி வரைந்து கோடலைச் சிறிது நீட்டிப்பா னாயினன். நாளும் வளரும் காதற் பெருக்கால் தலைமகட்குத் தலைவனது அழிவில் கூட்டத்தின் மேற் சென்ற வேட்கை மிகுதலால் உறக்கமின்மையும் உண்டியிற் சுருக்கமும், உடல் மெலிவும் உண்டாகி அவளை வருத்தத் தொடங்கின அவளது நுதல் பசந்தது; அணிந்திருந்த கைவளைகள் உடல் மெலிவு பற்றிக் கழன்றோடுவ வாயின. தன்பால் உளதாகிய இவ்வேறுபாடு பிறர்க்குத் தெரியின் அலர் தோன்றுமே என்ற அச்சமும் அவள் உள்ளத்தை அலைப்பதாயிற்று. இதனைத் தலைமகற்கு உணர்த்தி விரையத் தன்னை வரைந்து கொள்ளுமாறு தூண்டுவதே இனித் தான் செய்தற்பாலது என்று தெளிந்த தலைவி, ஒருநாள் தலைவன் தன் மனையின் சிறைப்புறத்தே வந்து நிற்பது கண்டு தோழிக்கு உரைப்பவள் போல், அவன் செவியில் நன்கு படுமாறு தோழி, பிணியுற்றவர்க்கு அவர் விரும்புவன கொடாது வேறாகிய மருந்து கொடுப்பது மருத்துவர் அறம்; அந்த அறவோரைப் போலவே என் தந்தையும், என்கைவளை கழன்றோடுவது குறித்து யான் கவலுவது கண்டு, இனமான இறுகிய வளைகளை நல்காது அவற்றின் வேறாக வளையினும் இடை அகலம் சிறுகிய தொடியைக் கொணர்ந்து என் கையிற் செறித்து விட்டார்; அதனால், என் தோள் மெலிவுபற்றி வளை கழலினும் தொடியைக் கடந்து செல்ல இயலாமையின் என் வேறுபாடு பிறர் அறிதற்கு இல்லையாயிற்று. இப்பேருதவியைச் செய்த என் தந்தை வாழ்வாராக" என்று கூறினாள்.

இக்கூற்றின்கண், தலைமகள் தானே முற்பட்டுத் தலை மகனை வரைந்து கொள்ளுமாறு வெளிப்பட உரைத்தல் ஆகாமை பற்றிக் குறிப்பால் தோழியொடு தன் வளைபற்றியும் தொடி பற்றியும் சொல்லாடுமாற்றல் உரையாடித் தன் கருத்தை உணர்த் திய ஒட்பத்தைக் கண்ட நத்தங் கொற்றனாரது புலமையுள்ளம் பெருவியப்பில் ஆழ்ந்து இவ்வினியபாட்டை வழங்கியுள்ளது.

1திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே 2மன்னிய
மலைகெழு நாடனொடு எம்மிடைச் சிறிய
தலைப்பிரி வுண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோட்பழி மறைக்கும் உதவிப்
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே.

இது, சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது; தோழி தலைவிக்கு உரைத்ததூஉ மாம்.

உரை
திருந்து கோல் எல்வளை வேண்டி யான் அழவும் - அழகுறத் திரண்டு விளங்கும் என் கைவளை கழன்றோடுவது குறித்து யான் வருந்தி அழுதேனாக; அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது - விரைய நீக்குதற்கரிய நோயுற்றவர்க்கு அவர்கள் விரும்பியது கொடாமல்; மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல - மாறான சுவையையுடைய மருந்தினை ஆராய்ந்து கொடுத்து உதவிய மருத்துவனாகிய அறவோனைப் போல; என்னை பல வாழிய - என் தந்தை பல்லாண்டுகள் வாழ்வானாக; மன்னிய மலைகெழு நாடனொடு - நிலைபெற்ற மலை பொருந்திய நாடனாகிய தலைவனுடன்; எம்மிடை சிறிய தலைப்பிரிவுண்மை அறிவான் போல; நீப்ப நீங்காது - காதலன் நீங்கியவழித் தானும் நீங்காமலும்; வரின் வரை அமைந்து - அவன் புணரின் தன் எல்லைக்கண் நின்றும்; தோள்பழி மறைக்கும் உதவி - தோளிடத்து உண்டாகும் மெலிவு புறத்தார்க்குத் தோன்றாதே மறைத்து உதவுதலை யுடைய; போக்கில் பொலம் தொடி செறீஇயோன் - ஓட்டற்ற பொன்னாற் செய்த தொடியினைச் செறித்தான் ஆகலான் எ-று.

எல்வளை வேண்டி யான் அழவும், அறவோன் போல என்னை வாழிய, தொடி செறீஇயோன் ஆகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீப்ப நீங்காது, அமைந்து மறைக்கும் உதவிப் பொலந்தொடி போக்கில் பொலந்தொடி என இயையும். வளைவும், நெளிவும், மேடுபள்ளமு மின்றி, அழகிய திரட்சி யமையச் செய்யப்பட்டமை தோன்றத் திருந்து கோல்வளை என்றார். பிணிக்கு மருந்து அதற்கு மாறுபட்ட பொருளாதலின், பிணியுற்றோர்க்கு வேட்டது கொடாமை இயல்பு என அறிக. “பிணிக்கு மருந்து பிறமன்1” எனச் சான்றோர் உரைப்பது காண்க. உயிர் நிற்றற் குரிய உடம்புக்கு ஆக்கம் செய்தல் அறவினையும், கேடு செய்தல் தீவினையு மாகலின், ஆக்கம் தரும் மருத்துவனை அறவோன் என்றார். மருந்து தரும் நூலும் அறநூலாதலின் அந்நூல்வழி நிற்றல் பற்றி அறவோன் என்றார் எனினுமாம். குறியிடத்தே கூடிப் பிரிதலும் ஒருவழித்தணப்பும் உட்படச் சிறிய தலைப் பிரிவு என்றார். தோட்பழி தோளிடத்து உண்டாகும் மெலிவு; மெலிவு புறத்தார்க்குத் தோன்றின் அலர் விளைவித்து இற் செறிப்பு மிகுவித்துத் தலைமகனைக் கூடாவாறு துன்பம் செய்வது பற்றித் தோட்பழி யெனப்பட்டது. “வருந்துதோட் பூசல்2” “வாடுதோட் பூசல்3” என்றதும் இக்கருத்தேபற்றி என்க பொன்னுக்குக் குற்றமாவது ஓடுதலாகலின், ஓட்டற்ற நன் பொன்னைப் போக்கில் பொன் என்று சான்றோர் குறிப்பர். “போக்கில் பொலங்கலம் நிறைய4” என்பது காண்க. வளை யினும் தொடியின் குறுக்களவு சிறிது குறைந்து கைக்கண் செறிந்து கிடக்கும் என அறிக, வளை வேண்டியவட்குத் தொடி யளித்தது நோய்க்கு மருந்து கொடுப்பது போலாயிற்று என்க.

விரைய வரைந்து கோடலை நினையாது, காதலுறவு சிறப்பது குறித்துக் களவே விரும்பி யொழுகுதலால், அழிவில் கூட்டத்தின்மேற் சென்ற அவா மிக்கு மெலிவுற்ற தலை மகள், வளைகள் கழன்றோடுதற்கு ஆற்றாளாய் வருந்தினமை தோன்றத் திருந்துகோல் எல்வளை வேண்டி யான் அழவும் என்றாள். கைவளை நில்லாது கழன்றோடுவதால், உடல் மெலிவைப் பிறர் நன்கு அறியச் செய்வது பற்றி, எல் வளை எனச் சிறப்பித்தாள். எளிதின் நீங்காமைப் பற்றிப் பிணி அரும்பிணி எனப்பட்டது. பிணியுற்றோர்க்கு உண்டாகும் வேட்கை அப்பிணியது வளர்ச்சிக்கு ஏதுவாதலின், மருத்துவர் அதன் நீக்கத்துக்கு ஏதுவாய் மாறுபட்ட சுவையையுடைய பொருளையே ஆராய்ந்து கொடுப்பர். “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்7” வேண்டுதலின், மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்போல என்றாள், வளை நில்லாமையால் உளவாகும் அலரும் இற் செறிப்பும் பிறவுமாகிய இடையூறுகள் தோன்றா வண்ணம், தன் தந்தை தந்த தொடி காத்தமைப்பற்றி, என்னை வாழிய பலவே என்றாள். உண்மை உணர்ந்து இற்செறித்து வருத்த வேண்டிய தந்தை அதனைச் செய்யாமையின் வாழிய பலவே என்றாள் என்றுமாம். தலைமகனது கூட்டம் பெற்றவழிச் செறிந்தும், அவன் நீங்கியவழி நெகிழ்ந்தும், வளைகள் தலைவி எய்திய வேறுபாட்டைப் புலப்படுத்தினமை தோன்ற, நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து என்றும், வளைபோலாது கைக்கண் செறிப்புற்று. அவ்வளைகள் நெகிழ்ந்தவழியும் கழன் றோடாதவாறு தடுத்து நிறுத்து முகத்தால், தோள் மெலிவு கண்டு பிறர் அலர் கூறாவாறு காத்த சிறப்புத் தோன்றத் தோட்பழி மறைக்கும் உதவிப் போக்கில் பொலந்தொடி என்றும் கூறினாள். தொடியின் செறிப்பு இவ்வாறு பயன் படுவது நோக்குமிடத்துத் தோள் எய்தும் மெலிவும் அதற் கேதுவாகிய தலைமகன் களவொழுக்கமும் அறிந்தமை யுண்டு எனக் காட்டுதலால், நாடனொடு நம்மிடைச் சிறிய தலைப்பிரிவுண்மை அறிவான் போல என்றாள். எனவே, தமது களவுநெறி தாயர் தந்தையர்க்குப் புலனாகும் நிலையில் பெருகிப் பிறர் அலர் கூறும் அளவிற் சிறந்தமை கூறி, இது கண்டும் தலைமகன் வரைந்துகோடலை நினையா தொழுகல் நன்றன்று எனக் குறிப்பால் தலைவி வரைவு கடாயினமை காண்க. இதனாற்பயன், சிறைப்புறத்தே நின்ற தலைமகன் கேட்டுத் தலைவியது காதற்பெருக்கின் உண்மைநிலையைத் தெருண்டு வரைவானாவது.

பெருங்கண்ணனார்


மண்ணவர் அறிய மணம் புணர்ந்து மனைவாழ்வில் தோய்ந்து மனையாளொடு கூடி நுகரும் இன்பத்தில் திளைத் தாடிய தலைமகன் கடமை காரணமாகப் பிரிவு தோன்றக் கண்டு உள்ளம் பேதுறலானான்; அவன் உள்ளத்தே காதலும் கடமையும் கடும்போர் புரியலுற்றன. கடமைவழி நெஞ்சமும், காதல்வழி உணர்வும் நின்றன. நிலவுலகின் நீங்கி நெடுவானத்துக்கு அப் பாலும், அதற்கப்பாலும் மிக விரைவிற் சென்று திரும்பும் இயல்பிற்றாகிய நெஞ்சினை நோக்கி, “நெஞ்சே, நீ சேண் அகன்று சென்று வரவல்ல திண்மையுடைய என்பது ஒருதலை; அத்தகைய நீ இவ் விளையவளின் தண்ணிய நறுமணம் கமழும் கரிய கூந்தலிடத்தும், மெல்லிய தோளிடத்தும் பெறும் பேரின்பத்தைத் துறந்து இவளிற் பிரிந்து செல்லக் கருதுகின்றாய்; அதனை ஆராயுமிடத்து, நீ பிரிந்து சென்று செய்யக் கருதும் பொருள் நீ விரும்பியவாறே சென்று அதனைப் பெற்று நீடுவாழ்வாயாக; இவ்வுலகத்தில் செய்தற் கரியதொன்று என்பது தெளிவாகிறது. நீ விரும்பியவாறே சென்று அதனை பெற்று நீடுவாழ் வாயாக, இவள் ஈண்டுத் தனித் தொழிய வாரேன் காண்” என்று கூறிக் கொண்டான். அக்கூற்று ஆசிரியர் பெருங்கண்ணனாரது ஆராய்ச்சியைத் தூண்டிவிட்டது.

இதன்கண், தலைமகள்பால் தலைவன் உள்ளத்தே ஓங்கி நிற்கும் காதற்பிணிப்பு ஏனைப் பொருட்பிணிப்பினும் வலி யுடையதாய் அவனை அதன்மேற் செல்லாவாறு தடுப்பதும், அக்காதலை வென்று சென்றெய்தும் பொருள் அரியதொன்று என்பதும் இளமை யுள்ளத்தின் செயல் வகையாய் விளங்குதல் கண்டு இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடு கின்றார்.

தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்
தடமென் பணைத்தோள் மட1நல் லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை யாயின் அரியதொன்
றெய்தினை வாழிய நெஞ்சே செவ்வரை
அருவி யான்ற நீரில் நீளிடைக்
கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர்
பெருங்களிறு 2தொலைச்சிய முடத்தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க் கல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பிற் கானம்
சென்றுசேண் அகறல் 3வல்லிய நீயே

இது, தலைவன் 4செலவழுங்கியது.

உரை
தண்ணிய கமழும் தாழ்இருங் கூந்தல் - குளிர்ந்த மணம் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்; தடமென் பணைத்தோள் - பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோளையும்; மட நல்லோள் வயின் - இளமையும் அழகுமுடைய தலை மகளினின்று; பிரியச் சூழ்ந்தனை - பிரிந்து சென்று பொருள் செய்வது கருதினாய்; ஆயின் - ஆராயுமிடத்து; நெஞ்சே; அரியது ஒன்று - அஃது அருமை வாய்ந்த தொன்றே; எய்தினை வாழிய - அதனை எய்தி நீ நீடுவாழ்வாயாக; செவ்வரை அருவி ஆன்ற நீரில் நீளிடை - செவ்விய மலையினின்று விழும் அருவி வற்றினமையின் நீர்இல்லாத நீண்ட வழியின்கண்; கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர் - பெரிய தலையை உடைய இளைய பிடியானை எய்தி வருந்தும் பசியினைப் போக்குதற் பொருட்டு; பெருங்களிறு தொலைச்சிய முடத்தாள் ஓமை - பெரிய களிற்றால் வீழ்த்தப்பட்ட வளைந்த அடிமரத்தை யுடைய ஓமைமரம்; அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும் - செல்லுதற் கரிய சுரத்தைக் கடந்து செல்லும் மக்கள் தங்குதற் கெனச் சிறுநிழலைச் செய்யும்; குன்ற வைப்பின் கானம் - குன்றுகளை இடையிடையே யுடைய காடுகளை; சென்று சேண் அகறல் வல்லிய நீ - கடந்து சேய்மையிலுள்ள நாடுகட்கு மிக விரைந்து சென்று மீளவல்ல நீ எ-று.

நெஞ்சே, சென்று சேண் அகறல் வல்லிய நீ, மட நல்லோள் வயின் பிரியச் சூழ்ந்தனை; ஆயின், அஃது அரிய தொன்று; அதனை எய்தினை வாழிய; யான் இவள் ஈண்டு ஒழிய வாரேன் என எஞ்சுவன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. நெய் பெய்தும் பூச்சூடியும் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தல் என்பார். தண்ணிய கமழும் கூந்தல் என்றார். தாழ நீளுதல் கூந்தற்குச் சிறப்பு தோள் பெருத்து மென்மை பெற் றிருத்தல் பெண்கட்கு இலக்கணம் பணை, மூங்கில், மடம், இளமை, தலைமைப்பண்புகள் அனைத்தும் திரண்டு உருக் கொண்டாற் போல்பவ ளாகலின் நல்லோள் என்றார். அஃது, எஞ்சிநின்றது. அதனை என்றது அவாய்நிலை எய்தினை, முற்றெச்சம்; இனி, எய்தினை யாகுவை என உரைத்து முடித் தலும் ஒன்று. யான் வாரேன் என்றது குறிப்பெச்சம். அல்கு நிழல், குறைந்த அளவிற்றாகிய நிழல்; “ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர்நிழல்1” என வருதல் காண்க. இனி, தங்குதற் கேற்ற நிழல் என்றுமாம்; “பல்பூங் கானத் தல்கு நிழல் அசைஇ2” என வரும். வைப்பு, ஊர்களுமாம். நிலவுலக எல்லையைக் கடந்து மறுமை உலகுக்கும் சென்று மீளும் திறம் நெஞ்சுக் குண்மையின் சேண் அகறல் வல்லிய என்றார்.

பொருள் செயல் வேண்டும் கடமைவழி நின்ற நெஞ்சு முன்னும், புதுமண வின்பம் நல்கும் காதல்வழி நிற்கும் உள்ளம்3 பின்னும் நின்று ஈர்ப்ப, இடைநின்று வருந்தும் தலைமகனது ஒட்பம். உள்ளத்தை நெஞ்சின்வழி நிறுத்திக் கடமைக்கண் புகுத்தும் முயற்சியில் ஈடுபடுதலால், அவ்வுள்ளம் உவக்குமாறு, அதற்குப் பொருளாகிய தலைவியின் நலத்தை விதந்து, தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல் தடமென் பணைத்தோள் மடநல்லோள் என்று புனைந்து கூறு கின்றான். தன் கையால் தீண்டி ஒப்பனை செய்யப்பட்டு உள்ளத்தே உயர்ந்து தோன்றுதலின் முதற்கண் கூந்தலையும், வேட்டபொழுதெல்லாம் வேட்டபடி இன்பம் தந்து சிறப்பித் தமையின் பின்னர்த் தோளையும் சிறப்பித்தான். பிரிந்து சேறலை வற்புறுத்தும் கடமைப்போரை நினையாது, காதலின்பமே நினைவிக்கும் தலைவியது இளமைநலத்தை மடநல்லோள் என்று சுட்டினான். இந்நிலையிலும் கடமை யுணர்வு மெலிவுறாது பிரிந்து சேறலை வற்புறுத்துதலால் பிரியச் சூழ்ந்தனை என்று நெஞ்சுக்குக் கூறினான். அவனது அறிவின் கண் திகழும் ஒட்பம், காதலின்பத்தையும் கடமைச் சிறப்பையும் சீர்தூக்கி ஆராயப் புகுந்து, காதலின் அருமை யையும் கடமை பயக்கும் பெருமையையும் நினைந்து, கடமை நெறி மேம்படுவதை வியந்து, ஆயின் அஃது அரிய தொன்று என்று துணிந்தான். செயற்கு அரிய தொன்றினைச் செய்பவரே பெரியா ராகலின், அப்பெரியோர் பெருமைவழி நிற்கும் தலைமகன், காதல்வழி நின்று உள்ளத்தைத் தன்னோடு உடன்படுத்துவானாய் நெஞ்சினை நீக்கி நிறுத்தி என் காதலி ஈண்டொழிய நின்னொடு வாரேன், நீ சென்று அவ்வரிய தொன்றினை எய்தி நீடுவாழ்க என்பானாய் எய்தினை வாழிய என்றும், தனித்துச் சேறற்குரிய வன்மை நெஞ்சிற்கு உண்டு என்பதைச் சிறப்பித்துச் சென்று சேண் அகறல் வல்லிய நீயே என்றும் கூறினான்.

பெருங்களிறு தொலைத்த ஓமை மரம் மடப்பிடியின் பசி களைந்து அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் நல்கும் என்றதனால், நம்மால் ஈண்டுத் துறக்கப்படும் நம் காதலி, பசலை உண்ணப்பட்டு நம்மை நாடி, வரும் சுற்றத்தார்க்கு நம்மொடு கூடிச் செய்யும் நல்லுதவிப் பயன் குன்றுவள் எனத் தான் வாராது மறுத்தற்குத் தலைமகன் ஏதுக் கூறினான் எனக்கொள்க. செவ்வரை அருவி யான்ற நீரில் நீளிடை என்றும், குன்ற வைப்பின் கானம் என்றும் சுரத்தின் கொடுமை கூறியது, செலவருமையைச் சிறப்பித்தற்கு என்க. இதனாற் பயன் தலைவி கேட்டுப் பிரிவுடன் படுவாளாவது.

அம்மூவனார்


களவு நெறிக்கண் ஒழுகும் தலைமகன் வரைதலை மேற் கொள்ளாது அக்களவே விரும்பி ஒழுகுவா னாயினான். ஆயி னும், இரவுக்குறி இடையீடு படுதலால், தலைமகளைத் தலைப் பெய்து கூடும் திறம் பன்முறையும் இடையற்றுப் போகவே, தலைமகளது காதற்பெருக்கைத் தலைமகன் நெருங்கி அறிந்து கோடற்கு வாயா தாயிற்று. அவனது அழிவில் கூட்டத்தின்மேற் சென்ற அவளது ஆர்வம் நாளும் பெருகினமையின் அவட்கு ஆற்றாமையும், அது காரணமாக உடலில் மெலிவும் தோன்றின. உடம்பும், உயிரும் எத்துணை வாட்டம் எய்தினும் தலைமகனை நேரிற் கண்டு உரைத்தல் தலைமைப் பண்பின் தனியுருவாகிய தலை மகட்கு இயல்பு மன்று, இலக்கணமு மன்று, தலைமக்களது வாழ்வு அறத்தில் திரியாது சிறந்து விளங்குதல் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வேண்டுவன உதவி வரும் உயிர்த்தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு தலைமகற்குக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறி விரைவில் வரைந்து கொள்ளுமாறு தலைவனைத் தூண்டி வந்தாள். அவளது உரையினைத் தலைமகன் அன்புடன் செவி மடுத்து வந்தானாயினும், காதல் வளர்ச்சி கண்ணிய கருத்தால் அவன் கனவுக்கூட்டத்தையே விரும்பி யொழுகினான். இதற்குள், தலைவிபால் தோன்றிய வேறுபாடு கனவொடுமயங்கல், கண்டுயில் மறுத்தல், உண்டிவெறுத்தல், உடம்புநனி சுருங்கல் முதலிய செயல்களால் பிறர் இனிதறிந்து கொள்ளற்குரிய எல்லையை அடைந்தது. அயல்மனை மகளிரும் ஊரவரும் தம்முள் அலர்கூறத் தலைப்பட்டனர். அதனால் தலைமகட்கு ஆற்றாமை மிக்குற்றது. உள்ளத்தில் அலரச்சமும் உரையில் அழுகையும் தோன்றித் தலைமகளை உடற்றத் தலைப் பட்டன.

அதுகண்ட தோழி, “இனி இதனைத் தலைமகற்கு உணர்த்தி விரைந்து வரைவு மேற்கொள்ளச் செய்வ தல்லது செயல் பிறிதில்லை என எண்ணி, ஒருநாள் தலைமகன் தலைவி மனையின் சிறைப்புறமாக வந்து நிற்பது கண்டு, தலைவியொடு சொல்லாடுபவள் போலத் தலைமகன் செவி நன்கு கேட்குமளவில் நின்று கூறுவாளாய்,”முன்பு ஒருநாள் நாம் ஆயமகளிருடன் கூடி நீர்த்துறைக்கண் பாவை நிறுவி விளையாட்டயர்ந்தே மாக, அப்போது, நம் தலைவனான துறைவன் போந்து, நாம் நிறுவிய வண்டற்பாவைக்கு நெய்தல் மாலை தொடுத்துத் தந்த செய்தியை இவ்வூரவர் தம் கண்களால் நேரிற் கண்ட துண்டே யன்றி, அதனின் பின்னர் நாம் கானற் சோலைக்கண் தமித்துக் கண்டு களவு மேற்கொண்டொழுகினமை நேரிற் கண்டது இல்லை யன்றோ? அவ்வாறாக இப்பொழுது களவு நிகழ்ச்சி முழுதும் நன்கு அறிந்து இவ்வூர் அலர் கூறுதற்குக் காரணம் யாதாகலாம்? என்று சொல்லுகின்றாள்.

தோழியின் இக்கூற்றின்கண், தலைவன் தொடர்புண்டாய நிகழ்ச்சியும், அதன்வழித் தோன்றிய அலரும், அதனால் தலை மகள் எய்திய ஆற்றாமையும் விளங்கி நின்று, இனியும் வரைவு நீட்டிப்பின் ஏதம் பலவாம் என்பது காட்டிக் கேட்டு நிற்கும் தலைமகன் உள்ளத்தை வரைவின்கட் செலுத்தும் திறம் கண்ட அம்மூவனார் இப்பாட்டின் கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

உவர்விளை யுப்பின் 1குன்றுநவில் குப்பை
மலையுய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்
கணங்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண்ணழி பழம்பார் வெண்குரு கீனும்
தண்ணந் துறைவன் முன்னாள் நம்மொடு
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
2நெறித்தரு தொடலை பாவை 3தைஇய
கண்ணறி வுடைமை யல்லது நுண்வினை
4இழையணி மகளிர் விழவின் ஆடும்
முழங்குதிரை இன்சீர் 5தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

இஃது, அலராயிற்றென ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

உரை
உவர் விளை உப்பின் குன்று நவில் குப்பை - உவர் நிலத்து விளைந்த உப்பினது குன்றுபோலும் குவையினை; மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை - மலைநாடுகட்குக் கொண்டு சென்று விற்பதால் ஓரிடத்தும் நிலைபெற நில்லாத வாழ்க்கையினையுடைய; கணங்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த பண்ணழி பழம்பார் - கூட்டமாகச் செல்லும் உப்பு வணிகர் தமது பண்டி முறிந்ததனால் விட்டொழித்தமையின் கட்டுத் தளர்ந்த பழைய பார்மரத்தின்கண்; வெண்குருகு ஈனும் - வெள்ளிய கொக்கு முதலிய நீர்க்குருகுகள் கூடமைத்து முட்டையிட்டு வாழும்; தண்ணந் துறைவன் - தண்ணிய கடற்கரை நாட்டுத் தலைமகன்; முன் நாள் - முன்பு ஒருநாள்; நம்மொடு - நம்மொடு கூடி; பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் - பசிய இலைதழைத்த நெய்தற் பூவின்; நெறித்தரு தொடலை பாவை தைஇய - இதழொடித்துத் தொடுக்கப் பட்ட மாலையை வண்டற் பாவைக்குச் சூட்டிய செயல் வகை; கண்ணறிவுடைமை யல்லது - கண்ணால் நேரில் கண் டறிந்தமை யல்லது; நுண்வினை இழையணி மகளிர் விழவின் ஆடும் - நுண்ணிய தொழிற்பாடு அமைந்த இழைகளை அணிந்த மகளிர் விழா நாளில் கூடியாடும்; இன்சீர் முழங்கு திரை தூங்கும் - துணங்கைக் கூத்தின் இனிய தாளத்துக் கேற்ப முழங்குகின்ற கடலலைகள் ஒலிக்கும்; அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்று - ஆரவாரத்தையுடைய இம்மூதூர் பிறிதியாதும் அறிந்தது இல்லையே; அற்றாக, இன்று இவ்வூர் அலர் உரைத்தற்குக் காரணம் யாது? எ-று.

உமணர் ஒழித்த பழம்பார், குருகு ஈனும் துறைவன், முன்னாள் நம்மொடு கூடி, நெய்தல் நெறித்தரு தொடலை, பாவை சூட்டி விளையாடியதைக் கண்ணறிவுடைமை யல்லது, மகளிர் ஆடும் இன்சீர்க்குத் திரைதூங்கும் மூதூர் பிறிது யாதும் அறிந்தன்றோ இன்று; அற்றாக, இவ்வூரவர், இன்று அலர் உரைத்தற்குக் காரணம் யாதாகலாம் என ஏற்பன பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. உவர்மண் மிக்க களர் நிலத்தை உவர் என்றார். குப்பை, குவியல், மலை, ஆகுபெயர், நாடுதோறும் ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்வது பற்றி, நிலையா வாழ்க்கைக் கணங்கொள் உமணர் என்றார். பலராய்க் கூடிச் செல்லும் பான்மைய ராகலின், கணங்கொள் உமணர் என்று குறிக்கின்றார். பண்ணழி பாரி, பழம்பார்; இடையறா இயக்கத்தால் தளர்ந் தொழிதலால் பண்ணுதல் இழந்து பழையதாகிய பார்மரம். கடற்கரை மணற்பாங்கின்கண் வீழ்ந்து கிடக்கும் பார்மரம் கொக்கு முதலிய பறவைகள் கூடமைத்து வாழ்தற்கு இடனாதல் இயல்பு. உடல் முழுதும் வெண்ணிறம் பெறுதலின், கொக் கினத்தை வெண்குருகு என்றார். “பசுங்கால் வெண்குருகு1” என்பர் பிறரும். தண்ணந் துறைவன், அம்முச் சாரியை அல் வழிக்கண் வந்தது; “மெல்லம் புலம்ப”1 என்றாற் போல, நெய்தற்பூவின் இதழை ஒடித்துத் தொடுக்கப்படுவது பற்றி நெய்தல் நெறித்தரு தொடலை என்றார்; “நெறி செய்த நெய்தல்”2 என்று பிறரும் கூறுதல் காண்க. பாவை, வண்டற் பாவை, துணங்கை, “பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத் தொடக்கிய நடையது துணங்கையாகும்3”. இதனைச் சிங்கிக் கூத்து என்றும் கூறுப. சீர், தாள வகை அற்றாக என்பது முதலாயின குறிப்பெச்சம்.

தலைமகட்கும், தலைமகற்கும் உளதாய தொடர்பினை ஊரவர் அறிந்து அலர் கூறுகின்றனர் என்று சிறைப்புறத் தானாகிய தலைவனுக்குத் தெரிவிக்கும் கருத்தினளாதலின், அத்தொடர்பு தோன்றிய வரலாற்றைக் குறித்தற்கு நீர்த் துறைக்கண் பண்டு பாவை வைத்து விளையாடிய நிகழ்ச்சியை எடுத்துத் தண்ணந் துறைவன் முன்னாள் நம்மொடு பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல், நெறித்தரு தொடலை பாவை தைஇய என்றும், அதனை ஊரவர் அறிந்து கோடற் கேற்ப, அன்று நம்மொடு ஆயமகளிர் பலர் சூழ இருந்தனர் என்றும், நீராடுவான் வந்த பிறரும் அதனைக் கண்டனர் என்றும் குறித்தற்குத் தண்ணந் துறைவன் என்றும், பாவைக்குத் தொடலை தைஇய கண்ணறி வுடைமை என்றும் கூறினாள். அதுபற்றி இதுகாறும் அலர் கூறாத ஊரவர். இன்று கூறுதற்குக் காரணம் என்னை என ஆராய்வாளாய்த் தோழி, இடையே நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி முதலாய களவு நிகழ்ச்சிகள் ஊரவர் அறியாதன என்பாள், கண்ணறி வுடைமை யல்லது அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே என்று இயம்பினாள்.

இப்பொழுது, களவின்கண் நிகழ்ந்த மறைந்த ஒழுக்கம், ஊரவர் எடுத்து அலர் தூற்றும் அளவிற்குப் புலப்பட்டு விட்டமையின், விரைந்து வரைந்து கோடலே செயற்பாலது எனவே இதனால் சிறைப்புறத்து நின்ற தலைமகன் கேட்டுத் தெருள்வானாவது இக்கூற்றின்பயன் என வுணர்க. உமணர் ஒழித்த பழம்பாரின் பண்ணழிவு கண்டு வெண்குருகு முட்டை யிட்டு வாழும் என்றதனால், தலைமகனால் வரைவு நீட்டிக்கப் பட்ட தலைவியது மேனி வேறுபாடு கண்டு, ஊரவர் அலர் கூறுகின்றனர் என உள்ளுறுத்து உரைத்தமையின், அதனைத் தோழி வெளிப்படையாக மொழிந்திலள் என அறிக. மகளி ராடும் துணங்கை இன்சீர்க் கேற்பக் கடலலை ஒலிக்கும் என்றது. வரைவு நிகழுந்துணையும் இவ்வூர் அலருரைக்கும் என்றவாறு, எனவே, அதன் விளைவு தலை மகட்கு ஏத மாதலை யுணர்ந்து வரைந்து கொள்க என்று வற்புறுத்திய வாறு.

பெருங் கோசிகனார்


பெருங்கண்ணன், பெருந்தேவன், பெரும்பதுமன் என்றாற் போல இச்சான்றோர் பெருங்கோசிகன் எனப் பெயர் பெற்றவர். கோசிகன் என்பது கோசிகம் என்னும் துகில் வகை நெய்யும் தொழிலைச் செய்பவன் என்னும் பொருளது. தேவாங்கு என்னும் துகில்வகை நெய்வோர் தேவாங்கர் என இன்றும் வழங்கப்படுவது இதற்குப் போதிய சான்று. கோசிகரினத்து முதல்வனது சிறப்புப் பெயரான கோசிகன் என்பது பின்னர் அவன் வழிவந்தோர்க்கு இயற்பெயராய் அமைந்த போது, இச்சான்றோர் தம்முடைய பெற்றோரால் கோசிகன் எனக் குறிக்கப் பெற்றாரென உணர்தல் வேண்டும். பாபிலோனிய நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த கிசியர் நம் நாட்டு மேலைக் கடற்கரையில் கோசர் என்ற பெயராற் குடி புகுந்து, பட்டினும், பருத்தியினும் ஆடை நெய்து வாழ்ந்த போது, அவர் நெய்த துகில்வகை கோசிகம் எனப்பட்ட தாகலான், இக் கோசிகனார் கோசர் இனத்தவராகலாம் என்பர் சிலர். வேறுசிலர், கௌசிகன் என்னும் வடமொழிப் பெயர் கோசிகன் எனத் தமிழில் திரிந்தது என்பர். இச் சான்றோர் வாழ்ந்த காலத்தில் வடமொழி எழுத்து வழக்கின்றி ஒரு சில ரிடையே சங்கேத மொழியாய் நிலவினமையின், ஏனை மக்கள் வாயிலும் எழுத்திலும் பரந்து நிலவிய தமிழ் வழக்கிற் கலப்பதற்கு வாய்ப்பில்லை; “படிவ வுண்டிப் பார்ப்பன மகனே, எழுதாக் கற்பின் நின் செயல்” என்று சான்றோர் கூறுவதொன்றே வட மொழி அந்நாளில் எழுத்து வழக்கின்றி இருந்தமைக்குப் போதிய சான்றாகும். இன்று வடமொழிக்கு வழங்கும் தேவநாகரி யெழுத்து மராட்ட மொழிக்குரியவை என்பர். நாகரியின் வேறாகக் காணப்படும் கிரந்தவகை தென்னாட்டுத் தமிழி னின்றும் வடநாட்டுப் பாலியினின்றும் வேறுபிற மொழிகளி னின்றும் எடுத்துக் கொண்டனவே யன்றி வேறல்ல என்பதை இன்றைய மக்கள் நன்கு உணர்வர். மக்களுடைய அரசியல், வாணிகம், பொருளியல் முதலிய துறைகளில் பரவி நிற்கும் ஆங்கிலம் போன்ற மொழியே வேறு மொழியிற் புகுந்து திரிதற்கு இயலுமேயன்றி, மக்களது பேச்சு வழக்கிலும் அரசியல் வாணிகம் பொருளியல் முதலிய துறைகளிலும் ஒரு போதும் வழங்காமல், மிகமிகக் குறுகிய எல்லையில் நின்ற வடமொழி பிறமொழிகளின் வளர்ச்சிக்குச் சொற்கள் வழங்கிப் பரவச் செய்தது என்பது உண்மையறிவுடையோர் கொள்ளத்தக்க தன்று. ஒருசில சொற்கள் தமிழிற் கலக்க வந்தது கண்ட தொல்காப்பியனார், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ1 எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று வரையறை செய்வாராயினர். நிற்க, இக்கோசிகனார் பாடியனவாகப் பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களுட் காணப்படவில்லை.

இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்களது கற்பு வாழ்வின்கண், மணம் புணர்ந்த சின்னாட் கெல்லாம் கடமை காரணமாகத் தன் காதலியின் நீங்கிக் கார்கால வரவில் மீளுவ தாகச் சொல்லித் தலைவன் பிரிந்து சென்றான். சென்றவன் குறித்த காலவெல்லையை நோக்கித் தலைமகளும் பிரிவுத் துன்பத்தை ஆற்றித் தனக்குரிய மாண்புடைய அறங்களைச் செய்து வந்தாள். காதலனும் குறித்த கால வெல்லை பிழையாது கார் வருமுன்னே வந்து சேர்ந்தான். மனையகம் முழுதும் மங்கலமாட்சியுற்றது, ஊரவரும் நாட்டவரும் ஒருங்கே இனிது வாழ்ந்தனர். கார்காலம் வந்தது; வானமெங்கும் மழை மேகம் பரவியது. காற்றும் மிக்க குளிர்ச்சியுடன் வீசலுற்றது. பிரிந்திருந்து மீண்ட தலைமகன் பள்ளியிடத்தே இருக்கையில், நிலனும் காற்றும் குளிரப் பருவ மழை நன்கு பெய்வதாயிற்று. காதலியின் கவவுக்கை நெகிழாத கவின்கண்டு பேரின்பமுற்ற தலைமகன் கார்முகிலை நோக்கி னான்; மழை பெய்த முகில் வானளாவி நிற்கும் மலைமுகடு தோறும் தங்கிப் பரந்து இனிய காட்சி வழங்கிற்று. “முகிலே, யாழிடத்து எழும் படுமலைப் பண்போலும் இசை கலந்த மழையினை நீ உடையை; யாம் தழைத்த கூந்தலையுடைய காதலியொடு கூடி இனிது இருக்கின்றோம். இந்நல்லூர்க்கு இரவுப் போதில் நன்மழை பொழிந்து பேருதவியினைச் செய் துள்ளனை; ஆகலான், உலகிற்கு ஆணியாய்ப் பலரும் தொழுமாறு நின்ற குன்றுகளின் முகடுதோறும் விரும்பிப் பரந்து தங்குவாயாக” என்று அன்புடை நன்மொழி வழங்கி இன்புறுவானாயினன்.

அவனது இக்கூற்றின்கண், தான் பிரிந்திருந்த காலத்துத் தன் வரவு நோக்கி ஆற்றியிருந்த தலைமகளது கற்புநலத்தைக் குன்று களின் முகடுதோறும் தங்கிய மழைமுகிலின் இருப்பை வாழ்த்து முகத்தால் பாராட்டுவதும், இரவுப்பெயல் பொழிந்து தொழிற் பயன் பெறச் செய்த முகிலின் உதவியைப் பாராட்டு முகத்தால் காதலியின் கூந்தலை அணையாகப் பெற்று நுகர்ந்த இன்பத்தைச் சிறப்பிப்பது மாகிய குறிப்புக்கள் அமைந்து கிடந்தது கண்ட பெருங்கோசிகனார், அவை யனைத்தும் ஒருங்கே அமைய இப்பாட்டினைப் பாடுகின்றார். இப்பாட்டும் ஏடுகளில் சிதைந் தும் பிறழ்ந்தும் உள்ளது.

உலகிற் காணி யாகப் பலர்தொழப்
பலவயின் நிலைஇய குன்றிற் கோடுதொறும்
1மேயிணை உரைஇயரோ பெருங்கலி எழிலி
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்
பெழீஇ யன்ன உறையினை 2யாமே
வணர்ந்தொலி கூந்தல் மாஅ யோளொடு
புணர்ந்தினிது3 நுகர்ந்தனம் ஆயின் 4முழவின்
இம்மென இமிரும் சாரல் நல்லூர்
விரவுமலர் உதிர வீசி
இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே.

இது, தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது.

உரை
உலகிற்கு ஆணியாக - உலகியலாகிய தேர்க்கு அச்சாணியாய்ப் பயன்படுமாறு; பலர்தொழ - யாவரும் பரவுமாறு; பலவயின் நிலைஇய குன்றின் கோடுதொறும் - பலவிடத்தும் நிலைபெற்று நிற்கும் குன்றங்களின் முகடு தோறும்; மேயினை உரைஇயரோ - விரும்பித் தங்கிப் பரவு வாயாக; பெருங்கலி எழிலி - பெரிய முழக்கத்தையுடைய மழைமுகிலே; படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு எழீஇ யன்ன - பண்ணுக் கமைந்த நல்ல யாழினது வடித்த நரம்பை யிசைத்து படுமலைப் பண்ணை எழுப்பினாற் போன்ற; உறையினை - ஓசையினையுடைய மழையைப் பெய்யாநின்றனை; யாம் -; வணர்ந்தொலி கூந்தல் மாஅயோளொடு - நெறித்துத் தழைத்த கூந்தலையும் மாமை நிறத்தையுமுடைய இவளொடு; புணர்ந்து இனிது நுகர்ந்தமை - கூடியிருந்து பெறும் இன்பநுகர்ச்சியினைப் பெற்று மகிழ்கின்றேம்; ஆயின் - ஆகவே; முழவின் இம்மென இமிரும் சாரல் நல்லூர் - முழவு முழக்கம் போல் இம்மென முழங்கும் மலைச்சாரலை யடுத்த நல்லூர்க்கண்; விரவுமலர் உதிர வீசி - பலவகையான பூக்கள் தம்மில் விரவி யுதிருமாறு காற்று வீச; இரவுப்பெயல் பொழிந்த உதவியோய் - இராமழையைப் பெய்து இவ்வாறு அழிவில் கூட்டத்தை உதவினா யாகலான் எ-று.

பெருங்கலி எழிலி, உறையினை, யாம் நுகர்ந்தனம்; ஆயின், நல்லூர்க்கண் மலர் உதிர வீசி, இரவுப் பெயல் பொழிந்த உதவியோய்; ஆகலான், குன்றிற் கோடுதொறும் மேயினை உரைஇயரோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. உலகியல் நடத்தற்கு மழை இன்றியமையாமைப் பற்றி உலகிய லாகிய தேர்க்கு ஆணி யென்றார். “உழுவார் உலகத்தார்க் காணி1” எனச் சான்றோர் கூறுதல் காண்க. மழை வேண்டிய மக்கள் மலையிடத்தே கடவுள் வழிபாடு செய்வது பண்டை யோர் மரபாகலின் பலர் தொழ என்றார்; “மலைவான் கொள்கென வான்பலி தூஉய், மாரி யான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர் மாக்கள்”2 என்பது காண்க, மிகப் பழங்காலத்தே குறிஞ்சி நிலத்தே நிலவிய மழை வழிபாடு மருத நிலத்து இந்திர விழாவாக மாறிற்றெனக் கொள்க. பலர் தொழ மேயினை உரைஇ யரோ என இயையும் ஓரிடத்தே யன்றிப் பலவிடத்தும் நிற்றலின் பலவயின் நிலை இய குன்று என்றார்.

உரைஇயர், பரவுக என்னும் பொருட்டாய வியங்கோள் முற்று வினை கடனீர் முகந்து விண்ணிடத்தே தானும் உயர்ந்து, தான் பொழியும் மழைநீரால் உலகினையும் உயர்த்தும் பெருமைச் செயலை வியந்து மழைமுகிலை, பெருங்கலி எழிலி எனச் சிறப்பிக்கின்றார். படுமலை, பாலைப் பண்வகை ஏழனுள் ஒன்று; அவை யேழும், செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை, யெனவரும், இவற்றின் இயல்பைச் சிலப்பதிகார அரும்பத வுரை, அடியார்க்கு நல்லார் உரைகளையும், நூற்கருத்தையும் உரைகளின் கருத்தையும் பல்லாண்டுகள் ஆராய்ந்து கண்ட அருட்டிரு விபுலானந்த அடிகள் எழுதிய யாழ் நூலில் காண்க. படுமலைப் பண்ணைக் கௌவாணம் என்றும் வழங்குவதுண்டு; “படுமலை யென்பது பகரிற் கௌவாணம்1” என்று பிங்கலந்தை நூலாசிரியர் கூறுவர். “படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்2” என்று பிறரும் கூறுவது காண்க. வணர்தல், நெறித்தல்; “மண்ணார் மணியின் வணர்குரல் வண்டார்ப்ப3” என்ற விடத்து வணர்தற்கு நெறித்தல் என்றே பரிமேலழகரும் உரைத்தனர்; “வணர்ந்தொலி யைம் பாலான்4” என்றதற்குக் கடைகுழன்று தழைக்கின்ற ஐம் பாலினை யுடையாள் என நச்சினார்க்கினியர் உரைப்பர். இரவுப் போதில் நிலவும் குளிர்ச்சி அவ்விரவிற் பெய்யும் மழையால் பன்மடங்கு மிகுதலின், இரவுப் பெயலையே உழவர் பெரிதும் விரும்புவர். “இராமழை பொழிந்த ஈரை யீரம்” என்பது தனிப்பாட்டு, உழவுத் தொழிற்குப் பேருதவி யாதல் நோக்கிய இரவுப் பெயல் பொழிந்த உதவி என்று ஆசிரியர் கூறுகின்றார்.

மனைக்கண் ணிருந்து அறம்புரிந்து வாழும் நன்மக்கட்கு மழை யில்லையாயின் உலகியல் இல்லை என்பது யாவரும் நன்கறிந்த உண்மை யாதல் பற்றி, உலகிற்கு ஆணியாக என்றும், நாட்டில் சிறப்பும் பூசனையும் தானமும் தவமும் நடைபெறுதல் வேண்டி உயர்ந்தோர் பலரும் மழையைப் பரவுவராதலின் பலர் தொழ என்றும் கூறினான். “நீரின் றமையா துலகு எனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு1” என்றும் “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு” “தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம், வானம் வழங்கா தெனின்2” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. காற்றால் அலைப்புண்டு நாற்றிசையும் பரந்துசென்று தேய்ந்து இறுவது தவிர்த்து மலைமுகடுகளில் தங்கிப் பரந்திருப்பது மழைமுகிற்கு நன்றென்பது தோன்றக் குன்றிற் கோடு தொறும் மேயினை யுரைஇயரோ பெருங்கலி எழிலி என்றான். “பெய்து புறந் தந்து பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றறாவியரோ3” எனவும், “தன்றொழில் வாய்த்த இன்குர லெழிலி தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு4” எனவும் சான்றோர் உரைப்பர். மின்னும் முழக்கமும் இன்றி மழை நின்று பெய்யுங்கால் மனைவயின் இருப்போர்க்கு மகிழ்ச்சியும், அம்மழையிடத் தெழும் ஓசை யாழிசை போலும் இனிமையை யும் நல்குதலால், படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு எழீ இயன்ன உறையினை எனப் பாராட்டுகின்றான்; “இடியும் முழக்கு மின்றிப் பாணர், வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன, இன்குரல் அழிதுளி தலைஇ5” என ஆசிரியர் இடைக் காடனார் எடுத்தோதுவது காண்க. வானம் யாழிசை போலும் மழையினைப் பெய்து உலகை மகிழ்விப்பது போல, யாமும் எம் காதலியைக் கூடி இனிதுறையும் இன்பம் பெற்றேம் என்பான், யாமே வணர்ந்தொலி கூந்தல் மாஅயோ ளொடு புணர்ந்தினிது நுகர்ந்தனம் என்றான். மழைமுகிலே, நீ உறை பெற்று இன்புற்றாய்; யாம் மா அயோளொடு உறைதல் பெற்று இன்புற்றேம் என மகிழ்ந்து கூறியவாறு என்க. இரவிடைப் பெய்யும் மழையால் குளிர்மிகுதலால் காதலர்க்கு முயக்க வின்பம் சிறத்தலின் இரவுப் பெயல் பொழிந்த உதவியோய்என்றான். உதவி, உலகிற்குத் தொழில் உதவல்; காதலர்க்குக் கலவின்பம் உதவல். இதனால் தலைவி கேட்டு மகிழ்வாளாவது பயன்.

பூதங்கண்ணனார்


இக்கண்ணனார், பூதங்கண்ணனார் எனப்படுதலை நோக்கின் இவர் தந்தை பூதன் எனப்படுவர் என்பது தெரிகிறது. பூதனார் என நல்லிசைச் சான்றோர் நிரலுள் ஒருவர் உளர்; அவர்க்கு மகனாயின் இவர் பூதனார்மகனார் கண்ணனார் எனப்படுவர். பூதன்றேவனார், என்ற சான்றோர் ஒருவர் சான்றோர் நிரலுள் உளர். அவர் ஒருகால் இக்கண்ணனார்க்கு உடன் பிறந்தோராக இருக்கலாம். இருவர் சொல்நடையும் பெரிதும் ஒத்து இயலுவதால் உடன்பிறந்தோராகக் கோடல் பொருத்த மேயாகும். இந்நெறியே நோக்கின் பூதம்புல்லனார் எனக் குறுந் தொகையுள் வரும் சான்றோரும் இவர்க்கு உடன் பிறந் தோரா கலாம். இவர் பெயர் சில ஏடுகளில் பூங்கண்ணனார் என்று காணப்படுகிற தென்பர்; ஆயினும் பூதங்கண்ணனார் என்பது தான் பல ஏடுகளிலும் காணப்படுவது. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டுத்தான் உளது.

கடிபொழிற்கண் மலர் கொய்து விளையாடும் விருப்பால் ஆயமகளிர் இடையே போந்த தலைமகள், அரும்பற மலர்ந்த வேங்கை மரமொன்று அழகுற விளங்கக் கண்டு, அதன்பால் தன் கருத்தைச் செலுத்தித் தனித்து நிற்கையில், கட்டிளமையும் கலங்கா ஆண்மையுமுடைய தலைமகன் அவ்வழியே வந்தவன் அவளைக் கண்டான்; அவளும் அவனைக் கண்டாள்; இருவர் உள்ளங்களும் ஒன்றுபட்டன. சின்னாளில் இருவரும் காதல ராயினர், அவ்விடத்தினின்றும் பிரிந்து போகையில், தன் கண் பார்வையாலும் பிற குறிப்புக்களாலும் தனக்குரிய உயிர்த் தோழியைத் தலைமகற்குக் காட்டி, அவளது துணைமை பெற்றா லன்றித் தமது உள்ளத்தில் தோன்றி இருவரையும், பிணிக்கும் காதல் வெற்றிபெறாது என்பதை நன்கு உணர்த்தினாள். தலை மகன் தலைவி காட்டிய தோழியது துணைபெற வேண்டி, அவளும் தலைமகளும் தனித்தேகும் செவ்வி நோக்கி சென்று, தன் காதற்குறிப்புத் தோன்ற உரையாடினான்; தலைவியது குறிப் புணராமையால், தோழி அவனை மறுத்து நீங்குவாளாயினாள். பிறிதொருகால் கையுறை சில கொணர்ந்து, வணங்கிய சாயலும் பணிந்த மொழியும் உடையனாய் அவற்றை ஏற்குமாறு வேண்டி னான். அப்பொழுதும் தலைமகள் குறிப்பைத் தோழி உணராது முன்போல் மறுத்தலையே செய்தாள். இவ்வண்ணம் தலைமகனது முயற்சி பன்முறையும் வீழ்ச்சியுறவே, அவனது உள்ளத்தில் அசைவு பிறந்தது. ஒருநாள் தலைமகள் சந்தனத் தழையும் வேறுபிற தழைகளும் கொண்டு நன்கு உலரவைத்துச் செய்த நுண்ணிய பொடி தேய்த்து மூழ்கிய தன் நெடிய கூந்தல் நீராடிய போது கழிந்தன போக எஞ்சிநின்று ஆங்காங்கு ஒட்டிக் கிடந்த நுண்துகள் உதிருமாறும் கூந்தல் புலருமாறும் நுனியில் முடி யிட்டுத் தொங்கவிட்டு, ஏனை ஆயமகளிரும் உயிர்த்தோழியும் உடன்விளையாடப் பந்தாட லானாள். மனையின் முற்றத்தே பரப்பப் பெற்றிருந்த புதுமணலில் இம்மகளிர் பந்தாடுகையில், தான் உருட்டிய பந்தின் வழியே தலைமகள் ஓடி விளையாடியது, காண்பார். கண்கட்கு இனிய விருந்துசெய்தது, அவள் தான் ஆடிய பந்தின்மேல் தன் கண்ணையும் கருத்தையும் செலுத் தினளேயன்றி ஒருபுறத்தே நின்று அவளைப் பார்த்த தலை மகனைக் கண்டாளில்லை. அதுகண்ட அவனது நெஞ்சம், “தலைவிக்கு நின்பால் அன்பில்லை; அவள் நினக்கு அருள்பவ ளாகத் தோன்றவுமில்லை; ஆகவே இனி அவள்பின்னே சென்று நின் காதற் குறையைச் சொல்லி இரப்பது பயன்படாது; இம் முயற்சியைக் கைவிடுக” என முனிந்து கூறலுற்றது, கடி பொழிவின்கண் கண்ட காட்சியாலும், வழிநிலைக் காட்சி யாலும், உள்ளத்தே தோன்றி வளரும் காதல் நிலையினை நன்கு அறிந்தவ னாகலின், நெஞ்சின் முனிவுக்கு அவனது உள்ளம் உடன்படவில்லை, “பந்தின்பின்னே செல்லுதலால் அன்பிலள் என எண்ணற்க; மேலும் அவள் நமக்கு அருளுவ ளாயினும் அருளாளாயினும் பிற்றைநிலை முனிதல் பெருமை யன்று; ஏனெனில் யான் உற்று வருந்தும் காதற் பிணிக்கு மருந்து அவளை யன்றி வேறில்லை யாகலான்” என்று மொழிந்தான்.

இக்கூற்றின்கண், தலைமகன் தன் உள்ளத் தெழுந்த காதலைத் தோழி அறியுமாறு செய்து அவளது நட்பைப் பெற முயலும் முயற்சியின் அருமையும், அருமையுடைத்தென்று அசாவாத அவனது மனம் அசைதலும், அவனது தலைமைநலம் நோக்கிய நெஞ்சம் அவனை இரந்து பின்னிற்றலுக்கு முனிதலும், அவனது பெருந்தகைமை நோக்கிய உள்ளம் பணிவு வற்புறுத்தி அம்முயற்சியைக் கைவிடாமைக் காத்தலும் ஒருபால் விளங்க, ஒருபால் தலைவி யுள்ளத்தில் தோன்றிய காதல் பெண்மைக் குரிய எல்லைக்கண் நின்று சிறக்கும் பொற்பும், புறத்தே அவளது காதற்குறிப்புப் புலப்படத் தோன்றாவாறு தாங்கிநிற்கும் பொறை யும் திகழக் கண்ட பூதங்கண்ணனார் இப்பாட்டின்கண் அவற்றை நிறுத்திப் பாடுகின்றார்.

கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்த
வகைசேர் 1நுண்பொடி தகைபெறத் திமிரி
2புலரிடத் துதிர்த்த துகள்படு கூழைப்
3பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
4நெடுந்தேர் வழங்கும்5 நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளா6 ளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியன்மா நெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே.

இது, குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கியது.

உரை
கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த - கீழ்காற்றுக் கொணர்ந்த மழைமுகில் மழையினைப் பெய்து மேற்றிசை நோக்கி எழுந்து சேறலால் தழைத்த; சிறுகோல் இணர பெருந்தண் சாந்த வகைசேர் நுண்பொடி - சிறுகொம்புகளில் பூங்கொத்துக்களைத் தாங்கும் பெரிய குளிர்ந்த சந்தனத் தழையும் வேறு தழை வகையும் சேர்த்துச் செய்த நுண்ணிய பொடியை; தகைபெறத் திமிரி - அழகு உண்டாகக் குழைத்துத் தேய்த்து நீராடி; புலர் இடத்து உதிர்த்த துகள்படு கூழை - புலர்ந்த விடத்துத் தட்டி உதிர்த்தலால் நுண்ணிய துகள் படிந்து தோன்றும் கூந்தலை முடித்துள்ள; பெருங்கண் ஆயம் உவப்ப - பெரிய கண்களையுடைய ஆயமகளிர் கண்டு மகிழுமாறு; தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து - தந்தை செலுத்தும் நெடிய தேர் செல்லும் வெள்ளிய மணல் பரந்த முற்றத் தின்கண்; பந்தொடு பெயரும் பரிவிலாட்டி - தான் விளையாடும் பந்தின் பின்னே ஓடு முகத்தால் நம்பால் அன்பில்லாதவளாகிய தலைமகள்; அருளினும் அருளாளாயினும் - நமக்கு அருள் செய்யினும் செய்யா தொழியினும்; பெரிது அழிந்து - பெரிதும் வருந்தி; பின்னிலை முனியல்மா - இரந்து பின் நிற்றற்கண் வெறுப் படையா தொழிக; நெஞ்சே -; என்னதூஉம் - எத்துணையும்; அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து - நீக்குதற்கரிய துயரத் தால் என் வலியழிவு போக்கும் மருந்து; பிறிது இல்லை - வேறே யாதும் இல்லை; யான் உற்ற நோய்க்கு - யான் எய்தி வருந்தும் காதல் நோய்க்கு எ-று.

நெஞ்சே, சாந்த வகைசேர் நுண்பொடி திமிரி, உதிர்த்த துகள் படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்ப, முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி, அருளினும் அருளாளா யினும், பின்னிலை முனியல்; நோய்க்கு அவலம் தீர்க்கும் மருந்து பிறிதில்லை யாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கொண்டல் மாமழை, கீழ்க் காற்றுக் கொணரும் மழைமுகில், வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி வீசும் காற்று கொண்டல் என்றும், அது வீசும் காலம் தமிழ கத்துக்குக் கார்காலமாகலின் அதனாற் கொணரப்படும் மழை முகில் கொண்டல் மாமழை என்றும் குறிக்கப்படுகின்றன. “எல்லையும் இரவும் என்னாது கல்லெனக் கொண்டல் வான்மழை பொழிந்த வைகறை1” எனப் பிறரும் கூறுதல் காண்க. மழைகுன்றி வெறிது வீசிக் குளிர் செய்வதால் இவ் வடகீழ்க் காற்று வாடை எனவும், வடந்தை எனவும் வழங்கும், ஏர்பு, எழுந்து சேறல்; இணர் கொத்து பெரிய மரமாக வளர்தலின் பெருந்தண் சந்தனம் என்றார். சந்தனத் தழை குறிஞ்சித்தழை முதலியவற்றின் தழைகளைக் கற்பாறை களின் மேல் வெயிலில் உலர்த்தி நுண்பொடி யாக்கி நீரிற் குழைத்து நெய் பெய்த தலையில் தேய்த்து மூழ்கினால் நெய்ப்பசை நீங்குவது இன்றும் மலைநாட்டு மக்கள் வழக்கில் காணலாம். சந்தனத்தோடு வேறு தழைகள் சேர்ப்பது பற்றியே சாந்த வகை சேர் நுண்பொடி என்றார். இப்பொடியைத் தேய்த்து நீராடுவதால், தலைமயிர் தூய்மையும் நறுமணமும், வளர்ச்சியும் பெறுதலால் தகைபெறத் திமிரி என்றார். நீரில் மூழ்கி நன்கு படிந்தாடினும் நுண்பொடிகள் முற்றவும் நீங்காமையின் புலரவிட்டு உதிர்த்தல் மரபாதலின், புலர் விடத் துதிர்த்த துகள் என்று குறித்தார். பெருங்கண், மகளிர்க்கு இலக்கணம், நிலவுமணல், நிலவொளி போலும் வெண்மணல், பின்னிலை, பின்னே நின்று இரந்து வழிபடல், முனியல், அல்ஈற்று எதிர்மறை வியங்கோள், ‘மா’, வியங்கோள் அசைச்சொல்1 அருந்துயர் அவலம், நீக்குதற்கரிய துயரத்தால் விளையும் வலியழிவு, அத்துயருக்குக் காரணம் நோயெனக் கொள்க. நோயின் விளைவு, துயரமும் அவலமும் ஆதலின் இரண்டையும் ஒருங்கே கூறினார். காமநோய்க்கு மருந்து, காமநுகர்ச்சியே ஆதல் பற்றி மருந்து பிறிதில்லை என்றார். “பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து2” என்பர் தெய்வப் புலவர்.

இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று நிலையினும் தலைமகளைத் தலைப்பெய்து காதலின்பம் கையுறப் பெற்ற தலைமகனது நெஞ்சம், தோழியிற் கூட்டத்தால் தலைமகளது காதலை வற்புறுத்தி மணந்து கொள்ளற்கு ஒருப்பட்டு நின்றமையின் தலைமகளாற் சுட்டிக் காட்டப்பட்ட தோழிக்கும், தனக்கும், தலைமகட்கும் உள தாகிய காதற்றொடர்பை அறிவுறுத்தற்கு ஏற்ற நட்பினை முதற்கண் செய்து கொள்வான் வேண்டி. தலைமகள் விளை யாடும் இடத்திற்குச் சென்றவன், இடந்தலைப் பாட்டினும், பாங்கற் கூட்டத்தும் தன்னை எதிர் நோக்கி நின்றாற் போலாது, தான் உருட்டியாடும் பந்தின்வழி நின்று தன்னை நோக்காமை கண்டு பந்தொடு பெயரும் பரிவிலாட்டி என்றான். தலைமகன் வரவும் வழிபாடும் தோழியின் கருத்தை ஈர்த்து அவன் வேண்டிய நட்புச் செய்தற்குப் போதிய இடம் நல்காமையின், தலை மகள் அவனது வரவு உணர்ந்தும் உணராதாள் போன்று பந்துவழிச் செல்வாளாயினாள். அவளது செயல் வகையை ஆராய்ந்த அறிஞர், “செறாஅச் சிறு சொல்லும் செற்றார்போல் நோக்கும், உறாஅர் போன்றுற்றார் குறிப்பு1” என்று கூறுதல் காண்க. ஆயமகளிர் கண்டு உவக்குமாறு, கூந்தல் காற்றில் பறக்கப் பந்தெறிந்து ஆடுவது, தன்னைக் கண்ட வழிக் கிளர்ந்து அவன் உள்ளத் தெழும் காதலை அம்மகளிர் கண்டு உணராமைப் பொருட்டு, “பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை முற்றத்துப் பந்தொடு பெயரும் என்றவிடத்துப் பெருங்கண் ஆயம் என்றது, தன் காதற்குறிப்பை அவர்கள் கண்டுணர்வ ரெனத் தலைமகள் அஞ்சினமை உணர்த்திற்று. மகளிரது உவகையையும் பந்தை யுமே நோக்கித் தன்னை நோக்காமை கண்டு பரிவிலாட்டி என்றான். இந்நினைவுகளால் தலைமகள் ஒருகால் தன்னை அருள்வள் என்றும், ஒருகால் தன்னை அருளாள் என்றும் மாறிமாறி அலமருதலால் அருளினும் அருளாளாயினும் என்றும், அருளுவ ளாயின் அவன் வழி நிற்கும் தோழி தன் குறையுறவு உணர்ந்து ஆவன செய்வள்; தோழி, அது செய்யா மையின் அருளாள் போலும் என நினைந்தவழி, நெஞ்சம் பெரிதும் தளர்ந்து ஈண்டு இவளைக் குறையிரந்து நிற்றலிற் பயனின்றென வற்புறுத்தவும், அதனைத் தெருட்டுவானாய்,”முனிவில்லார் முன்னியது எய்தாமை இல்2" என்றாற்போல, நெஞ்சே பெரிது அழிந்து முனியன்மா என்றான். மருந்து பிறிதாயின் இவளை முனிதல் தகும்; நோய் செய்த இவளே மருந்துமாதலின் முனிதல் கூடாது என்பான். மருந்து பிறி தில்லை யான் உற்ற நோய்க்கே என்றும், உடலளவாய் நிற்கும் பிற நோய்கள் போலாது, உயிர்க்குத் துயரத்தையும் உடலுக்கு அவலத்தையும் செய்வது இந்நோய் என்பான் அருந்துயர் அவலம் என்றும் கூறித் தேறுகின்றான். குழைத்த சாந்தம் முதலியவற்றின் தழைகளை வாட்டி நுண்பொடி செய்து தகைபெறக் கூந்தலில் திமிர்வர் என்றதனால், நம்மை இவள் வாட்டி வருத்தியல்லது இன்புற அருளாள் எனக் குறிப்பால் நெஞ்சு முனியாமைக்கு ஏதுக் கூறிய நயம் அறிக. இவ்வாசிரியருடைய உடன்பிறந்தோரான பூதன் தேவனாரும், “பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்து பிறிதில்லை யான் உற்ற நோய்க்கே3 என்று கூறுவது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. இதனாற் பயன் தலை மகன் தன் ஆற்றாமையை நெஞ்சொடு கூறி ஆற்றிக் கொள்வது.

அரிசிலங் குமரனார்


அரிசில் என்பது காவிரியின் கிளையான அரிசிலாறு காவிரி யினின்றும் பிரியுமிடத்தே குடந்தைக்கு அருகேயிருந்து மறைந்து போன ஊர்1. அரிசில் கிழார் என்னும் சான்றோரும் இவ் வூரவரே, இக்குமரனாரைச் சில்லியங் குமரனார் எனத் திரு. வையாபுரிப் பிள்ளையின் கையெழுத்துப் படி கூற, அச்சுப்படி சல்லியங் குமரனார் எனத் திருத்திக் காட்டப் புதுப்பட்டியேடு இவர் பெயரை அரிசிலங் குமரனா ரெனக் குறித்தமை கொண்டு மேலே குறித்த உண்மை வடிவு உய்த்துணரப்பட்டது. இக் குமரனார், சோழ நாட்டுக் கிள்ளியையும் அரிசிலாற்றையும் இப்பாட்டின்கண் எடுத்துப் பாடுவது இவர் அரிசிற் குமரனார் எனப்படுவதை வற்புறுத்துகிறது. இவர் பாடியதாக இவ்வொரு பாட்டொழிய வேறு காணப்படவில்லை.

பண்டைத் தமிழ்மக்கள் வாழ்வில் தத்தம் வாழ்க்கைக்குத் துணையைத் தாமே தேர்ந்து கொள்ளும் உரிமை மக்களிடமே இருந்தது. ஆடவர் மனைவியையும் மகளிர் கணவனையும் தாமே தேர்ந்து கொண்டனர். திருவள்ளுவர், கணவன் மனைவியர் கூடி நடத்தும் இல்வாழ்க்கைக்கு உரிய அறங்களை உரைக்கப் புகு மிடத்து மனைவியை வாழ்க்கைத் துணை யென்று குறிப்பதே இதற்கு ஏற்ற சான்று. மகளிர் ஆடவர் போலப் புறத்தே தனித்துச் சென்று பொருள் வினைகளைச் செய்யும் வன்மையுடைய ரல்லராகலின், அவருடைய திருமணத்தில் மாத்திரம் பெற் றோர்க்குப் பொறுப்புச் சிறிது மிகுந்திருந்தது. மகளிர், தமது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்து கொள்ளும் ஆடவனுடைய குடிநலம் ஆள்வினை நலம் முதலிய கூறுகளில், பொய்யும் வழுவும் புகாத வண்ணம் ஆராய்ந்து காண்பதில் தவறுவராதலின், அப்பொறுப்பு பெற்றோர்களிடம் இருந்தது. மகளிர் அறத்தொடு நின்ற வழியும், கொண்டுதலைக் கழிந்த வழியும், பெற்றோர் தம் மகளிர் கருத்து வழியே சென்றொழிவர். இன்னோரன்ன உரிமைக் கூறுகளால், பொருட்டுறையில் பெற்றோர் ஈட்டிய பொருளை மக்கள் பெறுவதில் இன்றைய முறைமையில் அந்நாளைய தமிழ் மக்கள் சிறிது வேறுபட்டிருந்தனர். பெற்றோர் ஈட்டிய பொருள் கொண்டு மக்கள் தமது வாழ்க்கையை நடத்துவது சிறப்பு அன்று; அவரவரும் தமது வாழ்க்கைக்குரிய துணைவரைத் தேடிக் கொள்வது போலத் துணையாகிய பொருளையும் தேடிக் கொண்டு வாழ்வதே சிறந்த அறமும் கடமையுமாகும்; பெற்றோர் ஈட்டிய பொருள் தாம் ஈட்டியது அன்மையின், மனையறம் புரியும் மக்கள் அதனைத் “தமது” எனக் கருதுவ தில்லை. தாம் அரிதின் முயன்று ஈட்டிய பொருளையே, “தமது” எனக் கொண்டு பாத்துண்டல் முதலிய அறங்களைச் செய் தொழுகினர். பெற்றோர்க்குப் பின்னர் அவர் பொருள் மக்களைச் சேர்தலே முறை. ஆயினும், பழந்தமிழர், தம் பெற்றோர் ஈட்டிய பொருளைத் தம் வயிற்றிற் பிறக்கும் மக்களுக்கே உரிமை செய்து, தம் பெற்றோர் பெயரையும் தம்மக்கட்கு இட்டு மகிழ்ந்தனர். அதனாலேயே, தம் வயிற்றிற் பிறக்கும் புதல்வனைத் தந்தை பெயரன் என வழங்கினர்.

இது நிற்க, மனையறம் பேணும் மக்களிடையே ஆடவன் பொருள் குறித்தும் வினைகுறித்தும் மனையின் நீங்கிச் செல்வது மரபு. ஒருகால், தலைமகன் பொருள் வேண்டித் தன் மனையின் நீங்கிச் செல்ல வேண்டிய கடமை யுடைய னானான். புதுமணத் தோன்றலாதலின், அவன் உள்ளத்தை மனைவியின் பிரிவருமை தடுக்கலுற்றது. ஆனால், தடையுண்டு மடங்குதல் ஆண்மை யன்று.

மக்கள் உயிர்க்கு அறிவு, விழைவு, செயல், என்ற மூவகைச் செயற் பண்புகள் உண்டு. இவை, தெளிவு ,கலக்கம், மயக்கம், என்ற மூன்று நிலைகளில் இயக்கமுறும். அவ்வகையில் அறிவின் கண், தெளிவும், கலக்கமும், மயக்கமும், உளவாம். இவ்வாறே விழைவு செயல்களும் இயங்கும். உயிர்ப் பண்புகளின் இயக்கத் துக்குக் கருவியாவது உடம்பு; அவ்வுடம்பின் இயல்புக்கு ஏற்பத் தெளிவு முதலிய நிலைகள் உண்டாகும். உடல்வன்மையும் மனத்திண்மையும் செவ்வே வாய்ந்த வழித் தெளிவு நிலை பெறுதலால் அறிவும், விழைவும், செயலும், நன்கு அமைந்து மக்களைத் தலைமை, மாண்பு உடையராகத் திகழ்விக்கும். அத்தலைமை மாண்புடைய ஆடவன் உள்ளத்தில், அறிவு தெளிவுற்று மேனிற்கும் போது, காதலின்ப வாழ்வுக்குக் கடமை யின் சிறப்புத் தோன்றிப் பொருட்பிரிவுக்குத் துணிவு பிறப் பிக்கும்; விழைவு மேனிற்கும் போது அவன் காதலின்பப் பேற்றில் கருத்தைச் செலுத்துவன். கலக்க நிலையில் காதலையும், கடமையையும் மாறிமாறி நினைந்து மயங்குவன். பொருள் குறித்துப் பிரியக் கருதும் தலைவன், தெளிநிலையில் கலக்கமும் மயக்கமும் இன்றி இருப்பன்; அந்நிலையில், அவன் தன் பிரிவைத் தலைமகட்குப் பையக் குறிப்பிக்க, அவள் ஆற்றாளாவது உணர்ந்து, அவளை ஒருப்படுத்த வேண்டிப் பிரிவை விரும் பாதான் போலத் தன் நெஞ்சினை முன்னே நிறுத்தி அதனோடு சொல்லாடு வானாய்த் தலைவியின் செவிப்புலனாமாறு சில உரைக்கின்றான். யானைகளால் திமிரப்பட்ட அடியையுடைய கொன்றை மரங்கள் சடைமுடித்த தாபதர் போலத் தோன்றும், அருஞ் சுரத்தைக் கடந்து சேறற்கு அஞ்சுகின்றே னில்லை; அவை பெரிதும் எளியவை; ஆனால், சோழனான கிள்ளிக்கு உரிய அம்பர் என்னும் ஊரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் கருமணல் போன்ற கூந்தலையுடைய காதலியாகிய இவளை விட்டு நீங்க கில்லேன்; ஆகலின், நெஞ்சே, நீ மாத்திரம் சென்று வருக என்று கூறினான்.
இக்கூற்றின்கண், தலைமகனது கடமை யுணர்வின்முன் கடுமை மிக்க சுரத்தின் செலவு எளிதாகத் தோன்றுவதும், எனினும், தலைவி பாற் சென்ற காதலுணர்வு விஞ்சி நிற்பதும், நெஞ்சினைச் சென்று வருக என்பதால், கடமைவழி நின்று முடிவில் பிரிந்தேகுதல் தலைவன் செயலாவதும் அமைவது கண்ட அரிசிலங் குமரனார் இப்பாட்டினைப் பாடுகின்றார்.

இருஞ்சே 1றாடிய கொடுங்கவுட் கயவாய்
மாரி யானையின் மருங்கு2 தீண்டிப்
பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை
நீடிய சடையோ டாடா மேனிக்
குன்றுறை தாபதர்3 போலப் பலவுடன்
என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம் எளியமன் நெஞ்சே1 செருமாண்
வேந்தரொடு2 பொருத பல்பிணர்த்3 தடக்கை
ஏந்துகோட் டியானை இசைவெங் கிள்ளி
வம்பணி யுயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசிலந் தெள்ளறல் அன்னஇவள்
விரையொலி4 கூந்தல் விட்டமை கலனே.

இது, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவழுங்கியது.

உரை
இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள் கயவாய் மாரி யானை யின் - கரிய சேற்றைப் பூசிக்கொண்ட வளைந்த கவுளையும் பெரிய வாயையு முடைய மழையில் நனைந்த யானையினது; மருங்கு தீண்டி - பக்கம் உராய்தலால்; பொரி யரை ஞெமிர்ந்த - பொரிந்தது போன்ற அடிமரத்தின் பட்டை தேய்ந்த; புழற் காய்க் கொன்றை - உள்ளே புழை பொருந்திய காய்களை யுடைய கொன்றை மரம்; நீடிய சடையொடு ஆடா மேனி - நீண்ட சடையும் நீராடாத மேனியு முடைய; குன்றுறை தாபதர் போல - குன்றுகளில் வாழும் தவத்தோர்களைப் போல; பலவுடன் - பலவாய்; என்றூழ் நீளிடை பொற்பத் தோன்றும் - வெயில் பரந்த நெடிய இடைவெளி அழகுறத் தோன்றும்; அருஞ்சுரம் எளியமன் - அரிய காட்டுவழிகள் கடந்து சேறற்குப் பெரிதும் எளியனவே; நெஞ்சே-; செருமாண் வேந்தரொடு பொருத - செருவில் மேம்பட்ட வேந்தர் பல ருடன் போர் செய்து சிறந்த; பல்பிணர்த் தடக்கை ஏந்து கோட்டு யானை - பலவாய சருச்சரைகளையுடைய பெரிய கையையும் உயர்ந்த கோடுகளையுமுடைய யானைப் படையை யுடைய; இசை வெங்கிள்ளி - புகழே விரும்பும் சோழனான கிள்ளிக் குரிய; வம்பு அணி உயர்கொடி - புதிது புனைந்து நிறுத்தப் பெற்ற அழகிய உயர்ந்த கொடி நின்று விளங்கும்; அம்பர் சூழ்ந்த அரிசில் அம் தெள்ளறல் அன்ன - அம்பர் நகரத்தைச் சுற்றியோடும் அரிசிலாற்றின் தெள்ளிய கரு மணலை யொத்த; இவள் விரையொலி கூந்தல் - இவளது மணமூட்டப்பெற்ற தழைத்த கூந்தலிற் கிடந்து பெறும் இன் பத்தை; விட்டு அமைகலன் - விட்டு நீங்கியிருத்தலை யான் ஆற்றே னாகலின், நீயே சென்று வருக எ-று.

நெஞ்சே, கொன்றை தாபதர் போலத் தோன்றும் அருஞ் சுரம் எளியமன்; கிள்ளியின் அம்பர் சூழ்ந்த அரிசிலந் தெள் ளறல் அன்ன இவள் கூந்தல் விட்டு அமைகல னாகலின், நீயே சென்று வருக என எஞ்சுவன பெய்து கூட்டி வினை முடிவு செய்க. இருஞ்சேறு, கரிய சேறு; “இருஞ்சேற் றகல் வயல்1” என்றாற்போல, கொடுங்கவுள் என்புழிக் கொடுமை வளைவு, கய, பெருமை, மாரியானை, மழையில் நனைந்து சேறுபட்டு உலர்ந்த யானை; “மாரி யானையின் வந்து நின்றனனே2” என்பது காண்க. மேனியிற்பட்டு உலர்ந்த சேற்றை உதிர்த்தற்குக் கொன்றை மரத்தின் பொரியரையில் திமிர்தலால் பொருக்கமைந்த பட்டை தேய்ந்தமை விளங்க, மருங்கு தீண்டிப் பொரியரை ஞெமிர்ந்த கொன்றை என்றார். ஞெமிர்தல் உராய்தல்; திமிர்தல் என்றுமாம். “திமிர மாவுடற் குங்குமச் சேதகம், திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்3” என்று கம்பரும் கூறுதல் காண்க. புழற்காய், உள்ளே புழை பொருந்திய காய், கொன்றைக்காயைக் கொண்டு குழல்செய்து இசைத்தல் பண்டையோர் மரபு. “கோவலர் கொன்றையந் தீங்குழல் மன்றுதோ றியம்ப4” எனச் சான்றோர் உரைப்பதனாலும் அறிக. நீள வளர்ந்துள்ளமை பற்றி நீடிய சடை எனவும், உண்ணாமை நீராடாமை முதலிய செயல்கள் தவத்தோர்க்கு உரியவாதலின், ஆடா மேனி எனவும் கூறினர். ஆடா மேனி கூறினார். பொருளாகிய கொன்றை, மாரியானை மருங்கு தீண்டி உராய்தலால் மண் மாசு படிந்திருப்பதுபற்றி, என்றூழ், வெயில், எளியமன் என்புழி மன்னைச் சொல் ஆக்கம் குறித்து நின்றது. போரின் கண் வெற்றியால் மாட்சியுறாதாரை வேறல் வீறாகாமையின், செருமாண் வேந்தரொடு பொருத என்றும், பனைமரத்தில் தோன்றும் வரிவரியாக உள்ள சருச்சரைகள் போல, யானையின் கையிலும் அவை காணப்படுதலால் பல் பிணர்த் தடக்கை என்றும் கூறினார். புகழெனின் உயிரும் கொடுக்கும் பொற்புடை மறவேந்தன் என்றற்கு, இசைவெங்கிள்ளி என்றார். கிள்ளி, சோழனது பெயர். கிள்ளி என்ற பெயருடைய சோழமன்னர் பலர் இருந்திருத்தலின், இக்கிள்ளி இன்னான் என்பது விளங்கவில்லை. வம்பு, புதுமை, அம்பர், சோழ நாட்டில் இன்றும் உள்ளதோர் பேரூர், அரிசில், அரிசிலாறு, அம்பர் சூழ்ந்த அரிசில் என்றாற் போல ஞானசம்பந்தரும் “அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்” என்பர். ஆகலான் ‘நீயே சென்று வருக’ என்பது குறிப்பெச்சம்.

இளமையுள்ளத்தைப் பற்றிக் காமவின்பத்துக்கு எளி யனாக்கும் வகையில் விஞ்சி நிற்கும் காதலைத் தன் வரை நிறுத்தாது மெலிவுற்று அதன்வழி நின்று பொருட் பிரிவுக் குரிய அருஞ்சுரம் சேறற்கு தலைமகன் அஞ்சுகின்றான் போலும் என்னும் குறையுண்டாகாதவாறு தன்னைப் பேணு கின்றா னாகலின், அருஞ்சுரம் சேறல் எளியமன் என்றும், எளிய செயலைத் தான் மேற்கொள்ளாது, நெஞ்சினை மேற்கொண்டு செல்க எனக் குறிப்பால் உரைக்குமாறு தோன்ற, நெஞ்சே என்றும், தான் செலவு மேற்கொள்ளாமைக்கு ஏது அருஞ்சுரச் செலவினும் தலைமகளை ஆற்றுவித்தல் அரிய செயல் என்றும், அரியது செய்தலே தலைமைக்கு மாண்பென்றும் உரைப்பான், இவள் விரைமென் கூந்தல் விட்டு அமைகலன் என்றும் கூறினான். தன் பிரிவை ஆற்றி யிருத்தல் வேண்டும் என்பதை, இதனைக் கேட்கும் தலைமகள் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாய் உரைக்கின்றா னாகலின், வெளிப்படையில் இவள் கூந்தலைவிட்டு அமை கலன் என்றான். இருஞ் சேறாடிய யானை தீண்டி ஞெமிர்ந்தது பொறுத்த பொரியரைக் கொன்றை, புழற்காய் தாங்கி என்றூழ் நீளிடைப் பொற்புறத் தோன்றும் என்றதனால் இன்மையது இளிவு எய்தாமை நீங்கும் பொருட்டு நிகழ்த்தும் தன் பிரி வாற்றிய வழி வாழ்க்கை இன்பமும் புகழும் எய்தி இலங்கும் எனக் குறிப்பால் தலைமகன் தலைமகட்கு உணர்த்தியவாறு அறிக.

இடைக்காடனார்


நற்றிணையுரைகாரரான பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயரும், டாக்டர் திரு. உ.வே. சாமிநாத அய்யரும், இடைக்காடு என்னும் ஊரின ராதல்பற்றி இச்சான்றோர் இடைக்காடனார் என்று குறிக்கப்படுகின்றார் என்றனர். வெண்காடு, மறைக்காடு, ஆர்க்காடு என்ற ஊர்களைச் சேர்ந்தவர்களை வெண்காட்டான் மறைக்காட்டான், ஆர்க்காட்டான் என்பது பெருவழக்கேயன்றி, வெண்காடன்,மறைக்காடன், ஆற்காடன் என வழங்குவதில்லை. வெண்காடன், என்பதாகிலும் சைவத் திருமுறைகளில் திரு வெண்காட்டு இறைவனைக் குறித்து நின்று பின்பு இறைவன் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் மரபு பெருகிய போது, மக்கட்பெயராய் வருவதாயிற்று. ஏனையவை அவ்வாறு வர வில்லை; அதனால், இடைக்காட்டார் என்ற பொருளில் இடைக் காடனார் என்ற பெயர் வந்ததெனக் கோடல் செவ்விதாகத் தோன்றுகின்றிலது.

இனி, காடன் என்பது இச்சான்றோரது இயற்பெயர் என்றும், இடை என்பது இடையர் இனத்தைக் குறிப்ப தென்றும் அக நானூற்று உரைகாரரான திரு. வேங்கடாசலம்பிள்ளை கூறுவர். இடையராயின், இடையன் சேந்தன் கொற்றனார், எனவும் இடையன் நெடுங்கீரனார் எனவும், இவர் வரிசையுள் நிற்கும் நல்லிசைச் சான்றோர் குறிக்கப்படுவது போல, இவரும் இடையன் காடனார் என்று பெயர் குறிக்கப்பட வேண்டும்; அவ்வாறு எங்கும் காணவில்லை.

இடை என்றது காடனாரது ஊரைக் குறிப்பதாகக் கொண்டால் தடை யேதும் இராது, இடைக்குடி1 எனவும், இடையூர்2 எனவும் ஊர்கள் பல பண்டைநாளில் இருந்துள்ளன. அவற்றுள் ஒன்று இவரது ஊராதலால், இவரைப் பண்டையோர் இடைக்காடனார் என வழங்கினார். இடைக்காட்டூர்3 என்றோர் ஊர் உண்டு; ஆயினும் அவ்வூரவர் இடைக்காடனார் என வழங்கப்படார் என உணர்க. பிற்காலத்தில் தோன்றிய திரு வாலவாய்த் திருவிளையாடற்புராணம் “பின்னமில் கபிலன் தோழன் பெயர் இடைக்காடன் என்பான்” என்று குறிப்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. ஊசிமுறி யென்னும் செய்யுள்வகையைப் பாடியவர் இடைக்காடனார் எனவும், அவரும் இவரும் ஒருவரே எனவும் கருதுபவ ருண்டு; அவர்கள் இவ்விருவரும் காலத்தால் வேறுபட்டவர் என்பது நினைத்திலர்.

இப்பாட்டைப் பாடிய இடைக்காடனார் காலத்தில், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் பகைவர்க்கு அச்சம் தரும் அடல் மிக்க அரசனாய் விளங்குதற்கு அவனது படையின் பெருமையெனக் காட்டி, அஃது அவன் குடிச்சிறப்பு என்றும், அவ்வகையில் அவனது ஆற்றல், “புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்று” என உரைப்பர். அவனுடைய ஆட்சி நலத்தால், நாடு “தண்புனற் பூசல் அல்லது நொந்து களைக வாழி வளவ என்று நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது” என்றும், அதனால் அது, “புலி புறங்காக்கும் குருளைபோல” விளங்கிற்று என்றும் கூறுகின்றார். அவனது நாட்டவருள், களமர் வாளை மீனையும், உழவர் யாமை இறைச்சியையும், கரும்பறுப்பவர் கரும்பின் தேனும், மகளிர் குவளையும் தந்து விருந்தினரைச் சிறப்பிப்பர். அவன் தமிழ் வளர்க்கும் சால்பு நிறைந் திருந்ததை, “மலையின் இழிந்து மாக் கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லாம் நின்னோக்கினரே” என்பதனால் சிறப்பித்துக் காட்டு கின்றார்.

இவரது புலமை நலத்தை விளக்கும் பாட்டுக்கள் பலவும் முல்லைக் காட்டின் இயல்பை எடுத்துப் பகர்கின்றன. முல்லைக் காடு செம்மண்ணிலமாக உள்ளது; அங்கே நிற்கும் மரங்களில் பூத்து விளங்கும் பல நிறப் பூக்களில் நீல நிறமுடைய பூக்கள் காடனாரது புலமைக் கண்ணுக்கு இன்பம் செய்கின்றன. செம் மண் பரப்பில் நீலமணி போலப் பூக்கள் வீழ்ந்து கிடப்பதை மணிமிடைப் பவளம் எனப் புனைந்து கூறுவாராய், மடப்பிணை இரலையொடு கூடிக் குருந்த மரத்தின் நிழலில் வதிவதும், வண்டு பாடுவதும், பிடவம் மலர்வதும் மயில்ஆடுவதும் செய்ய, “வரி மணல் மணிமிடைப் பவளம் போல அணி மிகக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப், புலனணி கொண்ட காரெதிர் காலை” என்றும், “செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில், குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி, மணிமண்டு பவளம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக் கார்கவின் கொண்ட காமர் காலை” என்றும் இவர் கார் காலக் காட்சியைவைத்து இனிமையுற எடுத்தோதுகின்றார். காடுகளில் மயில்கள் தோகையை விரித்தாடும் காட்சி, மகளிர் ஆடுவது போலும் அமைதி கொண்டு தோன்றுவதை, “தோகை, காமர் கலவம் பரப்பி ஏமுறக், கொல்லை யுழவர் கொழுநிழ லொழித்த வல்லிரைக் குருந்தின் வாங்குசினை யிருந்து கிளிகடி மகளிரின் விளிபடப் பெயரும்” என்பது இவரது சொல்லோவியம். “ஆடுதலைத் துருவின் தோடு ஏமார்ப்பக் கடைகோற் சிறுதீ அடைய மாட்டித், திண்கால் உறியன் பானையன் அதளன், நுண்பல் துவலை யொருதிறம் நனைப்பத் தண்டுகா லூன்றிய தனிநிலை இடையன்” என இடையனது இயற்கை நலத்தை இன்புற இசைப்பது கண்டு போலும். சான்றோர் சிலர் இவரை இடையர் இனத்திற் சேர்த்தனர். இவர் பாடிய பாட்டுக்கள் பல ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு.

மணவினை முடித்து மனையறம் புரிந்து வரும் தலைமகன், கடமை காரணமாகத் தோன்றிய வினையொன்றை முடித்தற்கு ஒருகால் தலைவியைப் பிரிந்து சென்றான். வினைமேற் சென்றது, தலைமக்கள் வாழ்க்கைக்குப் புகழும் இன்பமும் நல்கும் பொற் புடைமைகண்டு, அவன் குறித்த காலம் நோக்கிப் பிரிவாற்றி யிருந்தாள் தலைமகள். வினைமேற் செல்லும் ஆடவர்க்கு, வினைநிகழும் காலத்து, உள்ளம் பிரிந்துறையும் காதலிபாற் செல்வதில்லை. உள்ளம் முற்றும், வினை நன்கு வாய்த்துச் செப்பமுற முடியுங்காறும் அதற்கேற்ற செயல் முறைகளைச் சூழ்ந்த வண்ணம் இருத்தலின், மறைந்து கிடக்கும் காதலுணர்வு, வினை முடிவின்கண் சிவ்வென எழுந்து அவனைக் காதலிபால் விரைந்து செல்ல முடுகும். “கிழவி நிலையே வினையிடத்து உரையார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” என ஆசிரியரும் கூறுதல் காண்க. மேற்கொண்ட வினை முடிந்ததும் தலைமகற்குத் தன் மனைவி பால் நினைவுண்டாயிற்று. மனை நோக்கி மீளலுற்றவன் தன் தேரைப் பண்ணச் செய்து பாகனை நோக்கித் தன் காதலியின் இயல்பைக் கூறுவானாய்க் “காதலி யாவாள், மனையின்கண் இரவும் பகலும் எப்போதும் வரு விருந்து நோக்கி ஓம்புதலில் பெரு விருப்ப முடையள்; யாம் அவளிற் பிரியுங்கால் வற்புறுத்த பருவம் நோக்கி நம்மை நினைந்து அவள் ஆற்றியிருக்கும் பெருங் கற்பினள்; அவள் உறையும் ஊர், தம்மை மேய்க்கும் இடையன் தண்டுகால் வைத்த தனி நிலையுற்று ஒருபால் மழைத்துளி நனைப்ப நின்று, வாயிதழை மடித்து எழுப்பும் விளிக்குரலைக் கேட்கும் ஆட்டினம் பாது காப்புற்றமை எண்ணி அவனைச் சூழ்ந்து தங்கும் காட்டிடத்த உளது காண்” என்று சொல்லுகிறான்.

தலைமகனுடைய கூற்றின்கண், மேற்கொண்ட வினை முடியுங்காறும் காதலியின் காதலை நினையாதிருந்த தலைவ னுடைய கட்டாண்மையுள்ளம், வினைமுடிந்தவிடத்து அதனை நினைந்து இன்புறுவதும், அவ்வின்பம் தானும் அவள் தன் மனைக்கண்ணே இருந்து செய்யும் விருந்தின்மேல் நிற்பதும், அவளை விரைந்து சென்று அடைய வேண்டுமென எழுந்த வேட்கையை வெளிப்பட மொழியாது, அவள் உறையும் ஊர் புறவின்கண்ணது என்பதும், தன் வரவு கேட்கும் சுற்றத்தார் மகிழ்வரென்பதும் அமைந்திருப்பது கண்ட இடைக்காடனார் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

வானிகுபு சொரிந்த வண்பெயற் கடைநாள்
1பானை கொண்ட பல்கால் மெல்லுறி
ஞெலிகோற் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத் திட்ட பால்நொடை இடையன்
நுண்பஃ றுவலை ஒருபுறம் நனைப்பத்
தண்டுகால் வைத்த 2தனிநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி 3ஏமார்ந் தல்கும்
புறவி னதுவே பொய்யா யாணர்
அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே.

இது, வினைமுற்றி 4மீளலுறும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

உரை
வான் இகுபு சொரிந்த வண்பெயல் கடைநாள்- வானம் கால் வீழ்த்துச் சொரிந்த வளவிய மழை பெய்த மாரிக்காலத்து இறுதியில், பானை கொண்ட பல்கால் மெல்லுறி - பானை வைக்கப்பட்ட பல கால்கள் வாங்கிப் பின்னிய மென்மையான உறியின் கண்; ஞெலி கோல் கலப்பை அதளொடு சுருக்கி - தீக்கடைக்கோல் முதலிய கருவிகளை இடப்பெற்ற சிறு பையைத் தோற்பைக்குள் வைத்து வாயைச் சுருக்கிக் கட்டி; பறிப்புறத்திட்ட பால் நொடை இடையன் - பனை யோலையாற் பின்னப்பட்ட பாயை முதுகிடத்தே கொண்ட பால் விலை கூறும் சொல்லின னாகிய இடையன்; நுண்பல் துவலை ஒருபுறம் நனைப்ப - நுண்ணிய பலவாய மழைத்துளி முன்புறத்தே ஒருபால் நனைக்க; தண்டு கால் வைத்த தனிநிலை மடிவிளி-கையில் தாங்கி நிறுத்திய நெடிய கோலை யூன்றி அதன்மேல் ஒருகாலை வளைத்து வைத்து நிற்கும் தனித்த நிலையும் மடித்த வாயினின்று எழும் விளியொலியும் முறையே கண்டும் கேட்டும்; சிறுதலைத் தொழுதி ஏமார்ந்து அல்கும் - சிறுத்த தலையையுடைய ஆட்டின் திரள் அவனது பாதுகாப்படைந்து சூழ்ந்து தங்கி மகிழும்; புறவினது - முல்லைக் காட்டிடத்தே யுளதுகாண்; பொய்யா யாணர் - இடையறாத புது வருவாயை யுடைமையால்; அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்-இராப் பொழுதா யிருப்பினும் வந்த விருந்தை விரைந்து விரும்பி ஏற்றுப் புறந்தரும்; முல்லை சான்ற கற்பின் - கணவன் தெளித்த சொல்லைத் தேறியிருத்தற்கு வேண்டும் திண்மையமைந்த கற்பினையும்; மெல்லியல் குறுமகள்-மெல்லியற் பொறையும் உடைய இளையவளாகிய காதலியாவாள்; உறைவு இன் ஊர் - உறைதலால் இனிமையை யுடையதாகிய ஊர்; ஆகலான், நீ தேரை விரையச் செலுத்துக எ.று.

உறைவினூர் புறவினது என முடிக்க, இடையன், துவலை நனைப்ப, கால்வைத்த தனிநிலை கண்டும், மடிவிளி கேட்டும், தொழுதி ஏமார்ந்து அல்கும் புறவு என இயையும். உவக்கும் குறுமகள், கற்பின் குறுமகள், மெல்லியற் குறுமகள் என இயைக்க. ஆகலான் முதலாயின குறிப்பெச்சம். வான் இகுபு சொரிதல், மழை கால் வீழ்த்துப் பெய்தல். வண்பெயல், வளவிய பெயலையுடைய மாரிக்காலம் என அன்மொழித் தொகை யாக்குக. வாடைக்காற்றும் சில்பெயலும் உடைய கடைமாரிக்காலம் என்றற்கு, வானிகுபு சொரிந்த வண் பெயற் கடைநாள் என்றார். “வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்1” என்றும் “தைஇ நின்ற தண்பெயற் கடைநாள்2” என்றும் சான்றோர் குறித்தல் காண்க. கூழ் கொண்டு செல்லும் பானை உறியிடை வைத்து எடுத்துச் செல்லப்படுவது பற்றிப் பானை கொண்ட உறி என்றும், பல கால்களாக வகுத்துத் திரித்துப் பின்னப்படுவதுபற்றிப் பல்கால் என்றும், தோளிற் கிடப்பதுபற்றி மென்மையுற அமைக்கப் பெற்றமை தோன்ற மெல்லுறி என்றும் கூறினார். “திண்கால் உறியன் பானையன் அதளன், நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்தண்டு காலூன்றிய தனிநிலை யிடையன்1” என்று பிறாண்டும் இவரே கூறுதல் காண்க. ஞெலிகோல். தீக்கடைகோல். “அந்நுண் அவிர்புகை கமழக் கைம்முயன்று, ஞெலிகோற் கொண்ட பெருவிரல் ஞெகிழிச் செந்தீ2” எனப் பிறரும், பறி பனையோலைப் பாய்; “பறிப்புற இடையன்3” எனச் சான்றோர் குறிப்பர். பால் நொடை, பால்விலை நெடுவெளியில் தனி நிற்றலின், தனிநிலை கூறினார். நாற்றிசையும் பரந்து சென்று மேயும் ஆட்டினத்தைத் தான் காண்டற்கும் தன்னை அவை காண்டற்கும் தனிநிலை வேண்டப்பட்டதென உணர்க. வாயிதழையும் நாவையும் மடித்துக் கையிற் சுட்டுவிரலை வளைத்து வைத்து எழுப்பும் ஒலி மடிவிளி எனப்பட்டது; மடிவிளி சேய்மையிற் சென்று மேயும் ஆட்டினைத் தன்பால் வருவித்தற்கு எழுப்பப்படும்; “காடுறை இடையன் ஆடுதலைப் பெயர்க்கும் மடிவிடு வீளை4” என்பது காண்க; சிறுதலைத் தொழுதி, ஆட்டின் திரள் “சிறுதலைத் துரு5” என்றும், “சிறுதலை ஆயம்6” என்றும் சான்றோர் கூறுப. ஏமார்தல் பாதுகாப்புறுதல், “ஏமாரார், கோங்கேறினார்7” என்பதனாலு மறிக. யாணர், புதுமை; புதிய வருவாய் மேற்று. பொய்யாமை, வருவாய் இடையீடுபட்டுக் குன்றாமை, இரவின்கண் விருந் தோம்பல் இனிதன்று என்னும் வழக்குப் பற்றி, அல்லி லாயினும் விருந்து வரின் உவக்கும் என்றார். முல்லை இருத்தல் என்னும் கற்பு நெறி.

வினை முற்றியதும் மீளலுற்ற தலைமகன் உள்ளம், தான் பிரிந்து போந்த தலைமகளாம் காதலியை நினைத்ததும், அவட்குத் தான் மீளுவதாகக் குறித்த கூதிர்ப் பருவம் நெஞ்சின்கண் எழுந்து தோன்றினமையின், அதனை வான் இகுபு சொரிந்த வண்பெயற் கடைநாள் என்று மொழிந் தான். அக்காலத்தே கானமெங்கும் கார்மழையால் தழைத்து இனிய காட்சி நல்குவதும், இடையர்கள் கானத்தில் தம் ஆட்டினத்தை மேய விட்டுப் பேணிப் புறந்தருவதும், தலை மகள் சுற்றம் சூழ்வர மனையறம் புரிந்தொழுகும் மாண்பினை நினைவுறுத்தவே, அதனைச் சிறிது விரிவாகக் கூறினான். இங்ஙனம் தலைமகளது மனைமாண்பு தோன்றவும், மாண் புடைய அவளை உடனே சென்று காண்டல் வேண்டும் எனப் பெருவேட்கை எழுதலும், அதனைப் பாகற்கு வெளிப்படக் கூறல் வேண்டாமையின் குறிப்பால் அவள் உறையும் ஊர் புறவின் கண்ணது என்றான். விருந்தோம்புவது தான் மனை யறத்தின் மாண்புடைய நோக்க மென்பதைத் தலைமகள் நன்கு அறிந்து ஒழுகும் இயல்பினள் என்பான். அல்லி லாயினும் விருந்து வரின் உவக்கும் என்றும், அந்த நல்லறம் தான் இல்லாமையின் பெருக நடைபெறாமையின், தலைமகள் உள்ளத்தே வருத்தம் எய்திற்றாயினும், தான் வற்புறுத்த சொல்லைத் தேறியிருக்கும் கற்பு நலத்தை வியந்து, முல்லை சான்ற கற்பின் என்றும். கற்பால் பெருந்திண்மை யுடைய ளாயினும், செலவு தாழ்க்குமாயின் ஆற்றாது பெரு வருத்தம் எய்தி வேறுபடும் மென்மை மிக்கவள் என்றற்கு, மெல்லியல் குறுமகள் என்றும், ஆண்டு அவள் இருத்தலால் புறவின் கண்ணதாகிய ஊர் இனிமை மிகுதலால் நாம் இதுகாறும் இருந்த இவ்விடம் இப்பொழுது இன்னாதாயிற்று என்பான். உறைவின் ஊர் என்றும் கூறினான். “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு1” என்றும், “வினை கலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து, மாலை அயர்கம் விருந்து2” என்றும் ஆசிரியர் திருவள்ளுவ னார் கூறுதல் காண்க.

இடையன் மடிவிளி கேட்டுச் சிறுதலைத் தொழுதி ஏமார்ந் தல்கும் என்றது, நமது வரவு கேட்டுத் தலைமகள் சுற்றம் சூழ நம்மை எதிரேற்று இன்புறுவள் என்றானாம்.

கண்ணகன் கொற்றனார்


கண்ணகன் என்பாருடைய மகனாதல் பற்றி இச்சான்றோர் கண்ணகன் கொற்றனார் எனப்படுகின்றார். கண்ணகனார் என்ற பெயருடைய சான்றோர் தொகைநூல்களிலும்
இந்நூலிலும் காணப்படுகின்றனர்; இதனால், கண்ணகன் என்று பெயர் வைப்பது பண்டைநாளில் தமிழரிடையே இருந்து வந்தமை தெரிகிறது. கண்ணகனார் என்ற பெயர் பற்றிய ஆராய்ச்சியில் “கண்ணன் நாகன் என்பது கண்ணகனாரென்று பிழைபட எழுதி யிருந்தமையால் இருந்த படியே பதிப்பிக்கப் பட்டது” என்று திரு. அ. நாராயணசாமி ஐயரவர்கள் குறித்துள்ளார்கள். ஒருகால் அஃது உண்மை யாயினும், கிடைத்த ஏடுகள் பல வற்றிலும் கண்ணகனார் என்ற பாடமே கொள்ளப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. இச்சான்றோர் பெயரிலும் கண்ணகன் கொற்ற னார் என்பதே காணப்படுதலால், இப்படியும் ஒருபெயர் இருந் திருக்கலாம் என எண்ணுதற்கு இடம் வலியுறுகிறது. கண்ணக னார் என்பது கண்ணனாகனார் என்பதன் மரூஉ முடிவாய் நின்று பின்பு அதுவே மக்கட்குரிய இயற்பெயராக மாறி யிருக்கலாம். இக்கண்ணகன் என்பது, சில ஏடுகளில் கண்ணகாரன் என்றும், கண்ணகரான் என்றும் காணப்படுகிறது. கண்ணகன் என்பதை எழுதுமிடத்து னகர மெய்யை அடித்துத் திருந்த எழுதிய நிலை, கண்ணகாரன் எனவும் கண்ணகரான் எனவும் படிக்கப்பட்டு விட்டதாகக் கோடலே முறையாகும். ஏடுகளில் மெய்யெழுத்தின் தலையில் புள்ளியிராது. னகர மெய் அடிக்கப்படுமாயின் (ன) எனப் பக்கத்தே புள்ளியிடப்பெறும். அப் புள்ளியும் கால் கோல் அரைவட்டமாக நிற்கும். படிப்பவர் அதனை ஏற்றவாறு படித்து விடுவர்; எழுதுவோர் அதனை எழுதிவிடுவர். ஏடெழுதுமிடத்து, ஒருவர் படிக்க ஒருவர் எழுதுவர். ஒருவரே பார்த்து எழுத முடியாது. இதுபற்றியே “தவத்துக்கு ஒருவர் தமிழுக்கு இருவ்ர்” என்பது பழமொழியாயிற்று.

தலைமக்களிடையே காதலுறவு தோன்றிக் களவு நெறியில் வளர்ந்து வருகையில், தலைமகள் உள்ளத்திற் பெருகிய காதல், அவனையின்றி ஒரு கணமும் அமையாத நிலையை எய்தவும், தோழி வரைந்து கொள்ளுமாறு தலைமகனை வற்புறுத்தினாள்; அவனும் உண்மையை உணர்ந்து வரைதற்குரிய முயற்சியினைச் செய்யலுற்றான். அந்நிலையில் தலைமகளது காதல் மாண்பை அறியாத அவளுடைய பெற்றோர், வேற்றோர் வரைவு வேண்டி விடுத்த சான்றோர்க்கு உடன்படச் சமைந்தனர். அதனைத் தலைமகளும் தலைமகனும் உணர்ந்தனர். வேறுவழியின்மை கண்ட தலைமகன் தலைமகளைத் தன்னுடன் கொண்டுதலைக் கழியத் துணிந்தான். குறித்த நாளில் தோழி துணைசெய்யத் தலைவி தலைவனுடன் தன் மனையின் நீங்கிச் சென்று சேர்ந்தாள். இருவரும் தலைமகனது பேரூரில், “கொடுப்போர் இன்றியும் கரணமொடு” நடக்கும் வதுவைமுறையில் சான்றோர் திருமுன் மணம் புரிந்துகொண்டு மனையறம் மேற்கொண்டனர். ஊர வரும் சான்றோரும் பரவத் தன் மனையின்கண் தன் மகட்கு “நாடறி நன்மணம்” செய்து மகிழும் சிறப்புத் தனக்கு எய்தாமை யால், தலைமகளைப் பெற்ற தாய் பெரிதும் வருத்தமுற்றாள். தன் மனையின்கண் இருந்த போது தன்மகள் ஏனை மகளிருடன் கூடி விளையாடிய ஓரையாட்டை நினைந்தாள்; தன் மனையில் நட்டு வளர்த்த நொச்சிச் செடியினை நோக்குந்தோறும் அவளது உள்ளம் உருகித் தண்ணீராய்க் கண்வழிப் பெருகிற்று தலைமகள் பேணி வளர்த்து மொழிகற்பித்த கிளி “அன்னாய் அன்னாய்” எனப் பேசும்போதெல்லாம் தாயுள்ளம் தாங்கரும் துயரத்தால் தடுமாற்றமுற்றது; தலைமகள் போக்கு மேற்கோடற்கு முன்னாள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தாள். குற்றம் யார்மேற்று என ஆராய்ந்தாள். மகள் வழுவிலள் என்று கண்டாள், அவள் உள்ளத்தில் தோன்றிப் பெருகி உடன்போக்கிற்குத் துணிந்த காதலறத்தை வியந்தாள். ஊர்மகளிர் தம்மிற் கூடி உரைத்த உரையைக் கேள்வியுற்ற யான்அவளை நோக்கி, “அன்னாய் ஊரவர் உரைக்கும் இன்னா இன்னுரையினைக் கேட்டி, என்று ஒன்றும் அறியாதேன் போலக் குறிப்பாய் மெல்ல உரையாடி யிருக்கலாம்; அவ்வாறின்றி, ஒருகால், அவளை நோக்கி,”நின் கூந்தல் புதுமணம் நாறுகின்றது" என்று வினவினேனாக, அதற்கு அவள் உரைத்த விடையின் கருத்தை ஆராயா தொழிந்தேன். அஃது இப்பொழுது விளங்குகிறது. அதனை அப்பொழுதே தெளிந்து வாய்காவா தொழிந்தது என் குற்றமே" என்று எண்ணி வருந்தினாள்.

இக்கூற்றின்கண், மகட்போக்கிய தாய், மகளது குற்றம் நினைந்தும், கொண்டு தலைக்கழிந்த தலைமகனை நொந்தும் உரைத்தற் குரிய ளாயினும், அவற்றைச் செய்யாது காதலுணர்வின் மாண்பு நினைந்து வியப்பதும், மகளுடைய குறிப்புரையை நினைந்து தான் வாய் காவாது ஒழிந்த குற்ற முணர்ந்து வருந்து வதும், மகளது காதல் ஒழுக்கத்தை மனத்தால் ஆராய்ந்து குற்றமின்மை தேர்வதும் கண்ட கொற்றனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

ஐதே காமம் அம்ம1 ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்
தோரை ஆயமும் நொச்சியும் காண்டொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளையெனக்2 கூஉம் இளையோன்
வழுவிலள் மன்ற3தானே குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்டிசின் 4என்னா
அறியேன் போல உயிரேன்5
நறிய நாறும்நின் கதுப்பென் றேனே6

இது, மகட்போக்கிய தாய் கூறியது; மனைமருட்சியு மாம்7

உரை
ஐது காமம் - வியப்புடையதாய் இராநின்றது காதற்காமம்; அம்ம-; ஒய்யென - விரைவாக; தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து -புதுவதாகக் கொணர்ந்து பரப்பிய மணல் நிறைந்த அழகிய மனைமுற்றத்தில்; ஓரைஆயமும் நொச்சியும் காண் டொறும் - ஓரைவிளையாட் டயரும் என் மகளின் ஆய மகளிரையும் அவள் நட்டு வளர்த்த நொச்சிச் செடியினையும் காணுந்தோறும்; நீர்வார் கண்ணேன்; கலுழும் என்னினும் - நீர் சொரியும் கண்களையுடையேனாய்ப் புலம்பும் என்னினும்; கிள்ளையும் கிளையெனக் கூஉம் - அவள் வளர்த்த கிளியும் அன்னாய் எனக் கூவி வருந்துகிறது; இளையோள் வழுவிலள் - இளமகளாகியஅவள் குற்றமுடைய ளல்லள்; மன்ற - தெளிவாக; குழீஇ - தம்மிற் கூடிக்கொண்டு; அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் - அம்பல் பொருந்திய பழமையான இவ்வூரிலுள்ள அலர் தூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியர் உரைக்கும்; இன்னா இன்னுரை கேட்டிசின் என்னா -கேட்டற்கு இன்னாமை யுடைத்தாய்க் காதலொழுக்கத்துக்குச் சிறந்த தாகிய அலருரையைக் கேட்பாயாக என்று; அறியேன் போல - ஒன்றும் அறியாதவள் போல; உயிரேன் - மெல்ல உரைத் தேனுமல்லேனாய்; நறிய நாறும் நின் கதுப்பு என்றேன் - புதிய நறிய மணம் கமழாநின்றது நின் கூந்தல் என்று வாய்காவாது கூறினேன் ஆகலான் எ-று.

அம்ம, காமம் ஐது, நகர்முற்றத்து ஆயமும் நொச்சியும் காண்டொறும். ஒய்யென நீர்வார் கண்ணேனாய்க் கலுழும் என்னினும் கிள்ளையும் கூவும்; இளையோள் வழுவிலள்; பெண்டிர் குழீஇ உரைக்கும் இன்னாஇன்னுரை கேட்டிசின் என்னா அறியேன் போல உயிரேனாய் நின் கதுப்பு நறிய நாறும் என்று வாய்காவா தொழிந்தே னாகலான் யானே வழுவுடையேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஐ, வியப்பு, காமம் என்றது காதற் காமத்தை; “வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது, காதற்காமம்1” என்று குன்றம் பூதனார் கூறுதல் காண்க. ‘அம்ம’, உரையசை, ஞெமிர்தல், பரத்தல், இது ஞெமர்தல் எனவும் வழங்கும். “வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகடு2” என்பது காண்க. நகர், பெருமனை ஓரை, மகளிர் ஆடும் நீர் விளையாட்டுவகை. நொச்சி, நொச்சிச் செடி; இதனை நன்கு வளரவிடின் பெரிய மரமுமாம். இதன் நிழவிற் சிறு பெண்கள் மணல்வீடு அமைத்து விளையாடுவர். கண்ணேன், உயிரேன் என்பன முற்றெச்சம். கிளையெனக் கூஉம் மொழியால் தன் இனமெனக் கருதி அன்னாய் எனக் கூவும். பெண்டிர் குழீஇ என மாறிக்கூட்டி உரைக்கும் என ஒருசொற் பெய்து இயைக்க. உரைக்கும், சொல்லெச்சம்; இசை யெச்சமுமாம். அம்பல், அயலறியாவாறு இருவர் தம்முள்ளே பேசிக்கொள்ளும் பழிப்புரை; அலர் இருவர்க்கு மேற் பலர் கூடி உரையாடும் பழிப்புரை. “அம்பலும் அலரும் களவு3” என்ற இறையனார் அகப்பொருள் உரை காண்க. கேட் டற்கு இன்னாதாயினும், இன்பப்பயன் விளைவித்தலால் உரை, இன்னா இன்னுரை எனப்பட்டது. உயிர்த்தல், மென்மையாக உரைத்தல். ஆகலான் என்பது முதலாயின குறிப்பெச்சம்.

தலைமகள் உள்ளத்தில் தோன்றிப் பெருகிநின்ற காதற் பெருக்குத் தன்னைப் பெற்ற தாயையும், உடன்பயின்ற மகளிரையும், பெற்ற மகவு போல் வளர்த்த நொச்சியையும், கிள்ளையையும் தொடர்பற மறக்கச் செய்தமை கண்டு வியந்து கூறுகின்றா ளாகலின், ஐதே, காமம் அம்ம என்றும், காண்பார் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து விளையாடற்கு விருப்பத்தை உண்டுபண்ணுமாறு புதுமணல் பரப்பிப் பொலிவுறுத்தப் பெற்ற பெருமனை என்றற்குத் தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம் என்றும் கூறினாள். “ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத் தருமணல் இயல்வோள்1” என்பது காண்க. ஓரை, நீர்விளையாட்டு; பந்து எறிந்து விளையாடும் விளையாட்டு வகையுமாகும். உடனிருந்து ஓரை ஆடும் மகளிர், ஓரை மகளிர்எனப்படுவர் இளமகளிர் பெரும்பாலும் மனை முற்றத்து மணற்பரப்பில் ஆடுவரென அறிக. “சீர்கெழு வியனகர்ச் சிலம்பு நக இயலி, ஓரையாயமொடு பந்து சிறிது எறியினும்2” என்பதனால் ஈதுணரப்படும். மனைக்கண் நொச்சி நட்டு மகளிரால் வளர்க்கப்படுவது, பெருஞ்செல்வரது பெருமனையில் நிகழும் மரபு; “மனைவளர் நொச்சி”3 எனவும், “மனையிள நொச்சி”4 எனவும் வருதல் காண்க. மகளொடு தொடர்புடைய மகளிரையும் பொருள்களையும் காணும் போது மகள் நினைவு நெஞ்சின்கண் எழுதலின், அம்மகளைப் போக்கிய தாய்க்குப் பெருந் துயருண்டாதல் இயல் பாகலான், ஓரை யாயமும் நொச்சியும் காண்டொறும் நீர்வார் கண்ணேன் கலுழும் என்றாள். “உள்ளினும் உள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்ன என் அணியியற் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே5” என்று பிறாண்டும் மகட் போக்கிய தாய் புலம்பிக் கூறுவது காண்க. இனி, கிள்ளையைத் தான் பெற்ற பிள்ளைபோல வளர்த்துத் தன் மொழி கற்பித்தாளாகலின், அவளை நோக்கி அது கூறுவது நற்றாய்க்கு மிக்க வருத்தம் செய்தலின், என் னினும் கிள்ளையும் கிளை யெனக் கூஉம் என்றாள்; தன்னினும் கிள்ளை உள்ள துணரும் மனவுணர் வில்லதா கலின், அதன் கூக்குரல் துயர் மிகச் செய்வ தாயிற் றென்க. “பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும், ஆயமும் ஒன்றும் இவை நினையாள் - பால் போலும், ஆய்ந்த மொழி யினாள் செல்லுங் கொல் காதலன்பின்”1 என்பது காண்க.

இவ்வண்ணம் வருத்தம், மிக்குக் கண் கலுழந்து வருந்தும் தாயினது உள்ளம், பெற்ற தாயர் முதலாயினாரை விடுத்துக் காதலன் பின் சென்றது வழுவன்றோ என எழும் ஆராய்ச்சியில் தலைப்பட்டு, இளமை யுடைய ளாதலின், தலைமகள்பால் வழுவில்லை என்பது உணர்ந்து, இளையள் வழுவிலள் மன்ற என்றாள். ஊரின்கண் எங்கேனும் ஒரு முடுக்கரில் இன்னாரென்று அறியாத இருவர் செவிக்குள் நிலவும் பழிப் புரை அம்பலாய் அரும்புதவால், அதனை ஊர் மேல் வைத்து அம்பல் மூதூர் என்றும், பின்னர், மகளிர் கூட்டத்திற் பரவிப் பலர் கேட்குமளவிற் சொல்லப்படுவது அலராதலால், அதனை ஊர் மேல் வைத்து அம்பல் மூதூர் என்றும், பின்னர், மகளிர் கூட்டத்திற் பரவிப் பலர் கேட்குமளவிற் சொல்லப்படுவது அலராதலால் மகளிர்மேலேற்றி அலர்வாய்ப் பெண்டிர் என்றும் கூறினவள், அவ்வலருரையால் தலை மகற்கும் தலைமகட்கும் தொடர்பு வற்புறுத்தப்பட்டுத் திரு மணம் தடையின்றி நிகழ்தற்கு ஏதுவாதலால், இன்னா இன்னுரை என்றும், அதனை மனையவர் அறியாமலும், தான் அவளது களவினை அறியாதாள் போலவும், நயமாக, மெல்ல உரையாது, அலர் கேட்கப் பிறந்த உள்ளத்துடிப்பினால் கடிந்து கேட்டமை தன்பால் நிகழ்ந்த குற்றமாக எண்ணி வருந்துகின்றாளாகலின், இன்னா இன்னுரை கேட்டிசின் என்னா அறியேன் போல உயிரேன் என்றும், வாய் திறந்து வெம்மை தோற்றும் குரலில் கடிந்து உரைத்ததனை, நறிய நாறும் நின்கதுப்பு என்றேன் என்றும் கூறினாள். தனக்கு இன்னாதாகவும் தலைமகட்கு இனிதாகவும் அமைந்தமையின் அலரை இன்னா இன்னுரை என்றதும், அறியாதார் போல உரைப்பது கேட்போர்க்கு வழுவுரை யாகாமையும், “நின் கதுப்பு நறிய நாறும்; இந் நறுமை நின்பால் பண்டு தோன்றிய தன்று. இப்பொழுது புதிது தோன்றி நின் ஒழுக்கத்தில் வேறுபாடுண்மையைக் காட்டுகிறது; இது நினைக்கேயன்றி நீ பிறந்த குடிக்கும் இழுக்காம்” என்று உரைத்துக் கடிந்தவாறும் விளங்க விரித்துக் கூறுவதால் செவிலி ஒருவாறு ஆற்றாமை நீங்குவது இப் பாட்டின் முடிபயன்.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்


காஞ்சிமா நகர்க்குக் கச்சிப்பேடு என்பதும் பெயர். இங்கே சான்றோர் பலர் தோன்றியிருக்கின்றனர். காஞ்சிக் கொற்றனார் என்போரும், கச்சிக் கதக்கண்ணனார் என்போரும் இந் நகரத்தவ ராவர். சங்க காலத்தில் தொண்டை வேந்தர்களுக்குத் தலை நகரமான இது, “பல்வேறு வகையிற் பணிந்த மன்னர். தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் செவ்வி பார்க்கும் செழுநகர்” எனவும், “கருங்கைக் கொல்லன் இரும்பு விசைத் தெறிந்த, கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்து, இறையுறை புறவின் செங்காற் சேவல், இன்றுயில் இரியும் பொன்துஞ்சு வியனகர்1” எனவும் பாராட்டப் பெற்றுள்ளது; சங்க காலத்தை யடுத்து, மணிமேகலை முதலியன தோன்றிய காப்பியக் காலத்தில், “தேவர் கோமான் காவல் மாநகர், மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய பொன்னகர்2” என்று போற்றப்பட்டுள்ளது. கச்சி நகரைச் சூழ்ந்த நாடு காஞ்சி நாடு என அந்நாளில் வழங் கிற்று. “பொன்னெயிற் காஞ்சி நாடு3” என வருதல் காண்க. எனவே, கச்சி மாநகர்க்குக் காஞ்சி யென்னும் பெயர் சங்க காலத்துக்கும் மணிமேகலை காலத்துக்கும் இடையில் தான் முதற்கண் தோன்றினமை பெற்றாம். கச்சிப்பேடு என்னும் பெயர் பல்லவர் காலமுதல் நெடுங்காலம் வரை வழக்கிலிருந்தமை கல்வெட்டுக்களால் வற்புறுத்தப்படுகிறது. இந்நகரைப் பற்றிய குறிப்புக்களை ஆராயுமிடத்துக் காஞ்சி நகரம் தாமரைப்பூ வடிவில் அமைந்திருந்தமையும், நடுவிடம் கச்சியெனவும், சூழவுள்ள பகுதி கச்சிப் பேடு எனவும் வழங்கினமையும், பின்னர்க் காஞ்சி மாநகர் என்ற பெயரே நாளடைவில் பெருவழக்காயின மையும் உணரப்படுகின்றன. பிற்காலத்தே புத்தரும் சமணரும் வந்து தங்கிய போது, காஞ்சிநகர் என்ற பெயர் வடவர்க்கு நன்கு தெரிந்தது; மதில் சூழ்ந்த நகரைப் புரம் என்னும் வடநூன் மரபுபற்றி, காஞ்சிபுரம் என்றாகி, அதுவே இன்றும் வழங்கி வருகிறது. காஞ்சிபுரமாகி நிற்கும் பண்டைய கச்சிப்பேட்டின் கண் தச்சுத் தொழில் புரிந்து கொண்டு தமிழ்ப் புலமையால் நல்லிசைச் சான்றோராய் விளங்கினமையின். இச் சான்றோர் கச்சிப்பேட்டுத் தச்சனார் எனவும், இவரினும் இளையோர் ஒருவர் இவர்வழி நின்று சான்றோர் நிரலில் இருந்தமையின், இருவரையும் வேறுபடுத்தப் பெருந்தச்சனாரெனவும், இளைய வரை இளந்தச்சனார் எனவும் சான்றோர் வழங்கினர். மேலும், தச்சுத் தொழிலில் புகழ்மிக்கவர்க்கு அரசர்கள் பெருந்தச்சன் என்ற பட்டம் நல்குவது இடைக்காலச் சோழபாண்டியர் ஆட்சியிலும் வழக்காக இருந்துளது. அதனால் இச்சான்றோர் பெருந்தச்சனார் எனப்படுகின்றார் என்பதும் ஒன்று. இவரது இயற் பெயர் மறைந்து போயிற்று. இவரைப்பற்றி வேறு குறிப்பொன்றும் கிடைத்திலது. இவர் பாடியனவாக இத்தொகை நூற்கண் இரண்டு பாட்டுக்களே உள்ளன. இப்பாட்டிலும் இடையே அடிகள் சிதைந்தும் பிறழ்ந்தும் இருக்கின்றன.

இடந்தலைப்பட்டும், தோழியின் நற்றுணையால் பகற்குறி இரவுக்குறியாகிய இருவகைக் குறியிடத்துக் கண்டும் கூடியும், தத்தம் உள்ளத்தில் தோன்றிய காதலுறவைப் பெருக்கி வந்த தலைமக்களது ஒழுகலாற்றில் நாட்கள் சில கழியக் கண்ட தோழி, இவ்வொழுக்கத்தை நீளவிடாது தடுத்துத் தலைவனை வரைந்து கோடற்கண் கருத்துச் செல்லுமாறு தூண்டும் அரும்பணியை மேற்கொண்டாள். அறிவும் செறிவும் ஆண்மையும் படைத்த தலைமகனாதலின், அவன்முன் தான் உலகியலை மிக அறிந்து உயர்ந்தாள்போல, விரைய வரைந்து கொள்க என வெளிப் படையாகக் கூறுவது தோழிக்கு நயமாகத் தோன்றவில்லை. தலைமகன் உயர்வுக்கும் தோழியாகிய தனது தாழ்வுக்கும் இவ்வாறு உரையாடுதல் நல்லொழுக்கமாகாது என்பதை அவள் நன்கு உணர்ந்தாள். தலைமகனையும் தலைமகளையும் போலத் தோழி தலைமைச் சிறப்பு இலளாயினும், அவர்களுடைய தோழமைக்கு ஏற்ப அறிவே உள்ளமாகவும் அன்பே மொழி யாகவும் அறமே செயலாகவும் தோழியின் உருவில் அமைந்து நின்றன. அதனால் தலைமகனை வரைவுகடாவும் செயலைத் தோழி முதற்கண் குறிப்பாகச் செய்யத் தொடங்கினாள். ஒரு முறைக்குப் பன்முறை தோழி சொல்லவும், தலைமகன், தலைவி யது காதல் பெருகித் தன்னை யின்றி அமையாத அளவுக்கு வளர்க்கும் குறிப்பினால், களவொழுக்கத்தையே விரும்பி நின் றான். அவன் கருத்து அதுவாக, தலைமகட்குக் கற்பு நெறிக்கட் பெறும் அவனது அழிவில் கூட்டத்தில் அவா மிகுந்தது. அவனை நேர்நின்று நோக்கித் தன்னை வரைந்து கொள்ளுமாறு வெளிப் படையாக வேண்டுவது தனது பெண்மைக்கும் தலைமைக்கும் மாறாய் நின்றது. தோழியினது முயற்சி விரைந்து பயன் நல்காமை ஒருபுறம் நிற்க, இரவின்கண் உளவாகும் இடையீடுகள் ஒருபுறம் நின்று வருத்தத் தலைமகன் தனித்து அரிய காடுகளையும், காட்டாறுகளையும் கடந்து வருவது பெருங் கவலையை உள தாக்கி அவளது உள்ளத்தை அலைக்கத் தொடங்கிற்று. அந் நிலையில், ஒருநாள் இரவு காட்டில் பிடியொடு கூடி வாழும் பெருங்களிறொன்றுக்கும், புலியொன்றுக்கும் போர் உண்டாக, களிறு புலியாற் கொல்லப்பட்டிறந்தது. அதுகண்டு அஞ்சி அலமந்து ஓடிய பிடி வேறொரு பக்கத்தை அடையவும், அங்கே வானத்தில் குழுமிய மழை முகிலின் கூட்டம் மின்னி இடித்து முழங்கக் கண்டது. அம்முழக்கம் புலியின் முழக்கம் போன்று இருந்தமையின் பிடியானை பெரிதும் வெருவி, மூங்கிலாற் செய்யப்பட்ட தூம்பு என்னும் இசைக்கருவி போலக் கதறிப் பிளிற லுற்றது. வீழ்ந்த யானையின் தசையை அப் புலியும் அதன் பிணவும் தின்று பசிதீர்ந்து சென்று ஒன்றொடொன்று பின்னிக் கிடக்கும் பெரும் புதற்குள் ஒடுங்கிக் கிடந்தன. அருகே காட் டாற்றில் அண்மையிற் பெய்த பெருமழையால் நீர் பெருகி மிக்க விரைவுடன் ஓடிக்கொண்டிருந்தது. சிறிதுபோதில் அக்காட்டின் வழியே தன்னந் தனியனாய்த் தலைமகன் காட்டாற்றைக் கடந்து வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் தலைமகட்கு மகிழ்ச்சி ஒருபாலாக, அவனை அவ்விரவில் வருவித்த தன் அறியாமை நினைந்து ஆறாத் துயரமுற்றாள். கண்களில் நீர் ஆறுபோல் பெருகி ஒழுகிற்று. நெஞ்சம் கவலையுற்று வருந்துவ தாயிற்று. மறுநாள் தலைமகன் போந்து தலைமகள் உறையும் பெரு மனையின் சிறைப்புறத்தே நின்றான். அவனது வரவினை அறியாதாள் போல அவன் செவியில் நன்கு படுமாறு இந் நிகழ்ச்சிகளை முறையே எடுத்து அழகுறத் தொடுத்து உரைப்பா ளாயினாள்.

இவ்வுரையின்கண், தலைமகள் உள்ளதன் உண்மை கூறு முகத்தால் தலைமகன் உள்ளத்தை வரைவின்கண் செலுத்தும் மதிநுட்பம் கண்ட பெருந்தச்சனார் அதனை இப்பாட்டின்கண் வைத்துப் பாடுகின்றார்.

பெருங்களி றுழுவை தாக்கலின் இரும்பிடிக்
கருவிமா மழையின் அரவம் அஞ்சி1
2வாங்கமைக் கழையின் நரலும் பூசற்குப்
போதேர் உண்கண் கலுழவும்3 ஏதில
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கா கின்றால் தோழி4 ஆங்கண்
5பிணவுப்பசி தீரிய6 பேழ்வாய் இரும்புலி
பிணங்கரில் ஒடுங்கும் அணங்கருங் கவலைய
அவிரறல் ஒழுகும் விரைசெலற் கான்யாற்றுக்
கரையருங் குட்டம் தமியர் நீந்தி
விரவுமலர் பொறித்த தோளர்
இரவின் வருதல்7 அறியா தேற்கே.

இஃது, ஆற்றாது8 ஏதம் நினைந்து கவன்ற தலைவி சிறைப்
புறமாகச் சொல்லியது.

உரை
பெருங்களிறு உழுவை தாக்கலின் - பெரிய களிற்றி யானையைப் புலி தாக்கிக் கொன்றமையால்; இரும்பிடி - அது கண்டு அஞ்சி யோடிய பெண்யானை; கருவி மாமழையின் அரவம் அஞ்சி - தொகுதி கொண்ட மழைமுகில் செய்யும் முழக்கத்தைக் கேட்டு அஞ்சி; வாங்கு அமைக் கழையின் நரலும் பூசற்கு - வளைந்த மூங்கிலா னாகிய தூம்பு போலப் பிளிறும் ஓசையைக் கேட்டு; போது ஏர் உண்கண் கலுழவும் - பூப் போன்ற என் கண்கள் கண்ணீர் சொரியவும்; ஏதில பேதை நெஞ்சம் கவலை கவற்ற - தான் செய்யும் செயற்குரிய ஏது ஒன்றும் காணுதல் இல்லாத ஏழை நெஞ்சம் கவலை எய்தி வருத்தவும்; ஈங்கு ஆகின்று - இங்கு என் நிலை இவ்வாறாக; தோழி-; ஆங்கண்-அக்காட்டிடத்தே; பிணவுப் பசி தீரிய பேழ்வாய் இரும்புலி-பெண்புலியின் பசிதீர உண்பித்த அகன்ற வாயையுடைய பெரிய புலி; பிணங்கரில் ஒடுங்கும் அணங்கு அருங்கவலைய-கொடி கொம்புகள் தம்மிற் பின்னிப் பிணங்கிய தூறுகளின் இடையே ஒடுங்கி யிருக்கும் அச்சம் பொருந்திய அரிய கவர்த்த வழிகளையுடைய காட்டின்கண்; அவிர் அறல் ஒழுகும் விரைசெலல் கான்யாற்று-விளங்குகின்ற நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றில்; கரையருங் குட்டம் தமியர் நீந்தி-கரையில்லாத ஆழமான மடுக்களைத் தனியாக நீந்தி வருதலால்; விரவுமலர் பொறித்த தோளர்-பல வகையாக விரவிய பூக்கள் படிந்த தோள்களை யுடையராய்; இரவில் வருதல்அறியாதேற்கு - காதலர் இரவின்கண் வருதலின் அருமையை அறியாத எனக்கு எ-று.

தோழி, ஆங்கண் இரவில் கான்யாற்றுக் குட்டம் நீந்தித் தோளராய் வருதல் அறியாதேற்குக் கண் கலுழவும் நெஞ்சம் கவற்றவும் ஈங்காகின்று எனக் கூட்டி வினை முடிவு செய்க. உழுவை, புலி, தாக்குதல் கோறற் பொருட் டாகலின், ஈண்டுக் காரியத்தின்மேல் நின்றது. பெருங்களிறு விரும்பிய பிடி யென்பது தோன்ற இரும்பிடியென்றார். மின்னும் இடியும் தொக்க மழை முகில் கருவி மாமழை எனப்பட்டது. கருவி, தொகுதி, அரவம், முழக்கம். மருண்டதன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்றாற் போலப் புலி பொரக் கண்டு மருண்டு ஓடி இரும்பிடிக்கு மழை முகிலின் முழக்கம் அச்சம் பயப்பதாயிற்று. வாங்கமைக் கழை, வளைந்த மூங்கிலா னாய தூம்பு என்னும் இசைக்கருவி; இதனைப் பெருவங்கியம் என்றும், களிற்றுயிர் என்றும் வழங்குப; “கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்”1 எனவும் “கண்ணறுத் தியற்றிய தூம்பு”2 எனவும், “ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் காம்பின் உயிர்க்கும்”1 எனவும் சான்றோர் குறிப்பது காண்க. நரலுதல், முழங்குதல், கவலை, முன்னது வருத்தம்; பின்னது, கவர்த்தவழி, கவற்றல் கவலை எய்துவித்தல். பிணவு, பெண்புலி, கவலைய கான் யாறு என இயையும். அறல், நீர் காட்டாறாகலின் நீர்ப் பெருக்கிற்கு விரைவு இயல்பாயிற்று. குட்டம், ஆற்றிடையே யுண்டாகிய ஆழ்ந்த மடுக்கள், பூ நிறைந்த மரஞ் செடிகளினூடே வருதலின், விரவுமலர்பொறித்த தோளர் என்றார். நீர்ப் பெருக்கால் கரை யழிந்து காண்டற் கரிதாயினமை தோன்றக் கரையருங் குட்டம் என்றார். ‘ஆல்’ அசைநிலை.

இல்லின்கண் இருந்து கொண்டு இரவுக்குறிக்கண் தலை மகனைத் தலைக்கூடி யொழுகும் தலைமகள், பன்முறையும் இரவுக்குறி இடையீடு பட்டமை நினைந்தும். இரவின்கண் வரும் தலைமகற்கு வழியில் உளவாகும் ஏதங்களை நினைந்தும் வருந்துகின்றா ளாதலின், அவட்குக் காட்டிடை நிகழும் நிகழ்ச்சி நினைவில் தோன்ற அதனை எடுத்துத் தலைவன் கேட்க மொழிபவள், தலைமகனைச் சுட்டிப் பெருங்களிறு என்றும், அவன் வரும் வழி கொடிய விலங்குகளால் பெருந் தீங்கு விளைவிப்பன என்றற்கு உழுவை தாக்கலின் என்றும், உழுவை கொல்லுதலின் என்றதற்கு அஞ்சி அதனை நாவாற் கூறமாட்டாது அப்பொருண்மையே தோன்ற தாக்கலின் என்றும் வழியினது ஏதம் நினைந்து தான் உள்ளம் துளங்கித் துயருற்று வருந்தும் திறத்தை விரியக் கூறலுற்று, வெளிப்படக் கூறலாகாமையின், பிடியின் செயன்மேல் வைத்து, கருவி மாமழையின் அரவம் அஞ்சி வாங்கமைக் கழையின் நரலும் பூசற்கு என்றும் கண் கலுழ்தலை நிறுத்தவும், கவலை நீங்குதற்குரிய காரணம் கண்டு அதனை விலக்கவும் மாட்டாது நெஞ்சம் நீர் செல்வழிப் புல்சாயுமாறு போலக் கவலைகளின் வழிநின்று வருந்தினமையின் ஏதில பேதை நெஞ்சம் என்றும், இவ்வாறாயிற்றென்ப தல்லது வேறு வகையால் விளக்கலா காமையின் ஈங்கா கின்று என்றும் கூறினாள். களிறு உழுவையால் தாக்குற்றது கண்டு அஞ்சி ஓடிய பிடி, மழை முழக்கிற் கஞ்சிப் புலம்பும் என்றதனால், இரவுக் குறிக் கண் வரும் தலைமகன் வரவு, அல்லகுறி முதலியவற்றால் இடையீடு பட்டமை கண்டு வருந்தி யுறையும் தலைமகள், காவலர் கடுகுதல், தாய்துஞ்சாமை, நாய் துஞ்சாமை முதலிய இடையீடுகளால் தலைவனது வரவு சிறிது தாழ்க்கினும், அவற்கு ஏதமுண்டாங்கொல்என அஞ்சிப் புலம்பினமை குறிப்பாய் உரைத்தவாறு என அறிக. இனி, இவ்விரவுக் குறிக்கண் வருதலை மறுத்து, வரைந்து கொள்ளுமாறு குறிப் பாய் உரைக்கின்றா ளாகலின், தலைமகனைச் சுட்டி ஆங்கண் என்றும், அவன் வரும் காட்டினையும், அதன் வழியே வரு வோர்க்கு ஏதம் விளைவிக்கும் புலிகளையும் நினைப்பவள். அவற்றின் செயல் கூறுமாற்றால் தன் விழைவையும் உள் ளுறுத்துரைக்க வேண்டி, ஆண்புலி, பசியால்வருந்திய பெண் புலியை உண்பித்துப் பிணங்கரில் அடைந்து ஒடுங்குதலை விதந்து, பிணவுப் பசி தீரிய பேழ்வாய் இரும்புலி பிணங் கரில் ஒடுங்கும் அணங்கருங் கவலை என்றும் மொழிந்தாள். இதனால் தன் வேட்கை தீரத் தலைமகன் மணம் புணர்ந்து மனையறம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பாய்த் தலைவி உரைத்தவாறு காண்க. காதலிபால் காதல் சிறந்து மாண்புறுவது குறித்து, காட்டாற்று நீர்ப்பெருக்கின் விரைவையும் கரையரிய மடுக்களையும் பொருட்படுத்தாது நீந்தி மலர் பொறித்த தோளோடு தலைமகன் வந்தமை கூறினாளாயினும். இரவின்கண் இத்துணை இடையூறு களையும் ஏறட்டுக் கொண்டு வருதலின் அருமை நினையாது அதனை ஊக்கிய தன் செயற்கு நொந்து இரவின் வரு தல்அறியாதேற்கே என்றாள். இதனாற் பயன் தலைமகன் கேட்டு வரைந்து கோடலைச் செய்வானாவது..

நம்பி குட்டுவன்


நம்பி என்பது இச் சான்றோரது இயற்பெயர்; குட்டுவன் என்பது சிறப்புப் பெயர்; பண்டையத் தமிழ் வேந்தர், தமது அரசின் பொருட்டு அரிய பணி செய்து உயர்ந்த நன்மக்கட்குத் தமது பெயரையே சிறப்புப் பெயராகத் தந்து பாராட்டுவது வழக்கம். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அவனது ஆட்சிவழி நின்று துணை புரிந்த நம்பி யென்ற தலைமகனொருவன் நம்பி நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப் பெற்றான்; அவனைப் பேரெயில் முறுவலார் என்னும் சான்றோர் பாடியிருத்தலைப் புறப்பாட்டுத் தொகுதி யின்கண் காண்கின்றோம். அவ்வாறே, சேர நாட்ட வனான இந்த நம்பி, கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவன் காலத்தில் அவற்குச் சிறந்தவனாய் விளங்கினமையின் நம்பி குட்டுவன் என்று பாராட்டப்பட்டுள்ளான். இவ்வழக்காறு, இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இருந்து வந்தது. முதற் குலோத்துங்கன் காலத்தில் சிறந்து நின்ற அரையன் மதுராந்தகன் என்பவன் குலோத்துங்க சோழ கேரளராசன் என்று சிறப்பிக்கப் பெற்றமை வரலாறறிந்த ஒன்று. குட்டுவன் காலத்து அரசியல் தலைவர்களுள் ஒருவனாய் விளங்கிய இந்த நம்பி, நல்லிசைப் புலமையால் சான்றோர் நிரலில் வைத்து எண்ணப்படும் தகுதி பெற்றவன். அதனால் இவனுடைய பாட்டுக்கள் தொகை நூல்களில் கோக்கப் பட்டுள்ளன.

இரவுக் குறிக்கண் பெறும் கூட்டம் பன்முறையும் இடையீடு பட்டுக் கெடுவதும், இரவின்கண் பெருமழை, காட்டாறு, கொடு விலங்கு, ஊர்காவல், மனைகாவல் முதலியவற்றால் முட்டுப் படுதலும் கண்ட தலைமகள் உள்ளத்தில் அழிவில் கூட்டம் பெறுதலே தக்கது என்ற ஆர்வம் பெருகிற்று. அதற்குத் தலைமகன் வரைந்து கொள்வது தான் வாயில் அதனை உணர்ந்த தோழி, வரைந்து கொள்ளுமாறு தூண்டும் செயலை மேற்கொண்டாள். ஒருநாள் இரவு தலைமகன் போந்து சிறைப்புறத்தே நின்றதைத் தோழிகண்டாள். ஆயினும், அவள் அவனைக் காணாதாள் போலத் தலைமகளை நோக்கி, தலைமகன் செவியிற்படுமாறு, நமக்கும் தலைமகனுக்கும் இடையில் தோன்றிய காதற்கேண்மை இன்னும் நன்கு அமையவில்லை; அதற்குள்ளே நம்மை வரைந்து கொண்டான் போலக் கருதி, நம்முடைய அன்னை, என்னை நோக்கி நும்முடைய தலைவன் யாவன். எவ்வூரினன், எப் பெற்றியன் என்றெல்லாம் என்னைக் கேட்கலானாள்; நான் ஒன்றும் கூறாது, அவள் முன்னில்லாது பெயர்வேனாயின், அவள் நினைந்தது மெய்bயன உறுதிப்பட்டு நமது ஒழுக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் என எண்ணி அமைந் தொழிந்தேன்; அந்நிலையில் தலைமகன் ஊர்ந்து வரும் தேரிற்கட்டிய மணி யோசை இங்கே கேளா நின்றது; இனி, இஃது என்னாகுமோ, அறியேன் என்று மொழிந்தாள்; தலைமகள் உள்ளத்தில் கலக்கமும் தலைமகன் உள்ளத்தில் வரைதற்கு வேண்டும் சூழ்ச்சியும் தோன்றின.

தோழியினது இக்கூற்றின்கண், தாய்க்குத் தலைமகளது களவொழுக்கம் தெரிந்தமை தலைமகற்குக் கூறி, அவனை விரைய வரைந்து கொள்ளக் கடாவும் செயல் நலம் கண்ட இச் சான்றோர்அதனை இங்கே பாடுகின்றார்.

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி
கூந்தன் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாம்வெங்1 கேண்மை
அமைந்தமை கல்லா2 வூங்கும் நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறித்
தான்யாங் கென்னும் அறனில் அன்னை
யான்எழின் அறிதலும் உரியள் ஈங்கும்3
பராரைப் புன்னைச் சேரி4 மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ5
வள்பாய்ந் தூரும்அவர்6 தேர்மணிக் குரலே.

இஃது, இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழி வரைவு கடாயது.

உரை
இருங்கழி பொருத ஈர வெண்மணல்-கரிய கழியின்கண் அலைகள் எழுந்து அலைத்தலால் ஈரமாகிய வெள்ளிய மணற்பரப்பில் வளர்ந்த; மாக்கொடி அடும்பின் மாயிதழ் அலரி-பெரிய கொடியாகிய அடம்பின் பெரிய இதழொடு கூடிய பூ; கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்-நெடிய கூந்தலை யுடைய மகளிர் தாம் சூடிக் கொள்ளும் மாலையில் தொடுத்துக் கொள்ளும்; காமர் கொண்கன் நாம் வெங் கேண்மை-அழகிய தலைமகன்பால் நாம் விரும்பிக் கொண்ட நட்பு; அமைந்து அமைகல்லா ஊங்கும்-தோன்றி நன்கு அமையாத முன்பே; நம்மொடு புணர்ந்தனன் போல-நம்மொடு பிரிவறக் கூடினான்போல மாறாக எண்ணி; உணரக் கூறி-என்னைத் தன்பக்கல் இருத்தி என் மனங் கொள்ளுமாறு சொல்லி; அறனில் அன்னை தான் யாங்கு என்னும்-இரக்க மாகிய அறவுணர்வில்லாத அன்னை அவன்தான் எவ்வூரினன், எப்பெற்றியன் என்று என்னை வினவாநின்றனள்; யான் எழின் அறிதலும் உரியள்-யான் அவள் உரையைக் கேளாது விரைந்து அவள் பக்கலினின்றும் எழுந்து போவேனாயின் தான் கருதி யது உண்மையென்று துணிந்து விடுவள் என்று அஞ்சிச் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தேனாக; ஈங்கும்-இவ்விடத்தும்; பராரைப் புன்னைச் சேரி-பருத்த அடியை யுடைய புன்னை மரங்கள் நிற்கும் நமது சேரிக்கண்; நள்ளென் கங்குலும்-நள்ளென்னும் நடுவியாமத்திலும்; மெல்ல வரும்-பைய வாரா நின்றது; வள்பு ஆய்ந்து ஊரும் அவர் தேர் மணிக்குரல்-செலுத்துதற் குரிய வாரை ஆராய்ந்து ஈர்த்துச் செலுத்தும் அவருடைய தேரிற் கட்டிய மணியினது ஓசை எ-று.

கொண்கன் கேண்மை அமைந்து அமைகல்லா வூங்கும், புணர்ந்தனன் போல உணரக்கூறி, அன்னை தான் யாங்கு என்னும்; யான் எழின் அறிதலும் உரியள் என்பது நினைந்து, திகைப்புண் டிருந்தேனாக, ஈங்கும் புன்னைச் சேரிக்கண் நள்ளென் கங்குலும் அவர் தேர்மணிக் குரல் வரும், இதற்கு என் செய்வேன் என எஞ்சுவனவற்றைப் பெய்து கூட்டி வினை முடிவு செய்க. கழி - ஆகுபெயர், அடம்பங் கொடிகள் முளைத்துப் பரந்து கிடத்தலின் ஈர வெண்மணல் என்றார். அஃது அடம்பு எனவும் வழங்கு மாயினும், அடும்பு என்பதே பெருவழக்கு. ஈரமில்லாத விடத்து அடும்பு உயிர் வாழாமை பற்றி ஈர வெண்மணல் வேண்டப்பட்டது; “உரவுக் கதிர் தெறுமென ஓங்கு திரை விரைபுதன், கரையமல் அடும்பளித் தாங்கு1 என்று சான்றோர் கூறுதலால் அறிக. அடும்பின்பூ மகளிர் விரும்பி யணியும் பூவாதலை” அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல், நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்2" என்பது காண்க. நாம் வெங்கேண்மை என்ற விடத்து, வெம்மை வேண்டற் பொருட்டு, “எம் வெங்காமம் இயைவ தாயின்” “தன்னோ ரன்ன தகை வெங் காதலன்”3 என்றாற் போல. யாங்கு - வினாப் பொருட்டு. அறன், ஈண்டு இரக்கத் தின் மேற்று. புன்னைமரச் செறிவைச் சேர இருத்தலின் தலைவியது ஊரைப் புன்னைச் சேரி என்றார். கங்குல் - இரவுப்போது, குதிரை கட்டிய வார் வள்பு எனப்படும்; “விரைபரிப் புல்லுளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய வள்பு1” என்றார் பிறரும், மணிக்குரல் - மணியினது ஓசை. ‘அரோ’, அசை.

வரைந்து கோடலைச் செய்யாது களவொழுக்கத்தையே தலைமகன் நீட்டித் தொழுகுவதை விலக்கி, வரைவு கடாவும் கருத்தினளாகிய தோழி, அவனது கூட்டம் இடையீடுகளால் தடைப்படுவதற்கு இசையாமை தோன்றக் கொண்கன் கேண்மை அமைந்து அமைகல்லா ஊங்கும் என்றும், நாம் அவனைக் காதலிக்கும் அளவினும் அவனது காதலளவு குறைந்துளதெனத் தன்வயின் உரிமையும், அவன் வயிற் பரத் தமையும் புலப்பட நாம் வெங்கேண்மை என்றும், உண்மை யுணராமையால், தலைமகற்கும் நமக்கும் தொடர்புண்டாயிற் றெனத் தாய் பிறழ வுணர்ந்து பேசலானாள் என்பாளாய், நம்மொடு புணர்ந்தனன் போல உணரக் கூறினள் என்றும், தலைமகனுடைய அன்பும் பெருமையும் எத்தகைய எனக் கேட்டது எத்துணை அறியாமை என்று மொழியுமுகத் தால், தலைமகனது ஒழுகலாறு தாயறிந்தமையும், வரையாது நீட்டித்தல் தம்பால் அன்பின்மை காட்டுதலும் தலைமகற்குக் குறிப்பால் உணர்த்தற்குத் தான் யாங்கு என்னும் என்றும் கூறினாள். தன்னை இன்றியமையாத நம்மை நயந்து வரைந்து கொள்ளாதானை, நம்மை யின்றியமையாத காதலுற்றுக் கூடினான் போல இரக்கமின்றிக் கூறினா ளென்பாள் அறனில் அன்னை என்றும், அறனிலாளரொடு கலந்து உரையாடல் அறமே பேணி நிற்போர்க்கு ஆகாது என்பத னால், அவள் முன்னின்றும் நீங்கக் கருதினேன்; ஆயினும் அந்நீக்கம் அவள் கொண்ட ஐயத்தை மாற்றித் தொடர் புண்மை தெள்ளிது என அவள் துணிவெய்தச் செய்யும் என்னும் அச்சத்தால் ஆங்கே உறைவே னாயினேன் என்பாள், யான் எழின் அறிதலும் உரியள் என்றும், அந்நிலையில் இரவின்கண் வரும் தலைமகனது தேரின் மணி அவன் வர வினை உணர்த்தா நின்றது; அது கேட்டு நம் களவு வெளிப் படுமோ என்ற அச்சத்தால் கையற் றொழிந்தேன் என்றும் உரைத்தற்கு, ஈங்கும் புன்னைச்சேரி நள்ளென் கங்குலும் அவர் தேர் மணிக்குரல் வரும் அரோ என்றும் மொழிந் தாள். கழிக்கரை வெண்மணற் பரப்பில் பூத்த அடும்பின் பூ, மகளிர் கோதை தொடுத்தற்கு அமைந்தாற் போலக் கானற் கண் தலை மகனொடு நமக்கு உளதாகிய கேண்மை, ஊரவர் உரைக்கும் அலர்க்குப் பொருளாயிற் றென்ற உள்ளுறையால், தாய் அறிந்தமைக்கு ஏது உணர்த்தி, இனி இற்செறிப்பும், காவல் மிகுதியும் ஆகியவற்றால் கூட்டம் நிகழ்தற் கிட மென்றெனக் கூறித் தலை மகனைக் குறிப்பாய் வரைவு கடா யினமை அறிக.

கந்தரத்தனார்


ஏடுகளில் இவர் பெயர் வாளா கந்தரத்தனார் என்று காணப் படுதலால் உரோடகத்துக் கந்தரத்தனாரின் இவர் வேறு என்று கோடலே முறை.

இடந்தலைப்பட்டும் பாங்கனாற் கூட்டம் பெற்றும் களவில் ஒழுகும் தலைமகன், அவள் கண்ணாற் குறிப்பித்த தோழியைக் கண்டு அவளது துணையால் தலைவியை எய்தக் கருதினான். தோழியோ, அவனது முயற்சிக்குத் துணை செய்யாது மாறுபட் டொழுகலானாள்; தலைவியும் தன் காதலுறவு அவட்குப் புலப் படா வண்ணம் தன்னைக் காத்துக் கொண்டொழுகினாள். தலைமகன் பன்னாள் தோழியை இரந்து தன் குறையை யுணர்த்தி னான்; கெடுதி வினாவியும் கையுறை மறுக்கப்பட்டும் கையற வெய்தினான். பனைமடலாற் குதிரை யொன்று செய்து வில்லப் பூவால் கண்ணி சூடி எருக்கம்பூவால் மாலை தொடுத்து, அணிந்து, தலைமகளின் உருவும் பெயரும் எழுதிய ஓவிய மொன்றைக் கையில் ஏந்திக் கொண்டு, தலைவியும் தோழியும் பிறரும் காண ஊர்த்தெருவே செல்வதாகிய மடலேறுவதே இனிச் செய்தற் குரியதென எண்ணினான். அருகில் நின்ற தோழியின் செவியிற்படுமாறு தன் நெஞ்சொடு கூறுவானாய் “நெஞ்சே, மடலாற் செய்த குதிரைமீது ஊர்ந்து செல்லத் துணிந்து விட்டாய்; அற்றாயின், இனி என் மொழி வழி நிற்பாயாக; அவ்வாறு நிற்பதாயின், வெயிலது வெம்மை மிக்குளதாகலின், இந்தக்குளிர்ந்த நிழலிற் சிறிது தங்கிச் செல்க; தங்கின் அன் புடையார் சிலர் நின்பால் வந்து யாம் நற்பண்புடையேம்; எம்மனைக்கண் வருக என்று சொல்லுவர்; நீ கருதிய கருத்தும் நிறைவெய்தும்” என்றான். அது கேட்ட தோழி, தலைவனது மிக்க காமத்து மிடலை நினைந்து அஞ்சி அவனை அது செய்யாவாறு தடுத்து அவனது களவொழுக்கம் இனிது நடத்தற்குத் துணை செய்ய முற்பட்டாள்.

தலைமகனது இக்கூற்றின்கண், தான் மடலேறத் துணிந்த தனை நெஞ்சொடு கூறுவான் போலத் தோழி கேட்க உரைத்து மதியுடன் படுக்கும் திறம் கண்ட கந்தரத்தனார் இப்பாட் டின்கண் அதனை வைத்துப் பாடுகின்றார்.

வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முறுவல்எனப் பல்லூர் திரிதருபு1
நெடுமாப் பெண்ணை மடன்மா னோயே
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் என்ற மரனிழற் சிறிதிழிந்
திருந்தனை சென்மோ வழங்குசுடர்2 வெய்தென
3அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் வம்மெனும்4 கிளவியர் வல்லோன்
எழுதி யன்ன காண்டகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே.

இது, பின்னின்ற தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்பச் சொல்லியது.

உரை
வில்லாப் பூவின் கண்ணி சூடி - கூவிளம் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையிற் சூடி; நல்லே முறுவல் எனப்பல்லூர் திரிதருபு - மிக்க காமத்து மிடல் கொண்டேன் என்று பல ஊர்களிலும் திரிந்து ஊரவர்க்கு அறிவிக்கக் கருதி; நெடுமாப் பெண்ணை மடல்மானோய் - நெடிய கரிய பனைமடலாற் செய்யப்பட்ட குதிரையேறிச் செல்கின்ற நீ; கடன் அறி மன்னர் குடைநிழல் போல - நூலோர் நல்லன என உரைத்தவற்றைச் செய்தலே கடன் என்று அறிந்து அவற்றையே செய்யும் வேந்தருடைய வெண்குடை நீழல் போல; பெருந்தண் என்ற மரன்நிழல் சிறிது இழிந்து - மிக்க குளிர்ச்சி பொருந்திய இந்த மரத்தின் நிழலில் குதிரையி னின்றும் இறங்கி; இருந்தனை சென்மோ - சிறிதுபோது தங்கிச் செல்வாயாக; வழங்குசுடர் வெய்தென - இயங்குகின்ற ஞாயிற்றின் வெயில் வெய்தா யிராநின்ற தாகலான் என்றும்; அருளிக் கூடும் ஆர்வமாக்கள் நல்லேம் வம்மெனும் கிளவியர் - அருள் உள்ளத்தால் வந்து கூடிநிற்கும் அன்புடைய மக்கள் யாம் உமக்கு நல்லம் எம் இல்லம் வருக என்றும் சொல்லுதலை யுடைய ராகலான்; வல்லோன் எழுதி அன்ன காண்டகு வனப்பின் - கையால் எழுதிய ஓவியம் போல் கண்டு மகிழத் தக்க அழகினையும்; ஐயள் மாயோள் - தலைமையையும் மாமைநிறத்தையு முடையவளால்; அணங்கிய மையல் நெஞ்சம் - நோயுறுத்தப்பட்டு மயங்குதலை யுடைய நெஞ்சமே; என் மொழிக் கொளின் - என் சொல்லைக் கேட்டு அதன்வழியே நிற்பாயாயின் எ-று.

நெஞ்சமே, என் மொழிக் கொளின், பெண்ணை மடல்மா ஏறிப் பல்லூர் திரிதரும் நீ வழங்கு சுடர் வெய்து என்றும், நல்லேம் வம்மென்றும் கூறும் சொற்களை மாக்கள் உடைய ராகலின், மரனிழல் சிறிது இருந்தனை சென்மோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வில்லாப்பூ பிற்காலத்தில் வில்வப்பூ எனவும், வில்லாமரம் வில்வ மர மெனவும் வழங்குவ வாயின. வில்லாப் பூவை, விலைக்கு விற்கப்படாத பூ என்று பொருள் கொள்வாரு முண்டு. வில்லமொடு எருக்கும் ஆவிரையும் பூளையுமாகிய பிற பூக்களும் மட லேறுவார் விரும்பிக் கொள்வன வாயினும், மேனி முழுவதும் வெண்ணீறு பூசி உமை யமர்ந்து விளங்கும் இமையவன் போலத் தோன்றுதலின் அவற்குரிய தாகும் சிறப்புடைமை பற்றி வில்லாப்பூக் கூறப்பட்டதுபோலும். ஏமுறுவல் என்ற விடத்து ஏமம் என்பது அம்முக் கெட்டு ஏம் என நின்றது. ஏமம் - மயக்கம்; ஈண்டு மிக்க காமத்தா லுண்டாகும் மிடல் எனக் கொள்க. மடல்மா - பனை மடலால் செய்யப்பட்ட குதிரை, பெண்ணொருத்திபால் காமக்காத லுறுவோன், அவளைப்பெற இயலாவிடத்து மிக்க காமத்து மிடலுற்று, அவளுடைய உருவும் பெயரும் ஒரு கிழியி லெழுதிக் கையி லேந்தி, மேனி முழுதும் வெண்ணீறு பூசித் தலையில் வில்லம், எருக்கு, பூளை, ஆவிரை முதலிய பூக்களால் கண்ணியும் மாலையும் தொடுத்து அணிந்து கொண்டு பனை மடலாற் குதிரையொன்று செய்து. அதன்மேல்இருக்க, இளையோர் பலர்கூடி அக் குதிரையை ஈர்த்துச் செல்வர்; இது மட லேறுதல் எனப்படும்; இதனைக் காணும் சான்றோர் அவன் காதலித்த பெண்ணைப் பெற்றோர்க்கும் பிறர்க்கும் தெரிவித்து அவனுக்கு மணம் செய்து வைப்ப ரென்பது கொள்கை. மடலேறுதல் நாணுடைத் தலைமக்கள் செயலன்று; ஆனால், மடலெறுவதாக நினைத்தலும், கனவில் மடலேறி னேன் எனவும், இனி மடன்மாமேல் ஏறுவேன் எனவும் தலைவன் கூறுத லுண்டு. இதனை அறியாது, தமிழர் காமம் மிக்கவழி மடலேறுதல் என்னும் செயல் மேற்கொள்வர் என எழுதினோரும் உண்டு. தவிராது செய்தற் குரிய நற்செயல் கடன் எனப்படும். குடை - வெண் குடை, மடன்மா மேல் ஊர்தலைக் கண்டு உள்ளத்தில் அருள் மிகுந்து அண்மை யிற் போந்து கூடி நிற்பவரை, அருளிக் கூடும் ஆர்வமாக்கள் என்றார். வெய்தென, என்புழி, என வென்னும் இடைச்சொல் எண்ணுப் பொருட்டு. வருக என்றது வம்மென வந்தது, “எல்லி வம்மோ மெல்லம் புலம்ப”1 எனப் பிறரும் வழங்குப. ஐ - அழகு; தலைமையுமாம். காமமிகுதியால் கலங்கிக் கையற்ற நெஞ்சு என்றற்கு மையல் நெஞ்சம் என்றும், மையல் மிகுதியால் பலதலையும் சென்று நிலை பெறாது அலமருமாறு தோன்ற, மொழிக்கொளின் என்றும் கூறினார்.

களவின்கண் தோழியிற் கூட்டம் பெற்றுத் தானும் தலை மகளும் கொண்ட காதலை ஒருவரை யொருவர் இன்றி யமையாத அளவில் அறத்தாற்றில் வளர்க்கக் கருதிய தலை மகன், தலைமகட்குத் தோழியான நங்கையை மதியுடம் படுத்துத் தனக்குத் தோழமை கோடலை எண்ணி அவள்பால் தன் மனக் குறையை அறிவிக்க முயன்றானாக; அத்தோழி அதற்கு இடந்தராது பன்முறையும் இரக்கமின்றி மறுத்தமை யின், தான் மடலேறத் துணிந்தமை அவள் அறியுமாறு, தன் நெஞ்சொடு உரையாடத் தொடங்கினான். நெஞ்சை முன் னிலைப் படுத்தித் தோழி கேட்கு மளவில் அவ்வுரையினை நிகழ்த்துங்கால் மடலேறத் துணிந்த மாத்திரையே அஃது ஏறியதாக எண்ணி நெடுமாப் பெண்ணை மடன் மானோயே என்றும், அந்நிலையில் மடலூர்வோரது உருவம் மனக் கண்ணில் எழுதலின், அதனைச் சொல்லோவியம் செய்து காட்டுவானாய், வில்லாப் பூவின் கண்ணி சூடி எனவும், நல்லே முறுவல் எனப் பல்லூர் திரிதருபு எனவும் கூறி னான். “மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கம் கண்ணியும் சூடுப, மறுகின் ஆர்க்கவும் படுப, பிறிதும் ஆகுப காமம் காழ் கொளினே1” எனச் சான்றோர் கூறுதல் காண்க. வேந்தர்க்கென அரசியல் அறநூல்கள் விதித்தனவும் விலக்கி யனவும் கடைப்பிடித் தொழுகுதல் அரசர்க்குக் கடன் எனப் படும். அத்தகைய அரசியற்கீழ் வாழ்வார்க்கு எந்நாளும் இன்பமே யாதலால், அதனை, கடனறி மன்னர் குடைநிழல் என்றார். பண்டைய அரசவையில் அரசன் வீற்றிருக்கும் கட்டிலின்மேல் நிறுவப்பெற்றிருக்கும் வெண்குடை குடை யெனக் குறிக்கப்பெறுகின்றது. தூய வெள்ளியால் செய்யப் பெற்றமையின் அது வெண்குடை யாயிற்று; “உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை. நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற2” என்று சான்றோர் கூறுதல் காண்க. வெயில் மறைத்தற்குக் கொள்ளும் குடையின்றி வெறிதே மடன்மா வூர்ந்து சேறலின் வழங்குசுடர் வெய்து, ஆகலான் மரநிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ எனக் கூற லாயினர். மிக்க அன்புடையாரன்றிப் பிறர்அது கூறாரா கலின் ஆர்வமாக்கள் என்றும், மடலூரும் மறச் செயல் கண்டு வியந்து போந்து சூழ்ந்து கொள்ளுதலின், அருளிக் கூடும் ஆர்வமாக்கள் என்றும் கூறினார். மகளிர்பால் காணப்படும் இயற்கையழகைச் செயற்கையிற் பிறப்பிக்கப்படும் வனப்போடு உடன் வைத்துக் காணும் புலமைநெறி பற்றி வல்லோன் எழுதி யன்ன காண்டகு வனப்பின் ஐயள் என்றும், காட்சியிடைத் தோன்றிய அழகால் உள்ளம் நிறையிழந்து அலமருதல் பற்றி மையல் நெஞ்சம் என்றும் கூறினான். கொளின் - என்றது, கொள்ளாமை வெளிப்படுத்தற்கு. இதனால் தலைவனது ஆற்றாமை யுணர்ந்து தோழி மதியுடம் படுவாளாவது பயன்.

மடலூர்தல் என்பது, தமிழகத்தில்எங்கும் எக்காலத்தும் நடைபெறாத ஒரு கற்பனைச் செயல். ஒருத்திபால்தன் கருத்தைச் செலுத்திய ஆண்மகன், அவளை வரைந்து மணந்து கோடற் பொருட்டுச் செய்யும் முயற்சிவகை அனைத்தினும் வெற்றிகாணாது உள்ளம் உடைந்தவழித் தன் காதல்வெறியை மானமின்றி ஊரவர்க்கு வெளிப்படையாகத் தெரிவிப்ப. அவர்கள் ஆதரவும் துணையும் செய்து அப்பெண்ணையும் அவளுடைய பெற்றோரையும் உடன்படுவித்து மணம் செய்து வைப்ப ரென்பது இக்கற்பனையின் கருத்து. மடலூர்பவன் தன் மேனியெங்கும் வெண்ணீ றணிந்து தலையில் எருக்கம் பூ, பூளைப்பூ, ஆவிரம் பூ முதலிய பூக்களால் தொடுத்த கண்ணி யும், மார்பில் மாலையும் அணிந்து கொள்வன்; தான் காதலித்த பெண்ணின் உருவத்தை ஒரு கிழியில் எழுதி அவள் பெயரையும் பொறித்து, கையில் ஏந்துவன்; பனைமடலால் குதிரைவடிவில் ஓர் ஊர்தி சமைத்து அதன்மேல் ஏறிக் கொள்வன். அவனுக்குரிய துணைவரும் இளையரும் அம் மடன்மாவை ஈர்த்துக் கொண்டு முன்னர்ப் பறை முதலிய இசைக்கருவி கறங்க, ஊர்த்தெருவில் உலாவருவன். ஊரவர் அவனது காட்சியைக் காண ஒருங்கு கூடி விடுவது இயல்பு. அதனால் அவனது காதற்காமநிலை வெளிப்பட்டு ஊர் முழுதும் பரத்தலால், தலைவியின் பெற்றோர் தலைவியை அவற்கு மணம்செய்வர் என்பது இப் பொய்க்கற்பனையின் புணர்ப்பு.

கொள்ளம்பாக்கனார்


இவர் பெயர் கொள்ளம்பக்கனார் எனவும், கொள்ளம் பாகனார் எனவும், குளம்பாகனார் எனவும் ஏடுகளிற் காணப் படுகிறது. கொள்ளம்பாக்கம் என்பது தொண்டைநாட்டு ஊர் களுள் ஒன்றாதலின், அவ்வூரவரான இச்சான்றோர் கொள்ளம் பாக்கனார் என்று பண்டைச் சான்றோர்களால் குறிக்கப்படு கின்றார். இவரது இயற்பெயர் இந்நூல் தொகுக்கப்பட்ட காலத்தேயே மறைந்து போயிற்றுப் போலும். கொள்ளம் பக்கனார் என்று பாடங்கொண்ட திரு. அ.நாராயணசாமி ஐயர் கொள்ளம் என்பது ஊர் எனவும், பக்கன் என்பது இச்சான்றோரது இயற்பெயர் எனவும் கூறுவர். கொள்ளம் பக்கனார்என்ற அதுவே பாடமாயின், கொள்ளன்பக்கனார் என்றாகிக் கொள்ளன் என்பது தந்தை பெயராகவும், பக்கன் என்பது இவரது இயற் பெயராகவும் பொருள்படும். “அப்பெயர் மெய் யொழித் தன்கெடு வழியே, நிற்றலு முரித்தே அம்மென் சாரியை, மக்கள் முறைதொகு மருங்கி னான1” என்பதனால், கொள்ளன் மகன் பக்கன் என்பது கொள்ளம் பக்கன் எனவரும். கொள்ளன் என்று பெயருடையார் பலர் பண்டை நாளில் இருந்தமை “ஆடுகொள் கொள்ளனைப் பணித்த அதியன் பின்றை1” என்பத னால் அறியப்படும். கொள்ளனூர், பாகனூர், பாகனேரி என்ற ஊர்ப் பெயர்கள் கொள்ளன் பாகன் என்று பெயர் தாங்கியோர் முன்காலத்தில் இருந்தமை காட்டுகின்றன. பாக்கன் என்பதும் மக்கட்குப் பெயராதல் குறுந்தொகையுட் காணப்படும் பெரும் பாக்கனார் என்னும் சான்றோரால் வலியுறுகின்றது. இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில.

தமித்துக் கண்டு காதலுற்றுக் களவொழுக்கம் மேற்கொண்ட தலைமக்களில், தலைமகன் பகற்போதில் குறிப்பிட்டதோர் இடத்தில் தலைமகளைக் கண்டு அளவளாவி இன்புறுவதையே பெரிதும் விரும்பி நின்றான். அவன் உள்ளத்தைக் கடிமணம் புரிந்து கோடற்கண் செலுத்தும் முயற்சியைத் தோழி மேற் கொண்டாள். பகற்குறி யிடத்தே ஒருநாள் அவன் வரக் கண்ட அவள். அதனை அறியாதாள் போலத் தலைமகளுடன் உரை யாடலானாள். அவ்வுரையாட்டிடையே நிகழாத ஒன்று நிகழ்ந் தது போலப் படைத்துக் கொண்டு தோழி சொல்லாடவும், தலைமகள் அச்சமும் வியப்பும் அடைய எய்தி, எதிர் மாற்றம் ஒன்றும் இயம்பாது தோழியின் உரையைக் கேட்பாளாயினள்; தோழி அத்தலைமகளை நோக்கி, “நாளைநமது நிலை யாதாகுமோ? நம் அன்னை நேற்று நின்னைக் கூவி யழைத்து, புனத்தின்கண் கிள்ளை முதலிய புள்ளினம் படிந்து தினைக்கதிர்களைப் பெரிதும் கவர்ந்து கொண்டு போயினவே, அப்பொழுது நீ எங்கே சென் றிருந்தாய் என்று கேட்டாளாக, அவள் முன்னின்று மலைநாட னாகிய தலைமகனை யான் அறிந்தது மில்லை; அவனைக் கண்டது மில்லை; மூங்கிலாலாகிய தட்டையைக் கையில் ஏந்திய வண்ணம் இருந்ததுண்டே யன்றி அவனொடு கூடிப் பூக்கொய்து விளையாடுவதோ, சுனையாடுவதோ செய்ததுமில்லை எனப் பின்விளைவு நினையாது, பொய்யும் புகலாது, உண்மை நன்கு வெளிப்படுமாறு மெய்யே மொழிந்தனையே. இது பொருந்துமா? நினது உரையைக் கேட்டதும். அன்னை நாணித் தலைதாழ்த்துச் சென்றாள்; அளிக்கத் தக்க நீ இனிப் புனம் செல்லுதற்கரிய நிலையினை இழந்தாய்; நமது காதலொழுக்கம் யாதாய் முடியுமோ என அஞ்சுகின்றேன்” என்று கூறினாள். அதனை மறைந்து நின்று கேட்ட தலைமகன், தலைமகள் இல்லின்கண் செறிக்கப்படுதல் ஒருதலையென எண்ணி, அவளை வரைந்து கோடவல்லது இனி வேறு செயல் இல்லை எனத் தெருண்டு சென்றான்.

தோழியினது இக் கூற்றின்கண், தலைமகளது மறைந்த ஒழுக்கத்தை அன்னை அறிந்தனள் எனப் படைத்து மொழிந்து தலைமகனை வரைவுகடாவும் செயல் செவ்விதின் அமைந் திருக்கும் அழகினைக் கண்ட கொள்ளம் பாக்கனார் இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

யாங்கா குவமோ அணிநுதற் குறுமகள்
தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்
றெவ்வாய்ச் சென்றனை அவணெனக் கூஉய்1
அன்னை ஆனாள் கழற முன்னின்று
அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் எதிர்மலர்2 கொய்து
சுனைபாய்ந் தாடிற்றும் இலன்என நினையலை3
பொய்யலை4 அந்தோ வாய்த்தனை அதுகேட்டுத்
தலையிறைஞ் சினளே அன்னை
செலவொழிந் தனையால் அளியைநீ5 புனத்தே.
இது, சிறைப்புறமாகத் தோழி சொல்லியது6.

உரை
யாங்கு ஆகுவமோ-என்னாகுவேமோ, அறியேன்; அணி நுதல் குறுமகள்-அழகிய நெற்றியையுடைய இளைய வளே; தேம்படு சாரல்சிறுதினைப் பெருங்குரல்-தேன் பொருந் திய மலைச் சாரலிடத்தே யுள்ள புனத்தின்கண் விளைந்து நிற்கும் சிறுதினையின் பெரிய கதிர்களை; செவ்வாய்ப் பைங் கிளி கவர-சிவந்த வாயும் பசிய நிறமுமுடைய கிளிகள் கவர்ந்து கொண்டு செல்லா நிற்ப; நீ அவண் எவ்வாய்ச் சென்றனை - நீ அவ்விடத்தி னின்றும் நீங்கி எங்கே சென்றிருந்தாய்; எனக் கூஉய் - என்று சொல்லியழைத்து; அன்னை ஆனாள் கழற - அன்னை பன்முறையும் அமையாது கழறிக் கேட்க; முன் னின்று - அவள் முன்னே நின்று; அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை அறியலும் அறியேன்- அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைநாடனாகிய தலைமகனை யான் அறிந்ததும் இல்லை; காண்டலும் இலன்-நாளும் காண்பதும் இல்லை; வெதிர் புனை தட்டையேன் - மூங்கிலாற்செய்த தட்டையைக் கையி லேந்திக் கிளிகடிந்து நின்றதை யன்றி; எதிர்மலர்கொய்து சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என - புதிய வாய் மலர்ந்த பூக்களைக் கொய்தும் சுனைநீரில் மூழ்கியும் அவனொடு கூடி விளையாடியது மில்லை என்று சொல்லி; நினையலை பொய்யலை வாய்த்தனை - பின்விளைவு நினையாமல் பொய்யு முரையாமல் உண்மையை உரைத்து விட்டாய்; அந்தோ-; அது கேட்டு அன்னை தலை இறைஞ்சினள்- நின் உரையைக் கேட்டு அன்னையாவாள் நாணத்தால் தலை தாழ்த்துச் சென்றாள்; அளியை நீ-அளிக்கத்தக்க நீ; புனத்துச் செலவு ஒழிந்தனை-இனித் தினைப்புனத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து இற்செறிக்கப்படுவது ஒருதலை, காண் எ-று.

குறுமகளே, பைங்கிளி பெருங்குரல் கவர, நீ எவ்வாய்ச் சென்றனை எனக் கூஉய் அன்னை கழற, முன்னின்று, நாடனை அறியேன். காண்டலும் இலன். தட்டையேன் எதிர்மலர் கொய்து, சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என, நினையலை, பொய்யலை, அந்தோ, வாய்த்தனையாக, அது கேட்டு அன்னை தலையிறைஞ்சின ளாகலான். இனி நீ புனத்துக்குச் செலவு ஒழிந்தனை, யாம் யாங்காகுவமோ, அறியேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இற்செறிக்கப்படுதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம். குறுமகள் என்புழிக் குறுமை ஆண்டின் மேற்று; இளையவள் என்றவாறு, ஆகுவமோ என்ற விடத்து ஓகாரம், ஐயம், மலைச்சாரலில் உள்ள மரங்களிலும் கற்பாறை களிலும் தேன்கூடு கட்டுதல் இயல்பாதல் பற்றித் தேம்படு சாரல் என்றார். தினைமணி யொவ்வொன்றும் சிறிதா யிருப்பது கொண்டு, சிறுதினை எனவும், கதிர் நீண்டு பருத் திருக்குமாறு தோன்றப் பெருங்குரல் எனவும் கூறினார். கவர, இது நிகழாநிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்த செயவென் எச்சம். மற்று, வினைமாற்று, எவ்வாய், அவ்வாய் என்பன இடத்தின்மேல் நிற்கும் இடைச்சொற்கள், அவண் என்புழி நீக்கப்பொருட்டாய ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. கழறல், இடித்துரைத்தல், முன்இன்று எனப் பிரித்து, முன்னேயின்றிப் பின்னே நின்ற எனினும் அமையும். அறியலும் அறியேன் என்றது. “அணியலும் அணிந்தன்று1” என்றாற் போல ஒரு பொருள் குறித்து நின்றது. காரிய வாசகம் என நச்சினார்க்கினியரும்2" ஒருபொருட் பன்மொழி யென மயிலைநாதரும்3 கூறுப. வெதிர், மூங்கில் வகை, எதிர் மலர், முகை முற்றி மலர்ந்த செவ்விப்பூ, புதுப்பூ என்றவாறு. ஆடிற்று என்பதனைக் கொய்து என்பதனோடும் கூட்டுக. ஆடுதல் கூறவே, தலைவனொடு என்பது வருவிக்கப்பட்டது. பொய்யலை என்ற அடைமொழியால் நினைவு விளைவு பற்றியதாயிற்று. ஆல், அசைநிலை, புனத்தே என்பதன் ஈற்றில் நான்கனுருபு தொக்கது.

களவினையே விரும்பி யொழுகும் தலைமகன் சிறைப் புறமாக வந்தமை அறிந்து அவன் கேட்குமளவில் நின்று, அவன் உள்ளத்தில் அசைவும் சூழ்ச்சியும் பிறப்பிக்கும் கருத்தின ளாதலின், எடுத்த எடுப்பிலேயே யாங்காகுவமோ என்றும். நுதலொளி பசப்பிக்கும் நிகழ்ச்சிகள் உண்டென்ப தறியாது களவின்கட் பெறப்படும் இன்பம் ஒன்றையே நினைந்து மகிழ்ந்து உறையும் தலைமகளின் இளமை நலத்தை வியந்து அணிநுதற் குறுமகள் என்றும் கூறினாள். தலை வியது களவொழுக்கினைத் தாய் அறிந்தமை தலைமகற்கு உணர்த்துவாள் புனங் காவலிடத்தே பெற்று நுகரும் இக் களவுக் கூட்டம் இனிப் பெறலரிது என்பது தோன்ற, சிறு தினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவண் எனத் தாய் வினவியதனைத் தோழி கொண்டெடுத்து மொழிந்தாள். சிறுதினை பயந்த பெருங்குரலைப் பேணுதல் கடனாகவும், அதனைப்பேணாமை யின்தாய் வினாதற்கு இடமுண்டாயிற்று என்றாளாம். புனத்தின் நீங்காதிருந்தால் பைங்கிளி பெருங்குரல் கவர்தல் இல்லை; அவை கவர்ந்தமையின் நீ அங்கே இல்லை யென்பது பெறப்படுதலால், நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவண் என்று தாய் வினவினாள். அப்போழ்து, தாய் மிக்க சினங் கொண்டிருந்தமை புலப்படக் கூஉய் எனவும் மகளாகிய நின் களவினை நன்கு அறிந்தே வினவுவாளாயினாள் என்பாள், அன்னை ஆனாள் கழற எனவும் தோழி எடுத்துரைத்தாள். முன்னேநில்லா வழிக்கழறல் பயனின்மையின் முன்னின்று என்றாள். கூஉய் முன்னிலைப்படுத்துத் தாய் கழறினாளா கலின்முன்னிற்றல்தலைமகட்கு வினையாயிற்று. தாய் தொடுத்த வினாவுக்கு, யாண்டும் நீங்கிற்றிலேன் எனச்சுருங்கச் சொல்லிமறுக்கற் பாலளாயதலைமகள், அதுசெய்யாது, நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்துவிடும் என்பதற்கு இயைய, அருவி யார்க்கும் பெருவரைநாடனை அறியலும் அறி யேன், காண்டலும் இலனே என்று விடையிறுத்தது பெரு வரை நாடனாகிய தலைமகற்கும் அவட்கும் தொடர் புண்மையைக் காட்டுவ தாயிற்று. புனங்காவல் புரியும் இள மகளிர் அதற்கு அயலிலுள்ள பொழிற்குட் சென்று பூக் கொய்தலும் சுனைநீரிற் படிந்துஆடலும் இயல்பாயினும், யான் அவையிற்றையும் செய்திலேன் என்பாள், எதிர்மலர் கொய்து சுனை பாய்ந்து ஆடிற்று மிலன் என்றும், இடையற வின்றிப் புனங் காத்தற்றொழிலைப் புரிந்து வந்தமை விளங்க வெதிர்புனை தட்டையேன் என்றும் தலைவி கூறினாள் என்க. செல்லுதற் குரிய இடங்களைக் குறியாது வாளாஎவ்வாய்ச் சென்றனை என்று வினவிய தாய்க்கு இடங் கள் யாவற்றையும் எடுத்தோதியது, தலைமகள் அவற்றைக் குறி யிடமாகக் கொண்டு தலைமகனை எதிர்ப்பட்டுக் கூடி இன் புற்ற செய்தியைப் புலப்படுக்கும் திறத்தையும், அதனால் தாய் புனங்காவலை நீக்கி இல்லிடைச் செறிப்பள் என்பதையும் தலைவி நினையாமை குற்றமாயிற் றென்பாள், நினையலை எனவும், நினைந்தவழிப் பொய் கூறி மறைப்ப தல்லதுஉண்மை செப்பல் ஒவ்வாது என்பாள், பொய்யலை எனவும்; அந்தோ வாய்த்தனை எனவும் தோழி இசைத்தாள். கள்ளமில்லாத வெள்ளை யுள்ளத்தால் உள்ள துரைத்த தலைவியாகிய தன் மகளது பிள்ளைத்தன்மை அவளது சொல்வழி விளங்கித் தோன்றக்கண்ட தாய், நாணம் மிக்குத் தலைசாய்த்துச் சென் றது, தலைவியின் கள வொழுக்கத்தை நன்கு அறிந்து கொண்ட மையை வெளிப் படுத்துதலின், அதுகேட்டுத் தலையிறைஞ் சினளே அன்னை என்ற தோழி, இதன் விளைவாகஇனி நீ இற்செறிக்கப் படுவது ஒருதலை என்பாள், செலவொழிந் தனையால் அளியை நீ புனத்தே என்றாள். புனமும் பொழி லும் சுனையும்இடமாகக் கொண்டு இதுகாறும் நம்மைத் தலைப்பெய்து கூடி இன்புறுத்திய தலைமகன், இற்செறிப் புண்ட வழி அது செய்தற்கு இடமின்மையின், நமது காதல் வாழ்வு என்னாய் முடியுமோ என என் உள்ளம் அஞ்சுகின்ற தென்பாள், யாங் காகுவமோ என்றாள். இஃது அவன் புணர்வு மறுக்கும் அறக்கழிவுடைய தாயினும், வரைதலாகிய பொருட்குப் பயன்பட வருதலின் அமையும் என உணர்க. “அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப1” என்று ஆசிரியர் கூறுவது காண்க. இனி சிறுதினையிடத்து விளைந்த பெருங்குரலைப் பைங்கிளி கவர்தலை விரும்பாது பேணும் அன்னை போல, இக் குறுமகளிடத்துத் தோன்றிய பெருங் காதலை ஊரவர் அலருரையும் வேற்று வரைவும் தோன்றிச் சிதையாவாறு பாதுகாத்தல் தலைமகற்குக் கடன் எனத் தோழி குறிப்பா யுரைத்து வரைவு கடாயவாறு உணர்க.

“மறைந்தவற் காண்டல்”2 எனத் தொடங்கும் நூற் பாவுரையில் “களவறி வுற்றவழிக் கூறியது” என இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.

கண்ணம் பாளனார்


கருவூர்க் கண்ணம்பாளனார் என்றொரு சான்றோர் அக நானூற்றுட் காணப்படுகின்றார். இச்சான்றோர் கருவூர் என்ற அடைபெறாது கண்ணம்பாளனார் என்று இந்நூலுட் கூறப்படு கின்றார். ஆயினும், இருவரையும் கருவூர்க் கண்ணம்பாள னாராகவே சிலர் கருதுகின்றனர். கண்ணம்பாளனார் என்ற பெயருடையார் ஒருவரின் மேலும் இருப்பது பற்றியன்றோ ஒருவரை ஊர்ப்பெயர் கூட்டிக் கருவூர்க் கண்ணம்பாளனார் என்று சான்றோர் குறித்தனர்! இக் கண்ணம்பாளனாரது ஊர் இன்னது எனத் தெரிந்திலது. பின்னத்தூர், அ. நாராயணசாமி ஐயர் அவர்கள், களப்பாள் என்றாற்போலக் கண்ணம்பாள் என்பதும் ஓர் ஊர்ப்பெயராகலாம் எனக் கருதுகின்றார். புதுப் பட்டி ஏட்டில் இவர் பெயர் கண்ணம்பாணனார் என்று காணப் படுகிறது; அகநானூற் றேட்டிலும் இந்தப் பாடம் உண்டு; அதனால் கண்ணம்பாணனார் என்று இவர் பெயரைக் கொள்வ திலும் தடையில்லை. கண்ணன் என்பார்க்கு மகனான பாணனார் கண்ணம்பாணனார் என்று வழங்கப்படுகின்றார் என்பதே இதன் கருத்தாம். கண்ணம்பாளன் என்ற பாடத்தினும் கண்ணம் பாணன் என்பது திருந்தியதுமாகும். பாணன் என்பது பண்டை நாளில் பாண்குடிக்குப் பெயராய் வழங்கியதோடு ஆடவர்க்கு இயற்பெயராகவும் இருந்துளது. இதனைப் பரணர், மாமூலனார் பாட்டுக்களில் காணலாம். வடவார்க்காடு மாவட்டத்துப் பாலியாற்றின் வடகரைப் பகுதியில் தீக்காலி வல்லம் முதலிய இடங்களிலிருந்து ஆட்சிபுரிந்த பாணாதிராயர்கள் பாணன் என்ற முதல்வன்வழி வந்தவர்கள். வில்லிடைத் தொடுக்கும் அம்புகளுள் கண்போன்ற அலகுடையவை கண்ணம்பு என்றும், வாய்போல் கவைத்த அலகுடையவை வாயம்பு என்றும் வழங்கும் எனவும், இவர் கண்ணம்பினை ஆள்வதையே விரும்பினது பற்றிக் கண்ணம்பாளனார் என்றும் இவரைப்பற்றிக் கூறினோரு முண்டு. கம்பரையும் வள்ளுவரையும் சாத்தனாரையும் பற்றிக் கூறப்படும் பெயர்ப்பொருள் ஆராய்ச்சி உண்மை துணியவேண்டும். இவர் பாடியனவாக வேறு பாட்டுக்கள் கிடைத்தில.

கற்புவாழ்வில் தலைமகன் இன்றியமையாத கடமை குறித்துத் தலைமகளின் நீங்கிச் செல்லும் வினை மேற்கொண்டான். புதுமண வாழ்வில் பொற்புறத் தோன்றும் இன்பநுகர்ச்சி தலைமகன் பிரிவால் இடையீடுபடுவது தலைமகட்குப் பெரியதோர் ஆற்றாமையைப் பயந்தது. இளமையுடம்பின் வளமும் அழகும் வனப்பும் பொங்கிநின்று உயிரறிவை அடர்த்துத் தம் நெறிக்கண் ஈர்த்து நிறுத்தி வேறு உடம்புதரு பணியில் ஈடுபடுத்துவது இயற்கையின் அறச்செயலாகும். அறிவின்கண் திண்மை செறியு மாயின் அடங்கியும், அவ்வறிவு திண்ணிதாகாவழி அக்காதலு ணர்ச்சிக்கு அடங்கியும் ஒழுகுவது அறிவு ஆராய்ச்சியில் கண்ட உண்மையாம், தலைமகனைவிடத் தலைமகளது அறிவு காத லுணர்ச்சியை நெறிப்படுத்தும் வகையில் மென்மை யுடைய தாகலின், காதல்வேட்கை வழிநின்று பிரிவின்கட் பெரும் பேதுறுவது பெண்ணறிவுக்குப் பெருந்தகவாகும். அத்தகவில்லை யாயின் பெண்மையின்கண் தாய்மை நலம் நின்று உடம்பு தரு பணியைச் செவ்வே யாற்றுதற்கு இடமில்லை யென்பது அறிவு நூன் முடிவு. இன்னோரன்ன காரணங்களால் பிரிவின்கண் மனம் திண்மை யிழந்து கெடுதல் பொது அற மாயினும் பெண்மையின் பால் அது சிறந்து விளங்குகிறது. தலைமகன் பிரிந்த பின்னர் அப்பிரிவை அறிந்த தலைமகள் பெரிதும் வருந்தினாள். கண்கள் நீர் சொரிய மேனி வேறுபடுவதாயிற்று. அறிவுருவான தோழி தலைமகளது கலக்கத்தைக் கண்டாள். காதலும் கடமையும் கைகலந்து இயங்கும் கற்புவாழ்வில் கடமைவழிக், காதல் இயங்குமாயின் வாழ்வு பெருமையுற்றுப் பிறங்குவதும், காதல் வழிக் கடமை செல்லுமாயின், வாழ்வு சிறுமையுற்றுத் தேய்ந்து கெடுவதும் வாழ்க்கையின் வழங்கியலாகும். அதனை நன்கு உணர்ந்தவளாதலின், தோழி, தலைமக்களின் காதலுறவு கடமைக்கு முதலிடம் தந்து வழிபட வேண்டும் என வற்புறுத்தும் செயலை மேற்கொள்ளலானாள்: அவள் தலைமகளை நோக்கி, “தோழி, காதலர் நின்பாலுள்ள பெருங்காதலால் நின்னையும் தன்னுடன் கொண்டுசெல்லற்குத் துணிந்தார்; ஆயினும் நின் வண்ணம் கொடுஞ்சுரத்து நெடுவழிச் செலவுக்கு ஆற்றாது என்பது நோக்கி, மென்மொழி கூறி, ஆள்வினை குறித்துத் தனித்துச் செல்வாராயினார்; அதனால் நீ வருந்துதல் ஒழிக; அவர் மேற் கொண்ட வினை நன்கு நிறைவுறுக” என்று மொழிந்தாள்.

அவளது கூற்றின்கண் அமைந்த அறவுரையின் நலங்கண்ட இச்சான்றோர், தலைமகனது அன்பின்திறமும் கொடுஞ்சுரத்தின் கொடுமையும் இனிது விளங்க இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்
நீயவண் வருதல் ஆற்றாய் எனத்தாம்
தொடங்கி1 ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங்கயம் புலர்ந்த2 நீரில் நீளிடைச்
செங்கால் மராஅத் தம்புடைப் பொருந்தி
வாங்குசிலை மறவர் ஓங்குநிலை3 அஞ்சாது
கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின்
இன்புனிற் றிடும்பை தீரச் சினம் சிறந்து
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை
உயர்மருப் பொருத்தல் புகர்முகம் பாயும்
அருஞ்சுரம் இறப்ப என்ப
வருந்தல்1 தோழி வாய்க்க அவர் செலவே

இது, பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீ இயது.

உரை
வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும் - உன் னுடைய மென்மைத் தன்மையை எடுத்துக் காட்டியும் மென்மையான சொற்களால் செலவின் அருமையைக் கூறு படுத் துரைத்தும்; நீ அவண் வருதல் ஆற்றாய் என - நீ வினை நிகழுமிடத்துக்கு வரமாட்டு வாயல்லை என்று வற்புறுத்தி; தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் - தாம் செலவினைத் தொடங்கி ஆள்வினையின் பொருட்டுப் பிரிந்து சென்றவ ராகிய காதலர்; இன்று-இப்பொழு; நெடுங்கயம் புலர்ந்த நீரில் நீளிடை - நெடிய குளங்கள் வற்றினமையால் நீர் இல்லை யாகிய நீண்ட வழியின்கண்; செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி - சிவந்த அடிமரத்தையுடைய மராமரத்தின் கிளைகளின் பக்கத்தே மறைந்திருந்து தாக்கும்; வாங்குசிலை மறவர் ஓங்குநிலை அஞ்சாது - வளைந்த வில்லேந்திய மறவ ருடைய உயர்ந்த நிலைக்கு அஞ்சாமல்; கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின் - கற்குகையுள் ஒடுங்கியிருந்த கூரிய நகங்களையுடைய பெண்புலியின்; இன்புனிற்று இடும்பை தீர - இனிய குட்டியை ஈன்ற அணிமையில் உண்டாகும் பசி நோய் நீங்க வேண்டி; சினம் சிறந்து-சினம் மிகுந்து; செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை-சிவந்த கண்களையுடைய பெரிய புலியினது கொலை வல்ல ஆண்; உயர் மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்-உயர்ந்த கொம்பு களையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்திற் பாய்ந்து கொல்லும்; அருஞ்சுரம் இறப்ப என்ப-செல்லுதற் கரிய காட்டைக் கடந்து செல்வர் என்று கூறுகின்றனர்; வருந்தல்-அதனால் வருந்துதல் ஒழிக; தோழி-; அவர் செலவு வாய்க்க-அவர் மேற்கொண்ட ஆள்வினை பற்றிய செலவு பயனுறக் கைகூடுக எ-று.

நோக்கியும் கூறியும் வருத லாற்றாய் என உரைத்து, பிரிந்தோர் இன்று அருஞ்சுரம் இறப்ப என்ப; அதனால், தோழி வருந்தல்; அவர் செலவு வாய்க்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மறவர் ஓங்கு நிலை அஞ்சாது, ஏற்றை, பிணவின் புனிற்றிடும்பை தீர, ஒருத்தல் முகம்பாயும் அருஞ் சுரம் என இணையும். பொருந்தி என்னும் வினையெச்சம் வாங்குசிலை என்ற விடத்து வாங்குதல் என்னும் வினை கொண்டது. வண்ணம் - பண்பு, தலைமகனோடு உடன் செல்லக் கருதும் தலைமகளது மேனியின் மென்மை நோக்கு தலின் வண்ணம் நோக்கி என்றார். தொடங்கிப் பிரிந்தோர் என்க. தொடங்கப்பட்டது செலவு எனக் கொள்க. கயம் - குளம், ‘புலர்ந்த’ என்னும் பெயரெச்சம் ஏதுப் பொருட்டு, மரா அமரம் - கடம்பமரம்; ஆச்சாமரம் என்பது முண்டு. இதன் அடிமரம் செம்மைநிற முடைமைபற்றிச் செங்கால் மராஅம் எனப்பட்டது; “செங்கால் மராஅத்த வரிநிழல்1 என்று பிறரும் குறித்தல் காண்க. அடி பருத்தும் பெரிய கிளைகள் வளைந்தும் நாற்றிசையும் போதலால் கானவர் அவற்றினிடையே ஒதுங்கி யிருந்து கொடுவிலங்குகளை அம்பெய்து வேட்டம் புரிவ ராகலின்; அம்புடைப் பொருந்தி வாங்குசிலை மறவர் ஓங்குநிலை என்றார்.”வாங்குசினை மலிந்த திரளரை மராஅம்“2 எனவும்,”இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன், விரிமலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து, வரி நுதல் யானை அருநிறத் தழுத்தி3" எனவும் சான்றோர் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது. அம்பு தொடுத்துக் கொல்லும் மறவர் நிலையும் கொல்லப்படும் புலியின் நிலையும் நோக்க, மறவர் நிலை ஓங்கி ஊறின்றி இருத்தற்கு வாய்ப்புடைமைபற்றி, ஓங்குநிலை என்றார் - குட்டியீன்ற அணிமையில் பெண்புலி வலிகுன்றி யிருத்தலின், கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவு என்றார். குட்டி யீன்று இன்புறுதற்கு ஏதுவாதலால் இன்புனிற்று இடும்பை என்றார். இடும்பை ஈண்டுப் பசிப் பிணியின் மேற்று, வயவு நோய் தொடங்கியதும் மறைகின்ற பசி, குட்டி யீன்று நோய் நீங்கிய பின்னர்த் தோன்றுதலால், பிணவுக்குப் பசி ஓர் இடும்பையாயிற்று. அந்நிலையில் ஆண்புலியையும் தனக்கருகில் நெருங்க விடாது பிணங்கு தலின், ஏற்றை சினம் சிறந்து நிற்கும் என்பார், சினம் சிறந்து என்றார். அச் சினமிகுதியால் பிணவின் பசிதீர்ப்பது குறித்துப் பெருங் களிற்றைக் கொல்வதாயிற்றென அறிக. கோள் - கொலை; குறித்தது தப்பாமற் கொள்ளும் செயலுமாம். எளிதிற் கொல்லலாகாமை தோன்ற உயர்மருப் பொருத்தல் என்றார். பெருங்களிற்றைப் பின் சென்று தாக்குதல் புலிக்கு இயல்பாயினும், ஈண்டுச் சினம் சிறந்து நிற்றலின், புகர் முகத்துப் பாயும் என்றார். ‘வருந்தல்’, அல்லீற்று எதிர்மறை வியங்கோள். வாய்த்தல், கருதிய வினை கருதியாங்கு முடிதல்.

ஆள்வினை குறித்துப் பிரியும் ஆடவர் மகளிரொடு சேறல் தமிழ் மரபன்று. ஆற்றாமையால் மகளிர் பெருந்துன்பம் எய்திய வழியும் ஆடவர் அவர்க்குத் தகுவன சொல்லி வற் புறுத்தி நீங்குவரே யன்றி அவர்களை உடன் கொண்டு சேறல் இல்லை என்பதை, ஆசிரியர் “துன்புறு பொழுதினு மெல்லாம் கிழவன், வன்புறுத் தல்லது சேறல் இல்லை1” என்பது காண்க. புறத்துறை மகளிர் எனச் சிலர் உண்டு; அவர்கள் புண்ணுற்ற மறச் சான்றோர்க்கு மருந்தும் உணவும் ஏனைப் பணியும் செய்து உதவுவர்; அவர்களை உடன்கொண்டு சேறல் உயர்ந்த அறநெறியாகும். “எண்ணரும் பாசறைப் பெண் ணொடு புணரார்” என்றும் “புறத்தோர் ஆங்கண் புரைவ தென்ப2” என்றும் கூறுவது அறிக. இதனைத் தலைமக்கள் நன்கு உணர்ப வாயினும், பிரிவறப் புணர்ந்த பெருங்கிழமை யால், தலைமகள் தலைமகனோடு உடன் செல்ல விழைவதும் உண்டு; களவின்கண் தலைமகனோடு உடன் போகியது உண்மையின், கற்பின் கண்ணும் அதனைச் செய்தற்கு அவட்கு உள்ளம் எழுவது இயல்பு. அதனால் அவள் தலைமகனோடு உடன்வரக் கருதிக் கூறலு முண்டு. “என்னீர் அறியாதீர் போல இவை கூறின், நின்னீர வல்ல நெடுந்தகாய் எம்மையும், அன் பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு, துன்பம் துணையாக நாடின் அது வல்லது, இன்பமுண்டோ எமக்கு3 என்பது காண்க. ஆள்வினைப் பிரிவின்கண் தலைமகள், தானும் உடன்வரக் கருதி யுரைத்ததனைக் கேட்ட தலைமகன் சுரத்தின் கொடுமை யும் செலவின் அருமையும் எடுத்தோதி அவற்றிற் கேற்ற வன்மை அவள்பால் இன்மை காட்டி வற்புறுத்தியதனை நினைப்பிக்கின்றா ளாகலின், தோழி, வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும் நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் தொடங்கி ஆள் வினைப் பிரிந்தார் என்றாள். ஆற்றாமையால் மேனி மெலிந்து உள்ளம் ஒடுங்குபவர்க்கு மெல்லிய இனிய சொற்களல்லது வேறு மருந்து இன்மையின் மென்மொழி கூறியும் என்றும், பிரிவின்கண் உடன் வருதலால் தோன்றும் துன்பங்களைத் தொகுத்தும் வகுத்தும் கூறிட்டு மொழியுமாறு தோன்றக் கூறியும் என்றும் உரைத் தாள் என, என்று சொல்லித் தேற்றி. நயமொழிகளாலும் அன்புடைச் செயல்களாலும் தலைமகள் மனம் நெகிழ்ந்து விடை தருமாறு வணக்கித் தன்செலவைத் தலைமகன் தொடங்கினா னாகலின், தொடங்கி என்றும், செலவிடை அழுங்கினவன் செல்லாமை மேற் கொள்ளாமைக்கு ஏது, ஆள்வினை மேற்சென்ற உள்ளமுடைமை என்றற்கு, ஆள் வினை பிரிந்தோர் என்றும் கூறினாள். நாளும், நாளும் ஆள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்” என்று பிறரும் உரைப்பது காண்க. நெடுங்கயம் புலர்ந்த நீரில் நீளிடை என்றது. தலைமகன் உரைக்க உணர்ந்த செலவருமை காட்டியவாறு, மறவர் ஓங்கு நிலைக்கு அஞ்சாது பிணவின் புனிற்றிடும்பை தீர்த்தல் வேண்டி இரும் புலி யேற்றை ஒருத்தலின் புகர்முகம் பாய்ந்து கொல்லும் என்றாள், சுரத்தின் கொடுமையுணர்த்தற்கு, அதனைக் காணும் நம் தலைவர் செலவிடை உளதாகும் துன்பத்துக் கஞ்சாது, இல்லிருந்து செய்யும் நல்லறம், இன்மையால் இடையூ றெய்தாமைக் காத்தல் வேண்டித் தொடங்கிய வினையை முடித்து மீள்வர் என இதனால் தோழி உள்ளுறு கருத்தும் தோன்றக் கூறினமை அறிக. வாங்குசிலை மறவரது ஓங்கு நிலையினை உணர்ந்து வைத்தும் இரும்புலி அஞ்சாது சென்றதற்கு ஏது, தன் காதற் பிணவின் இன்புனிற்று இடும்பை தீர்த்தல் வேண்டி எழுந்த கடமையுணர்வு என்பாள், கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின் இன்புனிற் றிடும்பைதீர என்றாள். புலியின் கண் சிவந்து தோன்றுவது இயல் பென்றற்குச் செங்கண் இரும்புலி என்ப. “குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்1” எனப் பிறரும் குறிப்பது காண்க. தலைவர் குறிப்பின் வண்ணம் இன்று அருஞ்சுரம் கடந்து நாளை வினை நிகழும் இடம் அடைவர் என உடன் சென்ற இளையோர் கூறினர் என்பாள், இன்று அருஞ்சுரம் இறப்ப என்ப என்றும், சுரத்தின் அருமையும் கொடுமையும் அவர்க்குத் தோன்றா தொழிக என யாம் வேண்டுவது விடுத்து வருந்துதல் நன்றன் றென்பாள், வருந்தல் தோழி என்றும், இன்று சுரம் கடந்து செல்பவர் நாளை மேற்கொள்ளும் ஆள்வினை இனிது முற்றுக, காதலர் விரைந்து மீள்க என வேண்டுவாள், வாய்க்க அவர் வினையே என்றும் கூறினாள். வினை முற்றியவுடன் நில்லாது மீள்வானாகலின், விரைந்து மீள்க என்னாது வினைவாய்க்க என்றாள் என அறிக. இதனாற் பயன், தலைவி கேட்டு ஆற்றியிருப்பாளாவது.

உலோச்சனார்


இயற்கையிற் கண்டு இருவயின் ஒத்த காதலால், இடந் தலைப் பட்டும் பாங்கன் தோழி என்ற இருவரினாகிய கூட்டம் பெற்றும் களவின்கண் ஒழுகிவரும் தலைமக்களிடையே, தலை மகன் அக்களவினையே விரும்பி யொழுகலானான். தலைவியின் உள்ளத்தில் முளைத்தெழுந்த காதல் நாளும் வளர்ந்து அவனை இன்றியமையாத அளவு சிறந்து நின்றது. தலைமகனைக் கூடிய வழிக் கதிர்த்தலும், பிரிந்தவழிப் பசத்தலும், எய்தித் தலைவியது மேனிநலம் அடிக்கடி மாறத் தலைப்பட்டது. அதனைக் கண்ட ஏதில் மகளிர் அலர் கூறலாயினர். அதனை அறிந்த தலைவியின் அன்னை, தலைமகளை இல்லின்கட் செறித்துப் புறத்துப் போகா வாறு சிறை செய்தாள். தோழி தலைமகனைக் காணும் போதெல் லாம் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் வரைவுகடாவி வந்தாள். காதல் சிறப்பதொன்றே கருதிய தலைவன் வரைவினை நீட்டித்தான். வேறே வழியின்மை கண்ட தோழி தலைமகளைக் கொண்டு தலைக் கழியுமாறு தலைமகனைத் தூண்டுவதே இனிச் செயற்பாலது எனத் துணிந்தாள். பெருநாணின ளாகிய தலை மகளை அதற்கு உடன்படச் செய்வது தோழிக்குப் பெருஞ்செய லாயிற்று. ஒருநாள் தலைவன் வந்து நின்றதைத் தோழி கண்டாள்; அதனைத் தான் அறியாது தலைவியொடு உரையாடுபவள் போலத் தானே ஏறட்டுக் கொண்டு தலைமகன் கேட்பத் தலை வியை நோக்கி, “தோழி, இவ்வூர் மகளிர் சிலரும் பலருமாகத் தம்மிற் கூடிக் கடைக்கண்ணால் நம்மை இகழ்ந்து நோக்கித் தம் மூக்கை உயர்த்திக் கைவிரலை வாயில் வைத்து, அம்பலும், அலரும் உரைக்கின்றார்கள், அவர்களுடைய அச் செயலைக் கண்டுணர்ந்த அன்னை வெகுண்டு கையில் ஒரு சிறு கோலை ஏந்தி வந்து அச்சுறுத்தி அலைப்பதால் யான் பெரிதும் வருந்து கின்றேன்; இனி, நள்ளிரவில் தேரூர்ந்து வரும் தலைமகனான கொண்கனது தேரேறி அவனூர்க்குச் செல்லக் கருதுகின்றே னாகலின், அலர் கூறும் தொழிலராகிய இவ்வூரவர் அதனைத் தாமே சுமந்து கழிக” என்று மொழிந்தாள். இதனைச் சிறைப்புறத்து நின்று கேட்ட தலைமகன் நிலைமை கடி தானமை யுணர்ந்து தெருண்டு வரைதலை மேற்கொள்வானாயினான்.

இக்கூற்றின்கண், தலைவியது காதற்பெருமையை ஊரவர் கூறும் அலர்மேல் வைத்துக் காட்டித் தலைவியைத் தலைமக னோடு போக்குடன் படுத்தும் செயல் நலத்தை வியந்து நோக்கிய சான்றோராகிய உலோச்சனாரது புலமையுள்ளம் இப்பாட் டினை உருப்படுத்தித் தந்துள்ளது.

சிலரும் பலரும் கடைக்கண்1 நோக்கி
மூக்கின் ஊக்கி2, வாய்விரல் பொத்தி
மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு3 குரூஉச்சுவல்
கடுமாப்4 பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் பெருந்தோட்5 கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந் தொழிகஇவ் வழுங்கல் ஊரே.

இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புற
மாகச் சொல்லியதூஉமாம்.

உரை
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி - சிலரும் பலருமாகத் தம்மிற் கூடிக்கொண்டு கண்ணின் கடைப் பார்வையால் என்னை இகழ்ந்து நோக்கி; மூக்கின் ஊக்கி வாய்விரல் பொத்தி - மூக்கினை யுயர்த்திப் பெருமூச்சுவிட்டுக் கைவிரல் களால் வாயிதழைப் பொத்தி; மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற - தெருக்களில் ஏதில் மகளிர் பழிச் சொற்களை முகிழ்த்துச் சொல்லித் தூற்றுதலால்; அன்னை - ; சிறுகோல் வலந்தனள் அலைப்ப - சிறுகோல் ஒன்றைக் கையில் எடுத் தோங்கி என்னை அடித்து வருத்த; அலந்தனென் - யான் வருந்தினேன், காண்; வாழி - ; தோழி - ; கானல் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் - கானற்சோலை வழியே புது மலர் தாங்கிய கொம்புகளைத் தீண்டி வருதலால் அப்பூவின் நறுமணம் கமழும் சிவந்த நிறம் பொருந்திய பிடரியினை யுடைய; கடுமாப் பூண்ட நெடுந்தேர் கடைஇ - விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரைச் செலுத்திக் கொண்டு; நடுநாள் வரூஉம் - நடுவியாமத்தே வரும்; பெருந் தோள் கொண்கனொடு யான் செலவயர்ந்திசின் - பெரிய தோளையுடைய தலைவனொடு யான் உடன்போகக் கருது கின்றேன்; இவ்வழுங்கலூர் அலர் சுமந் தொழிக - வெற்றார வாரத்தையுடைய இவ்வூர் தான் தூற்றும் அலரைத் தானே சுமந்து கழிக எ-று.

தோழி, வாழி; பெண்டிர் தூற்ற, அன்னை அலைப்ப, அலந்தனென், ஆதலால், நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் பெருந்தோள் கொண்கனொடு யான் செலவயர்ந்திசின்; இவ்வழுங்கலூர் அலர் சுமந்தொழிக எனக் கூட்டிவினை முடிவு செய்க. ஆல் - அசை நிலை, நோக்கி, ஊக்கி, பொத்தி, தூற்றி என இயையும். கடைக்கண் - முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை, மூக்கையுயர்த்திப் பெருமூச்சு விடுதலும், வாயிதழைக் கைவிரலாற் பொத்திக் கொண்டு பேசுதலும் முதிர்ந்த பெண்டிர்க்கு இயல்பாதலின், அதனை விதந்து மூக்கின் ஊக்கி வாய்விரல் பொத்தி என்றார். ஊக்குதல், உயர்த்துதல், அசைத்தலுமாம். பொத்துதல், மூடுதல், சிறுகோலை ஓங்கிய போது அதன் நுனி சுழலுதல் ஈண்டு வலத்தல் எனப்பட்டது இளஞ்சிறுமியரைச் சிறுகோல் கொடு பெற்றோர் அடிப்பது உண்டாகலின், சிறுகோல் வலந்தனள் அன்னை என்றார்; பிறரும், “சிறுபல் கூந்தற் போது பிடித்து அருளாது எறிகோல் சிதைய நூறவும்”1 என்பர். அலத்தல், வருந்துதல்; “நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று, அலந்தனென் உழல்வென் கொல்லொ1” என வருதல் காண்க. குரு நிறம், சுவல், பிடர்மயிர்; “கொய்சுவற் புரவிக் கைகவர் வயங்குபரி2” என்றாற் போல, நடுநாள் - நடுவியாமம், செலவயர்தல் - செல்லுதல்.

சில பல என்பன தமிழ்வழக்கு. இரண்டுமுதல் ஐந்து சேர்ந்தவை சில என்பதனுள்ளும், அவற்றின் மிக்கவை பல என்பதனுள்ளும் அடங்கும் என்பர். சிலரும் பலருமாய்க் கூடிப் பேசுதல் பெண்மக்கட்கு இயல்பாதலின், சிலரும் பலரும் என்றும், ஒருவர்பால் நிகழும் மறைந்த செய்கையை அவர்க்குப் புறத்தே அவர் அறியாவாறு பேசுதலால் கண்ணின் கடைப் பார்வையால் பார்த்துக்கொண்டு பேசுவதுபற்றி, கடைக்கண் நோக்கி என்றும் கூறினாள். தலைமகளை உடன் போக்கிற்கு இசைவித்தலும், தலைமகனைக் கொண்டுதலைக் கழியுமாறு அறிவுறுத்தலும், தோழிக்குக் கருத்தாதலால், தான் உரை நிகழ்த்தற்கு உரிய ஏது, ஊரவர் கூறும் அம்பலும் அலரும் என எடுத்துக் கூறுகின்றமையின், சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி என்றும், மறையாயின பேசுமிடத்து மூக்கின் உயிர்த்து வாயிதழைப் பொத்திக் கொண்டு உரையாடுவது மூத்து முதிர்ந்த பெண்டிர் செயற் பண்பாதல் கண்டு மூக்கின் ஊக்கி வாய்விரல் பொத்தி என்றும், ஏனை இளமகளிர் போல மனையின் அகத்தே ஒடுங்கியிராது புறத்தே இருந்துகொண்டு அம்பலும், அலரும் கூறுவது இயல்பாதல் பற்றி, மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற என்றும் கூறினாள். மூக்கின் ஊக்கி வாய்விரல் பொத்தி என்றது வேண்டா கூற லாயினும், தான் குறிப்பதன் உண்மையை வற்புறுத்தற்குத் தோழி யுரைப்பா ளாயினள் என அறிக. முது பெண்டிர் தம்முள் மொழியும் அம்பலும், அலரும் அவரை யொத்த தாயின் செவிக்கு இனிது சென்று சேறலின், அவள் கேட்டுக் கழிசினம் கொண்டு கையில் சிறுகோ லேந்தி அலைப்பாளாயினாள் எனத் தமது களவினைத் தாயறிந்தமை புலப்படுப்பாள், சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப என்றும், அதனால்தான் எய்திய வருத்தத்தைக் கேட்டுத் தன் பொருட்டே தோழி அலைப்புண்டு வருந்துகின்றா ளென நினைந்து தலைமகள் போக்குடன்படுவது ஒருதலையாதல் குறித்தும், தலைமகன் வரைவுகுறித்து ஆவனவற்றை விரைந்து செய்தலையோ கொண்டுதலைக்கழிதலையோ இரண்டி லொன்றைத் துணிதல் ஒருதலையாதல் கருதியும், தோழி அலந்தனென் வாழி தோழி என்றும் கூறினாள். தலைவியின் இன்பவாழ்வு குறித்துத் தான் இத்துன்பம் எய்தினமை விளங்க வாழி என்றாள் என அறிக.

களவுக் காலத்தும் தலைமகன் மாவூர்ந்தும் தேர் செலுத்தியும் வருவது விலக்கப்படாமையின், கொண்கன் தேரூர்ந்து வருதலைச் சிறப்பித்துக் கூறுகின்றாள். “தேரும் யானையும் குதிரையும் பிறவும், ஊர்ந்தன ரியங்கலும் உரியர் என்ப”1 என்று ஆசிரியர் உரைப்பது காண்க. புதுமலர் விரிந்து நறுமணம் கமழ்ந்து விளங்கும் கானற் சோலையை எடுத் துரைத்து, அச்சோலை வழியே வரும் குதிரையின் நிமிர்ந்த பிடரியில் புதுமலர் தீண்டிப் பூமணம் கமழும் என்றது, சிறைப்புறத்தே நிற்கும் தலைமகன், தலைமகள் அழிவில் கூட்டம் வேண்டிக், கடிமணம் புரிந்து கோடற்கண் பெருவேட்கையளாய் அதற்குத் துணையான அனைத்தும் விரைந்து செய்யும் விருப்புடையள் என்பது உணர்ந்து கோடற் பொருட்டு. தலைமகன் தேரை நெடுந்தேர் என்றும், அதன் கட் பூட்டிய குதிரையைக் கடுமா என்றும், அவன் வருங் காலத்தை நடுநாள் என்றும் சிறப்பித்தது, தலைமகன் கொண்டுதலைக்கழியும் கருத்துக்கு உடன் பட்டு வந்தமை தலைமகள் உணர்ந்து கோடற்பொருட்டு. உடன் போகிய வழித் தமர் தொடர்ந்து பற்றலாகாமை குறித்தற்கு இவ்வாறு கூறினாளுமாம். மேலும், ஒருகால் தமர் வளைத்துக் கொள்ளினும். அவர் கையகப்படாது நின்னைக் கொண்டு தலைக் கழியும் பேராற்றலன் தலைமகன் எனத் தலைமகட்கு உரைப்பாளாய், பெருந்தோட் கொண்கன் என்றும், இந் நிலையில் செய்தற் குரியது உடன் போக்கல்லது வேறில்லை என வற்புறுத்தற்குச் செலவயர்ந்திசினால் யானே என்றும் கூறினாள். தமர் வரைவு மறுத்த விடத்தும் வேற்றுவரைவு வருமிடத்தும் நிகழற்பாலதாய உடன்போக்கினைத் தோழி இப்போழ்து வற்புறுத்தற்கு ஏது ஊரவர் கூறும் அலர் மிகுதியும், தாயறிவும், அவை வாயிலாகப் பிறக்கும் இற் செறிப்பும் என்பது யாப்புறுத்தற்கு, அலர் சுமந் தொழிக இவ்வழுங்கலூர் என்றாள்.
“ஒருதலை யுரிமை வேண்டினும்1” எனத் தொடங்கும் நூற்பாவுரையில் “போக்கும் வரைவும் மனைவிகட் டோன்றும்” என்றதற்கு இப் பாட்டைக் காட்டி, “இது போக்குக் குறித்தது” என்பர் இளம்பூரணர்.

கடுவன் இளமள்ளனார்


மள்ளனார் என்பது இச் சான்றோரது இயற்பெயர். மள்ளனார் எனச் சான்றோர் வேறு இருந்தமையின்; ஆண்டில் இளையரான இவர் இளமள்ளனார் எனக் குறிக்கப்படுகின்றார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கடுவனூர் இவரது ஊராதலின் இவர் கடுவன் இளமள்ளனார் எனப்படும் இயல்பினரானார். மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார் என்றொரு சான்றோர் காணப்படுகின்றார்; கடுவன் இளமள்ளனார் எனச் சிறப்பிக்கப் படுவதனால். இவர், அவரின் வேறாதல் தெள்ளிது. மதுரைத் தமிழ்க்கூத்தன் என்ற சிறப்பின்றியே கடுவன் மள்ளனார் என்று ஒருவர் குறுந்தொகையுள் வருகின்றார். இவ்வாற்றால், கடுவ னூரில் மள்ளனார் என்ற பெயருடைய சான்றோர் மூவர் இருந் தமை பெறப்படும். அவருள் மூத்தவரைக் கடுவன் மள்ளனார் எனவும், பின்னவரை இளமள்ளனார் எனவும், மற்றவரைத் தமிழ்க் கூத்தன் மள்ளனார் எனவும், தனித்தனியே காண வேண்டியவர் களாகின்றோம். இவர் பாடியனவென வேறுபாட்டுக்கள் கிடைத்தில.

கற்புநெறிக்கண் மனையறம் புரிந்தொழுகும் தலைமகன், மிகைமகளிரான பரத்தையர் சேரிக்குச் சென்று, அவர்க்கும் தலையளி செய்து வாழ்வளிக்கும் முறைமைபற்றி அவரொடு புறத்தொழுக்கம் மேற் கொள்ளலானான். அம்மகளிர் பலராத லின், பலர்க்கும் அருள்புரிதல் வேண்டுதலின் ஒருத்தி மனைக்கண் நீங்கி வேறொருத்தியின் மனைக்குச் சென்றானாக. முன்னவள் அது பெறாது பெரிதும் வருந்திப் பிணங்கலானாள். அதனை அறிந்த தலைமகன் பாணனை அவள்பால் வாயில் வேண்டி விட்டான். அதனால் பரத்தை மனைக்குப் போந்த பாணனை அவள் வெகுண்டு நோக்கி, “பாணனே, நீ பலரும் கண்டு நகைக்கும் நிலையை யுடையை யாகுவை; நும் பெருமகன், முன்னர், எம் பாண்டி வேந்தர் மூன்றிலில் புகல்பெற்றுத் தொழுது நிற்கும் மன்னன் போல, எம் மனைக்கட் போந்து பின்னின்றா னாக, யாம் சிறிதும் இசையோம் என வாயில் மறுத்தேம்; அக்காலை அவன் தன் பரிமா ஊர்ந்து வந்து தன் கண்ணியும் தாரும் காட்டி எமது ஒருமை நெஞ்சின்கண் தன்னை நன்கு கொள் வித்தான்; அதனை உணராது யாம் கொள்ளேம் போல நீ இவண் போந்து அவனை எம் நெஞ்சிற் கொள்ளுமாறு கூறுகின்றாய்; எம்நெஞ்சம் ஒருகால் கொண்டது விடாத ஒருமைப் பாடுடைய தாகலின், இவண் நில்லாது செல்வாயாக. இன்றேல், எம்யாய் சிறிதும் அஞ்சாளாய்ச் சிறியதொரு மூங்கிற் கோலைக் கையிற் கொண்டு நின்னை ஒறுக்கும் கருத்தினையுடையாள்; அவள் பின் விளைவெயண்ணி வருந்து தலுடையளுமல்லள்” என்று சொன்னாள்.

பரத்தையது இக்கூற்றின்கண், தலைமகன்பால் அவள் உள்ளத் தெழுந்த காதல் விஞ்சிநிற்பதும், அதனால் பாணன் போந்து உரைப்பது அவளது ஒருமை நெஞ்சின் பெருமையை ஊறு செய்வதாக எண்ணி வெகுள்வதும் மிக்க இனிய முறையில் அமைந்திருப்பது கண்ட இளமள்ளனாரது புலமை உள்ளம் வியந்து உவகை கொள்ள, இப்பாட்டைப் பாடுவாராயினர்.

நகைநன் குடையை1 பாணநும் பெருமகன்
மிளைவலி2 சிதையக் களிறுபல பரப்பி
அரண்பல கடந்த முரண்கொள் தானை
வழுதி வாழிய பலவெனத் தொழுதீண்டு
மன்னெயில் உடையோர் போல வந்தியாம்3
என்னதும்4 பரியலோ இலம்எனத் தண்ணடைக்5
கதழ்பரி கடைஇஎம் கலிகெழு சேரித்
தாருங் கண்ணியுங் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ6 அஞ்சாது7
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கண்ணுவ துடையள்8யாய் அழுங்கலோ விலளே

இது, தலைநின் றொழுகப்படாநின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.

உரை
பாண - ; நகை நன்குடையை - கண்டோர் எள்ளி நகைத்தற் குரிய நிலையினை மிகவும் உடையையாவாய்; நும்பெரு மகன் - நும்முடைய பெருமகனான தiலவன்; மிளைவலி சிதைய - காவற்காடுகளா லுண்டாகிய வலி முற்றும் சிதைந்து கெடுமாறு; களிறு பல பரப்பி - களிறுகள் பலவற்றை யுடைய படையைச் செலுத்தி; அரண் பல கடந்த - அரணங்கள் பலவற்றையும் வஞ்சியாது பொருதழித்த; முரண் கொள் தானை - மாறுபாடு கொண்ட தானையை யுடைய; வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டும் - பாண்டியன் பல்லாண்டு வாழ்க என்று சொல்லிக் கையால் தொழுது நெருங்கும்; மன்னெயில் உடையோர் போல - அவன் அருளால் நிலைபெற்ற எயிலை யுடைய குறுநில மன்னர்களைப் போல; வந்து - எம்மனைக்கட் போந்து பின்னின்றானாக; யாம் என்னதும் பரியலோ இலம் என - யாம் சிறிதும் அவற்கு நேரேம் என்று சொல்லவும்; தண்ணடைக் கதழ்பரி கடைஇ எம் கலிகெழு சேரி - தண்ணிய நடையும் விரைந்த செலவுமுடைய குதிரைகளைச் செலுத்தி மீண்டும் எம் ஆரவாரம் மிக்க சேரிக்கும் போந்து; தாரும் கண்ணியும் காட்டி - தன் அடையாள மாலையையும் கண்ணி யையும் எமக்குக் காட்டி; ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ - ஒருமை நெறியையுடைய எம் நெஞ்சத்தைத் தனக்கு இடமாகக் கொண்டமையின் இனி அது விடுமோ; அஞ்சாது கண்ணுடைச் சிறுகோல் பற்றி - விட்டதுபோல் இவண் வந்து நீ கூறுவதனால் மனத்தில் அச்சமின்றிக் கணுவையுடைய மூங்கிலாகிய சிறு கோலைக் கையிற் கொண்டு; கண்ணுவ துடையள் யாய்-நின்னை ஒறுத்தலைக் கருதும் கருத்துடைய ளாயினாள் எம் அன்னை; அழுங்கலோ இலள் - அதன் விளைவு குறித்து அழுங்கும் இயல்பினளுமல்லள் ஆகலான் எ-று.

பாண, நும் பெருமகன் எயிலுடையோர் போல வந்து யாம் என்னதும் பரியலோ விலம் எனவும் மீண்டும் கதழ்பரி கடைஇ. எம் கலிகெழு சேரிக்குப் போந்து, காட்டி, கொண்டமை விடுமோ. விட்டாற் போலக் கூறலின் யாய் கண்ணிய துடையள், அழுங்கலோ இலளாகலான் நகை நன்குடையை யாவாய் என ஆக்கம் பெய்து வினை முடிவு செய்க. நகை - ஈண்டு எள்ளல் பற்றி வருவது. ஆவாய் என்ற ஆக்கவினை விகாரத்தால் தொக்கது மிளை - காவற்காடு. களிறுகளைப் பரந்து செல்ல விடுத்தலின் பரப்பி என்றார்: பரப்பிய வழி அவற்றின் கையாற் பிறக்கும் அழிவினும் காலால் உளதாவது பெரிதாகலின். பிற அரணங்கள் நீரரண், மதிலரண் முதலியன. முரண், மாறு படுதற் கேதுவாகிய இகல். போர் புரிந்தொழுகும் தானைக்கு முரண் இன்றியமையாமையின் முரண்கொள் தானை என்றார். ஈண்டும், நெருங்கும் மன் எயில், நிலைபெற்ற அரண்; அந்த எயில் தாமும் வழுதியின் அருளால் நிலை பெறுமாறு தோன்ற மன்னெயில் என்றும் வழுதியின் அருள் பெற்று வாழும் தலைவரை மன்னெயில் உடையோர் என்றும் குறிப்பித்தார். என்னது சிறிது என்னும் பொருட்டு; “தொன்னல மிழந்து துயரமொடு என்னதூஉம் இனையல் வாழிதோழி1” என்று பிறரும் வழங்குதல் காண்க. பரியல், விரும்புதல். அடி வைப்பதில் மென்மையும் செலவின்கண் விரைவும் உடைமை பற்றித் தண்ணடைக் கதழ்பரி என்றார். தண்ணிய நடை, குதிரைகட்குரிய ஐவகைக் கதிகளுள் ஒன்று; மந்தகதி யென வடநூல் கூறுவதும் இதுவே. கதழ்வு, விரைவு. விரைந்த நடை குதிரைகட் கியல்பாதல் தோன்றக் கதழ்பரி என்று சிறப்பித்தார். ஆடல், பாடல், அழகு, என்ற இவற்றால் தம்மை எப்போதும் செம்மை செய்து கோடலின், பரத்தையர் சேரிக்குக் கலிப்பு இயற்கை யென அறிக. செல்வமிக்க ஆடவர்களைத் தம்பால் ஈர்த்துக் கோடற்கு ஆடல் முதலிய மூன்றும் பரத்தையரால் குறிக் கொண்டு பேணப்படுமென அறிக. கலி, கொட்டு, ஆட்டு, முழக்கு. செல்வக் குடியில் தோன்றிய செம்மல் என்றற்குத் தாரும் கண்ணியும் அடையாள மாதலின் அவற்றைக் கண்ட பின்பே பரத்தையர் வரவேற்பர். கண்ணி தலையில் சூடும் பூ எனவும் தார் குடிக்குரிய அடையாள மாலை எனவும் வேறுபடுத் துரைப்ப; “கண்ணியும் தாரும் எண்ணினராண்டே2” என்பது காண்க. இவை நாட்டுக்கும் நாட்டரசுக்கும் ஆக்கமும் அரணுமாகும். அருஞ்செயல் புரிந்த சான்றோர்க்கு வேந்தர் நல்கும் சிறப்புக்கள்; “வில்லும், வேலும், கழலும், கண்ணியும், தாரும், மாலையும், தேரும், வாளும், மன்பெறு மரபின3” என ஆசிரியர் உரைப்பது காண்க. மணந்து கோடற்குரிய மற மாண்புடைய ஆடவர் தொகை குன்றினமையின் மக்களி னத்து மிகைமகளிராய், மண்ணுலகில் வாழ வேண்டி, ஆண்மையால் எங்கும் பரந்து சென்று புறத்தே பொருளீட்டும் ஆண்மக்கள் போலத்; தமது பெண்மை நலத்தால் பொரு ளுடைய செல்வரைப் பரந்து பற்றிப் பொருள் செய்து கொள்ளும் இவர்கள் பரத்தையர் எனப்படுவர்; நாடு காக்கும் நல்லாண்மையும், செல்வச் சிறப்பு முடைய ஆடவரைத் தேர் தற்குக் கண்ணியும், தாரும், காண்பது பரத்தையர்க்குப் பண் பாகும். இதுபற்றியே பரத்தையரைப் புறப்பெண்டிர் என்றும், அவரைத் தலைக்கொண்டொழுகும் ஆடவரது ஒழுக்கத்தைப் புறத்தொழுக்கம் என்றும் கூறுவர். இவருள் இளமை கழிந்த முதுபரத்தையர் போரிற் புண்பட்ட வயவர்க்கு மருத்துவம் செய்யும் புறப்பெண்டிராய் வேந்தரொடு சென்று, பாசறை யினும், பாடிவீட்டினும் பணிபுரிவர். அன்றியும், நாட்டில் நல்லரசு புரியும் வேந்தர் இல்வழி அதனை நடத்தும் தகுதி யுடைய சான்றோரை யல்லது அரசு விரும்பாதவாறு போல, இப்பரத்தையரும், “மன்பெறு மரபின” வாகிய தாரும் கண்ணியுமுடைய தக்கோரை யல்லது “இழிந்தோரை” விரும்பார் என அறிக. அவனி ஆளும் அரசர், அறம் கூறும் அந்தணர், பொருளைப் பரப்பும் வணிகர், அதனை விளை விக்கும் வேளாளர் என்ற நால்வகையினருள் இழிந்தோர்க்கு அரசுரிமை இல்லை யென்பதை ஆசிரியர், “அன்னராயினும் இழிந்தோர்க்கில்லை1” என்பதனால் அறியலாம். நன்னெறி யினின்றும் வழுக்கி வீழ்ந்து இளிவரவெய்தினோர் இழிந் தோர் எனப்படுவர் என்க. உண்மை யுணராதோர் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எனச் சாதியைப் புகுத்திச் சழக்குரைப்பர். சாதிமுறை தமிழ் மரபன்று. அதற்குச் சாதியென்ற சொல் தமிழில் இல்லாமையே சான்று. மணஞ்செய்து கோடற் குரிய வாய்ப்பு நிலவுங்காறும் ஒருமை நெஞ்சம் கொண் டிருத்தலின் பரத்தை நெஞ்சினை ஒருமைய நெஞ்சம் என்றார். ஒருமைய - பெயரெச்சக் குறிப்பு; ‘விடுமோ’, ஓகாரம் எதிர்மறை. பரத்தையின் தாயாகிய முதுபெண்டு மறமகள் என்பது தோன்ற அஞ்சாது கண்ணிய துடையள் எனவும். அழுங்கலோ விலள் எனவும் கூறினார். அழுங்குதற் குரிய வற்றைச் செய்தலாகாது; செய்யின் அதுபற்றி அழுங்கல் அறமாகாது என்று உணர்க. கண்ணியது - சிறுகோல் கொண்டு பாணனைக் கண்ணற ஒறுத்தல்.

புறத்தொழுக்கம் பூண்ட தலைமகன் தலைநின்றொழுகும் பரத்தை, தன்னைக் கைந்நெகிழ்த்து வேறொரு பரத்தை மனைக்கண் சென்றான் எனக்கேட்டுப் பொறாது வெகுண் டிருப்பவள், தன் மனைவயிற் போந்து தலைவனது அன் புடைமை கூறி மனங்கரைத்து வாயில் பெறப் பாணன் கருது தலை மறுக்கும் குறிப்பின ளாகலின், நகை நன்குடையை பாண என்றாள். நகையும் மென்மொழியும் கொண்டு உரையாடுதலின் நகை என்றும் பின்னர் நிகழ இருக்கும் செயலால் கண்டோர் பெரிதும் நகைத்து எள்ளுவர் என்னும் துணிவால். நகை நன்கு உடையை என்றும் கூறினாள், தன் மனையின் நீங்கி யிருத்தலின் நும் பெருமகன் எனப் பிரித் தாள். புறத்துறையில் நாடாளும் பாண்டி வேந்தன் பெறும் வெற்றியில் மிக்க விருப்புடைமை தோன்ற, வழுதியைத் தொழுது வாழ்த்தி நிற்கும் மன்னெயிலுடையோரை விதந் தோதினாள். எயிலுடையோர் வேந்தன் முன்றிலின்கண் அவன் பெயரும் புகழும் வாழ்த்துவது போலத் தலைமகள் பரத்தையின் நலம் புனைந்து பாராட்டினமை தோன்ற மன் னெயி லுடையார் போல வந்து என்றும், அவன் உரைத்த பாராட்டுரையால் தான் உள்ளம் சிதைந்து, உவந்து ஏற்றுக் கோடற்கு ஒருப்படாமையோடு வெளிப்பட மறுத்துரைப்பது தோன்ற, யாம் என்னதும், பரியலோ இலம் எனவும், முன்பு அவளது நலம் வேண்டிய காலை, உண்மை யுணராது மறுக் கின்றாள் போலும் எனக் கருதித் தனது தலைமை நலம் விளங்கத் தலைவன் போந்தமை கூறுவாள், தண்ணடைக் கதழ்பரி கடைஇ எம் கலிகெழு சேரித் தாருங் கண்ணியும் காட்டி என்றும் கூறினாள். தான் இவர்ந்தது கதழ்பரி யாயினும் எம் சேரிக்கண் யாம் நன்கு காண்டலை வேண்டி அதனைத் தண்ணிய நடையுடைத்தாகச் செலுத்தி வந்தான் என்றற்குத் தண்ணடைக் கதழ்பரி கடைஇ என்றும், மன் பெறு மரபினதாதல் தோன்றத் தாரை விளங்கக் காட்டினன் என்பாள், தாரும் கண்ணியும் காட்டி என்றும் சிறப்பித்தாள், தலைமகன் மார்பின்கண் கிடந்து விளங்கும் தார், அம் மார்பையே விரும்பியுறையும் பரத்தையின் உள்ளத்தில் ஓங்கி நிற்றலின், அதனை முதற்கண் நிறுத்தினாள் என்றுமாம். ஆடவரும் பெண்டிரு மாகிய தலைமக்கள். கண்ணியும் தாரும் ஒருங்கு அணிந்து வருதல் பண்டையோர் மரபு; ஞாழல் வண்டுபடத் ததைந்த கண்ணி நெய்தல், தண்ணறும் பைந்தார் துயல்வர வந்துஇக், கடல்கெழு செல்வி கரைநின்றாங்கு1" என்பது காண்க. “தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தைமையும்2” காட்டற்கு ஒருமைய நெஞ்சம் என்றாள். எம் நெஞ்சினைத் தனக்கு இடமாகக் கொண்டமையின், எம் நெஞ்சம் தான் கொண்டதனை விட்டது போலவும் கருதி, விடாது அவனையே மீளவும் கொள்ளல் வேண்டும் என நீ கூறுவது எம் நெஞ்சின் ஒருமைச் சிறப்பை இகழ்வது போறலின், இனியும் அதுபற்றிக் கூறுவது எம் அன்னைக்குச் சினம் உண்டுபண்ணும் என்றும், அதனால், அவள் கண் ணுடைக் கோலொன்று பற்றி நின்னைக் கண்ணறப் புடைப்பள் என்பாள், ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ எனவும், அஞ்சாது, கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் கண்ணிய துடையள் எனவும் கூறினாள். பரத்தையர் வாழ்வுக்குப் பெருந்துணையாய பாணனை ஒறுத்தல் வித்தட்டுண்ணும் விரகில் செய்கை யாயினும், தாய் அதனை நினைந்து இரங்குதலும் செய்யாள் என்பாள், அழுங்கலோ இலள், எனவும் உரைத்தாள். தாயர் கண்ணுடைக் கோல் பற்றி அலைத்தல், “யாய் என்னைக் கண்ணுடைக் கோலள். அலைத்ததற்கு3” என்பதனாலும் அறிக. இதனால், பரத்தை பாணனொடு புலக்கு முகத்தால் தலைவன்பாலுள்ள தன் காதன்மையைப் புலப்படுத்தி அவனைத் தன்பால் தாழ்விப்பது இப்பாட்டின் பயனாவது காண்க.

இளநாகனார்


இளநாகனார் என்ற பெயருடைய சான்றோர் பலர் உளர்; அவர் பலரும் பூதன் இளநாகனார், மருதன் இளநாகனார், பெருமரு திளநாகனார் எனத் தனித்தனியே சிறப்பிக்கப் பெற்றுள்ளமையின், இவர் அவர் எல்லோரினும் காலத்தால் முற்பட்டவர் என்று தெரிகிறது. இவரைப்பற்றி வேறே ஒன்றும் தெரிந்திலது. இவருடைய பாட்டுக்கள் இத்தொகைநூல் ஒன்றில் தான் காணப்படுகின்றன.

தலைமக்கள் தம்மில்தாம் தமித்துக் கண்டு காதலுற்றுக் களவு நெறியில் அக்காதலைப் பேணி வளர்த்து வருகையில், தலை மகன் இரவுக் குறிக்கண் வழியில் உளவாகும் ஏதங்கட்குச் சிறிதும் அஞ்சாது தவறாது வந்துகொண் டிருந்தானாயினும், அவ்வொழுக்கத்தை நீட்டித்தல் சீரிய அறமன்று எனத் தோழி கண்டாள். “இனி வாரற்க” என்று திடுமென மறுத்தல் முறையன்மையின், இரவில் அவன் வரும்வழியின் கொடுமை களை எடுத்தோதி அவன் வரவை விலக்கலுற்று, குறிப்பாகவும் மறைமுகமாகவும் தன் கருத்தை அறிவிப்பது முறை என்று அவள் கண்டாள். அவ்வுரை தலைவன் செவிப்படின், அவனது உள்ளம் அவ்வுரைக்கருத்தை எண்ணத் தொடங்கும்; வரைவுகடாவும் தன் கருத்து இனிய முறையில் நிறைவுறும் என்பது அவளது துணிவு; உண்மையும் அதுவே; இந்நிலையில், ஒருநாள் இரவு தலைமகன் சிறைப்புறத்தே வந்து நின்றதைத் தோழி கண்டாள். அவனைக் காணாதாள்போலத் தலைவியை அங்கே கொணர்ந்து நிறுத்தி அவளொடு சொல்லாடுவாளாய், “தோழி நம்காதலர் நாட்டில் தான் காதலித்த கடுவனாகிய ஆண்குரங்கைக் குறி”யிடத்தே கூடிய மந்தி, நீர்நிலை மேற்படிந்த மரக்கிளை மேற்சென்று, தண்ணீரில் தன் நிழலை நோக்கிக், கடுவனது கூட்டத்தால் பாறிச் சிதர்ந்த தன் தலைமயிரை ஒப்பனை செய்துகொள்ளும் என்பர்; அந்த நாட்டையுடைய அவர், இரவின்கண் நம்மை நோக்கித் தனித்து வருகின்றார்; அவர் வரும் வழியின் கொடுமையை நினைக்கும் போது என் நெஞ்சம் வருந்துகிறது. அவர் வாரா தொழியின் நமது நுதல் பசந்து ஒளிகுன்றும்; தோள் மெலிந்து தொடியும் வளையும் நெகிழ்ந்து நீங்கும் நிலைமை உண்டாகும். நுதல்பசப்பையும் தோள்மெலிவையும் யான் அஞ்சுகின்றே னில்லை; வலிமிக்க புலியும் யானையும் போருடற்றிய காலை, புலி, யானைக்கு ஆற்றாமல் ஓடித் தன் முழைஞ்சினுள் ஒடுங்கக் கண்ட யானை, ஆங்குச் சென்று அதனைத் தன் கோட்டாற் குத்திக் கொன்று விட்டு மலைச்சாரலில் விழும் அருவிக்குச் சென்று குருதிக்கறை படிந்த தன் கோடுகளைக் கழுவிக்கொள்ளும் வழியில் நம் காதலர் வருகின்றார். அதனை நினைக்கும் போது அவர் அவ்வழியே வாராதொழிவது நன்று என என் நெஞ்சம் விரும்புகிறது" என்றாள். அக்கொடுமையைக் கேட்ட தலை மகளும் உளம் நடுங்கி, “ஆம்” எனத் தலையசைத்தாள். அதனைச் செவியேற்ற தலைமகன் இனி இரவு வருதலை விலக்கி வரைந்து கோடலே தக்கது எனத் துணிந்தான்.

தோழி கூற்றில் பொதிந்து கிடக்கும் சூழ்ச்சியைக் கண்ட இளநாகனார் பெருவியப்புற்று அவள் கூற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார். இப்பாட்டின் நயங் கண்டே பண்டைச் சான்றோர் இதனை இத்தொகைநூற்கண் கோத்துள்ளனர் என அறிக.

நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்
கொன்முரண் இரும்புலி அருமுழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட் டியானை
கன்மிசை அருவியிற் 1கழூஉம் ஆங்கண்
வாரற்க தில்ல தோழி 2சாரல்
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்துக் களவிற் புணர்ந்த
செம்முக மந்தி 3செய்குறிக் கடுவனொடு
பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇக்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் 4கவிழ்ந்துதன்
புன்றலைப் பாறுமயிர் திருத்தும்
5குன்றக நாடன் இரவி னானே

இஃது இரவுக்குறி சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

உரை
நன்னுதல் பசப்பினும் - நல்ல நெற்றி பசலை பாய்ந்து ஒளிமழுங்கு மாயினும்; பெருந்தோள் நெகிழினும் - பெரிய தோள்கள் மெலிந்து தொடியும் வளையும் கழன்று நீங்கு மாயினும் ஆகுக; கொன் முரண் இரும்புலி அருமுழைத் தாக்கி - அச்சம் தரும் முரண்மிக்க பெரிய புலியை அது சேர்ந்த அரிய முழைஞ்சினுள்ளே தாக்கிக் கொன்று; செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை - சிவந்த குருதிக்கறை படிந்த வெள்ளிய கொம்புகளையுடைய யானை; கல்மிசை அருவியில் கழூஉம் ஆங்கண் - மலைமே லிருந்து வீழும் அருவிநீரிற் கழுவிக் கொள்ளும் அவ்விடத்து வழியாக; வாரற்க தில்ல - வாரா தொழிதலை வேண்டுகிறேன்; தோழி - ; சாரல் முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சி - சாரலிடத்தே இளந்தளிர் களை யுண்டு வாழும் தன் பெரிய சுற்ற மாகிய குரங்குகள் அறிதற்கு அஞ்சி; கறிவளர் அடுக்கத்து - மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில்; செய்குறிக் கடுவனொடு களவிற் புணர்ந்த செம்முக மந்தி - தான் செய்த குறியிடத்தே கடுவ னொடு களவுநெறியில் கூடிய சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇ - பொன்போலும் பூங்கொத்துகளையுடைய வேங்கைமரத்தின் பூ நிறைந்த கிளைவழியே சென்று; குண்டுநீர் நெடுஞ்சுனைக் கவிழ்ந்து நோக்கி - ஆழ்ந்த நீரையுடைய நெடிய சுனை நீரின்கண் கவிழ்ந்து நோக்கி; புன்தலைப் பாறுமயிர் திருத்தும் - ஆண்டு நீழலில் தோன்றும் புல்லிய தலையில் சிதறிக் கிடக்கும் மயிரைத் திருத்திக்கொள்ளும்; குன்றக நாடன் - குன்றுகளை அகத்தேயுடைய நாடனாகிய தலை மகன்; இரவினான் - இரவின்கண்ணே எ-று.

யானை, கழூஉம், ஆங்கண், பசப்பினும், நெகிழினும், நாடன், இரவினான் வாரற்க தில்ல எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செய்குறிக் கடுவனொடு களவிற் புணர்ந்த செம்முக மந்தி, செலீஇக் கவிழ்ந்து நோக்கித் திருத்தும் என இயைக்க. மாவும் மாக்களும் கண்டு அஞ்சும் முரண் உடைமைபற்றிக் கொன்முரண் என்றார். கொன் - அச்சம், முரண் - ஈண்டு வலிமேற்று, யானையைப் பொருது கொல்வான் வந்த புலி என்றற்கு இரும்புலி என்றும், யானைக்குத் தோற்றோடி முழைஞ்சினுள்ளே புகுந்துகொண்டதாக, அதனை விடாது தொடர்ந்து சென்று அம்முழைஞ்சினுள்ளே நிறுத்தி யானை அதனைக் கொன்றமை தோன்ற அருமுழைத் தாக்கி என்றும் கூறினார். பிற விலங்குகள் எவையும் புகலாகாத அருமை யுடைமை பற்றி அருமுழை எனப்பட்டது. யானையின் கோடு இயல்பாகவே வெளிதாகலான் வெண்கோ டென்றல் வேண்டாவாயினும்; அதன்பாற் படிந்த குருதிக்கறை இனிது தோன்றினமைபற்றி வெண்கோ டென்று சிறப்பித்தா ரென அறிக. ‘தில்’, விழைவுப்பொருட்டு. இளந்தளிர்களை யுண்டு வாழ்வது பற்றிக் குரங்கினம் முறியார் பெருங்கிளை எனப்படுகிறது. ‘முறி’, இளந்தளிர், ஆர்தல்; உண்டல். மந்திக்கு ஏனைக் குரங்குகள் கிளை என்க. மந்தி - பெண்குரங்கு, கடுவன் - ஆண்குரங்கு. “குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி” என்றும், “குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்1” என்றும் தொல்காப்பியம் கூறுவது காண்க. மிளகுக் கொடியைக் குரங்கினம் உண்ணாமையின், களவுப்புணர்ச்சிக்குரிய இடம் கறிவளர் அடுக்கத்தில் கொள்ளப்பட்டது. செம்முக மந்தி செய்குறி என்றார். “களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்2” என்பதனால். மலைச்சரிவில் நின்ற வேங்கையின் கிளைகள் மேலேயுள்ள சுனைநீரில் அருகே தாழ்ந்து நின்றமையின் மந்தி பூஞ்சினை வழியாகச் சென்று சுனைநீரில் தன் நீழல் தோன்றக் கண்டமை பெற்றாம். குண்டுநீர் - ஆழ்ந்த நீர். வேங்கையின் கிளைமேல் இருந்துகொண்டு கீழேயுள்ள நீரை நோக்குதலின், கவிழ்ந்து நோக்கி எனல் வேண்டிற்று.

காதலின்ப வாழ்வில் தலைமகனைக் காணாவழிப் பசலை பாய்தலும், உடம்பு சுருங்குதலும் தலைவிபால் மெய்ப்பட்டுக் காண்போர் கருத்தில் ஆராய்ச்சி பிறப்பித்து அலர் விளைக்கு மென்று அஞ்சுதலின், நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் என்று தோழி கூறினாள். தோள் பெருத்தல் பெண்கட்குச் சிறப்பு. “கன்று முண்ணாது கலத்தினும் படாது, நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு, எனக்கு மாகாது என்னைக்கு முதவாது பசலை யுணீஇய வேண்டும் திதலை யல்குல்எம் மாமைக் கவினே3” என்பதனால் மகளிர் பசலைக்கு வருந்துவது காண்க. பசந்து ஒளி குன்றுதலின் நன்னுதல் என்று சிறப்பித்தாள். நெகிழ்தல் தோளிடைக் கிடக்கும் தொடி வளைகளின் செயலாதலின், நெகிழினும் என்றது இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்ற தாம். இரவு வரும் ஏதம் ஆய்ந்து கூறி விலக்கும் கருத்தின ளாதலின், யானை இரும்புலியைக் கொன்று கோட்டை அருவியிற் கழூஉம் செயலை எடுத்தோதி வாரற்கதில்ல என்றும், தலைமகளையும் இவ்விலக்கிற்குத் தன்னோடு உளப் படுத்தல் வேண்டித் தோழி என்றும் கூறினாள். பெருங்கிளை யென்புழிப் பெருமை பன்மை குறித்து நின்ற தாயினும், தான் கடுவனொடு பெறும் கூட்டத்தைத் தன் இனம் காண்டற்கு நாணும் நல்லொழுக்க முடைமை தோன்ற நிற்றலின், ஒழுக்கத் தால் உளதாகும் விழுப்பத்திற் றீராமை யுணர்க. மந்தி முகம் இயல்பாகவே சிவந்திருப்பினும் காமச்செவ்வி யெய்துமிடத்து அச்சிவப்பு மிக்கிருத்தல் தோன்றச் செம்முக மந்தி யெனச் சிறப்பித்தல் வேண்டிற்று. களவிற்புணர்ச்சியால் நாணு டைமை தோன்ற நிற்பதும் இதனால் பெறப்படும். களவின்கட் குறியிடம் சுட்டுதல் பெண்பால் மேலதாகலின், மந்தி செய்குறி யென்றும், ஆண்டுப் போதந்து கூடித் தலையளி செய்தல் கடுவனுக்குத் தலைமையாதலின் அது தோன்றக் கடுவனொடு என்றும், புணர்விடை யுளதாகும் சிதைவினைத் திருத்துதல் உயர்திணைக்கண் ஆண்மைக் குரித்தாதல் போல, அஃறிணை ஆணாகிய கடுவற்கும் அஃது உரியதாயினும், திருத்தும் செயற்கு வேண்டும் மனவுணர்வின்மையின் மந்தி தானே திருந்திக் கொள்வதாயிற்று என்பாள் பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇக் குண்டுநீர் நெடுஞ் சினைக் கவிழ்ந்து நோக்கித் தன் பாறுமயிர் திருத்தும் என்றாள். மலைச்சரிவில் நின்ற வேங்கையின் பூ நிறைந்த கிளை, மேலிடத்தே பாறைமருங்கு இருந்து நெடுஞ்சுனையிடத்து நீர் நிலையில் தாழ வளர்ந்திருந்தமையின் கடுவன் மந்தியை அக்கிளைமேற் கொண்டுசென்றமை தோன்றப் பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇ என்றாள். பொன்னிறப் பூக்களால் பொற்புற்றுத் தோன்றும் வேங்கையின் சினை, புதுமணத் தேறல் மாந்திப் பொலியும் குரங்குகட்கு இன்பம் செய்தது என்ற வாறுமாம். குண்டுநீர் நெடுஞ்சினை யென்றது, வேங்கையின் பூஞ்சினை சென்று நிற்றற்கும், கண்ணாடி போல் நீழல் தோன்றுதற்கும் வாய்ப்புடைமை தோன்ற. சினைமே லிருந்துகொண்டு கீழேயுள்ள நீரில் நோக்குதலின் கவிழ்ந்து நோக்கி என்றும், தலைமயிர் பாறி யிருந்தலை ஏனை முறியார் பெருங்கிளை கண்டு தூற்றா வண்ணம் மறைப்பது கருதி ஒட்பத்தை வியந்து புன்றலைப் பாறுமயிர் திருத்தும் என்றும் கூறினாள்.

தனக்குத் தீங்கு செய்யும் இயல்பிற்றாய இரும்புலியை அதன் முழைக்கண்ணே ஒடுங்கிக் கொன்றதனா லுண்டாகிய குருதிக்கறையை யானை கன்மிசை யருவியிற் கழுவிக் கொள்ளும் என்றதனால், நம் ஒழுக்கத்துக்குத் தீங்கு செய்யும் வகையில் அலர் கூறும் ஏதில் மகளிர் உறையும், இவ்வூரிடத்தே அலர் வாயடங்கி யொடுங்க எம்மை வரைந்து கொண்டு, அவரது அலரா லுண்டாகிய குற்றத்தைக் கடிமணத்தால் களைந்தருள்க எனத் தோழி கூறினாளாம். முறியார் பெருங் கிளை அறிதல் அஞ்சிக் களவிற் புணர்ந்த மந்தி நெடுஞ்சுனை நீரிற் கவிழ்ந்து நோக்கித் தன் பாறுமயிர் திருத்தும் என்றது, பிறர் அறிதல் அஞ்சி இரவுக்குறிக்கண் நின் கூட்டம் பெற்ற யாங்கள், இரவின்கண் நீ வரும் நெறியில் உளவாகும் ஏதத்தை எண்ணி, அதனால் உறும் வேறு பாட்டை மறைத்தொழுகு கின்றேம் எனத் தோழி கூறியவாறுமாம். இவ்வாற்றால் தலை மகன் தெருண்டு வரைவானாவது பயன்.

ஆலம்பேரி சாத்தனார்


ஆலம்பேரி என்பது ஆலம் பேரேரி என்பதன் சிதைவு; இது நெல்லை மாவட்டத்து ஊர்களுள் ஒன்று. பையன் ஆலம்பேரி என்னும் ஊர், இச்சாத்தனாருடைய ஆலம்பேரி யாகலாம் எனக் கருதப்படுகிறது ஆனால், அது பையன் ஆலம்பேரியான வரலாறு தெரிந்திலது. ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும், ஆர்வலநாட்டு ஆலம்பேரி சாத்தனார் எனவும் இவர் பெயர் ஏடுகளிற் காணப்படுகிறது. கல்வெட்டுக்களிற் காணப்படும் ஆர்வலக் கூற்றமே இவ்வாறு ஆர்வலநாடு எனவும்; ஆருலவிய நாடு எனவும் குறிக்கப்படுகிறதென்றற்கும் இடமுண்டு. பின்னத் தூர் நாராயணசாமி ஐயர், மதுரையைச் சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரி என்னும் ஊர் என்று குறிக்கின்றார். இச்சான்றோர், மதுரை மாவட்டத்தில் வாழைப் பழத்தால் புகழ்பெற்று விளங்கும் சிறுமலையை, “இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன் மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலை1” என்றும். தலை யாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் “கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன், ஆலங் கானத்து அமர் கடந்து உயர்த்த வேல்” என்றும் சிறப்பிக்கின்றார். கடலன் என்பானுக்கு உரிய விளங்கில் என்னுமூர் மேன்மையுற்று விளங்கியதும்; சேர நாட்டில் கோதை யென்னும் வேந்தனுக்குத் தானைத்தலைவனா யிருந்த பிட்டன் என்பவனை, “வசையில் வெம்போர் வானவன் ளமறவன், நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும், பொய்யா வாய்வாள் புனை கழன் பிட்டன்2” என்றும், அவனுடைய குதிரைமலையை, “மைதவழ் உயர்சிமைக் குதிரை3” என்றும் புகழ்ந்து பாடுகின்றார்.

இயற்கைப் புணர்ச்சியின் விளைவாகத் தலைமக்கள் இருவ ருடைய உள்ளங்களிலும் தோன்றிப் பிணித்து நிற்கும் காத லன்பைப் பேணி வளர்க்கும் பெருந்துறையை மேற்கொண்டு தோழியிற் கூட்டம் பெறத் தலைமகன் முயலுற்றான். இருவ ரிடையே தோன்றி நிற்கும் காதலுறவு தோழிக்குத் தெரியாமையால், எல்லா வகையிலும் புதியனாகிய தலைவனோடு உரையாடி உள்ளம் ஒன்றுவதும், தலைவிக்கு அவன்பால் கருத்து ஈடுபாடு தோன்றச் செய்வதும் முற்றிலும் பொருந்தாதன; தலைமகனைக் கண்டவுடனேதோழி அவற்கு இனியளாய் நடந்துகொள்ளக் கருதுவதும் அவளுடைய பெண்மைக்கும் தலைவியது சால்புக்கும் தகுதிக்கும் அறமாகாது. அதனால், அவளுடைய நட்பைப் பெற முயலும் தலைமகற்கு, அத் தோழியின் நட்பு மிகவும் அரிய தொன்று என்பது விளங்குமாறு அவள் ஒழுக லானாள். தலைமகள் உள்ளத்தில் தலைவன் மேல் காதலன்பு தோன்றி யுளதாயினும், பெருநாணும், பெருஞ்சால்பும், பெரு நிறையு முடைய ளாதலால், அதனைத் தன் உயிர்த்தோழி, சிறிதும் உணர்ந்துகொள்ள லாகாத வகையில் மறைத்தொழுகினாள். தலைமகன் ஆள்வினையே உயிராகவுடையனாதலால், ஒருகால், இருகால், என ஒழியாது பலகாலும் தோழிபாற் சென்று அவ ளுடைய நட்பைப் பெற முயன்றான். ‘முயன்றால் முடியாப் பொருளும் உண்டோ’ என்ற பழமொழி அவன்மாட்டுப் பொய்க்கும் அளவுக்கு நிலமை முற்றியது. ஒருநாள் தோழி யும் தலைவியும் நின்ற இடத்துக்கு அண்மையில், அவன்தான் சொல்வது அவர் செவிப்படுமளவில் நின்று, “இயற்கைவழிப் பெற்ற காதற்றொடர்பு, இனி மடலேறுவ தல்லது வேறு செய லில்லை என்று காட்டிவிட்டது; யான் இவ்விடத்து அடிக்கடி வருதலால், இவ்வூரவர் உரைத்த அலர், எனது இவ்வரவைக் கைவிட லாகாதவாறு பிணித்து மடலேறுவோர்க் குரிய எருக்கங் கண்ணியும் தாரும் சூடுமாறு செய்தொழிந்தது; முகிலிடை மறைப்புண்ட ஞாயிறு இத்தனிமையை எனக்கு இம்மா லைப்போதில் தந்தது; இவ்வாறு பலவும் பலவேறு வகையில் மடலேறுவதே எனக்குப் பொருளாவது என்பதை வற்புறுத்திப் பகற்போதைக் கழிக்க, பனையிற் கட்டிய குடம்பைக்கண் அன்றில் குரலெடுத் திசைக்கும் இரவுப்போது, யான் செயலற்று வருந்துமாறு வாராநின்றது; அளிக்கத்தக்க யான் என்னாகு வேனோ, அறியேன்” என்றான். அவனுடைய கூற்றுக்கள் பையச் சென்று தோழியின் செவியிலும், தலைவி மனத்திலும் புகுந்தன. தோழியின் மனம் அச்சத்தால் அலமரலுற்றது; தலைவியை நோக்கினாள். தலைவியின் உள்ளத்துடிப்பு, உடல் வியர்த்தும், உயிர்ப்பு மிகுந்தும் தோழி யறியப் புலனாயிற்று; அதனால், இருவர்க்கும் முன்பே உள்ளக்கலப்பு உண்டு என்று உணர்ந்து கொண்ட தோழி, தலைவியைத் தன் கண்களால் அன்பு மிக நோக்கினாள். இருவர் முகத்தும் முறுவல் இன்னகை முகிழ்த்தது.
இதனை மனக்கண்ணிற் கண்ட ஆலம்பேரி சாத்தனார் வேறு ஒப்பனையும் கற்பனையு மின்றி ஒள்ளிய சொற்களால் இப்பாட்டின்கட் பாடுகின்றார்.

மடலே காமம் தந்த தலரே
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே
இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படரப்
புலம்புதந் தன்றே புகன்றுசெய் மண்டிலம்
எல்லாம் தந்ததன் றலையும் பையென
வடந்தை துவலை தூவக் குடம்பைப்
பெடைபுணர் அன்றில்1 இரங்குகுரல் அளைஇக்
கங்குலும் 2கையற வந்தன்று
யாங்கா குவென்கொல் 3அளியென் யானே.

இது, மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்பச் சொல்லியது.

உரை
காமம் மடல் தந்தது - யான் கொண்ட காதல் மடல் ஏறுதலே பொருள் என்ற முடிபைத் தந்தொழிந்தது; அலர்-என்னோடு சார்த்தி இவ்வூரவர் எடுக்கும் அலரோ; மிடைபூ எருக்கின் அலர் தந்தன்று - நெருங்கிய இதழ்களையுடைய எருக்கின் பூவாலாகிய கண்ணியும் தாரும் தந்தது; இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படர - விளங்குகின்ற வெயில் நிலத்திடை மழுங்கப் பகலொளி விசும்பின்கண் பரவ; புகன்றுசெய் மண்டிலம் புலம்பு தந்தன்று - முகிற்கூட்டத்தினூடே திகழும் ஞாயிறு எனக்குத் தனிமையைத் தந்தது; எல்லாம் தந்ததன் தலையும் - இவ்வாறு எல்லாத் துன்பங்களையும் தந்ததோடு நில்லாது; வடந்தை துவலை பையெனத் தூவ - வாடைக் காற்று நுழைந்து நீர்த்திவலைகளைப் பையச் சொரிய; குடம்பை பெடைபுணர் அன்றில் - கூட்டின் கண் பெடை யொடு கூடி யுறையும் அன்றிற்புள் செய்யும்; இரங்குகுரல் அளைஇ - கேட்போர் உள்ளத்தில் அருள் உணர்ச்சி பிறப் பிக்கும் ஓசை கலந்து; கங்குலும் கையற வந்தன்று - இரவுப் போதும் யான் செயலற்று வருந்தும்படி வருவதாயிற்று; யாங்கு ஆகுவென்கொல் - என்னாகுவேனோ, அறியேன்; அளியென் யான் - அளிக்கத்தக்கவனாகிய யான் எ-று.

காமம் மடல் தந்தது; அலர் எருக்கின் அலர் தந்தது; மண்டிலம் புலம்பு தந்தன்று; எல்லாம் தந்ததன் றலையும் வடந்தை பையெனத்துவலை தூவ, குரல் அளைஇக் கங்குல் கையற வந்தன்று; யான் அளியென், யாங்காகுவென்கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. காதல் காரணமாக மேற்கொள்ளத் துணிந்த மடலை, காமம் தந்தது என்றது உபசாரம். மடல் - பனைமடலாற் செய்யப்பட்ட குதிரையைக் குறித்தலின் ஆகுபெயர். அலர் - முன்னது ஊரவர் எடுக்கும் அலருரை; மேலும் - பின்னது மலர்ந்த பூவின்மேலும் நின்றன. மிடைதல், நெருங்குதல். தந்தன்று, முற்றுவினைத் திரிசொல். ஞாயிற்றின் வெங்கதிர் முகிற் கூட்டத்தால் மறைப்புண்டவழி மழுங்கி, அப்படலத்துக்கு மேலிடமாகிய விசும்பின்கட் பரந்து விளங்குதலின் இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படா என்றார். முகில் மறைத்தவழி ஞாயிற்றுமண்டிலம் அப்படலத் தினூடே கதிர்களை பரப்புவதுபற்றிப் புகன்றுசெய் மண்டிலம் எனப்பட்டது. வாடை - வடந்தை யென வந்தது. வடந்தை வீசும் அற்சிரக்காலத்துப் பகற்போது பனிமுகில் மறைத்தலால் ஒளி மழுங்கியிருக்கும் என்க; “வடந்தை தூக்கும் வருபனி யற்சிரச் சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு, குடகடல் சேரும் படர்கூர் மாலை1” என்று சான்றோர் கூறுவது காண்க. குடம்பை - கூடு; அன்றிலின் குரல் கேட் போர் உள்ளத்தில் அருள் விளைவிக்கும். அமைதி சான்றமை யின் அன்றில் இரங்குகுரல் என்றார்.

மிக்க காமத்து மிடலுற்றோர் ஏறுவதாகக் கூறும் மடலின் இயல்பை முன்னர்க் கூறினாம். தன் குறையைத் தோழி மறுத்த மைக்கு ஆற்றானாகிய தலைவன், தான் மடலேறக் கருதியதனை அவட்கு உணர்த்துகின்றா னாதலால் மடலே காமம் தந்தது அலரே மிடைபூ எருக்கின் அலர் தந்தன்று என்றும், மடலேறுதற் குரிய பொழுதும் இனிது வாய்த்தது என்றற்கு, இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படரப் புலம்பு தந்தன்றே புகன்றுசெய் மண்டிலம் என்றும், இவ்வாறு துணிவுற்ற நெஞ்சினைச் சிறிதும் தாழாது செயற்படுத்தற்குத் தூண்டும் காதல்நோய் முறுகிக் காழ்கொள்ளற்கு ஏற்ற காலமும் எய்திற்று என்பான், பையென வடந்தை துவலை தூவ என்றும், கங்குலும் கையற வந்தன்று என்றும், அதனால் தான் எய்திய கையறவு புலப்பட அளியன்யானே என்றும், இவற்றாலும் தன் குறை மறுக்கப்படின் வரைபாய்ந்து உயிர்விடுதல் ஒருதலை என்பான் யாங்காகுவென்கொல் என்றும் கூறினான். காமம் காழ்கொண்டவிடத்து மடலூர் தலும், எருக்கம்பூச் சூடுதலுமே யன்றி, “மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப1” என்று பிறரும் கூறுதல் காண்க. பனிமுகிற் படலத்தால் தன் இலங்குகதிர் மழுங்கி விசும் பிடத்தே படரினும், ஞாயிற்றுமண்டிலம் பகலொளியை விரும்பிச் செய்யும் என்றது, நெஞ்சத்து நல்லருள் பெண்மை யால் மழுங்கி ஆயவெள்ளத்திடையே படரினும், பிறர் குறையை நயந்து நோக்கியருளலையே வேண்டும் என்ற கருத்தை உட்கொண்டிருத்தல் அறிக. முன்னின்ற தோழிக்கு உரைப்பான் புக்க தலைவன் புறத்தே பிறர்க்குக் கூறுவான் போல மொழிதலின் இது முன்னிலைப் புறமொழியாயிற்று. “முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்2” என ஆசிரியர் கூறுவது காண்க.

தனிமகனார்


இப்பாட்டைப் பாடிய சான்றோர் பெயர் இந்நற்றிணை தொகுக்கப்பட்ட காலத்தையே இறந்துவிட்டது; இதனைத் தொகுத்த பன்னாடு தந்த பாண்டியனான பெருவழுதி, இதன்கண் அழகுற அமைந்துள்ள தொடரையே தேர்ந்து ஆசிரியர்க்குப் பெயராகக் குறித்துள்ளான் போலும். வெஞ்சின வேந்தன் பகைமைக் கொடுஞ்செயலால் அலைப்புண்டு கலங்கிய மக்கள், ஊரைவிட்டு ஓடிப் போயினராக, பாழ்பட்ட ஊரை நாடு நற்காவல்பெறுமிடத்து அவர்கள் மீள்வர் என்று கருதிக் காத் திருந்து ஓம்பும் தனிமகன் ஒருவன் செயலை எடுத்தோதிய சிறப்பை வியந்து பாடியது குறித்து, இப்பாட்டைப் பாடிய சான்றோரைத் தனிமகனார் என்றே பெயர் குறித்தார்கள் என்று கொள்ளலாம். தன் பாட்டைப் படிக்கும் தமிழ் வேந்தர் அரசியல் தலைவர் முதலாயினோர் உள்ளம், நன்னெறி படரும் கருத்தை நயமாக உரைத்த இந்த நல்லிசைச் சான்றோர் போலும் பலரை, அவருடைய பெயரைத் தானும் அறிந்து கொள்ளக் கூடாத வகையில் இடைக்காலத் தமிழகம் மறந்து, அறியாமை யிருளில் அழுந்தியதை நினைக்கும் போது அறிவுடையோர் நெஞ்சம் வருந்தாதொழியாது.

கடிமணம் புணர்ந்து கற்புநெறிக்கண் நின்று மனையறம் புரிந்து வரும் தலைமக்களில், தலைமகன் தலைமகறிற் பிரிந்து சென்று ஆற்றற்குரிய பெரியதோர் ஆற்றாமை பயந்தது, அல்லும் பகலும் காதலன் நினைவே அவட்கு மிகுந்தமையின் ஊணு முறக்கமு மின்றி, உடம்பு சுருங்கி, மேனி வேறுபட்டு வருந்து வாளாயினள். ஆற்றத் தருவனவற்றை அவட்கு உரைத்து வற் புறுத்தும் தோழி, அவன் குறித்த பருவத்தைச் சொல்லியும், ஆடவர்க் கியல்பாகிய வினையாண்மையின் வீறுபாட்டை விளக்கியும், அவட்கு உண்டான வருத்தம் தணியவில்லை. முடிவில் அவளைத் தோழி வன்சொல்லால் ஆற்றுவிக்க முற் பட்டு. “தோழி, நீ இவ்வாறு மெலிவது, நின் காதலர் மேற் கொண்ட வினைக்கு ஊறு செய்வதாய் முடியும்; அவர்க்கு நீ உயிர்போற் சிறந்து உறைதலால் அவர்பொருட்டேனும் உயிர் தாங்கி நிற்பது நினக்கு அறமாகும்” என்றாள். “தோழி, கார் காலத்தில் கீழ்கடலில் நீர் முகந்து மேற்றிசைச் செல்லுமாற்றால் நாடுமுழுதும் நன்மழை பொழியும் முகில் தென் புலம் சென்று நீரற்றுத் தேய்ந்து மாய்வது போல, காதலர் உறையும் போதெல்லாம் என்னோடே யிருந்து இன்புறுத்திய என் நெஞ்சம், இப்போது அவர்பாலே சென்று சேர்ந்து நின்றற்றது; ஈண்டு என்னின் நீங்காது நிற்பதால், என் உயிர், வெஞ்சின வேந்தன் அலைத்தற்கு அஞ்சி ஆற்றாது பேரூர் மக்கள் அதனினின்று நீங்கினாராக, பாழ்பட்ட அவ்வூரிடத்தே யிருந்து அவர்கள் மீளவும் வந்து சேர்வர் என நினைந்து காவல் புரிந்தொழுகும் தனிமகன் ஒருவன் போல, நீங்கிய நெஞ்சம் மீளப் போதரும் என என் உடம்பைக் காத்திருத்தலால் உயிர் மிகவும் அளிக்கத்தக்கது, காண்” எனத் தலைவி கூறினாள்.

காதலன் பிரிவால் உளதாய வருத்தத்தால் ஆற்றாளாகிய காதலி, ஒப்பனையும், பொலிவுமின்றி மெலிந்த தன் உடம்பில் நின்ற உயிரைப் பாழூர் காத்திருந்த தனிமகன் ஒருவனுக்கு ஒப்பாக உரைத்த அருமை கண்ட இச் சான்றோர் அவள் கூற்றினை இப்பாட்டிடை அமைத்துப் பாடுகின்றார்.

குணகடல் முகந்து குடக்கேர் பிருளி
மண்டிணி ஞாலம் விளங்கக்1 கம்மியர்
2செம்புசொரி பானையின் மின்னி எவ்வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கிற் சென்ற்ற றாங்கு
நெஞ்சம் அவர்வயிற் சென்றென3 விண்டொழியா
4எஞ்சல் அளித்தென5 உயிரே 6விறற்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் 7கலங்கி
வாழ்வோர் 8போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.

இது, பிரிவிடை மலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

உரை
குணகடல் முகந்து - கீழ்க்கடலிற் படிந்து அதன் நீரை யுண்டு; குடக்கு ஏர்பு இருளி-மேற்றிசை நோக்கி யெழுந்து இருள் நிறம் கொண்டு: மண்திணி ஞாலம் விளங்க - மண்
ணணுச் செறிந்த நிலவுலகு வளத்தால் விளக்கம் பெறுமாறு; கம்மியர் செம்புசொரி பானையின் மின்னி - கம்மாளர் செம்பை உருக்கிச் செய்யும் பானை போல மின்னி; எவ்
வாயும்-எவ்விடத்தும்; தன்தொழில் வாய்த்த இன் குரல் எழிலி-மழை பெய்தலாகிய தன் தொழிலை நன்கு செய்த இனிய முழக்கத்தையுடைய மேகம்; தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு-தென்றிசைக்கட் சென்று தேய்ந்து அற்று ஒழிந்தாற் போல; நெஞ்சம் அவர் வயின் சென்றென - காதலர் இவண் நம்மோடு உறைந்தபோது உடனிருந்து இன்புறுத்திய நேஞ்சம் அவர் சென்று உறையும் இடத்கிற்குச் சென்று அவர்பாலே ஒன்றி ஒடுங்கி ஒழிந்தமையின்; விண்டு ஒழியாது - தானும் உடன் நீங்காமல்; எஞ்சல் அளித்து என் உயிர்- என்னோடே இருத்தலால் அளிக்கத்தக்கதாகும் எனது உயிர்; விறல் போர் வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி - வெற்றிதரும் போரைச் செய்யும் வெவ்விய சினத்தையுடைய வேந்தன் பகைமையால் அலைத்து வருத்தப்பட்டதனால்; வாழ்வோர் போகிய பேரூர் - தன் கண் வாழ்ந்த குடிகள் நீங்கி ஓடிப் போயின பேரூரிடத்து; பாழ் காத்து இருந்ததனிமகன் போன்று - பாழ்பட்ட மனைகளைக் காவல் புரிந்து ஒழுகிய தனிமகனைப்போன்று எ-று.

முகந்து ஏர்பு இருளி மின்னி வாய்த்த எழிலி சென்றற் றாங்கு, நெஞ்சம் சென்று அற்றென, தனிமகன் போன்று எஞ்சலின், உயிர் அளித்து எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கார்காலத்தே மழைமுகில் வடகிழக்கினின்று தென்மேற்காகச் செல்லுதல் இயல்பாதலின் குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி என்றார். மழைமுகில் விசும்பின்கண் மேலே செல்லச் செல்லக் குளிர்ந்து நிறம் கருகுமாதலால் குடக்கு நோக்கி ஏர்பு இருளி எனல் வேண்டிற்று. ஏர்தல் - எழுதல், மண் - மண்ணணு; மண்டிணிந்த நிலனும்1 என்பதன் உரை காண்க. கம்மியரைக் கண்ணகர் என்றலும் வழக்கு; இக்காலத்தே இச்சொல் கன்னார் என மருவி வழங்குகிறது. செம்புசொரி பானை, செம்பை உருக்கும் பானை, தொழில், மழைபெய்தல், உழவுத்தொழில் நடைபெறுவித்தலுமாம். இன்குரல் எழிலி என்றது, மழை யுதவும் பெருநலம் குறித்து. மழை பெய்து நீர் வறிதாகிய மேகம் வெண்மையான பஞ்சுபோல் விண்ணிடைப் பரந்து தென்றிசைக்கட் சென்று மறையும் என அறிக. “பெய்து புறந்தந்த பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றறா லியரோ பெரும”2 எனப் பிறரும் கூறுதல் காண்க. விள்ளல் - நீங்குதல். பகைவேந்தர் அலைத்தலால் ஊர்கள் பாழாவது இயல்பு. “முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீரெழுந்து மனைபாழ் பட்ட”1 எனவும், “தேர் பரந்த புலம் ஏர் பரவா, களிறாடிய புலம் நாஞ்சி லாடா, மத்து உரறிய மனை இன்னியம் இமிழா, ஆங்குப் பண்டு நற்கறியுநர் செழு வளம் நினைப்பின், நோநோ யானே நோதக வருமே”2 எனவும், பகையலைக் கலங்கிப் பாழ்பட்ட ஊரது நிலைமையைச் சான்றோர் பாடுதல் காண்க. போர்க் காலத்து நிகழ்ச்சிகளால் பாழ்பட்ட ஊர்களை வென்ற வேந்தர் போர் முடிவில் நீங்கிய மக்களைக் கொணர்ந்து குடியேற்றி விளக்க முறுவித்தல் பண்டையோர் அரசுமுறை, “துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றி3” எனச் சான்றோர் குறிப்பர். பாழ்பட்ட ஊர்க்குள் புகுந்து பொருட்சூறை யாடும் கள்வரும் உண்டாதலால் அவரின் நீக்கி நற்காவல் புரியும் பெருமகன் ஒருவனை ஈண்டுத் தனிமகன் என்றார்; “புலவுவில் லுழவின் புல்லாள் வழங்கும், புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பு4” என்பதனால் இவ்வுண்மை துணியப்படும்.

தலைமகனோடு கூடி மனையறம் புரிந்தொழுகும் மாண் புடைய தலைமகள், ஆள்வினையுடைமை ஆடவர்க்கு உயிரற மாதலும், அது குறித்து அவர் பிரிதலும், பொருள் அறங் களைச் செய்தலும், நன்கு உணர்ந்தவ ளாயினும், தலைவன் பிரிந்தவிடத்து அவ்வுணர்வை இழந்து அவன் வற்புறுத் துரைத்த அன்புடை நன்மொழிகளை நினைத்து, தனிமை ஆற்றாமையால் நெஞ்சம் தன்பால் இல்லையென்பாளா யினாள்; இருக்குமாயின் ஆற்றாமையால் மேனி மெலிதற்கு இடம் ஏற்பட்டிராது என்றும், நெஞ்சம் தலைமகன்பால் சென்று அவனிடத்தே ஒடுங்கிவிட்டது என்றும் கூறுவாளாய் எழிலி தென்புல மருங்கில் சென்றற்றாங்கு என் நெஞ்ச மும் அவர் வயின் சென்றென என்றும், நெஞ்சின்வழி நிற்பதாகிய உடம்பு மெலிதற்கு ஏது, அது சென்று மீளா மையே என்றும், அதனால் அது வாழ்வோர் போகிய பேரூர் போன்றது என்றும், உடம்பிடை நின்ற உயிரோ எனின், நெஞ்சு நீங்கினமையால், பாழ்பட்ட ஊரைக் காக்கும் தனிமகன் போன்று உளதேயன்றித் துளங்குகுடி திருத்தும் வளமுடைய அரசுபோல் நலழ் செய்வதன்று என்பாள். பாழ்காத் திருந்த தனிமகன் போன்று என்றும், அத் தனிமகன் காண்போர் இரங்கத் தக்க காட்சியும், கெடுகுடி பயிற்றும் அளியும் உடையனாதல் போல, உடம்பிடை நின்ற உயிர், அதன் மெலிவு காக்கும் வகையில் நீங்காது உறைதலின், விண்டொழியாது எஞ்சல் அளித்து என் உயிர் என்றும் கூறினாள். இதனால், தனது ஆற்றாமை கூறித் தலைவி அயாவுயிர்ப்பது பயன்.

நல்லாவூர் கிழார்


நல்லாவூர் என்ற பெயருடைய ஊர்கள், தென்னார்க்காடு செங்கற்பட்டு தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காணப் படுகின்றன. அதனால், இச்சான்றோரை இன்ன நாட்டவர் என வரைந்து காண்பது இயலாதாகின்றது. நல்லாவூர்க்கண் இருந்து வேந்து பாராட்டும் வகையில் விளங்கினமையின், கிழார் என்ற இச்சிறப்பினைப் பெற்றாராதல் வேண்டும். நாட்டுமக்களிடையே நற்பணி செய்து மேம்படுபவர்க்குக் கிழார் என்ற சிறப்புப்பெயர் நல்கும் வழக்காறு இடைக்காலச் சோழபாண்டியர் காலத்தும் இருந்து வந்தமை முன்பே கூறப்பட்டது. இதனைக் கல்வெட்டுக்களால்1 அறிகின்றோம். தமது காலத்து நிலவிய திருமணச் சடங்குகளை அகப்பாட் டொன்றில் இவர் பாடியுள்ளார்.

இரவுக் குறிக்கண் தலைமகளைக் கண்டு உரிய முறையில் காதலை வளர்த்தொழுகும் தலைமகன், ஒருநாள் இரவு அவளு டைய பெருமனையின் புறத்தே ஒருசிறை வந்து நின்றான். அவன் வரவைத் தோழி உணர்ந்து அவன் காண முடியாத தோர் இடத்தில் நின்று தலைமகளை எழுப்புவாள் போன்று, தலைவன் செவிப்படுமாறு சொல்லாட லுற்றாள். தலைவி யிருந்த ஊர் குறிஞ்சிநிலத்துக் காடு ஒன்றின் இடையில் இருப்பது. தலைவியைக் காணும் வேட்கை மீதூர்ந்து வரும் தலைமகன் அவ்வூரைச் சூழவுள்ள மலைத் தொடரை யும், காட்டையும் கடந்தே வருதல் வேண்டும். கார்ப்பருவ மாதலால் வானத்தே கருமுகிற் கூட்டம் செறியப் பரவி யிருந்தமையின், எங்கும் காரிருள் மண்டிக் கிடந்தது. மாவும் புள்ளும் தத்தம் இருக்கையில் ஒடுங்கினமையின் கானமும் கம்மென அமைதிகொண்டு விளங்கிற்று. இடையிடையே முகிற்கூட்டத்தின் இடிமுழக்கும் மின்னலும் விழித்திருப் போர்க்கு அவ்விரவுப் போது அச்சத்தை விளைவித்தன. இந்நிலையில் கானத்தின் ஒருபால் உழுவைகொன்று பெரிய களிற்றோடு பொருது அதனைத் தன் வலத்தே விழக் கொன்று ஏனை மாவும் மாக்களும் கேட்டு உளம் துளங்குமாறு உரறிக் கொண்டு இருந்தது. இவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தலைவன் வந்தமை தோழியின் உள்ளத்தில் வியப்பையும் மிக்க அச்சத்தையும் உண்டுபண்ணிற்று. உறங்கும் தலைவியை எழுப்பி, “தோழி, இன்னும் உறங்குகின்றாய் போலும்; நீ மனவலி யில்லாதவள்” என்று சொல்லி இரவுப் போதின் இருள்மிகுதியும் பிறவும் எடுத்தோதி, முடிவாக, “நம் காதலர் இன்று இவ்விரவில் வாராராயின் நன்று, காண்; மலைகளைக் கடந்து போதரும் அரிய வழிகளை நினைக்குந்தோறும், என் நெஞ்சம் நிறைஅழிந்து நலம் இழந்து கெடுகிறது” என்று சொன்னாள். அது கேட்ட தலைமகன் தோழியின் அச்சமும் நெறியின் ஏதமும் எண்ணி, இனித் தலைவியை வரைந்து கொள்வதே செயற்பாலது" எனத் துணிந்தான்.

இக்கூற்றின்கண், உண்மைநிலையை எடுத்துரைக்கு மாற் றால் தலை மகனது காதல்மாண்பைக் காட்டி, அஃது உயிர்க்கு விளையும் ஏதத்தையும் எண்ணாதவாறு இயக்கும் குறிப்பை உணர்த்தி, வரைவு கடாவும் நுட்பம் விளங்குதல் கண்ட நல்லாவூர் கிழார் அதனை இப்பாட்டிடை அமைத்துப்பாடு கின்றார்.

கானமும் கம்மென் றன்றே வானமும்
வரைகிழிப் பன்ன மையிருள் பரப்பிப்
பல்குரல் எழிலி பாடோ வாதே
மஞ்சுதவழ் இறும்பிற் களிறுவலம் படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும் ஓசை கேளாத்1
துஞ்சுதியோ இல தூவி லாட்டி
போஞர் 2பொருத புகர்படு காமம்
3நீர்பெய் நெருப்பின் தணிய இன்றவர்
வாரா ராயின்4 நன்றுமன் சாரல்
விலங்குமலை ஆரா றுள்ளுதொறும்
5நலம்பறைந் தொழியும்என் நிறையில் நெஞ்சே

இஃது இரவுக்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாகத் தோழி வரைவுகடாயது.

உரை
கானமும் கம்மென்றன்று - காடும் கம்மென ஒலியவிந் தொழிந்தது; வானம் வரைகிழிப்பன்ன மையிருள் பரப்பி - வானமெங்கும் மலையைக் கிழித்தாற்போல அமைந்த பெருங்குகையிடத்துப் பொருந்திய இருட்பிழம்பு போலக் காரிருளைப் பரப்பி; பல்குரல் எழிலியும் பாடு ஓவாது - பலவாய் முழக்கத்தைச் செய்யும் மழைமுகிலும் முழக்கு அறாதாயிற்று; மஞ்சுதவழ் இறும்பில் - முகில் படியும் பெரிய காட்டின்கண்; களிறு வலம்படுத்த வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை - களிற்றியானையைத் தாக்கித் தனக்கு வலமாக வீழக்கொன்ற வெவ்விய சினத்தையுடைய புலியினது அகன்ற வாயையுடைய ஏறு; அஞ்சுதக உரறும் ஓசை கேளா - கேட்ட உயிரினங்கள் அஞ்சி நடுங்குமாறு முழங்கும் ஓசை யினைக் கேளாமல்; துஞ்சுதியோ - உறங்குகின்றாய் போலும்; இல - தோழி; தூவிலாட்டி - மனவலி இல்லாதவளே; பேரஞர் பொருத புகர்படு காமம் - பெரிய துன்பத்தைத் தந்து வருத்து தலால் குற்றமுடைத்தாகிய காதல்வேட்கை; நீர்பெய் நெருப்பின் தணிய - நீர்பெய்ய அவிந்து தணியும் நெருப்புப் போல் தணியுமாறு; இன்று அவர் வாராராயின் நன்றுமன் - இப்பொழுது அவர் இவண் வாரா தொழிகுவராயின் பெரிதும் நன்று; சாரல் விலங்குமலை ஆர்ஆறு உள்ளு தொறும் - மலைச்சாரல்கட்கு இடையே குறுக்கிட்டு நிற்கும் குன்றுகளைக் கடக்கும் அருமைப்பாட்டையுடைய வழியை நினைக்குந்தோறும்; என் நிறையில் நெஞ்சம் நலம் பறைந்து ஒழியும் - நிறையிழந்து அலையும் என் நெஞ்சம் தனது திண்மையாகிய வலி கெட்டு ஒழிந்தது ஆகலான் எ-று.

இல, தூவிலாட்டி, கானம் கம்மென்றன்று; எழிலி பாடோவாது; களிறு வலம்படுத்த உழுவையேற்றை உரறும் ஓசை கேளா, துஞ்சிதியோ; காமம் தணிய அவர் இன்று வாராராயின் நன்றுமன்; ஆர்ஆறு உள்ளுதொறும் என் நிறையில் நெஞ்சு நலம் பறைந்து ஒழியு மாக லான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வானமும் என்ற உம்மையைப் பிரித்து எழிலியும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. அகன்ற வாயை யுடைத்தாய் இருள் மண்டித் தோன்றும் நெடிய மலைக் குகை அம்மலையைக் கிழித்தாற் போலத் தோன்றுதலின், வரைகிழிப்பன்ன என்றார். கொள்ளிக்கும் விள்ளாத கூரிருள் மையிருள் எனப்பட்டது. ஞாயிறு மறைந்தவழிப் படரும் இருள், விண்மீன்களின் ஒளியால் செறிவிழந்து மெலிந்து தோன்றுதலின், கார்காலத்துப் படரும் முகிற்கூட்டம் செறிந்து வானமுற்றும் பரந்து நிற்ப நிலவும் இருள், கண்ணுக்குத் தீட்டும் கண் மையினும் கரிதாய்த் தோன்று தலின், மையிருள் என்றல் வழக்காயிற்று. ஒருபால் குமுற லும், ஒருபால் உருட்டலும், ஒருபால் வெடித்தலும் எனப் பலவேறு வகையில் முழங்குவதுபற்றிப் பல்குரல் எழிலி என்றார். பாடு, முழக்கம், மஞ்சு, பனிநீரை யுடைய முகிற் படலம். இறும்பு - காடு, வலம்படுத்தல் - வலமாக வீழுமாறு படுத்தல்; படுத்தல் - கொல்லுதல், “இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி” என்றாற் போல, “கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென, அன்றவண் உண்ணா தாகி வழிநாள், பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து, இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி1” என்று சான்றோர் கூறுவது காண்க. பேழ்வாய் - பெரியவாய்; உரறுதல் - முழங்குதல், கேளாது என்பது ஈறு கெட்டது. ‘இல’, இளம் பெண்களை அழைக்கும் சொல், தூ, வலிமை, தூவிலாட்டி - வலியின்மையை ஆள்பவள், புகர் - குற்றம், மன் - ஆக்கம் குறித்து நின்றது. பறைதல், தேய்ந்து -கெடல்2“.

தலைமகன் சிறைப்புறத்தே வந்து நிற்கின்றமை உணர்ந்து குறிப்பாக வரைவுகடாவும் கருத்தினளாய், நண்பகற் போதி லும் இருள்மண்டிக் கிடக்கும் கானம் இரவுப்போதில் ஒரு சிறிதும் நெறியறியா வண்ணம் இருள் செறிந்து, காண்பவர் உள்ளம் அஞ்சுமாறு கம்மென்ற ஓசையுடன் காட்சி வழங்குவ தால், கானமும் கம்மென்றன்று என்றாள். இது நெறியினது அருமை குறித்தது. கார்ப்பருவமாகலான், மழைமுகில் பரந்து எங்கும் காரிருளைப் பரப்பின்மை ஒரு புறம் அச்சுறுத்த, முகிலினம் செய்யும் முழக்கம் ஒருபால் கலக்கத்தை விளைத் தலின், பல்குரல் எழிலி பாடு ஓவாது என்றும், முகிலிடைத் தோன்றும் மின்னொளியால் ஒருவாறு நெறி பற்றி வரலாம் எனினும், புலி முதலிய கொடுவிலங்குகளின் தீமையை நினைந்து மொழிகின்றமையின், பெருங்களிற்றைக் கொன்ற புலியின் முழக்கத்தை விதந்து, களிறு வலம்படுத்த வெஞ்சிறை உழுவைப் பேழ்வா யேற்றை அஞ்சு தக உரறும் ஓசை என்றும் கூறினாள். இறும்பிடை முழங்கும் புலியினது முழக்கம், இப்பெருமனைக்கட் கிடந்து உறங்கும் தன்னை விழிக்கச் செய்தது போலத் தன்னோடு உடனுறங்கும் தலைமகளை எழுப்பா தொழிந்தமைக்கு வியப்பாள்போல, ஓசை கேளாத் துஞ்சுதியோ எனவும், அசைத்து எழுப்ப வேண்டியதற்கு வருந்துவாள் போல ‘இல’ என்றும், மனச் சோர்வுடைமை சுட்டித் தூவிலாட்டி என்றும், தலைமகனது வரவை உணர்த்தும் குறிப்பால் இன்று அவர் வாரா ராயின் நன்றுமன் என்றும் கூறினாள். வரவு நோக்கியிருக்கும் தலை மகட்கு அது வருத்தமும் அச்சமும் பயக்க இத்துணை இடை யூறுகளையும் நினையாது தலைமகன் இரவில் வருதற்குக் காரணம், பேரஞர் பொருத புகர்படு காமம் எனவும், அது தீயினும் பெரிதாய் வெதுப்புதலால் தலைமகன் வருவானாயின னாகலின், அக்காமம் தணிதல் வேண்டும் என விழையுமாறு தோன்றக் காமம் நீர்பெய் நெருப்பின் தணிய எனவும் கூறினாள். வாராதொழியாது வந்தமை பற்றி, நன்றுமன் என்றாள் என அறிக. இரவு வருவானுக்கு மலைச்சாரல் வழி ஓரளவு கட்புலப்படினும் குறுக்கே நிற்கும் குன்றும் காடும் வழியின் அருமையை மிகுதிப்படுத்தலின் சாரல் விலங்கு மலை ஆராறு என்றும், அதனை நினைக்கும் போது எத் துணைத் திண்ணிதாய நெஞ்சமும், அச்சத்தால் திண்மை கரைந்து நிறையழிந்து கெடுவது இயல்பு என்றற்கு நிறையில் நெஞ்சு என்றும், அதனால் அறிவின்கட் சோர்வும் உடலில் மெலிவும் உறக்கமின்மையும் பிறவும் தோன்றி நலம்கெடச் செய்தலின், நலம் பறைந்தொழியும் என்றும் கூறினாள். “பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின், வழுவினாகிய குற்றம் காட்டலும், தன்னையழிதலும் அவன்ஊறு அஞ்சலும், இரவினும் பகலினும் அவன்வர வென்றலும், கிழவோன் தன்னை வாரல் என்றலும், நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும், புரைபட வந்த அன்ன பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப1” என ஆசிரியர் அறிவுறுப்பது காண்க. தலைமகன் வரவு கண்டும் தோழி வாரற்க என மறுத்தல் அழிவில் கூட்டம் வேண்டி அவன் புணர்வு மறுத்தல் என்பது. இதனைக் கேட்கும் தலைவன் தெருண்டு வரை வானாவது பயன்.

பாரதாயனார்


கிடைத்த ஏடுகள் எல்லாவற்றினும் இவர் பெயர் பாரதாய னார் என்றே காணப்படுகின்றது. அச்சுப்பிரதி பராயனார் என்று குறிக்கின்றது. அதனைப் பதிப்பித்த ஐயரவர்களும் அதன் பொருள் விளங்க வில்லை என்று உரைக்கின்றார். பாரதாயன் என்ற பெயர் இடைக் காலக் கல்வெட்டுக்களில் பயில வழங்கு கிறது. பண்டைத் தமிழகத்தில் ஒரு குடியில் முதற்கண் பிறந்த ஆண்மகற்குப் பின்தோன்றும் மக்கள் அனைவரையும் பேணிப் புறந்தரல் வேண்டும் என்பது கடனாக இருந்தது. முதுமை மிக்குத் தம்மைத் தாமே பேணிக் கொள்ளும் வன்மை இழந்தோரைப் பேணுவதும் அவற்குக் கடன். இவ்வகையில் குடியிலுள்ள முதியரும் இளையரு மாகிய அனைவரும் அக்குடியிற் பிறந்த முன்னோனுக்குப் பாரம் எனப்படுவர். “குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி”, என்றும், “பசித்தும் வாரோம் பாரமும் இலமே” என்றும் சான்றோர் குறிப்பதும் இக்கருத்துப் பற்றியேயாம். பாரத்தைப் புறந்தருதற்கெனக் குடிப்பிறந்தார்க்கு அமைந்த உரிமை பார தாயம் என வழங்கிற்று. அதனால் பாரதாயம் பெற்ற குடி முதல்வன் பாரதாயன் எனவும், பாரதாயமாகப் பெற்ற ஊர் பாரதாயக்குடி எனவும் வழங்கினமை அறிகின்றோம்.

பாரதாயன் செல்வன் அரங்கன்1 எனவும், பாரதாயன் திருச்சிற்றம்பலமுடையான் நாராயணன், பாரதாயன் நாராயணன் பற்பநாபன்2 எனவும், பாரதாயன் சிங்கன் தேவன் எனவும், திருநறையூர் நாட்டுப் பிரமதேயமான பாரதாயக்குடி3 என்றும் கல்வெட்டுக்கள் குறிப்பது காண்க. பிற்காலத்தே, இப்பாரதாயம் சேஷ்டபாகம் என வழங்குவதாயிற்று. ஒரு குடும்பத்தில் தந்தை இறந்துபட மூத்தமகன் அக்குடும்பபாரத்தைச் சிறப்புற உய்த்து இளையோர் பலரும் தனித்து வாழும் தகுதி பெறுவித் தமைக்கு அவ்விளையோரால் விரும்பி நல்கப்படும் பாகமாக இருந்தமையின், இப்பாரதாயம் நாளடைவில் மறைந் தொழிந் தது; அதனால் பாரதாயன் என்ற சிறப்புப் பெற்றோரும் மறைந்து போயினர். இப்பாரதாயனாரது இயற்பெயர் மறைந்தமையின் இந்நூலைத் தொகுத்தோர் பாரதாயனார் என்றே குறித்தொழிந் தனர். இதனைப் பாரத்தாயனார் என்று கொண்டு பாரம் என்னும் ஊரவரான தாயனார் என்று கொள்வோரும் உண்டு. “பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரம் எனவும்,”பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" எனவும் வருதலால் பாரம் என்னும் பெரிய தோர் ஊர் இருந்தமை உணரப்படும்.

தலைமகளைக் கடற்கானற் சோலை ஒன்றில் தனியே கண்டு அவள்பால் தன் கருத்தைச் செலுத்திக்காதலுற்றான் தலைவன்; அவ்வண்ணமே அவளும் அவன்பால் தன் கருத்தை ஒன்று வித்தாள். இருவர் உள்ளமும் காதலுணர்வால் ஒன்றுபட்டன வாயினும், அக்காதல் நன்கு உறுதி எய்தும் பொருட்டு முன்னாள் கண்டவிடத்து மீளவும் சென்றால் அவளைக் காணலாம் என்ற கருத்தால் அவன் மறுநாள் அத்தனியிடம் சென்றான்; அதே நினைவுடன் அவளும் அங்கே வந்தாள். இருவர் கண்களும் காட்சியாற் கலந்தன; கருத்தும் ஒன்றின, எனினும், பெருநாணி னளாதலால் வாய்திறந்து ஒன்றும் உரையாமல், ஒளியும் நிறமும் திகழ ஓவியத்தெழுதிய பெண்கொடி போல் ஒருதனியே நின்றாள். பெருமைப்பண்பும், மனத்திண்மையும் உடைய னாகலின், அத்தலைமகன் அவளை அணுகி நின்று, “நங்காய் நின்னோடு போந்த ஆயமகளிர் ஓரை ஆடாநிற்ப, நீ அவரொடு கூடி அதனை ஆடுகின்றிலை; வேறு மகளிரொடு கூடிப் பூக்கொய்து மாலை தொடுக்கும் செய்கையும் மேற் கொண்டிலை; இக்கானற் சோலையில் ஒரு தனியே நிற்கின்றனை; நீ யார் என்று அறிய என் மனம் விழைதலால், நின்னைத் தொழுது கேட்கின்றேன்; கண் கொள்ளாப் பெருங்கவின் கொண்டு பிறங்குதலால் நீ இக் கடற்கண் உறையும் கடற்றெய்வமோ? அன்றி இக்கழி யிடத்தே நிலைபெற்று வாழும் தெய்வமகளோ? அன்பு கூர்ந்து சொல்லுக” என்று வேண்டினான். தொழுது வினவும் அவன் தோற்றத்தைக் கண்ட அத்தலைமகள், விடையொன்றும் கூறாது கையிகந்து பெருகும் காதற்குறிப்புத் தன் கண்வழி விளங்க, முட்போலும் பற்கள் சிறிது தோன்ற முறுவலித்தாள்; உவகை மிகுதியால் கண்களில் முத்துப் போல நீர்த்துளிகள் பரந்தன. கண்ணோக்கமும் முறுவற் குறிப்பும் அவளுடைய காதல் மாண்பைத் தெரிவிக்கக் கண்டு இன்புற்று நீங்கும் அவன் அந் நிகழ்ச்சியை மனத்துக்குள் தானே கூறிக் கொண்டான். அதனை நம் பாரதாயனார் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

ஒள்ளிழை மகளிரொ டோரை1 ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலை2 புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்
யாரை யோநிற் றொழுதனம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ
3இருங்கழி மருங்கின் நிலைபெற் றனையோ
சொல்இனி மடந்தை என்றனென் அதனெதிர்
முள்ளெயிற்று 4முறுவல் முகிழ்ப்பப்
பல்லிதழ்5 உண்கண் பரந்தவாற் பனியே

இஃது, இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத்6 தலைவன் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉமாம்.

உரை
ஒள்ளிழை மகளிரொடு ஓரை ஆடாய் - ஒள்ளிய இழை யணிந்த ஆயமகளிருடன் கூடி ஓரை ஆடாமலும்; வள்ளிதழ் நெய்தல் தொடலை புனையாய் - வளவிய இதழ்களையுடைய நெய்தல்மலர்களைக் கொய்து மாலை தொடுத்தலைச் செய்யா மலும்; விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்- விரிந்த பூக் களையுடைய கானற்சோலையின் ஒருபக்கத்தே தனித்து நிற்கின்றாய்; யாரையோ - நீயார்; நின் தொழுதனம் வினவுதும் - நின்னைத் தொழுது யாம் கேட்கின்றோம்; கண்டோர் தண்டா நலத்தை - காண்போர் கண்கட்கு அமையாத மிகு கவின் உடையை, ஆதலால், தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ - தெளிந்த அலை களையுடைய பெரிய கடலகத்தே விரும்பி உறையும் கடல் தெய்வமோ; இருங்கழி மருங்கின் நிலைபெற்றனையோ - கரிய கழிக்கரையின்கண் நிலைபெற்றிருக்கும் தெய்வமகளோ; இனிமடந்தை சொல் - இப்பொழுது மடந்தையே நீ எனக்குச் சொல்வாயாக; என்றனென் - என்று யான் வினவினேனாக; அதன் எதிர் - அதற்கு விடையாக; முள்ளெயிற்று முறுவல் முகிழ்ப்ப - முள்ளைப் போற் கூரிய பற்கள் தோன்றப் புன் முறுவல் செய்ய; பல்லிதழ் உண்கண் பனி பரந்த - பலவாகிய இதழ்களையுடைய பூப்போலும் மையுண்ட கண்கள் உவகை மிகுதியால் நீர்த்துளி பரந்தன, காண் -எ-று.

ஓரைஆடாய்; தொடலை புனையாய்; ஒருசிறை நின் றோய்; கண்டோர் தண்டா நலத்தை; ஆகலின், நின் தொழு தனம் வினவுதும், யாரையோ? அணங்கோ? நிலைபெற்ற னையோ? மடந்தையே இனி, சொல் என்றனென்; அத னெதிர், முறுவல் முகிழ்ப்ப உண்கண் பனி பரந்த எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஓரை - மகளிர் நீர்த்துறைக் கண் ஆடும் விளையாட்டு வகையுள் ஒன்று. இக்காலத்தே இஃது ஓரி விளையாட்டு என வழங்கும். தொடலை, மாலை, யாரை, முன்னிலைக்கண் வந்தவினா. ‘ஐ’ சாரியையுமாம். பெருமிதம் தோன்ற நிற்றலின் தொழுதனம் - வினவுதும் என்றது, தனித் தன்மைப்பன்மை; தண்டா நலம், குன்றாது பெருகிய அழகு. கடற்பரப்பின் அமர்ந்துறை அணங்கு என்றது - நீரரமகளோ என்பதுபட நின்றது. நீர்த்துறைக் கண் தெய்வம் உறையும் என்பது உலகவழக்கு. ‘மடந்தை’ அண்மை விளி. ‘இனி’, ஆராமை உணர நின்றது.

முன்னாள் கானற்சோலையின்கண் தலைமகளை எதிர்ப் பட்டு இயற்கைப் புணர்ச்சி பெற்று நீங்கிய தலைமகன், வழிநாள், அச்சோலைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற கருத்தினனாய் வந்தான்; வந்தவன், கடற்கரையில் உயரிய ஆடையும் ஒள்ளிய இழையும் அணிந்த இளமகளிர் ஓரை ஆடுவதும் சிலர் கழிநெய்தல் கொய்து மாலை தொடுப்பதும் கண்டு, தலைமகளைக் காணாது; சோலையிடை அவள் தனித்து முன்னாள் நின்றாங்கு நிற்பள் என எண்ணி வந்தா னாகலின், தன் எண்ணம் பழுதாகாமைக்குப் பெருமகிழ் வெய்திச் சொல்லாடும் வேட்கையுற்று, ஒள்ளிழை மகளி ரொடு ஓரை ஆடாய் என்றான். ஒள்ளிழை என்றதனைத் தலைவிக்கு அண்மை விளியாக்கலுமாம். ஒத்த திருவும், உருவும் உடையராகலின், அவரொடு கூடிவிளையாடப் போந்த நீ, அது செய்யாது ஈண்டுத் தனித்து நிற்பது என்னை அருள் வது கருதிப் போலும் என்றும் ஓரையாடலை உவவா யாயின் கழிகட் பூத்த நெய்தலைக் கொய்து மாலை தொடுக் கும் மாண்புடைச் செயலை மேற்கோடல் நினக்குப் பொருந் திற்றாக, அதுதானும் செய்கின்றிலை; என்னையோ நின் கருத்து என்றும்; இரந்து பின்னிற்றலின் வள்ளிதழ் நெய்தல் தொடலை புனையாய் என்றான். கடற்கரையிடத்து ஓரைமகளிர் குழுவிலும், கழிக்கரை யிடத்துப் பூக்கொய் மகளிர் குழுவிலும் கூடாது பூவிரிந்த பொதும்புகள் நிறைந்த இக்கானற்சோலை யிடத்து என் இருகண்களும் கண்டு பரவ, ஒரு தனியிடத்தே நிற்றல் யான் சொல்லாடற்குப் பொரு ளாயது என்பான். விரிபூங் கானல் ஒரு சிறை நின்றோய் என்றான். இத்துணையும் அவன் உரைப்பக் கேட்டும், தலைவி நாணமும், உவகையும் நனிபெரிது சிறந்து, மலர்ந்த முகமும், குளிர்ந்த நோக்கும் முகிழ்ந்த நகையும் கொண்டு மொழி யொன்றும் புகலாது, பூ நிறைந்த பொதும்பருட் புக்கு நிற்கக் கண்டு ஆற்றானாகிய தலைமகன், பிற்றைநிலை முனியாது, பெரும் பணிவுடைமை தோன்ற, யாரையோ நின்தொழு தனம் வினவுதும் என்றான். ஏனை மகளிரொடு கூடாது தனி நிற்பது கண்டேனுக்கு நீ அம்மகளிர் இனத்தைச் சேராத வேறு மகளோ என ஐயம் தோன்றி என் அறிவை அலைக்கின்றது காண் என்பான், யாரையோ என்றும், தெய்வமகளோ எனச் சிந்தை கருதிற்று என்றற்குத் தொழுதனம் வினவுதும் என்றும் தன் நெஞ்சை உளப்படுத்திப் பன்மையிற் கூறினான். நின் தனிமையே யன்றி மேனி வனப்பும் தொழத்தக்கவள் நீ என்று வற்புறுத்துகிறது என்பான், கண்டோர் தண்டா நலத்தை என்றான். நீரர மகளிரும், துறையுறை அணங்கும் எனத் தெய்வமகளிர் பலராதலின் பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ, இருங்கழி மருங்கின் நிலை பெற்றனையோ என்று எடுத்து மொழிந்தான். கடற்குரிய நீரர மகளாயின், ஈண்டு இச்சோலைக்கண் ஒதுங்குதற் கேது மகளிர்பலர் கூடிஆடும் ஓரையாட்டுப் போலும் என்றும், கழித்துறை அணங்காயினும் ஆண்டு மகளிர் பலர் நெய்தல் கொய்து தொடலை புனைந்து மகிழும் கம்பலை பொறாது இவண் மேவினை போலும் என்றும் கருதினேன் என்றா னாயிற்று. நின்னைச் சிறிது அணுகி நோக்கிய போது மடந்தைப் பருவத்து மானிடமகள் என்பது துணிந்தேன் என்பான், சொல் இனி மடந்தை என்றனென் என்றான். அழகும் ஆண்மையும் அறிவும் உருவும் கொண்டு தனித் திருக்கும் தன்முன் தோன்றிக் கண்வழியாகத் தன் உள்ளம் புகுந்து உடலகம் எங்கும் இன்பவுணர்ச்சி பொங்கி யெழத் தலைமகன் இரந்து பின்னின்று வினவிய சொற்களைச் செவி யேற்றுத் தன்னை மறந்து நிற்கும் தலைவி, தன்னை, அவன் கடல் உறை அணங்கோ? கழிமருங்கு நிலைபெற்ற கடவுட் காரிகையோ? யாரையோ? நீ என்றும், கண்டோர் தண்டா நலத்தை என்றும் பாராட்டியதனால், நாணத்தால் தலை கவிழ்ந்து பின் அவனைக் கடைக்கண்ணால் நோக்கிப் புன் முறுவல் செய்து உள்ளம் கவர்ந்தெழுந்த உவகைமிகுதியால் கண்கள் நீர்மல்க உரையாட மாட்டாது, எழுதிய ஓவியம் போன்று எதிர்நின்று இரு நிலம் கிளைத்து நின்றமையின், முள்ளெயிற்று முறுவல் முகிழ்ப்பப் பல்லிதழ் உண்கண் பரந்தவால் பனியே என்றும் இயம்பினான்.
இடந்தலைப்பாட்டின்கண் தலைமகனைக் கண்டு இன் புற்ற திறத்தைத் தன் நெஞ்சோடு கூறுவானாய்த் தலைவி கேட்பக் கூறியது; இருவர் உள்ளத்தும் காதலுணர்வு ஒத்து நின்றமை உணர்த்துமாறு காண்க.

“முன்னிலை யாக்கல்1” எனத் தொடங்கும் நூற்பா வுரையில், இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்; இனி நச்சினார்க்கினியர், “மெய்தொட்டுப் பயிறல்2” எனத் தொடங்கும் நூற்பாவின்கண் “அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடும் கூறலும்” என்றதன் உரையில் இப்பாட்டைக் காட்டுகின்றார்.

கண்ணங் கொற்றனார்


கண்ணங்கொற்றனார் என்பது கண்ணன் என்பவர்க்கு மகனார் என்று பொருள்படும். கொற்றன் என்பது இவரது இயற்பெயர். கண்ணம்புல்லனார் என்றொரு சான்றோர் இருப் பது காண்போர், இக்கொற்றனாரும் புல்லனாரும் கண்ணன் என்பவர்க்கு மக்களாகலாம் என்று கருதுகின்றனர். புல்லனா ருடைய தந்தையைக் கருவூர்க் கண்ணன் என்றும், இவரை வெறிதே கண்ணன் என்றும் சான்றோர் குறித்தலால், இருவரும் வேறு என்பது உணரப்படும். கண்ணனார் மகனார் கொற்றனார் எனப்படாமையின், கொற்றனார்க்குத் தந்தையான கண்ணன் என்பார் நல்லிசைப் புலவர் நிரலுள் சேராதவர் என அறிக. இச்சான்றோரைப்பற்றி வேறு குறிப்புக்கள் கிடைத்தில.

இயற்கைப்புணர்ச்சி யடியாகத் தோன்றிய காதலால், ஒன்றிய கேண்மையுற்ற தலைமக்களில், காதல் மாண்புறும் நன்னெறியாதல் பற்றித் தலைமகன் களவொழுக்கத்தை மேற்கொண்டு, தலைவி குறித்த இடத்தே இரவின்கட் போந்து அவளைக் கண்டு இன் புற்றுச் செல்வானாயினன். இரவு வருங்கால் நெறியின்கண் உளவாகும் ஏதமும், ஊர்க் காவலின் கடுமையும், தலைவியது மனைக்காவலின் அருமையும், அவளுடைய தந்தை தன்னை யர்களின் வன் கண்மையும் நினைந்து வருந்தினள் தலைமகள். அக்குறிப்பை அறிந்த தோழி தலைமகற்கு இரவுக்குறி மறுக்கத் துணிந்தாள். அந்நிலையில் தலைமகளுடைய பெற்றோர் மலைச் சாரலில் விளைத்த தினைப்புனம் முற்றிக்கதிர்தாங்குவதாயிற்று; தினைக் கதிர்களைக் கிளி முதலிய புள்ளினம் படிந்து தின்னத் தலைப்பட்டன. அதனால் பெற்றோர் தலைமகளை புனத்திடை நிறுத்திய பரண்மேலிருந்து காவல் புரியுமாறு ஏவினர். அதனால் தோழி இரவுக்குறிக்கண் தலைமகனை எதிர்ப்பட்டு4 பெருங்கல் நாடனே இரவிடை நெறிக்கண் உள்ள ஏதங்களைக் கருதாமல் பல்வகைக் காவல்களையும் கடந்து எம்மைத் தலைப்பெய்து இன்புறுத்தும் பேரன்புடையை; யாமோ எனில் நாளை மலைப் பக்கத்தே தினைப்புனம் காத்தற்குச் செல்வேம்; எம் பெற்றோரும், தன்னையரும், கள்ளருந்தும் களிப்பும், கைப்படின் துன்புறுத்தும் கொடுமையும் உடையர்; மலைமுடிக்கண் மழைமுகில் தங்கிப் பெருமழை பொழியச் சமைந்துள்ளது; இவையிற்றை நோக்கு மிடத்து இனி நீ இரவின்கண் வருதலைக் கையொழித்துப் பகற்கண் வந்து அருள்வாயாக" என்று மொழிந்தாள்.

தோழியினுடைய இக்கூற்றின்கண் தலைமக்களின் காதற் பெருமையும் ஒருவரையொருவர் இன்றியமையாமையும் எண்ணித் தலைவனது பேரன்பை விதந்தோதிப் பகல்வரவைப் பணித்து இரவுக்குறியை மறுக்கும் திறம் கண்டு வியந்த கண்ணங் கொற்றனார் இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார்.

நீயே,
அடியறிந் தொதுங்கா ஆரிருள் வந்தெம்
கடியுடை வியனகர்க் காவல் நீவியும்
பேரன் பினையே பெருங்கல் நாட
யாமே,
நின்னும்நின் மலையும் பாடிப் பன்னாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்
பகல்வந் தீமோ பல்படர் அகல
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அரியல் ஆர்கைய1 ராயினும் பெரியர்மன்
பாடிமிழ் விடர்முகை2 முழங்க
ஆடுமழை இறுத்தஎம்3 கோடுயர் குன்றே
இது, தோழி இரவுக்குறி மறுத்தது.

உரை
நீயே - நீயோ எனில்; அடி அறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்து - அடிவைத்து நடத்தற் குரிய வழியறிய லாகாத நிறைந்த இருட்போதில் வந்து; எம் கடியுடை வியனகர்க் காவலும் நீவி - காவலையுடைய எமது பெரிய மனையிடத்து அகக் காவலையும் கடந்து போந்து எம்மைத் தலையளிக்கும்; பேரன்பினை - மிக்க அன்புடையையாவாய்; பெருங்கல்நாட - பெரிய மலை நாடனே; யாமே - யாமோ எனில்; நின்னும் நின்மலையும் பாடி - நின்னையும் நினைக்குரிய மலையையும் பாடி; பன்னாள் - பல நாட்கள்; சிறுதினை காக்குவம் சேறும் - சிறு சிறு மணிகளையுடைய தினைக்கதிர் நிற்கும் புனம் காத்தற்குச் செல்லா நிற்பேம்; அதனால் -; பல்படர் அகல - யாம் எய்தி வருந்தும் பலவகைத் துன்பங்களும் கெடுமாறு; பகல் வந்தீமோ- பகற் போதின்கண் அவ்விடத்தே வருக; எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி - மஞ்சம்புற்கள் மிக வளர்ந்துள்ள பெரிய மலைப்பக்கத்துச் சிறுகுடியில் வாழும் எம் தந்தையும் தன்னையரும்; அரியல் ஆர்கைய ராயினும் - கள்ளை யுண்ணும் இயல்பின ராயினும்; பெரியர்மன் - பிறரை ஒறுக்கும் வன்கண்மையில் பெரிதும் கொடியராவர்; எம் கோடு உயர் குன்று - எமது உயர்ந்த முடியையுடைய குன்றமும்; பாடு இமிழ் விடர்முகை முழங்க - ஒருபால் தோன்றிய ஒலி எப்பாலும் எதிரொலிக்கும் மலைப்பிளவும் முழைஞ்சுகளும் இடிமுழக்கால் ஆரவாரிக்க; ஆடுமழை இறுத்த - காற்றில் அசைந்து வரும் மழை மேகங்கள் தங்குதலைக் கொண்டன, காண் எ-று.

பெருங்கல் நாட, நீ ஆரிருள் வந்து காவல் நீவிக் கூடி இன்புறுத்தும் பேரன்பினை; யாம் நின்னும் நின் மலையும் பாடிச் சிறுதினை காக்குவம் சேறும்; சிறுகுடியி லுள்ள எம் தன்னையரும் தமரும் அரியல் ஆர்கைய ராயினும் பெரியர்மன்; கோடு உயர்குன்று ஆடுமழை இறுத்த; அதனால் யாம் எய்தும் படர் அகலப் பகல் வந்தீமோ என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. காவல் நீவியும் என்புழி உம்மையை மாறிக் கூட்டுக. காவல் நீவியது தலைவியைத் தலையளித்தற் பொருட்டாதலின் காரணம் காரியத்தின்மேல் நின்றது. கடி, மதிலும் அகழுமாகிய அரண்கள், காவல் - காவலர் காவல் - தினை காவற்குரிய காலம் சில நாளன்றிப் பன்னாள் வேண்டும் என்றது; தினைக்கதிர் நன்கு முற்றி அறுக்கப்படுங்காறும் காவல் வேண்டப்படும் என்றற்கு. படர் - நெஞ்சிடை நிலவும் வருத்தம், எருவை - மஞ்சம்புல். இது பெரு வரை முகட்டிற் படியும் பனிமுகிலாலும் மழையாலும் விளையும் புல்வகை. மலைவாணர் தம் வீடுகட்கு இதனை அறுத்துக் கூரை வேய்வர். எருவை - கொறுக்கந்தட்டைக்கு மாயினும் ஈண்டு அதன்மேல் ஆகாது என அறிக. கள்ளுணவு மெய்வலியைக் குறைக்கும் தீமையுடைமை பற்றி அரியல் ஆர்கைய ராயினும் என்றார். அரியல், வடித்த கள், மன், அசைநிலை, பாடு, முழக்கம்.

தலைமகனுடன் காதற்றொடர்பு கொண்ட தலைமகள், அவனைத் தனியிடத்தே இரவிற் கண்டு இன்புற்று வருகையில், மலைப்பக்கத்தே அமைந்த தினைப்புனம் காவல் புரியுமாறு பணிக்கப்பட்டது. அவட்கு மிக்க வருத்தத்தைத் தந்தது; இரவிற் பரவும் பேரிருளில் நெறியறிந்து வருதல் அரிதாயினும் அதனைப் பொருட்படுத்தாமல் தலைமகள்பால் கொண்ட காதல் மிகுதியால் அவன் தவறாது வருதலை நன்கு உணர்ந்து அவனை அவ்வாறு வாராதவாறு தடுப்பின் அவனது கூட்டம் பெறல் இல்லையாம் என்ற அச்சம் ஒருபால் அவட்கு வருத்தம் பயந்தது. இந்நிலையில் இரவுக்குறி வரவைக் கைவிடுமாறு தலைமகற்குக் கூறுவது அருமையாய்த் தோன்றினமையின் அறிவின் உருவாகிய தோழி, தலைவி பக்கல் நின்று இரவு வந்தானைக் கண்டு “பெரும் இத்திணிந்த இருளில் நெறி யறிந்து வருதலும், ஊர்க்காவலும் மனைக்காவலும் கடந்து குறியிடம் போதருதலும் எம்பால் நீ கொண்ட பேரன்பினை வற்புறுத்துகின்றன என்பாள். நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்து எம் கடியுடை வியன்நகர்க் காவல் நீவியும் பேரன்பினை என்றாள். முன் வைத்த தனது அடியையே காண முடியாத அத்துணைத் திணியிருள் என்றற்கு அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் என்றும், அவ்விருளில் நெறியறிந்து வருதலின் அருமை நோக்காது வந்தது ஒருபுறம் இருக்க, எமது மனையின் புறக்காவலும் அகக்காவலு மாகிய இருவகைக் காவலையும் கடந்து போந்தது அரிய செயல் என்றற்கு எம் கடியுடை வியனகர்க் காவல் நீவி என்றும், இவ்வாறு நெறியருமையும் காவற் பெருமையும் விளைவிக்கும் ஏதத்தை மதியாது இவண் போந்து எமக்கு இத்தலையளியைச் செய்தது எம்பால் நினக்கு உளதாய பேரன்புடைமையல்லது பிறிதில்லை என்பாள்; பேரன்பினை என்றும் பெருமலை களை யுடைய நாடனாதலால் நினக்கு இப்பேரன்புடைமை ஒத்தது என்பாள். பெருங்கல் நாட என்றும் பாராட்டிக் கூறினாள். பேரன்புடைய நின்பால் யாமும் பேரன்புடையே மாயினும், இப்பொழுது நின் அன்புக்கு ஒவ்வாது நின் வரவினை மறுக்கும் செயலுடையே மாயினேம் என்பது தோன்ற யாமே என்றும்; நின்பாற் பிறங்கும் பேரன்பினால் யாம் நின்னையும் நின் மலையும் நினைந்து பாடிப் பரவுவேம் என்பாள்; நின்னும் நின்மலையும் பாடி என்றும், இப் பெற்றியேம் இனி நின்னை இவ்விரவுக்குறிக்கண் கண்டு இன்புறும் பேற்றினை இழந்து தினை விளையும் புனங்காவல் குறித்துச் செல்வேமாயினேம்; என்றற்குச் சிறுதினை காக்குவம் சேறும் என்றும், தினைவிளைதற்குப் பன்னா ளாகும் என்பது தோன்றப் பன்னாள் என்றும்; அதனால் இனி நீ இரவின்கண் குறியிடம் வருதலைக் கைவிடுக என்றல் மரபன்மையின், அதனால் பகல் வந்தீமே என்றும், பேரன்பு செலுத்த இரவிற் குறியிடம் போந்து சிறப்பித்த நின் தகைமையை நினையுங்கால் நீ விரும்பியது செய்தல் எமக்கு அறமேயன்றி அதனை மறுத்து யாம் விரும்பியதனைச் செய்யுமாறு நினக்குக் கூறல் முறையாகாமையுடன் மிக்க வருத்தத்தையும் செய்கின்றது என்பாள் பல்படர் என்றும், யாம் விரும்புமாறு பகற்போது வந்து எம்மை அருளாவிடின் யாம் ஆற்றேம் எனபாளாய்ப் பல்படர் அகலப் பகல் வந்தீமோ என்றும் கூறினாள். தினை விளைத்தற் பொருட்டு உழுதல், வித்தல், களையெடுத்தல் முதலிய செய்கைகளால் நாளும் உழைத்த எம் ஐயன்மார், ஓய்வும் உறக்கமும் பெறுவாராய் எம்மைப் புனங்காத்தற்கு விடுத்தனர் என்பாள், அரியல் ஆர்கையர் என்றும், அரியல் ஆர்ந்த அனந்தர் உளத் தராயினும் அவர் இடுகின்றபணியை மறுக்கின் பொறாது வெகுளும் பெருஞ்சினத்தர் என்றற்குப் பெரியர்மன் என்றும், தினை முற்றும் காலம், கார்கால மாகலின் அதுவும் நெருங் கிற்று என்பாள்; ஆடுமழை இறுத்த எம் கோடுயர் குன்று என்றும் கூறினாள்.

இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அன்று முதல் தனக்கென ஒன்றின்றி தலைமகன் குறிப்புவழி நின்று ஒழுகிய தலைமகள் இனித் தலைமகனை மறுத்தும் சேட்படுத்தும் தழுவியும் வரைவுகடாவும் கருத்தினளாதலின் அதற் கொப்பவே இக் கூற்றால் தோழி மறுத்தலை மேற்கொள்ளுகின்றாள். இது கேட்டுத் தலைவன் வரைவு மேற்கொள்வானாவது பயன்.

இளவேட்டனார்


மனையின்கண் இருந்து அறம்புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் தலைமகன் தனக்குக் கடனாகிய பொருள் குறித்துப் பிரிய வேண்டியவனானான். புதுமணம் புணர்ந்த செல்வ மக்களாதலின் அவரது இன்ப வாழ்வில் பிரிவு என்பது பெருந் துன்பத்தைச் செய்வதாயிற்று. அவனுடைய பிரிவுக் குறிப்பு அறிந்த மாத்திரையே தீயிற்பட்ட மெழுகு போல் உள்ளம் உருகி வருந்திய தலைமகட்குத் தெளியத் தகுவன கூறி வேனிற் பருவத்தில் தான் மேற்கொண்ட பொருளை முடித்துக் கொண்டு மீள்வதாகத் தலைவன் வற்புறுத்தினான். காதலன் கட்டுரைத்த சொல்லைத் தேறி மனைக்கண் இருத்தல் கற்பற மாதலை உணர்ந்து, தலைவியும் அவன் பிரிவுக்கு உடன்பட்டாள். அவனும் அவள்பால் விடைபெற்றுச் சென்றான். மேற்கொண்ட பொருட்குரிய வினைநிகழ்ச்சிக்கண் தலைமகனுடைய கண்ணும் கருத்தும் ஒன்றி இருந்தமையின் காலக்கழிவு அவற்குப் புலனாகவில்லை. வினை முடியும் செவ்வி நெருங்குகையில் ஒருநாள் அவன் இருந்த சூழலின் இயற்கைக் காட்சி அவன் உள்ளத்தை ஈர்த்தது. மாமரங்கள் தளிர் ஈன்று இனிய தோற்றம் அளித்தன; மாவின் சினைகளில் குயிலினம் இருந்து கேட்போர் செவி குளிருமாறு இனிய குரலெடுத்து இசைத்தன; குயிலிசையின் குளிர்ச்சியும், மேற்கொண்ட வினைமுடியாமையும், அவன் நெஞ்சினை நெகிழ்த்தன; உடனேஅவன் உள்ளம் மனைக்கண் உறையும் காதலிபாற் சென்றது; உடம்பின் அமைப்பில் ஆடவர் மகளிர் என்ற வேறுபாடு உண்டேயன்றி, உள்ளம், உணர்வு ஆகியவை ஓர் இயல்பினவாகலான் தன் கண்முன் தோன்றி நின்ற மாந்தளிரின் மாண்பாலும், குயிலிசையின் இனிமையாலும், வேனிற்பருவம் தன் வரவு காட்டுதல் போலத் தலைமகட்கும் அது செய்தலில் தப்பாது என்று நினைந்தான்; நினைவுக் கிடனாகிய தன் நெஞ்சினை நோக்கினான். மேற்கொண்ட பொருட்குரிய வினையின்கண் ஒன்றி நின்று அதன் முடிவு பயக்கும் இன்பத்தால் வேனிற்பருவ வரவை நோக்காதொழிதல் தன் நெஞ்சிற்குத் தகும் என்று எண்ணினான். அவன் தன் நெஞ்சினை நோக்கி, “நெஞ்சமே, யாற்றின் இருகரையிலும் பரந்து ஓடிய நீர்ப் பெருக்குக் குன்றி, மழை பெய்தலால் நனைந்து வளைந்து வளைந்து ஓடும் பாம்பின் முதுகு போல நெளிந்தோடுதலைக் காண்; கரைமருங்கு நின்ற மாமரங்கள் புதுத் தளிர் ஈன்று பொலிவு மிக்கு விளங்குகின்றன; அவற்றின் கொம்புகளில் கருங்குயில் வீற்றிருந்து இனிமையுறப் பாடுகின்றன; இப்பாட்டிசை, தனித்துறையும் காதலர் உள்ளத்தில் காதல் வேட்கை கிளரச் செய்து ஒருவரின் ஒருவர் பிரியாது கூடி மகிழும் பேரின்பத்தைப் பெறச் செய்யும் பெருமையுடையது; மாம்பொழிற்கண் குயிலிருந்து இனிது இசைக்கும் நல்லிசையைக் கேட்குந்தோறும் நம்மை நினைந்த உள்ளத்தளாய் நம் காதலி வேட்கை மீதூர்ந்து கண்கலுழ்ந்து வருந்துவள் காண்” என்று கூறினான்.

இக்கூற்றின்கண், வினைமேற் சென்ற உள்ளம் அது முடியுங் காறும் காதலியை நினையாமல், அதன் முடிவின்கண் வேனில் வரவு காண்பதும், காதலியை நினைப்பதும், அப்பருவ வரவு தான் மீளக் குறித்த பருவம் என எண்ணிக் காதலி தன்னை நினைந்து வருந்துவள் என நினைப்பதும் தலைவனது சால்பைக் காட்டி இன்புறுத்துவது கண்ட இளவேட்டனார் அவற்றை இப் பாட்டிடைத் தொடுத்துப் பாடுகின்றார்.

இருங்கண் ஞாலத் 1தருந்தொழில் உதவிப்
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்
பல்பொறி அரவின் செல்புறங் கடுப்ப
2யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில்
இணர்துதை 3மாஅத்த புணர்குயில் விளித்தொறும்
நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கவிழுமால் பெரிதே காட்ட
குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கைத்
4தண்பூந் தாதுக் கன்ன
நுண்பஃ றுத்தி மாஅ யோளே.

இது, பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவ வரவுணர்ந்த நெஞ்சிற்குக் கூறியது.

உரை
இருங்கண் ஞாலத்து அருந்தொழில் உதவி - அகன்ற இடத்தையுடைய நிலவுலகில் வாழ்பவர்க்குப் பிறவாற்றால் செய்தற் கரிய உழவுத் தொழிற்கு உதவியாக; பெரும்பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து - பெரிய மழை பொழிந்த பிற்றை நாட்காலத்தில்; பல்பொறி அரவின் செல்புறம் கடுப்ப - பல பொறிகளையுடைய பாம்பு வளைந்து செல்லுங்கால் தோன்றும் அதன் புறமுதுகுபோல; யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் - யாற்று நீர்ப்பெருக்குச் சுருங்கியோடும் செவ்வியையுடைய வேனிற்காலத்தில்; இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் - பூந்துணர்கள் நெருங்கத் தாங்கிய மாமரத்தில் வாழும் பெடையொடு கூடிய குயில்கள் கூவுந்தோறும்; நம்வயின் நினையும் நெஞ்சமொடு - நம்மையே நினைந்து இனையும் நெஞ்சத்துடனே; கேட்டொறும் - செவியிற் கேட்கும் போதெல்லாம்; கைம்மிகப் பெரிது கலுழும் - பிரிவுத்துன்பம் மிகுந்து பெரிதும் கண்ணீர் சொரிந்து புலம்புவள், காண்; காட்ட - காட்டு நாட்டின் இடையில் அமைந்த; குறும்பொறை அயல - குறுகிய குன்றின் பக்கத்தில் நிற்கும்; நெடுந்தாள் வேங்கை தண்பூந்தாது உக்கன்ன - நெடிய அடியையுடைய வேங்கை மரத்தின் குளிர்ந்த பூந்தாது உதிர்ந்தாற் போல; நுண்பல் தித்தி மாயோள் - நுண்ணிய பல தேமற்புள்ளிகள் பரந்த மாமை நிறத்தை யுடைய நம் காதலி எ-று.

மாஅயோள், குயில் விளித்தொறும், கேட்டொறும் நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகப் பெரிது கலுழும், காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இருங்கண் என்ற விடத்து இருமை அகலத்தின் மேல் நின்றது. மழை இல்வழி உழவுத் தொழில் நடவாத அருமைபற்றி அருந்தொழில் எனப்பட்டது. நான்கனுருபு விரித்துக் கொள்க. வழிநாள், அடுத்து வரும் நாள், பள்ளம் நோக்கி ஓடுதல் நீர்க்கு இயல் பாதலால் நீர்ப்பெருக்குச் சுருங்கியவுடன் சிறுகியோடும் நீர், பள்ளங்களை நோக்கி வளைந்தும் நெளிந்தும் ஓடுதற்குப் பாம்பின் செல்புறம் உவமமாயிற்று வேனிற்காலத்தே மழை யின்மையின் யாற்றுநீர் சுருங்கினமை பெற்றாம். அறல் - நீர். வேனிற் காலத்தில் மாமரங்கள் புதுத்தளிரும், நறுதுணரும் தாங்கிக், காய்த்துக் கனிந்து பயன்தரும் இயல்பின வாதலால் நாட்பதவேனில் எனச் சிறப்பித்தார். புணர்குயில் பெடை யொடு கூடி யுறையும் குயிலினம், பிரிந்துறையும் காதலர் உள்ளத்தில் ஒருவரை யொருவர் நினையுமாறு பண்ணும் சிறப்புக் குறித்துப் புணர்குயில் என்றார் என்றுமாம். ’புணர்ந்தீர் புணர்மினோ என இணர்மிசைச் செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் இன்பவேனிலும் வந்தன்று“1 என்றும்,”மாஅத்துப் பொதும்புதோ றல்கும், பூங்கண் இருங்குயில் கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கையிட்டு, அகற லோம்புமின் அறிவுடையீரெனக், கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய்யுற இருந்து மேவர நுவல2" என்றும் சான்றோர் உரைப்பது காண்க. அண்மையிலிருந்து கூவுங்கால் கூவுந் தோறும், சேய்மையிற் சென்றிருந்து கூவுங்காவல் கேட்குந்தோறும் குயிலோசை நெஞ்சின்கண் காதல் நினை வினைத் தூண்டிற்று என உரைக்க. நினைவும் வேட்கையும் உடன் தோன்றுதலால் கண்கலுழ்தல் கைம்மிக்கது எனவும், அவற்றின் வழித்தோன்றும் வருத்தம் கடிதின் மறையாமையின் பெரிது எனவும் சிறப்பித்தார். சிறுசிறு குன்றங்களையும் பக்கமலைகளையும் உடையவற்றைக் குறும்பொறை என்றல் வழக்கு. சேர நாட்டில் குட்ட நாட்டுக்கும் குடநாட்டுக்கும் இடையே குறும்பொறை மிக்குள்ள பகுதி குறும்பொறை நாடு (குறும்பர் நாடு) என்றே பெயர் கொண்டு வழங்குவது காண்க. காமச் செவ்வி தோன்றிய இளம்பருவத்தே மார்பிலும் கழுத்திலும் அடிவயிற்றிலும் துடையிலும் பரந்து பொன் னிறம் கொண்டு திகழும் அழகுத் தேமல் இங்கே நுண் பல்தித்தி எனப்பட்டது. மாஅயோள் - மாந்தளிர் போலும் நிறத்தினையுடையவள். இது மாமைநிறம் எனவும் வழங்கும்.

கடமையாகிய பொருள்வினைக்கண் கருத்தூன்றி இருந் தமையின் கார் கூதிர்களாகிய மழைக்காலத்தின் வரவு செலவு களையும் பனிக்காலத்தின் பண்பையும் உணராதொழிந்த தலைமகற்கு மேற்கொண்ட வினைமுடியும் செவ்வியில் வேனில் வரவும், யாற்றுநீர்ச் சுருக்கமும் புலனாயினமையின், யாற்று அறல் நுணங்கிய நாட்பதவேனில் என்றான், மழையில்வழி மாநிலத்து எவ்வுயிர்க்கும் வாழ்க்கையில்லை யாதலால், அது பெய்யும் மாரிக்காலம் கழிந்தமை கண்டு வியந்து கூறுவான், இருங்கண் ஞாலத்து அருந்தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த வழிநாள் என்றான். கார்காலத்துப் பெரும் பெயலால் இருகரையிலும் பரந்து பெருகி ஓடிய நீர் வேனிற்காலத்திற் சுருங்கி ஓடுவது, தொடக் கத்தில் பெருமையும் அருமையும் கொண்டு தோன்றிய வினை, முற்ற முடியும் எவ்வியில் சிறுத்துத் தோன்றும் எளிமை காட்டி இன்புறுத்தலின், வேனிலையும் விரி பொழிலையும் குயிலோசையையும் அதுவே வாயிலாகத் தன் காதலியையும் காதலியின் காதற் பெருக்கையும் கட்டுரைப் பானாயினான். காதலியிற் பிரிந்த காலத்து மீள்வேன் என வற்புறுத்திய பருவமாகலின் அதனை வியந்து நாட்பத வேனில் என்றும், காவும் சோலையும் கவின் பெறு பொழிலும், புதுத் தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும் புள்ளும் மகிழ்ந்து விளையாட, மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற் காலம், காதலிற் பிணிப்புண்ட இளமையுள்ளங்கட்கு இன்பக் காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால் அக்காலத்து மாங்குயிலின் தேங்கொள் இன்னிசைக் கண் தலைமகனது கருத்துச் சென்றமையின் இணர்துதை, மாஅத்த புணர்குயில் என்றும், குயிலின் இன்னிசை, கேட்போர் உள்ளத்தில் காதல் வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல் இயல்பாதல் பற்றிப் புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சமொடு என்றும், நினைந்தவழி நினைந்தாங்குக் கூட்டம் பெறற்கின்றி இடை நிற்கும் பிரிவு தோன்றிப் பேதுறவு செய்கின்றது என்பான், கேட்டொறும் கைம்மிகக் கலுழுமாற் பெரிதே என்றும் கூறினான். மாவின் அவிர் தளிர் காணுந்தோறும், அது தன் காதலியின் மேனிநலம் காட்டி நினைவு மிகு வித்தலின் மாஅயோள் என்று சொல்லி இன்புறுவானா யினன், உடனே வினைமுற்றி மறுத்தருவானாவது பயன்.

வெள்ளைக்குடி நாகனார்


வெள்ளைக்குடி சோழநாட்டு ஊர்களுள் ஒன்று. அரசரா யினும் யாவராயினும் அஞ்சாது அணுகி அவர்கட்கு ஆகும் உறுதி கூறுவதில் நல்ல அறிவும் ஆற்றலும் ஆண்மையு முடையர் இவ்வெள்ளைக்குடி நாகனார். அவர் காலத்தே சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழநாட்டை ஆண்டு வந்தான். ஒருகால் சோழநாட்டு உழவர்கட்கு உழுதொழில் வளம்படாதொழியவே வேந்தற்குரிய இறைக்கடன் செலுத்து வதில் முட்டுப்பாடு உண்டாயிற்று. குடிகட்கு உண்டாய இடுக் கணை உற்றறியாது, கடமையைச் செலுத்துதலில் தாழ்ப்பது ஒன்றே காரணமாக வேந்தன் வெகுண்டு குடிகளிற் சிலரை வருத்தலுற்றான். ஆயினும் பலர் செய்க்கடன் இறுக்கும் வலி யின்றி வருந்தினர். அக்காலத்தே அரசன்பக்கல் இருந்து அறிவு கொளுத்தும் அமைச்சரும் பிறரும் அத்துணைச் செப்பமும் ஆட்சி நலமும் எண்ணி ஆவன அறிந்து செய்யும் அமைதியின்றி இருந்தனர். வேத்தவையின் குறைபாடு கண்டு நல்லறிவு வழங்கித் தெருட்டும் சான்றோர் இருத்தற்குரிய இடத்தில் வேறு பிறர் இருந்து பொதுமொழி கூறிக் குடிகட்கும் வேந்தற்கு முள்ள உறவினைச் சீர்குலைத்தனர். நாட்டவர் பலரும் வேந்தனைப் பழிக்கும் அளவுக்கு அரசுமுறை குற்றப்பட்டது. அது கண்ட நாகனார், சோழவேந்தனை நேரிற் கண்டு, “முரசு முழங்கு தானையையுடைய வேந்தர் மூவருள்ளும் அரசு எனச் சிறப்பிக்கப் படும் செம்மை சான்றது நின் அரசேயாகும்; நாடுகளிலும் காவிரி பாயும் கழனிநலத்தால் நின் சோழநாடு நிகரற்றதாகும்; நினக்கு ஒன்று கூறுவல்; நின்பால் முறை வேண்டி வருவோர்க்குக் காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லின்றி வரவேற்று அவர் வேண்டுவதை விரும்பிக் கேட்டு அருளுதல் வேண்டும்; நின் கொற்றக்குடை வெயில் மறைத்தற்குக் கொள்ளும் ஏனைக் குடை போல்வதன்று; வருந்திவரும் குடிகட்கு முறைவழங்கு மாற்றால் அருள்நிழல் நல்குவதாகும்; உனக்கு வெற்றிதருவது வேலும் வில்லும் வாளுமாகிய படை அன்று; உணவு தந்து உதவும் உழவர் உழுபடை என்பதை நீ நன்கு உணர்வாயாக; மாரி பொய்க்கு மாயினும், வருபயன் குன்றினும், இயற்கையல்லன செயற்கையில் தோன்றினும், இவ்வுலகு, ஆளும் வேந்தனையே பழிக்கும் என்பதை நீ அறியாய் கொல்லோ? நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது குடிகள் உரைக்கும் குறையும் முறையும் கேட்டு அவர்களை ஓம்புவையாயின் அவர்கள் நினக்குப் பொன்னும் பொருளும் பொருபடையும் படைத்துக் கொடுப்பர்; பின்பு பகைவர் நின் அடிக்கீழ் அஞ்சி ஒடுங்குவர்; இதனை உணராது குடிகளை வருத்திக் கடமை கொள்ளும் செயலை மேற்கொள்வை யாயின், விளையும் தீங்கு வேறாம்” என்பது தோன்ற வீறுடைத் தமிழால் விளக்கிக் கூறினர். அவருடைய சொன்னலம் உணர்ந்து வேந்தனும் பழஞ்செய்க் கடனைப் போக்கிக் குடிகளின் பரந்த அன்பைப் பெற்று மேன்மை எய்தினான். இச்சான்றோரை ஒத்த வீரப்பெருமக்களின் வரலாறுகளைப் பேணிப் பயிலும் பெருந் தகைமை யின்றித் தமிழரினம் பிறர்க்கே உழைத்து ஏழையாய் வருந்துவது பெரிய அவலநிலையாகும்.

தலைமைப்பண்பும் செய்கையும் சான்ற தன் உள்ளத் தாமரையில் தனிப்பெருந் திருமகளாய் வீற்றிருக்கும் தலைவி மனத்தில் தன்பொருட்டுத் தோன்றியிருக்கும் காதலன்பு முறுகிப் பெருகித் தன்னை யின்றி இமைப்போதும் அமையாத அளவில் வளர்வது கருதிக் களவின்கண் அவளைக் குறியிடத்தே கண்டு இன்புறுத்தி வந்தான் தலைமகன். சின்னாளை அளவளாவலால் உளதாகி, விரைவின் எய்தும் கூட்டத்தால் சிறிது போதில் உவர்ப்புற்றுக் கழியும் பொய்யியற் கழிகாமத் தொடர்பு போலாது, உயிரொன்றிய உண்மைக் காதற்றொடர்பாய் உடலளவாய்ப் பற்றி, உயிரொடு பின்னிப் பிணிப்புண்டு. அது புக்குழிப் புகுந்து தொடரும் பொற்பு நோக்கி வரையாது களவையே விரும்பி நீட்டித்தான். அதனால் அவன், இரவுக் குறிக்கண் வரும் வழி யினது அருமையும், இருளினது செறிவும், கோள்வல் புலியும், ஆள்பார்த்துத் திரியும் கொல்களிறும் பிறவும் வழங்கும் காடும் மலையும் கார்மழையும் கடும்புனல் யாறும் காவலர் காவலும் கலங்குதுயர் நல்கும் என்பதைப் பொருளாகக் கருதினான் இல்லை. அவனுடைய மனக்கோளை அறிந்த தோழி, அவன் முன்னே நின்று அவனது வரவை மறுத்து வரைந்து கோடலே தக்கது என வெளிப்பட உரைத்தற்கு வேண்டிய மனத் திண்மை பெறாது அலமந்தாள். அவனுடைய கூட்டம் பெறுதற்கண் உளதாகிய வேட்கை நாடோறும் பெருகித் தலைமகட்குக் கையறவு பயந்தது. அவளுடைய உள்ளத்திற் பெருகி வளரும் காதலை மேன்மேலும் வளர்த்தற் குரியவற்றையே சூழும் தலைவன் உள்ளத்தில், வரைவு வேண்டி வாயால் உரைக்கப்படும் சொற்கள் அவன் செவியுட்புகுதற்குரிய கூர்மையுடைய வல்ல வாதலைக் கண்ட தோழி, அவன் தானே உய்த்துணர்ந்து கொள்ள உரைத்தல் சீரிது எனத் தேர்ந்து, தலைவியோடு சொல்லாடுவாள் போன்று, அவன் செவியேற்றுத் தெருளுமாற்றால், “தோழி, நம் காதலர் வரும் வழியை யான் நேரிற் காணேனாயினும், அது தானாகவே மறைந்து வந்து என் மனக்கண்முன் தோன்றா நின்றது; அதனை நோக்கின், அவர் வரும்வழி, கல்லும் முள்ளும் நிறைந்து, வரும்வழி நடப்பவர் காலைச் சிதைப்பதாகவுளது; அங்கே பரவும் கனையிருள் காண்பார் கட்பார்வையை அழிக்கின்றது; மலைக்கண் விடரகத்து வாழும் கடும்புலி பெருங்களிற்றைத் தாக்கிக் குருதியை உண்டு கறைபடிந்த தன் வாயை வேங்கை மரத்தின் அடியில் தேய்த்துத் துடைத்துக் கொள்ளுகின்றது; இதனைக் காணும் என் நெஞ்சு பெரிதும் வருந்துகின்றது காண்” என்று கூறினாள்.

இக்கூற்றின்கண், இரவில் தலைவன் வரும் நெறிக் கண்ணுள்ள ஏதம் கூறி இவ்வாற்றல் எய்தும் கூட்டத்தால் தலைமகட்கு இன்ப மின்மை காட்டி, தலைவன் உள்ளத்தில் ‘இனி, வரைந்து கோடலே செயற்பாலது’ என்ற எண்ணம் எழச்செய்யும் தோழியின் சூழ்ச்சி நலம் விளங்குவது கண்டு வியந்த வெள்ளைக்குடி நாகனார் இப்பாட்டின் கண் அதனை அமைத்துப் பாடுகின்றார்.

அம்ம வாழி தோழி நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
1வந்தன்று மன்னோ கண்ணே கண்ணிற்
கல்லதர் மன்னும் 2கால்கொல் லும்மே
கனையிருள் மன்னும் கண்கொல் லும்மே
விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி
புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக்
3குருதி ஆடிய கொழுங்கவுள் கயவாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்குமலை நாடன் வரூஉ மாறே.

இஃது, ஆறுபார்த்துஉற்ற அச்சத்தால் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

உரை
தோழி-: வாழி - : அம்ம - கேட்பாயாக; யானோ காணேன் - யான் கண்ணிற் காணேனாயினும்; அதுதான் நம்வயின் கரந்து கண் வந்தன்று - அதுவே நம்பால் மறைவாக வந்து மனக் கண்ணில் தோன்றாநின்றது; கண்ணின் கல்லதர் கால் கொல்லும் - அதனைக் கருதி நோக்குமிடத்துக் கல்லும் முள்ளும் நிறைந்த மலைக் காட்டுவழி நடப்போர் காலை வருத்தும்; கனையிருள் கண் கொல்லும் - அதன்மேல் மாரிக் காலத்துப் பேரிருள் பரந்து யாதும் கண்ணுக்குத் தோன்றாத வாறு மறைத்து வருத்தும்; விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி - மலைப்பிளவுகளி லுள்ள முழைகளில் வாழும் வெவ்விய சினத்தையுடைய பெரிய புலி; புகர்முக வேழம் புலம்பத் தாக்கி - புள்ளி பொருந்திய முகத்தையுடைய பெரிய களிற்றியானை வருந்தத் தாக்கிக் கொன்று; குருதி ஆடிய கொழுங்கவுள் கயவாய் - குருதியை யுண்டதனால் கறை படிந்த கொழுவிய கன்ன மளவும் அகன்ற பெரிய வாயை; வேங்கை முதலொடு துடைக்கும் - வேங்கைமரத்தின் அடியில் துடைத்துக் கொள்ளும்; ஓங்குமலை நாடன் வரூஉம் ஆறு - உயர்ந்த மலைநாடனாகிய நம் தலைவன் வரும் வழி எ-று.

தோழி, வாழி, அம்ம, நாடன் வரூஉம் ஆறு, யானோ காணேன்; அதுதான் கரந்து கண் வந்தன்று; கண்ணின் கல்லதர் கால் கொல்லும்; கனையிருள் கண் கொல்லும் எனக் கூட்டி வினைமுடிவு - செய்க. புலி வேழம் புலம்பத் தாக்கிக் குருதி யாடிய வாயை வேங்கை முதலொடு துடைக்கும் மலைநாடன் என இயையும், மன்னும் ஓவும் உம்மையும் அசைநிலை; “உண்பது மன்னும் அதுவே, பரிசில் மன்னும் குரிசில் கொண் டதுவே1” என்புழிப் போல, கொல்லுதல், மிக்க வருத்தம் உறுவித்தல். புறக்கண்ணிற் காணப்படாத ஒன்று மனத்தின்கட் காணப்படுதற்குக் காரணம் கூறலாகாமையின் அதுதான் கரந்து வந்தன்று என்றார். கல்லதர் - கல்லும் முள்ளும் நிறைந்த மலைக்காட்டு வழி. கனையிருள் - பேரிருள்; அஃதாவது மாரிக்காலத்துக் கூரிருள். ஏனைக்காலத்து இருள் விண்மீன்களின் ஒளியால் செறிவின்றி யிருத்தல் அறிக. கவுள் - கன்னம், பெருமலைகளில் வாழும் இயல்பிற் றாதலின் புலி தன் வாயைத் துடைக்கும் ஓங்குமலை என்றார். கரந்து வந்தன்று என்றது, “வாரா மரபின வரக் கூறுதல்2”.

இரவுக்குறிக்கண் தலைமகன் போந்து சிறைப்புறத்தே நிற்பது உணர்ந்த தோழி, அவன் செவியிற் கேட்டுத் தெருண்டு வரைந்து கோடல் வேண்டும் என்ற கருத்தால் தலைவியோடு சொல்லாடுகின்றா ளாகலின், தான் கூறுவனவற்றை நன்கு கேட்பாயாக என்றற்கு அம்ம வாழி தோழி என்றாள். புறக் கண் காணமாட்டாத நுண்பொருள்களை அறிவுக்கண்ணாகிய மனக்கண் நுனித்துக் காணும் நுட்பம் படைத்த தாயினும், அது தானும் காணாவகையில் மறைந்து போந்து காட்சி தருகின்றது என்பாள். நம்வயின் அதுதான் கரந்து வந்தன்று என்றாள், அது என்னும் சுட்டுத் தலைமகன் வரும் வழி குறித்து நின்றது; செய்யுளாகலின் முற்பட வருதல் அமையும் என்க. நெறியின் கொடுமையை விரித்துக் கூறுதலின் அதனை அறிந்த வாறு என் என எழும் வினாவைத் தானே முன்னுற எண்ணி மொழிகின்றமையின் யானோ காணேன் என்றாள். கண் ணிற் காண்பது போலக் காட்சி வழங்குகிறது என்பாள் கண்ணே எனல் வேண்டிற்று. அங்ஙனம் காட்சிப்படும் வழி, கல்லும் முள்ளும் செறிந்து காடுகளின் இடையிலும் மலைப் பிளவுகளிலும் நுழைந்து நடப்பாரை நடக்க ஒண்ணாதவாறு துன்புறுத்துதல் பற்றி, கல்லதர் மன்னும் கால்கொல்லும்மே என்றாள், கொல்லுதல் போலும் துன்பமுடைமை பற்றிக் கொல்லும் எனப்பட்டது, “கை கொல்லும் காழ்த்தவிடத்து1” என்றாள் போல, கானத்தின் இயல்பு கூறுவாள், பேரிருள் பரவிக் கட்பார்வை நுழையாதவாறு தடுத்து வருந்துகிறது என்பாள், கனையிருள் மன்னும் கண் கொல்லுமே என்றாள். கல்லதரும் கனையிருளும் தலைவன் வரும் நெறியினது அருமைக் குரதுவாதலை வாயாற் கூறினவள், அதன் கொடு மையைப் புலியின் செயல்மேல் வைத்து, இரும்புலி வேழம் புலம்பத் தாக்கிக் குருதிபடிந்த தன் கயவாயை வேங்கை மரத்தின் முதலொடு துடைக்கும் என்றாள், நெறியின் அரு மையும் கொடுமையும் ஆகிய தீங்குகளை நம்பொருட்டு ஏறட்டுக் கொண்டு வரும் தலைவனது காதல்மிகுதி பலபட எண்ணி வருந்து மாறு செய்கின்ற தாகலின், யான் என் செய்வேன் எனத் தோழி இதனால் தன் கையறவு தோற்று வித்தமை காண்க. தோழி கூற்றின் உண்மையைத் தலைமகள் உணரின் ஆற்றாள் எனத் தெருண்டு வரைவானாவது பயன்.

வேழத்தைத் தாக்கிக் கொன்றதனால் குருதி ஆடிய வாயை இரும்புலி வேங்கை முதலொடு துடைக்கும் மலை நாடன் என்றது, தன் தொடர்பால் நம்பால் தோன்றி வருத்தும் மேனி வேறுபாட்டைச் சான்றோரை விடுத்துச் செய்யும் வரைவினால் போக்கற்பாலன் என்றவாறு; அதனைச் செய்யாது நீட்டித்தல் நமக்கு வருத்தம் தருகிறது என்றாளாயிற்று.

கண்ணம் புல்லனார்


கண்ணம்புல்லனார் என்ற தொடர் கண்ணன் என்பார்க்கு மகனார் என்று பொருள்படும். புல்லன் எனப் பண்டையோர் பலர் பெயர் தாங்கியுள்ளனர். கள்ளிக்குடிப் பூதம்புல்லனார் என்றும், மதுரைக் கொல்லன் புல்லனார் என்றும் சான்றோர் சங்ககாலத்து இருந்திருக்கின்றனர். கணம்புல்லர் என்றொரு சான்றோர் திருத்தொண்டத் தொகையுள் காணப்படுகின்றார்; ஆனால், கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லைக் கொண்டு இறைவற்குத் திருவிளக் கெரித்தார் என்றும் அதனால் அவர்க்குக் கணம்புல்லர் என்று பெயர் குறிக்கப்பட்ட தென்றும் பெரியோர் கூறுவர்.

களவுக்காட்சியால் காதலுறவு பெற்றுக் கருத்தொருமை கண்ட தலைமகன், காதலியாகிய தலைமகள் குறிப்பாற் காட்டிய உயிர்த் தோழியைக் கண்டு உரிய முறையிற் சொல்லாடி அவளைத் தன் களவொழுக்கத்துக்குத் துணையாகக் கொண்டான். பின்னர் அவளுடைய துணையால் பகற்போதில் குறியிடத்தே தலைவியைத் தலைப்பெய்து கண்டு தம் இருவர் உள்ளத்தும் நிலவிய காதலை அறம் திறம்பாது வளர்த்து வருவானாயினன். அவனுடைய அன்பொழுக்கம் தோழிக்கு ஒருபால் மகிழ்ச்சி தந்த தாயினும், வரைந்துகோடலை நினையாது களவையே அவன் நீட்டித்தது அவள் உள்ளத்துக்கு அமைதி தாராதாயிற்று. தலை மகனுடைய இயல்பும் பாடறிந் தொழுகும் பண்பும் கண்ட தோழி, அவனை நேரிற் கண்டு வாயாற் சொல்லுதலினும், சொற்பொருளை உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாற் கூறுவது கருதிய பயனை விரைவில் விளைவிக்கும் உறுதி யுடைத்து என ஓர்ந்து, அவன் குறியிடம் வருவதை எதிர்நோக்கி யிருந்தாள். ஒருநாள் அவனிடம் தன் கருத்தைக் குறிப்பாய் உரைத்தற் கேற்ற செவ்வி கிடைத்தது. தலைமகளுடைய தந்தை யும் தன்னையரும் மீன்வேட்டம் குறித்துப் பகற்போதில் கட லகத்தே சென்றிருந்தனர். தலைவன் வருவது எண்ணித் தலைவி கடற்கானற் சோலையில் அலைகள் அலைத்தலால் இடிந்த கரையையுடைய பெருந்துறையைக் குறியிடமாகக் கொண்டமை யின் அவ்விடம் வந்தாள்; அவனும் அவண் போந்து அவளை இன்புறுத்தினான். பகற்போழ்து கழியவும் மாலைப்போதில் கொக்கும் நாரையு மாகிய குருகினம் தத்தம் சேக்கை நோக்கிச் செல்லலுற்றன. அவற்றின் நிரையொழுங்கினை எண்ணிக் கொண்டே யிருந்தமையின், தலைமகட்கு மாலை மறைவதும் புலனாக வில்லை. தோழி போந்து அவ்விடத்தினின்றும் போகல் வேண்டு மெனச் செய்த குறிப்புக்கள் பயன்படவில்லை. முடிவில் அவள் தலைவனை வணங்கி, “பொழுது கழிந்தமையின் நாம் மனையகம் நோக்கிச் செல்வேம்; எழுக எனின், இவள் நின்னின் நீங்கி எம்மொடு வருதற்கு இசைகின்றா ளில்லை; நீ இங்கே இருந்தொழிக என இவளை விட்டுச் செல்லவும் யாம் மாட்டேம்; ஆகவே, எம் பாக்கத்து மக்கள் கண்டு மகிழ்ந்து ஆரவாரிக்குமாறு, நீ ஏறிவரும் இத்தேர் எம் மனைக்கண் வந்து தங்குதற்கு ஆவன செய்வாயாக” என்றாள்.

அவளுடைய இக்கூற்றின்கண், தலைமகனை வரைவுகடாத லுற்ற தோழி, இரவுப்போதில் தம்மனைக்கண் வருமாறு உலகியல் பற்றி வேண்டுமுகத்தால், ஊரவர் கண்டு போற்றும் நிலையில் வரைவொடு வருக எனக் குறிப்பாக உரைத்த மொழிநுட்பம் கண்டு வியந்த கண்ணம்புல்லனார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார்.

மணிதுணிந் தன்ன மையிரும் பரப்பின்
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை
நிலவுக்குவித் தன்ன மோட்டுமணல் இடிகரைக்
கோடுதுணர்ந் தன்ன குருகொழுக் கெண்ணி
எல்லை 1கழித்தனெம் ஆயின் மெல்ல
வளிசீத்து வரித்த புன்னை முன்றில்
கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇயர்
எழுவெனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழியெனல் ஒல்லேம்2 ஆயின் யாமத்
துடைதிரை ஒலியில் துஞ்சும் மலிகடல்
சில்குடிப் பாக்கம் கல்லென
அல்குவ தாகநீ அயர்ந்த3 தேரே

இது, தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி வரைவு கடாயது.

உரை
மணி துணிந்தன்ன மையிரும் பரப்பின் - நீலமணி மாசு நீங்கித் திகழ்ந்தாற்போலத் தெளிந்த பெரிய கடற்பரப் பினுடைய; உரவுத் திரை கெழீஇய பூமலி பெருந்துறை - பரந்த அலைகள் வந்து பொருந்துகின்ற பூக்களையுடைய பெரிய கடற்றுறைக்கண்; நிலவுக் குவித்தன்ன மோட்டுமணல் இடி கரை - நிலவொளியைத் திரட்டிக் குவித்தாற் போன்ற பெரிய மணல்பரந்த இடிகரையின் மருங்கே; கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி - சங்குகளைக் கொத்துக் கொத்தாக நிரைத்தாற் போன்ற குருகினங்களின் தொகுதியை எண்ணி; எல்லை கழித்தனெம்- பகற் போதைக் கழித்தோம்; ஆயின் - ஆகலின்; வளி சீத்து வரித்த புன்னை முன்றில் - காற்று உதிர்த்தலால் கோலமிட்டாற் போலப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் புன்னை மரம் நிற்கும் முன்றிற்கண் இருந்து; கொழு மீன் ஆர்கைச் செழுநகர் மெல்லச் செலீஇயர் - கொழுவிய மீனை யுண்டலையுடைய வளவிய மனைக்கு மெல்லச் சேறற்கு; எழு எனின் அவளும் ஒல்லாள் - எழுக எனின் அவளும் நின்னின் நீங்கி எழுதற்கு இசைகின்றா ளில்லை; யாமும் ஒழி எனல் ஒல்லேம் - யாமும் நீ ஈண்டே இருந்தொழிக என்று விட்டுச் செல்லகில்லேம்; ஆயின் - ஆதலால்; யாமத்து உடைதிரை ஒலியில் துஞ்சும் - இரவுப் போதின்கண் அலைகள் கரையொடு பொருது செய்யும் ஒலியைக் கேட்டு உறங்கும்; மலிகடல் சில்குடிப்பாக்கம் - கடற்கரைக்கண் அமைந்த சிலவாய குடிகளையுடைய எம் பாக்கத்தவர்; கல்லென - மகிழ்ச்சியால் கல்லென ஆரவாரிக்குமாறு; நீ அயர்ந்த தேர் - செல்லுதற்கென நீ பண்ணிய தேர்; அல்குவது ஆக - எம் மனைக்கண்ணே வந்து தங்குதற்கு ஆவன செய்வாயாக எ-று.

பெருந்துறை இடிகரை இருந்து குருகு ஒழுக்கு எண்ணி, எல்லை கழித்தனெம்; ஆயின், முன்றிற் செழுநகர் மெல்லச் செலீஇயர் எழு என அவளும் ஒல்லாள்; யாமும் ஒழியெனல் ஒல்லேம்; ஆயின், பாக்கம் கல்லென நீ அயர்ந்த தேர் அல்குவ தாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. மணி - நீலமணி, துணிதல் - தெளிதல், தெளிந்த நீரைத் துணிநீர் என்றல் வழக்கு, “துணிநீர் இலஞ்சிக் கொண்ட பெருமீன்”1 என்று சான்றோர் உரைப்பது காண்க. உரவுத்திரை - பரந்து செல்லும் அலை. பூக்களைத் தாங்கிய மரங்களும் செடிகளும் நிறைந்த பெருந் துறை, பூமலி பெருந்துறை எனப்பட்டது. தூய வெண்மணல் பரந்து காற்றால் குவிந்து தோன்றும் காட்சியை நிலவுக் குவித்தன்ன மோட்டுமணல் என்றார். மோடு - பெருமை, மணற்கரை யாதலின் உயரிய அலைகள் போந்து அலைக்குங் கால் இடிந்து சரிந்த கரையை மோட்டுமணல் இடிகரை என்றார். இடிகரைப் பக்கம் மக்கள் பயில வழங்குதற் காகாமை யின், பகற்குறிக்கு ஒப்பதாயிற்று. கோடு - சங்கு, மாலைப் போதில் நீலவானத்தில் கொக்கு நாரை முதலிய குருகுகள், நிரைநிரையாகத் தம்மில் தொக்கு ஒழுங்குறப் பறந்து செல்வது, வெண்சங்குகள் நிரைநிரையாகத் தொக்குத் தோன்றுவது போறலால் கோடு துணர்ந்தன்ன குருகொழுக்கு என்றார். துணர் - கொத்து, எல், பகற்போது, மெல்ல என்பதனைச் செலீஇயர் என்பதனோடு கூட்டுக. சீத்தல் - ஈண்டு உதிர்த்தல் மேற்று, புன்னை மரத்தை வளி அசைத்துப் பூக்களை உதிர்த் தலின், உதிர்ந்தவை முன்றிலை வரித்தாற் போல அழகு செய்தல்பற்றி, வளி சீத்து வரித்த புன்னை முன்றில் என்றார். நெய்தல் நிலத் தலைமக்கள் என்றற்குக் கொழுமீன் ஆர்கை என உணவு கூறினார். ஊரவர் அனைவரும் ஒடுங்கி உறங்குங் கால் திரையொலி முழக்கறாது நிற்றலின் உடைதிரை யொலி யில் துஞ்சும் என்றார்.

களவின்கண் தலைவனொடு கூடிக் காதலுற் றொழுகும் தலைமகள் பகற்போதில் அவனைக் காண்டற்குக்குறித்த இடம் கடற்கரையிடத்துப் பூமலி பெருந்துறையின் இடிகரைப்பகுதி யாதலால் அதனை யெடுத்து முதற்கண் தோழி மொழிந்தாள். பெருங்கடற்பரப்பின் உரவுத்திரை யல்லது மக்கள் எவரும் அவ்வழிப் பயில வழங்கார் என்பது தோன்ற, உரவுத் திரை கெழீஇய என்றும், ஆண்டுப் பூச் சுமந்த மரங்களும் செடி கொடிகளும் மலிந்திருப்பது விளங்கப் பூமலி பெருந்துறை என்றும், பெரிய மணல்மேட்டு இடிகரை யாதலால், அங்கு இருப்போரைப் பிறர் காண்டல் அரிது என்பது புலப்பட மோட்டுமணல் இடிகரை என்றும், அவண் நெடிது தங்கி யிருத்தல் இன்பம் பயவாமையின் குருகுகளை எண்ணிப் பகற்போதைக் கழித்தமையின், அதனை விதந்து குரு கொழுக்கு எண்ணி எல்லைக் கழித்தனெம் என்றும் கூறினாள். குருகுகளின் ஒழுங்கினை எண்ணுதற்குச் சென்ற உள்ளம், அவற்றைப் போல் யாமும் மனை சேர்தல் வேண்டும் என்று எண்ணாமை தோன்றக் குருகு ஒழுக்கு எண்ணி எனவும், அதனால் பகற்போது கழிந்தமை கூறி மனையகம் செல்லுதல் வேண்டும் என்றற்கு எல்லைக் கழித்தெனம் எனவும், பொழுது மறையுங்கால் உணவுண்பது நெய்தல் நிலத்துப் பரதவர் மரபாதலின் புன்னைமுன்றிற் கொழுமீன் ஆர்கைச் செழுநகர் எனவும் கூறினாள். “மலையின் வாயிற் பொழுது நுளையன் வாயிற் சோறு” என்பது இன்றும் தொண்டை நாட்டுக் கடற்பகுதியில் வழங்கும் பழமொழி இக்கருத்துக்கு ஏற்ற சான்றாகும். கடற்காற்றால் துப்புரவு செய்யப்பட்டுப் புன்னைப் பூக்களால் கோலமிட்டது போல வனப்புற்று விளங்குதல் பற்றி, வளிசீத்து வரித்த புன்னை முன்றில் என்றும், பிறிதொன்றின்பால் கருத்தைச் செலுத்தி யிருக்கும் தலைமகளைத் தன்பக்கம் ஈர்த்து மனைக்குக் கொண்டு சேர்க்கும் கடன்மைபற்றிக் கொழுமீன் ஆர்கைச் செழுநகர் என்றும், நம் மனைக்கு மெல்லச் செல்வாம் என வேண்டுவாள், செழுநகர் மெல்லச் செலீஇயர் எழு என்றும் தோழி கூறினாள். இவற்றைக் கேட்டும் தலைவி எழாளா யினமை தோன்ற, எழுவெனின் அவளும் ஒல்லாள் எனவும், உடன்படாதாரை ஒழித்துச் சேறல் முறையாயினும் உயிர்த் தோழியாகிய தனக்கு அஃது அறன் அன்மையின் யாமும் ஒழியெனல் ஒல்லேம் எனவும் உரைத்தாள். ஏனைத் தோழி யரையும் உளப்படுத்தற்கு யாமும் எனப் பன்மையாற் கூறி னாள். தான் பிறந்த கொழுமீன் ஆர்கைச் செழுநகரை விழை யாது நின்னோடு கூடியுறையும் இப்பெருந்துறை இடிகரை மருங்கில் எல்லைக் கழித்தும் இரவுப்போது எய்துவது கண்டும் ஆராத பெருங்காத லுடைய இவளை, நீ இனி வரைந்து கோடலே செயற்பால தென்பாள். சில குடிப்பாக்கம் கல்லென அல்குவதாக நீ அயர்ந்த தேர் என்றாள். இத னாற் பயன் தலைவன் தெருண்டு விரைய வரைவானாவது.

வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


வெள்ளூர் என்பது தொண்டைநாட்டுப் பல்குன்றக் கோட் டத்து ஊர்களுள் ஒன்று; ஊரெனப்படுபவை ஊரருகே நன்செய் வயல் கொண்டு நெல்வளம் சிறந்தவை என அறிதல் வேண்டும். வெண்பூதியாரின் தந்தையார் அந்நாளைய வேந்தர் மதித்துப் போற்றுமளவில் மேன்மையுற்றுக் கிழார் என்னும் சிறப்புப் பெற்ற பெரியவர். ஊர்க்கு ஒருவரே கிழார் என்ற சிறப்புடைய ராதலின், இப்பெரியோர்களின் இயற்பெயர்களைத் தொகைநூல் தொகுத்த சான்றோர் குறியாது ஒழிந்தனர். அதனாற்றான், கோவூர்கிழார், குன்றூர்கிழார், ஆவூர்கிழார், ஆலத்தூர்கிழார் முதலாயினா ருடைய இயற்பெயர்கள் கிடைத்தில. வெண்பூதியார் தமிழ்ப் புலமையிற் போதிய சிறப்பெய்தி நல்லிசைச் சான்றோர் நிரலுள் வைத்துப் பேணப்படும் தகுதி சான்றவர். குறுந்தொகையில் இவர் பாடிய பாட்டொன்று காணப்படுகிறது.

அதன்கண் இவர் பெயர் ஏடுகளில் வெள்ளூர் கிழார் வங்கனார் வெண்பூதியார் என்று பொறிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிக்கின்றார். எனினும், இந் நூலாராய்ச்சிக்குக் கிடைத்த ஏடுகளில் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் என்றே உளது. வெண்பூதியார் என்றொரு சான் றோர் இருத்தலின் அவரின் வேறுபடுத்தற்கு வெள்ளூர் கிழார் மகனார் என்று சிறப்பிக்கப்படுகின்றார் எனக் கோடல் வேண்டும். நற்றிணை அச்சுப்பிரதியில் இவர் பெயர் காணப்படவில்லை.

பெருமையும் உரனும் சிறப்புறக் கொண்ட தலைவன் ஒருகால் மலைச்சாரற் பூம்பொழில் ஒன்றிற்குத் தனித்துச் சென்றான்; அதன்கண் ஒருபாற் பூக்கொய்து நின்ற தலைமகளைக் கண்டான். இருவர் கண்களும் ஒருவரை யொருவர் கண்டு ஒருவாத இனியராகும் உயர்நிலைக் காதலுறவு கொண்டன. அவன் அவள் உள்ளத்தையும், அவள் அவன் உள்ளத்தையும் உரிமையிடமாகக் கொண்டனர். இங்ஙனம் காதற் பிணிப்பால் உணர்ச்சி யொத்த இருவரும் சிறிது போதிற் பிரிந்தனர். அறிவும், அறமும், அருளும், ஆண்மையும், பிறவுமாகிய நற்பண்புகளே நிறைந்து இடம் பெற்றிருந்த தலைமகன் உள்ளத்தில், புதிது புகுந்த காதற்குறிப்பு அவன் உயிரிற் கலந்து உடல்முற்றும் பரவி நரம்புக் கால்தோறும் வெம்மை விளைவித்தது. இயற்கையின் அழகும் அது நல்கும் இன்பக்காட்சிகளும், அறிவு ஆண்மைகளின் அமைதிப்பெருக்கும் அறச்செயல் மாண்பும் கண்டு இன்புற் றொழுகிய அவனுடைய அறிகருவிகள் நிலையிழந்து தடுமாற லுற்றன. அவற்றை நெறிப்படுத்தொழுகிய அவனது உள்ளம் புதிதுபுணர்ந் தொன்றிய நங்கையின் உருநலத்தை அவன் மனக் கிழியில் காட்டியவண்ணம் இருந்தது, இதனால் அவனுடைய உணர்வு, உரை, செயல் மூன்றும் அவன்வழி நில்லாமல் பிறழத் தலைப்பட்டன; அவன்பால் பேதுறவே மீதூர்ந்து நின்றது. அது கண்டான் அவனுடைய அறிவுருவாகிய பாங்கன். உற்றது வினாவி ஓர்ந்து, திண்மையின் உண்மை வடிவாய நினது உள்ளம் இளம்பெண் ணொருத்தியின் இனிய உருநலத்துக்கு இரையாகி, நிலைகலங்கி உயங்குவது ஒல்லாது எனத் தெருட்டத் தலைப் பட்டான். அவன்பால் சிதைவுற்றுத் தோன்றும் நயனும், நட்பும், நாணுமாகிய தலைமைநலங்களைத் தேர்ந்து எடுத்துப் பண்டு போல் அவன் உள்ளத்தில் நிலைபெற நிறுத்தற்கு முயன்றான். அக்காலையில் தலைமகன் தன் கருத்தில் சிதைந்தொழிந்த பண்புகளையும், அவை சிதைத்தற்குக் காரணமாக இருந்த தலைமகளின் நலத்தையும் வடித்து வனமார்பும், நுண்ணிய சுணங்கும், ஐம்பாற் கூந்தலும், திருநுதலும், குவளைப்பிணையல் போன்ற மழைக்கண்ணும் உடைய அந்த இளநங்கையைக் காண்டற்கு முன்பெல்லாம் நயனும் நண்பும், நாணும் பயனும், பண்பும் பாடறிந்து ஒழுகலும் நும்மினும் மிக வுடையேன்; இப்பொழுது காண் அனைத்தும் இலவாய்க் கழிந்தன என உரைத்தான்.

அவனுடைய உரையின்கண், இளமையுள்ளத்தின் துடிப்பும் புதுவதின் தோன்றி அவனது நினைவுமுற்றும் கவர்ந்து ஓங்கி நிற்கும் காதலுணர்வின் எழுச்சியும், அவ்விரண்டிற்கும் இடையே உண்மையறிவு நின்று, தலைவியின் உருநலத்தை ஒருபாற் காட்டி அதனால் கையற்றொழிந்த நயன் முதலாகிய நலங்களை ஒருபால் தொகுத்துக் காண்பித்து வருத்துமாறும் நோக்கிய வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார்.

நயனும் நண்பும் நாணும்நன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் நும்மினும் உடையேன் மன்னே கம்மென
எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன பொன்னேர்1 சுணங்கின்
ஐம்பால் வகுத்த தேம்பாய்2 கூந்தல்
திலகம் தைஇய திருநுதல் பொலிந்த3
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்னஇவள்
மதரரி மழைக்கண் காணா வூங்கே

இது கழற்றெதிர்மறை.

உரை
நயனும் நண்பும் நாணும் நன்குடைமையும் - நடுவு நிலைமையும் நட்பும் நாணமும் முதலியவற்றை யுடைமையால் எய்தும் நன்னெறிப் படர்ச்சியும்; பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் - அறிவும், பண்பும் உடைமையால் அவரவர் தகுதி அறிந்து இயலும் நல்லொழுக்கமும்; நும்மினும் உடை யேன் மன்னே - கழறிக் கூறும் நும்மினும் மிகவுடையனாய் இருந்தேன். காண்; கம்மென-; எதிர்த்த தித்திஏர் இளவன முலை - முற்பட மேலே பரந்த தித்தி பொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும்; விதிர்த்து விட்டன்ன பொன்னேர் சுணங்கின் - விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்; ஐம்பால் வகுத்த தேம்பாய் கூந்தல் - ஐந்து வகையாக முடிக்கப்படும் தேன் பரந்த கூந்தலை யும்; திலகம் தைஇயதிருநுதல் - திலகமிட்ட அழகிய நெற்றி யையும் உடைமையால்; பொலிந்த - பொலிவுற்றுத் தோன் றும்; இவள் - இவளுடைய; முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை - தெளிந்த நீரையுடைய பொய்கையிற் பூத்த குவளையின்; எதிர்மலர் பிணையல் அன்ன - எதிரெதிர் வைத்துப் பிணைத்த மலர்ப்பிணை போன்ற; அரிமதர் மழைக்கண் காணா வூங்கு - செவ்வரி பரந்து மதர்த்து உலவும் குளிர்ந்த கண்களைக் காணாத முன்பு எ-று.

முலையும், சுணங்கும், கூந்தலும், ஆகியவற்றாற் பொலிந்த இவள் மழைக்கண் காணாவூங்கு, நயனும் நண்பும் முதலாயின நும்மினும் உடையேன்மன்; இப்போது அவை இலனா யினேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செய்யவே, இப்போது அவை ஒழிந்தன என்பது எஞ்சி நிற்றலின், மன் ஒழியிசை என அறிக. நயன் - நடுவுநிலைமை பிறர் நலம் பேணும் தன்மை யுமாம். நாண் - தகாதன செய்தற்கும் காண்டற்கும் ஒருப் படாது உள்ளம் சுருங்குதல், நன்கு, நன்னெறி, நயன் முதலிய உடைமையின் நன்னெறிய நோக்கிச் சேறல் நன்குடைமை யாயிற்று. நன்குடைமை, மிகவும் உடையனாதல் என்றுமாம். நலம் தீங்குகளை ஆராய்ந்து தீங்குகளை விலக்கி நலங்களையே நோக்குதல் அறிவின் பயனாதலின், அறிவு ஈண்டுப் பயன் எனப்பட்டது. பண்பு - மக்கட்குரிய பண்பு, அறிவும், பண்பும் இல்வழி அவரவர் பாடறிந்து ஒழுகும் நல்லொழுக்கம் வாயாமையின் பயனும் பண்புமே கூறியொழியாது பாடறிந் தொழுகல் விதந்து கூறப்பட்டது. பாடு, தகுதி, நும்மினும் என்புழி, இன்னுருபு உறழ்ச்சிப் பொருட்டு, ‘மன்’, கழிவின்கண் வந்தது. கம்மென என்றது, ஈண்டு விளக்கமிகுதி சுட்டிற்று, தித்தி - வரிவரியாகத் தோன்றுவது, ஏர், எழுச்சி, சுணங்கு, தேமல், சந்தனக்குழம்பைக் கைவிரலால் தெறித்தாற் போலத் தோன்று தலின், விதிர்த்து விட்டன்ன பொன்னேர் சுணங்கு என் றார். சுணங்கு பொன்னிறத்தது; “பொன்னவிர் சுணங்கு” என்பது காண்க. மகளிர் கூந்தல் ஐவகையாக முடிக்கப் படுவது பற்றி ஐம்பால் வகுத்த தேம்பாய் ஓதி என்றார். “நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன, ஐவகை பாராட் டினாய் மற்றெம் கூந்தல், செய்வினை பாராட்டினையோ” என்று பிறரும் கூறுதல் காண்க. புதுநீர் தெளிவுடையது அன் மையின் தெளிவுடைய நீர் முதுநீர் எனப்பட்டது. எதிர்மலர் - செவ்வி மலருமாம்.

இன்னார் இனியார், வலியார், மெலியார், ஆடவர், பெண்டிர் என வேறுபாடு நோக்காது யார் மாட்டும் நலமே தேர்ந்தொழுகும் நேர்மை திறம்பித் தான் கண்ட நங்கை பக்கலே நினைவு முற்றும் ஒன்றி நிற்பது பற்றி நயனும், இனையர் இவர் எமக்கு, இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் ஏனோர் நட்புப் போலாது எத்துணைப் புனைந்து கூறினும் அத்துணையும் தலைவிபால் உளதாய நட்பு இன்பம் சிறப்பது கண்டு கூறலின் நண்பும், நினைக்குந் தோறும் பேசுந்தோறும் நேரிற் கண்டு, பயிலுந்தோறும் தகைமை கெடாது சால்புறுதலின் நாணும் என்பால் இல வாயின என்றான். இவ்வாற்றால் அவளை என் வாழ்க்கைத் துணையாகக் கோடற்குரிய நெறியினையே என் நெஞ்சம் படர்ந்து நிற்றலின், இதுகாறும் நிலவிய நன்னெறிப் படர்ச்சி தோன்றி என் நெஞ்சினை விலக்கிற் றன்று என்பான், நன் குடைமையும் என்னின் நீங்கிற் றென்றான். தலைமகள் பால் கருத்திழந்து கையற்று வந்த தலைமகற்கு நயனும், நண்பும் முதலாயினவற்றை எடுத்தோதி அவன் கருத்தை மாற்றித் தெருட்டலுற்ற பாங்கனுக்கு மேலே கூறியவாறு விடையிறுத்த தலைவன், நலந்தீங்குகளை நன்கு தெரிந்து இன்பப்பயனை எய்துவிக்கும் அறிவின் இயல்பு கூறி விலக்கலுற்ற பாங்கற்குத் தலைமகளைத் தன் உயிர்த்துணையாகக் கோடலால்; இன்பமும், பொருளும், அறனும், என்ற மூன்றன் பயனும் பெறலாம் எனக் காண்டலின் நீ கூறும் பயவறிவு கழிந்தது என்பான் பயனும் என்றும், தன் தகைமைக்கு இழுக்கின்றி யாவர்பாலும் எளியனாய் நன்றி புரிந்தொழுகும் பண்பு, இன்று தன் பரப்புச் சுருங்கி அந்நங்கை யொருத்தியிடமே ஒன்றி நிற்பதனால் பண்பும் என்றும், அறிவும், பண்பும் துணையாக யாவரிடத்தும் பாடறிந் தொழுகும் எனது பாடு அறிந்து அவட்கு இன்புண்டாக்கும் ஒன்றையே நினைந் தொழுகலாய் நிலவுதலின் பாடறிந் தொழுகலும் முன் போல் இன்றிக் குன்றினேன் என்றான். இவ்வாறு நயனும், நட்பும், பிறவும் நிரம்பப் பெற்றிருந்தமையின் முன்பெல்லாம் நீவிர் சூழ்ந்து கழற்றுரை நிகழ்த்து மளவு என்பால் ஒரு நிகழ்ச்சியும் தோன்றிய தில்லை; இப்பொழுது தான் அது தோன்றிற்று என்பான். நும்மினும் உடையேன்மன் என்றான். அதற்குக் காரணம் இது வென்பான், தலைமகளது உருநலத்தை எடுத்துரைக்கலுற்று, முதற்கண் அவளைக் கண்ட போது அவள் ஒரு பூம்பொதும்பரிடையே முகமும் மார்புமே விளங்கித் தோன்ற நின்றமை கண்டதனால், அவன் நோக்கிற்கு இலக்காகியன மார்பின் வனமுலையும் சுணங்கு மாகவே அவற்றையே விதந்து எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை என்றும், விதிர்த்து விட்டன்ன பொன்னேர் சுணங்கு என்றும் கூறினான். தித்தியும் சுணங்கும் கதிர்த்து விளங்கிக் கட்பார்வையை ஈர்த்து முலைமுற்றத்தைக் காட்டுவன வாகலின் முன்னும் பின்னும் அவற்றை எடுத்தோதி, இளமை யும் எழிலும் வளம்பெறக் கொண்டு பெண்மை நலத்தின் பெருமை பிறங்கும் முலையை ஏரிள வனமுலை என்றான். பெண்மை நலத்தின் பெரும்பயனாய தாய்மைப் பணிக்குத் தகவுடைய உறுப்பாய், மக்கட் சமுதாயத்தின் குழவிப்பருவத்து உடலையும், உயிரையும், உணர்வையும் ஒருசேர வளர்த் தோம்பும் முதலுணவின் முழுநிலையமாய்த் தாய்மைக் கோயி லின் மணிமுடியாய் மாண்புறுவது கருதிய பண்டைச் சான் றோர் வெறுங் காமக்கருவியாய்க் கருதாமையின் முலை என்னும் மொழியை அவையல் கிளவி என விலக்காது வழங்கினர். அதனால், நாட்டின் ஒரு சில பகுதியில் வாழும் மகளிர் மேலாடையின்றி யிருத்தலை நன்மக்கள் குற்றமாகக் கருதாராயினர்; இன்றும் மேனாட்டு இளமகளிர் முலை முகடு தோன்ற ஆடையணிவது குற்றமாக எண்ணப் படுவ தில்லை. மகளிர் வடிவம் தாய்மையின் வாய்மைத் தோற்றம் என்ற கருத்தைக் கைவிட்டுக் காமக்களிக் கருவி என்ற கருத்துப் பிற்காலத்தே பெரிதும் பரவினமையின் முலை என்னும் சொல் அவையல் கிளவியாய் விலக்கப் படுவதாயிற்று. பிற்காலக் கருத்தையே இன்றைய சூழ்நிலை பெரிதும் பேணுதலின், அதனை அவையல்கிளவியாகக் கொண்டு எழுத்திலும் சொல்லிலும் விலக்குதல் கற்றோர்க்கு முறையாகும். உலகியல் கூறிப் பொருள் இது என்று வாழ்கையறத்தைப் பல்வேறு வகையில் வகுத்து மொழிந்த திருவள்ளுவர்க்கும் இம்முறை உடன்பாடு என்பது அவர் பாடிய ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறட் பாக்களுள் இரண்டே யிடத்தில் அச்சொல்லை வழங்கி யிருப்பது வற்புறுத்துகிறது.

இனி, தான் நோக்கிய போது, தலைமகள் தலைக விழ்ந்து கூந்தல் தோன்ற நின்றமையில், ஐம்பால் வகுத்த தேம்பாயோதி என்றும், பின்னர்த் தன்னை அவள் ஏறட்டு நோக்குவான் நிமிர்ந்த பொழுது ஒளிவிட்டுத் திகழ்ந்த நுதலைத் திலகம் தைஇய திருநுதல் என்றும், இவை இரண்டாலும் முகத்தின் அழகு முழுமதி எனப் பொலிந்து விளங்கினமையின் பொலிந்த என்றும், காதற் குறிப்பால் கண்ணைப் பரக்க விழித்துக் காணும் தன் கருத்தைக் கலக்கி மகிழ்வித்தமையின் அரிமதர் மழைக்கண் என்றும், மழைக் கண் நோக்கம் பெறாமுன் நிலவிய தன் மனத்திட்பம், பெற்ற பின் நெகிழ்ந்து நீங்கினமை குறித்தற்கு, காணாவூங்கு என்றும் கூறினான். மனக்கண்ணில் அணியளாய்த் தோன்றுதல் பற்றி இவள் என்று சுட்டினான்.

“மெய்தொட்டுப் பயிறல்1” என்ற நூற்பாவில் “நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்” என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, இது நிகழ்பவை யுரைப்பது என்பர் நச்சினார்க்கினியர்.

பெருந்தலைச் சாத்தனார்


பெருந்தலை என்பது சாத்தனாரது ஊர்ப்பெயர்; பெருந் தலையூர் என்ற இவ்வூர் கோவைமாவட்டத்தில் பூவானி (பவானி) யாறு பாயும் நாட்டில் உள்ளதோர் ஊர். இது பெருந்தலை எனச் சுருங்கி நிற்கிறது; குடநாட்டு ஊர்களுள் ஒன்றான சீத்தலையூர், சீத்தலை யெனக் குறுகிக் கல்வெட்டுக்களில்2 காணப்படுவது போல இப்பெருந்தலையூரும் பெருந்தலை என வழங்கும். இஃது ஊர்ப்பெயராதல் விளங்குதற்கு முன், சாத்தனார்க்குத் தலை சிறிது பெருத்திருந்தமையின் பெருந்தலைச் சாத்தனார் எனப்பட் டார் என்றும், சீத்தலைச் சாத்தனார் என்பார். சீவடியும் புண் பொருந்திய தலையை யுடைமைபற்றிச் சீத்தலைச்சாத்தனார் எனப்பட்டார் என்றும் பலரும் கூறிவந்தனர். நெடுங்களம் என்னும் ஊரவரான பரணர் என்பவரை நெடுங்கழுத்துப்பரணர் என்றும், அவ்வூர் இறைவனை நெடுங்கழுத்து மகாதேவர் என்றும் ஏடெழுதினோர் பிழைபட எழுதினாராக, முறையே புலவரான பரணர்க்கும் இறைவனான மகாதேவர்க்கும் கழுத்து நீண்டிருந்ததாக உரைத்தோரும் உண்டு. உண்மை புலப்படும் வரையிற் பொய் பொதிந்து கொண்டிருப்பது இயல்பு.

முதிரமலைத் தலைவனான குமணனையும் கோடைமலைத் தலைவனான பொருநனையும், விச்சிமலைப் பகுதியிலுள்ள இளங்கண்டீரத்தில் வாழ்ந்த இளங்கண்டீரக் கோவையும் இப் பெருந்தலைச் சாத்தனார் பாடிச் சிறப்பித்துள்ளார். விச்சி மலை பச்சைமலை எனவும், இளங்கண் டீரம் வாளிகண்டபுரம் எனவும் இக்காலத்தே வழங்குகின்றன. வறுமைத்துன்பம் தோன்றிச் சுடச்சுட வாட்டிய போதும், சிறிதும் வாடாத பெருமிதவுள்ளமும் பெருந்தமிழ்ப் பண்பும் சிறக்கவுடையர் நம் சாத்தனார். பெருங் கொடை புரியும் வள்ளல்கள்பால் சென்ற போதும் “முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின் றீதல் யாம் வேண்டலமே” என்பதும், குமணன் வாள் தந்ததை வியந்து “பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடிழந் ததனினும் நனிஇன்னாது என, வாள் தந்தனனே தலையெனக் கீய” என்பதும் பிறவும் இவருடைய உள்ளத்தின் உயர்வை உணர்த்துவனவாம். அகநானுற்றைப் பாடிய சான்றோர் நிரலுள் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந் தலைச் சாத்தனார் என ஒருவர் பெயர் காணப்படுகிறது. அது கண்ட அறிஞர் சிலர், இப்பெருந்தலைச் சாத்தனாரை ஆவூர் மூலங்கிழார்க்கு மகனாகக் கருதுவாராயினர். பெருந்தலைச் சாத்தனாருடைய பாட்டு எனச் சங்கத் தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்களுள் “செல்க பாக எல்லின்று பொழுதே எனத் தொடங்கும் அகப்பாட்டு ஒன்றில் தான் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்ற குறிப்பு உளது; பிற எல்லாவற்றிலும் பெருந்தலைச் சாத்தனார் என்ற குறிப்பே காணப்படுகிறது. மேலும்,”செல்க பாக" என்ற அப்பாட்டின் அடியில் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருஞ்சாத்தனார் என் றொரு பாடமும் உளது. ஆக, அதுவோ இதுவோ என ஐயத்துக்கு இடனாகிய ஒரு பெயரைக் கொண்டு முடிவுகாண்டல் ஆராய்ச்சி நெறியன்மையின் பெருந்தலைச் சாத்தனாருடைய தந்தை பெயர் தெரிந்திலது எனக் கூறுவதே சிறப்பு. அச்சுப்படியில் இப் பாட்டின் ஆசிரியர் பெருந்தலைச் சாத்தனார் என்பது காணப் படவில்லை ஆராய்ச்சிக்குக் கிடைத்த ஏடுகளில் இருந்தமையின், இங்கே இது மேற்கொள்ளப்பட்டது.

கடிமணம் புரிந்து கொண்டு இல்லிருந்து நல்லறம் செய்து வருகையில் மனைத்தக்க மாண்புடைய தலைவியினுடைய மணிவயிற்றில் மகனொருவன் பிறந்து தலைமக்கள் வாழ்க்கையில் இன்பவொளி பரப்பினான். ஒருகால் நாடாளும் வேந்தன் பொருட்டுப் போர் மேற்கொண்டு மனைவிபால் விடைபெற்றுத் தலைமகன் நீங்கினான். விறல் மிக்க தன் கணவன் வினைமுற்றி வென்றிவாகை சூடி வருதலினும் தன் குடிக்கு வீறுதருவது வேறொன்றில்லை என்ற கருத்தினால் மறமாண்புடைய அம் மடந்தை அவன் பிரிவை ஆற்றி அவனைப் பற்றிய நினைவு எழும்போ தெல்லாம் புதல்வனைக் கண்டும், அவன் சொல் கேட்டும் விளையாட்டை வியந்தும் தன் மனைக்குரிய கடன் களை மகிழ்வுடன் செய்திருந்தாள். வினைமுடிந்ததும் வேந்தன் பால் விடை பெற்று அவனும் தன் மனைநோக்கி வரலானான். மேற்கொண்ட வினையை முடித்தல்லது மீளாத மீளிமை யுடையன் தன் கணவன் என்ற உறுதியுள்ளம் படைத்தவ ளாதலின் கவலை சிறிதுமின்றிக் காதல் சிறந்து மகனொடு விளையாடி மகிழ்ந்திருந்தாளாக, அந்நிலையில் வினைமுற்றி மீண்ட தலைவன், வேலேந்திய இளையர் உடன்வர மனையகம் போந்து நின்றான். அவளுடைய மெல்லியற் பொறையும் மேதகு கற்பும் மிக்க உவகை விளைவித்தன. அதனைப் பாகனுடன் சொல்லி மகிழ்வானாய், ’பாக, வேந்தன் வினை முடித்ததும், மலைச்சுனைகளில் நீலம் மலர, வேங்கை மலர்ந்து பூக்களைச் சொரிந்து விளங்கும் காட்டின்கண் மலர்களிற் படிந்து தேன் உண்ணும் வண்டினம் பறந்தோட, இளையர் ஆரவாரிப்ப, குதிரையின் குளம்புகள் வழியிலுள்ள காந்தள் மலர்களைச் சிதற, தேரின்மணி யொலிப்ப, இன்று நாம் வருதலை இவள் எங்ஙனம் அறிந்தாள்? காதல் பொங்கிய உள்ளத்தளாய், மகனுக்கு இல்லா தன கூறி இன்புறுத்துகின்றாள்; ஆகவே, இவட்கு நம் வரவைப் புள்ளினம் போந்து முற்பட உரைத்தனவோ? என்று உவகை மிகுந்தான்.

பண்டு பிரிந்த போது தெளித்துரைத்த தன் சொல்லைத் தேறியிருந்த கற்புத்திண்மை கண்டு இப்பெண்ணிற் பெருந்தக்க யாவுள என வியக்கும் தலைமகன், இவள் குறிப்பறிந்து புள்ளினம் போந்து நம் வரவு கண்டு உரைத்திருக்குமோ என்பது பெருந் தலைச் சாத்தனாரது புலமையுள்ளத்துக்கு விருந்தாயினமையின் அதனை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார்.

இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய
கண்போல் நீலம் சுனைதொறும் மலர
வீதா வேங்கைய வியனொடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய
நெடுந்தெரு வன்ன1 நேர்கொள் நெடுவழி
இளையர்2 ஏகுவனர் ஒலிப்ப வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம் பறுப்பத்
3தேர்மணி ஆர்ப்ப 4ஈங்குநம் வரவினைப்
புள்ளறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின்
5காதல கெழுமிய நலத்தள் ஏதில
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யவட்கே.

இது, வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

உரை
இறையும் அருந்தொழில் முடித்தென - வேந்தனும் மேற் கொண்டு போந்த அரிய வினையை முடித்தானாக; பொறைய கண்போல் நீலம் சுனைதொறும் மலர - மலையின்கண் கண்போலும் நீலமலர்கள் சுனைதோறும் மலர்ந்து விளங்க; வீதா வேங்கைய வியன் நெடும் புறவின் - பூக்கள் பரந்த வேங்கைமரங்களையுடைய அகன்ற நெடிய காட்டின்கண்; இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய - பூக்களிற் படிந்து தேனுண்டு இம்மென ஒலிக்கும் வண்டினம் நெருங்கிய கிளை வண்டுகளோடு நீங்கியோட; நெடுந்தெரு அன்ன - நெடிய தெருவைப் போல்; நேர்கொள் நெடுவழி - நேரிதாக வுள்ள நெடுவழியில்; இளையர் ஏகுவனர் ஒலிப்ப - உடன்வருவோ ராகிய இளைய வீரர்கள் ஆரவாரித்துச் செல்ல; வளையெனக் காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்ப - சங்குகளை யொத்த வெண்காந்தளின் வளவிய இதழ்களைக் குதிரைகளின் கவிந்த குளம்புகள் அறுத்தலால் அவை சிதற; தேர்மணி ஆர்ப்ப - தேரிற் கட்டிய மணிகள் ஒலிக்க; ஈங்கு - இப்போழ்து; நம் வரவினை - நமது வருகையை; புள் அறிவுறீஇயின கொல்லோ - புள்ளினம் போந்து கண்டு முற்படத் தெரிவித்து விட்ட னவோ; தெள்ளிதின் - தெளிவாக; காதல கெழுமிய நலத்தள் - எம்மாற் காதலிக்கப்படுவனவற்றைத் தேர்ந்தமைத்த நலத்தை யுடையளாய்; ஏதில புதல்வற் காட்டிப் பொய்க்கும் - அவற் றோடு இயைபில்லாத பொருள்களைப் புதல்வனுக்குக் காட்டி மயக்குகின்ற; திதலை அல்குல் தேமொழியவட்கு - தேமல் பரந்த அல்குலையும் தீவிய சொற்களையுமுடைய இவட்கு எ-று.

இறை முடித்தென, புறவின் பறவை ஈண்டு கிளை இரிய, நெடுவழியில் இளையர் ஒலிப்ப, காந்தள் வள்ளிதழ் கவி குளம்பு அறுப்ப தேர்மணி ஆர்ப்ப ஈங்கு நம் வரவினை, நலத்தளாய், பொய்க்கும் தேமொழியவட்குப் புள் அறிவுறீ இயின கொல்லோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குறிஞ்சி முதலாகச் சொல்லப்படும் ஐவகை நிலத்து வேட்டுவர் முத லாக வுள்ள திணைநிலை மக்களுள் உயர்ந்தோர், அடியோர், வினைவலர், ஏவலர் எனப் பலர் உண்டு. உயர்ந்தோர் என்பவர் அரசர். அந்தணர், வணிகர், வேளாளர் என நால்வகையின ராவர்; உயர்ந்தோரை நோக்க அடியோரும் வினைவலரும் ஏவலருமாகிய மூவரும் கீழோரென்றும் பின்னோ ரென்றும் கூறப்படுவர். மேலோர் கீழோர் என்னும் வேறுபாடு அவரவர் செயற்சிறப்புப்பற்றி உளதாகலின், மேலோராகும் முறைமை வேட்டுவர் முதலாக வுள்ள திணை நிலை மக்கட்கும் உரிமை யாகும் என்பார். “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே1” என்று தொல்காப்பியனாரும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்2” எனத் திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க. முல்லைத் திணை நிலை மகன் செய்தொழிற் சிறப்பால் உயர்ந்தோ னாகலின், வேந்தன் பொருட்டு வினைவயிற் பிரிந்து சேறல் முறையாயிற்று, “வேந்து வினை இயற்கை வேந்தனின் ஒரீஇய, ஏனோர் மருங் கினும் எய்திடன் உடைத்தே3” என்று ஆசிரியர் கூறுவது காண்க. பகைவினை தணித்து நாட்டில் நல்வாழ்வு நிகழ் தற்குரிய தொழிலாதல் பற்றி, வேந்தனோடு சென்று முடித்த தலைவன் செய்வினையை அருந்தொழில் என்றார். முடித் தென என்றது. காரியமாகிய விடைதந்தமை குறித்து நின்றது. முல்லையும், குறிஞ்சியும் முறையே மணந்து கிடந்த நாடு என்றற்கு மலையிடத்துச் சுனைகளையும், மலைக் காட்டிடத்து வேங்கை மரங்களையும் விதந்து கூறுகின்றார். மலர்களிற் படிந்து தேன் உண்ணும் வண்டினம் களிப்பால் இமிர்தல் இயற்கையாதலின், அக்குறிப்புத் தோன்ற இம்மென்பறவை என்றும், தேனீக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் இயல் பின வாதலின் ஈண்டுகிளை என்றும் கூறினார். பறவை தேனீட்டும் ஈயும் வண்டும் சுரும்பும் பிறவுமாம். “தாதுண் பறவை பேதுறல் அஞ்சி4” எனப்பிறரும் வழங்குதல் காண்க. வளைவு நெளிவின்றி நேர்கோடு கிழித்தாற் போல இருப்பத னால், நேர்கொள் நெடுவழி என்றார். அவ்வாறு இல்வழி, குதிரை பூட்டிய வினைமாண் நெடுந்தேர்கள் விரைந்து சேறல் இயலாதென அறிக. இளையர் என்றது இளையரான போர் மறவரை, வினைமுற்றி வீடுநோக்கி வருதலின் உள்ளத் தெழுந்த கிளர்ச்சி காரணமாக ஆரவாரித்தல் அவர்க்கு இயல்பு. வெண் காந்தட் பூவின் இதழ்கள் சிதறி வீழ்வன சங்குகள் போலத் தோன்றுதலின் வளையெனக் காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்ப என்றார். வெண்டா மரைகள் சிதறித் தோன்றுவனவற்றைத் திருத்தக்க தேவர், “சங்குடைந் தனைய வெண்டாமரைமலர்5” என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது வளைந்த வாயையுடைய வள்ளத்தைக் கீழே கவிப்பது போலக் குதிரையின் குளம்பு நிலத்திற் பதிவது பற்றிக் கவிகுளம்பு என்றார். “விரியுளை நன்மான் கவிகுளம்பு பொருதகன்மிசைச் சிறுநெறி1” எனப் பிறரும் கூறுதல் காண்க. காதல, காதலர் விரும்பும் பொருளும் விருந்து செய்தலுமாம்; “காதல காதலர் அறியாமை யுய்க்கிற்பின், ஏதில ஏதிலார் நூல்2” என்பதனானும் இப்பொருண்மை அறியப்படும் ஏதில - இயைபில்லாதன.

முறைசெய்து உலகு புரக்கும் மன்னன் இறையெனக் கருதப்படுவதனால் அவன் பொருட்டு வினைமேற்கொண்டு சேறல் உயர்நிலை மக்கட்கு உரிய கடனா மென்பது பற்றிக் காதலியைப் பிரிந்து சென்றான். தலைவன், வினைமுடியுங் காறும் வினைக்குரியனவே நினைந்திருந்தமையான் அதன் முடிவில் அவளது காதன்மை மனத்தின்கண் எழுதல் கண்டு இறையும் அருந்தொழில் முடித்தென என்றான். வேந்தன் மேற்கொண்ட தொழில் அவனது குடைநிழற்கீழ் வாழும் பலகோடி மக்களின் வாழ்க்கைநலம் கண்ணிய அருமையுடை மையின் அருந்தொழில் என்றும், அதனை முடித்தல்லது மீளுதல் ஆண்மையுடையார்க்கு அற மன்மையின் முடித்தென என்றும் எடுத்து மொழிந்தான். முடித்தல், ஈண்டு வினை முற்றியபின் அவரவர்க்கும் விடைதருதல் மேற்று, கார் கால வரவு வினைக்கு இடையூறாதல் பற்றி, அது வருமுன் முடித்தல் வேண்டுமென வரைந்து கொண்டு அவ்வாறே முடித்தமை தோன்ற, மலைச்சுனைகளில் நீலம் மலர்தலும் வேங்கை மலர்தலுமாகிய கார் வரவுக்குரிய குறிப்புக்களை உரைக் கின்றான். வேங்கை கார்வர மலரும் என்பதை “மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண்3” என்பதனா லறிக. தேர்மணியின் ஒலியும், குதிரைகளின் விரைவும் இளையரின் ஆரவாரமும் கேட்டலின், பூக்களிற் படிந்து தேனுண்ணும் வண்டினம் கிளையுடனே நீங்கிப் பறப்பது கண்டு இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய என்றும், தேரும் மாவும் இளையரும் வழங்குதலின் நெடுந் தெரு வன்ன என்றும், கயிறு பிடித்தாற் போல வழியும் நேராகக் கிடந்தமைக்கு வியந்து நேர்கொள் நெடுவழி என்றும், செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு மீளும் இளையர் உள்ளம் தத்தம் மனைநோக்கிச் செல்லும் மகிழ்ச்சி மிகுதலினால் ஆரவாரித்தலின் இளையர் ஏகுவளர் ஒலிப்ப என்றும், காட்டுவழியாதலின் தேரின் அசைவு மிக்கிருத் தலால் மணியோசை இடையறா தெழுதலின் தேர்மணி ஆர்ப்ப என்றும் சிறப்பித்தான். “வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக1” என்றும், “வினைகலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து மாலை அயர்கம் விருந்து2” என்றும் வினையிடத்துப் பெறும் வெற்றியையே விரும்பித் தன் பிரிவால் உளதாய துன்பத்தைப் பொறுத்து விருந்தயரும் தலைமகளின் பெருந் தகுதி கண்டு உவகை மிகுதியால் மயங்கி காதல கெழுமிய நலத்தள் என்றும், தந்தையைக் காட்டெனக் கேட்கும் புதல் வற்கு இயைபில்லாத விளையாட்டுக் கருவிகளைக் காட்டு முகத்தால் பொய்யாயின கூறி அவன் கருத்தை மாற்ற முயல் வது கண்டு ஏதில புதல்வற் காட்டிப் பொய்க்கும் என்றும், மகனைக் கையி லேந்தி நிற்றலின் அடிவயிறு தோன்றி ஆங்குப் படர்ந்திருக்கும் திதலையைக் காட்டக் கண்டு திதலை யல்குல் என்றும், ஆண்டு அவள் வழங்கும் சொற்களின் இனிமை நலத்தை வியந்து தேமொழியவட்கு என்றும், உள்ளத்திலும் முகத்திலும் ஒரு சிறிதும் வாட்டமின்றி மலர்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்கித் திகழ்வது கண்டு ஈங்குநம் வரவினைத் தெள்ளிதின் புள் அறி வுறீஇயின கொல்லோ என்றும் கூறினான். தன்பிரிவாற் குன்றாத காதலால் கற்பும், கெழுமிய நலத்தளாதலால் காமமும், ஏதில புதல்வற் காட்டுதலால் நற்பா லொழுக்கமும், அல்குலும் தேமொழியும் உடைமை யால் மெல்லியற் பொறையும் விளங்குதல் கண்டு, கற்பால் திண்ணிய மகளிர்க்கு மாவும், புள்ளும், மழையும், பிறவும், அவர் மேவன செய்யும் என்பது பற்றித் தனக்குள் வியப்பவன், அதனை வெளிப்படப் பாகற்குக் கூறல் தனக்குத் தகவன் மையின், பிரிந்தார் வரவு நோக்கி யிருக்கும் மகளிர், கூட லிழைத்தலும் புள்ளோர்த்தலும் பண்டை மரபாதலின், அதன்மே லேற்றி புள்அறிவு உறீஇயின கொல்லோ எனப் பாகற்கு மொழிந்தான் என்க. இனி, வினை முடிவில் தன் வருகை அறிவிப்பான் விடுத்த இளையர் தான் வந்தபின் வந்தமை கண்டு தன் வரவினை முன்னறிந்து, காதல் கெழுமிய நலத்தளாய் மனமகிழ்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு தன் மனையாட்டி தன்னை வரவேற்றதுகண்டு வியந்து புள் அறிவுறீஇயின கொல்லோ என்றான் என்றுமாம். வர வினைத் தெளிய உணர்ந்தாலன்றிக் காதல் கெழுமிய நலத் தளாதல் கூடாமையின் தெள்ளிதின் என்பது கூறல் வேண் டிற்று. இது கேட்கும் பாகன் தேரை விரைந்து செலுத்துவா னாவது பயன்.

நெய்தல் தத்தனார்


இவர்பெயர் அச்சுப்பிரதியில் காணப்படவில்லை யாயினும் இந்நூலாராய்ச்சிக்குக் கிடைத்த இரண்டு பழைய ஏடுகளிலும் காணப்படுகிறது. இவ்வாறே அச்சுப்பிரதியில் காணப்படாது இந்நூற்கண் காணப்படும் ஆசிரியர் பெயர்கள் ஏடுகளிற் காணப் பட்டவை யெனக் கொள்க. இவரைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் முன்பே கூறப்பட்டன.

தலைமக்களின் புதுமணவாழ்க்கையில் தலைமகன் கடமை குறித்து தலைவியிற் பிரிந்து செல்ல வேண்டிய நிலை யொன்று பிறந்தது. அவன் செல்லும் வழி மிகவும் கடுமையான சுரங்களினூடே அமைந்தது; அதனைத் தலைமகள் அறிந்தாள்; சுரத்தின் கொடுமை அவளது உள்ளத்தின் அமைதியைக் கெடுத்து அலமரலை உண்டு பண்ணிற்று. கடமையின் சிறப்புணர்ந் தமையின் சேறல் வேண்டாவெனத் தடுத்தல் காதலறத்துக்கு மாண்பன்மையும் அவட்கு விளங்கிற்று. தலைமகனை நெருங்கித் தன்னையும் உடன்கொண்டு செல்லுமாறு அவள் இரந்து நிற் பாளாயினள். மனைவாழும் ஆடவர் கடமை குறித்து நிகழ்த்தும் பிரிவுகளில் காதன்மகளிர் உடன்வரச் சேறல் கடமை வினை இனிது முடிதற்கு இடையூறாகும் என்று அந்நாளைய அறநூல் அதனை விலக்கிற்று; எனினும் காதன் மிகுதியால் கையற்று வருந்திய அவள் கருத்துக்கு அறநூலின் விலக்குவிதி அத்துணை வன்மையுடையதாகத் தோன்றவில்லை. மனை முற்றத்தில் மேயும் புறாக்கள் மாலைப்போதில் பெடையும் சேவலுமாய் அன்பாற் பிணிப்புண்டு இனிதிருப்பது காட்டி “இத்தகைய மாலைப்போது தோன்றி என்னை வருத்துமாகலின் யான் தனித்திருந்த லாற்றேன். என்னையும் உடன்கொண்டே செல்க” எனக் கண்ணீர் சொரிந்து கவன்று உரைத்தாள். அவளை அன்பு கனியப் புல்லிய அந்த ஆடவன், “பெரிய பொருளுடை மையால் நெடும்புகழ் படைத்த நின் தந்தையின் பெருமனையில் தாயின் அன்பு நிழலில் வளர்ந்த மிக்க இளமையுடையை; ஆதலின், சுரத்தின் செலவருமையை அறியாய்; ஆகலாற்றான், சுரநெறியை வெறாது கூறுகின்றாய்; இற்றி மரத்தின் நிழலில் உறங்கும் பிடியானையின் காலை, அம்மரத்தின் வீழ்து, இடை யற்று வீழ்ந்த ஊசற் கயிற்றைப் போலக் காற்றில் அசைந்து மெல்ல வருடும் கொடிய வழியின்கண் நீ வருதல் உனக்கு அமையாதே என வருந்துகின்றேன், காண்” எனத் தேற்றுவானாயினன்.

அவனுடைய உரையின் கண், தந்தையின் நீடுபுகழையும் தாயின் அன்பையும் விதந்து கூறி, அவர்களின் கடமையுணர்வே அவர்கட்கு அந்த ஏற்றத்தைப் பயந்தது என்று உணர்த்தி, “அவரது செல்வ வாழ்வில் திளைத்து வளர்ந்தமையின், சுரங்களின் உண்மையும் அவற்றின் செலவருமையும் பிறவும் நீ அறியா யாயினை; அன்றியும், அவ்விருவர் அன்பையும் யான் ஒருவனே மேற்கொண்டு நின்னைப் பேணும் இயல்பினே னாகலின் நீ சுரத்தின்கண் வருதற்கு யான் அச்சமும் அவலமும் கொண்டு வருந்துகின்றேன்” என்றும், எனவே நீ நின் தாய்போல மனைக்கண் இருந்து செய்வன செய்க; யான் குறித்த பொழுதில் வினைமுற்றி மீள்வல்" என்றும் கூறியது நெய்தல் தத்தனார்க்கு இன்பம் செய்தமையின், அதனை இப்பாட்டின்கண் வைத்து அழகுறப் பாடுகின்றார்.

மனையுறை புறவின் செங்காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேரப்
புலம்பின் றம்ம1 புன்கண் மாலை
தனியே இருத்தல் ஆற்றேன் என்றுநின்
பனிவார் உண்கண் பைதல கலுழ
நும்மொடு வருவல் என்றி எம்மொடு
பெரும்பெயர்த் 2தந்தை நெடுநகர் நீடுபுகழ்
யாயொடு நனிமிக மடவை முனாஅது
வேலின் இற்றி 3தோயா நெடுவீழ்
4அறுநார் ஊசலிற் கோடை தூக்குதொறும்
துஞ்சுபிடி வருடும் அத்தம்
5அஞ்சுவல் வருதல் ஒல்லுமோ நினக்கே.

இஃது, 1உடன்போதுவல் என்ற தலைமகட்குத் தலைவன் சொற்றது.

உரை
மனையுறை புறவின் செங்காற் பேடை - மனையின்கண் வாழும் புறாவினது சிவந்த காலையுடைய பேடையாகிய; காமர் துணையொடு - அழகிய தன் வாழ்க்கைத்துணையோடு; சேவல்சேர - சேவற்புறா வந்து சேரக் காண்டலால்; புன்கண் மாலை புலம்பின்று - புல்லிய மாலைப்போது என் தனிமையைப் புலப்படுத்தி வருத்துமாகலின்; தனியே இருத்தல் ஆற்றேன் - இம்மனையின்கண் யான் தனித்து இருக்ககில்லேன்; என்று -; பனிவார் உண்கண் பைதல கலுழ - குளிர்ந்த நீண்ட மையுண்ட கண்கள் துன்ப நினைவுகளால் கலங்கி நீர்சொரிய நின்று; நும்மொடு வருவல் என்றி - நும்மோடே வருகுவென் என்று சொல்லுகின்றாய்; பெரும்பெயர்த் தந்தை - மிக்க பொருளை யுடைய நின்தந்தையின்; நெடுநகர் நீடுபுகழ் யாயொடு நனி மிக மடவை - பெருமனையின்கண் இருந்து மனையறத்தால் நீண்ட புகழ்படைத்த தாயின் அன்பு நீழலில் வளர்ந்ததனால் நீ மிகமிக இளமையும், மடமையும் உடையையாவாய்; முனா அது - வெறுப்பின்றி; வேலின் இற்றி - வேற்படைகளால் அமைத்த கிடுகுபோல நிற்கும் இற்றிமரத்தினுடைய; தோயா நெடுவீழ் - நிலந்தொடாத நீண்ட வீழ்து; அறுநார் ஊசலின் - அற்றுத் தொங்கும் ஊசலின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு போல; கோடை தூக்குதொறும் - கோடைக் காற்றுப் போந்து அசைக்கும்தோறும்; துஞ்சிபிடி வருடும் அத்தம் - தரையிற் கிடந்து உறங்கும் பிடியானையின் உடம்பைத் தடவும் சுரத்தின் கண்; எம்மொடு வருதல் நினக்கு ஒல்லுமோ - எம்மோடே வருவது நினக்கு இயலாது; அஞ்சுவல் - அதனாலன்றே யான் பெரிதும் அஞ்சுகின்றேன். எ-று.

புன்கண்மாலை புலம்பின்று. அம்ம, தனியே இருத்த லாற்றேன் என்று, உண்கண் பைதல கலுழ, நும்மொடு வருவல் என்றி; தந்தை நெடுநகர் யாயொடு வளர்ந்தமையின் நனிமிக மடவை; அத்தம் முனாஅது வருதல் நினக்கு ஒல்லுமோ, அஞ்சுவல் காண் என்று கூட்டி வினை முடிவு செய்க. செல்வர் மனைகளில் புறாக்களை வளர்த்தல் பண்டைத் தமிழகத்தின் மரபு; பெருமனைகளின் நெடுநிலைச் சுவரில் அமைக்கப்படும் சாளர நிரைகட்குப் புறாக்கூடு என்றும், புறவுநிரை மாடம் என்றும் பெயர் வழங்குகின்றனர்; “மனையுறை புறவின் செங்காற் சேவல், துணையொடு குறும்பறை பயிற்றி மேற் செல7” என்பதும், “குறுநடைப் புறவின் செங்காற்சேவல், நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும்”2 என்பதும் காண்க. பேடையாகிய துணையெனக் கூட்டுக. காமம் மருவிய துணை, காமர் துணையாயிற்றென்பாரும் உண்டு. ‘அம்ம’, உரையசை தனித்துறையும் மகளிர்க்கு இன்பம் செய்யாமை பற்றி, பக லொளி குன்றிய மாலை புன்கண்மாலை எனப்படும். பைதல், துன்பம். என்றி, என்று சொல்லுகின்றாய்; முன்னிலை யொருமை முற்றுவினை, பெரும்பெயர் என்ற விடத்துப் பெயர் என்றது பொருளை; பெரும்பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ3" என்று பிறரும் கூறுதல் காண்க. புகழ்புரிதல் இல்லுறை மகளிர்க்கு நல்லறமாதலின் நீடுபுகழ் யாய் என்றார், “புகழ்புரிந் தில்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறு போல் பீடு நடை”4 என்று சான்றோர் கூறுவர். மடவை, அறியாமையுடையை, மிக்க இளமையுடைய என்றுமாம். முனாஅது வருதல் எனக் கூட்டுக. முனையது முனாஅது என வந்தது என்றலும் ஒன்று. வேலின் இற்றி, வேற்படைகளை வேலி போலச் சுற்றிலும் அமைத்தாற்போல வீழ் இறங்கி நிற்கும் இற்றிமரம். உடைவேல மரத்தைப்போல தழைத் துள்ளமை தோன்ற வேலின் இற்றி என்றாரென்றலு மொன்று ‘இற்றி’, இந்நாளில் இத்திமரம் என வழங்கும். கயிறற்றமை யால் ஊசல் நீங்க, கயிறு மட்டில் தொங்கி நிற்கும் திறத்தை அறுநார் ஊசல் என்று கூறினர். நெடுவீழ் வருடும் அத்தம், அத்தம் வழி.

பிரிவுரைக்கும் தலைமகற்குத் தான் தனித்திருக்க மாட்டாமை உணர்த்தற்குரிய ஏதுவாக மாலைப் போது செய்யும் நோயினை எடுத்துரைக்கும் தலைமகள், புலம்பின்று அம்ம புன்கண்மாலை என்றாள். பேடையாகிய துணையுடன் சேவற்புறா சேரக் காணுமிடத்துப் பிரிந்துறையும் தனக்குக் காதலனைப்பற்றிய நினைவு தோன்றி வருத்தும் என்பது தோன்றச் செங்காற் பேடைக் காமர் துணையொடு சேவல் சேர என்பது ஏதுவாயிற்று. தனித்திருக்க மாட்டாமையை உரைக்குமிடத்துப் பிரிவுத்துன்பம் மிக்கு நின்று வருத்தின மையின், அது கண்ட தலைமகன் பனிவார் உண்கண் பைதல கலுழ என்றான். பொருள்வினைகளிற் பிரிவோர் மகளிரொடு சேறல் வழக்கன் றாயினும், தலைமகள் உடன்வருகுவல் என்று கூறுதலைக் கொண்டெடுத்து மொழிந்து, நும்மொடு வருகு வல் என்றி என்றும், இவ்வாறு நீ கூறுதற்கு ஏது நின் மடமை யன்றி வேறன்று என்பான். நனிமிக மடவை என்றும் கூறி னான். தந்தையின் செல்வமிகுதியும் தாயின் அன்பு மிகுதியும் காடு, மலை, சுரம் முதலியவற்றின் கொடுமையை அறியாமல் தடுத்துவிட்டன என்பான், பெரும்பெயர்த் தந்தை என்றும், நீடுபுகழ்யாய் என்றும் சிறப்பித்தான். பொருள்வினை குறித்து ஆடவர் பிரிதல் பெரும்பொருள் ஆக்கத்துக்கும் நீடுபுகழ் வளர்த்தற்கும் ஏதுவாதலை நோக் காது, தனியே இருத்தல் ஆற்றேன் என்றதும் நும்மொடு வருவல் என்றதும் மிக்க இளமையால் உளதாகும் அறியாமை யின் பாற்படும் என்பான், நனிமிக மடவை என்றான். இற்றி யின் நிலம் தோயாத நெடுவீழ் கோடைக்காற்றால் பிடி யானையை வருடி அதன் உறக்கத்தைக் கெடுப்பதுபோலச் சுரத்தின் அருமையும் கொடுமையும் அறியாத நின்வரவு யான் மேற்கொண்ட செலவுக்கு இடையூறாகுமாகலின் நீ வருதல் கூடாது என்பான். இற்றி நெடுவீழ் துஞ்சுபிடி வருடும் அத்தம் வருதல் ஒல்லுமோ நினக்கு என்றும், மேலும் நின்வரவால் பொருளும் வினையும் கெடுமென அஞ்சு கின்றேன் என்பான் அஞ்சுவல் என்றும் கூறினான். இதனால் தலைவி அறிவு தெளிவுற்று ஆற்றியிருப்பாளாவது பயன்.

தாயங்கண்ணனார்


இவர் தாயன் என்பார்க்கு மகனாதலால் தாயங் கண்ண னார் எனப்படுகின்றார். எருக்காட்டூர் என்ற ஊர்ப்பெயராற் சிறப்பிக்கப் பெற்ற தாயங்கண்ணனார் ஒருவர் தொகைநூல்களுள் காணப்படுதலால் இவர் அவரின் வேறாதல் பெறப்படும். திரு. அ. நாராயணசாமி ஐயர் இருவரையும் ஒருவராகவே கருதுகின்றார். தாயன் என்பது மக்கட்பெயர்களுள் ஒன்று. சிவநெறித் திருத்தொண்டருள்ளும் அரிவாள் தாயனார் என ஒருவர் இருத்தலை யாவரும் நன்கறிவர், இந்நாளிலும் மக்கட்குத் தாயப்பன், தாயம்மை எனப்பெயரிடுவது உண்டு; இவர் பாடியனவாக அகத்திலும் குறுந்தொகையிலும் பல பாட்டுக்கள் உள்ளன.

தலைவனான எழினியின் ஏவலை மேற்கொண்டு சென்ற மறவர் வேற்றுநிலம் சென்று ஆவினம் கவர்ந்து வரும் திறத்தை யும், ஓங்கு வெள்ளருவி வேங்கடமலை விறற்போர்த் தொண்டை யர்க்கும், கொல்லிமலை சேரர்க்கும் உரியவானதும், காவிரியின் காவலரான சோழர்க்கு உறையூர் சிறந்து விளங்குதலையும் தாயங்கண்ணனார் சிறப்பித்துக் கூறுவர். செவிலித் தாயரை “ஈனாத் தாயர்” என்று செப்புவர்; வண்டினம் வேங்கைப் பூவின் தாதூதிக் காந்தட்பூவில் உறங்குமென்பாராய், “குறுஞ் சிறைப் பறவை, வேங்கை விரியிணர் ஊதிக் காந்தள் தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை இருங்கவுட் கடாஅங் கனவும்’ என்பதும் பிறவும் மிக்க இலக்கிய இன்பம் தருவன. வடுகர் நிணங் கலந்த சோறுண்பர் என்பதை இவர் சிறந்தெடுத்துக் கூறுவது நன்கு ஆராயவேண்டிய தொன்று.

கற்பும் பொற்பும் நற்பால் ஒழுக்கமும் ஒருங்கு பெற்ற உயர்நிலைத் தலைமகளைக் களவிற் கண்டு காதலுறவு கொண்ட தலைமகன், அவ்வுறவு மாட்சியுறுவது கருதி வரைவினை நீட் டித்து இரவினும் பகலினும் குறியிடம் போந்து தலைமகளைத் தலைக்கூடி இன்புற்றுவந்தான்; சின்னாள் கழிந்ததும், ஊரவ ரெடுக்கும் அலர்க் கஞ்சிய தோழி பகல் வந்தானை இரவின்கண் வருவித்தாள். பின்பு, இரவுக்காலத்துக் காவலருமையும் இல்லின் கண் அமைந்த காப்புமிகுதியும், தலைமகன் வரும் வழியின் கொடுமையும் கூறித் தலைமகனை விரைய வரைந்துகொள்ளு மாறு குறிப்பாகப் பன்முறையும் தோழி அவனை வற்புறுத்தினாள். தலைமகன் காதல் முறுகிப் பெருகுவதையே எண்ணிக் களவு நெறியையே நீட்டித்து வந்தான். பின்னர்த் தலைமகன் செய்த இரவுக்குறிகளை வேறுவகையாக எண்ணியதனால், கூட்டம் பெறுவான் விழைந்து போந்த தலைமகன் பெறாது செல்ல வேண்டிய நிலைகள் உண்டாயின. அவ்வாற்றால் வரைதலே செயற்பாலதெனத் துணிந்தான். பின்பு, தலைவியின் பெற்றோர் பால் சான்றோர் சிலரை விடுத்து மணவினைக்குரிய முயற்சியை மேற்கொண்டான். தலைமகனுடைய தலைமை நலங்களைக் கேட்டறிந்து தெளிந்தபின் அவர்கள் மகட்கொடை நேர்ந்தனர். தலைமகன் சான்றோர் சூழத் தலைவியின் செல்வப் பெரு மனைக்கு வரைதல் குறித்து ஊரவர் காணத் தேரூர்ந்து வர லானான். அவன் வரைவொடு வருதலை அறிந்த தோழி கழி பேருவகை கொண்டு தலைமகட்கு உரைக்கலுற்றாள். தலைமகள் முன்னின்று தலைமகன் நின்னை வரைந்துகொள்வான் வரு கின்றான் எனல் சீரிதன்மையின், அவள் தானே உய்த்துணர்ந்து கொள்ளுமாறு, தோழி, தலைமகனுடைய குதிரைகள் நுண் மணலை அள்ளித் தூவும் ஊதைக்காற்றுடனே நிலவுபோல் பரந்த மணற்பரப்பில் கழுத்திற் கட்டிய மணிநிரையொலிப்ப இர வென்றும் பகலென்றும் பாராது ஓயாத செலவு வரவுகளால் என் நெஞ்சம் போல இன்றுகாறும் அலைந்தன; அளிக்கத்தக்க அவை இனி அஃது இன்றித் தம்மிடத்தே இருந்து களைப்பாறி இன்புறும் காண்" என்று மொழிந்தாள்.

தோழியினது இவ்வுரையின்கண், தலைமக்களது களவு வாழ்க்கையின் இயல்பும், தலைமகன் தெருண்டு வரைந்து கொள்ள ஊரவர் காண வருவதும், அது குறித்துத் தோழியின் நெஞ்சு பட்டபாடும் சுருங்கிய முறையில் அழகுற அமைந் திருப்பது கண்ட தாயங்கண்ணனார் இப்பாட்டின்கண் அதனை வைத்து அழகுறக் கூறுகின்றார். இதன் பிற்பகுதி ஏடுகளில் சிதைந்துள்ளது.

உயிர்த்தன ஆகுக, அளிய நாளும்
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கிசை இனமணி கைபுணர்ந் தொலிப்ப
நிலவுத்தவழ் மணற்கோ டேறிச் செலவர
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி
1வருந்துமன் அம்ம தாமே 2பெருந்தாள்
நீனிறப் 3புன்னை வரித்த முன்றில்
வான 1மூழ்கி வயங்கொளி 2நெடுஞ்சுடர்க்
கதிர்சாய்ந்3 தொழுகுங் கனலி ஞாயிற்று
4வைகுறை வனப்பின் தோன்றும்
கைதையங் கானற் றுறைவன் மாவே
இது வரைவு மலிந்து சொல்லியது.

உரை
உயிர்த்தன ஆகுக - களைப்பு நீங்குவன வாகுக; அளிய - அளிக்கத்தக்கன வாகலின்; நாளும் - நாடோறும்; அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு - நுண்ணிய மணற்பொடியை முகந்து தூவுதல் அமையாத ஊதைக்காற்றில்; எல்லியும் இரவும் என்னாது - பகலென்றும் இரவென்றும் கருதாமல்; கல்லென-; கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப - ஒலிக்கின்ற மணிகள் நிரல்படக் கோத்து இருபக்கத்திலும் கட்டப்பட்டவை ஒருசேர ஒலிக்க; நிலவுத்தவழ் மணற்கோடு ஏறிச் செலவர - நிலவு போலும் ஒளி தவழும் மணல்மேட்டில் ஏறியும் இழிந்தும் செல்வதும் வருவது மாகிய செயல்களால்; இன்று என் நெஞ்சம் போல - இப்பொழுது என்னுடைய நெஞ்சம் தலைவன்பாலும் நின்பாலும் இயங்கி அலமருவது போல; தொன்றுநனி வருந்துமன் - பண்டு தொட்டே மிகவும் வருந்தின, இனி அது கழிந்தது காண்; அம்ம-; பெருந்தாள் நீல் நிறப் புன்னை - பெரிய தாளையும் கரிய நிறத்தையு முடைய புன்னை மரத்தின்; வரித்த முன்றில் - பூக்கள் உதிர்ந்து அழகு செய்தாற் போன்றுள்ள கடற்றுறையின்கண்; வானம் மூழ்கி வயங்கொளி நெடுஞ்சுடர் - வானத்தே ஆழ்ந்து விளங்குகின்ற ஒளி பொருந்திய சுடரையுடைய; கதிர் சாய்ந்து ஒழுகும் கனலி ஞாயிற்று - கதிர்க் கற்றை சாய்ந்து மறைந் தொடுங்கும் கனலியாகிய படுஞாயிற்றின்; வைகுறை வனப்பின் தோன்றும் - கூரிய கீற்றுப்பகுதியின் வடிவு கொண்டு தோன்றும்; கைதை யங் கானல் துறைவன்மா - தாழைகளை யுடைய கானற்றுறை யினையுடைய தலைமகனுடைய குதிரைகள் எ-று.

துறைவன் மா, எல்லியும் இரவும் என்னாது, கல்லென மணியொலிப்ப, கோடேறிச் செலவர, நெஞ்சம் போலத் தொன்று நனிவருந்துமன்; இனி உயிர்த்தன வாகுக, அளிய எனக் கூட்டி வினைமுடிவு செய்க, உயிர்த்தல் - அயர்வு போக்கல், அயிர்த்துகள் - கடற்கரை யிடத்து வெண்மணலின் நுண்பொடி. ஊதை - கூதிர்க்காலத்து வீசும் குளிர்காற்று. எல்லி - பகற்போது, கல்லென - கம்மென என்றாற் போல வரும் குறிப்பிசைமொழி, கறங்கிசை இனமணி - குதிரைகளின் கழுத்தின் இருபக்கத்திலும் தார்போலத் தொடுத்து அணியும் மணி; ஏனை மாணிக்கமணி முதலியவற்றின் நீக்குதற்குக் கறங்கிசை இனமணி எனச் சிறப்பித்தார். கை, பக்கம், நிலவு, நிலவுபோலும் வெண்மையான ஒளி, மணற்கோடு, மணல் மேட்டின் உச்சி, களவொழுக்கம் தொடங்கிய அன்று தொட்டே என்றற்குத் தொன்று என்றார். பெரிய தாளையும் கரிய கொம்புகளையும் உடைமைபற்றிப் பெருந்தாள் நீனிறப் புன்னை என்றார். நீல வானமும் நெடுங்கடல்போல் அளப் பரிய ஆழமுடைத்தாய்த் தோன்றுதலின், அதன்கண் விளங்கும் பகலொளியை, வான மூழ்கி வயங்கொளி என்றும் நில வெல்லை முழுதும் சென்று திகழ்தல் பற்றி ஞாயிற்றின் சுடர்க்கற்றையை நெடுஞ்சுடர்க் கதிர் என்றும், மாலைப் போதில் மேலைக்கடலில் ஞாயிறு படியுங்கால் நெருப்புப் பிழம்பு போல் தோன்றுதலால் கனலி ஞாயிறு என்றும் கூறினார். சாய்தல் - சுருங்குதல் ஞாயிற்று மண்டிலத்தின் பெரும் பகுதி மறைந்து விளிம்புப்பகுதி தோன்றும் அளவை வைகுறை என்றார். பிறைத்திங்களிடத்தே அத்துணை ஒளி இன்மைபற்றி, ஞாயிற்றின் வைகுறை கூறினார். கைதைப் பூவிற்கு உவமம் செய்தலின் மன்னைச் சொல் கழிவின்கண் வந்தது.

களவிற்பெறும் இன்பவிழைவால் வரையாது நீட்டித் தொழுகும் தலைமகன் தெருண்டு விரைய வரைந்து கோடல் வேண்டிப் பல்லாற் றானும் சேட்படுத்தும் குறிப்பாலும் வெளிப்படையாலும் உள்ளது கூறியும் படைத்து மொழிந்தும் வரைவு கடாவியும் வருந்திய தோழிக்குத் தலைமகன் வரை வொடு வந்தமை காணப் பேருவகை நெஞ்சக் கரைபுரண்டு வழிந்தமையின், அதனை மெய்பாற் புலப்படுத்திக் குறிப்பாக உரையாட லுற்றவள் உயிர்த்தன வாகுக என்றும், அளிய என்றும் எடுத்துரைத்தாள். அது கேட்ட தலைமகள் உண்மை ஓர மாட்டாளாய் மருண்டு நோக்கலும், களவொழுக்கிற் குரிய இரவுக்குறிக்கண் எய்தும் இடர்ப்பாட்டைச் சுட்டி, அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு எல்லியும் இரவும் என்னாது என்றாள். ஊதைக்காற்று மெய்க்கு இனிதாகாமையோடு நுண்மணலை அள்ளித் தூவிக் கடற் கரையில் இயங்குவார்க்கு மிக்க துன்பத்தைச் செய்வதுபற்றி அதனை அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதை என்றும், இரவு பகலென வேறுபாடின்றி எப்போதும் வீசுதலின் எல்லியும் இரவும் என்னாது என்றும், இவ்வூதையின் கொடுமையையும் பிற இடையீடுகளையும், இடையூறுகளை யும் பொருள்செய்யாமல் தலைமகன் இரவினும் பகலினும் வந்தெய்தி வருந்திய நிகழ்ச்சியை உய்த்துணர வைப்பாளாய் கல்லெனக் கறங்கிசை இனமணி யொலிப்ப நிலவுத் தவழ் மணற்கோ டேறிச் செலவர வருந்துமன் என்றும்; மலை போற் குவிந்த மணல்மேடுகளில் ஏறியும், இறங்கியும் வருவதும் போவது மாகிய செயல்களால் உண்டாகும் வருத்தத்தை விளக்குதற்கு இனமணி யொலிப்ப என்றும், நிலவுத் தவழ் மணற்கோ டேறிச் செலவர என்றும் வகுத்துரைத்தாள். களவையே நீட்டித்தமையால் தலைமகன் வரைகுவனோ என ஐயுற்றுத் தடுமாறி அவன்பாலும், தலைமகள்பாலும் தன் நெஞ்சம் அலைந்தமை புலப்படுத்தற்கு இன்று என் நெஞ்சம் போல என்றும்; களவொழுக்கம் தொடங்கிய நாள்தொட்டுத் தலைமகனுடைய போக்கும் வரவும் கண்டிருக்கின்றமையின் தொன்றுநனி வருந்துமன் என்றும், தலைமகன் செயலை அவன் குதிரைமேல் வைத்துக் கூறி அவன் வரைவொடு வருதலைத் தலைவிக்கு உணர்த்துதலின் அவ்வருத்தம் ஒழிந்தது என்றற்கு வருந்துமன் என்றும், உயிர்த்தன வாகுக என்றும், அளிய என்றும் கூறினாள். இனி, வரைவொடு வந்த தலைமகனை மணந்து அவன் குடிக்கு விளக்கமாய்ப் பொலி வாயாக என்பாள். புன்னைமரங்கள் செறிந்த கானற்சோலை முற்றத்தில் கைதை ஞாயிற்றின் வைகுறை போலத் தோன்று வதைக் குறிப்பாய் எடுத்து மொழிந்தாள்.

பேயனார்


பேயனார் என்ற இச்சான்றோர் சேரநாட்டுப் புலவர் பெருமக்களுள் ஒருவர். பையனூர் என இப்போது வழங்கும் சேரநாட்டு ஊர் மலையாள மொழி தோன்றிப் பரவுவதற்கு முன்பெல்லாம் பேயனூர் என வழங்கிற்று. அதனை அவ்வூரிற் கிடைக்கும் பழங்குறிப்புக்கள் வற்புறுத்துகின்றன. சங்ககாலச் சேரர்காலத்தில் அவ்வேந்தரால் சிறப்பிக்கப்பெற்ற சான்றோர் களின் பெயர் தாங்கிய ஊர்கள் பல இன்றும் உள்ளன. இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய கண்ணனார் பெயரால் கண்ணனூரும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கை பாடினியார் பெயரால் காக்கையூரும் காண்பவர், இப்பேயனூர் பேயனார் பெயரால் உண்டாய தென்பதை நன்கு அறிவர். பேயனார் சேரமன்னர் தொகுத்த ஐங்குறுநூற்றின்கண் காணப்படும் முல்லைப் பாட்டுக்கள் நூறினையும் பாடியவர். இவர் பாடியன அகநானூறு, குறுந்தொகை முதலிய தொகை நூல்களில் வேறு சில பாட்டுக்கள் உள்ளன. இவருடைய புலமை நலம், பாவன்மை முதலிய ஆராய்ச்சிக் குறிப்புக்களை இவ் வுரைகாரர் எழுதிய ஐங்குறுநூற்று உரையின்கட் காண்க.

தலைமக்களின் நல்வாழ்வில் புகழும் பொருளும் பயக்கும் பொருள் துறை, இனம் பெருக்கி வளம் பயக்கும் இன்பத்துறை இரண்டும் அறிவின் வழி இயங்கும் போதுதான் சிறப்புறுகின்றன. அச்சிறப்பு அவர்களைத் தலைமைநலம் பெறுவித்தற்கு வாயிலா கின்றது. இனப் பெருக்கத்துக் காதற் காமமும், பொருட்டுறைக்குக் கடமையுணர்வும் இன்றியமை யாதன. பொருட்பேறும், காதற் காம நுகர்ச்சியும் ஆகிய இரண்டுமே நோக்கி அறம் நோக்காது, அறிவு அறைபோகுபவர் தலைமையுலகிலோ சான்றோருடைய குழுவிலோ இடம் பெறுவதில்லை. பொருளாக்கமும், காத லொழுக்கமும், ஏதுவும், பயனுமாய் ஒன்றையொன்று சார்ந்து நிற்றலின்; கடமையும் காதலும் போர் நிகழ்த்தும் களமாக, அறிவுடைய மக்களது உள்ளம் இடமாதல் உண்டு. புதுமணம் புணர்ந்து காதற்காம வின்பத்தைப் புதிதின் நுகரும் ஒருவனும் ஒருத்தியுமாகிய இளையர் இருவரிடையே இப்போர் மிகக் கடுமையாக இருக்கும். அப்போரின்கண் கடமை வெற்றி பெறின் ஆடவன் ஆண்டகைமை சிறந்து தலைமகனாகும் சால்பு பெறு கின்றான்; காதல் வெற்றி பெறின் பெண்ணேவல் செய்தொழுகும் பேதையாய்க் கீழ்மை எய்துகின்றான். இந்நிலையில், தலைமகன் உள்ளத்தில் நடந்த காதற் கடமைப் போரில் கடமை வெற்றி எய்தவே, அவன் பொருட் பிரிவை மேற்கொண்டு காதலிபால் விடைபெற்றுச் சென்றான். அவன் சென்ற போது நாட்டில் மழை குன்றக் கடுங்கோடை நிலவிற்று. வெயிலின் வெம்மை மிகுந்து நின்றது. வெளியே செல்வார்க்கு வழிகள் பெருங்கொடுமையைச் செய்தன. நீர்ப்பசை அறுதலால் நிலப்பகுதி பல இடங்களில் வெடித்துக் கிடந்தது. நீர்வேட்கை தணியாமல் மாவும் புள்ளும் மக்களுயிரும் பிறவும் பெரிதும் வருந்தின. அதனைக் கண்ட தலைமகள் தலைமகனுக்கு வேனில் வெம்மையால் விளையும் வருத்த மிகுதியை எண்ணி வருந்துவாளாயினாள். அறிவும், அறமும், அன்பும் என்ற மூன்றுமே மனமொழி மெய்களாகக் கொண்ட தோழியொருத்தியுண்டு. தலைமகளுடைய உள்ளத்தில் தலைமகனது ஆண்மையையும் வினைத் திட்பத்தையும் பற்றிய உணர்வு இன்றி; வேனில் வெம்மையும், நெறியின் கொடுமையும் தலைமகனது ஆற்றாமையுமே மேலோங்கி நிற்பது அத்தோழிக்குத் தெரிந்தது. தலை மகனுடைய வினையாண்மையின் வீறுபாட் டினை உணராது போவாளாயின், தலைமகளது எதிர்கால வாழ்வு இன்ப நிறைவு பெறாது என்பதை உணர்ந்து அதனை அவட்கு உரைப்பாளாய்த் “தோழி, வேனில் வெம்மை மிகுதலால் உல குயிர்கள் பெரிதும் வருந்தும் காலத்தே தலைவர் சென்றனர் என்று இயம்புகின்றாய்; உண்மையும் அதுவே; அதனை நானும் எண்ணுகின்றேன்; ஆயினும் ஏனைக் கார், கூதிர், பனி என்ற பருவங்கள் மூன்றும் வினைசெய்தற்குச் சிறந்தன. அல்லவாதலின், இப்போது சென்றதுதான் சிறப்பு” என்றாள். அவள் கூறியது தலைமகட்குத் தெளிவும் ஆறுதலும் தரவில்லை, நாட்கள் கழிந்தன; தலைமகன் மீண்டு வருவதாகக் குறித்த பருவம் வருவதாயிற்று. சின்னாட்களில் மேற்கொண்ட பொருள் வினை முடித்த தலைவன் தன் மனைநோக்கி வருகின்றான் என்ற செய்தி முற்பட வந்தது. அதனைத் தலைமகட்கு உணர்த்தலுற்ற தோழி, தலைமகனது வினையாண்மையின்முன் வேனிலின் வெம்மையும், நெடுஞ்சுரத்தின் கொடுமையும், வினையின் பெருமையும் சிறுமை யுற்றுத் தோற்றோடின என்ற கருத்துப்பட; வழிச்செல்வோரை ஒரு காரணமு மின்றியே கொன்று வீழ்த்தி அவர் உடலைக் காட்டிலே இரக்கமின்றிக் கிடத்திச் செல்லும் கண்ணறைகளான கொடியவர் வாழும் காட்டிடைச் சென்றா ராயினும்; அவர் களால் ஊறு சிறிது மின்றி, இனிது சென்று மீளும் ஆண்மையும், ஆற்றலும், படைவலியும், தோள்வலியும் உடையர் நம் காதலர் என்பதனை நீ உணராமையால்; யான் அவர் சென்றது நன்று என்றேனாக நீ என் சொல்லைத் தெளிந்தாயில்லை" என்றாள்.

தோழியின் இக்கூற்றின்கண் தலைமகள் அறியாவாறு தலைவன்பால் அமைந்துள்ள ஆண்மைத்திறத்தை அறிவிப்ப துடன்; அவன் மேற்கொண்ட பொருள் முடித்து வரும் திறத்தை அறிவிப்பதும் ஒருங்கே அமையக் கண்ட பேயனார் அவற்றை இப்பாட்டின்கண் பெய்து பாடுகின்றார்.

உறைதுறந் திருந்த முளிவெம் புறவிற்1
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக
உலகுமிக வருந்தி அயர்வுறு2 காலைச்
சென்றன ராயினும் நன்றுசெய் தனர்எனச்
சொல்லில் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்
செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென
வெங்கடற் றடைமுதல் படுமுடைக் 3கெழீஇய
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
ஊறிலர் ஆகுதல் உள்ளா மாறே

இது, பொருள்முடித்து வந்தான் என்பது வாயில்களாற் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.

உரை
உறை துறந்திருந்த முளி வெம்புறவில் - மழையின்மையின் உலர்ந்த வெவ்விதாகிய காட்டின்கண்; செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் - சிவந்த ஒளிக்கதிர் களையுடைய செல்வனாகிய ஞாயிறு வெதுப்புதலால்; மண் பக உலகு மிக வருந்தி அயர் வுறுகாலை - நிலம் வெடித்து உலகுயிர்கள் மிகவும் வருத்தித் தளர்வுறும் வேனில் பருவத்தே; சென்றன ராயினும் - பிரிந்து சென்றா ரெனினும்; நன்று செய்தனர் எனச் சொல்லில் தெளிப்பவும் - ஏனைக் கார்முதலிய பருவங்கள் ஏற்புடைய வன்மையின் நல்லதே செய்தார் என்று தூய சொற்களால் நீ தெளிந்து கொள்ளல் வேண்டித் தெளித்துரைத்தும்! தெளி தல் செல்லாய் - நீ தெளியாது வருந்துதலையே செய் தொழிந்தாய்; செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர் - செவ்விதாய் நேரிய அம்பினையும் வளைந்த வில்லினையு முடைய, கள்வர்; வம்பமாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென - புதியராய் வருவோரைக் கொன்று அவர்தம் உயிரைப் போக்கியதனால்; வெங்கடற்று அடைமுதல் படுமுடை கெழீஇய - வெவ்விய காட்டில் உதிர்ந்து கிடக்கும் இலை களால் மூடப்பட்டு மிக்க முடைநாறும் பிணத்தைப் பொருந்தி யுண்ணும்; உறுபசிக் குறுநரி - மிக்க பசியையுடைய குறுநரிகள்; குறுகல் செல்லாது மாறுபுறக் கொடுக்கும் - நாற்றம் பொறாது அணுகாமல் பின்னே சென்று நிற்கும்; அத்தம் ஊறில ராகுதல் உள்ளாமாறு - வழிகளை ஊறு சிறிதுமின்றிக் கடந்து வருவர் என்பதை நினையாமையால் எ.று.

புறவின்கண் செங்கதிர்ச்செல்வன் தெறுதலின், உலகு வருந்தி அயர்வுறுகாலை, சென்றன ராயினும், நன்றே செய் தனர் எனச் சொல்லில் தெளிப்பவும், அத்தம் ஊறில ராகுதல் உள்ளாமையால் தெளிதல் செல்லாய் எனக் கூட்டி, இப் போது வந்தாராகலின் இனியேனும் தெளிவாயாக என எஞ்சி நின்ற சொற்களைப் பெய்து வினைமுடிவு செய்க. உறை - மழை; “உறைவேண்டு பொழுதிற் பெயல்பெற்றோரே1” என்பது காண்க. முளிதல் - ஈரமின்றி உலர்ந்து கெடல்; “முளி புற்கானம்2” என்பது காண்க. செங்கதிர்ச் செல்வன் - ஞாயிறு. வெயில் வெம்மை மிகுதியால் ஈரம் புலர்ந்த சில இடங்கள் வெடிப்பது இயல்பென அறிக. அந்நிலப்பகுதி களிமண் கலந்த பகுதியாயின் வெடிப்புக்கள் மிக அகலமும் ஆழமுமாக இருக்கும். உலகு, நல்லியல் பிழந்த முல்லைப்பகுதியும் அதன் கண் வாழும் உயிர்களும் குறித்து நின்றது; மைவரை யுலகம், காடுறை யுலகம், பெருமண லுலகம் என்றாற்போல “உறை துறந் திருந்த வெம்புறவு” என்பதும் இது நோக்கி யென்க. அயர்வு - தளர்ச்சி மிகுதி. ஏனைக் கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பன மனையின் நீங்கிச் சென்று பொருள் வினை செய்தற்கேற்ற வளவிய காலமின்மையின் வேனிற்போது நன்றாயிற் றென்க. தான் வகுத்துரைத்தலும், சான்றோர் கூறியன எடுத்துரைத்தலும், எனச்சொல் இருவகை யாதலின் இரண்டும் அடங்கச் சொல்லில் என்றார். தெளிதல் செல் லாய், தெளியா யாயினை என்றவாறு. அம்பின் கோலிடத்துக் கோட்ட முண்டாயின் விரைந்து இனிது சேறல் ஆகாமை பற்றிச் செங்கோல் வாளி யெனல் வேண்டிற்று. பிறரும் “செங்கோ லம்பினர்”1 எனவும், “குருதியொடு பறித்த செங் கோல் வாளி”2 எனவும் கூறுதல் காண்க. வம்பமாக்கள், வேறுநாடுகளினின்றும் புதிதாய் வரும் மக்கள். கடறு - காடு, அடை - இலை; முடைநாறும் பிணத்தை முடையென்றது ஆகுபெயர். உம்மை எஞ்சி நின்றது; முடைநாற்றம் பற்றி வந்து கூடிக்கொள்வது பற்றி, படுமுடை கெழீஇய என்றும், விரும்பி யுண்டற் கேற்ற மிக்க பசியுற்று வருந்திற்றாயினும் முடைநாற்ற மிகுதியால் குறுகாமை தெரித்தற்குக் குறுநரி குறுகல் செல்லாது மாறுபுறக் கொடுக்கும் என்றும், கூறினார். ‘மாறு’, ஏதுப் பொருள்பட வந்த இடைச்சொல்; “மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே”3 என வருதல் காண்க.

மழையின்மையாலும், வெயில் வெம்மையாலும் முல்லைப்புறவு நல்லியல் பிழந்து வெடிப்புக்கள் உற்றுத் தன்னகத்தே வாழும் உயிர்கட்கு வருத்தம் நல்குவதனால், அவை ஆற்றாது மெலிகையில் அவ்வழியே செல்வோர்க்கு அதனால் உண்டாகும் இன்னலுக்கு எல்லையின்மையின்; அது சேறற்கு ஏற்றதன்று என்பாள் உலகுமிக வருந்தி அயர் வுறுகாலை என்றும், காலமும் அதற்கு வாய்ப்புடைத்தன்று என்றற்குச் சென்றனராயினும் என்றும் தோழி கூறினாள். ஞாயிறு தெறுதலின், உலகு மிக வருந்தி அயர்புறுவது கூறித் தலைமகள் சென்றது தனக்கு ஆற்றாமை தந்து வருத்தம் எய்துவிக்கின்றது என்ற தலைவி கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்து, அதனை ஒரு மருங்கு தழுவியும் மறுத்தும் சொல் நிகழ்த்துவது பற்றி. ஆயினும் என்றது, தலைவி கூற்றை மறுத் தற்கு. உயர்வற வுயர்ந்த தலைமகனான காதலற்கு இக்காலமும் நெறியும் இடையூறு செய்வன வல்ல என்பதுபட இது நின்றது. இச்செலவால் காலமுணர்ந்து செய்தற்குரிய பொருள் வினை களைச் செய்து முடிக்கும் வினைத் திண்மையும், கடைபோகச் செயலாற்றும் வினையாண்மையும் விளங்கித் தோன்றுதலின், அதனை விதந்து நன்று செய்தனர் என்று தோழி கூறினாள். தலைமகனது செயல் நன்மையைத் தான் பல ஏது எடுத்துக் காட்டுக்களால் வற்புறுத்தினமையும், சான்றோர் சென்ற நெறி யெனப் பிறர் கூறியவற்றை எடுத்துரைத்து வற்புறுத்தினமை யும் தோன்ற சொல்லில் தெளிப்பவும் என்றும்; இவ்வாறு தோழி யுரைத்த வன்புறைகளால் தலைமகள் தேற்றமும், தெளிவும் கொள்ளாது வருந்தியிருந்தமை பற்றித் தெளிதல் செல்லாய் என்றும் கூறினாள். அதனை இப்போது தோழி கூறற்குக் காரணம், தலைமகன் செய்வினை முற்றி மீண்டான் போலும் எனத் தலைமகள் உய்த்துணர்ந்து கொள்ளுதல் வேண்டி என உணர்க. வெவ்விய கடற்றின்கண் புதியராய் வருவோர் செல்லுதல் கூடாதாகவும், சென்றமையின், புது வோரை வம்ப மாக்கள் என்றும்; அவர்களுடைய அறி யாமைக்கு இரங்காது உயிர் கொல்லும் மறவரது கொடுமை புலப்பட உயிர்த்திறம் பெயர்த்தென என்றும்; இறந்த மக்க ளின் உடம்பை எரித்தலோ மண்ணிற் புதைத்தலோ செய்யாது, காட்டிலைகளால் மூடிப் பிணந் தின்னும் நரிகளும் நெருங்கா வாறு முடைநாறு மாறு இட்டுச் செல்லும் அவரது வன் கண்மை தோற்றுவித்தற்கு உறுபசிக் குறுநரி குறுகல் செல் லாது மாறுபுறக் கொடுக்கும் என்றும்; எனவே அத்தகைய கொடியவர் இயங்கும் கடுஞ்சுரம் செல்வோர் பேராற்றலும், பெருவலியும் உடைய ராயினரன்றி ஊறின்றிப் பெயர்தல் இயலாது என்றும்; தலைவருடைய தலைமைமுன் அக்கொடி யோரது கொடுமையும், சுரத்தின் வெம்மையும் ஆற்றலழிந்து ஒளிமுன் இருள்போலக் கெடுமென்றும்; அதனால் அவர் ஊறு ஒரு சிறிது மின்றி வந்துள்ளார் காண் என்பாள்; ஊறில ராகுதல் என்றும், இதனை யான் வற்புறுத்திய போதும், அவரது மாண்பினை உள்ளிக் காணாமையால் நீ தெளிதல் செல்லாது வருந்தினை என்பாள் உள்ளாமாறு என்றும் கூறினாள்.

நன்று செய்தனரெனச் சொல்லின் தெளிப்பவும். தலைவர் ஊறிலராய்ப் பெயர்வர் என்பதை நீ உள்ளாமையால் தெளி தல் செல்லாய் ஆயினை; யாம் நன்கு அறிவோ மாகலின் மிகை யென்னும் அச்சத்தால் நின்னைச் சூழ இருந்தும் நெருங்கிக் கூறுதல் மாட்டேமாயினம் என்றற்கு, வேடர்கள் காட்டு இலைகளால் மூடிச் சென்ற பிணத்தை உறுபசிக் குறுநரி குழீஇ யிருந்தும் குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும் என்று தோழி உணர்த்தினாள். இதனால், தலைவனது வர வுணர்ந்து தலைவி மகிழ்வாளாவது பயன்.

நல்வெள்ளியார்


ஆசிரியர் நல்வெள்ளியாரைப் பற்றிய குறிப்புக்கள் முன்பே கூறப்பட்டுள்ளன. அவருடைய பாட்டுக்கள் நல்ல பொருள்வளமும் தூய இனிய சொல்வளமும் பெற்றவை. இவர் பெயர் நல் வேள்வியார், நால்கூர் வெள்ளியார் என்று ஏடெழுதினோரால் குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளியார் என்றது பயின்ற வழக்கிற் றாதலின், அதுவே ஈண்டு மேற்கொள்ளப்பட்டது. நால்கூர் என்பது உண்மைப் பாடமாயின் அது சோழ நாட்டு நாங்கூராதல் வேண்டும். நான்கு என்பது, பண்டை நாளில் நால்கு எனவும் வழங்கினமை தொகைநூல்களால் நன்கு அறியப்பட்டது. வெள்ளி, வெள்ளை என்பன மக்கட்குப் பெயராதல் இன்றும் தமிழகத்தில் உண்டு.

தலைவியை விரைய வரைந்து கொள்ளாது மேற்கொண்ட களவினையே நீட்டித்து வந்தான் தலைமகன். அவள் உள்ளத் தெழுந்த காதல் பெருகி அவனை ஒரு நொடியும் பிரிந்திருக்க மாட்டாத நிலையினை எய்துவதாயிற்று. அதனை யுணர்ந்த தோழி வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தலைவனைக் காணும் போதெல்லாம் வரைவு கடாவினாள். களவிடைப் பெறும் இன்பத்தையே அவன் பெரிதும் விரும்பி நின்றமையின் தோழிக்கு மனவருத்தம் மிகுந்தது. அதனைத் தலைமகளும் உணர்ந்தாள். “நம் கருத்தைப் பன்முறையும் பல்லாற்றானும் எடுத்துரைத்தும், காதலர், வரைந்து கோடலை நினையா ராயின், நம்மை மணந்து கோடற்குரிய நல்லன்பு இல்லாத அவரது நட்பு அவ்வளவில் நின்றொழிக என விடுவது தான் அவர்க்கும் ஒத்தது” எனத் தோழி கூறினாள். கூறினவள், “அதனை உரைத்தவழியும், அவர் பகலினும் இரவினும் நம்பொருட்டு வந்து இடர்ப்படு வதைக் கைவிடல் இலர்; வழியருமையோ காவற் கடுமையோ ஏதமிகுதியோ ஒன்றும் நினையாது வந்து போவதில் சிறிதும் குன்றிய திலராகலின் யான் செய்வ தறியாது வருந்துகின்றேன்; இந்நிலையில் நொதுமலர் மகட்கொடை வேண்டி விடுத்த தூதுகள் பல நம் மனைக்கண் வந்துள்ளன. தந்தையும் தன்னை யரும் அவர்கட்கு மகட்கொடை நேர்வராயின் நமது நிலை என்னாவது? என்றாள். அதனால் தலைமகட்கு அச்சமும் அவலமும் பெருகவே, தோழி, மறுபடியும் தலைவியை நோக்கி,”தோழி, இனி நாம் தாயர்க்கு அறத்தொடு நிற்பதல்லது வேறு உய்திறம் இல்லை" என்றாள். அவர் சொல்லாட்டினைச் சிறைப் புறம் போந்து கேட்டிருந்த தலைமகன், தலைமகள் அறத்தொடு நிற்குங்கால், தான் அவளை வரைதற்கு முயலாவிடின் தன் ஆண்மைக்கு மாசும் பழியுமாம் என்று எண்ணி, விரைந்து சென்று மகட்கோடற் குரியன முயன்று வரைவொடு வருவானாயினன்.

இக்கூற்றின்கண், வரைவு கடாயவழியும் வரைதலை முயலாத தலைமகன் உள்ளத்தை, விரைந்து வரைவு மேற்கொள்ளுமாறு சூழ்ந்துரைக்கும் தோழியின் மதி நுட்பத்தைக் கண்ட சான்றோ ராகிய நல்வெள்ளியார், அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார். கருதிய கருத்துக் கேட்போர் உள்ளத்தில் ஒழியாது தோன்றி உரிய பயனை விளைக்குமாறு எஞ்சக் கூறும் சொல்நலம் இப்பாட்டின்கண் சிறந்து நிற்பது நோக்கத்தக்கது.

அமர்க்கண் ஆமான் அருநிறம் உள்காது
பணைத்த பகழிப் போக்குநினைந்து 1கானவர்
அணங்கொடு நின்றது மலைவான் கொள்கெனக்
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டெழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதருந் தோறும்2 அருமைதனக் குரைப்ப
நப்புணர் வில்லா நயனில் லோர்நட்
பன்ன ஆகுக 3என்னா
4ஓல்கான் தோழி பல்கின தூதே

இது, நொதுமலர் வரையும் பருவத்துத் தோழி தலைவிக்கு அறத்தொடுநிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉமாம்.

உரை
அமர்க்கண் ஆமான் அருநிறம் உள்காது - அமர்த்த கண்ணையுடைய ஆமாவின் மருமம் நோக்கிக் கானவர் தலைவன் விடுத்த போது அதன் உள்ளே ஊடுருவிச் செல் லாது; பணைத்த பகழிப் போக்கு கானவர் நினைந்து - வளைந்து சென்ற அம்பின் செலவுக்குரிய காரணத்தைக் கானவர் தம்மிற் கூடி ஆராய்ந்து; அணங்குகொடு நின்றது - இம்மலைக்கண் அணங்கு வந்துற்றது போலும்; மலைவான் கொள்கென - தெய்வம் மலையேறி வானகம் செல்வதாக என்று; கடவுள் ஓங்குவரை பேண்மார் - கடவுள் தங்குதலால் உயர்ந்த மலையை வழிபடுவாராய்; வேட்டு எழுந்து கிளை யொடு மகிழும் குன்ற நாடன் - விரும்பிச் சென்று உறவின ரோடே கூடி விழா எடுத்து மகிழும் குன்றுகளையுடைய நாடனாகிய தலைமகன்; அடைதரும் தோறும் - நம்பால் வருந்தோறும்; அருமை தனக்கு உரைப்ப - அவனது கூட்டம் பெறுதற்குள்ள அருமைகளை அவற்கு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பன்முறையும் எடுத்துச் சொல்லியும்; நப்புணர்வு இல்லா நயன் இல்லோர் நட்பு அன்ன ஆகுக என்னா - நம்மை வரைந்து கொள்ளாமைக்குரிய நல்லன்பு இல்லாதாருடைய நட்பு எவ்வாறு நின்றுவற்றுமோ அவ்வாறு ஆகுக என்று சொல்லவும்; ஒல்கான் - இரவினும் பகலினும் வாய்ப்புழிப் போந்து தலையளி செய்தலில் குன்றுவதிலன்; தோழி -; பல்கின தூது - மிகப் பலவாய் உள்ளன மகட்கொடை வேண்டி நொதுமலர் விடுப்ப வந்துள்ள தூதுகள்; ஆகவே, இனி நாம் தாயர்க்கு அறத்தொடு நிற்பதல்லது வேறு செய்வகை இல்லை எ-று.

தோழி, குன்றநாடன் அடைதருந்தோறும், அருமை உரைப்பவும், நட்பு என்ன. அன்னவாகுக என்னவும் ஒல்கான்; ஆகலின், இனி அறத்தொடு நிற்றலையன்றி வேறு செயல் இல்லை எனக் கூட்டிவினை முடிவு செய்க, கானவர்’ பேண்மார், எழுந்து மகிழும் குன்றநாடன் என இயையும்.

மருண்ட பார்வை யுடைமைபற்றி ஆமாவின் கண் அமர்த்த கண் எனப்பட்டது, அருநிறம், மார்பு; ஈண்டு மருமம் குறித்து நின்றது, உள்குதல் - ஊடுருவிச் சேறல், பணைத்தல் - கிளைத்த லென்னும் பொருள் வழியாகக் கோணுதல் குறித்து நின்றது, பகழி - அம்பு. நேர்மையும் கூர்மையும் ஒருங்குடைய அம்பு. நேர்மை திறம்பிக் கோடியது தீக்குறியாதல் பற்றிக் கானவர் தம்மிற் கூடி அதற்குரிய ஏதுவினை ஆராய்தலின் போக்கு நினைந்து என்றும், குன்றகம் அணங்கு தாக் குற்றது எனவும், அதற்கு வழிபாடுதான் கழுவாயாவது எனவும் தேறினமையின் அணங்கொடு நின்றது என்றும், மலை வான் கொள்கெனக் கடவுள் ஓங்குவரை பேண்மார் என்றும் கூறினார். குன்றின்கண் மழைமிகப் பெய்யினும் பெயல் குன்றினும் அணங்கு தாக்கு என்று கொண்டு கானவர் வழிபாடு செய்வது பண்டைநாளை மரபு, “மலைவான் கொள்கென உயர்பலி தூஉய், மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள்1” என்று பிறரும் கூறுதல் காண்க. மலை வான்கொள்க என்பதற்கு மலை யேறுக எனினும் அமையும், தெய்வ வழிபாட்டின்கண் சிலர் தெய்வ மருள்கொண்டு தெய்வம் கூறுவதாகச் சிலசொல்லி முடிவில் மருட்சி தெளிதலைத் தெய்வம் மலையேறிவிட்டது என்று கூறுவதும், கொள்வதும் இன்றும் தொண்டை நாட்டு ஊர்ப் புறங்களில் வாழும் மக்களிடையே காணப்படும் பெருவழக்கு. வான்கொளல் ஒரு சொல்லாய், ஏறுதல், மீச்செலல் எனப் பொருள்படும். உம்மை விகாரத்தால் தொக்கது. புணர் வில்லாமைக்கு ஏது நயனின்மை என அறிக. நயன் - நல்லன்பு, நயனில்லோர் நட்பு என்னவாகுமோ - அன்னவாகுக என விரித்து இயைத்துக் கொள்க. ஒல்குதல் - குன்றுதல், தூது - உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறிணைச் சொல்; வேந்து - அரசு அமைச்சு என்றாற்போல, ‘பேண்மார்’, மாரீற்று வினைமுற்று; வினையொடு முடிதல் இதற்கு இலக் கணமென அறிக.

களவே விரும்பி வரையாது நீட்டித்தமை நினைந்து, தோழி, அவன் வருந்தோறும் வரைவு கடாவுவதில் ஒழி யாமையின் குன்றநாடன் அடைதருந் தோறும் அருமை தனக்கு உரைப்பவும் என்றாள். அருமை, வழியருமையும், காவலருமையும், தாயர் முதலியோர் துஞ்சாமையும், அல்ல குறிப் படுதலு மாகியவற்றால் தலைமகனைத் தலைப்பெயல் அருமை, அதனைக் கேட்ட மாத்திரையே தெருண்டு வரை தற்பால னாகவும், தலைமகன் அது செய்யாது களவே விரும்பினமை தோன்ற உரைப்பவும் என்றாள். எம்பால் மிக்க அன்பினை யாதலின், நினது நட்பு நயனில்லார் நட்புப் போல நின்று வற்றுக எனத் தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தைமையும் படக் கூறினமை தோன்ற நப்புணர்வில்லா நயனில்லோர் நட்பு அன்ன வாகுக என்றாள். அதனால் அவன் வரைவு கருதாமைபற்றி என்னா என்றும், வரைவு முயலானாயினும் களவின்கண் வந்து போவதில் ஒருநாளும் குன்றாமையின் அவனை அன்பிலன் எனத் துணிதற்கும் இடனின்று என்பாள் ஒல்கான் என்றும், நொதுமலர் வரைவு தலைமகள் செவிக்கு இன்னா தாகலின் அதனைக் கூறலுறுவது பற்றித் தோழி என்றும், இனிச் செயற்பாலது அறத்தொடு நிலையே என உய்த்துணரக் கூறுதலின் பல்கின தூதே என்றும் கூறினாள். தொடுத்த அம்பு, ஆமாவின் அருநிறம் புகாது பணைத்துச் சென்ற போக்கு நினைந்து, கடவுட் பேணிக் கானவர் மகிழ்வர் என்றது, விரைந்து வரைதல் வேண்டி நாம் தலைமகற் குரைத்த கூற்றுப் பயன்படாமையின் தாயர்பால் அறத்தொடு நிலை வகையால் நொதுமலர் வரைவுவிலக்கி மகிழ்வோம் எனத் தோழி குறிப்பாய் உரைத்த வாறு.

மருதன் இளநாகனார்


தன் மனம் காதலித்த தலைவியை மணந்து மனையறம் புரிந்து வரும் தலைமகன் இன்றியமையாத தொரு கடமை குறித்துப் பிரியும் கருத்தின னானான். ஆயினும், அதனை அவன் தன் காதலிக்கு உரைக்கு முன்பே, அவள் உணர்ந்து கொண்டு பிரிவாற்றாத வருத்தத்தால் மேனி வேறுபடலானாள். அவளது அவ்வேறுபாட்டைக் கண்ட தலைமகன் பெரிதும் வியப்புற்று அவளைத் தெளிவிக்கக் கருதி, நங்காய், நின் நன்மேனியும் நறுமணங் கமழும் கூந்தலும், பொன்னும் மணியும் போலப் பொலிவுற்று விளங்குகின்றன. உன் மனக்காதலின் மாண் புணர்த்தும் மையுண்ட கண்களும் வனப் பமைந்த தோளும், குவளை மலரும் மூங்கிலும் போன்று அழகு திகழ்கின்றன; இவற்றைக் காணும் யான் மனம் மகிழ்ந்து அறநெறிக்கண் நிலைபெற நின்று பயன்பெற்ற மேலோர் போல, இன்புறு கின்றேன்; பெற்ற புதல்வனும் பொய்தலாடிப் பொலிகின்றான்; யான் வேறு நாடு சென்று செய்து முடிக்க வேண்டிய வினை யொன்றும் இல்லேன்; இவ்வாற்றால் ஒரு குறையும் இல்லாத யான் யாது காரணம்பற்றி நின்னிற் பிரிவேன்; நின்பால் என் உள்ளத்து உளதாகிய காதலோ எனின் அது கடலினும் பெரிதாய் இராநின்றது; ஆதலால், இல்லாத பிரிவு நினைந்து நீ இனைந்து வேறுபடுதல் நன்றன்று" என்று சொல்லலுற்றான்.

அவனுடைய கூற்றின்கண், தலைமகளின் மேனிநலமும், கற்பு மாண்பும், புதல்வற்பேறும் ஆகிய நலம் புனைந்துரைத்து, வேறு நாடு சென்று செய்தற் குரிய தொரு வினையின்மை கூறுமாற்றால், தனது நாட்டு அகவயின் சென்று செய்தற் குரிய தொரு வினை குறித்துத் தான் பிரியக் கருதுவதும், வேறு நாடு செல்லாவாறு அவள்பால் உளதாகிய பெருங்காதல் இடைநின்று தடுப்பதும், அழகுற அமைந்தமை கண்டு மருதன் இளநாகனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும்1 வனப்பமை தோளும்
இவைகாண் டோறும்2 அகமலிந் தியானும்
அறநிலை பெற்றோர்3 அனையேன் அதன்றலைப்
4பொன்போற் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத் திலனே நினையின்
யாதனிற்5 பிரிவாம் மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே

இது, செலவுக் குறிப்புணர்ந்து வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

உரை
பொன்னும் மணியும் போலும் - செம்பொன்னும் நீல மணியும் போல் விளங்குகின்றன; நின் நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும் - நின்னுடைய அழகிய மேனியும் மணம் கமழும் கரிய கூந்தலும்; போதும் பணையும் போலும் - குவளைப்பூவையும் மூங்கிலையும் போலப் பொலிகின்றன; நின் மாதர் உண்கணும் வனப்பமை தோளும் - நின் காதல் சான்ற மைதீட்டிய கண்களும் அழகமைந்த தோள்களும்; இவை காண்டோறும் - இவையிற்றைக் காணுந்தோறும்; யானும் அகம்மலிந்து - யானும் மனமகிழ்ந்து; அறம் நிலை பெற்றோர் அனையேன் - அறநெறிக்கண் நின்றோர் பெறும் பயனைப் பெற்றேனாயினேன்; அதன்றலை - அதன்மேலும்; பொன்போற் புதல்வனும் பொய்தல் கற்றனன் - பொன் போலும் என் மகனும் பொய்தலாடிப் பொற்புறுகின்றான்; வேறு புலத்து வினையும் இலன் - வேற்றுநாட்டகவயின் சென்று செய்தற்குரிய வினையொன்றும் இல்லேன்; நினை யின் - ஆராயுமிடத்து; யாதனிற் பிரிவாம் - யாது காரணத்தை முன்னிட்டு யான் நின்னைப் பிரிதல் கூடும்; மடந்தை - மடந் தையே; காதல் தானும் கடலினும் பெரிது - நின்பால் எனக்கு உளதாகிய காதலோ எனின் கடலினும் பெரிதாய் இரா நின்றது; ஆகலின் யான் பிரிவேன் என்று கருதி நீ வேறுபடுதல் வேண்டா, காண் எ-று.

மடந்தை, நின்மேனியும் கதுப்பும் பொன்னும் மணியும் போலும்; உண்கணும் தோளும், போதும் பணையும் போலும்; இவை காண்டோறும் யானும் அகமலிந்து, அனையேன்; அதன்றலைப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; யான் வினை யும் இலன்; காதல் தானும் கடலினும் பெரிது; யாதனிற் பிரிவு ஆம்; ஆகவே, நீ வேறுபடுதல் வேண்டா எனக் கூட்டி வினை முடிவு செய்க. மணி - நீலமணி மகளிர் கூந்தற்கு மணியை உவமங்கூறல் மரபு; “மணிமரு ளைம்பால்”1 “மணியிருங் கதுப்பு”2 என வருதல் காண்க. நறுநெய்யும் நறுமலரும் சூடுவதால் கூந்தல் நறுமணம் நாறுவதுபற்றி நாறிருங் கதுப்பு என்றார். மாதர், காதல், போது ஈண்டுக் குவளைப் பூவின் மேற்று; கண்ணுக்குச் சிறந்த உவம மாதலின், பணை - மூங்கில். “அறத்தால் வருவது இன்ப”3 மாகலின், இன்பத்தால் அக மலிந்தாரை அறம்நிலைபெற்றா ரனையர் என்றார். பெற லருமை பற்றிப் பொன்போற் புதல்வன் என்ப; “பொன்போற் புதல்வனோ டென்னீத்தோனே”4 என்பது காண்க. பொய் தல் - சிறுவர் விளையாடும் விளையாட்டு வகை. பிரிவாம் என்றதனைத் தன்மைவினைமுற்றாகக் கொள்ளாது, பிரிவு ஆம் எனப் பிரித்துப் பிரிவு உளதாம் என உரைக்க ‘யாழ’, அசைநிலை.

தன் பிரிவுக்குறிப் புணர்ந்து வேறுபட்ட தலைமகளைத் தெருட்டலுறுகின்றவன், பொன்னும் மணியு மாகிய பொருள் கருதிப் பிரிகின்றேன் எனக் கவல வேண்டா; என்பால் அவற் றால் குறையில்லை என்பான், பொன்னும் மணியும் போலும் நின் மேனியும் கதுப்பும் என்றான். வேறுபட்டாளை மகிழ் வித்தற்கு அவள் மேனி நலத்தைப் பாராட்டுதலினும் சிறந்த வகை வேறின்மையின் நின் நன்னர் மேனி என்றும், நாறிருங் கதுப்பு என்றும் சிறப்பித்தான். பின்பு கண்ணைச் சிறப்பித்தும் தோளைத் தைவந்தும் அவளை இன்புறுத்துகின்றமையின், போதும் பணையும் போலும் யாழ நின், மாதர் உண் கணும் வனப்பமை தோளும் என்றான். மேனியும் கூந்தலும் பாராட்டக் கேட்டுச் சிறிது முகஞ்சிவந்து பிணங்கினாள் போல நோக்கிய தலைமகளைத் தானும் நேர்பட நோக்கி, அவளுடைய கண்ணையும் தோளையும் பாராட்டுதலும் அவள் முறுவலித்தாளாக, அக்காலைஅவள் பார்வையில் திகழ்ந்த காதற்சிறப்பை வியந்து மாதர் உண்கண் என்றான். மேனியும், கதுப்பும், கண்ணும், தோளும், காணுந்தோறும் காதல் கைம்மிக்கு, உள்ளம் உவகையால் நிறைதல் தோன்ற, இவை காண்டோறும் அகம்மலிந்து என்றான். பொருளை நன்னெறியில் ஈட்டுதலும் நல்வழியிற் செலவிடுதலு மன்றி அறம் வேறின்மையின், அதனால் பொருட்பயனாகிய இன்பம் இடையறவின்றிக் கைவரப் பெறுதலின், அறநிலை பெற்றோர் அனையேன் என்றான். அவர்பால் நன்மக்கட் பேறும் மிடி யின்மையும் உளவாதல் ஒருதலையாதல் பற்றி, பொன்போற் புதல்வனும் பொய்தல் கற்றனன் என்றும், வினையும் வேறு புலத்து இலனே என்றும் கூறினான். புதல்வற் பெறாதார் புகழ் விளைக்கும் போர்வினைக்கு உரியரல்லர் என விலக் குண்ப ராதலின், புதல்வனும் பொய்தல் கற்றனன் என அதனானும் குறைவிலன் எனவும், வேறு புலம் சென்று செய்யும் வினையினும் வீறுடையது பிறிதில்லை என்பான் வினையும் வேறு புலத்து இலன் எனவும், அங்ஙனம் ஒன்று உளதாயினும், அது குறித்து நின்னைப் பிரியாவாறு காதல் கடல்போற் பெருகி அதனை மேற்கொள்ளாவாறு செய்யு மென்பான், காதல்தானும் கடலினும் பெரிது எனவும் கூறினான். இவ்வாற்றால் குறிப்பால் பிரிவுண்மையும், காதலரைப் பிரிந்து செய்வதினும் அதற்குச் சிறப்பு வேறின்மையும் உணர்த் தினானாயிற்று. தலைவி ஆற்றாமை தீர்வாளாவது பயன்.

“கரணத்தி னமைந்து முடிந்த காலை1” என்ற நூற்பாவின் கண், “பிரிவி னெச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும்” என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, “இக்கூற்று இருவர்மாட்டும் ஒக்கும்” என்பர் இளம்பூரணர்.

உலோச்சனார்


இல்லிருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன் வாழ்வில், ஊர்ப் புறத்தே வாழும் பரத்தையர்பால் அவனுக்குத் தொடர்பு உண்டாகிறது. தனக்கே யுரிய தலைமகனது மார்பு நலத்தைப் பிறமகளிர் காணினும் பொறாத மனம்படைத்தவள் தலைவி. மக்களினத்து மிகை மகளிராகிய பரத்தையர், உலகில் வாழ்தற் குரிய ராயினும், தம் நலத்தைத்தந்தே வாழ்தல் வேண்டும் என்ற விதியின்மையின், அது செய்தொழுகும் பரத்தைபால் தலைமை மகளிர்க்கு நன்மதிப்புத் தோன்றுவதில்லை. அவர்கள் ஆடல், பாடல், அழகு என்ற தம்முடைய நலங்களைச் செல்வர்க்குக் காட்டி, அவர் தரும் பொருள்பெற்று வாழ்க்கை நடத்துமிடத்து, தங்கள் மனங்கவரும் மாண்புடையாரைத் தம்முடைய ஆடல் முதலிய செயல்வகைகளால் மகிழ்விக்குங்கால், தம் அழகுமிக்க உடலையும் தந்தொழிவது வழக்காயிற்று. அவருடைய அழகும் பெண்மையு மாகிய நலங்களில் கருத்தைச் செலுத்தும் ஆடவர், பெருஞ் செல்வம் தந்து அவரைப் பேணுவதோடு, அவரைத் தமக்கே உரியராக வரைந்து கொண்டு அவரது இன்பத்தை நுகர்ந்துறைவதும் உண்டு. அவ்வாறு வரையப்பட்ட பரத்தை யருடன் கூடி யொழுகும் தலைமக்கள் ஒழுக்கம் புறத் தொழுக்கம் என்றும், பரத்தைமை யொழுக்கம் என்றும் வழங்கும். தம்மை மணந்து கோடற் கேற்ற ஆடவர் இல்லாமை யால், மணமின்றி வாடும் பரத்தையர், மனைவாழ்வில் உறையும் ஆண்மக்கள் உள்ளத்தைத் தம்பால் ஈர்த்து, அவர்க்குத் தமது நலத்தை ஈந்து பொருள்பெற்று வாழ்தலால்; அவர் பலரும் சீர்கேடு எய்தாவாறு புரப்பது தலைமக்கட்குக் கடனாகக் கருதப்பட்டது. அதனால், ஆடல் பாடல் அழகுகளால் சிறப்புறும் பரத்தையர், ஊர்களில் நடக்கும் விழாக்களில் இசையும் கூத்தும் நிகழ்த்தி, மக்களை இன்புறுத்துவது தொழிலாகக் கொண் டிருந்தனர். நாட்டிற்குத் தலைவராய ஆடவர்அப்பரத்தையர் நிகழ்த்தும் கூத்துக்களை முன்னின்று நடத்துவது அந்நாளில் முறையாகக் கருதப்பட்டது. சேரவேந்தனான ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், தன் நகரத்துப் பரத்தைமகளிர்ஆடும் துணங்கைக் கூத்துக்குத் தலைக்கை தந்து தொடங்கினமை காரணமாக, அவன் தேவியாகிய, “ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை, ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடிப் பல்சில கிண்கிணி சிறுபரடு அலைப்பக் கொல்புனல்தளிரின் நடுங்குவனள் நின்று நின், எறியர் ஓக்கிய சிறுசெங்குவளை, ஈயென இரப்பவும் ஒல்லாள். நீ எமக்கு யாரையோ1” என்று சினந்து கூறிப் பெயர்ந்த செய்தி, நாட்டின் தலைமகன் பரத்தையர்க்குத் தலைக்கை தந்து பேணியது முறையாதலையும்; அதனையும், தலைமைமகளிர் பொறாது வேறுபடுதலையும் வற்புறுத்துமாறு காணலாம். இஃது அந்நாளில் நிலவிய பெருவழக் கென்பதை, “மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர்தலைக்கை தரூஉந்து2” என்பதனாலும் நன்குணரலாம், வேந்தரது தலைக்கை பெற்று ஆடல் பாடல் நிகழ்த்தும் மகளிரைத் தலைக்கோல் மகளிர் என்றும், அதற்கு அடையாளமாக அவர் மூங்கிலாற் செய்து பொற்பூணிட்டுச் சிறப்பித்து நல்கப்பெறும் கோலைத் தலைக்கோல் என்றும் கூறுவர். இவ்வாறு தலைக்கோல் பெறும் வழக்காறு நம் தமிழகத்தில் இடைக்காலச் சோழவேந்தர் காலத்தும் இருந்தமை கல்வெட்டுக்களால் தெரிகிறது3. இவ்வாறு தலைக்கை தந்தும், ஆடல் பாடல் அழகுகளை நயந்தும் பரத்தையர் தொடர்பு பெறும் புறத்தொழுக்கத்தை ஆண்மக்கள், தம் மனைமகளிர் கருவுற்றிருக்கும் காலத்திற் கைக்கொள்வது வழக்கு. அத்தொடர்பு மனைவியாவாள் கருவுயிர்த்துப் பெற்ற மகன் நடைகற்று விளையாடும் செவ்வி எய்தும்வரை இருந்து வரும். இதற்கிடையே மகன்முகம் காண்டல். மனைவி மறுபூப்பெய்தல் (நெய்யாட்டீரணி) ஆகிய நிகழ்ச்சிக்காலத்தே, அவன் அத்தொடர்பு நீங்கி மனையின்கண்ணே அடங்கி யொழிவ துண்டு, புறத்தொழுக்கத்தின் நீண்ட எல்லை, மகன் தளர்நடை யிட்டு விளையாட்டயரும் காலமாம் என அறிக.

தலைமகனது புறத்தொழுக்கம் தலைவியின் உள்ளத்தில் பொறாமையும், பெருஞ்சினமும் உண்டுபண்ணுவது இயல்பு. அவளுடைய இன்முகமும், நல்வரவேற்பும் கருதி அவன் பரத்தையர் மனைக்கண் வாழும் பாணனைத் தூது விடுவதுண்டு; பாணர், தலைமகன் மனையில் தலைமகட்கும் அவற்கும் உண்டாகும் புலவி, ஊடல் ஆகியவற்றை நடுநின்று தீர்க்கும் இன்பப் பணியைச் செய்து ஒழுகுவர். தலைமகன் பொருள் வினை குறித்துப் பிரிந்த வழி ஆங்கே சென்று அவன் பெறும் வெற்றி யினைப் பாடிப் புகழ் நிறுவுவதும், அவன் செய்யும் ஆண்மை, கொடை முதலிய செயல் வகைகளைச் சிறப்பித்துப் பாடுவதும் பாணர் மரபு.

ஒருகால் புறத்தொழுகும் தலைமகன் செயலை யுணர்ந்து சினம் மிகுந்து வாயில் மறுத்துப் பிணங்கி நிற்கின்றாள் அவன் மனைக் கிழத்தியாகிய தலைமகள்; தலைமகன் அதனை வாயில்களால் அறிகின்றான். மாண்புடைய தன் மனையின்கண் இருந்து பெறும் இன்பத்தை நாடிய அவனது தலைமையுள்ளம் பெரிதும் வருந்திற்று அதனால் அவன் பாணனைத் தன் மனைக்குத் தூதாக விடுத்தான். தலைமகன் பிரிவால் மேனி வேறுபட்டு, நுதல் பசந்து, உடல் மெலிந்திருந்தாளாயினும், அவனது புறத்தொழுக்கத்தால் உளதாய பொறாமை அவள் உள்ளத்தில் ஓங்கி யிருந்தது. அவளே தலைமகன் மனைக்குப் பேரரசியாகலின் ஆங்குறையும் ஏவலரும் பணிப்பெண்களும் பிற மகளிரும் அவள் குறிப்பின்வழி யொழுகுவது இயல்பு. பாணன் தூதாக வந்ததைத் தலைமகள் கண்டாள்; மலர் போலும் முகம் சிவந்தது; கண்கள் சிவந்தன; வாயிதழ் துடிக்கலுற்றன. உடல் மெலிவால் உள்ளமும் வன்மைசிறிது குன்றியிருந்தமையின், அதன்கண் எழுந்த சினம் எளிதில்தணிவதாயில்லை. அந்நிலையில் அவளுடைய தோழி முன்வந்து பாணனைக் கண்டு, “பாணனே, நீ தலைமகன் விடுப்ப வந்துள்ளனை; நீயோ, சொல்லும் பொருளும் நனி சிறப்பச் சுருங்கச் சொல்லல் முதலிய நலமெல்லாம் அமையப் பேசி, யார்பொருட்டுப் பேசுகின்றாயோ அவர்க்கு எய்திய வருத்தம் அறவே மாற்றும் வன்மையுடையை” என்றாள். பாணனும் தன்சொல் கேட்டு மனம் கனிந்து மெலியு மாறு புகழுரைகள் பல மொழியலுற்றான். தலைவி வழிநின்று சினந்துபேச வந்த தோழிஅச்சினத்தை இழந்தாள்; “பாண எம் தலைவி மிக்க இளமையுடையவள்; முன்னாள் கானற்சோலைக்குச் சென்றவள், அங்கே முன்பு தலைமகனோடு இன்புற்றிருந்த திறம் நினைவுக்கு வர அந்நிலையில் அவனது பிரிவு தோன்றிப் பேதுறவு தந்தது. அதனால் அவள் நுதல் முழுதும் பசலை பாய்ந்து ஒளிகுன்றி விட்டது; அதனை உணராமல் நீ வணங்கிய நிலையும், பணிந்த மொழியும் கொண்டு நல்லுரைகள் வழங்குகின்றாய்; அவற்றாலெல்லாம் தலைவியின் நுதற்பசப்பு நீங்காது என்பது தெரிந்தாயில்லை” என்று உரைத்தாள்.

தோழியின் இவ்வுரையில், தலைமகனது புறத்தொழுக்கம் பொறாமையால் தலைவி உள்ளத்தில் நிலவும் சினமிகுதியும், அதனால் அவள் எய்திய பசப்பும் கூறி, நீ போந்து கூறும் பணிமொழிகள் இப்பசப்பினை நீக்கும் வலியுடையவல்ல வாகலின், நீ, நின் தலைமகன்பாலே செல்க என மறுத்துரைக்கும் நயும் தோன்றுவது கண்ட உலோச்சனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

கருங்கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை
விருந்தின் 1வெண்குரு கார்ப்பின் ஆஅய்
வண்மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண்ணமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும்
தண்ணந் துறைவன் தூதொடும் வந்த
பயன்தெரி பனுவல் 2பைதற் பாண
நின்வாய்ப் பணிமொழி களையா பன்மாண்
புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணங்கமழ் கானல் நுணங்கெழில் இழந்த3
இறையேர் எல்வளைக் குறுமகள்
பிறையேர் திருநுதல் பாஅய பசப்பே.

இது, தோழி பாணற்கு வாயின்மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉமாம்.

உரை
கருங்கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ்சினை - கரிய கொம்புகளையுடைய புன்னையின் வளைந்த பெரிய கிளையின்கண் இருந்து கொண்டு; விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் - புதியவாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின்; ஆஅய் - ஆய் அண்டிரனுடைய; வண்மகிழ் நாளவை - வளவிய கள்ளுண்டு மகிழ்ந்திருக்கும் நாளோலக்கத்தில்; பரிசில் பெற்ற பண்ணமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் - இரவலர்கள் பரிசிலாகப்பெற்ற பண்ணுதல் அமைந்த நெடிய தேர்களின் மணியொலிபோல ஒலிக்கும்; தண்ணந் துறைவன் தூதொடு வந்த - தண்ணிய துறைவன் பொருட்டுத் தூதாக வந்துள்ள; பயன் தெரி பனுவல் பைதல் பாண - பயனுண் மையை ஆராய்ந்து தெரிய வேண்டிய சொற்களையுடைமையால் வருத்தமுடைய னாகிய பாணனே; நின் வாய்ப் பணி மொழி களையா - நின் வாயினின்று வரும் மெய்யே பணிவான சொற்கள் தாமும் நீக்குவன வாகா, காண்; பன்மாண் புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம் - பலவாய் மாண்புற மலர்ந்த புதுப்பூக்களையுடைய ஞாழலுடனே புன்னை மலர்கள் உதிர்ந்து கிடக்கும்; மணங்கமழ் கானல் - நறுவிய மணங் கமழும் கானற் சோலை; நுணங்கு எழில் இழந்த - நுண்ணிய தன் அழகினை இழந்த; இறை ஏர் எல்வளைக் குறுமகள் - இறை பொருந்திய ஒளியையுடைய வளை யணிந்த இளையவ ளாகிய தலைவியது; பிறையேர் திருநுதல் பாஅய பசப்பு - பிறைத்திங்கள் போன்று அழகிய நுதலிடத்தே பரந்த பசப்பை எ.று.

துறைவன் தூதொடு வந்த பாண, கானல். நுணங்கெழில் இழந்த, எல்வளைக் குறுமகள் திருநுதல் பாஅய பசப்பை நின்வாய்ப் பணிமொழி களையா, காண் எனக் கூட்டி வினை முடிவு செய்க. எனவே, நீ இனி இங்கே நிற்பதிற் பயனின்மை யின் நின் தலைமகன்பாலே செல்க என்றவாறாம், குடக்கு வாங்கு சினை, மிக வளைந்த சினை; ஒருபொருட் பன்மொழி, குடக்கு, வளைவுப்பொருட்டாகிய குட என்னும் உரிச் சொல்லடியாக வந்தது; இது குடம், குடக்கு, குடந்தை என வேறு வேறு வடிவில் திரிந்து வரும். விருந்து - புதுமை வெண் குருகு - வெள்ளிய சிறகுகளையுடைய நீர்ப்பறவைகள்; பருவங் கள் மாறுபடுந் தோறும் வேறுவேறு நாடுகட்குச் சேறல் புள்ளினங்கட்கு இயல்பு; நிலவுலகில் இதுகாறும் ஆராய்ச்சி யாளர்களால் 30,000 புள்வகைகள் காணப்பட்டுள்ளன; இப்புள்ளினம் ஓர் ஆண்டின் பெரும்பகுதி ஒருநாட்டில் இருக்குமாயின் அவை அந்நாட்டுக்கு உரியவாகக் கருதப்படும். உண்மையே நோக்கின் புள்ளினங்கட்கு “யாதானும் நாடா மால் ஊராமால்” என்பது பொருந்தும், ஒருகாலத்தில் ஐரோப்பாவின் மேலைக்கோடியில் காணப்படும் புள்ளினம், ஒருகால் ஆசியாவின் தென்கோடியிலும், கீழ்க்கோடியிலும் காணப்படுவ துண்டு. மழைக்காலத்தில் மாத்திரம் ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளி லிருந்து வடஐரோப்பாவுக்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட புள்வகைகள் போகின்றன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்7. இதனை நோக்கின். ஆசிரியர் தொல்காப்பியனார் குறிஞ்சி முதலாக வகுத் துரைத்த நிலப்பகுதிகட்குக் கருப்பொருள் கூறுமிடத்துப் புள்ளினம், எந்நிலத்துக் காணப்படினும் அந்நிலத்துக்கே உரியதாக வாராது என்றும், ஆயினும் எந்த நிலத்து வந்துளதோ அந்த நிலத்துக்குரிய கருப்பொருளாம் என்றும் உரைப்பாராய், “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும். அந்நிலம் பொழுதொடு வாரா” என்றும், “ஆயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்” என்றும் கூறினார். இதுபற்றியே வேற்று நாட்டினின்றும் வந்திருந்த வெண்குருகினை, விருந்தின் வெண்குருகு என்றார். மகிழ்-கள். ஆஅய் - பொதியின்மலைப் பகுதியிலுள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு இன்றுள்ள கொல்லத்துக்கும் திருவதங்கோட்டுக்கும் இடையி லுள்ள வேணாட்டைச் சங்ககாலத்தில் ஆண்டு வந்த வேளிர் குலக் குறுநிலத் தலைவன்; இவனை வேள்ஆய் என்றும் ஆஅய் அண்டிரன் என்றும் கூறுவர். அந்நாளில் மேலை நாட்டினின்றும் போந்த தாலமி முதலிய யவனர்கள் இப் பகுதியை ஆய்நாடு என்றே குறித்துள்ளனர்; பிற்காலத் திரு வாங்கூர் வேந்தர்கள் தங்களை வேணாட்டடிகள் என்று கூறிக்கொள்வதும் இக்கருத்தே பற்றி யென அறிக, ஆஅய் அண்டிரனுடைய வள்ளன்மையை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற சான்றோர். பாடிய பாட்டுக்கள் நன்கு விளக்குவன. தேர்ப்பாணி, தேரிற் கட்டிய மணியின் ஓசை. சொல்லும் பொருளும் ஒவ்வாத பொய்யுரை என்றற்குப் பயன் தெரி பனுவல் என்றார்; மெய்யுரை போல் தோன்றி ஆராயு மிடத்துப் பொய்யாய் ஒழியும் சொல் என்றவாறு. பிறரும், “பாணன் கையதை, வள்ளுயிர்த்தண்ணுமை போல, உள் யாதும் இல்லதோர் போர்வை யஞ் சொல்1” என்றும், “பொய்பொதி கொடுஞ்சொல்2” என்றும் குறிப்பது காண்க பணிமொழி, பணிவைப் புலப்படுத்தும் சொற்கள். நுணங் கெழில் என்றற்குக் கூர்மையையுடைய அழகு என்பர் நச்சினார்க்கினியர். இறை - சந்து, எல் - இலக்கம்.

தலைமகளது மனை நோக்கிப்போந்த பாணன் தலைவன் புகழைப் பாடிக் கொண்டும் அவனுடைய காதன்மையை வியந்துகொண்டும் வந்தமையின் தண்ணந் துறைவன் தூதொடு வந்த பாண என்றாள். தலைமகன் புகழும் காதலன்பும் பிறர் கூறக் கேட்பின் தலைவியின் உள்ளத்து வெம்மை நீங்கும் என்னும் கருத்தின னாதலைத் தான் உணர்ந்து கொண்டமை தோன்றத் தண்ணந் துறைவன் என்றும், அவன் பொருட்டு வாயில் வேண்டி வந்தமைபற்றித் தூதொடு வந்த பாண என்றும் விதந்து மொழிந்தாள். அது கேட்டுத் தன் கருத்து முடியும் என்ற கிளர்ச்சியுடன் பாணன், தலைவன் சிறப்புக்களை மிகவும் புனைந்து கூறலும், நீ கூறுவன கூறியாங்குக் கோடற்குரிய வாய்மையுடைய வல்லவே என்பாளாய், பயன்தெரி பனுவல் என்றாள். பயன் நோக்கி இல்லது பெய்து கூறுவன வாகலின், நின் சொற்கள் ஆராய்ந் தல்லது கொள்ளற் குரியவல்ல என்று தோழி சொல்வதாக எண்ணிப் பாணன் சிறிது உள்ளத்தே அயர்ச்சியுற்றான்; அஃது அவன் மெய்ப்பட்டுத் தோன்றுதலும், தோழி அது நோக்கிப் பைதற் பாண என்றாள். அவட்குத் தான் கூறுவன அனைத் தும் பொய்யொடு படாத மெய்ம்மை யுரைகளே எனப் பணிந்து கூறினானாக, நின் வாய் பொய் கூறிப் பயின்றது என்றற்கு நின் வாய் மொழி என்றும், அம்மொழிகள் நின் பணிவைப் புலப்படுத்துவனவே யன்றித் தலைமகள் உள்ளத் தில் நிமிர்ந்து நிற்கும் ஊடலை தணித்தற்குரியவல்ல என்பாள். பணிமொழி என்றும், களையா என்றும் இசைத்தாள். ஊடல் தணிந்தாலன்றிப் பசப்பு நீங்காமையின், திருநுதல் பாஅய பசப்புக் களையா என்பா ளாயினள். அவ்வூடல் தானும் நுணங்கெழில் இழந்தமையாற் பிறந்த தென்றும், எழில் பேணும் நோக்கம் இளமைக்குச் சிறப்பாதலின், இறையேர் எல்வளைக் குறுமகள் என்றும். பிறைபோலும் ஒளிமிக்க திருநுத லாதலின். பசப்பு இனிது விளங்குகிற தென்றற்குப் பிறையேர் திருநுதல் என்றும் வகுத்துரைத்தாள். ஞாழலின் புதுப்பூவோடு புன்னையின் மலர்கள் பரவுதலால், கானல் மணம் கமழும் என்றதனால், தலைமகன்நலம் புதியராய பரத்தையரோடு தலைமகளையும் ஒப்பக்கொண்டு இன்புறக் கருதுகின்றான் எனத் தலைவி நலன் இழந்து ஊடுதற்குரிய ஏதுவைத் தோழி உள்ளுறுத் துரைத்தலால் மணங்கமழ் கானல் நோக்கி நுணங் கெழில் இழந்தனள் தலைவி என்றாள். இதனாற் பயன் தோழி பாணற்கு வாயில் மறுப்பது.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


இளவேட்டனார் என்ற சான்றோர் ஒருவர் இத்தொகை நூற்கண் காணப்படுகின்றார்; ஆயினும் இவர் பெயர் அறுவை வாணிகன் என்ற தொடராற் சிறப்பிக்கப்படுதலால், இருவரும் வேறு வேறாதல் விளங்குகிறது. அகநானூறு இவரை மதுரை அறுவை வாணிகன் என்று குறிப்பதால் இவ்விளவேட்டனார் மதுரை நகர்க்கண் இருந்து அறுவை வாணிகம் புரிந்தவ ரென்பது தெளிதாம். அறுவை வாணிகம், உடை வாணிகம், இவர் பாடிய வாகப் பல பாட்டுக்கள் தொகைநூல்களில் உள்ளன. ஆடவர் பெண்டிர் என்ற இருவர் உள்ளத்தும் முளைத்தெழுந்த காதலை நன்கு வளர்த்து இருவர்உயிரும் ஓருயிராய் ஒன்றி அமையுமாறு செய்து வாழ்க்கைத் துணைவ ராவதுதான் மனையறம் புரிந்து மாண்பெய்தும் நெறியில் தமிழர் கண்ட பண்டை நாளைப் பண்பாடு. தனித்துக் கண்ட தலைவிபால் கருத்தைச் செலுத்திய தலைமகன், மறுநாளும் அவளை அவ்விடத்தே கண்டு முன்னாள் முளைத்த காதலை உறுதி செய்துகொண்டு, அவள் தன் கண்ணாற் குறித்துக் காட்டிய தோழியை அறிந்துகொள்வான்; பின்பு தோழியொடு சொல்லாடி அவளுடைய நட்பைப் பெற்றுத் தனக்கும் தலைமகட்கும் உளதாகிய காதற்றொடர்பை வலி யுடைய தாக்கிக் கொள்ள முயல்வன். தலைமகளும் தோழியும் குறிக்கு மிடங்களில் போந்து தலைமகளைக் கண்டு தன் உள்ளத்துக் காதலின் மாண்பை உணர்த்துவன்; பகற் குறிக்கண் வந்தொழுகும் அவனது தொடர்பு புறத்தார்க்குத் தெரியின் வரும் ஏதத்துக்கு அஞ்சித் தோழி அவனை இரவின்கண் வந்து தலையளிக்குமாறு வேண்டுவள். தலைமகள் உறையும் ஊர் மலைநாடாதலின், மலையும் காடும் கடந்து வழியில் வன விலங்குகளால் விளையக் கூடிய தீங்குகளைப் பொருள்செய்யாது வந்து போகும் தலைமகன் மாண்பைத் தலைமகள் நன்குணர்ந்து பேரன்பு செய்யு முகத்தால் அவள் அவனையின்றி யமையாத காதலன்பு கொள்ளுகின்றாள். இரவுப்போதினும் பகற்போதினும் இருவரும் தனித்துக் காண்பதால் தலைவியின் மாண்புக்கு மாசு உண்டாகுமோ என்ற அச்சம் தோழிக்கு உண்டாகிறது. தலை மகட்கு அவனைக் கூடிய வழிப் பிறக்கும் இன்பம், பிரிவால் கெடுவது பெருந்துயரைச் செய்கிறது.

அது காணும் தோழி தலைமகனைக் கண்டு தலைவியை வரைந்து கொள்வதே இனிச் செயற்பாலது எனத் தெரிவிக்க விரும்புகின்றாள். தலைவியின் காதலன்பும் கற்பு நலமும் தலைமகன் உணர்ந்தன வாதலின், அறியாதான் போலக் கருதி வரைந்து கொள்ளுமாறு அறி வுறுத்துவது தோழிக்கு அறமாகத் தோன்றுகின்றிலது. பகற்குறி வருங்கால் அவனை மறுத்து இரவுக்குறி வருக என்றும், இரவு வருவானைப் பகல் வருக என்றும், இரண்டும் ஆகா என ஒரோ வழி மறுத்தும் தோழி உரைநிகழ்த்துவள். தலைமகன் உண்மை யுணர்ந்து தலைவியை வரைந்துகொள்வன். இங்ஙனம் நிகழும் காதலொழுக்கத்தில் ஒருநாள் இரவின்கண், தலைவியின் மனைப் பக்கத்தே குறித்த இடமொன்றுக்குத் தலைவன் போந்து தன் வருகையைக் குறிகளால் தெரிவித்தான். தலைமகளும் தோழியும் சென்று அவனைக் கண்டு இன்புற்றனர். அப்போது தோழி, அவனை நோக்கி, “நன்மலைநாடனே, நின்னையே காதலித்து நின்பொருட்டே இங்கு உறைகின்றாள் என் தலைவி: நினக்குச் சிறிது ஊறு நேரினும் உயிர்வாழாத அத்துணைப் பெருங்காத லுடைய ளாகலின், அவள் உயிரைப் பொருளாக நீ நினைக் கின்றாயில்லை. கொடிய பாம்புகள் இயங்கும் காட்டின் வழி யாகக் கையில் ஏந்திய வேலொன்றே துணையாகக்கொண்டு மலைச்சார லிடத்து எம் சிறுகுடிக்கு நீ இரவின் கண் வரு கின்றாய்; இது நற்பண்புடைய செயல் எனச் சான்றோர் பாராட் டும் தகுதியதாகாது; இதனை நின் மனங்கொளல் வேண்டும்” என்று முறையிட்டாள்.

தோழியது இவ்வுரையின்கண், தலைவியது காதல் மாண்பும் இரவுக்குறி வரும் நெறியினது ஏதமும் கூறி, இவ்வொழுக்கம் பண்புடையார் மேற்கொள்ளும் நற்செயலன்மையின், நீ விரைந்து சென்று உரியன முயன்று இவளை வரைந்து கோடலே நினக்கு நேரிய பண்பாகும் என்பதும்; அது கேட்டு அவனும் மகிழ்ந்து வரைவு மேற்கோடலும் கண்ட மதுரை அறுவை வாணிகரான இளவேட்டனார் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் 1இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீந்தேன் கல்லளைக்
குறக்குறு மாக்கள் உண்ட 2மிச்சில்
புன்றலை மந்தி வன்பறழ் நக்கும்
நன்மலை நாட பண்பெனப் படுமோ
நின்நயந் துறைவி இன்னுயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆரிருள்3 நடுநாள்
மைபடு சிறுநெறி எஃதுணையாக
ஆரம் கமழும் மார்வினை
சாரற் சிறுகுடி ஈங்குநீ வரலே

இது, தோழி இரவுக்குறி மறுத்தது.

உரை
சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கை - வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணுமாறு மலர்ந்த கரிய அடியினை யுடைய வேங்கைமரத்தின்; பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண்இறாஅல் - பெரிய கிளையின்கண் ஈட்டி வைத்த கொழுவிய கண்களையுடைய தேனடையில்; புள்ளுற்றுக் கசிந்த தீந்தேன் கல்லளை - தேனீக்கள் நெருங்குதலாற் கிழிந்து கசிந்த தீவிய தேன் கற்குழியில் படிந்ததனை; குறக்குறுமாக்கள் உண்ட மிச்சில் - குறவர்களின் சிறுவர்கள் வழித்துண்ண எஞ்சிய மிச்சிலை; புன்றலை மந்தி வன்பறழ் நக்கும் - புல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டி போந்து நக்கி யுண்ணும்; நன்மலை நாட - நல்ல மலைநாட்டுக்குத் தலைவனே; பண்பு எனப்படுமோ - பாடறிந்தொழுகும் பண்புடைமை என்று சான்றோரால் கருதப்பட மாட்டா தன்றோ; நின் நயந்துறைவி இன் உயிர் உள்ளாய் - நின்னையே காதலித்து இங்கே உறையும் தலைமகளின் இனிய உயிர்க்கு உளதாகும் தீங்கினை நீ எண்ணுகின்றாயில்லை; அணங்குடை அரவின் ஆரிருள் நடுநாள் - அச்சத்தையுடைய பாம்புகள் இயங்கும் நிறைந்த இருள் மிக்க நள்ளிரவில்; மைபடு சிறு நெறி - குளிர்முகில் படிந்த சிறுவழியில்; எஃகு துணையாக-கையிலேந்திய வேலையே துணையாகக் கொண்டு; ஆரம் கமழும் மார்பினை - சந்தனத்தின் மணம் நாறும் மார்பினை யுடையையாய்; சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரல் - மலைச்சாரற் புறத்திலுள்ள சிறுகுடியாகிய இங்கு நீ வருவது எ.று.

நாட, நின்னயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்; நடுநாள், சிறுநெறி எஃகு துணையாக மார்பினை, நீ சிறுகுடி ஈங்கு வரல், பண்பு எனப்படுமோ, காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பூக்கள் இதழ் விரிதல், வண்டினம் இனிது புகுந்து தம்பாலுள்ள தேனைப் பெறுமாற்றால், கருக்கொண்டு இனம் பெருக்கும் நற்பணி குறித்த தாயினும், தேனுண்ணல் முற்படக் கண்கூடாக நிகழ்தலின் அதனையே விதந்து சுரும்புண விரிந்த வேங்கை என்றார். பெருங்கிளையொடு கூடிய உயரிய மரமாதலின் கருங்கால் வேங்கை என்றார். கருங்கால் - பருத்த அடிமரம். கொழுங்கண் இறால் - அகன்ற கொழுவிய கண்களையுடைய தேன் அடை; அக்கண் தேனீக்கள் ஒடுங்கியுறைதற்கும் இட மாமென அறிக. பறக்கும் செயல்பற்றி, தேனீ புள்ளெனப் பட்டது. ‘உற்று’, செய்தெனச்சம் காரணப்பொருட்டு; மழை பெய்து குளம் நிறைந்தது என்றாற் போல. கல்லளை - கற்குழி, குறுமாக்கள் - இளஞ்சிறுவர். ஐரோப்பிய நாட்டவரை ஐரோப்பியரென்றும், ஆப்பிரிக்க நாட்டினரை ஆப்பிரிக்க ரென்றும், ஆந்திர நாட்டாரை ஆந்திரரென்றும், கேரள நாட்டாரைக் கேரள ரென்றும் கூறுவது போலப் பண்டை யோர் குறிஞ்சிநிலத்தவரைக் குறவர், வேட்டுவர் என்றும், முல்லைநிலத்தாரை ஆய ரென்றும், மருதநிலத்தவரை உழவர், வேளாள ரென்றும், நெய்தல் நிலத்தாரைப் பரதவர் என்றும் குறித்து வழங்கினர், விடாப்பிடி யுடைமை பற்றிக் குரங்கின் குட்டி வன்பறழ் எனப்பட்டது. பண்பு - அவரவர் பாடறிந்து ஒழுகும் நற்பண்பு, உறைவி - உறை பவள். கண்டார்க்கு அச்சம் தருவது பற்றி அணங்குடை யரவு என்றார்; “பாம்பென்றால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. மை - கூதிர்காலக் குளிர்முகில். எஃகு - வேற்படை.

உள்ளுறையால் நொதுமலர் வரைவு கருதி முயல்வதனை உரைக்கின்றா ளாகலின், வெளிப்படையாகத் தலைமகளின் உள்ளக் காதலைப் புலப்படுத்தற்கு, நின் நயந்துறைவி எனவும், தமர் பிறர்க்கு மகட்கொடை நேர்வா ராயின், இவள் உயிர்வாழாள் என்பாள். இன்னுயிர் உள்ளாய் எனவும், நெறியருமை கூறி இரவுக்குறி மறுத்து வரைவு கடாவும் கருத்தின ளாதலின், அணங்குடை அரவின் ஆரிருள் நடு நாள் மைபடு சிறுநெறி எனவும், நீ வேலேந்தி வருவது காணின் சிறு குடியினர் தீங்கிழைப்ப ரென்பாள், சாரற் சிறுகுடி எனவும். நீ அவர்கட்புலனாகாமை வரினும் நின் மார்பிற் சாந்தம் மணம் கமழ்ந்து நின்னைக் காட்டிவிடும் என்றற்கு, ஆரம் கமழும் மார்பினை எனவும், இனிச் சான்றோர் துணையாக வரைவொடு வருதல் பண்பாகுமே யன்றி, எஃகு துணையாக வருதல் பண்பு எனப்படாது என்பாள், எஃகு துணையாக ஈங்கு நீ வரல் பண்பெனப்படுமோ எனவும் தோழி கூறினாள். தேன் அடையிற் கசிந்த தேனைக் குறக்குறுமாக்கள் உண்டு கழிய. மிச்சிலை மந்தியின் வன்பறழ் நக்கும் என்றது, தலைமகள்பால் கதிர்த்துத் தோன்றும் நலத்தை நீ நுகர்ந்து கழியவும் நொதுமலர் வரையக் கருதுகின்றனர் என்பதாம்.

தலைமகன் எஃகு துணையாக, மார்பிற் சாந்தம் கமழ வரின், சிறு குடியோர் தீங்கிழைப்ப ரெனத் தோழி கூறுவது போல, “கடம்புசூடி உடம்பிடி யேந்தி, மடந்தை பொருட்டால் வருவது இவ்வூர், அறுமுகமில்லை அணிமயி லில்லை. குறமகள் இல்லை செறிதோள் இல்லை. கடம்பூண் தெய்வ மாக நேரார், மடவர்மன்றஇச் சிறுகுடி யோரே” எனப் பிறாண்டும் தோழியொருத்தி கூறுவது காண்க.1

இடைக்காடனார்


காணப்படும் நம் உலகத்தைப் பண்டை நாளிலேயே நிலம், நீர், தீ, வளி, விசும்பு என ஐந்து கூறுகளாக வகுத்து அவற்றின் இயல்புகளை அறிய அறிஞர் முயன்றனர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும். கலந்த மயக்கம் உலகம்” என்று ஆசிரியர் கூறுவதைக் காணலாம். இவற்றோடு காலம், உயிர், கடவுள் என்ற மூன்றும் கூட்டி எட்டு எனக் கோடலும் ஒன்று. இவை எண்பொருள் என்று சிறப்பாகக் கூறப்படும். உலகியற் பொருளின் இயல்புகளை மேலும் ஆராய்ந்தவழி ஒவ்வொரு பொருளின் கண்ணும் உள்ளீடாக இருவகைப் பண்புகள் புலனாயின; அவை பொருண்மைப் பண்பு, தொழிற்பண்பு என்பன. பொருண்மையைப் பொருள் எனவும், தொழின்மையை வினை யெனவும் பண்டைத் தமிழறிஞர் குறித்தனர். வினை யென்பது பொருளின் நீங்காது அதனையே இடமாகக் கொண்டு அதன் ஆற்றல் வடிவாய் இருப்பது. பொருள் ஒன்று ஓரிடத்து இருத்தற்கும், இராது இயங்குதற்கும் ஏதுவாய் உள்ள ஆற்றலே வினையாவது. பொருளும், வினையுமாகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே மக்கள் மனத்தில் எண்ணங்கள் அமைகின்றன. எண்ணங்களின் வடிவம் சொல்லாதல் கொண்டே பழந்தமிழ்ப் பெருமக்கள், மக்களது பேச்சிடை நிலவும் சொற்கள் அனைத்தும், பெயர் வினை என இரண்டே வகைப்படும் என்றனர்; “சொல்லெனப் படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப அறிந்திசினோரே” என ஆசிரியர் எடுத்துரைப்பது காண்க.

இப்பொருள் அளவு, வடிவு, நிறம், சுவை முதலிய கூறுகளாகக் காணப்படும் உருவுடையனவும், காணப்படாமையால் உரு வில்லனவும் என இருவகையாக இயலும்; எனினும் இவ் வுருவமும், உருவின்மையும் பொருட்கு உரியவை யல்ல; அவற் றின் உள்ளீடாய் இயக்கும் வினைக்கே உரியவை என்பது பின்பு காணப்பட்டது. இன்றைய விஞ்ஞான நெறியும் பொருள்களை அணு அணுவாக நுணுக்கிச் சென்று முடிவில் எத்தகைய நுண் கருவிக்கும் புலனாகாத அளவில் நுணுக்கியவழி ஆற்றலாய் (Energy) வினையாய் முடிவதைக் கண்டுரைக்கின்றது. இதனால் பொருளின் ஆக்கமும் வடிவும் வினையே என்பது தெளிவாம். ஆதலால் பொருள் தோன்றும் போதே வினையும் உடன் தோன்றுகிறது என்பது முக்காலத்தும் ஒப்பநிற்கும் உண்மை யாகிறது. மக்கள் தோன்றும் போதே உயிரும் உடன் தோன்றுவது போல வினையும் உடன்தோன்றுவதாலும், உயிருள்வழி உட லிடத்தே செய்கையும், உயிர் நீங்கியவழிச் செயலின்மையும் கண்டோர் உயிரே செயல் என்றும், செயலை வினை யென்னும் வழக்குப்பற்றி உயிரே வினை என்றும் கூறினர். “வினையே ஆடவர்க்கு உயிர்” என்று பண்டை ஆசிரியன்மார் கூறியது எத்துணை உண்மையுரையாகிறது. காண்மின்! இதனால் உயிர்ப் பொருள், உயிரில்பொருள் ஆகிய எல்லாவற்றிற்கும் வினை இயல்பாக அமைந்திருப்பது இனிது விளங்குதலால், வினை செய்வதே உயிரொடு கூடிய உடம்பின் செயலும் பயனுமாதல் தெளியப்படும். நல்வினை செய்வது வாழ்வும் செய்யாமை தாழ்வு மாகலின், வாழ்வாங்கு வாழப் பிறந்த மக்கட்கு வினை உரிமை ஆயிற்று.

இவ்வண்ணம் சிறப்புற்று விளங்கும் வினைக்கு இடம், வினையின் உருவாய் விரிந்து பரந்து எல்லையற்றுத் தோன்றும் இந்த உலகமேயாகும்; ஆகவே வினையின் பேரெல்லையும் இந்த உலகப் பரப்பாயிற்று, நிலத்தை அகழ்ந்தும், கடலுள் மூழ்கியும், வானத்திற் பறந்து சென்று ஆங்குக் காணப்படும் விண்மீன், கோள்கள் முதலியவற்றை அளந்தும் எண்ணியும் அவற்றோடு வாழ்க்கைத் தொடர்பு கொள்ள முயன்றும் இன்றைய மக்களுயிர் அரும்பாடு படுவதெல்லாம் அவற்றின் உள்ளீடாக நிலவும் வினையின் இயக்கமே யாகும். இவ்வினையின் சிற்றெல்லை உயிர் நிற்றற்கு இடமாகிய உடம்பல்லது இல்லை, உடம்பின் நீங்கிய உயிர்க்கோ, உயிரின் நீங்கிய உடம்புக்கோ தனிநிலையில் உருவுடைய வினையின்மையின், உடம்போடு கூடிய உயிரை வினை முதலாகக் கொள்ளின் உடம்பொடு கூடிய உயிர்க்கு வினை செய்தற்குரிய சிற்றெல்லை அது வாழும் மனையே யாயிற்று. ஆகவே சிற்றெல்லையாகிய மனையின்கண் இருந்து வினைசெய்யும் உயிர்க்கு விரிந்து பரந்து காணப்படும் உலகம் பேரெல்லையாய் வாழிடமாகிறது; இதுபற்றியே நல்லறிஞர் “பெரிதே உலகம் பேணுநர் பலரே” என இதன் பெருமையை எடுத்துக் காட்டியுள்ளனர்.

வினைநிகழ்ச்சிக் குரிய சிற்றெல்லையும் பேரெல்லையும் கண்டபின், வினையின் இயல்புகளைக் காண்டல் வேண்டும். வினையாய், வினைமுதலாய் இயங்கும் உயிர்க்கு முதற்கடனாக வேண்டுவது உயிர் நிற்றற்குரிய உடம்பு. “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” என்பர் திருமூலர். உடம்பொடு கூடிய உயிர், உடம்பைப் பேணுதற்கு உண்டியும் உறக்கமும் உறையுளும் நாடுவது முதல்வினை. உண்டி வினைக்குப் பொருளும் உறக்க வினைக்கு உறையுளும் இன்றியமையாதன. உடம்புடையுயிர்கள் முதற்படியாகத் தேடிக்கொள்ளும் உண்டி உறையுளுக்குப் பின், ஆணும் பெண்ணுமாய்க் கூடி வேறு உடம்புடை யுயிர் களைத் தோற்றுவிக்கின்றன. சிற்றெல்லைக்கண் இருந்து செய்யப்படும் முதல்வினையின் பயனாக வேறு உடம்புடை யுயிர் தரும் வினை தோன்றுகிறது. இதனால் அதன் இனம் பெருகுதலின் இனம் பெருக்கும் வினையாய் அஃது அமைகிறது. ஆகவே உண்டல், உறங்கல், இனம்பெருக்கல் என்ற மூவகை வினைக்கும் மனையகம் சிற்றெல்லையாதல் தெளிவாம். இவை எல்லாவுயிர்க்கும் பொது. இனிச் சிறப்புடைய மக்க ளுயிரைக் காண்பாம்.

உண்டிவினை குறித்துப் பொருள்செய்தலும், அதனைக் காத்தலும், தன்னாற் பெருகிய இனத்துக்கு வழங்குதலும் என வரும் செயல்வகைகளால் மக்களுயிரின் வினையெல்லை விரிந்து உலகம் முழுதும் பரவி நிற்கிறது; மேலும், உலகின் பரப்பு, ஓரிடத்துள்ள பொருள் பிறிதோரிடத்தின்றி இடந்தோறும் வேறுவேறு வகையில் பொருளும் வினையும் நிகழ்தற்கு இடந் தருவது கருத்தாக அமைந்திருக்கிறது. அதனால் உலகில் உள்ள பொருள்வகை அனைத்தும் ஓரிடத்தே கிடைப்பது இல்லை; ஆயினும் அவையனைத்தும் உலக முழுவாழ்வுக்கு வேண்டப்படுவன. எல்லாவற்றையும் பெறுதற்கு இடமும் காலமும் பிறவும் இயலா தொழியினும் ஒருசில அரியவற்றைக் கொண்டு வாழ முயல்வதும் அதற்கேற்ற வினைசெய்வதும் மக்களுயிர்க்கு இயல்பு. அதனாற்றான், ஏனை உயிர்களைவிட மக்களுயிரின் வினையெல்லை உலகமுழுதும் விரிந்து பரந்து விளங்குகிறது.

சிற்றெல்லைக்கண் ணிருந்து அவ்வப்போது வேண்டுவன தேடிக் கொண்டமைவது மக்களுயிரின் கீழ்நிலை உயிர் களிடத்தும், காணப்படுதலின், மேன்மக்கள் தமது நல்வாழ்வு குறித்தும் தமது இனத்தின் நல்வாழ்வு குறித்தும் உலகின் பல பகுதிகட்கும் பரந்து சென்று வினை செய்யும் பான்மை யுடைய ராயினர். நாடு பரப்பும் செயல்வகைகளாக நாட்டு வரலாறுகள் கூறுவன அனைத்துக்கும் அடிப்படை மக்களுயிரின் கண் இயற்கையில் அமைந்த பேரெல்லை வினைத்துடிப்பே என்று உணர்தல் வேண்டும். இத்துடிப்பு மக்களுயிர்பால் பொதுவாக இருப்பினும், குடிமை, சூழ்நிலை, அறிவு, ஆண்மைக் கூறுகளால் நல்வாய்ப்புடைய மக்களிடத்தேதான் விளங்கித் தோன்றுகிறது; அவர்களே தலைமை நன்மக்க ளாகின்றார்கள்.
மனைத்தக்க மாண்புடைய மங்கையான தலைமகளை மணந்து வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தலைமகன் வினை காரண மாக மனையின் நீங்கிச் சென்றான். பேரெல்லையிற் பிறங்கும் பெருவினைத் துடிப்பால் பிரிந்தானாயினும், அவன் உள்ளம், சிற்றெல்லைக்கண் இருந்து செய்யும் சிறப்புடைய இன்ப வினையின்கண் ஊன்றி நிற்றலின், அவனைப் பின்னின்று ஈர்த்த வண்ணம் இருந்தது; எனினும், அதனைப் பிற்படுத்தி மேற் கொண்ட வினை முடியுங்காறும் மனையிடத்தை மறந்து விடுவது வினையாண்மையின் வீறுபாடு. வினைமுற்றியதும், மனத்திட்பம் வேறுபட்டு மனைவாழ்வை நினைப்பித்து விடும். மனையறத்தாற் பிறக்கும் இன்பவுணர்வு மேலோங்கி அவனை விரைந்து மீளுதல் வேண்டும் எனத் தூண்டும். அவ்வாறு தூண்டப்பட்டுத் துடிக்கும் நெஞ்சினை நோக்கினான் வினைமுற்றிய தலைமகன். வினை பற்றிய எண்ணங்களே நிறைந்திருந்த உள்ளம். மனைவாழும் மடந்தையாகிய காதலியின் காதல் நினைவுகள் மிகுந்து நின்றது. தன் பிரிவால் காதலி எய்திய வருத்தம் மனக்கண்ணில் வயங்கித் தோன்றியது. நெஞ்சே, நாம் மேற்கொண்ட வினையை முடித்துக் கொண்டோம்; இச் செய்தி இன்னே நம் தலைமகட்குத் தெரியு மாயின், நம் வரவு நோக்கி வருந்தி நிற்கும் அவளுடைய கவலை நீங்குமன்றோ; சிறுகுடியிலுள்ள நமது பெருமனைக்கண் வாழும் பல்லிகள் அவள் உணருமாறு நமது வருகையை அறிவிக்கும் கொல்லோ?” என்றான்.

அவனது உரையின்கண், பேரெல்லையிற் பிறக்கும். பெரு வினைக்கண் தோய்ந்திருந்த அவன் மனம் வினைமுற்றியதும் அவ்வெல்லை சுருங்கி மனையுறையும் காதலியின் நினைவிடை ஒன்றி நின்று தன் வரவினைப் பல்லி சொல்லுமோ எனப் படர்ந் தமை கண்டு வியந்த இடைக்காடனார் இப்பாட்டைப் பாடு கின்றார்.

முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
1வருகுவம் என்னும் பருவரல் தீரப்
படுங்கொல் வாழி 2நெடுஞ்சுவர்ப் பல்லி
பரற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த 3நறுவீ முல்லை
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் 4படீஇயர்
வெண்போழ் 5ததைஇய அலங்கலந் தொடலை
மறுகுடன் கமழும் மாலைச்
6சிறுகுடி யாங்கண்எம் பெருநக ரானே.

இது, வினைமுற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்குச் சொல்லியது.

உரை
முன்னியது முடித்தனம் ஆயின் - மேற்கொண்டு போந்த வினைமுற்றி மீள்கின்ற மாகலின்; நண்ணுதல் - நல்ல நெற்றி யினையுடையளான நம் காதலியாவாள்; வருகுவம் என்னும் பருவரல் தீர - யாம் வந்து சேர்வேம் என்று வற்புறுத்த சொல்வழி நின்று எய்தும் வருத்தம் நீங்குமாறு; நெடுஞ்சுவர்ப் பல்லி - நெடிய சுவரின்கண் வாழும் பல்லி; படுங்கொல் - நமது வருகையை ஒலித்துத் தெரிவிக்குங் கொல்லோ; பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி - பரற்கற்கள் நிறைந்த பாலை நிலத்து வளர்ந்து நிற்கும் சிரப்பறவையின் கொண்டை போல் பூத்துள்ள கள்ளிமரத்தின்; மீமிசைக் குலித்த நறுவீ முல்லை - மேலே படர்ந்து தழைத்துப் பூத்திருக்கும் நறிய பூக்களை யுடைய முல்லையை; ஆடுதலைத் துருவின் தோடு தலைப் பெயர்க்கும் - அசைகின்ற தலையையுடைய ஆடுகளின் தொகுதியை மேய்ச்சலுள்ள இடம் நோக்கிச் செலுத்தும்; வன்கைஇடையன் - வலிய கையையுடைய இடையன்; எல்லிப் படீஇயர் - இரவின்கண் மலரும் பொருட்டு; வெண்போழ் ததைஇய அலங்கலந் தொடலை - வெண்மையான நாரால் அரும்புகள் நெருங்கத் தொடுக்கப்பட்ட அசைகின்ற மாலை யின் மணம்; மறுகுடன் கமழும் மாலை - தெருவிட மெங்கும் கமழும் அந்திப்போதில்; சிறுகுடி ஆங்கண் எம் பெருநகரான் - சிறுகுடியிடத்தே யுள்ள எமது பெரிய மனையின் கண் எ.று.

முன்னியது முடித்தனம்; ஆயின், நன்னுதல் பருவரல் தீர. சிறுகுடி ஆங்கண் எம்பெருநகரான் நெடுஞ்சுவர்ப் பல்லி படுங்கோல் வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. முன்னி யது. வினை முடித்தல் ஈண்டு முடித்து மீளுதல் மேனின்றது. ஆயின் - ஆகலின், நன்னுதல் என்றது தலைவியை. வருகுவம் என்னும் பருவரல் - வரவு நோக்கியிருக்கும் வருத்தம். படுதல் - ஒலித்தல், பரற்றலை - பரற்கற்கள் நிறைந்த பாலைநிறம். சிரல் - சிச்சிலிப் பறவை. கொல் - ஐயப்பொருட்டு கள்ளிப்பூவுக்குச் சிரற்பறவையின் கொண்டை உவமம். துரு - ஆடு; இது துருவை எனவும் வழங்கும், தோடு - தொகுதி, பனைமடலைப் போழ்ந்து கொண்ட மெல்லிய வெண்மையான நூல் போன்ற நாரைப் போழ் என்றார். “போந்தை யரவாய் மாமடல் நாரும் போழும் கிணையொடு சுருக்கி1” என்பது காண்க. பனைமடலின் போழ் பொன்னிறமும் உட்புறம் வெண்ணிறமும் உடையது; போழொடு கூடிய நாரே பூத்தொடுத்தற்குரிய நீட்சியும் வன்மை பெற் றிருத்தல் யாவரும் நன்கறிந்த தொன்று. அலங்கல், அசைதல், தொடலை - மாலை, முல்லையரும்பு அந்தி மாலையில் மலர்வ தாகலின். மாலைப் போதில் தெரு வழியே கொணரும் போது மலர்ந்து மணம் கமழ்ந்தலின் மறுகுடன் கமழும் மாலை என்றார்.

வினையே உயிராகக் கொண்ட தலைமகன் மேற்கொண்ட வினையை முடித்தல்லது பிறிதியாதும் நினைப்பது இலனா யினும், வினைமுடிவும் காதலியின் காதனினைவும், இருள் நீக்கமும் ஒளிவிளக்கமும் போல உடனிகழ்தலின், வினை முடிந்தவுடனே காதலியை நோக்கி மீள்வானாயினமையின், முன்னியது முடித்தன மாயின் என்றான். விணைமுடிவையே நோக்கி யிருக்கும் காதலிக்கு அதன் முடிவை முன்னர் உணர்த்திப் பின்னர்த்தன் வருகையை உணர்த்தலுறின் காலக்கழிவும், தலைமகட்கு ஆற்றாமையும் தோன்று மென்ற கருத்தால் தானே விரைந்து வருமாறு தோன்ற, முடித்தனம் ஆயின் என்றான் எனினும் அமையும். தன்னைக் காணும் போதெல்லாம் முகம் மலர்ந்து ஒளி சிறந்து விளங்கும் நுதலுடைமை பற்றி, நன்னுதல் என்றான். காலை வாரா ராயினும் மாலை வாரா ரல்லர் என்று வரவுநோக்கிப் பிரிவுத்துயரால் வருந்துதலை நினைந்து கூறலின், வருகுவம் என்னும் பருவரல் என்றான். தூது நோக்கியும் பல்லி சொல் கேட்டும் பகற்போதினைக் கழித்து வருந்தும் தலைவியின் செயலை அவளும் தோழியும் சொல்லக் கேட்டுளா னாகலின் படுங்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி என்றான். பல்லி சொல்லிற் பயனுண்டு என்பது பற்றி வாழி எனல் இயல்பு. ஆற்றாது வருந்தும் தலைவிக்குப் பல்லியின் சொல் ஆற்று மாறு பயத்தலின் வாழி என்றான் எனினுமாம். நறுவீ முல்லை எல்லியில் மலருமாறு இடையன் தொடுத்த மாலை மறுகுடன் கமழும் என்றது. தான் வினைமுற்றி மீளும் செய்தியைத் தலைமகன் உணருமாறு பல்லி சொல்லுமாயின் அவள் மனைகலந்து விருந்தும் சிறப்பும் செய்து மகிழ்வாள் எனத் தலைமகன் குறிப்பித்தவாறாகக் கொள்க.

“கரணத்தினமைந்து முடிந்த காலை1” என்ற நூற்பாவின் கண் வரும். “அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்” என்ற தற்கு இதனைக் காட்டி, முன்னியது முடித்தன மாயின் என்னும் நற்றிணையுள் பொதுப்படச் சிறப்பும் கூறியவாறு காண்க” என்பர் நச்சினார்க்கினியர்.

பரணர்


சங்ககாலத் தமிழ்வாழ்வில் அரசர்களிடையே நிகழ்ந்த போர்களில் பார்ப்பனரும், மிக்க முதியவரும், சிறுவர்களும், பெண்டிரும், மகப்பெறாதோரும், நோயுற்றோரும் விலக்கப் பட்டனர். போரில் இறந்தோ ரெல்லாம் கட்டாண்மை மிக்க ஆடவர்களே; இதனால் நாட்டில் ஆண்மக்களினும் பெண் மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. ஆடவரும் பெண்டிரும் தத்தமக் குரிய வாழ்க்கைத் துணையைத் தாமே தேர்ந்து கொள்வதுதான் அந்நாளைய மணமுறை. ஆணும் பெண்ணுமாகத் தாம் பெற்ற மக்கட்கு உரிய வாழ்க்கைத்துணையைப் பெற்றோர் தேர்ந் தெடுத்து மணம் செய்யும் இன்றைய முறை தமிழ்வாழ்வில் இடைக்காலத்தே புகுந்த புதுநெறி. நன்மக்கட் பேற்றை எடுத்துரைத்த திருவள்ளுவனார், தம்மினும் தம்மக்கள் அறிவுடையராதல் வேண்டும் என்றும், தம்மக்களைச் சான்றோர் கூடிய நல்லவையில் கல்வி கேள்விகளில் சிறந்து முந்தியிருப்பச் செய்தல் தந்தைக்குக் கடன் என்றும், அவர் மெய்தீண்டல் உடற்கின்பம் என்றும், அவர் சொற்கேட்டல் செவிக்கு இன்ப மென்றும்: அவர்களே பெற்றோர் பெறும் பேறுகளுள் தலை மைப்பேறு என்றும். தம் மக்களையே தமக்குப் பொருளாகப் பெற்றோர் கருதுவ ரென்றும் விரியக் கூறினவர். யாண்டும் அம்மக்கட்குத் தக்க வாழ்க்கைத் துணையைப் பெற்றோர் தேடி மணம் செய்தல் வேண்டு மென்று கூறவே யில்லை. அதனால் மக்கட்கு வாழ்க்கைத்துணையைத் தேடிப்புணர்த்தல் பெற்றோர் கடன் என்பது அவர் காலவழக்கின்மை தெளியப்படும். மேலும், அவர் தாம் வகுத்த காமத்துப்பாலில் ஆடவரும் மகளிரும் தமக்கு ஒத்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து கொள்ளும் களவி யலையும் பின்னர் மணம் புரிந்துகொண்டு ஒருவர்க் கொருவர் துணைவராய் மனையறம் புரிதற்குரிய கற்பியலையும் விரியக் கூறுவது மேலே கண்ட முடிபையே வற்புறுத்துகின்றது. ஆயினும், பின்வந்த சிலப்பதிகாரத்தில் பெற்றோர் வாழ்க்கைத் துணையைத் தேடிப் புணர்க்கும் மணமுறை காணப்படுதலால், இளங்கோவடிகள் முதலிய சான்றோர் காலத்திலேயே தமிழ் வாழ்வு கொண்டிருந்த மணமுறையுடன் பெற்றோர் புணர்த்தும் மணமுறையும் உடன்நிலவினமை பெறப்படுகிறது.

பழந்தமிழ் முறையில் ஒருவனுக்கு ஒருத்தியும் ஒருத்திக்கு ஒருவனும் வாழ்க்கைத்துணையாயினர். முதல் மனைவிக்கு மகப்பேறு இல்லையாயின் வேறொருத்தியை மணக்கும் உரிமை ஆடவனுக்கு உண்டு; இரண்டாமவட்குப் பின் முறையாகிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி என்று பெயர் கூறுவர். இருவர்க்கு மேலும் உளராயின் அவர் காமக்கிழத்தியர் எனப்படுவர். இவ்வாறு பலர் ஒருவனுக்கு உரியவராக வரையப்படின், அவர்கள் உரிமை மகளிர் எனப்படுவாராயினர். ஆனால் இருமணம் செய்து கோடல் மகளிர்க்கு இயல்பன்று.

ஆடவர்தொகை குறைந்தும் மகளிர்தொகை மிகுந்தும் இருந்தமையின், மனைவியாகவோ காமக்கிழத்தியாகவோ உரிமை மகளாகவோ வரையப்படாத பெண்கள் வரைவில் மகளிர் என்று கூறப்படுவர். ஒருவரின் மேலும் பரக்கும் மன முடையவர் பரத்தர்; அவருள் ஆடவரைப் பரத்தர் என்றும் பெண்டிரைப் பரத்தையர் என்றும் சான்றோர் வழங்குவர். பரத்தையரைக் கூடி யொழுகுவது பரத்தைமை என்று கூறப்படும்.
மணமாகாத ஆடவர்கள் இரவில் தங்குவதற்கு ஒரு பொது விடம் வகுத்து அங்கே உறங்கச் செய்வது பண்டைநாளில் இருந்ததொரு வழக்காறு; அஃது இப்போது நாட்டுப்புறங் களிலும் மலைமுகடுகளில் வாழும் பழங்குடி மக்களிடையும் இருந்து வருகிறது. அவ்வாறே ஆடவ ரில்லாமையால் வாழ்க்கைத் துணையாக வரைந்து கொள்ளப்படாத மகளிர் பரத்தைமை பூண்டமையால், பரத்தையென ஒதுக்கப் பெற்றமை யின், அவர்கட்கு ஊர்ப்புறத்தே வீடுகள் அமைத்து வாழச் செய்தனர்; அவர் உறையுமிடம் பரத்தையர் சேரி என வழங்கி வந்தது. வரைவில் மகளிர், ஆடல் பாடல் அழகுகளால் தம்மை உயர்த்திப் பொருளீட்டித் தம் வாழ்க்கையை நடத்தினர். நாடு புரக்கும் தலைவர்கள் அவர்கள் நலத்தைப் பேணி வாழச் செய்வது புரவுக்கடனாகக் கொண்டிருந்தனர். வேறு நாடுகளில் வேந்த ரிடையே போர் நிகழுமாயின், வென்ற வேந்தர்க்குப் பொன்னும் பொருளும் போல நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் மகளிரைத் திறையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது; இதனை எரடோட்டஸ் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்களிலும் பரக்கக் காணலாம்.

எல்லா வுயிர்க்கும் இன்பநாட்டம் இயல்பிலே இருப்ப தொன்று; பரத்தையர் இதற்கு விலக்கல்ல ராகலின், அவர்கள் தமக்கினிய ஆடவர் மனத்தைத் தம்பால் ஈர்த்தற்குரிய செயல் வகைகளாக ஆடல் பாடல் முதலிய பலவற்றை மேற்கொண் டிருந்தனர். தாம் பெறும் இன்பம் நிலைபேறும் வளமும் எய்துதற்குப் பொருள் இன்றியமையாமையின், அவர்கள், பொருள் மிக்க செல்வத்தலைவர்களைத் தம்பால் ஈடுபடுமாறு முயல்வாராயினர். அத்துறையில் அவர்கட்குப் பாணர் என்பார் துணையாக இருந்தனர். பாண்மகளிரை விறலியர் என்பதும் உண்டு. அவர்கள் ஆடல் பாடல் அழகுகளில் வல்லுநராய், அரசர், செல்வர் முதலியோருடைய மறமாண்புகளையும் அறச் செயல்களையும் இசையிலும் கூத்திலும் அமைத்துப் புகழ்ந்து அவர்தரும் பரிசில் பெற்று வாழ்வர். அவ்வழக்காறு இடைக் காலச் சோழவேந்தன் இரண்டாங்குலோத்துங்கன் காலத்தும் இருந்ததனைக்1 கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இவ்வண்ணம் இயன்று வந்த பரத்தைமை வாழ்வில் தலை மக்கள் கலந்துகொண்டு ஒழுகுவாராயின் அவரது ஒழுக்கம் புறத்தொழுக்கம் எனப்படும் என்பதைப் பிறிதோரிடத்திற் கூறினாம். ஒருகால் தலைமகன் புறத்தொழுக்கம் மேற்கொண்டு சிறப்புடைய பரத்தையொருத்திபால் தொடர்பு பெற்றான். சின்னாட்குப்பின் வேறொரு பரத்தையின் நட்பு அவனுக்கு உண்டாயிற்று. அதனால் முன்னைப் பரத்தைக்குப் பொறாமை யுண்டாயிற்று. அவள்பால் அவன் சென்ற போது அவள் பெரிதும் புலந்து அவனுக்கு வாயில் மறுத்தாள். அதனால், அவன், விறலியொருத்தியை அப்பரத்தை மனைக்குத் தன்பொருட்டுத் தூது சென்று வாயில் பெறுமாறு முன்னர் விடுத்து, பின்னர் அவள் மனையில் நடந்த விழாவொன்றுக்கு வந்தான். விறலி வரக்கண்ட பரத்தையின் தோழி வெகுண்டு ஏனை மகளிரை நோக்கி, “தோழிமீர், எழுமின்; இதோ வந்து நிற்கும் இவ்விறலி நம் தலைவனைப் பிறமகளிர்பால் கொண்டு புணர்க்கும் செயலினள்; இவள் இப்போது நாம் செய்யும் இவ்வாடல் விழவினுள் வந் துள்ளா ளாகலின், நம் தலைவனை நாம் இப்போதே சூழ்ந்து காத்தல் வேண்டும். இல்லையேல் நாம் பலராயிருந்தும் பய னின்றாய் முடியும்” என்றாள்.

பரத்தைத் தோழியின் இவ்வுரைக்கண், மக்கள் பலரையும் பேணிப் புரக்கும் தக்கவனாகிய விடத்தும், புறத்தொழுக்கம் பூண்டதனால், பரத்தைமகளிர் சூழ்ந்து சிறைக்கும் எளிமை தலைமகற் கெய்துவது கண்டு வியந்த ஆசிரியர் பரணர் இப் பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

மடக்கண் தகரக் கூந்தற் பணைத்தோள்
வார்ந்த வால்எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின்
பிணையல் அந்தழைத் 1தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே
எழுமினோ எழுமின்நம் 2கொழுநற் காக்குவம்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த 3ஒள்வாள் மலையன
தொருவேற் கோடி யாங்குநம்
4பெருமைய தெவனோஇவள் நன்மைதலைப் படினே.

இது, தோழி விறலிக்கு வாயின்மறுத்தது.

உரை
மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள் - மடப்பத்தை யுடைய கண்களும் மயிர்ச்சாந் தணிந்த கூந்தலும் பருத்த தோள்களும்; வார்ந்த வால்எயிற்றுச் சேர்ந்து செறிகுறங் கின் - நிரல்பட ஒழுகிய வெண்மையான பற்களும் திரண்டு நெருங்கிய துடைகளு முடையளாய்; பிணையல் அந்தழை தைஇ - மாலைகளாலும் தழையுடையாலும் தன்னை ஒப்பனை செய்துகொண்டு; துணையிலள் - துணையின்றித் தனித்து இவ்விறலி விழவுக்களம் பொலிய வந்து நின்றாள் - நமது இவ்விழாக்களம் எங்கும் தன் பொற்பு விளங்க வந்து நிற் கின்றாள்; எழுமினோ எழுமின் நம் கொழுநன் காக்குவம் - இன்னே எழுக, எழுந்து சென்று நம் கொழுநனைச் சூழ நின்று காப்பேமாக; ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் - ஆரிய நாட்டினர் போந்து நிறைந்து கொண்ட பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போரில்; பலருடன் சுழித்த ஒள்வாள் - பலராய் எதிர்நின்று உறைகழித்தேந்திய ஒள்ளிய வாட்படையினரான ஆரியமறவர்; மலையனது ஒருவேற்கு ஓடியாங்கு - மலைய மான் ஏந்திச் சென்ற ஒரு வேற்படையைக் கண்டமாத்திரையே அஞ்சி ஓடியது போல; நம் பெருமையது எவனோ - பலராய்க் கூடியுள்ள நமது பெருமை ஒரு பயனு மில்லதாகும்; இவள் நன்மை தலைப்படின் - இவ்விறலி தன் ஆடல்பாடல்களால் நன்மை எய்துவ ளாயின் எ-று.

விறலி, துணையிலள் வந்து நின்றாள்; ஆகலின், எழுமின் எழுமின் நம் கொழுநனைக் காக்குவம்; இவள் நன்மை தலைப் படின், நம் பெருமை எவனோ, ஒருபயனு மின்றாம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. காமக் குறிப்பில்லாத வெள்ளை நோக்கம் உடைமை பற்றி மடக்கண் என்றார். தகரம் - கூந்தற்கணியும் ஒருவகைச் சாந்தெண்ணெய், பணை - பெருமை; மூங்கிலுமாம். சேர்தல், திரட்சி பிணையல், மாலை. இளம்பெண்ணாதலின் தழையுடை கூறினார்; “இளைய மாகத் தழையா யினவே1” என்பது காண்க. எழுமினோ எழுமின் என்றது விரைவு தோன்றற்கு. சங்ககாலச் சேர நாட்டின் வடபுலம் ஆரியநாடு என வழங்கினமையின், அந் நாட்டவர் ஆரியர் எனப்பட்டனர். மேனாட்டு யவன ஆசிரிய ரான தாலமி முதலியோர் சேரநாட்டின் வடக்கிலிருந்த நாட்டை ஆரியகே2 (ஆரியகம்) என்றே குறிக்கின்றனர். ஆரியர்க்கும் சேரர்க்கும் ஒரு காலத்தே முள்ளூரென்னும் ஊரிடத்தே கடும்போர் நடந்தது; சேரர்க்குத் துணையாக மலையமான் ஏந்திய வேற்படைக்கு எதிர் நிற்க ஆற்றாது உடைந்து ஓடிற்று. தமிழ் வேந்தர்க்கு வேண்டுமிடத்து உதவி புரிந்து வெற்றி பெறுவிப்பதில், மலையமான் புகழ் அந்நாளில் சிறந்து விளங்கிற்று; “வல்வேல் மலைய னல்ல னாயின், நல்லமர்க் கடத்தல் எளிதுமன் நமக்கெனத் தோற்றோன் தானும் நிற்கூறும்மே, தொலைஇயோன் இவனென3” என்பத னால் இஃது உணரப்படும். இந்த முள்ளூர் இப்போது கோயம் புத்தூர் மாவட்டத்துக் கொள்ளேகால் வட்டத்தில் உளது; இதனை அங்குள்ள கல்வெட்டுக்கள் முள்ளூர்க்கோட்டை4 என்று குறிக்கின்றன. பெருமை - பன்மைபற்றி வந்தது. ‘எவன்’, வினாப்பெயர் நன்மை - கருதியது முடித்தல். பெருமையது ‘அது’ என்னும் சுட்டு. சாத்தனவன் வந்தான் என்றாற்போல வந்தது.

இளமைச் செவ்வி குன்றாது வெள்ளை நோக்கத்தோடு பரத்தை மனையின்கண் நிகழும் விழாக்கண்டு நிற்கும் விறலியை வியந்து, மடக்கண் என்றாள். மடமை, மடப்பம்; அஃதாவது இளமைச் செவ்வி, முடியிடுமாறு வளரும் கூந்தலை யுடைய பெதும்பைப் பருவம் எய்தாமை தோன்றத் தகரக் கூந்தல் என்றும், விறல்படப் பாடி யாடும் பயிற்சியால் தோள் வன்மையும் பெருமையும் பெற்று விளங்குதலின் பணைத்தோள் என்றும், வார்ந்த வாலெயிற்றுச் சேர்ந்து செறிகுறங்கின் என்றும் சிறப்பித்தாள். விழாக் காண வருதலின் பிணையலும் தழையுடையும் அணிந்து காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் வனைந்து வந்த வனப்புடைமை சுட்டி, பிணையல் அத்தழை தைஇ எனவும், இளைய ளாயினும், தான் மேற்கொள்ளும் பணியை வென்றியுற முடிக்கும் வீறுடையள் என வியந்து கூறுவாள் துணையிலள் வந்து நின்றோள் எனவும் பரத்தைத் தோழி விறலியின் மேனிநலத்தை இவ்வாறு பாரித் துரைத்தாள். செல்வ மிக்க ஆடவரைத் தம்பால் ஈர்த்துப் பொருளீட்டமும், இன்ப நுகர்ச்சியும் பெறுவதே பரத்தையர் தொழிலாதலின், ஆடல் விழா, பாடல்விழா, அரங்கேற்று விழா எனப் பலவேறு விழாக்கள் பரத்தையர் சேரிக்கண் அடிக்கடி நிகழும்; செல்வ மிக்க தலைமக்கள் சென்று ஒவ்வொன்றுக்கும் முன்னின்று தலைக்கை தந்து நடத்துவர், அதுபற்றியே தலைமகன் பரத்தை மனைக்கண் நிகழும் விழாவுக்கு வந்திருந்தா னென உணர்க, தன்பொருட்டு வாயில் பெறற்கு விறலியை அவன் விடுத் திருந்தமையின், அவளது வரவு விழாக்களத்தே விளங்கித் தோன்றினமைபற்றி துணையிலள் விழவுக்களம் பொலிய வந்து நின்றோளே என்றாள். பரத்தைத்தலைவிபால் வாயில் வேண்டி அவ்விறலி வந்திருப்பதை உணராமையால், பிற ளொருத்திபால் தலைமகனைக் கொண்டு புணர்த்தற்கு வந் துளாள் எனப் பிறழ உணர்ந்து எழுமினோ எழுமின் எனத் தன் தோழியர்க்கு உரைப்பாளாயினள். அது கண்ட விறலி யின் முறுவற்குறிப்பும் தலைவன் மகிழ்ச்சியும் தோழியின் கருத்தை வற்புறுத்தவே, நம் கொழுநற் காக்குவம் என்றும், தலைமகன் விறலியை வியந்து நோக்கியது கண்ட தோழி, விறலி தலைமகனைத் தன்னுடன் கொண்டு சேறலில் வெற்றி பெறுவாள் எனத் துணிந்தமை தோன்ற, இவள் நன்மை தலைப்படின் நம் பெரிய திரள் பயனின்றாம் என்றற்கு நம் பெருமைய தெவனோ என்றும் கூறி விறலி பரத்தைத் தலைவியின் மனைபுகாவாறு வாயில்மறுத்தா ளாயிற்று.

“பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி1” என்ற நூற்பா வுரையின்கண் இதனைக் காட்டி, இஃது இடைச்சுரத்துக் குறும்பினுள்ளார். இவரைக் கண்டு கோளிழைப்புற்றார்க்கு அவர் பெண்டிர் கூறியது” என்பர் நச்சினார்க்கினியர்.

செங்கண்ணார்


மக்கள் உடம்பின்கண் வளரும் உயிர், பிள்ளைமைப் பருவத் தில் உடலுணர்ச்சி வழிநின்று அதன் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழில்செய்து வாழும்; பின்னர் அஃது உலகியலில் வாழ்ந்து பெறும் இயற்கையறிவாலும், கல்வி கேள்விகளாற் பிறக்கும் செயற்கையறிவாலும் வன்மை பெற்று, உடம்பின் செயலைத் தனக்கு அடிப்படுத்தி அதனைத் தன் வழிநிறுத்தற்கு முயலும். இது நிகழுங்காலம் இளமைச் செவ்வி. அக்காலை, உடம்பு தான் பெற்ற ஆக்கத்துக் கேற்பக் கவினும் கண்கவர்ச்சியும் எய்தி, ஆணுடம்பு பெண்ணையும், பெண்ணுடம்பு ஆணையும் ஈர்த்து, இரண்டன் உயிரையும் காதலால் ஒன்றுபடுத்தி இனம்பெருக்கும் பெரும் பணியில் ஈடுபடுத்தும். இந்நிலையில் உயிரறிவு வன்மை மிக் கிருப்பின், உடம்பின் செயலாகிய காதற்காமவுணர்வைக் கீழ் படுத்திக், கடமையாகிய வினைசெயலுணர்வு மேம்படச் செய்யும். அப்போழ்து, கடமைவழி நிற்பவன் பொருள், புகழ், முதலியன பெற்று மேன்மையும்; காதற்காம வழிநிற்பவன் வேண்டுவன நிரம்பாத நிரப்பிடும்பை எய்திக் கீழ்மையும் எய்துவது இயல்பு. இன்றைய மக்கள் வாழ்வில் காதற்காமத்துக்கு ஆக்கமாகும் நிழற்படக் காட்சிகளும், வேறு பிற நிகழ்ச்சிகளும் பல்கி, மக்களின் உயிரறிவை மெலிவித்தலின் இனப்பெருக்கமும் வறுமைத்துன்பமும் பெரும்பாலாரிடம் நிலவுகின்றன. சங்ககால வாழ்வில் மக்களினத்தின் தொகை குறைதற் கேதுவாகிய போர்கள் அடிக்கடி நிகழ்ந்தமையின் இனப்பெருக்கம் உலகியல் வாழ்வுக்கு மிக்க இடையூறு செய்யவில்லை. பொருளீட்டத்துக்கு வேண்டும் நிலப்பரப்பு மிகுந்து மிருந்தது. ஆயினும் தமிழ்த் தலைமக்கள் காதற்காம வுணர்வைக் கீழ்ப்படுத்து ஒடுக்கிக் கடமையுணர்வுக்குத் தலைமை தந்து சிறந்து விளங்கினர். அதனால் தொழிலும் பொருளும், வாணிகமும், பெருகிப் பொன்விளையும் நாடு என மேனாடுகள் போற்றும் அளவில் நமது நாடு புகழ்மிக்குப் பொலிந்தது.

அந்நாளில் மனையின்கண் இருந்து அறம் செய்து போந்த தலைமகன் வினையாண்மை குறித்துப் பிரிந்து செல்லக் கருதி னான். தன்னை இன்றியமையாது உறையும் தன் காதலிக்குத் தன் கருத்தை அறிவிக்குமாறு தோழிக் குரைத்தான். காதற்காம நுகர்ச்சியை நெறிப்படுத்திக் கடமைவாழ்வு சிறப்புற நடத்தற்குத் துணையாவது, மாண்புடைய மனைவியின் கடன்; ஆயினும் அவளுடைய சூழ்நிலை காதலுணர்ச்சிக்கே சிறப்பிடம் தந்தமை யின் காதலன் பிரிவு அவளைப் பெரிதும் வருத்துவது இயல்பா யிருந்தது. அந்த நிலையில் நீர் செல்லும் வழியிற் சாய்ந்து கொடுத்து, நீர்ப்பெருக்குக் குன்றுமிடத்து நிமிர்ந்து நிற்கும் புல்லைப்போல, அவட்குத் துணையாகும் தோழி; அவள் காதல் வழியே முதற்கண் சாய்ந்துநின்று அதன் கொதிப்புச் சிறிது தணியும் போது கடமை யுணர்வின் சிறப்பை எடுத்து மொழிந்து வற்புறுத்துவள். அஃது அவட்கு அறமாதலின்; “தோழி, நம் காதலர் அரிய சுரத்தைக் கடந்து வினை காரணமாகப் பிரிந்து செல்லக் கருதுகின்றார்; அவர் பிரிந்த விடத்து, அருமணியை இழந்து தேடுபவர் போல அவர் வரவை யெண்ணியெண்ணி வருந்த வேண்டிய நிலை உண்டாதலால்; நாம் எங்ஙனம் உறங்கப் போகின்றோம்?” என்றாள்.

இக்கூற்றினால், “புணர்வும் பிரிவும் கடமைவாழ்வின் இயற்கை நிகழ்ச்சி யாகலின், நாம் அறிவு மெலிந்து உள்ளம் அலமருதல் நலமன்று; எனத் தலைமகள் தேறித் தெளிவு எய்துவ ளென உரைக்கும் தோழியின் மதிநுட்பம் கண்ட செங்கண்ண னார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
1இடஞ்செலச் செல்லாக் கயந்தலைக் குழவி
சேரியம் 2பெண்டிரின் அஞ்சித் தீரிய
ஊரான் கன்றொடு புகுதரும் நாடன்
பன்மலை அருஞ்சுரம் இறப்பின்1 எம்மோ
டியாங்கு வல்லுந மற்றோ ஞாங்கர்
வினைப்பூண் தெண்மணி 2வீழ்த்தனர் நிகர்ப்பக்
கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொ டளைஇ
மரர்புறப் 3படுதல் மரீஇய கண்ணே

இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.

உரை
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை - நீர் வேட்கை மிக்குறுதலால் வருந்துதலையுடைய பிடியானை; வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் - வேனிலது வெம்மையை யுடைய குன்றின் வெவ்விதாகிய பக்கமலையின் கண்; இடம் செல - ஓரிடத்துக்குச் சென்றதாக; செல்லாக் கயந்தலைக் குழவி - உடன்செல்லமாட்டாத பெரிய தலையையுடைய அதன் கன்று; சேரியம் பெண்டிரின் அஞ்சி - புறஞ்சேரியில் வாழும் மகளிர் அகநகர்க்கண் புக்கவழி அஞ்சி அலமருதல் போல அஞ்சி; தீரிய - அவ்விடத்துநின்றும் நீங்குதற் பொருட்டு; ஊரான் கன்றொடு புகுதரும் நாடன் - ஊரான் கன்றுகளோடு கூடி ஊர்க்குட் போதரும் நாடனாகிய தலைமகன்; பன்மலை அருஞ்சுரம் இறப்பின் - பல மலைகளை யுடை அரிய சுரங் களைக் கடந்து செல்குவ ராயின்; எம்மோடு யாங்கு வல்லுந - நம்முடனே எவ்வாறு ஆற்றியிருக்க வல்லனவாம்; ஞாங்கர் வினைப்பூண் தெண்மணி - மேலே நல்ல வேலைப்பா டமைந்த தெள்ளிய பூணிடத்து அமைந்த மணியை; வீழ்த்தனர் நிகர்ப்ப - கெடுத்து வீழ்த்தவர் உறங்காது வருந்துவது போல; கழுது கால்கொள்ளும் பொழுதுகொள் பானாள் - பேயினங்கள் காலூன்றி வழங்கும் பொழுதாகிய நடுவியாமத்தே; ஆர்வ நெஞ்சமொடு அளைஇ - அன்புடைய நெஞ்சம் தம்மில் கலத்தலால்; மார்புறப்படுதல் மரீஇய கண் - அவருடைய மார்பகம் பொருந்தப் புல்லித் துயிலுதலைப் பொருந்திய நம் கண்கள் எ-று.

நாடன், அருஞ்சுரம் இறப்பின், மார்புறப் படுதல் மரீஇய கண்யாங்க வல்லுந கொல்லோ, வீழ்த்தனர் நிகர்ப்பப் படுதல் மாட்டாவாம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீர்நசை - நீர்வேட்கை, ஊக்குதல் - மேன்மேலும் தேடிக்கொண்டே போதல், உயவல் - வருத்தம், கயந்தலைக் குழவியைக் கூறலின் - யானை பிடியாயிற்று. வேனில் - வெம்மையால் பசையற்றுத் தோன்றும் குன்றினை வேனிற் குன்றம் என்றார். குன்றின் உச்சியினும் மலைப்பக்கம் வெம்மை மிகவுடையதாகலின், வெவ்வரைக் கவாஅன் என்றார். கவாஅன் மலைப்பக்கம். இடம் எனப் பொதுப்படக் கூறலின், கன்று காணமாட்டாத இடமாயிற்று. வேட்கை ஊக்குதலால் பிடியும் தன் கன்றினை மறந்து போயிற் றென்க. பிடியானையைப் பேதுறுவித்த வேனில்வெம்மைக்கு அதன் குழவி விலக்கன்மையின், அதுவும் வெம்மையால்வாடி அப்பிடி சென்ற இடம் நாடிச் செல்ல மாட்டா தாயினமையின், செல்லாக் கயந்தலைக் குழவி என்றார். கய - பெருமை, யானைக்கன்றினைக் குழவியென்ற லும் மரபு; “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை1” என்பது காண்க சேரி - நகர்ப்புறத்தே அதனைச் சேர இருக்கும் தெரு, புறஞ்சேரியில் வாழும் பெண்டிர் அகநகர்க்குட் செல்லின், தெருக்களின் நெருக்கமும், பெருமனைகளின் பெருக்கமும், சந்தியும், சதுக்கமும், மாடமும், மறுகும் கண்டு மனமருட்சி கொண்டு, செல்லும் நெறி தெளியாது திகைப் புறுதல் இயல்பாதலின் சேரியம் பெண்டிரின் அஞ்சி என்றார். தாயைப் பிரிந்த யானைக்கன்று, சென்னெறி காணாது திகைத்து அஞ்சியதற்குப் பெண்டிர் அஞ்சுவது உவமமாயிற்று; யாங்கு வல்லுந என்றது மாட்டாமை வற் புறுத்தி நின்றது. ஞாங்கர் - மேலிடம்; “ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே2” என்றாற் போல. பொன்னினும் சிறப்புடைய தாகலின், மணியினை யிழந்தோர் கலக்கமிகுதி யால் கண்ணுறக்க மின்றி வருந்துதல் உலகறிந்த உண்மை யாதலின், காதலனைப் பிரிந்துறையும் மகளிர் கண்ணுறக்க மின்றி வருந்துவதற்கு உவமமாக்கினார். கழுது -பேய், பேய்கள் நடுவியாமத்தே உலவும் என்பது பண்டையோர் கொள்கை. “கழுதுவழங்கரை நாள் காவலர் மடிய3” எனவும், “கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே4” எனவும் சான்றோர் கூறுவது காண்க. காதலன் மார்பில் துயில்கோடற்கு மகளிர் மனம் பெரிதும் விரும்பு மென்பர்; “மணித்துறை யூரன் மார்பே, பனித்துயில் செய்யும் இன்சாயற்றே1” எனப் பிறரும் கூறுவர்.

பிடியானையோடு செல்ல மாட்டாத கன்று ஊரான்கன் றொடு கூடி ஊர்க்குட் புகுதும் நாடன் என்றதனால், தலை மகனோடு செல்லுதற்காகாத நாம் சுற்றம் சூழ மனைக்கண் இருந்தொழிதலே செயற்பாலதெனக் கூறுகின்றா ளாகலின், நாடன் பன்மலை அருஞ்சுரம் இறப்பின் என்றாள்; தலைமகன் பிரியக் கருதியதல்லது இன்னும் பிரியாமையின்; இறப்பின் என்றா ளென்க. அதனால் தலைமகனுடைய பிரிவுக் குறிப்புணர்ந்து தலைமகள் பேதுற்றமையின், அவள்வழி நின்று தெருட்டலுறும் தோழி, மாட்டாமை தோன்ற, மார்புறப் படுதல் மரீஇய கண்யாங்கு வல்லுந கொல்லோ என்றாள். காதலனொடு கூடியுறையும் மனைவாழ்வு, வினைப் பூண் தெண்மணி போலவும், அதன்கண் அவன் தெண்மணி போலவும், அவனைப் பிரிந்துறையும் தலைவி வீழ்த்தனர் போலவும் கொள்க. வீழ்த்தவர் கலங்கஞர் உற்றுக் கண் ணுறக்கம் பெறாது வருந்துவது போலத்தலைவியும் தனிமைத் துயருற்றுக் கண்ணுறக்கம் பெறாது வருந்துவள் எனத்தோழி கூறினாள். இங்குத் தலைவன் மார்பினை உறுதலால் உறக்கம் பெறுதலுடைய கண்கள் என்றது. யாங்கு வல்லுநகொல்லோ என்றற்கு ஏதுவாயிற்று. இவ்வாறு நின் கண்கள் உறங்குதல் மாட்டாவாயின், யான் என் செய்வேன் எனத் தோழி தன் ஆற்றாமை யுரைத்தவழி, “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல2” இயலுவன வாகலின் யான் ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் தகுவன உரைப்பது பயன் என உணர்க.

நக்கீரனார்


கண்கவர் வனப்பும், கற்புச் சிறப்பும், பொற்புற அமைந்த தலைவியைக் கண்டு காதலுறவு கொண்டான் தலைமைநலம் பெற்ற தமிழ்க் காளை. ஒருமுறைக் கிருமுறை அவளைத் தனித் துக்கண்டு காதலுறுதி பெற்றவன், அவளுடைய உயிர்த் தோழியை அறிந்து அவளுடைய நட்புப் பெற்றா லன்றித் தலைமகள்பால் கொண்ட காதலுறவு வளர்ந்து, சிறந்து வாழ்க்கைத்துணையாகும் வளம் பயவாது என்பதை நன்கு உணர்ந்தவ னாகலின்; பன்முறையும் விடாது முயன்று தோழியை மதியுடம்படுத்து, அவள் வாயிலாகத் தலைமகளைக் காணும் நலம் பெற்றான். பின்னர்த் தன்னைப் பகற்போதில் காண்டற் கெனத் தனித்ததோர் இடம் குறிக்குமாறு அவன் தலைமகளை வேண்டினான். சிறந்த இடமொன்று தோழியால் சுட்டிக் காட்டப் பட்டது. அப்பகற்குறிக்கண் அவன் நாடோறும் போந்து தலை மகளைத் தலைப்பெய்து அளவளாவி இன்புற்றொழுகினான். இதனைஇவ்வண்ணம் நீளவிடின், பிறர் அறிந்து ஏதம் விளைப்ப ரென்று தோழி அஞ்சினாள். தன்னைப் போலவே தலைமகனும் எண்ணுவா னாகலின், அவனுக்குத் தான் முற்பட்டு வரைந்து கொள்ளுமாறு வெளிப்படையாக வுரைப்பது முறையன்று, என அவள் எண்ணிக் குறிப்பாக அவனே உய்த்துணர்ந்து கொள்ளும் வகையில் உரையாட லுற்றாள். அதனால், அவன் பெரிதும் விரும்பி வந்து கொண்டிருக்கும் பகற்குறி வரவை மறுக்கத் தலைப்பட்டாள். இன்பம் நிலைபேறின்றிச் சிறிது போதில் கழியும் இயல்பிற் றாகலின், அதனை நுகர்பவர் அதன் பெருக் கத்தையே பெரிதும் விழைவதும் முயல்வதும் செய்வர். தலை மகனும் தான் நுகரும் இன்பம் இடையீடும், இடையறவும் எய்தி அழிவுறாது, பெருகுவதையே விரும்பி நிற்கின்றமையின்; தோழி கூற்று அதற்குத் தடையாதலின், அவன் அழிவில் இன்பம் வேண்டி வரைதலைத் தெருண்டு மேற்கொள்வன் என்பது கருத்து. பகற் குறிக்கண் தலைமகன் வரவு கண்ட தோழி, ஒருநாள், அவனை நேர்பட்டு. “துறைவ, நாம் கூடும் இப் புன்னைப் பொதும்பரில் இப்புன்னையின் நீழலில் நும்மொடு கூடி மகிழ்வது எமக்கு நாணுத் தருகின்றது; நாங்கள் சிறுமிகளாக இங்கே விளையாடிய போது புன்னையின் விதையொன்றை இம்மணற்கண் புதைத்துச் சென்றேம்; சின்னாட்களில்அது முளைத்து வரவே, அதற்கு நீரும் பாலும் பெய்து நாங்கள் வளர்த்து வந்தேம்; அதனைக் கண்ட எம் அன்னை, இது நும்போற் சிறந்தது; நுமக்குத் தங்கையா மென மொழிந்தனள்; இதன் நீழலிலே யிருந்து நும்மைக் காண்பது நன்றன்று; நீ எம்மைத் தலைப்பெய்து தலையளி செய்வதாயின் அதற்கு நீழலிடங்கள் வேறு எத்துணையோ உளவே; ஆங்குச் செல்லலா மன்றோ” என்றாள்.

தோழியின் இக்கூற்றுத் தான் தடை சிறிதும் இன்றி, நேரிற் போந்து கண்டு பெறும் இன்பத்துக்கு இடையூறு செய்தலையும், வேற்றிடம் தேடிக் காணினும், அதுவும் ஒருகால் இடையூறா மாகலின், வரைந்து கோட லொன்றே அழிவில் கூட்டத்துக்கு அமைவதையும் தலைமகன் தெருளுமாறு உணர்த்துவதையும் கண்ட நக்கீரனார், இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

விளையா டாயமொடு 1வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை2 அகைய
நெய்பெய் தீம்பால் 3பெய்தனம் 4வளர்ப்ப
நும்மிற்5 சிறந்தது நுவ்வை யாகுமென்
றன்னை கூறினள் புன்னையது 6சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்திற் பாணர் 7திருந்திசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்கநீ நல்கின்
8இறைபடு நீழல் பிறவுமா ருளவே,

இது, பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த் தீடுமாம்.

உரை
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி-விளை யாடும் ஆயமகளிருடன் வெண்மையான மணலின்கண் புதைத்து; மறந்தனம் துறந்த காழ்முளை அகைய - யாம் மறந்து சென்ற புன்னையின் விதைமுளைத்துவர; நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்ப்ப - தேன் கலந்த தீவியபாலைப் பெய்து யாம் வளர்த்தேமாக; நும்மிற் சிறந்தது நுவ்வை யாகும் என்று அன்னை கூறினள் - நும்போல் சிறந்து வளர்ந்திருத்தலின் இது நுமக்குத் தங்கையாகும் என்று கூறியுள்ளாள். புன்னையது சிறப்பு - இப்புன்னைமரத்தின் வரலாறு இது; அம்ம-; நும் மொடு நகை நாணுதும் - இதன் கீழிருந்து நும்மோடு நகையாடி மகிழ்தலை நாணுகின்றோம்; விருந்தின் பாணர் திருந் திசை கடுப்ப - புதியராய் வந்த பாணர் இசைத்தற்கு எடுத்த திருந்திய இசைபோல; வலம்புரி வான்கோடு நரலும் - வலம்புரி யாகிய வெண்சங்குகள் ஒலிக்கும்; இலங்குநீர்த் துறைகெழு கொண்க - விளங்குகின்ற நீர்த்துறையையுடைய தலைவனே; நீ நல்கின் - நீ எமக்கு இத்தலையளியைச் செய்வதாயின்; இறைபடு நீழல் பிறவுமார் உள-தங்குதற் கமைந்த மரநீழல்கள் பிறவும் உள்ளன காண் எ-று.

கொண்க. அழுத்தி மறந்தனம், துறந்த காழ்முகை யகைய, தீம்பால் பெய்தனம் வளர்ப்ப. நும்மிற் சிறந்தது நுவ்வை யாகும் என்று அன்னை புன்னையது சிறப்புக் கூறினள்; இதன் நிழலில் நும்மொடு நகை நாணுதும் அம்ம; நீநல்கின், இறைபடு நீழல் பிறவு முள, காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க, விளை யாடற்குத் துணையாய் அமைந்த இளஞ்சிறுமியர் என்றற்கு விளையாடா யம் என்றார். காழ் - வித்து, முளை அகைதல் - முளைகொண்டு வளர்தல், நெய்படு தீம்பால் என்னாது நெய்பெய் தீம்பால் என்றமையின் நெய் - தேனெய் யாயிற்று; “தேன்மயங்கு பாலினும் இனிய1” என்பது காண்க. தேனை தேனெய் என்றலும் வழக்கு; “தேனெய் யொடு கிழங்கு மாறியோர், மீனெய்யொடு நறவு மறுகவும்2” என்று சான்றோர் கூறுவர். நுவவை - நும் தங்கை. அவ்வை, தவ்வை என்றாற் போறலின். நுவ்வை நுமக்கு முன்பிறந்தா ளெனப் பொருள் தருமாயினும், ஈண்டுப் பின்தோன்றினமை பற்றி நும் தங்கை எனக்கூறல் வேண்டிற்று, விருந்து - புதுமை. திருந்திசை - சிறந்த முறையில் இசைக்கக் கருதி யெடுக்கும் இசை, இதனை இந் நாளில் சுருதி யென வழங்குப; பண்டைநாளில், இதனை இயக்கம் எனக் குறித்து மூவகைப் படுத்துரைப்ப; மூவகை யியக்கமும் முறையுளிக் கழிப்பி3” என்பது காண்க. இறைநிழல், தங்குதற் கமைந்தநிழல்; “ஓங்குநிலை வியன்மனை இறைநிழல்4” என்று சான்றோர் கூறுவர், பிறவுமார் என்ற விடத்து ‘ஆர்’, அசைநிலை; “அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல்”5.

புன்னைப் பொதும்பருள் ஒரு புன்னைமரத்தின் கீழ்ப் பகற்போதில் தலைமகளைக் கண்டு அளவளாவி இன்புறும் தலைமகனோடு சொல்லாடலுறும் தோழி, இப்புன்னையை யாம் பகற்குறிக் களனாகக் குறீத்தமைக்குக் காரணம், இஃது எம்மால் வளர்க்கப்பட்ட தென்பாள், விளையா டாயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்ப்ப என்றாள். ஒருகால் ஆய மகளிரொடு கூடி இங்கே யாம் விளையாட் டயர்கையில் எம்மால் மணலின்கண் மிதிப்புண்டு புதைந்த புன்னை வித்து என்றற்கு, விளையா டாயமொடு என்றும், வெண்மணல் அழுத்தித் துறந்த காழ் என்றும், யாம் வேண்டு மென்றே புதைத்தன்று என்றற்கு மறந்தனம் துறந்த காழ் என்றும் கூறினாள். சின்னாட்குப் பின்னர், அது முளை விட்டு வளரக் கண்டதும், அதனை யாம் உண்ட பாலைப் பெய்து வளர்த்தனம் என்பாள், நெய்பெய் தீம்பால் பெய் தனம் வளர்ப்ப இது வளர்ந்தது என்றும், அதன் வனப்பினை யாம் காட்டக் கண்ட எம் அன்னை மகிழ்ந்து, நும்போல் தழைத்து அழகுற்று விளங்குகின்றமையின், இது நுமக்குத் தங்கையாம் என எமக்கும் இதற்கும் உறவுமுறை கற்பித் தனள் என்பாள். நும்மிற் சிறந்தது நுவ்வை யாகும் என்று அன்னை கூறினள் என்றாள். ஏனைப் புன்னைகளிடை இஃதும் ஒன்றாயினும் எமக்குத் தங்கையாம் தனிச்சிறப்பு இதற்கு உண்டு என்றற்குப் புன்னையது சிறப்பு என்றும், அது காண, அதன் நீழலிலே இருந்து யாம் இக்களவினை மேற்கொண்டு ஒழுகுதற்கு எம் உள்ளம் நாணத்தால்சுருங்கி மறுக்கின்ற தென்பாள், அம்ம நாணுதும் நும்மொடு நகையே என்றும் உரைத்தாள். அது கேட்ட மாத்திரையே, தலைமகன் உள்ளத்தில் சூழ்ச்சியும், மேனியில் அசைவும், தோன்றக் கண்ட தோழி, இதனால் எம்மை வெறாது அருளுவது உமது கருத் தாயின் இது செய்க என்பாள், கொண்க நீ நல்கின் என்றும், இறைபடு நீழல் பிறவுமார் உளவே என்றும் கூறினாள். தாம் வளர்த்த புன்னையின் நீழற்கண் கூடுதற்கு நாணுபவள், பகற்குறி வந்தொழுகும் இது பிறர்க்குப் புலனாயின் பெரு நாணத்தால் இறந்துபடுவள்; எனவே, இவ்வொழுக்கத்தைக் கைவிட்டு இவளை வரைந்துகோடலே செயற்பாலது என்று தலைமகன் தெருண்டு வரைவு மேற்கொள்ளுமாறு இறைபடு நீழல் பிறவுமா ருளவே என்றாள். இறைபடு நீழல் பிறவும் உளவே என்றது, தலைமகனது நெடுமனையையும் உளப் படுத்து நின்றது. அன்னை கூறினள் என்றது, அன்னை முதலிய தமர் அறிவரென அஞ்சியவாறு உணர்த்திற்று. வலம்புரி வான் கோடு பாணரது திருந்திசை போல நரலும் என்றதனால், நீ இவட்குச் செய்யும் அருள் எம் குடிக்கு மிக்க சிறப்புச் செய் வதாம் என்று உள்ளுறை கொள்க.

“உடனுறை யுவமம் சுட்டு நகை1”என்னும் நூற்பா வுரையில் இப்பாட்டைக் காட்டி, “இதனுள் புன்னைக்கு நாணுதும் எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னை யென்றும், பல்காலும் அன்னை வருவள் என்றும் உடனுறை கூறி விலக்கியவாறு” என்பர் இளம்பூரணர். இனி, “மறைந் தவற் காண்டல்2” என்னும் நூற்பாவின்கண் “நாணுமிக வரினும்” என்றற்கு இதனைக் காட்டி, “இதனுள் அம்ம நாணுதும் எனப் புதிது வந்ததோர் நாணுமிகுதி தோன்ற மறுத்துரைத்தலின் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் கூறினாள்” என்றும், “உடனுறை யுவமம் சுட்டு3” என்ற நூற்பாவுரையில், “இதனுட் புன்னையை அன்னை நுவ்வையாகு மென்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுத லஞ்சுதும் என நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினால் மறைத்துக் கூறியவாறு காண்க; இதனைச் செவ்வனம் கூறாமையின் அமைத்தார்” என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். “மாற்றருஞ் சிறப்பின் மரபியல்4” என்ற நூற்பாவுரையில், “புன்னைமரத்தினை நுவ்வை யென்றல் மரபு அன்மையின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியவாம் என்பது கருத்து” என்பர் பேராசிரியர்.

பிரமன் காரி


பெருமுயற்சி செய்து பலவகை இடர்ப்பாடுகளைக் களைந்து அரிதிற் பெறும் பொருளிடத்து மிக்க அன்பும். அதன் பேற்றின் கண் எய்தும் இன்பத்தின்பால் பெருநயப்பும் உண்டாவது ஆண்மை மிக்க ஆடவர்க்கு இயல்பு; அத்தகைய பண்பின னான தலைமகன் களவு நெறிக்கண் தலைமகளை எய்திப் பெறும் காதலின்பத்தையே விரும்பி அவளை வரைந்துகொள்ளும் முயற்சியை நீட்டித்து வந்தான். தோழியும் தலைவியும் பகற்குறி இரவுக்குறியாகிய எல்லா நெறியினும் மறைமுகமாகவும், வெளிப் படையாகவும் அவனை வரைவுகடாவி வந்தனர். தலைவியின் காதன்மாண்பும், அவளை எய்துதற்கண் உளவாகும் இடை யூறுகளை விலக்கலுறும் வினைமாண்பும், நல்கும் இன்பச்சிறப்பு அவனை அந்த நெறியிலேயே உறைத்து நிற்கச் செய்தது. ஆயினும், அது தோழியின் உள்ளத்தில் பேரச்சத்தையும், பெருங் கவலையையும் விளைத்தது. தன் பொருட்டுத் தலைமகன் எய்தும் இடர்களை எண்ணியும், அவனைக் கூடிப் பெறலாகும் அழிவில் கூட்டத்தை நயந்தும், தலைவி மனத்துயர் மிக்கு மேனி வேறு படலானாள். புதுமையாக நரப்புக்கால் தோறும் பரவி உடல் முழுதும் வெதுப்பிக் கதிர்த்து நிற்கும் காதல் வேட்கை தணியும் வாயில் பெறாமையால், நெருப்பு நீறுபூப்பது போல மேனியில் விளர்ப்பும், நுதலிற் பசப்பும், எய்தி நுடங்குவாளாயினள். மகட்கெய்திய வேறுபாட்டின் உண்மை யறியாத மடவோளாகிய அன்னை, மலையுறையும் முருகனால் இவட்கு இவ்வேறுபாடு எய்தியிருக்குமென எண்ணி மலைச்சுனையில் மலர்ந்த பூவைக் கொணர்ந்து சூடியும், மாலை தொடுத்தணிந்தும் முருகற்குரிய செங்காந்தட் கண்ணியைத் தந்தும் அமைதி பெறாளாய் வேலனைக் கொண்டு, முருகனுக்கு வெறியாட் டயர்வ தல்லது பிறிதியாதும் இவள் நோய் தணிக்கும் வாயிலாகா தென உணர்ந்து, அதற்கு ஆவன முயல்வா ளாயினள். அந் நிலையில் தலைமகன், தலைவி மனையின் சிறைப்புறத்தே பிறர் அறியலாகாத ஓரிடத்தே வந்து நின்றான்; அதனைத் தோழி உணர்ந்து அவன் செவியிற் கேட்குமளவுக்குத் தலைவியைக் கொண்டு சென்று நிறுத்தி, அவளை நோக்கி, “தொடியுடையாய், நின் வேறுபாட்டுத் துயரைப் போக்குதற்கு வெறியாடலே வாய்ப்புடையதென அன்னை முயல்கின்றாள்; அம்முருகவேள் தானும், அவள் கண் காண வாதல், கனவிலாதல் தோன்றி, உண்மையை உணர்த்துகின்றானில்லையே; இதற்கு என் செய் வது? அவள் கண்முன்னே தன் உண்மைவடிவு தோன்றாவகை மறைத்து வேற்றுருக் கொண்டேனும், கனவின்கண் நேர்படத் தோன்றியேனும், இவட்கு இந்நோய் என்னால் வந்த தன்று; இதனை உறுவித்தவன் அந்த மலைகிழவனான தலைமகனே என்று கூறினால்; அவனுக்கு ஏதம் உண்டோ? ஒன்றும் அறியாமையால் நின்னையே வினவுகிறேன். அன்புகூர்ந்து கூறுக” என்று வினவினாள்.

சிறைப்புறத்தே நின்று கேட்டுக் கொண்டிருந்த தலைமகன் நன்கு எண்ணி, தலைவிபால் உளதாகிய மேனி வேறுபாட்டின் மிகுதியையும், அன்னை வெறியெடுக்கு மாற்றால், அது பெரிதும் சிறந்து நாடு முழுதும் பரவித் தலைவிக்கு உண்டாக்கும் ஏதத்தை யும் தெருண்டு, வரைவு மேற்கொள்ளச் செய்யும் சீர்மை இக் கூற்றின்கண் அமைந்தமை கண்ட பிரமன் காரியார் இப் பாட்டில் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

சுனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும்
மலைச்செங் காந்தட் கண்ணி தந்தும்
தன்வழிப் படூஉம் நந்நயந் தருளி
வெறியென உயங்கும் அளியள் அன்னையைக்1
கண்ணினும் கனவினும் காட்டி இந்நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலை கிழவோன் செய்தனன் இதுவெனில்
படுவண் டார்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட் கேத முடைத்தோ
தொடியோய் கூறுமதி வினவுவல் யானே

இது, தோழி தலைவிக் குரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தோடு நிலை பயப்பித்த தூஉமாம்.

உரை
சுனைப்பூக் குற்றும் - சுனையில் மலர்ந்த பூக்களைக் கொய்து அணிந்தும்; தொடலை தைஇயும் - மாலை தொடுத்து நமக்குச் சூடியும்; மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் - மலையிடத்து மலர்ந்த செங்காந்தட் பூவால் கண்ணி தொடுத்துத் தந்தும்; தன்வழிப் படூஉம் - தன் கருத்தின்படியே நடக்கும்; நம் நயந்தருளி - நம்பால் மிக்க அன்புற்று; வெறியென உயங்கும் அளியள் அன்னையை - நாமுற்ற வேறுபாட்டுக்கு மருந்து வெறியயர்தலல்லது பிறிது யாதும் இல்லையென எண்ணி அதற்கு ஆவன முயலும் அளிக்கத் தக்கவளாகிய அன்னைக்கு; கண்ணினும் கனவினும் காட்டி - நனவில் கண் காணக் குறிப்பாகவும் கனவில் வெளிப்படையாகவும் தன் வடிவைக் காட்டி; இந்நோய் - நின்மகள் வேறுபாட்டுக் குரிய இந்நோய்; என்னின் வாராது - என்னால் வந்ததன்று; மணி யின்தோன்றும் அம்மலை கிழவோன் இது செய்தனன் எனின் - சேய்மைக்கண் நீலமணி போலத் தோன்றும் அந்த மலைக்கிழவோனாகிய தலைமகன் உறுவிக்க வந்தது என்று சொன்னால், அச்செயல்; படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின் - ஒலிக்கின்ற வண்டு மொய்த்து ஆரவாரிக்கும் பசுமையான மாலை யணிந்த மார்பினையுடைய; நெடுவேட்கு ஏதம் உடைத்தோ-நெடுவேளாகிய முருகனுக்கு ஏதம் தருவ தாமோ; தொடியோய்-தொடி யணிந்த தோழி; யான் வினவு வல் கூறுமதி - யான் அறியாது வினவுகின்றேன், சொல்லு வாயாக எ-று.

தொடியோய், குற்றும், தைஇயும், தந்தும், நயந்தருளி உயங்கும் அன்னையைக் காட்டி, நோய் என்னின் வாராது, கிழவோன் செய்தனன் இது எனில், நெடுவேட்கு ஏதம் உடைத்தோ? யான் அறியாது வினவுவல், கூறுமதி எனக் கூட்டி வினைமுடிவு செய்க; சுனை - மலைகளில் காணப்படும் நீர்நிலை, தொடலை - மாலை, கண்ணி - தலையிற் சூடும் மாலை; வெறி - வெறியாடல், உயங்குதல் - வருந்துதல்; ஈண்டு வெறியாடற்கு வேண்டுவன தேடி வருந்துதல். அளியள் - இரங்கத்தக்கவள். அன்னையைக் காட்டி என இயையும்; உருபுமயக்கம்; “செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்1” என்றாற் போல, என்னினும், உம்மை, இசைநிறை, சேய்மைக் கண் தோன்றும் மலை நீலமணியின் நிறம் கொண்டு தோன்று வது பற்றி மணியின் தோன்றும் அம்மலை என்றார். தொடி யோய் என்றது தலைவியை.

தலைமகள் மேனி வேறுபட்டுத் தோன்றும் நோய்க்குரிய காரணத்தை உள்ளவாறு அறியாது முருகனால் உண்டாய தெனப் பிறழ உணர்ந்து, அவன் உறையும் மலையின்கண் உள்ள சுனையிடத்தே மலர்ந்த பூக்கொய்து, விளையாடிய ஞான்று அணங்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தால், அச் சுனைப்பூவைக் கொய்து வந்து தலைமகட்கு அணிந்தமை தோன்றச் சுனைப்பூக் குற்றும் என்றும், முதுமகளிர் சிலர், சுனைப்பூவை வெறிதே அணிதலினும் மாலையாகத் தொடுத்துச் சூடு என்றமையின் தொடலை தைஇயும் என்றும், சிலர் முருகன் மலையிடத்து மலர்ந்து வண்டு மூசாத மாண்புடைய செங்காந்தள் முருகனுக்கு விருப்பமான பூவா தலின் அதனைக் கொணர்ந்து தருக என்றமையின் மலைச் செங்காந்தள் கண்ணி தந்து என்றும், அது முருகற்கே சிறப்பாக வுரிய தாகலின் பிறர் சூடாமைபற்றித் தந்து என்றும் கூறினாள். “சுரும்பு மூசாச் சூடர்ப்பூங் காந்தட், பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்1” என்பது காண்க. பூவும், தொடலையும், கண்ணியும், முருகனாலோ பிறராலோ அணியப்படாமையின், அவற்றைக் கொணர்ந்து சூடும் போதும், அணியும் போதும், தரும் போதும் தலைமகள் சிறிதும் மறாமல் ஏற்றுக்கொண்டமை தோன்ற, தன் வழிப்படூஉம் எனவும், அதனால் தாய்மனம் மகள்பால் பேரன்பு சுரந்து நின்றமை விளங்க நந்நயந் தருளி எனவும் இயம்பினாள். இங்ஙனம் முதுபெண்டிரும் பிறரும் போந்து தலைமகளைக் கண்டு கழுவாயாகச் சொல்லியனவெல்லாம் செய்தும், வேறுபாடு நீங்காமையான்; வேலனைக் கொண்டு வெறியயர்தலே இனிச் செயற்பாற் றெனத் துணிந்தமையும், அஃது ஒரு விழாப்போல நிகழ்வ தாகலின் அதற்காவன தேடும் முயற்சியால் மெய்வருந்தினமையும் கண்டு கூறலின், வெறி யென உயங்கும் என்றும், தாயது அறியாமைக்கு இரங்கிக் கூறலின் அளியள் என்றும் கூறினாள். தலைமகள் எய்திய வேறுபாட்டுக் குரிய காரணத்தை முருகனால் இது விளைந்த தாக மகளிர் பலரும் வேலனும் கூறலின், தன்பால் பழியின்மை காட்டற்கு அவனே உண்மை கூறற் குரியவன் என்பது பற்றி அவனைச் சுட்டித் தோழி, அவன் கடவு ளாதலின், நனவில் தெய்வமுற்றாடும் மக்களைச் சார்ந்தும், வேறு திப்பிய நிகழ்ச்சி காட்டியும் குறிப்பால் தான் அணங்காமையைக் காட்டற் குரியவன்; அஃது இன்றேல், தாயின் கனவிடை உண்மைவடிவு காட்டி இந்நோய் தன்னால் வாராமை காட்டலாம்; காட்டிய வழி, நோய் செய்தான் யாவன் எனக் கேட்டவழி மலைகிழவோ னாகிய தலைவனைக் காட்டலாமே; அதனைத் தானும் முருகவேள் காட்டாதொழிகின்றான்; காட்டின், அவற்கு யாது குற்றம் வரும்; யான் ஒன்றும் அறிகிலேன் என்பாள், கண்ணி னும் கனவினும் காட்டி இந்நோய் என்னினும் வாராது மணியின் தோன்றும் அம்மலைக்கிழவோன் செய்தனன் இதுவெனில் நெடுவேட்கு ஏதமுடைத்தோ எனவும், தொடியோய் கூறுமதி எனவும், வினவுவல் யானே எனவும் கூறினாள். கண்ணினும் கனவினும் என்றது, காட்டற்குரிய வாயில் கூறியவாறு. தன்மேல் ஏற்றிக் கூறப்படும் பழியின் நீங்குதற்கு முருகன், இந்நோய் என்னினும் வாராது என்றல் வேண்டும்; கடவுளாதலின் அவன் அறியாதது ஒன்று மில்லை என்றற்கு அம்மலைக்கிழவோன் செய்தனன் இது என்று கூறலாம் என்றும், இவ்வாறு கூறலால் நெடுவேட்குப் பழி நீங்குமே யன்றிக் குற்றம் யாதும் இல்லை என்றற்கு, ஏதம் உடைத்தோ என்றும் தோழி கூறினாள். அது கேட்கும் தலைமகள், “இதனை நெடுவேள் கூறின் அது வேண்டாகூறல் என்னும் குற்றமாம்; என்னை, நெடுவேளை வேண்டி வெறி யெடுத்தவழி யாம் அவனை வழிபடல் கற்பறம் ஆகாமையால் அறத்தொடு நின்று உண்மை செப்புவே மாகலின்” எனக் கூறுவாளாவதும், சிறைப்புறத்தே நின்று கேட்கும் தலைமகன் போந்து, “நீவிர் இனிக் கவலற்க; யாம் நாளை வரைவொடு வருகுவம்” என்பானாவதும் பயனாதலின், கூறுமதி என்றும், வினவுவல் யானே என்றும் தோழி வற்புறுத்தினாள்.

பாலை பாடிய பெருங்கடுங்கோ


மனைக்கண் ணிருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன், பொருள்வினை குறித்தும் வேறுபல கடமை குறித்தும் மனைவயிற் பிரிந்து செல்வதும் மீள்வது மாகிய செயல்வகைகளால் பொரு ளும் புகழும் எய்தி இன்புற்று வந்தான். பிரிந்தவழி வருந்துதலும் மீண்டு போந்து கூடியவழி இன்புறுதலும் கொண்டு தனக்குரிய மனையறங்களால் தலைமகளும் மாண்பு பெற்று விளங்கினாள். ஒருகால் தலைமகன் வினைகுறித்துப் பிரிந்தானாக, அப் பிரிவுள்ளி வருந்திய தலைமகளை அவன் வருங்காறும் ஆற்றி யிருக்குமாறு செய்தற்கண் அவளுடைய தோழி அரும்பாடு படலானாள். வினைமுடித்துப் போந்த தலைமகனோடு கூடி யிருக்கையில் சின்னாட் கெல்லாம் தலைமகனுக்குப் புறப் பெண்டிராய பரத்தையர் தொடர்பு உண்டாயிற்று. பரத்தையர் மனைக்கண்ணும், சேரியின் கண்ணும் நிகழும் விழாக்கட்குத் தலைமை தாங்கித் தலைக்கை தருதலும், அவர் நிகழ்த்தும் ஆடல் பாடல்களுக்குப் பரிசில் தந்து ஊக்குதலும் தலைமக்கள் கட னாதலின்; அவன் பரத்தையர் சேரிக்குச் சென்று வந்தான். அச்செய்தி தலைமகட்குத் தெரிந்தது. தன் கணவனைப் பிறமகளிர் கண்ணிற் காணினும் மனம் பொறாது, “பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்த நின்மார்பு”எனப் புலக்கும் பான்மையளான தலைமகள், பரத்தையர்க்குத்தலைக்கை தந்தும் பரிசில் தந்து ஊக்கியும் வந்தது புலவியால் ஆற்றாமையை உண்டுபண்ணிற்று. புலவி அறிந்த தோழி, தலைமகளை நண்ணி “நெடுஞ்சுரஙகளைக் கடந்து சென்று அரிய வினைமுற்றிப் பெரும் பொருளை ஈட்டிக் கொடு போந்து மனைக்கண் தங்கிய காதலர் நின்னைப் பிரியா தொழுகு வாராக, நீ பெரிதும் நெஞ்சழிந்து வருந்துகின்றாய்; இது கூடாது” என்று நெருங்கிக் கூறினாள். உண்மை யறியாது தோழி உரைப்பது கேட்ட தலைமகள், “நிகழ்ந்தது அறியாதோர்க்கு என்செய்கை கொடிது போலத் தோன்றும்; அவர் என்பாற் பிரியாது உறை கின்றா ரென நீ உரைப்பது ஒக்கும்; உடலால் என்னோடு உறைகின்றாரே யன்றி உள்ளத்தால் உடனுறைகின்றாரல்லர் என்பது நீ அறியாய்; உள்ளத்தே அன்பில்லாதார் எத்துணை நெருங்கப் புல்லினும் அஃது இன்பம் தாராது, காண்” என்றாள்.

அறநெறியிற் பொருளை ஈட்டுதலும், அந்நெறியில் அழித் தலும், செய்து புகழ் வளர்ப்ப தொன்றே வாழ்வாங்கு வாழும் வாழ்வாகாது. அறத்தால் இன்பம் பெருக்கி, அந்நெறிக் கண்ணே நுகர்தல் வேண்டும் என்பது கற்புடை மகளிர்பொற்புறக் கொண்டொழுகிய மனையறமாகும். புகழ் பயக்கும் பொருளும், வினையும் குறித்துச் சென்று மீண்ட காதலர்பால், புகழ்கெட வரூஉம் பரத்தமை இல்லிடைப் பெறலாகும் இன்பப்பயனையும் எய்தாவாறு சிதைக்கு மென்ற கருத்தால், தான் புலந்தமை தோன்றத் தலைமகள் இதனைக் கூறுவது கண்ட பெருங் கடுங்கோ இப்பாட்டின்கண் இக்கருத்தை அமைத்துப் பாடுவா ராயினர்.

கற்றை ஈந்தின் 1முற்றுக்குலை யன்ன
ஆளில் அத்தத் 2தாளிப் போந்தைக்
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பின்
புலியெதிர் முழங்கும் வளிவழங் காரிடைச்
சென்ற காதலர்வந்தினிது முயங்கிப்
பிரியா தொருவழி 1உறையினும் பெரிதழிந்
2துயங்குதி மடந்தை என்றி தோழி
3அற்றே மற்றஃ தறியா தோர்க்கே
வீழாக் கொள்கையின் 4முழவிமிழ் தொண்டிப்
5பலர்புகழ் மூதூர்ப் பனித்துறை யன்ன
மல்லல் மார்பு 6மடுத்தலின்
7புல்லல்மற் றெவனோ அன்பிலங் கடையே.

இது, வினைமுற்றி வந்தெய்திய காலத்து ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.

உரை
கற்றை ஈந்தின் முற்றுக் குலை யன்ன - திரட்சியையுடைய ஈந்தினது முற்றிய குலை போன்ற; ஆளில் அத்தம் தாளிப் போந்தை-மக்கள் இயங்குதல் இல்லாத வழியின்கண் நிற்கும் தாளிப்பனையின்; கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பின் - குலைகளையுடைய நெடிய மடன்மேல் இருந்து சேவற்பருந்து தன் பெடையை அழைக்குமாயின்; புலி எதிர் முழங்கும் - அதன் அடிக்கண் தங்கிய புலி அதற்கு எதிராக முழங்கும்; வளி வழங்கு ஆரிடை-பெருங்காற்று வீசும் அரிய சுரங்களைக் கடந்து; சென்ற காதலர் வந்து இனிது முயங்கி - சென்ற காதலர் மீண்டு வந்து இனிதுகூடி; பிரியாது ஒருவழி உறையினும்-பிரிவின்றி நின்பால் அன்போடு ஒன்றியிருப் பாராகவும்; பெரிது அழிந்து உயங்குதி - மனம் மிகவும் வருந்தி வாடுகின்றனை; மடந்தை-மடந்தையே; என்றி - என்று சொல்லுகின்றாய்; தோழி -; அற்றே அஃது அறியாதோர்க்கு - காரணம் அறியாதார்க்கு அஃது அப்படித் தோன்றும்; மற்று-அதனை அறியக் கூறின்; வீழாக் கொள்கையின் - கெடாத கொள்கையினால்; முழவு இமிழ் தொண்டி - தெருவெல்லாம் முழவு முழங்கும் தொண்டி யென்னும்; பலர்புகழ் மூதூர்ப் பனித்துறை அன்ன-பல நாட்டவராலும் புகழப்படும் மூதூரின் குளிர்ந்த கடற்றுறை போன்ற; மல்லன் மார்பு மடுத்தலின் - வளவிய மார்பினை நல்குதலால் புல்லல் எவன் - அதனைப் புல்லுதல் என்ன பயனைச் செய்யும்; அன்பிலங்கடை - உள்ளத்தே அன்பில்லாத விடத்து எ.று.

காதலர் வந்து இனிது முயங்கிப் பிரியாது உறையினும், மடந்தையே, நீ உயங்குதி என்றி; தோழி, அறியாதோர்க்கு அஃது அற்றே; அறியின், தொண்டிப் பனித்துறையன்ன மார்பு மடுத்தலின் அன்பிலங்கடை புல்லல் எவன் என்பது இனிது விளங்கும், காண் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘மற்று’, முன்னது வினைமாற்று, பின்னது அசைநிலை என்பது இனிது விளங்கும் காண் என்றது முடிவில் சொல்லப்படாது எஞ்சி நிற்றலின், கூற்றெச்சம், “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி எச்சமாகும்1” என ஆசிரியர் கூறுவது காண்க. ஈத்திலைகளின் திரட்சி கற்றை போறலின் கற்றை ஈந்து என்றார். தாளிப்பனையின் குலை ஏனைப் பனைக்குலைபோலச் சிறிய காய்களை யுடைமை பற்றி அதற்கு ஈந்தின் முற்றுக்குலை உவமமாயிற்று. தாளிப் பனையைக் கூந்தற்பனை என்றலும் வழக்கு. ஆளில் அத்தம் - மக்கள் இயக்கம் இல்லாத பாலைநிலத்து வழி, கோள் - காய்; “கோட்டெங்கின் குலைவாழை2” என்பது காண்க. தாளிப் பனையின் நெடிய மடலே அதற்குச் சினையாதலின், நெடுஞ்சினை என்றார். பருந்து கூடமைத்து வாழ்தல் மர பாதலின் ஆண் என்றது, பருந்தின் சேவலாயிற்று. மக்கள் வழக்கற்றமையின் புலி முதலிய கொடுவிலங்குகள் வாழ்தல் பெறப்பட்டது. ஆரிடை - அரிய இடம். பெரிதழிந்து - பெருமை, மிகுதி குறித்தது. “பெரிதினிது பேதையார் கேண்மை3” என்ற விடத்துப் போல; மடந்தை, பருவப் பெயராயினும் மடம் உடைமையும் குறிப்பாற் கொண் டிருத்தல் காண்க. அஃது, பிரியாதுறைதல். அற்று, அன் புடைமை. ஒருகாலத்தே மூவன் என்பான் தொண்டி நகரைக் கைப்பற்ற முயன்று பொருதானாகத் தொண்டி வேந்தனான பொறையன் அவனை வென்று அவனுடைய பல்லைப் பிடுங்கி நகரவாயிற் கதவில் அழுத்திப் புகழ் மேம்பட்டமை தோன்ற வீழாக் கொள்கையின் என்றார்போலும். “மூவன் முழுவலி முள்ளெயிறழுத்திய கதவின், கானலந் தொண்டிப் பொருநன், வென்வேல் தெறலருந் தானைப் பொறையன்4” எனப் பொய்கையார் குறிப்பது காண்க. தொண்டியில் முழவு முழங்குதலை, “முழவீமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும் தொண்டி1” என்பதனாலுமறிக. நானிலவளனும் ஒருங்கே பெற்று நானிலத்தவரும் பிறரும் வேற்று நாட்டவரும் புகழும் சிறப்புடைத் தாகலின் பலர்புகழ் மூதூர் என்றார். மேனாட்டு யவனர்களான பெரிப்புளுஸ் நூலாசிரியரும் தாலமியும் இதனைச் சிறப்பாகக் குறித்துள்ளனர். அன்பிலங்கடை என்றவிடத்து அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது.

உள்ளுறையால் தலைமகன் பரத்தையர் தொடர்பெய்திய தனைக் குறிக்கின்றாளாகலின், அவன் பொருட்டு வாயில் வேண்டுபவள் போலத் தோழி கூறியதனைக் கொண்டெடுத்து எதிர்மொழிகின்றாள். சென்ற காதலர் வந்து இனிது முயங்கிப் பிரியாது ஒருவழி உறையினும் பெரிதழிந்து உயங்குதி மடந்தை என்றி தோழி எனத் தலைமகள் மொழிந்தாள். சென்ற காதலர் என்றது, தலைமகன் அரிதிற் பிரிந்து சென்றது காட்டுமாற்றால் அன்புடைமை குறித்து நின்றது; தலைமகன் தன் மனையின்கண் உடனுறைவு நீங்காது இருப்பது பற்றி, பிரியாது ஒருவழி உறையினும் என்றாள்; எனவே, அவன் அன்பு குன்றினானென எண்ணிப் புலத்தல் கூடாதென்று தோழி கூறினாளாயிற்று. அன்புடையாரை அஃது இலரெனக் கருதி வருந்துதலும் புலத்தலும் அறிவுடையார் செயலன்று என்றற்கு, பெரிதழிந்து உயங்குதி மடந்தை என்றி என்றும், மடமை தன்பால் இன்மை தோன்றத் தோழி என்றும் தலைவி கூறினாள். அது கேட்டலும் தோழிக்கு மருட்கை மெய்ப்பட்டுத் தோன்றவும், நீ உண்மை யறியாய்; அறியாதார் எவர்க்கும் அவர் பிரியா துறைதல் அவரது அன்புடைமையைத் தோற்றுவிக்கும் என்பாளாய், அற்றே மற்று அஃது அறியாதோர்க்கே என்றாள். உயிர்த் தோழியாதலின், அவள் உண்மை தெளிவின்றி அலமரலை விரும்பாது தலைமகன் பரத்தையர் பான்மை யனாயினான் என்பாள், பலர்புகழ் தொண்டிப் பனித்துறையன்ன மார்பு மடுத்தலின் என்றாள். எனவே படிவார் பலரையும் தன்பால் மடுக்கும் பனித்துறை போல, அவன் மார்பு பரத்தையர் பலரையும் மடுக்கும் என அவனது பரத்தமை யொழுக்கத்தை எடுத்தோதி அதனால் அவனது அன்பின்மை யுணர்த்தி, அகத்தே அன்பில்லாத கூட்டம் இன்பம் செய்யாமைபற்றிப் புல்லல் மற்று எவனோ அன்பிலங்கடையே என்றாள்; அதன்மேல் அவள் உள்ளத்தே துயர் மிகுந்து நின்றமையின், புல்லல் மற்று எவனோ என்பது அறிவார்க்குத் தானே விளங்கும் எனத் தன் கூற்றை முடிக்காமலே நின்றொழிந் தாள். பலர் புகழ் பனித்துறை யன்னமார்பு பரத்தமை உணர்த்திப் புலவிக் கேதுவாதலைப் பிறரும், ‘பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே1” என்பது காண்க. இஃது அழிவில் கூட்டத்து அவன் புணர்வு மறுத்தல்.

தாளிப்பனைக்கண்ணிருந்து சேவற் பருந்து தன் பெடையை நினைந்து குரலெடுத்து விளிப்பின், புலியெதிர் முழங்கும் என்றதனால் பரத்தையர் பான்மையனாகிய தலை மகன் நம் மனையை நோக்கி எழின், ஆங்குள்ள பரத்தையர் பூசலிட்டெழுவர்; ஆகவே அவன், இவண் வருதல் அரிதாம் என உள்ளுறுத் துரைத்தவாறு அறிக.

மதுரைக் கணக்காயனார்


சங்ககாலச் சான்றோருள் ஒருவராகிய நக்கீரனாரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பது வழக்கம். இவர் நக்கீரனார்க்குத் தந்தையார் என்பது இதனால் இனிது விளங்கும். இவர் பாடிய பாட்டுக்கள் இத்தொகை நூலிலும் பிற நூல்களிலும் தொகுக்கப்பட்டுள்ளன.

களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகன், தலைவி யுள்ளத்தில் தன்பொருட் டுண்டாகிய காதல் வளர்ந்து முறுகி மாண்புறுவது கருதி, இரவினும் பகலினும் குறியிடத்தே தலை மகளைக் கண்டு இன்புற்று வந்தான். தலைமகளோடு உடனிருந்து பயின்று ஒழுகும் தோழி. அவளுடைய காதல் மிகுதியும் கற்பு நலமும் சிறந்து நிற்பது கண்டாள். தலைமகனைப் பிரிவின்றிக் கூடி யிருந்து பெறும் அழிவில் கூட்டம் எய்துதலில், தலைமகளது வேட்கையும், நினைவும் விஞ்சி நின்றன. அந்நிலையில் தலை மகன் அவளை வரைந்து கோடலே செயற்பாலது. மற்று, அந்நிலையினை அவன் உணராமையின், அவனுக்கு உணர்த்தி வரைவொடு வருமாறு தூண்டுவது தோழியின் கடமையாயிற்று. ஆயினும், தலைவியது காதற்காம நிலையை அவளோ தானோ வாயாற் சொல்லுதல் கூடாமையின், குறிப்பு மொழிகளால் உரைப்பது தான் பொருந்திய நெறியாகும். இவ்வா றிருக்கையில், ஒருநாள் தலைமகன், தலைவி மனையின் சிறைப்புறத்தே வந்து நின்றான். அதனைத் தோழி உணர்ந்து கொண்டு தலைமகளை அவன் நின்ற பக்கத்தில், அவன் காணாததோர் இடத்தில், தான் உரைக்கும் சொல் அவன் செவியிற்படும் அளவில் கொண்டு நிறுத்தி, தோழி, துறைவனாகிய நம் காதல் தலைவனொடு நமக்கு உளதாகிய தொடர்பு ‘நம் அன்னைக்குச் சிறிதும் தெரியாது; நள்ளிரவில் ஏதில் மகளிர் சிலர் நம்மைப் பற்றிச் சிறு சொல் சொல்லி யிருப்பர் போலும்; அவர் சொற்களை விரும்பிக் கேட்டுக் கொண்டு மனைக்குள் புகுந்தவள். மெய்யிற் பரவிய பசப்பை உற்று நோக்கி என்னைத் தன் கண்ணாலே எரித்து விடுவாள் போல நோக்கினாள்; நான் நடுநடுங்கிச் செய்வ தறியாது திகைத்துப் போனேன்; இனி இஃது என்னாகுமோ, அறியேன்’ என்று எடுத்துரைத்தாள்.

இவ்வுரையின்கண், தலைவியது களவு தாயறிந்தமை கூறி இனி இற்செறிப்பு மிகுமெனவும் கூட்ட மெய்துதல் அரிதெனவும் தோழி தலைமகற்கு உணர்த்தி, வரைந்து கோடலை யன்றி, வேறே வழியில்லை என அவன் தெருண்டு வரைவொடு வருதற்கு ஆவன செய்யுமாறு தூண்டும் குறிப்பு அமைந்திருத்தல் கண்டு வியந்த கணக்காயனார் அதனை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்
கொழுமீன் 1கொண்டியர் அழிமணல் குவைஇ
மீனெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொ டன்னை
தான்அறிந் தன்றோ இலளே பானாள்
சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
2சுடுவாள் போல நோக்குமன்
அடுபால் அன்னஎன் பசலை மெய்யே

இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

உரை
நெடுங்கடல் அலைத்த கொடுந்திமில் பரதவர் - நெடிய கடற்கண் மீன்களை அலைத்த வளைந்த படகுகளையுடைய பரதவர்; கொழுமீன் கொண்டியர் - கொழுவிய மீன்களைக் கொணர்ந்தவர்; அழிமணல் குவைஇ - அவற்றை மிக்க மணல் பரந்த கரையின்கண் குவித்து விட்டு; மீன் நெய் அட்டி - மீனெண்ணெயைச் சொரிந்து; கிளிஞ்சில் பொத்திய சிறுதீ விளக்கில் துஞ்சம் - கிளிஞ்சிலை அகலாகக் கொண்டு ஏற்றிய சிறுசுடரை யுடைய விளக்கொளியில் கண்ணுறங்கும்; நறு மலர்ப் புன்னை ஓங்கிய துறைவனொடு-நறிய மலர்களை யுடைய; புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் துறை வனாகிய தலைமகனுடன் நமக்கு உளதாகிய நட்பினை; அன்னை அறிந்தன்றோ இலள்-நம் அன்னை யாவாள் சிறிதும் அறிந்தில ளாயினும்; பானாள்-நள்ளிரவில்; சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பி - பரதவர் சேரியிலுள்ள ஏதில் மகளிர் தமக்குள்ளே உரைத்துக் கொண்ட அலரை விரும்பிக் கேட்டு; சுடுவாள் போல நோக்குமன் - தன் கண்ணாலே எரித்து விடுபவள் போல நோக்கினாள், காண்; அடுபால் அன்ன என் பசலைமெய் - காய்ச்சுதற்குப் பெய்யும் பால் போலப் பசலை பரந்த என் மெய்யை எ-று.

துறைவனொடு உளதாகிய நட்பை அன்னை அறிந் தன்றோ இலள்; பானாள் பெண்டிர் சிறுசொல் நம்பி என் பசலை மெய்யைச் சுடுவாள் போல நோக்குமென்; யான் அஞ்சி அயர்த்துப் போனேன் எனக்கூட்டி வினை முடிவு செய்க. ‘மன்’, அசைநிலை. கடலின் நெடுமை நோக்காது அதன்கட் புகுந்து ஆங்குள்ள மீன்களை அலைத்துக் கவர்தல் பற்றிப் பரதவரை “நெடுங்கடல் அலைத்த பரதவர்1” என்றும் அவர்கள் அதனைச் செய்தற் குதவுவது அவரது திமிலாதலின் கொடுந்திமிற் பரதவர் என்றும் சிறப்பித்தார். இடை அகன்று முன்னும் பின்னும் வாய்குறுகிக் குவிந்து வளைந்திருப்பதனால் கொடுந்திமில் எனப்பட்டது. கொண்டி, கொள்ளப்படுவது, உண்ணப்படுவது உண்டி எனப்படுதல் போல, பேரளவிற் பெறப்படுவதையே கொண்டி என்றல் வழக்காதலின், பெருமீன்களை மிக்க அளவில் கொண்டு வந்தமை தோன்ற இவ்வாறு கூறினார். பெருமழையை அழிதுளி என்றல் போல, மிக்க மணல் பரந்த இடத்தை அழிமணல் என்றார். மீனுடம்பின் நிணத்திலிருந்து நெய் யெடுத்துப் பயன்கோடல் சங்க காலத்தே தமிழ்மக்கள் அறிந்த செய்தி என்க. “மீனெய்யொடு நறவு மறுகவும்1” என்று பிறரும் கூறுதல் காண்க. கிளிஞ்சில், சங்கினத்துள் ஒன்று. துறைவ னொடு உளதாகிய தொடர்பு துறைவனொடு என எஞ்சு பொருட் கிளவியாய் நின்றது. பானா நள்ளிரவு சேரியம் பெண்டிர், சேரியில் வாழும் முது பெண்டிர்; இரவில் நெடும் பொழுது விழித்திருந்து அம்பலும் அலரும் கூறுவது அவர்க்கு இயல்பு. பிறர் குற்றம் கண்டு கூறுவது அவரது சொற் பொருளாகலின் அது சிறுசொல் எனப்பட்டது பசலை வெண்ணிறமுடைமை பற்றி அதனை மிகவும் புனைந்து அடுபால் அன்ன பசலை என்றார்; அடுபால் என்றதனை இறந்த காலம் தொக்க வினைத்தொகை யாக்கின் அட்ட பால் செந்நிறம் பெற்றுப் பசலைக்கு உவமமாகும் தன்மை குறை தலால், அடுதற்குப் பெய்யும் பால்என உரைக்கப்பட்டது.

வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிந்த தலைமகன் அது முற்றி மீண்டு வந்திருத்தலை உள்ளுறையாற் குறித்த மையின் தோழி, தாய் அறியாவாறு தமது மறை பேணப்பட்டு வந்தமை உணர்த்துவாள். துறைவனொடு அன்னைதான் அறிந்தன்றோ இலள் என்றும், ஆயினும் அவன் பிரிவால் தலைவி எய்திய வேறுபாடு அலராயிற்று என்றற்குப் பானாள் சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பி என்றும், தலைவி மேனி வேறுபட்டுத் தோன்றுதற்கு ஏதுவாய் அவள் மேனியிற் பசலை பரந்தமை தெரிவிப்பாள் அடுபால் அன்ன என் பசலை மெய் என்றும். அவர் கூறும் சிறுசொல் கேட்டுத் தலைவியை உற்றுநோக்கியதாய் வெகுண்டமை காட்டி இற்செறிப்பும் அதன் வழி எய்தும் ஏதமும் தலைமகன் உய்த் துணர்தற்கு, சுடுவாள் போல நோக்கும் என்றும் கூறினாள். “ஒன்றித் தோன்றும் தோழி மேன2” என்றதனால் தோழி தலைவி மெய்யை என்மெய் என்றாள் என அறிக.
பரதவர் தாம் கொணர்ந்த மீனை மணலிற் குவித்து விட்டுக் கிளிஞ்சில் விளக்கொளியில் துஞ்சுவ ரென்றது. வரை பொருட்குப் பிரிந்து போந்த தலைமகன் வரைதற்கு முயலாது தன் மனையின் கண்ணே காதலின்ப நினைவின்றிக் கிடக் கின்றான் என உள்ளுறுத்தவாறு.

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார்


இச்சான்றோர் கூத்தனார் என்ற இயற் பெயர் கொண்டு பண்டை நாளில் மதுரையில் வாழ்ந்த பெரியவர். இவர் தந்தை பெயர் சேந்தன் என்பது. அந்நாளில் மக்களுக்கு அறமுதலிய பொருள்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாலாசிரியன் என்ற பெயர் வழங்கிற்று; பாலாசிரியன்மார் பலர் சங்ககால முதல் இடைக்காலச் சோழ வேந்தர் காலம் வரை இருந்துள்ளனர். முதல் இராசராசன் மகனான இராசேந்திர சோழன் காலத்தில் கருந்திட்டைக்குடியில் தோன்றிய கல்வெட்டு ஒன்றில்2 பாலா சிரியன் பரமேசுவரன் சீராகவன் என்றொருவன் காணப்படு கின்றதே இதற்குப் போதிய சான்றாகும். வேறு கல்வெட்டுக்களில் பிராமணன் பாலாசிரியன் நக்கன் கொல்லி1 என்றெல்லாம் வருவது நோக்கின் பாலாசிரியர் பலரும் வேதியராகவே காணப் படுகின்றனர்; பாலாசிரியன் சேந்தன் கொற்றனார், பாலாசிரியர் நப்பாலனார் என வரும் பலரும் வேதியராக இருத்தலால் இச்சான்றோரையும் வேதியராகக் கோடற்கு இடமுண்டு. இப்பாலாசிரியர் இளமையிலேயே இச்சிறப்பெய்தியது பற்றி இவர் இளம்பாலாசிரியர் எனப்பட்டார். இளம்பால் என்பது இவரது ஊர் என்றும், கூத்தனார் எனப்படுவதால் கூத்தாடுவதில் இவர் வல்லுநர் என்றும் சிலர் கூறுவதுண்டு. இது கோபாலன் என்று ஒருவர் பெயர் கொண்டிருப்பது கொண்டு, அவர் ஆடு மாடு மேய்க்கும் தொழிலுடையவர் என்று கருதுவது போலும் பொருந்தா உரையாகும்.

குறவனொருவன் கள் குடித்து மயங்கிக் கிடக்க, அவன் மனைக் கிழத்தியான கொடிச்சி நீராடித் தலைமயிரை உலர்த்திக் கொண்டு குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள்; அவள் மனைப் புறத்தே இருந்த தினைக்கொல்லையை மேயவந்த யானை அவளுடைய பண்ணிசையில் ஈடுபட்டுக் “குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது, படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென, மறம்புகல் மழகளிறு உறங்கும்” என்று இவர் பாடியது பின்வந்த இளங்கோவடிகளின் உள்ளத்தில் இடம் பெற்று, “அமைவிளை தேறல் மாந்திய கானவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட, வீங்கு புன முணீஇய வேண்டி வந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த, வாகைத் தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கெனத் திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி” என்ற பாட்டாய் வெளிவந்த வீறுடையதாகும். மா, பலா ஆகிய கனிகளினின்று இறக்கிய சாற்றோடு தேன் கலந்து மூங்கிற் குழாயிற் பெய்து புளிக்க வைத்த கள்ளை, “பாப்புக் கடுப்பன்ன தோப்பி” என்று சிறப்பித்து, அதனைக் குன்றவர் மலைக் கடவுட்குப் பலியிட்டு வழிபடுவரென்று இவர் கூறுவது இறும் பூது பயப்ப தொன்று, இரவுக் குறிக்கண் தலைமகளைக் காண வரும் தலைமகன், நெறியருமையும் காவன் மிகுதியும் கருதாது போந்து, அவளைக் கூடி நீங்கவும்; அவனது இளமையுள்ளத்துக் காதல் மாண்பை, “தான் கண்ணியன் எஃகுடை வலத்தன், காவலர் அறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து. உயங்கு படரகல முயங்கித் தோண்மணந்து, இன்சொல் அளை இப் பெயர்ந்தனென்” எனத் தலைமகள் கூறுவதாகப் பாடுவது இவ்விளம்பாலாசிரியன் இளமை மாண்புக்கு ஏற்ற சான்றாக இலங்குகிறது இவர் பாடியனவாகச் சில பாட்டுக்கள் வேறு தொகை நூலிலும் உண்டு.

மனைய ளொடு கூடி நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் வாழ்வில், தலைமகள் கருவுற்று மகப்பேறு எய்துங் காலத்தில் அவனுக்குப் பரத்தையர் தொடர்பு உண்டாதலும் பழந்தமிழ் வாழ்வில் உண்டு. மகன் பிறந்த சின்னாட் கெல்லாம் எண்ணெ யிட்டு நீராட்டுவர்; மகனுக்குப் பெயரிடுவது, தந்தை மகன் முகங் காண்பது முதலிய சிறப்புக்கள் நிகழும். தலைவி எண்ணெ யாடுதலை நெய்யாட் டீரணி என்பர். எட்டாந் திங்களில் எடுத்தடி வைத்து நடைபயிலும் மகனுக்குப் பன்னிரண்டாந் திங்களில் பிறந்த நாள் கொண்டாடுப. அதற்கு நாளணி என்றும் நாண்மங்கலம் என்றும் பெயர் கூறுவர். இவ்வழக்குகள் இடைக் காலச் சோழராட்சியில் சிறப்பாகத் தமிழரிடையே இருந்து வந்தன. மகன் பிறந்த காலத்தே தலைமகற்குப் புறத்தொழுக்கம் தோன்றி யிருப்பின், அவன் மனையில் அப்பொழுது நாளணி நிகழ்தற்கு ஒரு கிழமை முன்பே, தலைமகள் தன் தோழிக்குச் செவ்வாடை தந்து உடுப்பித்துச் செம்மலர் சூட்டிச் சிவந்த பூணாரமணிந்து செல்வர் மனைகட்கும் தலைமகனது தொடர் புடையார் மனைகட்கும் மகனுடைய நாளணி வரவைத் தெரி விப்பள். அக்காலையில், தோழி பரத்தையர் சேரிக்கும் செல்வள். செவ்வணி வரக் காணும் தலைமகன் தான் தலைநின் றொழுகும் பரத்தையின் நீங்கித் தன் மனையகம் சென்று சேர்வன். மகற்கு நாண்மங்கலம் செய்யும் நாளில் மகனுக்கு வெளிது உடுத்து வெள்ளணி அணிந்து வெண்மலர்சூடி வெண்மை தீட்டிய தன் மனையின்கண் இருந்து விருந்தும் ஒக்கலும் தானும் கூடியிருந்து நல்லன புரிந்து இன்புறுவன். கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலாய இரவலர் அந்நாளில் போந்து, பொன்னும், பொருளும், பரிசில் நல்கப் பெற்றுச் செல்வர். இவையிற்றைத் தலைமகன் தானே முன்னின்று செயற்பால னாகலின், செவ்வணி தோன்றியதும் மனையகம் வந்து சேர்வது அவனுக்குக் கடனாகும்; பிற காலங்களில் அவன் பிரிவாற்றாது தடுத்து நிறுத்தும் பரத்தையரும் அக்காலத்தில் அவனைத் தடுப்பது உலகியலுக்கு ஒத்த தன்று.

இங்ஙனம் பரத்தமை பூண்ட தலைமகன் உலகியல் பற்றிப் பரத்தையின் மனையின் நீங்கித் தன் மனைக்குச் சென்று சேர்ந்தான். தனித்திருந்த பரத்தையின் மனைவழியே தலை மகளுடைய தோழியின் நண்பர்கள் சென்றனர். அவர்களைக் கண்டதும் பரத்தைக்குத் தலைமகன் பிரிவு உள்ளத்தே தோன்றிற்று. தலைமகன் அப்பரத்தை மனையில் இல்லாமையான், தோழியின் பார்வை ஒரு வகைப் புறக்கணிப்பைப் புலப் படுத்திற்று; அது பரத்தையின் உள்ளத்தில் வெகுளியைத் தோற்றி வெதுப்பத் தொடங்கிற்று. அதனால், அவள் தன் தோழியை அழைத்துச் சில சொல்வாளாயினள்; அவர்கள் அதனைக் கேட்பின் தோழிக்குச் சொல்லுவ ரென்றும், அவள் சென்று பின் தலைமகட்குச் சொல்லுவ ரென்றும், பரத்தை கருதினாள். அதனால், அவள், “தோழி, நம் தலைமகன் தன் மனையின்கண் உறையும் தலைமகளை உலகியல்பற்றித் தலையளித்தற்குச் சென்றான் என்பதை அறியாமல்; அவன் எம்பால் அன்புடைய னாதலால், யாம் தலைமகனைத் தன் மனைக்குச் செல்லுமாறு விடுத்தோம் என்று சொல்வதை யன்றி, அவன் தன் மனைவிபால் மிக்க காதலுடைய னாகலின் பரத்தையின் நீங்கிச் செல்வானா யினன் என்று இவ்வூரவர் சொல்லுவரோ? யாது? சொல்லுவர் கூறுக” என்று வினவினாள்.

தான் காதலித் தொழுகும் தலைமகன்பால் அன்புடையள் என்பது பற்றி யாம் தலைமகன்பால் அன்பு கொண்டும், உலகியல் கண்டும் தலைமகனைத் தலைவி மனைக்கு விடுத்ததாகக் கூறுதல் வேண்டுமே யன்றி, என் பாலினும் தலைமகள்பால் அவனுக்குக் காதல் மிகுதி என்று இவ்வூரவர் கூறுவராயின், அஃது அறியாமை எனப்பரத்தை யுரைத்தது அவளது அன்பு பற்றிய பொறாமையை நன்கு புலப்படுத்தி இளம்பாலாசிரியரின் இளமை உள்ளத்தில் இறும்பூது எய்துவித்தது; அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். தலைமகனைத் தனக்கே உரியனாக்கிக் கோடற் கண் பரத்தையின் உள்ளம் அன்பால் பதைப்பது இதனால் இனிது விளங்குதல் காண்க.

எந்நயந் துறைவி யாயின் யாம் நயந்து
நல்கினம் 1விட்ட தெனின் அல தவ்வயின்
சால்பின் அளித்த தறியா 2தவட்கவன்
3காதலன் என்னுமோ உரைத்திசின் தோழி
4நிழத்த யானை முகத்துவரி கடுப்பப்
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள்
வாழையம் சிலம்பின் வம்புபடக் 5குழீஇ
6யாழிசைத் தன்ன இன்குரல் இனவண்
டருவி முழக்கின் 7பாடோர்த் தோராங்கு
மென்மெல இசைக்கும் சாரல்
8குன்ற வேலித்தம் உறைவின் ஊரே.

இது, தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை விறலிக்குச் சொல்லியது.

உரை
எம் நயந்து உறைவி ஆயின் - எம்பால் அன்புகொண்டு உறைபவ ளாதலால்; யாம் நயந்து நல்கினம் விட்டது எனின் அலது - நாமும் தலைவிபால் இரக்கமுற்றுத் தலைமகனை அவள் மனைக்குச் செல்லவிட்டேம் என்று சொல்வதை யன்றி; அவ்வயின் சால்பின் அளித்தது அறியாது - அவள் மனைக்கு அவனை விடுத்தது உலகியற்குரிய சால்பாதல் கருதிய என்பதை அறியாமல்; அவட்கு அவன் காதலன் என்னுமோ - தலைவிபால் அத்தலைமகன் சிறந்த காதலன் புடையன் என்று சொல்லுவரோ; தோழி உரைத்திசின் - தோழி நீ எனக்கு உரைப்பாயாக; நிழத்த யானை முகத்து வரி கடுப்ப - ஓய்ந்து மெலிந்து நிற்கும் யானையின் முகத்தில் தோன்றும் வரிகளை யொப்ப; போது பொதி உடைந்த ஒண்செங்காந்தள்-அரும்பு விரிந்து மலர்ந்த செங்காந்தளும்; வாழையஞ் சிலம்பின்-வாழை மரங்களும் நிறைந்த மலையின் கண்; வம்பு படக் குழீஇ-புதுமைக் காட்சி யுண்டாகக் கூடி; யாழ் இசைத்தன்ன இன்குரல் இனவண்டு - யாழை இசைத்தாற் போன்ற இனிய ஓசையைச் செய்யும் வண்டினம்; அருவி முழக்கின் பாடு ஓர்த்து ஓராங்கு மென்மெல இசைக்கும் சாரல் - அருவியது முழக்கத்திடை யெழும் ஓசையைக் கேட்டு அதற் கொப்ப மிகவும் மெல்லிதாக இசைக்கும் சாரலையுடைய; குன்ற வேலி தம் உறைவு இன்ஊர் - குன்றங்கள் வேலியாக நிற்கும் உறைவதற்கு இனிய இவ்வூரவர் எ-று.
தோழி, குன்ற வேலி, உறைவின் ஊர், யாம் நயந்து நல்கினம் விட்டது எனின் அலது. அறியாது, காதலன் என்னுமோ, உரைத்திசின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. உறைபவளை உறைவி யென்பர். அவ்வயின் என்றது - அக நகர்கண் உள்ள தலைமகளது பெருமனையை. சால்பு - ஈண்டு ஒப்புரவின் மேற்று. மனைக்கண் சிறப்பும் விழாவும் நிகழுங் கால் தலைமகன் தன் மனைக்கண் இருந்து தன் தலைமைக்கு ஒப்பன செய்தல் உலகிய லறமாகலின், அவ்வொப்புரவு சால் புக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாதல் பற்றிச் சால்பு என்றார்; “அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்து சால்பூன்றிய தூண்1” என்று சான்றோர் கூறுதல் காண்க. நிழத்தல் - மெலிதல்; “ஓய்தல் ஆய்தல் - நிழத்தல் சா அய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்1” என்பது காண்க. காந்தட் போது இதழ் குவிந்து பொதிந்தது போறலின். பொதி எனப்பட்டது. “பகன்றைப் பொதியவிழ் வான்பூ2” எனப் பிறரும் கூறுவர். வாழை - மலைவாழை; வம்பு - புதுமை. பாடு - ஒலி. அருவியின் பாடும் வண்டினத்தின் குரலும் ஒத்திசைத்தல் வேண்டி மென்மெல இசைக்கும் என்றார்; வலி, மெலி, சமம் என்ற இசைநிலை மூன்றனுள் நடுநிற்பது. சிலம்பின் வம்புபடக் குழீஇ. பாடோர்த்து ஓராங்கு இனவண்டு மென்மெல இசைக்கும் என இயைக்க. கடுப்ப - உடைந்த காந்தள் என்க.

உலகியல் பற்றித் தலைமகன் தன் மனையின் நீங்கித் தலைமகளது மனைக்குச் சென்ற காலை, தலைவியின் தோழிக்குப் பாங்காயினார் தம்முள் உரையாடி மகிழ்வது கண்ட பரத்தை, அவர்கள் தன்னைப் புறங்கூறுவதாக நினைந்து, தன் தோழியை நோக்கி, அவர்கள் கேட்குமாறு கூறுவாளாய்த்; தலைமகள் என்பால் அன்புடைய ளாதலின் அவள் தோழியும் தோழிக்குப் பாங்காயினாரும் என்பால் அன்புற் றொழுக வேண்டியவர்களாக, அது செய்யாது வேறு படுகின்றமை என் என்றற்கு, எந்நயந்து உறைவி ஆயின் என்றும், அதனால் யானும் அவள்பால் கொண்ட அன்பினால் தலைமகனை அவள் மனைக்குச் செல்ல விட்டேன் என்பதை உணர்தல் வேண்டும் என்பாள். யாம் நயந்து நல்கினம் விட்ட தெனின் அலது என்றும், அங்ஙனம் விடுத்தற்கும் ஏது எமது அன்பேயன்றி உலகியற்குரிய சால்பு என்பதையும் நன்கு அறிதல் வேண்டும் என்றும். அதனை அறியாது புறனுரைத்தல் அறிவுடைமை யன்று என்றற்கு அலது அவ்வயின் சால்பின் அளித்தது அறியாது என்றும், யாம் நல்கினம். விட்டதன் கருத்துக்கு மாறாக, யாம் சால்பின் அளித்தது அறியாமல், தலைமகன் பரத்தைபால் கொண்ட காதலினும், தலைவிபால் கொண்டது பெரிது எனவும், பெருங்காதல் புரிதற் கேற்ற நலம் பரத்தைபால் இல்லை எனவும், தலைவிக்குப் பாங்காயினார் புறனுரைப்பதாக எண்ணி மனம் வெதும்பி வினவுவாளாய், அவட்கு அவன் காதலன் என்னுமோ உரைத்திசின் தோழி என்றும் கூறினாள். தலைவிக்குப் பாங்காயின மகளிரைச் சுட்டி ஊர்என்றாள். “உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந் துறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர்1” என்றாற் போல. ஊர் அங்ஙனம் உரைத்தற்குரிய ஏதுவினை உள்ளுறையாற் கூறலின் என்னுமோ என்பதனோடமையாது. உரைத்திசின் தோழி என்று வற்புறுத்தினாள். சிலம்பின் கண் வண்டினம் வம்புபடக் குழீஇ அருவியின் பாடு ஓர்த்து ஓராங்கு மென் மெல இசைக்கும் என்றது, தலைவியின் தோழிக்குப் பாங்கா யினார் வம்புபடக் குழீஇ நின்று தலைவன் தலைவி மனைக்குச் சென்றமை கண்டு அதற்கொப்ப அவட்கு அவன் காதலன் என உரைக்கின்றனர்; அவர்கட்கு அஃது இயல்பு என உள்ளுறுத் துரைத்தவாறு. இவ்வாறு மேலும் கூறுவாராயின் இன்னே சென்று அவன் தாரும் தானையும் பற்றி ஈண்டுக் கொணர்வேம் எனப் பரத்தை வெகுண்டு நெடுமொழி யுரைப்பது பயன் என வுணர்க. “வரிவேய் உண்கண் அவன் பெண்டிர் காணத் தாரும் தானையும் பற்றி, “தோள் கந்தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்பு கடிகொள்ளே னாயின்2” எனப்பரத்தை வெகுண்டு வஞ்சினம் உரைப்பது காண்க.

பெருந்தலைச் சாத்தனார்


பல்லோரும் பல்லுயிரும் இனிதே வாழும் பரிசே நினைந்து அறத்தாற் பொருள் செய்து அந்நெறியிலே அதனைச் செல வழித்துப் புகழ் பெருக்கி இன்புற்று வாழும் தலைமக்கள் வாழ்வில் தலைமகன் பொருள்வினை குறித்து மனையின் நீங்கிச் செல்லும் கடமை ஒன்றை யுடையனானான். பிரிவு தோன்றியவழிப் பிரிவின்றி அமைந்த காதலர்க்கு அது பெருந்துயரைச் செய்யும் என்பது உலகறிந்த உண்மை. அதனால் தலைமகன் தன் பிரிவைக் காதலிக்கு வாயால் சொல்லுதற்கு அஞ்சி அதற்குரிய குறிப்புக் களைத் தன் செயல்வகைகளால் உணர்த்தக் கருதினான். தலை மகன் வழிநின் றொழுகும் ஏவலரும், இளையரும், வேற்படை முதலிய படைக்கருவிகளைத் தேய்த்துத் தூய்மைசெய்து நெய்பூசி நேர்மை உறுவித்தனர். கேடகம் முதலிய கருவிகளைப் பீலி சூட்டிப் பிறங்குவித்தனர். தலைமகன் தலைவிபால் வழங்கும் மொழிகளில் புத்தின்பமும், பேரன்பும், விளங்கி நின்றன; அவன் செயல்வகைகள் யாவும் அவளது காதலின்பத்தைப் பெருக்கின. இப்புதுமை நிகழ்ச்சிகளைத் தலைமகள் கண்டாள்; அவள் உள்ளத்தே ஆராய்ச்சி பிறந்தது. விதந்த செய்கையும், மிகைபட மொழிதலும், வேறொன்று குறிக்கும் விம்மிதம் உடையவாகலின், தலைமகட்குத் தலைமகனது பிரிவுக்குறிப்பை அவை வெளிப் படுத்தின; அவள் உள்ளம் துடித்தது; உரை குழறிற்று; கண்களில் நீர்நிறைந்து வழிந்தது. தோழியை நோக்கினாள்; “தோழி, செல்லுதற்கரிய கொடிய சுரம் நோக்கி நமது காதலர் பிரியத் துணிந்துவிட்டார்; அதனை அவர் மொழியா ராயினும், அவ ருடைய குறிப்புக்களால் உணர்ந்து கொண்டேன்; ஏவலிளையர் படைக்கலங்களைச் செம்மை செய்து ஒழுங்குபண்ணி விட்டனர்; மகிழ்ச்சியால் மனமுவந்து முகமலர்ந்து இன்புற்ற நாள் ஒழிய, இனி அவரை நினைந்து அவல நெஞ்சமொடு அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய்த் துயருறும் காலம் வந்துவிட்டது காண்,” என்று மொழிந்தாள்.

தலைவியின் இக்கூற்றின்கண், தலைமகன் செய்யும் காத லின்பக் கவின்பெறு செயலிடத்தே கருத்தூன்றி நின்ற போதும், அவளது இயற்கையறிவு காமக்களிப்பால் அறிவன அறியும் அமைதி யிழவாது, உள்ளதன் உண்மை யுணர்ந் தொழுகும் மாண்பினால் பிரிவுண்மை துணிந்து, அதனாற் பிறக்கும் பெருந் துயரை நினைந்து உரைக்கும் பெற்றி இனிது விளங்குவது கண்ட பெருந்தலைச்சாத்தனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரம்தீ யுற்ற 1வறுந்தலை அங்காட்
டொதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கிலை துடைப்ப பலகையும்
பீலி சூட்டி மணியணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப 2இனியே
வந்தன்று போலும் தோழி நொந்துநொந்
தெழுதெழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் 3நாளே

இது, செலவுக் குறிப்பறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

உரை
பரந்துபடு கூரெரி கானம் நைப்ப - பரந்து எழுந்த காட்டுத்தீ மிக்குக் காடு முழுதும் எரித்தலால்; மரம் தீ உற்ற - மரங்கள் தீய்ந்து கரிந்தமையால்; வறுந்தலை அங்காட்டு- வெற்றிடமாகிய கொடிய காடுகளைக் கொண்ட; ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் - செல்லுதற்கரிய வெவ்விய சுரத்தின்கட் செல்லுதலைத் துணிந்து விட்டனர்; அவர் குறிப்பின் கண்டி சின்யான் - அதனை அவரது குறிப்பால் அறிந்து கொண் டேன் யான்; நெறிப்பட வேலும் இலங்கிலை துடைப்ப - நெறியிற் செல்லுதற்காக வேற்படைகளின் விளங்குகின்ற இலைப்பகுதிகள் அராவித் தூய்மை செய்யப்படுகின்றன; பலகையும் பீலி சூட்டி மணி அணிப - கிடுகாகிய பலகைக்குப் பீலியணிந்து மணியை நிரலே கோத்துக் கட்டுகின்றனர்; பண்டினும் நனிபல அளிப்ப-நம் காதலராகிய அவரும் நம்மை முன்னையினும் மிகப் பலவாகப் பாராட்டித் தலையளி செய்யாநின்றார்; இனியே - இப்பொழுதே; வந்தன்று போலும் - வந்துவிட்டது, காண்; தோழி - ; நொந்து நொந்து-பலகாலும் பிரிவு நினைந்து நினைந்து மிகவும் வருந்தி; எழுதெழில் உண்கண் பாவை - மை யெழுதப்பட்டு அழகு பெற்று விளங்கும் கண்ணிடத்து உளவாகிய பாவை; அழிதரும் வெள்ளம் நீந்தும் நாள் - மிக்குச் சொரியும் கண்ணீரை நீந்தி வருந்தும் காலம் எ-று.

சுரம் இறந்தனர், அவர் குறிப்பிற் கண்டிசின், துடைப்ப, அணிப, அளிப்ப; தோழி, இனி, பாவை நீந்தும் நாள் வந்தன்று போலும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ‘போலும்’, உரையசை; “மங்கல மென்பதோர் ஊருண்டு போலும்” என்றாற் போல. முதற்கட் பரவுதலும் பின்னர் மிக்கு எழுதலும் தீக்கு இயல்பாதலின், பரந்துபடு கூரெரி என்றார். கூர்தல் -மிகுதல்; நைத்தல் - சுடுதல், “ஒள்ளெரி நைப்ப1” எனவும், “கானம் இறந்தெரி நையாமல்2” எனவும் வருதல் காண்க. எரி பரந்த கானம் பசுமை யிழந்து புல்லினமும் இன்றி வறிதாகலின், வறுந்தலை யங்காடு என்றார். அத்தகைய காட்டின் வழியாக மாவும், புள்ளும், மக்களும், இயங்குதல் இல்லையாதலால் ஒதுக்கரும் சுரம் என்றும், அதன்கண் தட்பமின்றி வெப்பமே மிக்கிருத்தலால் வெஞ்சுரம் என்றும் குறிக்கின்றார். பெரு மரங்களும் தழைத்த செடி, கொடி, புல்பூடுகளு மின்றிச்; சிறுபரலும், குறும்பாறைகளும், கள்ளி முள்ளிகளும், நெடும் பனைகளும், சிற்றீந்தும் ஆங்காங்கே வளர்ந்துள்ள பாலை நிலம்; தண்ணிழலும், நீர்நிலைகளும் இன்றி வெயிலின் வெம்மையும், சூறைக் காற்றின் கொடுமையும், இயல்பாக வுடைமை பற்றி அதனைச் சுரம் என்றல் வழக்கு. இறத்தல் -கடந்து சேறல். பலகை - கேடயர் எனப்படும் தோற்கிடுகு; வேலும் வாளும் ஏந்திப் பொரும் மறவர், இதனை இடக்கை யில் கொண்டு பகைவர் எறியும் வாளையும் வேலையும் தடுப்பர்; இஃது இரும்பாலும் அமைவதுண்டு. மயிற்றோகை போல் வட்டமாக இருத்தலால், பலகையின் விளிம்பில் மயிற்பீலி அணிவது மரபு. துடைப்ப - அணிப, அளிப்ப என்ற வினைகள் மயங்குமொழிக் கிளவியாய் நிகழ்காலம் குறித்து நின்றன. தெளிவு பற்றி இறந்தனர், வந்தன்று என்பன இறந்த கால முற்றுவினை.

தலைமகனொடு கூடி மனையின்கண் இன்புற் றொழுகும் தலைமகள் ஏவலிளையர் செயல்கண்டு பிரிவு உளதாம் போலும் என ஐயுற்று, அவன் தன்பால் செய்யும் தலையளியை ஆராய்ந்து, பிரிதல் உண்மை யென்பது தெளிந்து கொண்டு கூறுதலின்; வெஞ்சுரம் இறந்தனர் என்று தோழிக்குக் கூற லும்; அவள் அதனை ஏலாது மறுப்பாள் போல நோக்கக் கண்டு, தானே நேரில் நிகழ்ந்த குறிப்புக்களால் அறிந்தமை யுரைப்பாளாய், அவர் குறிப்பிற் கண்டிசின் யான் என்றாள். ‘மற்று’, அசைநிலை, இறந்தனர் என்ற போதே அவள் உள்ளத்தே தலைவன் பிரிந்து நெடுஞ்சுரம் இறந்து சென்ற உணர்வு நிலவினமையின், மனையிடத்த னான தலைமகனை அவர் என்றாள் என உணர்க. மேலும், தான் கண்ட குறிப்புக் களை வகுத்துக் கூறலுற்று, வேலும் பலகையும் செம்மை செய்து ஒப்பனை பண்ணப்படுவது காட்டி, வேலும் இலங்கிலை துடைப்ப எனவும், பலகையும் பீலி சூட்டி மணியணி பவ்வே எனவும், உரைத்தாள். நெய் பூசப்பெற்று மாசு படிந்திருந்த வேலை மாசு நீக்கி, அராவிக் கூரிதாக்கு தலைப் பொதுப்படத் துடைப்ப என்றாள். அது கேட்ட தோழியின் உள்ளம், அவ்வப்போது செம்மை செய்யப்பட வேண்டிய முறைமை பற்றி அச்செயல்கள் நிகழ்ந்திருக்கலா மென்று ஐயுற்றது போல நோக்கலும், மறுக்க முடியாத குறிப்பென்று மொழிவாள். விரித்துக்கூறல் மாட்டாமையின், பண்டினும் நனிபல அளிப்ப என்றாள். அளித்தல் - ஈண்டுப் பாராட்டுதல், “செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவும், மெய்பெற வுணர்த்தும் கிழவி பாராட்டே1” என்பது பற்றி நனிபல அளிப்ப என்றா ளென்றுமாம். “அணைமருள் இன் துயில் அம்பணைத் தடமென்றோள். துணைமலர் எழில்நீலத் தேந்தெழில் மலருண்கண், மணமௌவல் முகையன்ன மாவீழ் வானிரை வெண்பல், மணநாறு நறுநுதல் மாரி வீழிருங் கூந்தல், அலர்முலையாகத் தகன்ற வல்குல், சிலநிரை வால் வளைச் செய்யாயோ எனப் பல பல கட்டுரை பண்டையிற் பாராட்டி, இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது, இனியறிந்தேன்2” எனப் பிறாண்டுக் கூறப்படுதல் காண்க. அதனால் தோழியின் உள்ளத்தில் தோன்றிய அசைவு அவள் மெய்ப்பட்டுத் தோன்றவும், தலைவி மனம் கலங்கிக் கண்கலுழ்ந்து கூறுவாளாய், இனியே வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து எழுதெழில் உண்கண் பாவை, அழிதரும் வெள்ளம் நீந்தும் நாளே என்றாள். இதனால் தோழி கேட்டுத் தலைமகனைச் செலவழுங்குவிப்பாளாவது பயன்.

பூதன் தேவனார்


களவு நெறியில் ஒழுகும் தமிழ்த் தலைமக்கள் இருவருள், தலைமகன், தலைவியுள்ளத்துக் காதல் தன்னை இன்றியமையாத மாண்பு எய்துவது வேண்டி, இரவினும் பகலினும், குறியிடத்தும் வாய்த்த பிறவிடத்தும் அவளைத் தலைப்பெய்து இன்புற்று வந்தான். இடையில் வாழ்க்கைக்குரிய கடமைகளும் பொருள் வினைகளும் தோன்றி, இரண்டொருநாள் ஒருவரையொருவர் காணாவாறு பிரித்தலும் உண்டு. காணுமிடத்து இன்புறுத்தும் காதல், அவனைக் காணாவிடத்துப் பெருகிநின்று துன்புறுத்தின மையின், தலைமகட்கு மெலிவும் வேறுபாடும் தோன்றின அது கண்ட அயல்மனை மகளிர் பலப்பல கூறலுற்றனர்; தலை மகளைப் புறம் போகாதவாறு தாயர் தடுத்து இல்லின்கண் செறித்தனர். இந்நிலையில் ஒருநாள் தலைவியதுமனையின் சிறைப்புறமாகத் தலைமகன் வந்து நின்றானாக, அவனைக் கண்டாள் தோழி, அவற்குத் தலைவியின் நிலைமையினை உணர்த்தி விரைய வரைந்து கொள்ளுமாறு அவனைத் தூண்டுவது அவளுக்குக் கடனாயிற்று. வரைவு நீட்டிப்பின், தலைவியின் நலம், மணத்தற்குரியார் பலர்க்கும் பொதுப்பொருளாய் அவர்கள் மகட்கொடை வேண்டி வருதற்கும், வேண்டி னோர்க்குப் பெற்றோர் எளிதில் வழங்குதற்கும் உரிய நிலைமைத் தாதலை எண்ணியே, தோழி வரைதலை வேண்டித்தலைவனைக் கடாவுதற்கண் கண்ணும் கருத்தும் உடையளானாள். வரைதல், இவள் இன்னாற்கு வாழ்க்கைத் துணையாக வரையப்பட்டாள் எனச் சான்றோரும், கொள்வோரும், கொடுப்போரும் கூடிச் செய்யும் பிடிபாடு; வரைவுக்குப் பின்பே வதுவைமணம் நிகழும்; அன்றுதான், உடனுறைவு கொண்டு மனையறமாகிய கற்பு நெறி ஒழுகும் வாழ்க்கை தலைமக்கட்குத் தொடங்கும். அதுவே அன்பின் ஐந்திணை நெறி. வரைவு, ஊரறிய நிகழ்வது; வதுவை நாடறிய நிகழ்வது.

தலைமகனை வரைவின்கண் நினைவு கொள்ளுமாறு தூண்டும் கருத்தினளாகிய தோழி, தலைமகன் செவியிற் படுமாறு தலைவியொடு சொல்லாடலுற்று, “தோழி, நமது காதலர் வரும் தேரை நாம் இப்பொழுது காண முடிவதில்லை; இற்செறிப்பினாற் பிறர் கண்ணிற்படுதலும் நாணுத் தருகிறது; நள்ளிரவிலும் என் கண்கள் உறங்குவதில்லை; புள்ளினங்களின் ஒலியைக் கேட்குந் தோறும் அவர் தேரின் மணியென எண்ணி ஏமாந் தமையின் என் நெஞ்சமும் வலியழிந்து சோர்ந்து போயிற்று, காண்” என்றாள்.

இக் கூற்றின்கண் தலைவியின் மெலிவும், உறக்கமின்மையும், இற்செறிப்பால் கூடலருமையும், கூறக் கேட்கும் தலைவன்; இனி வரைந்து கோடலே தக்கது எனத் துணிந்து நாளை வரைவொடு வருவல் என அவள்பால் உரைக்கச் செய்யும் திறம் அமைவது கண்ட பூதன் தேவனார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார்.

ஆடமை ஆக்கம் ஐதுபிசைந் தன்ன
தோடமை தூவித் தடந்தாள் நாரை
நலனுணப் பட்ட நல்கூர் பேடை
1கழிபெயர் மருங்கிற் சிறுமீன் உண்ணாது
கைதையம் படுசினைப் புலம்பொடு வதியும்
தண்ணந் துறைவன் 2தேரே கண்ணிற்
காணவும் இயைந்தன்று மன்னே3 நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள்ளொலி மணிச்செத் தோர்ப்ப
விளிந்தன்று 4மாதவர்த் தெளிந்தஎன் நெஞ்சே

இது, சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

உரை
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன - அசைகின்ற மூங்கிலிடத்தேஉண்டாகிய நெல்லை மெல்லப் பிசைந்து கொள்ள நின்ற தோகை போல; தோடமை தூவித் தடந்தாள் நாரை - தொகுதி கொண்ட தூவியையுடைய பெரிய காலை யுடைய நாரையால்; நலன் உணப்பட்ட நல்கூர் பேடை - நலன் நுகரப்பட்டு மென்மையுற்ற பெடைநாரை: கழிபெயர் மருங் கின் சிறுமீன் உண்ணாது - கழிக்கண் அலைபோந்து நீங்கிய கரையோரத்தில் கிடந்து பிறழும் சிறுமீன்களைத் தானும் உண்ணாது; கைதையம் படுசினை புலம்பொடு வதியும்-தாழையின் கிளையில் நாரையின் வரவு நோக்கித் தனித்திருந்து வருந்தும்; தண்ணம் துறைவன் தேர் - குளிர்ந்த நீர்த்துறையை யுடைய தலைமகன் ஊரும் தேர்; கண்ணில் காணவும் இயைந் தன்று - யாம் கண்ணால் காண்டற்கு இயலாதவாறு ஈங்கு வாராதொழிந்தது; நாணி - இற்செறிப்பால் நாணம் மிகுந்து; நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் - நள்ளிரவுப் போதிலும் யான் கண்ணுறங்கே னாயினேன்; புள்ளொலி மணிச்செத் தோர்ப்ப - புள்ளினங்கள் செய்யும் ஒலியை அவர் தேரிற் கட்டிய மணிகளின் ஒலியென ஓர்ந்து ஏமாந்தமையின்; அவர்த்தெளிந்த என்நெஞ்சு விளிந்தன்று-அவரை உயிர்த் துணையாகத் தேர்ந்து கொண்ட என் நெஞ்சமும் வலியழிந்து சோர்ந்து போயிற்று, காண் எ-று.

துறைவன் தேர் கண்ணிற் காணவும் இயைந்தன்று; நாணியாமத்தும் கண்படை பெறேஎன்; செத்து, ஓர்ப்ப, என் நெஞ்சு விளிந்தன்று எனக்கூட்டி வினைமுடிவு செய்க. அமை - மூங்கில்; அதனிடத்து விளையும் நெல்லை ஆக்கம் என்றார். வன்மையாகப் பிசைந்தவழி மாவாய்க் கெடுமாகலின் ஐது பிசைதல் வேண்டிற்று. நெல்லைப் பிசைந்து கொண்ட வழிச் சோர்ந்து தோன்றும் தோகை நாரையின் தூவிக்கு உவமமாயிற்று, தோடு - தொகுதி. நலன் இழந்து மெலிவுற் றிருப்பது பற்றி நல்கூர் பேடை என்றார். நெடுநீர்ப் புக்கு எளிதின் அகப்படாது ஓடும் மீன்களைத் தேர்ந்தலையும் வருத்தமின்றி, எளிமையிற் கிடக்கும் சிறுமீன் என்றற்குக் கழிபெயர் மருங்கிற் சிறுமீன் என்றார். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. சேவல் நாரை நீங்கினமைதோன்ற, புலம்பொடு வதியும் என்றார். புலம்பு - தனிமை; ‘ஏயும்’ ‘மன்னும்’ ‘மாதுவும்’ அசைநிலை; மன் - பெரும்பான்மை குறித்ததுமாம். ஓரொருகால் உறங்கற்கு விருப்பமின்றாயினும், கண்ணிமைகள் தாமாகவே படுதல் உண்மைபற்றி, உறக்க மென்னாது கண்படை என்றார். மணி - ஆகுபெயர். ஓர்ப்ப என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு விளிதல். ஈண்டுச் சோர்தல் மேற்று.

சிறைப்புறத்தானாகிய தலைமகனை வரைவு கடாவும் கருத்தினளாகலின், உள்ளுறையால் அவன் வரைவிடை வைத்துப் பிரிந்தமையும் தலைவியின் மெலிவும் கூறுகின்றாள்; ஆதலால், தண்ணந்துறைவன் தேரே கண்ணிற் காணவும் இயைந்தன்று என்றாள். அவனைக் காணாதொழியினும் அவன் தேரினது காட்சி ஒருவகை ஆறுதல் பயக்குமாறு தோன்றத் தேர் என எடுத்து, கண்ணிற் காணவும் இயைந் தன்று என மொழிந்தாள். வரைவை இடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டவழி அவனது வரவு வரைவு எண்ணியே இருக்குமென்பது பற்றித் தேரையே விதந்து மொழிகின்றாள் என அறிக, ஒருகால் அவனது தேர் போந்ததாயினும், யாம் காணவியலாதவாறு இற்செறிக்கப்பட்டுள்ளேம் என்றற்கு. இயைந்தன்று மன்னே என்றும், இற்செறிப் புண்டதற்குக் காரணம், பிறர் காணில் அவரால் ஆராய்ந்து காணப்படுதற்கு நாணுதல் பற்றி, நாணி என்றும், இரவின்கண் போந்து இன்பம் செய்தது உண்மையின் அது நினைந்து விழித்திருந்தமை தோன்ற, நள்ளென் யாமத்தும் கண்படை பெறேன் என்றும், அந்த ஊக்கமும் ஒழிந்தமை தோன்ற, புள்ளொலி மணிச் செத்தோர்ப்ப விளிந்தன்று என்றும், அதனால் தலைமகன்பால் அன்பின்மையும், கொடுமையும் கண்டு எண்ணிப் புலந்தமை வெளிப்பட அவர்த் தெளிந்த என் நெஞ்சு என்றும் கூறினாள்.

தடந்தாள்நாரையால் நலனுணப்பட்ட நல்கூர் பேடை, நாரையின் வரவு நோக்கிச் சிறுமீனும் உண்ணாது கைதை யஞ்சினையின்கண் புலம்பொடு வதியும் என்றது. தலை மகனால் நலன் நுகரப்பட்டு உண்டி வெறுத்து, உடம்புநனி சுருங்கி, இற்செறிப்புண்டு உறையும் தலைமகள் தலைமகன் வரைவொடு வருதலை எதிர் நோக்கியிருப்பது உள்ளுறுத் துரைத்தவாறு. இதனைச் செவியிற் கேட்கும் தலைவன் விரைந்து வரைவு மேற்கொள்வானாவது பயன்.

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்


உமட்டூர் என்பது மலையாள மாவட்டத்தில் சேரநாடு வட்டத்திலுள்ளதோர் ஊர்; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய கண்ணனாருடைய குமட்டூர் என்பது இந்த உமட்டூரின் வேறு பாடம். பரங்கொற்றனார் பெயர் பாரங்கொற்றனார் என்றும் ஏடுகளிற் காணப்படுகிறது; அதுவே பாடமாயின் பாரம் என்பது குறும்பர் நாடு வட்டத்திலுள்ளதோர் ஊராகும். ஆயினும், அச்சுப் படிகள் பரங்கொற்றனார் என்றே குறிக் கின்றன. வேள் ஆய் பல வில்வீரரை யுடையனாய்ப் பகைவர் அரண்களை அழித்து அவர்பால் வென்று பெற்ற நன்கலன்களைத் தொகுத்து வைத்துப் பாணர் முதலானோர்க்கு வழங்கும் வள்ளன்மையுடையனாய் விளங்கினதும், மோரியர் என்பார் வடபுலத்திலிருந்து தென்னாடு போந்த காலை தங்கள் தேர் இனிது சேறற்குக் குன்றங்களை வெட்டி வழி செய்ததும் இவரால் குறித்துரைக்கப் படுகின்றன. இவர் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் உளது.

களவு நெறிக்கண் ஒழுகி வரும் தலைமக்கள் காதல் சிறந்து ஒருவரை யொருவர் இன்றியமையாராகும் செவ்வி எய்தும்போது அவர்களிடையே வரைவுக்கு வேண்டிய நினைவும், சொல்லும், மிகுதிப்படும். தலைமகன் வரைபொருள் குறித்துப் பிரிந்து மீளுதலும், சான்றோரை விடுத்து மகட்கொடை வேண்டலும், பிறவு மாகிய முயற்சிகளில் ஈடுபடுவன். தலைவியது வேறுபாடு கண்டு பெற்றோர் வெறியெடுத்தலும், வேற்றவர் வரைவு வேண்டி வருதலும், அவற்றைக் கண்ட விடத்துத் தலைமகள் அறத்தொடு நிற்றலை மேற்கொண்டு தலைவன் முயற்சி இனிது கைகூடத் துணைபுரிவள். இம்முயற்சிகட் கேற்ற சூழ்நிலை அமையா விடத்துத் தலைமகன் தலைமகளை அவள் பெற்றோர் அறியாவாறு தன்னூர்க்குக் கொண்டு சென்று மணந்து கோடல் உண்டு; இதுபற்றியே இவ்வின்ப வொழுக்கம் களவொழுக்கம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலை தோன்றவே தலைமகன் தலை மகளைத் தன்னுடன் கொண்டுதலைக் கழியத் துணிந்து தோழிக்கும் தலைமகட்கும் தெரிவித்தான்; அவ்விருவரும் உண்மை நிலையை உள்ளவாறு கண்டு போக்குக்கு உடன் பட்டனர்; குறித்த நாள் இரவு தலைமகன் வரவை உணர்ந்து தோழி தலைமகளை அவன்பால் கொண்டுய்த்துக் கையடைப் படுத்தவும், தலைமக்கள் இருவரும் தலைமகன் ஊர் சென்று சேர்ந்தனர். தோழி ஒன்றும் அறியாள் போல் மனையின்கண் உறைந்தனள். மறுநாள் தலைமகளைக் காணாத அவள் பெற்றோர் பெருங்கலக்க முற்றுத் தேடினர். தலைமக்கள் சென்ற நெறிபற்றித் தோழி, செவிலி பெற்ற தாய் முதலியோர் தேடிக்கொண்டு செல்லுதலும் உண்டு; வழியில் எதிர்ப்படும் அறிவரும் சான் றோரும் பிறரும் கண்டமை கூறி அவர்களைத் தெருட்டி, நின்மகள் தனக்குச் சிறந்தவனை வழிபட்டுச் சென்றாள்; அஃது அறநெறியுமாகும் என்பர்; பின்னர் அவர்கள் தம் மனையகம் மீளுவர். தலைமகனைத் தேடிச் சென்ற செவிலி மீண்டு போந்து தலைமகள் தனக்கு இனிய காதலனான தலைமகனுடன் சென்று சேர்ந்தாள் என்றுரைத்த செய்தியை அறிந்தாள். தலைவியைப் பெற்ற நற்றாய் அவளது தாயுள்ளம் குழவிச் செவ்வி முதல் தலைக்கழிந்த அன்றுகாறும் தலைமகள்பால் நிகழ்ந்த சொல்லும், செயலும், நினைந்து பெருந்துன்பம் எய்திற்று. குழவிக் காலத்து மழலை மொழியும், பேதைப்பருவத்துத் தீதில் செயல்களும், பெதும்பைப் பருவத்து ஒதுங்கிய முறைகளும் அவள் நெஞ்சை நீராய் உருக்கின; தலைமகள் இளையளாய் ஆயமகளிருடன் விளையாடுங்கால் மனையிடத்தே வயலைக்கொடி நட்டு வளர்த்து வந்தாள். ஒரு நாள் அதனைக் கன்றீன்ற பசு போந்து உண்டொழித்ததாக, தலைமகள் தன் சிறுவயிற்றைப் பிசைந்து கதறிப் புலம்பலுற்றாள்; தாயர் பலரும் கூடி எத்துணையோ ஆறுதல் கூறியும் அவள்மனம் தெளியவில்லை; பின்பு உணவுப் போது எய்தவும் அவட்குத் தேன்கலந்த பாலைத் தந்தனர்; அவள் உணவுண்ணாமையே யன்றி அப்பாலையும் உண்ணாமல் தேம்பி அழுதலையே செய்தாள்; இதனைத் தெளிவாகச் சொல்லி வருந்திய தாய் “நெருநலும் அவ்வியல்பின ளாகவே இருந்த என்மகள், காளையொருவன் மொழிந்த பொய்ம்மொழியை நம்பி அருஞ்சுரத்தைக் கடந்து சென்றாள் என்று சொல்லுகின்றார்கள்” என்று வருந்தினாள்.

நற்றாய் மொழிந்த இக்கூற்றின்கண், அவளது தாயுள்ளம் மகட்பிரிவை ஆற்றாது வருந்துவதும், அதனிடை அவள் மொழிந்த சொற்களுள் அவளையறியாமலே மகளிடத்து முகிழ்த்து நின்ற தாய்மைப் பண்பு மனைமாட்சிக்குத் தக வளர்ந் திருக்கும் திறத்தை வயலைக்கொடி நிகழ்ச்சியால் புலப்படுத் தியதும் கண்ட பரங்கொற்றனார் இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

இல்எழு வயலை ஈற்றா தின்றெனப்
பந்துநிலத் தெறிந்து பாவை நீக்கி
அவ்வயி றலைத்தஎன் செய்வினைக் குறுமகள்
மான்அமர்ப் பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்பத் தேனொடு
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும்அனையள் மன்னே இன்றே
மையணற் காளை பொய்புக லாக
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்தேர் வெண்பல் முகிழ்நகை சிறந்தே1.
இது, மனை மருட்சி.

உரை
இல்லெழு வயலை ஈன்ற ஆ தின்றென - இல்லின் கண் தன்னால் வளர்க்கப்பட்டு வளர்ந்த வயலைக் கொடியைக், கன்றை ஈன்ற பசு தின்றொழித்ததாக; பந்து நிலத்து எறிந்து - தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்தை நிலத்தில் எறிந்து விட்டு; பாவைநீக்கி-மகளெனப் பேணி விளையாடும் பாவையையும் ஒரு புறத்தே ஒதுக்கித் தள்ளிவிட்டு; அவ்வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள்-அழகிய தன் வயிற்றைப் பிசைந்து கொண்டு அழுதவளாகிய யான் செய்த நல்வினைப் பயனாய்த் தோன்றிய இளையவள்; மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு - மானினது அமர்த்த பார்வை போன்ற மருண்ட பார்வையை யுடையளாய்; யானும் தாயும் தேனொடு தீம்பால்மடுப்ப - யானும் செவிலியும் தேன் கலந்த இனிய பாலை யுண்பித்த வழியும்; உண்ணாள் - சிறிதும் உண்ணாளாய்; வீங்குவனள் விம்மி - வெய்துயிர்த்து விம்மி அழுதவள்; நெருநலும் அனையள் - நேற்று வரை அத்தன்மை யுடையவளாகவே இருந்தாள்; இன்று - இன்றோ எனில்; மையணல் காளை பொய்புகலாக-கரிய மீசையும் தாடியு முடைய காளை யொருவன் கூறிய பொய்ம்மொழிகளை உண்மையாக மேற்கொண்டு; அருஞ்சுரம் இறந்தனள் என்ப - அரிய சுரங்களைக் கடந்து சென்றாள் என்று பலரும் கூறா நிற்பர்; முருந்தேர் வெண்பல் முகிழ்நகை சிறந்து - முருந்து போன்ற தன் வெண்மையான பற்கள் தோன்ற நகைத்துக் கொண்டு எ-று.

வயலை ஈற்றா தின்றென, எரிந்து, நீக்கி, வயிறலைத்த குறுமகள், மையல் நோக்கமொடு, தேனொடு தீம்பால் யானும் தாயும் மடுப்பவும் உண்ணாள், வீங்குவனள் விம்மி, நெருநலும் அனையள் மன்னே, இன்று காளை பொய்புகலாக, முகிழ்நகை சிறந்து அருஞ்சுரம் இறந்தனள், என்ப எனக்கூட்டி வினை முடிவுசெய்க. இப்பெற்றியாள்எங்ஙனம் மனைப்பாரம் தாங்கி உய்ப்பள் என அஞ்சி ஆற்றேனாகின்றேன் என்பது குறிப் பெச்சம். வயலை - இதுவசலைக்கொடி யென்றும் பசலைக் கொடி என்றும் வழங்கும். இதன் இலையை இலைக்கறி யெனச் சமைத் துண்பது இன்றும் தமிழர் மரபு. ஈன்றஆ என்பது ஈற்றா என வந்தது. அடித்தற்காகாமை தோன்ற ஈற்றா என்றார். பாவை - மரத்தால் பெண்வடிவிற் செய்த பாவை. துயர்மிக்க வழி மகளிர் வயிற்றில் அறைந்து கொள்வதும். வயிற்றைப் பிசைந்து கொள்வதும் மரபு. செய்வினைக் குறுமகள் - செய்த நல்வினையின் பயனாகத் தோன்றிய குறுமகள், சோம்பியிராது யாதேனும் ஒரு நற்செயலைச் செய்தொழுகும் சிறுபெண் என்றுமாம். அமர்த்தல் - மருண்டு நோக்கல். மையல் - நோக்கம். கலங்கிய பார்வை வீங்கி விம்முதலாவது - பெருமூச்செறிந்து துயருறுதல். மையணல் கரிய மீசை -தாடியுமாம், புகல், சார்விடம். சுரம், நீரும் நிழலும் இல்லாத பாலை நிலத்துவழி முருந்து மயிலிறகின் அடி; “முல்லை முகையும் முருந்தும் நிரைத் தன்ன பல்லர்1” என்பது காண்க.

மகள் போக்கிய தாய், மனைக்கண் இருப்பாட்குத் தேடிச் சென்ற செவிலியும், பிறரும் போந்து, தலைமகள் தன் காதல னுடன் கூடி அவன் ஊர்க்குச் சென்று சேர்ந்தாள் என்று கூறக் கேட்டதும்; தலைமகற்கு மனைக்கிழத்தியான தன்மகள்பால் இருக்கவேண்டிய குணஞ்செயல்களை நினைந்து, சிறுதவறு நிகழினும் பொறாது புலந்து வருந்துபவள் என்றற்கு; இல் லெழு வயலை ஈற்றா தின்றெனப் பந்து நிலத்தெறிந்து பாவை நீக்கி அவ்வயிறலைத்த என் செய்வினைக் குறுமகள் என்றாள். பிறர் இல்லின்கண் எழுந்த வயலையன்று, நம்மனைக்கண் பிறர் வளர்க்க வளராது தானே வளர்ப்பத் தழைத்தது என்றற்கு இல்லெழுவயலை எனவும், அதனை மேய்ந்து ஒழித்தது ஈற்றாவாகலின், அதற்குப் பொறுத்தல் அல்லது வேறே செய்யுமாறு இல்லை என்றற்கு, ஈற்றா தின்றென எனவும், பந்தும் பாவையும் கொண்டு விளையாட்டயர்ந்தாளாயினும் அது பயந்த இன்பத்தினும், வயலையின் கேடு காணத் தோன்றிய துன்பம் அவட்குப் பெரிதாயிற்று என்றற்குப் பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி எனவும், அவள் எய்திய துன்பநிலையை விளக்குவாள், அவ்வயிறு அலைத்த என் குறுமகள் எனவும்; இத்தகைய குணமாண்புடைய மகளைப் பெறுவது நல்வினை செய்தார்க்கல்லது இன்று என்றற்குச் செய்வினைக் குறுமகள் எனவும் சிறப்பித்துக் கூறினாள். தான் அன்பு செலுத்திய வயலைக் குற்ற தீங்கை நெடும் பொழுது கழிந்தும், தன்நெஞ்சின் கண் நிலைபெறக் கொண்டு வருந் தினள் என்றற்கு, மான் அமர்ப்பன்ன மையல் நோக்க மொடு என்றும், அதுவே பொருளாகப் பசியட நின்றும், பசலை பாய்ந்தும், பரிபுலம்பினள் என்பாள். யானும் தாயும் மடுப்பத் தேனொடு தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி என்றும் உரைத்தாள். இது நெருநலும் நிகழ்ந்தது என்றதனால், தலைமகன் தன்னை வரைந்து கோடற் கேற்ற சூழ்நிலை வாயாமை நினைந்து வருந்தியிருந்தமையும் உடன் போக்குக் குரிய நினைவுகள் தலைவியுள்ளத்தில் நிகழ்ந்த தனால் அவள் உண்டி வெறுத்தும், உடன்பயின்ற ஆயத்தையும் பிறந்து வளர்ந்த பெருமனையையும், பிற தாயர் தன்னையர் முதலாயினாரையும் பிரிவது நினைந்தும் வருந்தினமை பெற்றாம்; அதனைத் தாய் உணராது பண்டு நிகழ்ந்ததையே நினைந்தனள் என்றற்க, நெருநலும் அனையள் மன்னே என்றாள். ‘மன்’, கழிவுப்பொருட்டு, தலைமகனது மையணற் காளைப் பருவமல்லது தலைமகள் கருத்தைப் பிணித்தற்கு அவன்பால் வேறு நலமில்லை யெனவும், தன் மகள் மனம் விரும்பத்தக்க செல்வச் சிறப்பு அவன் மனையில் இல்லை என்றும், உளதெனப் பொய் கூறி மயக்கினமையின் மயங்கிச் சென்றா ளென்றும் கூறுவாள், இன்றே மையணற் காளை பொய் புகலாக அருஞ்சுரம் இறந்தனள் என்ப என்றாள். தலைவியின் போக்குக் கண்டோர், தலைமகள் மிக்க மகிழ்ச்சி யுடன் சென்றமை கூறினமையின். அதனையே விதந்து முருந்தேர் வெண்பல் முகிழ்நகை சிறந்தே என்றாள். தான் பேணி வளர்த்த வயலையை ஈற்றா தின்றது கண்டு தன்மகள் வருந்தியதுபற்றி மகிழ்நகை கொண்டு சிறந்த யான், இன்று மையணற்காளை என் மகளைக் கொண்டுடன் கழிந்தமைக்கு வருந்தா நிற்ப, அவள் முகிழ் நகை கொண்டு செல்வாளா யினள் என்றாள் எனக் கொள்க. இதனால், தாய் நெஞ்சில் மிக்க வருத்தத்தை வாய்விட்டுரைத்து அயர்வு தீர்வாளாவது பயன்.

கயமனார்


தலைமக்களது கற்பு வாழ்வில் தலைமகன் பரத்தையரொடு கூடி மகிழும் புறத்தொழுக்கம் மேற்கொண்டான். அவர் களுடைய ஆடல் பாடல் அழகுகளில் பேரீடுபாடு கொண்டு அவர் கூட்டத்தைப் பெரிதும் விரும்பி நின்றான். அவன் அவர்கள் சேரியில் நெடி துறைவது தலைமை வாழ்வுக்கு மாசு தருவதனைத் தலைமகள் நன்கு உணர்ந்தாள்; உள்ளம் பெரிதும் வருந்தினாள். அவள் பெரிதும் புலந்திருப்பது உணர்ந்த தலைமகன் பாணரும் விறலியருமாகிய வாயில்களைத் தலைமகள்பால் தூது விட்டான். அவர்கள் அனைவரும் தலைமகன் பக்கல் நின்று பரத்தையர் சேரியில் அவர்கள் மனைக்குத் தூது சென்று தலைமகனை அவரொடு புணர்த் தொழுகுதலும் அவர்கள் செய்கையாதலால், அவர்பால் தலைமகட்கு உண்டாகிய வெறுப்பும் தலைமகன்பால் அவள் உள்ளத்தில் கொண்டிருந்த கொதிப்பும் ஒன்று படவே, தலைவியின் சினத்தீ மிக்கு எழுந்தது. அதனால், அவர்கள் அனைவரும் வாயில் பெறாது வருந்தித் தலைமகன்பால் மீண்ட னர். முடிவில் தலைமகன் பெரிதும் வருத்தமுற்றுந் தலைவியின் தோழியைக் கண்டு தன் பொருட்டு வாயில் வேண்டினான். தலைமக்கள் வாழ்வு என்றும் பொன்றாப் புகழ் கொண்டு நின்று நிலவுதல் வேண்டுமென்னும் நேர்மை நெஞ்சினளாகிய தோழி தலைமகற்கு வாயில் நேர்ந்தாளாயினும் தொடக்கத்தில் அவளும் தலைமகளை அணுகுதற்கு அஞ்சினாள். தலைமகனது புறத் தொழுக்கத்தால் தன் நலன் அழிந்த திறத்தை எண்ணித் தலைமகள் தன் தோழிக்கு உரைத்துப் பெரிதும் வருந்தினாள். அக்காலை, தோழி அறிவும் அறமும் செறியக் கூறித் தெளிவிக்கு மாற்றால் தலைவியை வாயில் வேண்டிய வழி மறாது நேர்தல் அவட்கு அறமெனக் குறிப்பாக உரைத்தாள். அதனால், தலைவியுள்ளத்தில் ஊடல் மிகுந்ததேயன்றிச் சிறிதும் குறையவில்லை. வாய்த்த விடத்து இடித்துக் கூறியும், இரந்து பின்னின்றும், தோழி தலை மகன் பொருட்டு வாயில் வேண்டுவாளாயினள்; அவள் முயற்சி யொன்றும் போதிய பயன் தரவில்லை. தன் நலம் குன்றியது நினைந்து வருந்தும் வருத்தமே தலைவிபால் முற்பட்டு நின்றது. முடிவில் தோழி பெருந்துயரெய்தி, “அன்னாய், தலைமகன் இன்று நம்பால் வாயில் வேண்டுவது நலம்புதியராய வேறு பரத்தையரைப் பற்றுதற் பொருட்டே எனவும், அதனால் நின் நலம் கெடுகிறதெனவும் கருதி வாயில் மறுக்கின்றாய்; தலை மகனோ நின்னையின்றி உயிர் வாழாப் பெருங்காதலனாய், நின்னொடு கூடிப் பெறும் இன்பமும் பொருளும் அறனும் என்ற மூன்றுமே வாழ்வாங்கு வாழ்வார் பெறும் பயன் என்ற கருத்தால் வாயில் வேண்டுதலைத் தவிரானாகின்றான். நும் இருவர்க்கும் இடையே யான் இருந்து இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர்ஆன் போல வருந்துகின்றேன். இதற்கொரு முடிவு கண்டு, நீவிர் இருவீரும் கலந்து இனிது வாழவேண்டுமாயின், அன்னிக்கும் திதியனுக்கும் நடந்த பெரும்போர், திதியனுடைய புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தியதனால் ஒழிந்தாற்போல, உங்கள் இடையில் இருக்கும் யான் இறந்து படுவேனாயின் இருவர் பாங்கிலுமுள்ள இகல் நீங்கி யொழியும் என்றாள். உடனே, தலைவியின் உள்ளம் குழைந்தது; அவள் பொருட்டு வாயில் நேர்ந்து தலைமகனை இன்முகத்தோடு வரவேற்று மகிழ்வித்தாள்.

தோழி மொழிந்த இக்கூற்றின்கண், தலைமக்களின் ஒன்றிய, வாழ்க்கை நலம் பெறுதற்கண் அத்தோழியது தொடர்பு உயிர் கொடுக்கும் அளவில் உயர்ந்திருப்பது கண்ட கயமனார் இந்த அழகிய பாட்டைப் பாடியிருக்கிறார்.

1பழனப் பாகல் முயிறுமூசு2 குடம்பை
கழனி நாரை உறைத்தலின் செந்நெல்
விரவு வெள் ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல்3 நசையின் எம்இல் வாரலனே
மாயோள் நலன் நம்பி 4விடலொல் லாளே
அன்னியும்5 பெரியன் அவனினும் விழுமியன்
செருமிகு6 திதியனொடு பொருகளத் தொழித்த
புன்னை விழுமம் போல
என்னோடு 7கழிகஇவ் விருவர திகலே

இது, தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

உரை
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை - பழனக் கரையினின்ற பலாமரத்தில் வாழும் முயிறுகள் கூடி யமைத்த கூட்டினை; கழனி நாரை உறைத்தலின் - கழனிகளில் மேயும் நாரைகள் தங்கிச் சிதைத்து உதிர்த்தலால்; செந்நெல் விரவு வெள்ளரி சியின் தாஅம்-செந்நெல்லும் வெண்ணெல்லுமாகிய இரண்டன் அரிசியும் கலந்து சொரிவது போலப் பரக்க உதிரும் ஊரினை யுடையனாகிய தலைமகன்; பலர்ப்பெறல் நசையின் எம் இல் வாரலன் -பலராகிய பரத்தையரைப் பெறல் வேண்டுமென்ற விருப்பால் நம்மில்லத்துக்கு வருகின்றா னில்லை; மாயோள் - மாமை நிறத்தையுடையளாகிய தலை மகள்; நலன் நம்பி விடல் ஒல்லாளே - நலம் கெடாமையை நயந்து தன் கழிசினத்தை விடுகின்றாளுமில்லை; அன்னியும் பெரியன் - அன்னியென்பானும் பொருள்படைகளாற் பெரியவன்; அவனினும் விழுமியன் - அவனினும் சிறந்தோ னாகிய; செருமிகு திதியனொடு பொருகளத்து ஒழித்த - செருமிக்க திதியன் என்பானொடு பொருத போர்க்களத்தே வீழ்த்திய; புன்னை விழுமம் போல - புன்னைமரங் காரணமாக உளதாகிய இருவரது பகைமையும் நீங்கினாற்போல; இவ்விருவரது இகல் என்னொடு கழிக - இவ்விருவரிடையும் உளதாகிய பிணக்கு என் உயிரோடே கழிவதாக எ-று.

ஊரன், பலர்ப்பெறல் நசைஇ, எம் இல்வாரலன்; மாயோள், நம்பி விடல் ஒல்லாள்; ஆகலின் புன்னை விழுமம் போல, இவ்விருவரது இகல் என்னொடு கழிக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பாகல் - பலாவகையுள் ஒன்று; பலாக்காய் போலப் புறந்தோலுடைய காய்களை நல்கும் கொடிவகை, பாகற்கொடி - பாகற்கொடியின் நீக்குதற்குப் பழனப் பாகல் என்றார். “பலவுக்காய் புறத்த பசும் பழப்பால்1” என்பது காண்க. முயிறு - பேரெறும்பு வகையுள் ஒன்று; பலா, மா முதலிய இனிய கனி நல்கும் மரங்களில் இம்முயிறுகள் வாழ்தல் இயல்பு. இவை ஏனை எறும்புகள் போல வளை செய்து வாழாது, புற்றமைத்து வாழும் எறும்பினம் போல. இம்மரங்களிற் கூடமைத்து வாழ்தல் மரபு; இவற்றால் சிறு விலங்குகளும் மக்களும் ஏறி மரத்தின் காய்கனிகட்குத் தீங்கு செய்யாத வகையில் பாதுகாப்புண்டாயினும், இவை தாமே அக்காய்கனிகட்குத் தீங்கு செய்வது கண்கூடு. இவற்றின் இனம் பெருகாவாறு தடுத்தற்கு நாரை, கொக்கு, மரங்கொத்தி முதலியன இவற்றின் கூடுகளை அழித்து மரத்துக்குத் துணைபுரிகின்றன. குடம்பை, கூடு, கூட்டினை அலகாற் குத்தி உதிர்த்தல் பற்றி, உறைத்தலின் என்றார். செந்நிறமும், வெண்ணிறமும் கொண்டவை யாதலின் முயிற்றின் சினைகளைச் செந்நெல்விரவு, வெள்ளரிசியின் தா அம் என்றார். அறிவு, ஆண்மை, பெருமை எனப்படும் மூவகை யாற்றலுள், பெருமையுடைமை பற்றி அன்னியைப் பெரியன் என்றார். பெருமை - பொருள் படைகளால் உளதாவது. அன்னி என்னும் பெயருடைய தலைவர்கள் பலர் பண்டைத் தமிழகத்தில் இருந்துள்ளனர். அன்னியூர், அன்னிக்குடி, அன்னிசேரி என்ற ஊர்களே இதற்குப் போதிய சான்றாகும். திதியன் என்ற பெயருடைய தலைவர்களும் பலர் இருந் துள்ளனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனொடு போர் உடற்றிய எழுவருள் ஒரு திதியனும், பொதியின், மலைப்பகுதியில் ஒரு திதியனும், காவிரி நாட்டுத் திருவழுந்தூர்ப் பகுதியில் ஒரு திதியனும் இருந்தமை தொகை நூல்களால் அறிகின்றோம்.மதுரை வட்டத்திலுள்ள சிந்துப்பட்டிப் பகுதிக்குத் ‘திதியன் சீமை’ என்று பெயரென அங்குள்ள கல்வெட்டுக்கள்1 குறிக்கின்றன. எனினும் இப் பாட்டிற் காணப்படும் அன்னியையும், திதியனையும் சோழ நாட்டவராகவும்; புன்னையைப் பற்றி வழக்காடுதலால் அந் நாட்டுக் கடற்கரைப் பகுதியினராகவும் கோடல் பொருத்த மாகத் தோன்றுகிறது. அன்னியின் ஊர் இடைக்காலத்தே வளவன் அன்னியூர் என்ற பெயர் தாங்குவதாயிற்று. தமிழ் நாட்டிற் பழையவாகக் காணப்படும் குறுக்கைகளுள் திரு முனைப்பாடி நாட்டுக் குறுக்கை2 குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநாரையூர் நாட்டுக் குறுக்கை3 வடகரை இராசராச வளநாட்டுத் திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை4 விருதராச பயங்கர வளநாட்டுக் குறுக்கைநாட்டுக் குறுக்கை5 என்பன கல்வெட்டுக் குறிப்புடையன. இவற்றுள் இறுதி யிற் கண்டது புன்னைவள முடையதாகலின் அதற்குரிய திதியனையே இங்கே கொள்ளலாம். குறுக்கையிலிருந்த புன்னைமரத்துக்கு அன்னியூர் வேளாகிய அன்னியும், குறுக்கை நாட்டுக் குரியனாகிய திதியனும் உரிமை கூறிப் போருடற்றியகாலை, தொடக்கத்தில் அன்னி தோல்வியுற்று ஓடினான்6. பின்னர்த் திதியனது அற்றம் நோக்கி அன்னி புன்னையை வெட்டி வீழ்த்தினான்1. திதியன் கடுஞ்சினங் கொண்டு அன்னியொடு போர் தொடுத்தகாலை, சான்றோர் நடுநின்று, அன்னியை மறுபடியும் வெல்வதனால் புன்னை தான் எய்திய விழுமம் நீங்கி நிலைபெறப் போவதில்லை என அறிவுறுத்தி இருவரையும் பகைமை நீங்கி இனிது வாழச் செய்தனர் என்பது வரலாறு. விழுமம் - துன்பம், புன்னை விழுமம் - புன்னையால் விளைந்த பகைமைத் துன்பம்.

தலைமகனது புறத்தொழுக்கம் அறிந்ததும் தலைமகட்குப் பொறாமை மிகுந்தது; அவன்பரத்தையர் சேரிக்கண் அவர் எடுக்கும் விழவுக்குத் தலைக்கை தந்து தலையளி செய்யு மாற்றாற் பிரியினும் பெரும் புலவிகொண்டு வெதும்பும் இயல்பினளாகிய அவட்குத் தலைமகன் பரத்தையர் சேரிக் கண் தங்கி நலம் புதியராய மகளிரைத் தலைக்கூடியொழு கியது பெருந்துன்பத்தைச் செய்தது; தனக்கே உரியதான அவனுடைய மார்பைப் பிற மகளிர் கண்ணிற் காணினும் வெகுள்பவளாதலின், அதனைப் பரத்தையர்க்கு நல்குகின்றான் தன் கணவன் என்று பிறர் சொல்வதை நினைக்குந் தோறும் அவள் மனதில் கடுஞ்சினம் மிகுந்தெழுந்தது. “நின்னைப் பிரியேன், பிரியின் உயிர்தரியேன்” என்று சூளுறவு செய்து தன்னைக் கூடியவன், சூள்பொய்த்துப் பரத்தமை பூண்டது, பொய் கூறுவோர் செய்யும் குற்றமாதல் காணத் தலைமகள் செய்வ தறியாது திகைத்து வருந்தினாள். “நின்னோரன்னோர் மாட்டும் இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய்யாண் டுளதோ இவ்வுலகத் தானே2”என வாய் வெருவி வாடினாள். “தாய்போற் கழறித் தழீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப”3 என்பது பற்றித் தலை மகனைத் தக்காங்குக் கடிந்து கூறி மனையறத்தில் நிறுத்தக் கருதினாள். பொருள் வினை முதலிய புகழும், அறமும், பொருளும், பயக்கும் பிரிவாயின் தலைமகள் தலைவற்குத் தூது போக்குதல் தகுவதாகும்; பரத்தமை யொழுக்கத்திற் படர்ந்தொழுகும் தலைமகற்குத் தூதுவிடுதல் உலகிய லன்று. இதனால் கையறவுமிக்குக் கடிமனைக்கண் அடங்கியிருக்கும் தலைமகட்குத் தலைமகன் வாயில் வேண்டி விடுத்த பாணரும் விறலியரும் போந்து அவனுடைய அன்பும் ஆதரவும் எடுத் தோதிப் புகழ்ந்தனர். தூதரை ஒறுத்தல் அறமில் செயலாதலை நன்கறிந்த தலைமை மகளாதலின், அவர்கள் அஞ்சி நீங்கத் தக்க சொல்லும், செயலும் கொண்டு மறுத்தாள். மீண்டேகிய பாணரும் பிறரும் போதரக் கண்ட பரத்தையர், தலைமகன் தன் மனைவயிற் சேறலை விழையா ராகலின், அவர்கள், அப்பாணர் முதலாயினார் வாயிலாகத் தலைமகனைத் தம் பால் சிறைசெய்து கொண்டனர். இவ்வண்ணம், தலைமகள் பால் வாயில் வேண்டி வந்தோர் பலரும் மறுக்கப்பட்டுச் சென்றதோ டமையாது வேறு புதிய பரத்தையர் பலர்க்குத் தூதாய்ப் பயன்பட்டது தலைமகட்குத் தெரிந்ததும், வாயில் வேண்டி வருவோர் எவரையும் தன் மனை நோக்கி வராதவாறு கடியலானாள். அதனால், தலைமகன், ஆன்ற களவின்கண் உறுதுணை புரிந்து உயிரொன்றிய காதல் வளரச் செய்த தோழியல்லது வேறு வாயிலின்மை தேர்ந்து, அவளைத் தெருட்டித் தன்பொருட்டு வாயில் வேண்டு வித்தானாக, அவள் தலைமகள்பால் அது கூறினாள்; தலைமகள் அவன் வாயில் வேண்டுவதெல்லாம் பரத்தையர் பலரைப் பெறுவது குறித்ததென மொழிந்து மறுத்தாளாகலின், அதனையே கொண்டெடுத்துத் தோழி, ஊரன் பலர்ப்பெறல் நசையின் எம் இல்வாரலன் என்றாள். பரத்தையர் சேரிக்கண் பலராய மகளிரைக் கூடி யொழுகுவது கேட்குந் தோறும் வருந்தும் தன் உள்ளம், தான் புலவியால் வாயில் மறுத்தவிடத்தும், வேறு பல மகளிருடைய ஆடல் பாடல் அழகுகளில் தோய்ந்து ஒழுகியதனால் பெருந்துய ரெய்தி, உறக்கமின்மையும் உடம்பு மெலிவும் கொண்டு, மேனிநலம் பசந்து சோர்வெய்தினமை காட்டி, இன்று அவன் வாயில் வேண்டி நிற்றல் வெந்த புண்ணில் வேலெறிவது போலும் மிகுதுயர் நல்குதல் சொல்லி மறுத்தாளாகலின், தோழி வருத்தம் மிக்கு மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாள் என்று கூறினாள். தலைவி நலக்கேடு கூறினும், அத்துணைக் கேடின் றென்பாள், தோழி, மாயோள் என்றும், தலைமகன் புணரப் பொலிவுற்று விளங்கு தலும் பிரிந்தவழி மழுங்குதலும் தலைமகளது நலத்தின் இயல் பாதலின், அதனைச் சுட்டி வாயில் மறுத்தல் பொருந்தாது என்றற்கு நலத்தை நம்பி என்றும், அறம்புரி வாழ்க்கைக்குக் கழிசினம் தீதாகலின், அது விடற்பாற் றென்றற்கு விடல் ஒல்லாள் என்றும் தலைவி கேட்கத் தோழி மொழிந்தாள். இவ்வாற்றால் தலைமகள் வாயில் நேராமை கண்ட தோழி, “அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டி1” இன்ப வாழ்வின்கண் இனிதுறையச் செய்யாது இருவீரும் இகலி வேறுபட்டு வருந்த நும்மைப் புணர்த்த யானே தவறுடையே னாகலின், அத்தவற்றை என் உயிர் தந்து கழிப்பேனாயின், நீவிர் இகல்நீங்கி இன்புறுவீர் என்பாள், முன்னிலைப் புறமொழியாக, புன்னை விழுமம் போல என்னோடு கழிக இவ்விருவரது இகல் என்றாள். நாரை முயிற்றின் குடம்பையை உறைத்தலின், செந்நெல் விரவு வெள்ளரிசியின் தாஅம் என்றது, தலைமகள் தலைவன் வேண்டிய வாயிலை மறுத்தலால், அவள் மனைக்கண் சூழ்ந்து நிற்கும் சுற்றமாயினாரும் வேறுபட்டு நீங்குவர் எனத் தோழி உள்ளுறுத்தவாறு. இதனைக் கேட்கும் தலைவி சினந்தணிந்து வாயில் நேர்தல் பயனாம்.

உம்பற்காட்டு இளங்கண்ணனார்


உம்பற்காடு என்பது மலையாள மாவட்டத்து வயனாட்டுப் பகுதியில் ஒன்று; இதனைப் பிற்காலத்தார் நும்பற்காடு என வழங்கினர். கி.பி. 1887-ல் அரசியலார் இதனை வயனாட்டி னின்றும் பிரித்து நீலகிரி மாவட்டத்தில் சேர்த்தனர். இப்போழ்து அப்பெயரே மறைந்து போயிற்று; இன்றைய வயனாடு, சங்க காலத்துச் சேரமான் வஞ்சன் என்பானுக் குரிய பாயல்நாடு; அங்குள்ள மலைத்தொடர் பாயல்மலை என்று வழங்கிற்று. உம்பற்காட்டைச் சேர்ந்தவ ராதலின், இளங்கண்ணனார் உம்பற் காட்டு இளங்கண்ணனார் எனப்படுவாராயினர். இவர் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் காணப்படுகிறது.

இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன், ஒரு நாள், ஆட்சி நலம் குன்றி மக்கள் பல்லாற்றானும் அலைப்புண்டு வருந்த, நாட்டின் செம்மைநிலை குறித்துத் தன் மனையின் நீங்கிச் செல்லும் கடமையுடையனானான். அவனது பிரிவு தலைமகட்கு மிக்க வருத்தத்தைச் செய்தது. எனினும் அப்பிரிவு நாட்டு மக்களின் நலம் கருதியதாதல் பற்றி ஒருவாறு தேறியிருந்தாள். நாட்டில் நல்லாட்சி நிலைபெறுவித்து நாட்டவரின் வாழ்வு வளம்பெறச் செய்து பெரும்புகழ் ஈட்டினான் தலைவன். நாட்டு மக்கள் அவனைப் பாராட்டி விழா எடுத்துக் கூத்தும் குரவையும் ஆடி இன்புற்றனர். நலமெய்திய நாட்டு மக்களின் பெருமகிழ்ச் சியைத் தூதுவர் வாயிலாக உணர்ந்த தலைமகள் கழிபேருவகை கொண்டாளாயினும், ஆங்கு மகளிர் ஆடும் கூத்தும், குரவையும், துணங்கையும், பிறவும் கண்டு தலைமகன் இன்புற்றான் என்றது கேட்டலும், அவள் உள்ளத்தே புலவி கொள்வாளாயினாள். அவளது நெற்றி பசலை பாய்ந்து ஒளிமழுங்கிற்று. அதனைக் கண்ட தோழி தலைமகனது பிரிவால் தலைவி பசப்பெய்தினாள் எனக் கருதித் தகுவன கூறி ஆற்றுவித்தாள். குறித்த பருவத்தே தலைமகன் தன்மனைக்குத் தேரூர்ந்து வருவானாயினன், அதனை யறிந்த தோழி, வினைமுற்றி வரும் அவன் உளம் நிறைந்து சிறக்கும் மகிழ்ச்சியை நோக்கி, தலைவியின் உள்ளத்தை நோக்க, அதன்கண் ஊடல் மிக்கிருப்பதைக் கண்டாள். ஊடுதல் காமத் துக்கு இன்பமாதலின், பிறர் அறியக் கூறுதல் அறமன்மையான், உள்ளுறையால் குறிப்பித்து, வெளிப்படையாகப் பிற வாயில் களை நோக்கி, “பெருவிறல் படைத்த நம் தலைவன் தேர் இதோ வருகின்றது; இனித் தலைமகள் நுதல் பசலையுறுவதி னின்றும் உய்ந்தது, காண்” என்றாள்.

தோழி நிகழ்த்தும் இக்கூற்றின்கண், தலைமகன், “பிழைத்தது பிழையா தாகல் வேண்டிப்” பிரிந்து வினைமுற்றிப் போதருவது குறித்து எய்தும் பெருமகிழ்ச்சிக்கிடையே, தன் பெண்மைப் பண்பால் உள்ளத்தே ஊடிய குறிப்புடையளாய்க் காதலின்பம் சிறப்பிக்கும் நலம் கண்ட இளங்கண்ணனார் இப்பாட்டின்கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

உள்ளிறைக் குரீஇக் காரணற் சேவல்
பிறபுலத் துணையோ டுறைபுலத்1 தல்கி
வந்ததன் செவ்வி2 நோக்கிப் பேடை
நெறிகொள் ஈங்கைப் பூவின் அன்ன
சிறுபல் பிள்ளையொடு குடம்பைக் கடிதலின்
துவலையின் நனைந்த புறத்த தயலது
கூரல் இருக்கை அருளி நெடிதுநினைந்து
ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக்
கையற 1வரூஉங் கார்செய் மாலை
2ஈரிய வாகலின் இன்னொலி இழந்த
தாரணி புரவி 3தண்பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே
உய்ந்தன் றாகும்இவள் ஆய்நுதற் கவினே.

இது, வினைமுற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது4.

உரை
உள்ளிறைக் குரீஇக் காரணல் சேவல் - மனைக்கூரை யினுள்ளே கூடமைத்து வாழும் கரிய கழுத்தையுடைய சேவற் குருவி; பிறபுலத் துணையோடு உறைபுலத்து அல்கி - வேற்றுப் புலம் சென்று ஏனைப் புள்ளினம் தத்தம் துணையொடு கூடி யுறையும் புலத்தின்கண் தங்கி; வந்ததன் செவ்வி நோக்கி - மீண்டு போந்த அதன் வேறுபாடு கண்டு; பேடை - பெடைக் குருவியானது; நெறிகொள் ஈங்கைப் பூவின் அன்ன - புற விதழையுடைய ஈங்கைப் பூவைப் போன்ற; சிறுபல் பிள்ளை யொடு - சிறிய பலவாகிய குஞ்சுகளுடன்; குடம்பை கடிதலின் - தன் கூட்டினுட் புகாதபடி தடுத்து மறுத்தலால்; துவலையின் நனைந்த புறத்தது - மழைத் திவலையால் நனைந்த புறச் சிறகுகளைத் தாங்கி; அயலது - பக்கத்தே; கூரல் இருக்கை -குளிரால் நடுங்கி யொடுங்கி யிருக்கம் சேவலின் இருப்பை; அருளி - நோக்கி அன்பு மிகுந்து; நெடிது நினைந்து - தன் செயலையே நீள நினைந்து; ஈரநெஞ்சின் - இரங்கிய வுள்ளத் துடன்; தன்வயின் விளிப்ப - தன்பால் வருமாறு அழைப்ப; கையற வரூஉம் கார்செய் மாலை - செயலறுதலால் வந்து சேரும் கார்காலத்து மாலைப்போதில்; ஈரிய வாகலின் இன்னொலி இழந்த - மழையீரத்தால் நனைந்தமையின் இனிய ஒலியில்லாத; தாரணி புரவி - தாரணிந்த குதிரைகள்; தண்பயிர் துமிப்ப - தண்ணிய இளம்பயிர்களை மிதித்துவர; பெருவிறல் தேர் வந்தன்று - பெரிய விறலோனாகிய தலைமகனது தேர் வந்த தாகலின்; இவள் ஆய்நுதல் கவின் உய்ந்தன் றாகும் - இவளது அழகிய நுதல் பசத்தலினின்றும் உய்ந்தது, காண் எ-று.

கார்செய்மாலை, புரவி தண்பயிர் துமிப்ப, பெருவிறல் தேர் வந்தன்று; இவள் நுதல் கவின் உய்ந்தன்றாகும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. சேவல் அல்கி வந்ததன் செவ்வி நோக்கி, பேடை பிள்ளையொடு குடம்பைக் கடிதலின் நனைந்த புறத்தது அயலதாகிக் கொண்ட இருக்கை நோக்கி அருளி நினைந்து விளிப்பக் கையற வரூஉம் என இயையும். உள்ளிறை - கடைக்கண் என்றாற் போலப் பின்முன்னாகத் தொக்கது. குரீஇ - குருவி; இதனை ஊர்க்குருவி என்றலும் வழக்கு. ஆண்குருவியின் கழுத்தின் முன்புறம் கருத்திருத்தல் பற்றிக் காரணற் சேவல் என்றார். துணையோடு உறைபுலம் -துணையொடு கூடிப் புள்ளினம் உறையு மிடம். ஊர்க்குருவி முதலிய புள்ளினம் ஒரு கால் ஆணும் பெண்ணுமாய்க் கூடியவை வாழ்நாள் முழுதும் பிரியாது உறையும் என சார்லஸ் டிக்ஸன்1 முதலியோர் கூறுகின்றனர். செவ்வி - மேனி நலம்; வேற்றுப்புலம் சென்று தங்கி வந்ததனால் உளதாய வேறுபாடு ஈண்டுச் செவ்வி எனப்பட்டது. நெறி - புறவிதழ். பிள்ளை - குஞ்சுகள். கடம்பை - கூடு. கூரல் இருக்கை - குளிரால் ஒடுங்கிய இருக்கை, “மாரிச் சுதையின் ஈர்ம்புறத் தன்ன, கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல்2”என்பர் பிறரும். விளித்தல் - அழைத்தல். “மொழியெனப்படுவது உள்ளக் குறிப்பைப் பிறர்க்குத் தெரிவித்துப் பிறர் குறிப்பை ஒருவர் தெரிந்து கொள்வ தென்பதாயின், புள்ளினங்க ளிடையும் மொழி யுண்டு என்றற்குத் தடையில்லை” எனவும், “மக்களைப் போலச் சொற்களால் தெரிவித்தல் இல்லை யாயினும், இன்பம், துன்பம், அச்சம், அவலம், அழைப்பு முதலிய குறிப்புக்களைப்; புள்ளினம் தம் ஒலியாலும், செயல்வகைகளாலும், தம்முள் தெரிவித்துக்கொள்கின்றன” என்றும் புள்ளுயிர் அறிஞர்3 புகன்று மொழிகின்றனர். குதிரையின் கழுத்தில் மாலைபோல் கட்டப்படும் தோலுக்குத் தார் என்பது பெயர்: இதன் கண் தவளைவாய் மணிகள் கட்டுவதும் இயல்பு. ஆய்நுதல் - அழகிய நெற்றி; சிறுநுதல் என்றுமாம்.

முல்லை முதலாக வகுக்கப்பட்ட நானிலத்து, ஆயர் முதலாகக் குறிக்கப்பெறும் ஐவகைத் திணைநிலை மக்களுள், மேலோர் கீழோர் என இருத்திறத்தின ருண்டு; மேலோர் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என நால்வகைப் படுவர்; கீழோராவார், அரசர் முதலாயினார்க்குக் கீழ் நின்று வினைசெய்யும் வினைவலரும், ஏவலரும், அடியருமாவர். தனித்து வாழும் திறமின்றி மேலோர் ஆதரவு பெற்று வாழ்தல் பற்றிக் கீழோர் எனப்படுவர். கீழோர் மேலோ ராதலும், மேலோர் கீழோராதலும் செயல்வகையால் உண்டு. அரசரால் சிறப்பு மேவியவர் முல்லை முதலாகச் சொல்லப் பட்ட நிலங்களில் அரசுமுறை கோடியவழி அவற்றின் கோட்டம் போக்கி நன்னிலை நிறுத்தற்பொருட்டுப் பிரிவது முறையாகும். இதனை, “மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையால், பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும், இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே1” என்பதனால் அறியலாம். வேந்தன் பால் சிறப்புப் பெற்றோர் சென்று செய்தற் குரிய இதனை வேந்த னாகிய தலைமகன் செய்தல் விலக்கப்படாமையின், ஈண்டு மனையின்கண் இருந்து அறம்புரிந் தொழுகும் தலைமகன் “முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டி”த் தன் மனையின் நீங்கிப் பிரிந்து சென்றான் என அறிக. அரசுமுறை கோடியதனால் அல்லலுற்று வருந்திய மக்கள் அது செம்மை எய்தியவழி எய்தும் இன்பத்தால் நாட்டில் விழா அயர்ந்தும், கூத்து ஆடியும் மகிழ்வர். கோல் செம்மைசெய்து துளங்குகுடி திருத்திய கோமகன், அவர்கட்குத் தலைக்கை தந்து சிறப் பிப்பது மரபு; அம்மரபினால் தலைமகன் தான் பிரிந்த நாட்டின்கண் ஒழுகிய திறத்தைத் தூதுவர் போந்து உரைப்பக் கேட்ட தலைமகள், ஆடல்மகளிர்க்குத் தலைக்கை தந்தது பொறாது உள்ளத்துக் கொண்ட ஊடலைத் தோழி நன்கு உணர்ந்திருந்தமையின், அதனை உள்ளுறையால் கூறினாள். உள்ளத்தே நின்று வருத்திய ஊடலுணர்வால், மேனி வேறு பட்டு, நுதல் பசந்து தோன்றும் தலைமகட்குத் தலைவனது வரவு பிரிவுத் துயரைப் போக்கி மேனி வேறுபாட்டை நீக்குதல் ஒருதலையாதலின், அதனால் உளம் மகிழ்ந்த தோழி, வந் தன்று பெருவிறல் தேர் என்றும், தனித்துறையும் மகளிர்க்குக் கார்காலத்து மாலைப்போது பெருந்துயரைச் செய்வது பற்றி, கையற வரூஉம் கார்செய் மாலை என்றும் கூறினாள். தலை மகன் தேரிற் கட்டிய குதிரையின் தார்மணி, மழையால் நனைந்து ஒலியிழந்தமை கூறியது, தலைமகன் வந்து செய்யும் தலையளியால் தலைவி உள்ளம் குளிர்ந்து மேனி மெலிவு நீங்குதலையும், தண்பயிர் துமிப்ப என்றது. நுதலிடைப் பையப் பரந்து வரும் பசலை கெடுதலையும் சுட்டி நின்ற மையின், உய்ந்தன் றாகும் இவள் ஆய்நுதல் கவின் என்றாள். சேவல், பிற புள்ளினம் துணையோடு உறையும் புலத்தின்கண் அல்கி வந்ததன் செவ்வி நோக்கிய பேடை, குடம்பைக் கடிதலின், கூரல்இருக்கை கண்டு, அருளி நெடிது நினைந்து ஈர நெஞ்சின் தன்வயின் விளிக்கும் என்றது, தலை மகன் வேற்றுப் புலத்து அல்கி மகளிர்க்குத் தலைக்கை தந்து சிறப்பித்துப் போந்தமை அறிந்து புலக்கும் தலைமகள், அவன் உணர்த்த உணராது ஊடியவழி அவனது ஆற்றாமை கண்டு அஃது அவற்கு அறமாதலை எண்ணி வரவேற்றுப் பேணிய கற்புத் திறத்தை வியந்து கூறியவாறு.

அதியன் விண்ணத்தனார்


பண்டைநாளைச் சேரர் குடியில் உதியர், அதியர் என இரு கிளையினர் இருந்தனர். அவருள் உதியர் சேரநாட்டிலும், அதியர் மேற்கு மலைத் தொடரின் கீழ்ப்பகுதியிலும் பரவி யிருந்தனர். பண்டைச் சேரர் குடியைச் சேர்ந்திருந்ததற்கு அடையாளமாக அதியமான்கள் பனந்தார் அணிந்துகொள்வது மரபு; “இவனுக்குப் பனந்தார் கூறியது சேரமாற்கு உறவாதலின்” எனப் புறநானூற்றுப் பழையவுரைகாரர் கூறுவது காண்க; இதனைக் காணாமையால் அரசியற் கல்வெட்டுத் துறையினர் அதியர் சேரர் குடியைச் சேர்ந்தவர் ரல்லர்1 எனக் கூறினர். அதியமான்களின் ஆட்சி, சேலம் மாவட்டம் முழுதும் பரந்து இன்று தருமபுரி என வழங்கும் பண்டைய தகடூரைத் தலை நகராகக் கொண்டு விளங்கிற்று. இடைக்காலக் கல்வெட்டுக்களை நோக்கின் அதியமான்கள் கிழக்கில் வடஆர்க்காடு மாவட்டத் திலும் தென்னார்க்காடு மாவட்டத்திலும் பரந்திருந்தமை உணரக் கிடக்கின்றது. தகடூர் நாட்டுக்கு வடக்கிலுள்ள கங்க நாட்டிலும் கன்னட நாட்டிலும் அதியமான்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புக்கள் பெருக வுள்ளன. மிகப் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் கரும்பு பயிர்செய்தலை முதற்கண் ஏற்படுத்தியவர் இந்த அதியமான்களே. இவர்களுள் அதியமான் நெடுமான் அஞ்சியும் அவன் மகன் பொகுட்டெழினியும் மிக்க சிறப்பும் வள்ளன்மையும் கொண்டு புலவர் பாடும் புகழ்பெற்று விளங் கினர். ஒளவையார்க்குப் பெறற்கரிய நெல்லிக்கனி தந்து பேரிசை கொண்டவன் இந்த அதியமான் நெடுமான் அஞ்சி. மேற்கு மலைத்தொடரில் உயர்ந்து விளங்கும் மலைமுடிகளுள் குதிரை மலை யென்பது இந்த அதியமானுக் குரியது. இன்றும் அது குதிரைமூக்கு மலை என்ற தமிழ்ப்பெயரையே தாங்கிக் கொண்டு நிற்கிறது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த அதியர்குடிக்கு உரிய ராதலின், இச்சான்றோர் அதியன் விண்ணத்தனார் என்று பெயர் குறிக்கப் பெறுகின்றார். இவர் பாடிய பாட்டு அகநானூற்றிலும் உண்டு.

காதலாற் பிணிப்புண்டு களவின்கண் ஒழுகும் தலைமக்களது இன்பநெறியில் தலைமகன் காதல் மாண்புறுவது கருதி வரை வினை நீட்டித்து வந்தான். தலைமகன் பொருட்டுத் தன் உள்ளத்து நிலவிய காதல், முறுகிப் பெருகி, அவனையின்றி ஒருநொடியும் தனித்திருத்தல் அமையாத அளவில் நிறைந்து நின்றமையின், உண்டி மறுத்தும், உடம்புநனி சுருங்கியும், கண்படையின்றியும், கையற்றுத் தலைமகள் வருந்துவாளாயினாள். இவ்வாறு உடம் பும், உயிரும், வாடிய வழியும் அவற்றை நோக்கி வருந்து வதையன்றி, அவள்தானே தலைமகன்பால் சென்று சேர்வ தென்பது தமிழ்ப்பெண்மைக்கு இலக்கணமும் அன்று; இயல்பு மன்று. ஆயினும், உடற்குள் அகப்பட்டு அதன்வழி இயங்கும் இளமைநெஞ்சம், மேனின்று ‘சென்றவிடத்தால் செல்லவிடாது நன்றின்பால் உய்க்கும்” கற்பென்னும் திண்மையை எதிர்த்து வேற்று வழிச் சேறற்குத் துடிப்பதும் உண்டு. அத்துடிப்புவழி இயங்கும் நெஞ்சம் அறத்துக்குப் புறமான நினைவுகளை மேற் கொள்ளும்; அதனால் காதலனான தலைமகன் உறைவிடத்துக்குத் தானே சென்று கூடுதற்குரியவற்றைச் சூழ்வதும் செய்யும்; அச்சூழ்ச்சியின் இயல்பு கண்டே ஆசிரியர் தொல்காப்பிய னார்” ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங்காலை, உரிய தாகலும் உண்டென மொழிப1” என்றார். நெஞ்சின் மிக்கவழி அதன்கண் எழும் நினைவு சொல்லாய் வெளிப்படுமாயினும், அதனைப் பிறர்பால் கூறாதவாறு பெண்மைக்குரிய நாணம் எழுந்து தடுக்கும்; ஆயினும், நெஞ்சொத்த துணைவர்பால் கூறற்கும் அத்துணைவரை உசாவுதற்கும் இடம் தருமாகலின், நெஞ்சமொடு உசாவுபவள், தன் உயிர்த்தோழிபாலும் உரையாடுவள் என்று கண்ட அறிஞர், தலைமகள் தலைமகன்பால் தானே தனித்துச் சேறல்பற்றித் தன் தோழியொடு உசாவுதல் குற்றமாகா தென அமைதி காண்பாராயினர். அதனால், தலைமகனது காதற்பிரிவை ஆற்றாத தலைவி, ஒரு நாளிரவு தன் தோழியை நோக்கி, “இதோ பார், நிலவும் மறைந்தொழிந்தது; இருளும் எங்கும் பரந்து பட்டது; நமது இயக்கத்தையே நோக்கி நிற்கும் அன்னையும் உறங்கிவிட்டாள்; நம்பால் நிறைந்து நின்று நம்மை வருத்தும் காதலுணர்வு நம்முடைய காதலரையும் நம்போல வருத்து மென்பதில் ஐயம் இல்லை; ஆகலின், நாம் இப்போது அவர்பாற் சென்று அவரது தனிநிலை கண்டு முயங்கி வரு வோமே” என்று உசாவு வாளாயினாள்.

தலைவியது இக்கூற்றின்கண், காதலுணர்ச்சியாற் கைம்மிக்கு வெதும்பும் இளமையுள்ளம், கற்புச்சிறையிற் கிடந்து அலமரும் திறம் நன்கு விளங்குதல் கண்ட விண்ணத்தனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

நிலவும் மறைந்தன் றிருளும் பட்டன்று
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை யன்ன நப்புறம்1 காக்கும்
சிறந்த செல்வத் தன்னையும் 2துஞ்சினள்
3கெடுத்துத்தொடு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு
நன்மார் படைய முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த
4பெருந்தலைப் பொருகளிறு போல
5ஒருதனி வந்தோன் பனியலை நிலையே

இது, வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைமகள் சிறைப்புறமாகச் சொல்லியது; வரைவு நீட்டிப்பத் தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாக வரைவு கடாயதூஉமாம்.

உரை
நிலவும் மறைந்தன்று - நிலவைப் பொழியும் திங்களும் மறைந்தொழிந்தது; இருளும் பட்டன்று - இருளும் எங்கும் சூழ்ந்து கொண்டது; ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் - ஓவியத் தெழுதியது போன்ற கட்டும் வனப்பும் பொருந்திய இடம், அகன்ற மனையின் கண்; பாவை யன்ன நப்புறம் காக்கும் - பாவை போன்று இயங்கும் நம்மை இற்செறித்துக் காவல் புரியும்; சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் - மிக்க செல்வவாழ்வையுடைய அன்னையும் உறங்குவா ளாயினள்; தொடுநன்கலம் கெடுத்து எடுத்துக்கொண் டாங்கு - அணிந் திருந்ததொரு நன்கல மாகிய அணியை முதற்கண் கெடுத்துப் பின் அரிதில் தேடி எடுத்து அணிந்து மகிழ்ந்தாற் போல; நன்மார்பு அடைய முயங்கி - நல்ல மார்பகம் பொருந்த முயங்கி; கண்டனம் வருகம் மென்மெலச் சென்மோ - கண் ணாரக் கண்டு வருதற்கு நாமே பையச் செல்லலாமோ; தோழி - தோழி, நீ கூறுக; கீழும் மேலும் காப்போர் நீத்த பெருந்தலைப் பொருகளிறு போல - நிலத்திடைப் பக்கத்து வரும் பரிக் கோற்காரரும் மேலிருந்து நடத்தும் பாகரும் இல்லாது பகைப்புலத்து அலையும் பெரிய தலையையுடைய போர் யானை போல; ஒருதனி வந்தோன் பனியலை நிலை - தனிய னாய்ப் போந்து நம்மைத் தலைக்கூடிச் சென்ற காதலர் இப்போது தனிமையால் பனி வருத்த வருந்தும் நிலையை எ-று.

தோழி, இப்பொழுது நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று; அன்னையும் துஞ்சினள்; கலம் கொண்டாங்கு வந்தோன் நன்மார்பு அடைய முயங்கி அவன் பனியலைநிலை கண்டனம் வருகம் சென்மோ, கூறுவாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஓவம் - ஈண்டு வனப்பும் வேலைப்பாடும் அமைந்த கட்டிடங்களைக் காட்டும் படம் (Architecture) ஓவியம், உருவப்படங்கள்; பாவை - தோல், மரம், மண் முதலியவற்றாற் செய்யப்படும் அழகிய பெண்வடிவம். நப் புணர்வு - நத்துறந்தார் என்றாற்போல, நம்மைப் புறங் காக்கும் என்பது, நப்புறங்காக்கும் என வந்தது; புறங்காத்தல் - புறத்தே சென்று இயங்காதவாறு இல்லிடத்தே சிறைசெய்தல், தொடுகலம் - நன்கலம் என இயையும். தொடுதல் - அணிதல், கொண்டாங்கு என்றவிடத்துக் கோடல் பண்டுபோல் அணிந்து கோடல். கீழ்நின்று காப்போர், பரிக்கோற்காரர் எனவும் காழோர் எனவும் குறிக்கப்படுவர்; இவர்கள் யானை யின் பக்கத்தும் முன்னும் நடந்து செல்வர்; மேலிருந்து காப்போர் பாகரெனப்படுவர்; ‘சினம் சிறந்து கோலோர்க் கொன்று மேலோர் வீசி1” என்பது காண்க. காழோரையும் பாகரையும் போக்கிச் சினம் மிகுந்து திரியும் போர்க்களிறு என்றற்குக் கீழும் மேலும் காப்போர் நீத்து பெருந்தலைப் பொருகளிறு என்றார். பனியால் அலைப்புண்டு வருந்தும் நிலை பனியலை நிலை.

நிலவின்றி இருள் பரவிய செவ்வி, இரவுக்குறிக்கண் தலைமக்கள் தம்மிற் களவிற் கூடி இன்புறுதற்கு ஏற்றமையின், அஃது எய்தக் கண்ட தலைமகள் வரைவிடை வைத்துப் பிரிந்துறையும் தலைமகனை நினைந்து வருந்துதலின், நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று என்றும், ஒரோவழி இருள் பரவினும் தாய் துஞ்சாமையால் இரவுக்குறி இடையீடு படுத லுண்மையின், அதுதானும் இன்று இலதாயிற் றென் பாள், அன்னையும் துஞ்சினள் என்றும் கூறினாள். இரவுக் குறிக்கு ஏற்ற இடமாதல் தோன்ற ஓவத்தன்ன இடனுடை வரைப்பு என்றாள். தன்வய மின்றித் தாயின் குறிப்புவழி நின்று மனைக்கண் செறிப்புண்டிருக்கும் திறத்தைப் பிறர் இயக்க இயங்கும் பாவையை யெடுத்துக் காட்டிப் புலப்படுத் தினாள். காணாமற்போனதொரு நன்பொருள் அரிதின் தேடிக் கிடைக்கப் பெறின், அதனை மிக்க ஆர்வத் தோடு பேணிக் கொள்ளுதல் எல்லா மக்கட்கும் இயல்பு. வரைவிடை வைத்த பிரிவாலும், இற்செறிப்பு மிகுதியாலும் தலைவனது கூட்டம் பெறாதொழிந்தது, தொடுதற்குரிய நன்கலம் கெடுத்தது போன்றும், அவன் உறைவிடம் நாடிச் சென்று கண்டு கூட்டம் பெறுவது, அந்நன்கலத்தைத் தேடி யெடுத்து ஆர்வமொடு அணிந்துகொள்வது போன்றும் இருத்தலின், கெடுத்துத் தொடு நன்கலம் எடுத்துத் கொண்டாங்கு நன்மார்பு அடைய முயங்கி என்றாள். பிரிவின்கண் எழுந்து வருத்தும் காதல் கைம்மிகுவது தோன்ற அடைய முயங்கி எனவும், “முயங்குதொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு” அடக்கி இன்பம் செய்வதுபற்றி நன்மார்பு எனவும், முயங்கிய மார்பைக் கண்ணாற் காண்டலில் மகளிர்க்கு இன்பமுண்டு என்பதைக் “காதலர் நல்கார் நயவா ராயினும், பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே”1 எனவும் சான்றோர் கூறுதலின், ஈண்டுத் தலைமகளும் தன் காட்சி விருப்பினை, கண்டனம் வருகம் எனவும், சேறல் கற்புடைய மகளிர்க்கு அறமன்மையின் சென்மோ எனவும் கூறினாள்.. ஒப்பாரும் உயர்ந்தாரும் இல்லாத தலைமகனாதலின், அவ னுக்குக் கீழும் மேலும் காப்போர் நீத்த பெருந்தலைக் களிற் றினை உவமம் காட்டினாள். மறமிகுதி பற்றிப் பொருகளிறு என்றல் வேண்டிற்று. காழோரையும், பாகரையும் போக்கிப் பகைப்புலத்துத் தனித்து வரும் பெருந்தலைப் பொருகளிறு போல ஒரு தனி வந்தோன் என்றாள். முன்பு இரவுக் குறிக்கண் அவன் வரவு நோக்கி வருந்தியிருந்த தன் வருத்தம் தீர; ஊர்க்காவலும், மனைக்காவலும் போக்கிக் குறியிடம் தனித்துப் போந்து தலையளி செய்தமை குறித்தற்கு அன்று நாமுற்ற நடுங்கஞர் தீர, நிலவின்றி இருள் பரந்த நள்ளிரவில் தாய் துஞ்சிய செவ்வி நோக்கித், தனித்துப் போந்து இன்புறுத்திய தலைமகனது பெருநன்றிக்குக் கைம் மாறாக, யாம் சென்று நன்மார்பு அடைய முயங்கி அவன் எய்தி வருந்தும் பனியலை நிலையினைப் போக்கி வருதலிற் குறையின் றன்றோ என்பாள், நன்மார்பு அடைய முயங்கிப் பனியலை நிலை கண்டனம் வருகம் சென்மோ கூறுக என்றாள். கிழவோற் சேர்தல் கிழத்திக்கு அறமன்றாயினும், அவன் செய்த “நன்றி மறப்பது நன்றன்று” என்பது பற்றி நாம் சேர்தல் அறமன்றோ என இதனால் தலைவி தோழியொடு உசாவிய வாறு காண்க.

“நாற்றமும் தோற்றமும்2” என்ற நூற்பாவில் வரும் “நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்” என்பதன் உரையில் இதனைக்காட்டி, “இது வந்தான் எனக் கூறியது” என்பர் இளம்பூரணர். இந் “நாற்றமும் தோற்றமும்” என்ற நூற்பாவின்கண்3 வரும் “புணர்ச்சி வேண்டினும்” என்றதற்கு இதனைக் காட்டி, “இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது என்பர் நச்சினார்க்கினியர்.

கயமனார்


தலைமக்களிடையே வளர்ந்த காதலுறவு சிறந்து ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலையினை எய்தவும் தலைமகன் வரைந்து கோடலை நினைவானாயினன். வதுவைக்குப்பின், அவனது வாழ்வு தனியே தொடங்கப் பெறுதலின், அதற்கு முதல் தேடுவது அவனது கடனாக அமைகின்றது. வளவிய வாழ்வுக்கு இன்றியமையாத அன்பும் அறமும் செய்தற்குரிய துணையை நாடும் அவன், பொருள் செய்தல் முதற்கடனாதலை உணர்ந்து, தேர்ந்துகொண்ட துணையைத் தனக்கே வரைந்து கோடற்கு முன்பே அதனைச் செய்தற்கு முயலுகின்றான். பெற்றோர் செய்த பொருள் அவரது வினையால் விளைந்து அவர்கட்கே உரிய தாகலின், தனக்கென உரிய பொருளைத் தானே முயன்று செய்தல் அவற்குத் தகுதியாகின்றது. அதனால் வரைவுக்கு இடையே பொருள் குறித்துப் பிரிதலைத் தலைமகன் மேற் கொள்ளு கின்றான். அதனைத் துணைவிக்கும் தனக்கும் இடையே பற்றுக் கோடாக நிற்கும் தோழி பால் தெரிவிக்கின்றான். அவள் பொருளின் இன்றியமை யாமையும், இயல் பும் தூக்கி நோக்கு கின்றாள். அறத்துக்கும் அதனால் விளையும் இன்பத்துக்கும் முதல் பொருளாதலின், இன்பம்போலத் தன்னைப் பெற்றோர் உள்ளத் தைத் தன் கண்ணே ஒன்றுவித்துத் தனக்கே அடிமையாகப் பணிகொள்ளும் இயல்பு பொருட்கு உண்மையைத் தோழி நினைக்கின்றாள். பொருட் காதல் மிகுமாயின், துணைவி பாற் செல்லும் காதலன்பும் வலிகுன்றும் என்ற அச்சம் தோழிபால் உண்டாகிறது. தலைமகளைப் பிரிந்த வழி, அவன் நெஞ்சில் நிற்கும் காதலுக்குரிய இடத்தைப் பொருட்காதல் கவர்ந்து கொள்ளின், தலை மகன் உள்ளம் வரைந்து கோடற்கு விரையாது நீட்டிக்குமென்ற நினைவும் அவட்குத் தோன்றுகிறது; அதனால், அவனது உள்ளக் காதலை மிக்க வலியுடைய தாக்கக் கருதித் தலைவியின் காதற் பெருக்கைப் பாரித்துரைக்கின்றாள். “தலைவ, உப்பு விளையும் நிலம் நெய்தல்; நெல் விளைவது மருதப் பகுதியிலாகும்; உப்பு எல்லா நிலத்தவர்க்கும் வேண்டுவதாகலின், மருதநில உப்பு வணிகர் நெய்தற்புலம் சென்று ஆங்கு வாழ் பவர்க்குத் தமது நாட்டில் விளைந்த நெல்லைத் தந்து உப்புப் பெற்றுக்கொண்டு செல்வர். அவ்வுப்பு வணிகர் தமக்குரிய பண்டம் மாறியபின், அந்நிலத்தினின்று தம்மொடு போந்த சுற்றத் தோடே செல்வர். இங்ஙனம், ஒரு காரணம்பற்றிப் போந்தவர் அதன்முடிவில் நீங்குதல் இயல்பாயினும், அவரது நீக்கத்துக்கண், அவ்விடம் பொலிவின்றிக் காண்டற்கு இன்னாதாகின்றது. இதனைத் தானும் நீ உணர்ந்து பாராமல், பிரிவுரைப்பது நின்பால் மடமை தோற்றுவிக்கிறது, காண். நின் பிரிவின்கண், இவண் போந்து அலைக்கும் ஊதைக் காற்றும் மாலைப் போதும் செய்யும் துன்பத்தை நீ நினைத்தல் வேண்டும்; நீர் குன்றிய நன்னீர்க்வளத்தில் வாடிக் கிடக்கும் நெய்தல் அங்கு மீன் தேடி யுண்ட வெண்குருகுகளால் மிதிப்புண்ட வழி இறத்தல் போல, நின்னைப் பிரிந்துறையும் தலைமகளை ஊதையும் மாலையும் உயிர்வாழவிடா என்பதை நினையாதொழிகின்றாய், காண்” என்றாள்.

தோழியின் இக்கூற்றின்கண், நீரின்றமையா நெய்தல் போலத் தலைமகள் தலைமகனை யின்றி அமையாக் காதலள் எனத் தலைவியின் காதலன்பை மிகுத்துக் காட்டி வற்புறுத்தினமையும், அதனைப் பேணுதல் வேண்டின் வரைவை இடைவைத்துப் பிரிதலை நீக்கி வரைவு குறித்துப் பிரிதலாகிய உடன்போக்கினைத் துணிக என்றமையும் கண்ட கயமனார் இப்பாட்டின்கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

1தண்ணாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட் டுப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவணுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்
துமணர் போகலும் 2இன்னா தன்றே
3மடவை மன்ற கொண்க வயின்றோ
றின்னா தலைக்கும் ஊதையொ டோரும்
நும்மில் புலம்பின் மாலையும் உடைத்தே
இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
4ஆழ்நீர் நெய்தல் போல
வாழா ளாதல் சூழா தோயே.

இது, வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

உரை
தண்ணாட்டு விளைந்த வெண்ணெல் தந்து - குளிர்ந்த நீர் நாடாகிய மருதநிலத்து விளைந்த வெண்ணெல்லைக் கொணர்ந்து தந்து, பிறநாட்டு உப்பின் கொள்ளைசாற்றி - பிறநாடாகிய நெய்தல் நிலத்து விளைந்த உப்பினை விலைக்கு மாறிக்கொண்டு; நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி - நெடுவழிச் செல்லுதற்குரிய வண்டியைச் செலுத்தி நிலவு போல் வெள்ளிய மணல் பரந்த நெய்தற் பகுதியைக் கடந்து; அவண் உறை முனிந்த ஒக்கலொடு - தம்போல் அவ்விடத்தி னின்றும் நீங்குதலைக் கருதிய வணிகச் சுற்றத்தாருடனே; உமணர் புலம் பெயர்ந்து போகலும் இன்னாது - உப்பு வணிகர் தங்கிய இடத்தினின்று நீங்கிச் செல்லினும் அவர் பிரிவால் அவ்விடம் காண்டற்கு வருத்தம் தருவதாகும்; கொண்க - தலைவ; மடவை மன்ற - மடமையுடைய யாவாய் தெளிவாக; வயின்தொறும் இன்னாது அலைக்கும் ஊதையொடு - இடந் தோறும் துன்புறுமாறு வீசும் ஊதைக்காற்றோடு; நும்மில் புலம்பின் மாலையும் உடைத்து - நும்மை யில்லாமையால் எய்தும் தனிமைத் துயரத்தோடு மாலைப்போதினையும் உடைத்தாகும்; இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த ஆழ்நீர் நெய்தல் போல - பலவேறு மீனினங்களையுண்ட வெண்ணிறக் குருகுகளால் மிதிப்புண்ட நீர்வற்றி ஆழத்திற் கிடக்கும் நெய்தல் இறந்தொழிதல் போல; வாழாளாதல் சூழாதோய் - நின்னை யில்வழி உயிர்வாழாள் இவள் என்பதை நினையாது பிரிவைக் கருதினாயாகலான் எ-று.

உமணர், தந்து கொள்ளை, சாற்றி, நீந்தி, ஒக்கலொடு புலம் பெயர்ந்து போகலும் இன்னாது அன்றே; கொண்க, வயின்தொறும் ஊதையொடு புலம்பின் மலையு முடைத்து; ஆழ்நீர் நெய்தல் போல வாழாள் ஆகுதல் சூழாதோய் ஆகலான் மடவை, மன்ற என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. மருதநிலப்பகுதிகளைத் தண்ணடை என்பது போலத் தண்ணாடு என்றாலும் வழக்கு. நீர்வளமும் தட்பமும் இல்லாத விடத்து வெண்ணெல் விளையாமையின் அது விளையும் மருதவளம் பொருந்திய நாட்டை நீர்நாடு என்றும், புனனாடென்றும், தண்ணாடென்றும் பண்டையோர் வழங்கினர். உப்பும் உவர்மண்ணு மன்றிப் பசும் புல்லும் தலைகாட்டாத களர் நிலத்தைப் பிறநாடு என்றார். கொள்ளை - கொள்ளத்தக்க விலை. நெடுவழிச் செலவுக் குரிய வண்டிகள் வலிய அச்சும், பாரும், ஆழியும் கொண்டிருத் தலின், நெடுநெறி ஒழுகை என்றார். உப்பு விளையும் நெய்தல் நிலம் “பெருமணல் உலகம்” எனப்படுதல் பற்றி, நிலவுமணல் நீந்தி என்றார். மாறுதற்குரிய பண்டம் குன்றியவழி அவ் விடத்தின் நீங்குதல் வணிகர் செயலாதலின், நீங்கும் வணிகர் சுற்றத்தை அவண் உறை முனிந்த ஒக்கல் என்றார். உறை, முதனிலைத் தொழிற்பெயர். முனிவு - வெறுப்பு; வணிகர் திரள் கூடிய விடத்து மக்கள் ஈண்டிப் பண்டம் மாற்றுதலால் தோன்றும் கம்பலையாலும் ஆரவாரத்தாலும் அவ்விடம் பொலிவுற்றும், அவர் நீங்கியவழி அப்பொலிவின்றிப் பாழ்த்தும் தோன்றுதலால், புலம் பெயர்ந்து போகலும் இன்னாது என்றார். ‘அன்றும்’ ‘ஏயும்’ அசை; ஊதை - குளிர்காற்று, புலம்பு - தனிமை, வெண்குருகு - கொக்கு, நாரை முதலிய நீர்ப்பறவை; ஆகலான் என்பது அவாய்நிலை ‘ஒரும்’ என்பது அசைநிலை.

வரைதற்பொருட்டுப் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அப்பிரிவை உரைத்தவழி, தோழி அவனைச் செலவழுங்குவிக்கின்றா ளாகலின், உமணர் போக்கு வரவினை எடுத்துக்காட்டி, எவ்விடத்தும் நிலையின்றி நீங்கிச் செல்லும் இயல்பின ராகிய உமணர் ஓரிடத்தே சிறிது போது தங்கி யிருந்து நீங்கினும், அவ்விடம் பொலிவின்றி இன்னாமை யுடைத்தாகும் என்பாள், புலம்பெயர்ந்து உமணர் போகலும் இன்னா தன்றே என்றார். எந்நிலத்தும் நிலையின்றி இயங்கிய வண்ணம் இருப்பது உமணர் செயலாதலின், அதனை விளக்குதற்குத் தண்ணாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி என்றாள். நெறியின் நெடுமையும் மணற்பரப்பும் நோக்கிச் செல்லுதல் தவிராத உமணர் செயற்பண்பு தோன்ற, நெடுநெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி என்றும், அவர்கள் என்றும் திரளாய்க் கூடிச் செல்ப என்றற்கு, அவணுறை முனிந்த ஒக்கலொடு என்றும், அப்பெற்றியோர் ஓரிடத்தே இருத்தலும், இராது எழுதலும் அவ்விடத்துக்கு இனிமையாதல் இன்னாமையாதல் பயத்தற்கு எது ஒன்று மின்றாயினும், இருத்தல் இனிமையும் ஏகுதல் இன்னாமையும் பயப்பது கண்கூடு என்பாள். புலம் பெயர்ந்து உமணர் போகலும் இன்னா தன்றே என்றும் கூறினாள். இதனாற் பயன், என்றும் பிரிவோர் பிரிவே இவ்வாறு இன்னா தாகுமாயின், பிரியாத நின் பிரிவு தரும் துன்ப மிகுதியைச் சொல்லவும் வேண்டுமோ என்றவாறு. எஞ்ஞான்றும் புலம் பெயர்ந்து செல்லும் உமணர் வெண்ணெல்லைத் தந்து உப்புப்பெற்றுச் செல்லுமிடத்து அவனுறை முனிந்த ஒக்கலை யும் உடன்கொண்டு சென்றாற்போல, எமக்குத் தலையளி செய்து எமது நலத்தைக் கொண்டு எம்மிற் பிரியக் கருதும் நீ, இவணுறை முனிந்த ஒக்கலாகிய எம்மையும் உடன்கொண்டு சேறல் நன்று எனத் தோழி பிறிது மொழிந்தவாறு காண்க. கொண்டு தலைக் கழிதல் நன்று என்றற்குரிய ஏதுவினை மேலே விரித்துரைக் கின்றளாகலின், மடவை மன்ற கொண்க என்றாள். உடன்கொண்டு சென்று வரைந்து கோடலை நினையாது வரைந்து கோடற் பொருட்டுப் பிரிந்து சேறலைக் கருதியது சீரிதன்று என்றற்கு மடவை மன்ற என்றாள் என்க. நின்னிற் பிரிந்த வழி, தலைவி தனித் திருக்கும் ஒவ்வோரிடமும் ஊதைக் காற்று அலைத்தலால் அவட்கு வருத்த முறுவிக்கும் என்பாள், வயின்தோறும் இன்னாது அலைக்கும் ஊதை என்றும், அதனோடு மாலைப் போது உண்ணிலவும் காமநோயை மிகுவித்து ஆற்றாமை உண்டு பண்ணும் என்பாள், நும்மில் புலம்பின் மாலையும் உடைத்து என்றும் கூறினாள். ஆழ்நீர் நெய்தல் வெண்குருகு மிதிப்ப இறத்தல் போல, நின்னை யில்லாத தலைமகள் ஊதை யாலும் மாலைப்போதாலும் தாக்குண்டு இறந்து படுவள் என்றற்கு, ஆழ்நீர் நெய்தல் போல வாழாளாதல் என்றும், இதனை எண்ணாமல் பிரியச் சூழ்ந்தது அறிவுடைமை யன்று என்பாள். வாழாளாதல் சூழாதோயே என்றும் எடுத்துக் கூறினாள். இவ்வண்ணம் தலைமகன் முன்னின்று தோழி உரனுடையளாய்க் கூறுதற்கு ஏது, தலைமகட் குளதாகும் துன்பத்தைப் போக்கும் கடன்மை அவள்பால் இருத்தலே என்றுணர்க. “உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின், உரிய தாகும் தோழிகண் உரனே1” என ஆசிரியர் உரைப்பது காண்க

நெய்தல் தத்தனார்


களவின்கட் காதலுறவு கொண்டு அன்பு சிறந்து ஒழுகும் தலைமக்களிடையே, தலைவற்கே உரியளாய் அவன் மனைக் கிழத்தியாய் நின்று இல்லறஞ் செய்தற்கண் தலைமகள் எண்ணங் கொள்வாளாயினள்; அதனால், தோழி வாயிலாகவும், வாய்த்த விடத்துத் தானும், குறிப்பாய்த் தலைமகனை வரைவு கடா வினாள். வினை ஆடவர்க்கு உரியதாகலின் அது குறித்துத் தலைமகள் தன்னிற் பிரிந்து சேறல் கூடும் என்ற அச்சம் அவள் உள்ளத்தே ஓரொருகால் தோன்றி உறுகண் செய்தது ஒருகால், தலைமகன் பிரியின் தன் மேனிக்கண் உண்டாகும் வேறு பாட்டைக் காணும் அயலவர் அம்பலும் அலரும் கூறுவர் என்ற கவலை ஒருபால் தோன்றி அவளை அச்சுறுத்திற்று. இதுநிற்க, நொதுமலர் வேண்டியவழிப் பெற்றோர் வரைவுடன் படுவர்கொல் என்ற அவலம் ஒரு மருங்கு வருத்துவதாயிற்று. தலைமகன் மகட்கொடை வேண்டிய வழித் தன் பெற்றோர் மறுப்பின் உளதாகும். ஏதத்தை எண்ணிய தலைமகட்குத் தலை மகனை உணர்த்தி அவனுடன் போக்குடன்படுதலே அறமாம் என்ற துணிவும் பிறப்பதாயிற்று. தலைமகளைக் குறியிடத்தே காணப் போந்த தலைமகன், அல்ல குறிப்பட்டும் குறி இடை யீடுபட்டும் அவளைக் காணப்பெறாது கையற்று நீங்குங்கால், தலைமகளை இனி வரைந்து கோடலன்றி வேறு செயற்பாலது இல்லை எனத்துணிந்தான். சான்றோரைக் கொண்டு மகட் கொடை வேண்டித் தலைவியின் பெற்றோர்பால் விடுக்கத் துணிந்தபோது மகட்கொடை மறுக்கும் குறிப்பும் நொதுமலர்க்கு வரைவுடன்படும் குறிப்பும் தோன்றியவழித் தலைமகளைத் தன்னுடன் கொண்டு தலைக் கழிதற்குத் துணிந்து தோழியை மதியுடம்படுத்தான். இவ்வாற்றால், தலைமகனும் தலைமகளும் தோழியின் துணையால் உடன்போக்குத் துணிந்து தலைமகன் ஊர் சென்று சேர்ந்து ஆங்குச் சான்றோர் அறிய மணம் புரிந்து கொண்டனர். தலைமகள் தலைமகனோடு உடன்போகியதைச் செவிலியால் தலைவியைப் பெற்ற தாய் அறிந்து வருந்துவா ளாயினள். அதனை யறிந்த அயலவரும், அறிவரும் போந்து அவள் தெளியத் தகுவன கூறி ஆற்றுவித்தனர். அப்போது அவள், “யான் ஒரு மகளே உடையேன்; அவளும் நெருநல் கூர்வேல் காளை ஒருவனொடு கூடிக்கொண்டு, அருஞ்சுரம் கடந்து சென்றாள்; நீ நின் துன்பத்தைத் தாங்கிக் கொள்க; சிறந்தானை வழிபட்டுச் சென்றனள் நின்மகள்; அவட்கு அறம் அதுவே; ஆதலால் அவள் பொருட்டு வருந்துதல் ஒழிக என உரைக் கின்றீர்கள். அஃது எனக்கு எவ்வாறு கூடும்? நினைத்தாலும் என் நெஞ்சம் வேகின்றது; அவள் இருந்து விளையாடிய நொச்சி நீழலும் தெற்றியும் காணும் போது, என் அவலம் கைகடந்து போகிறது” என்று மொழியலானாள்.

இம்மொழியின்கண், மகட்போக்கிய தாயினது தாய்மை யுள்ளம் துடிக்கும், துடிப்பும் அக்காலை அவள் வாயினின்று இயல்பாகத் தோன்றி வழியும் சொற்களின் இயல்பும் தோன்றி, நெய்தல் தத்தனாருடைய புலமையுள்ளத்தை அசைத்தமையின், அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
1செருமிகு முன்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் 2நெருநற் சென்றனள், இனியே,
தாங்குநின் அவலம்3 என்றிர் அதுமற்
றியாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே
உள்ளினும் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன்
4அணியேர் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

இது, மகட்போக்கிய தாய், தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது; மனைமருட்சியுமாம்.

உரை
ஒருமகள் உடையேன் மன் - ஒரு மகளையே பெற்றிருந்தேன். காண்; அவளும் - அவள் தானும்; செருமிகு முன்பின் கூர்வேல் காளை யொடு - செருவில் மேம்பட்ட வலியினையும் கூரிய வேலினையுமுடைய காளை ஒருவனுடன்; பெருமலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள் - பெரிய மலையிடத்துக் கடத் தற்கரிய சுரத்திடையே நேற்றுச் சென்றொழிந்தாள்; இனியே - இப்பொழுது ; நின் அவலம் தாங்கு என்றிர் - நினக்குற்ற வருத்தத்தைப் பொறுத்துக் கொள்க என்று சொல்லு கின்றீர்கள்; அது யாங்ஙனம் ஒல்லும் - அஃது எவ்வாறு முடியும்; அறிவுடையீர் - அறிவுடைய அயலிலாட்டியரே உள்ளினும் உள்ளம் வேம் - அவள் போக்கினை நினைத்தால் என் நெஞ்சம் வேகா நிற்கிறது; உண்கண் மணிவாழ் பாவை நடை கற்றன்ன - மையுண்ட கண்ணின் மணியிடத்தே வாழும் பாவை நடைகற்று நிலத்தில் நடந்தாற் போன்ற; என் அணியேர் குறுமகள் ஆடிய - அணியழகும் இயற்கையழகும் உடைய என் இளமகள் இருந்து விளையாடிய; மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டு - நீலமணி போலும் பூக்களால் அழகுற்ற நொச்சி மரத்தின் நீழலையும் அதன் கீழ் அமைந்த திண்ணை யையும் கண்டு வைத்தும் எ-று.

ஒருமகள் உடையேன்மன்; அவளும் காளையொடு அருஞ்சுரம் நெருநல் சென்றனள்; இனி, அறிவுடையிர், தாங்கு நின் அவலம் என்றிர்; அது யாங்ஙனம் ஒல்லும்; குறுமகள் ஆடிய நொச்சியும் தெற்றியும் கண்டு உள்ளினும் உள்ளம் வேமே என்று மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. ‘மன்”, கழிவின்கண் வந்தது. காளை போல்வானைக் காளை என்றார். புலவர் பாடும் புகழுடைத்தாகலின், செருமிகு முன்பினை விதந்து கூறினார். தாங்கு நின் அவலம் என்ற விடத்துத் தாங்கு என்றது “செய்யென் கிளவி1” ‘மற்று’, அசைநிலை, ‘ஒல்லுமோ’, ஒகாரம் அசைநிலை, அணி பொன்னாலும் மணியாலும் ஆய அணிகளாற் பிறப்பிக்கும் செயற்கை அழகு. ஏர் - எழுச்சி; உடல் வளர வளர உடன் வளர்ந்து திகழும் இயற்கை யழகு. நொச்சியின் பூங்கொத்துக் கரிதாய் நீலமணி போறலின், மணியேர் நொச்சி என்றார்; பிறாண்டும், “மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி1” என இவ்வாசிரியரே கூறுதல் காண்க. “மணிதுணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி3” எனப் பிறரும் வழங்குதல் அறிக. தெற்றி - திண்ணை.

மகளைப் பிரிந்து வருந்தும் தாய், தெருட்டும் அயலி லாட்டியர்க்குத் தன் மாட்டாமைக்குரிய ஏதுவினைக் கூறு வாளாய், ஒரு தாய்க்கு ஒருமகள் என்னும் வழக்குப்பற்றி, ஒரு மகள் உடையேன் மன்னே என்றாள்; வேறே மக்கள் இருப் பின், அவர்களைப் பார்த்து ஆற்றுதல் கூடும்; அவ்வா றில்லேன் என்பது தோன்ற மன்னே என்றாள். அவளைக் கொண்டுதலைக் கழிந்த தலைமகன் அவளைத் தேடிச் சென்ற இளையரைச் செருவிடை வெருட்டி யோட்டிய குறிப்புத் தோன்றச் செருமிகு முன்பின் கூர்வேற்காளை என்றும், மகள் சென்ற சுரத்தின் இயல்பைப் பெருமலை யருஞ்சுரம் என்றும், உடன் போகிய காலம் இது வென்றற்கு நெருநல் சென்றனன் என்றும் கூறினாள். தாங்கு நின் அவலம் என்றது அயலிலாட்டியர் கூற்று. அவலத்தைத் தாங்குதற்குரிய என் உள்ளம் தானும், அவளை உள்ளுதற் கிடனாய், உள்ளிய வழி வெந்து நீராய் உருகுகிற தென்பாள், உள்ளினும் உள்ளம் வேமே என்றாள். மகள்பால் தனக் கிருக்கும் காதல் மிகுதியை. உண்கண் மணிவாழ் பாவை நடை கற்றன்ன என் அணி யேர் குறுமகள் என்பதனால் புலப்படுத்து கின்றாள். கண்ணிற் பாவை மகளாகிய பாவை போல நடையுடைய தன்மையின், நடைகற்றன்ன என்றும், பல்வேறு அணிகளால் மகளது அழகை மிகுவித்துக் கண்டு இன்புற்ற தன் தாய்மைப் பண்பு விளங்க அணியேர் குறுமகள் என்றும், மகளிருந்து விளை யாடிய இடத்தைத் காணுந் தோறும் மகளைக் கண்டாற் போலும் குறிப்பு உள்ளத்து எழுந்து வருத்துதலின், குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே என்றும், அதனால் யான் அவளைப் பிரிந்து அவலத்தை தாங்கற் கில்லே னாயினேன் என்றற்கு அதுமற்று யாங்ஙனம் ஒல்லுமோ என்றும், அறிவுடையோர் யாவர்க்கும் அஃது ஒப்ப முடிந்த உண்மை யாகலின், அறிவுடையீரே என்றும் கூறினாள்.

“தன்னும் அவனும் அவளும்1” என்னும் நூற்பாவின்கண் “அவ்வழி யாகிய கிளவிகளுட் சில வருமாறு” என வுரைத்து, இப்பாட்டை எடுத்தோதி, “இந்நற்றிணை தெருட்டும் அயலி லாட்டியர்க்கு உரைத்தது” என்பர் நச்சினார்க் கினியர். இனிப் பேராசிரியர் “வினை பயன் மெய் யுரு2” என்ற நூற்பா வுரையில் “மணிவாழ் பாவை நடைகற் றன்ன என்புழிக் கற்று என்னும் வினையெச்சம் தன்னெச்சவினை இகந்த தாயினும் அஃது உவமப்பகுதி யாகலான் அங்ஙனம் வருதலும் கொள்ளப் படும்” என்பர்.

பரணர்


தலைவியை மலைச்சாரற் பூம்பொழிலிடைத் தனித்துக் கண்டு அவள்பால் தன் கருத்தை இழந்தான் தலைமகன். ஆய மகளிர் சூழ்வரப் பொழிலகம் புகுந்த அப்பூவை ஒருபால் தனித்து நிற்ப, ஆண்டுப் போந்த அக்காளையைத் தன் இரு கண்களாலும் கண்டு அவன் தோள் அழகில் உள்ளம் தோய்ந்தாள். இருவர் கண்களும் ஒருவரை யொருவர் உள்ளக் கிழியில் உருவுபெற நிலைபெறுவித்தன. இருவர் உள்ளத்திலும் இதுகாறும் தோன்றாத ஈர்ப்புணர்ச்சி யொன்று தோன்றிச் சேர்க்கலுற்றது. சிறிதுபோதில் இருவரும் பிரிந்து சென்றனர். சென்ற தலைமகன் சிந்தை திரிந்து பொழிலகத்துப் பூமகளென நின்ற நங்கையின் திருவுருவத்தையே நினைந்து நின்றது. மறுநாள் அப்பொழிலகம் சென்று அவளைக் காண்டல் வேண்டுமென விழைந்தான்; அவள் உள்ளத்தும் அவன்பால் நிகழ்ந்த நினைவுகளும் விழைவும் உண்டாயின. மறுநாளும் முன்னாள் கண்டாற்போல இருவரும் தனித்துக் கண்டனர். இருவர் உள்ளங்களும் ஒன்றையொன்று ஈர்த்தமையின் உள்ளத்தின் வழிநின்ற இருவர் உடலும் ஒருவரை யொருவர் நன்கு காணுமளவில் நெருங்கின. காதலுணர்வும், நாணமிகுதியும், அந்நங்கைபால் மீதூர்ந்து நின்றன. கள்ளமில்லாத வெள்ளை யுள்ளமும், திண்ணிய அறிவும், பெருமையு முடைய அக்காளை, தன் காதலை நன்கு புலப்படுத்தி அவள் உள்ளத்துத் தோன்றிய காதலை அவள் நோக்கத்தாலும், மேனி நுடக்கத்தாலும் உணர்ந்து நறிய மலரொன்றை அவள் கூந்தலிற் சூடி மகிழ்
வித்தான். சிறிது போதில் அவள் அவ்வயின் நீங்கிச் சென்று ஏனை ஆயமகளிருடன் கூடிக் கொண்டாள். அவள் செலவையே நோக்கி நின்ற தலைமகன், மேலே ஆவன செய்தல் வேண்டித் தனக்கு உயிர்த்தோழியாவாளை அவன் உணர்ந்து கொள்ளுமாறு; தலைவி, தன் கட்பார்வையாலும் வேறுபிற செயல்வகைகளாலும் காட்டினாள். காட்டக் கண்ட காளை தோழிவாயிலாகத் தான் தகுவன முயறல் வேண்டும் என்று உணர்ந்தான். இன்னோரன்ன குறிப்பும் செயலும் இதுகாறும் பயிலாத அவனது இளமை யுள்ளம், புதுக்கள் ளுண்டு புந்தி மயங்கினோரைப் போலத் தடுமாற்ற மெய்தித் துடித்து வருந்தலுற்றது; மேனியில் வாட்டம் தோன்றிற்று. தானுற்ற வருத்தத்தைத் தன் பாங்கனிடத்தே எடுத்துரைத்தான்; பாங்கனும் தலைமகனை யொத்த இளமைப் பண்பினனாகலின், அது கேட்டு அவனை எள்ளி நகையாட லானான். தலைமகனுடைய ஆண்மையை விதந்து கூறி, ஒரு பெண்ணின் வனப்புக்கு ஆண்மையை அடிமைப்படுத்தி அல மருதல் கூடாது என அறிவுறுத்தினான். அதனால், தலைமக னுடைய உள்ளம் அமைதி பெறாது பெரிதும் அலைந்தது. பாங்கனை நோக்கி, “நண்ப, காதற்காமம் கைம்மிகுதலால் உளதாகும் துயர் எய்தி, யான் கையற்று வருந்துதலைக் கண்டு வைத்தும், நீ என்பால் அன்புகொண்டு ஆகும் நெறி யொன்றை அருளா யாகின்றனை; ஆதலால், பொறையனுக்குரிய கொல்லி மலையில் தெய்வம் எழுதி நிறுத்திய பாவை போல்பவளாகிய அவள் என்னைக் கொலை குறித்தாள் ஆவள்; யான் அதுபற்றி என் ஊழ்வினையை நொந்து வருந்துவ தல்லது பிறிதொன்றும் செய்தற் கில்லேன்”என்று இயம்பினான்.

தலைமகன் இயம்பிய இக்கூற்றின்கண், அறிவும் ஆண்மை யும் புறங்காப்ப, நல்லன நினைந்தொழுகும் அவனுடைய இளமையுள்ளம் காதற்காம நோய் கைம்மிக்குக் கையறவு படுதலும், அறிவும் ஆண்மையும் துணைசெய்தற்கு வாயிலின்றி மறைந்தொடுங்க, தன்னைக் கவ்விக் கையிகந்து நிற்கும் காம நோயின் பெருமையே விளங்கித் தோன்ற, அவனுடைய உள்ளம், அது தன்னைக் கொலைகுறித்து வந்ததாக எண்ணி வருந்து தலும் கண்ட ஆசிரியர் பரணர் அவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

ஆனா நோயோ டழிபடர்க் கலங்கிக்
காமம் கைம் மிகக் கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற 1விரியுளை நன்மான்
கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி
இரவலர் மெலியா தேறும் பொறையன்
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்
அகலிலைக் காந்தள் 1அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடைக் 2 கவாஅன் தெய்வம் எழுதிய
3நிலைமாண் பாவை அன்னோள்
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே.

இது, பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉமாம்.

உரை
ஆனா நோயொடு அழிபடர்க் கலங்கி - தீராநோயாலும் மிக்க மனவருத்தத்தாலும் நிறைகலங்கி; காமம் கைம்மிகக் கையறு துயரம் - காதற் காமம் இறப்ப மிகுதலால் யான் செயலற்றொழிய எய்திய துயரத்தை; காணவும் - நீ கண்டு வைத்தும்; நல்காய் - துணைபுரியாயாயினை; ஆயின் - இதனை ஆராயுமிடத்து; பாணர் பரிசில் பெற்ற விரியுளை நன்மான் - பாணர்கள் பரிசிலாகப் பெற்ற விரிந்த தலையாட்ட மணிந்த நல்ல குதிரைகளின்; கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறு நெறி - கவிந்த குளம்புகள் தாக்குதலால் தேய்ந்த மலைமேற் செல்லும் சிறுவழி; இரவலர் மெலியாது ஏறும் - இரவலர் வருத்தமின்றி ஏறிச் செல்லும்; பொறையன் உரைசால் உயர் வரைக் கொல்லிக்குடவயின் - பொறையனாகிய சேரமானது புகழமைந்த உயர்ந்த மலையாகிய கொல்லியின் மேலைப் பகுதியில்; அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - அகன்ற இலைகளையுடைய காந்தளின் அசைகின்ற குலை குலையாகப் பூக்கும் பூக்களிற் படிந்து; பறவை இழைத்த பல்கண் இறாஅல் தேனுடைக் கவாஅன் - தேனீக்கள் ஈட்டி வைத்த பலவாகிய கண்களையுடைய தேனடையிற் பெறப் படும் தேனையுடைய மலைப்பக்கத்தே; தெய்வம் எழுதிய நிலைமாண் பாவை அன்னோள் - தெய்வங்கள் எழுதி வைத்தமையால் மாயாத நிலைமையால் மாட்சியுற்ற பாவையைப் போல்வாள்; கொலை சூழ்ந்தனள் - என்னைக் கொலை குறித்தாளாவள்; யான் நோகு - ஆதலால் யான் என் வினையை நொந்து கொள்வ தல்லது பிறிதியாதும் செய் தற்கில்லேன், காண் எ-று.

நோயொடு கலங்கிக் காமம் கைம்மிகக் காணவும், நல் காயாயின், பாவையன்னோள் கொலை சூழ்ந்தனளாம்; ஆகலின், யான் என் ஊழ் வினையை நோகு எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஏறும் உயர்வரை, பொறையன் உரைசால் உயர்வரை என இயையும், உயர்வரை யாகிய கொல்லி என்க. அழிபசி, அழிபெயல் என்றாற்போல, மிக்கபடர், அழிபடர் எனப்பட்டது. படர் - உள்ளுதல், நோயாற் படரும், படராற் கலக்கமும், கலக்கத்தால் கைம்மிகலும், கைம்மிகலால் துயர மும் உளவாதலின் முறையே கூறினார். கண்டும் எனற்பாலது காணவும் எனத் திரிந்து நின்றது. பொறையன் - சேரநாட்டின் பகுதியான பொறை நாட்டு வேந்தர் குடிக் குரியவன். குட்ட நாடு - பொறைநாடு, குடநாடு என்ற சேரநாட்டுப் பகுதிகளுள் குட்ட நாட்டு வேந்தர் குடியினன் குட்டுவன் எனவும், குட நாட்டவன் குடவன் எனவும் வழங்குதல் போலப் பொறை நாட்டவன் பொறையனாவன், பொறையர், பெருஞ் சேர லிரும்பொறை, கணைக்கா லிரும்பொறை எனப் பெயர் கூறப்படுவர். பொறைநாடு பிற்காலத்தே குறும்பொறை நாடு, நெடும்பொறைநாடு என இரண்டாகப் பிரிந்தது; குறும் பொறை நாடு இப்போது குறும்பர் நாடு தாலுகா என்ற பெயருடன் மலையாள மாவட்டத்திலுள்ளது. கொச்சி நாட்டின் வடபகுதி நெடும்பொறை நாடு என விளங்கினமை கல்வெட்டுக்களால்1 தெரிகிறது. ஒரு காலத்தில், கொங்கு நாடு முற்றும் சேரமன்னர் ஆட்சியில் இருந்தமையின், கொல்லிமலை பொறையனுக்கு உரியதாய்ப் புலவராற் பாடப் பெற்றதெனக் கோடல் வேண்டும். இதன் கீழ்ப்பகுதி வல்வில் ஓரி என்பானுக்கும் தென்பகுதி மழவர்க்கும் உரியன. கொல்லி மலை நாற்றிசையிலும் சுவர் வைத்ததுபோல் மலைமுகடு கொண்டிருப்பது பற்றிப் பிற்காலத்தார் சதுரகிரி யென வழங்குவா ராயினர்; அதன்கண் உள்ள அறப்பள்ளி யீச்சுரர் கோயில் சிறப்புப் பெற்றது, இதன் மேலைப் பகுதியிலுள்ள கொல்லியம்மன் கோயிலிற் காணப்படும் தேவியுருவைக் கொல்லிப்பாவை யெனக் கருதுபவரும் உண்டு. கொல்லிப் பாவை பூதத்தால் புதிது புணர்த்த பொற்புடைய பெண் வடிவம் என்றும், இதன் நிலைபேறுடைமையைக் கொல்லிக் குடவரை யகத்துக் “கால் பொருது இடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன்று எறியினும், ஊறுபல தோன்றினும், பெருநிலங் கிளரினும் திருநல வுருவின், மாயா வியற்கைப் பாவை1” என்றும் இவ்வாசிரியரே கூறுதல் காண்க. அதனால் இப்பாவையை ஈண்டு நிலையாண் பாவை யென்றார் என அறிக. தமிழகத்திலுள்ள செல்வாக்குடைய கோயில்களுக்கும் மூதூர்களுக்கும் வடமொழிவாணர் புராணம் புனைந்து புணர்த்த போது இக்கொல்லிப் பாவைக்கும் புராணம் புணர்த் துள்ளனர்; கொல்லிமலையிலுள்ள “தேவரையும், முனிவரை யும், துன்புறுத்த வருகின்ற அவுணரும், அரக்கரும், அப்பாவை யின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும் படி தேவதச்சன் ஆக்கிவைத்த பெண்வடிவம் அவுணரும் அரக்கரும் போதரு காலை அவர் வாடைபட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறி உள்வைக்கப்பட்டது; அது நகைத்துக் கொல்லு மென்பதனைத் “திரிபுரத்தைச், செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்கக் கற்றதெல்லாம் இந்த நகை கண்டேயோ2 என்றதனாலுமறிக” எனப் பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் கூறுவர்.

தலைமைசான்ற அறிவும் ஆண்மையும் உடையனாகலின் தனக்குற்ற நோயின் காரணத்தைத் தானே ஆராய்ந்தும் ஆராய்ச்சிக்கு அகப்படாமை கண்டு கூறலின், ஆனாநோய் என்றான்; பெண்ணொருத்தியின் கட்பார்வையால் உளதாயிற் றெனின், இதுகாறும் கண்டு போந்த மகளிர் பலருடைய பார்வைக்கண் அத்தகைய நோய் தோன்றக் கண்டிலனாகலின், ஆராய்ச்சிக்கு அமையாமை உணர்ந்தாள் என்க. உடற்கண் நோயுற்றவழி அஃது ஒருவருடைய நினைவுமுற்றும் தன்பால் ஒன்றுவித்தல் இயல்பாயினும் காமநோய் போல அறிவை இடையறவின்றி ஈர்த்துக் கொளல் இன்மையின், எஞ் ஞான்றும் அதுவே நினைவாய்க் கலக்க முறுவித்தலால், அழிபடர்க்கலங்கி என்றும், உள்ளுந் தோறும் நோய் பெருகித் தோன்றக் காண்டலின் காமம் கைம்மிக என்றும், வேறு நினைவு செயல்கள் உள்ளத்தில் நிகழாமையின் கையறு துயரம் என்றும், துன்பத்துள் துப்பாதலே நட்புக்கு இலக்கண மாதலை நன்கறிந் தொழுகும் நனி நாகரிகனாகிய நண்பன் தன் துயர்நிலை கண்டும் அது செய்யாமைக்கு வருந்திக் கூறுவான், காணவும் நல்காய் என்றும், உயிர்த்துணையாக நிற்கும் அறிவுடைத் துணைவன் உயிருற்ற நோய்க்குத் துணை செய்யானாயின், அதற்குக் காரணம் ஆராயப்படுமாகலின் ஆயின் என்றும், அவ்வாராய்ச்சிப் பயனாகத் தன்னைக் கண்ணால் நோக்கி மனத்திண்மையைச் சிதைத்து நோயுற்று வருந்தச் செய்த நங்கை தன்னைக் கொல்வது கருதிவிட்டாள் என்றும், இயைபில்லாத தன்னை அவள் கோறற்குக் காரணம் தான் பண்டு செய்த வினை யெனத் தெளிந்து அதனை நோவதல்லது, எத்தகைய துன்பம் வரினும், அதனை முற்பட நோக்கிக் காத்தும், துணை புரிந்தும், துடைத்தளிக்கும் உயிர்த்துணையான பாங்கனை நோதல் கூடாது என்றும் தெளிந்தமையின், நிலைமாண் பாவையன்னோள் கொலை சூழ்ந்தனள் எனவும், நோகோ யான் எனவும் தலைமகன் கூறினான். விரியுளை நன்மான் பரிசில் பெற்று வரும் பாணர் ஆற்றுப் படுப்ப, அவர் குதிரைகளின் குளம்பால் அமைந்த சிறுநெறி பற்றி இரவலர் இனிது சென்று அப்பரிசில் பெறுதல் கூறியது, யான் குறிக்கும் இயலும் இடமும் பற்றி நீ சென்று காணின் யான் உற்ற துயர் நிலையின் இயல்பை நீ நன்கு அறிவாய் எனப் பாங்கனைக் குறிப்பாய்ச் செலுத்துதற் பொருட்டு, தேனுடை மலைப்பக்கத்துத் தெய்வம் எழுதிய பாவை இன்பம் நல்கும் இயல்பிற்றாக, அப்பாவை போலும் அவள் எனக்கு இன்பம் நல்காது துன்பம் உறுவித்தற்குக் காரணம் என் ஊழ்வினை என்பது தோன்ற, தேனுடைக் கவாஅன் தெய்வம் எழுதிய நிலைமாண் பாவை எனச் சிறப்பித்தான் என அறிக.

“பண்பிற் பெயர்ப்பினும்7” என்ற நூற்பாவில் வரும் “பரிவுற்று மெலியினும்” என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி “இது பகற்குறியிற் பரிவுற்றது” என்பர் நச்சினார்க் கினியர்.

அறுவை வாணிகன் இளவேட்டனார்


இல்லிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில் தலைமகன் பொருள்வயிற் பிரிய வேண்டிய கடமை யுடைய னாய்த் தலைவிபால் விடைபெற்றுச் சென்றான். அவனது பிரிவு தலைமகட்குப் பெருவருத்தத்தையும் ஆற்றாமையையும் பயக்கும் எனத் தோழி நினைத்தாள். இதுகாறும், துன்பமேயறியாத இன்பவாழ்விலே தலைமகள் இருந்து போந்ததை அவள் உட னிருந்து நன்கு அறிவாளாகலின், தோழி அவ்வாறு நினைப்பது இயல்பே; அதனால், தலைவியின் ஆற்றாமை காணப் பொறாத அத்துணைப் பேரன்பினளான தோழி மிக்க துயரம் எய்தி மேனி மெலிய லுற்றாள். அவளுடைய மெலிவு கண்டதும் தலைமகள் அதற்குக் காரணம் அறிய விழைந்தாள். அப்போது, தோழி தன் கருத்தை வெளியிட்டாள். தோழியின் உண்மையன்பு தலைமகள் உள்ளத்தை உருக்கிற்று; தலைமகன் பிரிவாற் பிறந்த தளர்ச்சி நீங்கி அதனை ஆற்றி யிருத்தற்கேற்ற வன்மை தலைவியின் மனத் தின்கண் உருவாயிற்று. அவள் தோழியை அன்புடன் நோக்கி, “தோழி, காதலரது பிரிவை ஆற்றேன் என எண்ணற்க; அவர் சென்ற சுரம் வேனில் வெம்மை மிக்கதாயினும் அதன்கண் பெருங்கற்களிடையே அமைந்த நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை முகந்து கொண்டு களிறு தன் காதற்பிடிக்கு நல்குவான் எதிரோடும் என்பர்; அன்றியும் அச்சுரத்தின்கண் வேனிலில் வாடிய ஓந்தியின் முதுபோத்து நிலத்திடை யியங்க மாட்டாது வருந்திப் பின்னர்ப் பாணர் கவைக்கடை கொண்டு நிறுத்திய யாழ்போல ஓங்கி நின்று யாமரத்தின் மேனிலையை அடையும் தொழிலை யுடைய தாகும்; அவர் மேற்கொண்ட பொருட் பிரிவும் பிறர்க்கென முயலும் பேரருள் நெறி பற்றியது;அதனால் யான் அவர் பிரிவை ஆற்று கிற்பேன்” என்று கூறினாள்.

தலைவியின் இக்கூற்றின்கண், தலைமகன் பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமுடையனாய்ப் பொருள் கருதிப் பிரிந்தமையின், அதனை விரைய முற்றிக்கொண்டு போதருவன் என்றும், அவன் பிரிவை ஆற்றகில்லே மாயினும் அவன் தெளித்த சொல்லைத் தேறியிருப்போமாக என்றும், பெருங்கை யானையின் செயல்மேல் வைத்தும்; ஓதி முதுபோத்தின் தொழிலைக் காட்டி யும்; உரைத்த குறிப்புக் கண்டு வியந்த அறுவை வாணிகன் இளவேட்டனார் அவற்றை இப்பாட்டின் கண் தொடுத்துப் பாடுகின்றார்.

1கல்லுற் றீண்டிய கயன்அற வாங்கிய
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு2
பெருங்களிற் றியானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை
வேனில் 3ஓதி நிறம்பெயர் முதுபோத்துப்
4பாண்யாழ்க் கடையின் ஓங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய
5நாம்வெங் காதலர் சென்ற வாறே

இது, பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.

உரை
கல்லுற்று ஈண்டிய கயன் அற வாங்கி - கற்பாறை யிடத்தே உண்டாகிய பள்ளத்தின்கண் சேர்ந்துள்ள நீர் முற்றவும் முகந்து; இரும்பிணர்த் தடக்கை நீட்டி - கரிய சருச்சரை பொருந்திய பெரிய கையை மேலே நீட்டி; நீர் நொண்டு - நீரைத் தாங்கிக் கொண்டே; பெருங்களிற்றியானை பிடி எதிர் ஓடும் - பெரிய களிறாகிய யானை நீர்வேட்கையால் மெலி வுற்று வரும் பிடியானையின் எதிரே சென்று சேரும்; கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை - கானம் பசையற வாடியத னால் வறட்சி மிக்க சுரத்தின்கண் இயங்கமாட்டாது; வேனில் ஓதி நிறம் பெயர் முதுபோத்து - வேனிலால் வருந்திய பச் சோந்தியின் நிறம் மாறும் முதிய ஆண்; பாண் யாழ் கடையின் ஓங்கி - பாணரது யாழும் அதைத் தாங்கி நிற்கும் கவைக் கடையும் போல வுயர்ந்து; பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழில - பக்கத்தே நிற்கும் நெடிய நிலையினையுடைய யாமரத்தின் மேலே ஏறும் தொழிலை யுடையவாகும்; பிறர்க் கென முயலும் பேரருள் நெஞ்சமொடு - பிறர் நலம் பெறற் பொருட்டு உதவுதற்கென முயன்று செய்யும் மிக்க அருள் நிறைந்த நெஞ்சத்தால்; காமர் பொருட்பிணி போகிய - விரும்பத்தக்க பொருள் குறித்துப் பிரிந்து சென்ற; நாம் வெங்காதலர் சென்ற ஆறு - நாம் விரும்பும் காதலராகிய தலைவர் சென்ற வழிகள் எ-று.

களிற்றியானை, தடக்கை நீட்டி, கயன்அற வாங்கி நீர் நொண்டு பிடி எதிர் ஓடும், கடத்திடை, ஓதிமுதுபோத்து, யாழ்க்கடையின் ஓங்கி, யாஅம் ஏறும் தொழில, காதலர் சென்ற ஆறு எனக் கூட்டி வினை முடிவு செய்க. கல் - பெரும் பாறை, ஈண்டிய கயன் - பல வழியானும் நீர்போந்து கூடுதலா லாகிய நீர்நிலை. வாங்குதல் - முகத்தல், தூங்கிய வழி நீர் முற்றும் கீழே போய்விடு மாகலின் தடக்கை நீட்டி என்றார். நொள்ளல் - கொள்ளுதல், “புன்னை நுண்டாது பொன்னின் நொண்டு1” என இவ்வாசிரியரே பிறாண்டும் வழங்குதல் காண்க. பெருங்களிற்றின் செயலால் பிடியானைபால் மெலி வுண்மை பெற்றாம். வெம்புதல் - வெம்மையால் பசுமையறப் புலர்ந்து கெடுதல். வேனில் - வெயிற்காலம் ஓந்தி ஓதி என நின்றது. இருக்கும் சூழலுக் கேற்ப நிறம் மாறுதல் பச் சோந்தியின் செயலாதல் நிறம் பெயர் முதுபோத்து என்றார். போத்து - ஆண். பச்சோந்தி ஓங்கி நிற்குங்கால் உடல் யாழ் போலவும், வால் கோடு போல் வளைந்தும், பின்கால் யாழின் கடைபோலவும் இருத்தலின் பாண் யாழ் கடையின் ஓங்கி என்றார். இவ்வுவமை வடிவோடு வண்ணமும் ஒத்திருத்தல் காண்க. யாழ்க்கடை’ “பிறை பிறந்தன்ன பின்னேந்து கவைக் கடை2” என்பதனால் அறிக. யா - ஒருவகை மரம்; இதனை ஆச்சாமரம் என்றும் கூறுப. யா, யாம் எனவும் வரும்; “உரற் கால் யானை ஒடித்துண் டெஞ்சிய யாஅ வரிநிழல்3” என்றும், “பெருங்கை வேழல் மென்சினை யாஅம் பொளிக்கும்4” என்றும் வருவன காண்க. காமர் - விருப்பம். தன்னை விழைந்து செய்வாரைத் தனக்கே அடிமையாய் அவர் நினைவு, சொல், செயல்கள் யாவும் தன்னையே நோக்கி நிற்கப் பிணிக்கும் தகுதிபற்றி, பொருளைப் பொருட்பிணி என்றார். வெங் காதலர். வெம்மை - வேண்டல்.

தனது ஆற்றாமையை எண்ணித் தோழி ஆற்றாது மெலிந் தது கண்ட தலைமகள், முதற்கண், அவட்குத் தான் ஆற்றா ளாவது வேண்டாத தொன்று என எடுத்துரைப்பாளாய், நம்மின் நீங்கிப் பொருள் வயிற் பிரிந்த காதலர், ஆண்டுத் தாம் பெற்றது கொண்டு தம் வரவு நோக்கி விரும்பி யுறையும் நம்பால் விரைந்து வருவர் என்பாளாய், கற்களில் உண்டாய பள்ளத்தின் கண் ஈண்டிய நீரை முகந்துகொண்டு களிறு பிடியை நோக்கி எதிரோடும் என்பதுபடக் கல்லுற்று ஈண்டிய கயனற வாங்கி இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர் நொண்டு பெருங் களிற்றியானை பிடியெதிர் ஓடும் என்றாள். அவர் குறித்த பொழுதில் வருதல் ஒருதலையாயினும், வருந்துணையும் ஆற்றியிருக்கும் திறம் யாதோ எனின், அவர் பிரிவு தரும் தனிமைத் துயரால் ஆற்றகில்லே மாகிய யாம், அவர் பக்கமொழியாக இன்புற இசைத்த சொல்லைப் பற்றுக் கோடாக மேற்கொண்டு ஆற்றியிருத்தல் கூடும் என்பது பட; வேனிலால் வெம்பிய கடத்திடையே இயங்கமாட்டாத ஓதி யின் முது போத்துக் கவைக்கடை தாங்க நிற்கும் பாண் யாழ் போல எழுந்து பக்கத்து யாமரத்தைப்பற்றி ஏறாநிற்கும் என்பாள்; கானம் வெம்பிய வறங்கூர் கடத்திடை. வேனில் ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் பாண் யாழ்க் கடையின் ஓங்கிப் பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழில என்றும் கூறினாள். அது கேட்டு உவகையால் முகமலர்ந்த தோழியின் குறிப்புப் பொருள் முற்றவும் முடியுந்துணையும் அது தன் பிணிப்பு, விடாதென்பது தோன்ற நின்றமை கண்ட தலை மகள், நம் காதலர் பிரிந்தது பிறர்க்கு உதவுதற் பொருட் டெழுந்த பேரருளாலன்றிப் பொருட்காதலால் அன்று என் பாளாய், பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சமொடு, காமர் பொருட்பிணி போகிய நாம் வெங்காதலர் என்றாள். எனவே; எவ்வாற்றால் நோக்கினும் ஆற்றியிருத்தலே நமக்கு அறமாகலின் யான் ஆற்றேன் என எண்ணி அவலம் கொள்ளற்க என்றாளாம். இதனால், தலைவி ஆற்றாமை தாங்கும் மதுகை உடையளாவது, பயன்.

ஒளவையார்


களவுநெறியில் காதலுறவு கொண்ட தலைமக்களுள், தலை மகன், தோழியின் துணைபெற்றுத் தலைமகளை அவளறியக் கண்டு அளவளாவி இன்புறும் செவ்வி பெற்றபின், தோழியும் தலைமகளும் சென்று விளையாடும் பூம்பொழிலின்கண் ஓரிடத்தைக் குறிக்கொண்டு, அங்கே தலைமகளைத் தலைப் பெய்து தங்கள் உள்ளத்தில் முளைத்து வளர்ந்து வரும் காதற்பைங் கூழைக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வந்தான். இவ்வண்ணம், சில நாட்கள் கழியவும், தலைமகளுக்குத் தலைமகன்பால் உண்டாகிய காதலன்பு பெருகி அவனைப் பிரிவின்றிக் கூடியிருக்கும் திறத்தை அவாவத் தலைப்பட்டது. பகற்போதில் குறியிடத்தே தலைமகனைக் கண்டு பெறும் இன்பத்தையே நினைந்து, எப்போதும் அவனோடே இருத்தற்கு எழுந்த விழை வால், அவனையின்றித் தனித்துறையும் எவ்விடமும் அவட்குப் பொலிவின்றி இருந்தது. செய்குறிக்கண் தலைமகனைக் காணு மிடத்தே தோன்றும் இன்பம், அவன் பிரிந்தவழி மனநோயாய் மாறித் தலைமகளை வருத்தத் தொடங்கிற்று. பகற்போதில் ஊர்ப்புறத்தேயுள்ள கானற் சோலையும், மணற்பரப்பும், பூம் பொழிலும் தலைமகட்கு விளையாட்டிடமாய்த் தலைமகனைத் தனித்துக் கண்டு மகிழும் இன்ப நிலையமாய் விளங்கினவெனி னும், தலைமகன் நீங்குங்கால் அவை தலைமகட்குத் தனிமை யுற்றுத் துயர்தரு வனவாயின. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலர்வது காதல் நோய் என்பர் சான்றோர்; பகற்போதில் கூடியிருந்து மகிழ்விக்கும் தலைமகன், இருண் மாலை எய்துங்கால் தன்னூர்க்குச் சென்று சேர்வன். மாலைப் போதில் மலர்ந்து சிறக்கும் காதல், தலைமகனின் நீங்கித் தலை மகள் தன் மனைக்குச் செல்லும்போது அவட்குப் பெருவருத் தத்தைச் செய்யும்; அவனொடு கூடி ஆடிய இடங்களைக் காணின் அவனது கூட்டம் நினைவிற் போந்து ஒரோவழி இன்புறுத்துவதுண்டு. மாலையிருள் அவ்விடங்களைக் கட்புல னாகாவாறு மறைத்தொழிதலின் தலைமகள் உள்ளத்தே ஆற் றாமை மிகுந்து வருத்தும் ஒருநாள், பூம்பொழிலின்கண், ஒருபால் தலைமகனொடு கூடி யிருந்த தலைமகட்குப் பகற்போது கழிந்தது தெரியாது போயிற்று. மாலைப்போது நெருங்குவது கண்ட தலைமகன், அவள்பால் விரைந்து விடைபெற்றுச் செல்வா னாயினான். தலைமகட்குக் கலக்கமும், கையறவும் பெருகின; தோழியும் ஆயமகளிரும் உடன்வரச் சென்று தன் மனை யடையும் தலைமகள் சுற்றுப் புறங்களை நோக்கினாள். கழிகளில் மலர்ந்து நெய்தல்கள் கூம்பின; மரங்களின் நிழல் கீழ்த் திசையில் நீளத் தொடங்கின; ஞாயிறும் மேற்றிசையில் நிற்கும் மலைவாயில் மிகவும் சிவந்து தோன்றிற்று; பகற்போதில் வெம்மையுற்றிருந்த நிலம் தணிந்து குளிர்ந்தது; பூக்கள் நிறைந்த கானற்சோலை பொலி விழந்து நின்றது; தன்பால் விடைபெற்றுச் சென்ற தலைமகனுடைய தேரும், சேய்மையில் ஒரு புள்ளி போலத் தோன்றி மறைவ தாயிற்று. அவனோடு கூடி மகிழ்ந்த பூம் பொழிலை நோக்கினாள்; இப்பால் தான் செல்லும் ஊரை நோக்கினாள்; மாலையின் மயங்கிருளால் அவையும் தெளிவான தோற்ற மின்றிப் பொலிவிழந்து நின்றன. எல்லாம் மறைவது காணக்காண, மறைந்தொழியும் ஊரும் பொழிலும் எனக்கு எத்துணைத் துன்பத்தைச் செய்யுமோ? என் நிலை யாதாகுமோ? என எண்ணி வருந்தலானாள்.

தலைமகளின் இவ்வருத்தத்தை அவளுடைய பெண்மை மனம் எய்தி உழக்கும் திறத்தைத் தலைமகனது ஆண்மைமனம் அறிந்து கோடல், இருமனங்களும் ஒருமனமாய் இயைந்து இல்லிருந்து இன்ப வாழ்வு நடாத்துதற்குப் பெருந்துணை செய்யு மெனக் கண்ட ஒளவையாரது புலமையுள்ளம், பெண்மை நலம் குன்றாவகையில் இப்பாட்டினை உருப்படுத்தித் தந்துள்ளது.

நெய்தல் கூம்ப நிழல்குணக் 1கொழுகக்
கல்சேர் மண்டிலம் 2சிவந்துநிலம் தணியப்
பல்பூங் கானலும் அல்கின் 3றன்றே
இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத் தியாம்தொழு தொழியத்
தேரும் செல்புறம் மறையும் 4ஊரொடு
யாங்கா வதுகொல் தானே தேம்பட
5ஊதுவண் டிமிருங் 6கோதை மார்பின்
மின்னவிர் 7கொடும்பூட் கொண்கனொடு
இன்னகை 8மேஎயாம் ஆடிய பொழிலே.

இது, பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

உரை
நெய்தல் கூம்ப - நெய்தற் பூக்கள் இதழ் குவியவும் ; நிழல் குணக்கு ஒழுக - மரமுதலியவற்றின் நிழல் கிழக்கு நோக்கி நீண்டு செல்லவும்; கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய - மேற்கு மலையைச் சார்ந்த ஞாயிறு தன் பகலொளியைச் சுருக்கிச் சிவந்து தோன்றவும் நிலம் குளிர்ப்பெய்தவும்; பல் பூங் கானலும் - பலவாகிய பூக்களையுடைய கானற்சோலையும்; அல்கின்று - இருள்பரவுதலால் பொலிவு குன்றுவதாயிற்று; இனமணி ஒலிப்ப - தேரிற் கட்டிய மணிகள் ஒலிக்க; பொழுது பட - பொழுது மறைதலால்; பூட்டி-குதிரை பூட்டப்பட்டு; மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழிய-மெய்ம்முற்றும் நரப்புக்கால் தோறும் பரந்து நிலவும் காதல் வேட்கையால் யாம் கைகூப்பித் தொழுது வழிபட்டு நிற்க; தேரும் செல் புறம் மறையும்-தலைமகன் ஏறிச் சென்ற தேரும் பின்புறம் தோன்றாதபடி மறையா நிற்கின்றது; ஊரொடு - நாம் உறையும் ஊரொடு கூடிய; தேம்பட ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின் - தேன் உண்ணும் வண்டு இசைபாடும் மலர்மாலை யணிந்த மார்பின்கண்ட; மின்னவிர் கொடும்பூண் கொண் கனொடு-ஒளி விளங்கும் வளைந்த பூணார மணிந்த தலை மகனைத் தலைப்பெய்து; இன்னகை மேஎய்-இனிய மகிழ்ச்சி கொண்டு; யாம் ஆடிய பொழில் - யாம் விளையாடிய பொழில்; யாங்காவது கொல் என்னவாகுமோ, அறியேன் எ.று.

நெய்தல் கூம்ப, நிழல் ஒழுக, மண்டிலம் சிவப்ப, நிலம் தணிய, கானலும் அல்கின்று; பொழுதுபட, ஒலிப்ப, பூட்டி ஒழிய, தேரும் செல்புறம் மறையும்; ஊரொடு பொழில் யாங்காவது கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நெய்தல் விடியலில் விரிதலும் மாலையிற் கூம்புதலும் உடைமைபற்றி நெய்தல் கூம்ப என்றார். கூம்புதல் - இதழ்குவிதல். முற்பகலில் மேற்கிலும் பிற்பகலில் கிழக்கிலும் நிழல் ஒழுகுவது இயல்பு என்க. கல் - மலை. மண்டிலம், ஈண்டு ஞாயிற்றின் மேற்று. சிவப்ப எனற்பாலது சிவந்தெனத் திரிந்தது; “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய1” என்பதனாலமையும். ‘அன்றும்’ ‘ஏயும்’ அசை. பொழுது - மாலைப்பொழுது; உடம்பின் எலும்பு, தசை, நார், நரம்பு ஆகிய எல்லாக் கூறுகளிலும் பரந்து நிற்குமாறு தோன்றுதலின், மெய்ம்மலி காமம் என்றார். தொழுதல் - கைப்பி வணங்குதல், விடைதந்து - வழிவிடுவோர் செய்ம்முறை; ஊரொடு கூடிய பொழி லாகலின் யாங்காவது என்றார். கோதை, பூமாலை. மார்பிடை வளைந்து கிடத்தலின் கொடும்பூண் எனப்பட்டது. “கொடும் பூண் எழினி1” எனப் பிறரும் கூறுதல் காண்க. இன்னகை - இனிய உவகை.

நெய்தல்நிலத் தலைமகள் கானற் சோலையிடத்துத் தலைமகற்கு விடையளித்து அவன் தேரிற் செல்புறத்தையும், அவனொடு கூடி விளையாடிய பொழிலையும் அதனை யடுத்திருக்கும் தனது ஊரையும் நோக்கி நின்று கூற்று நிகழ்த்து தலின், முதற்கண் கானற்சோலையிடத்து மாலைப்போதின் மயங்கிருள் வரவு கண்டு கூறுவாள், நெய்தல் கூம்ப என்றும், நிழல் குணக்கு ஒழுக என்றும் கூறினாள். நிழல் நோக்கிய வழி அதனைத் தோற்றுவிக்கும் ஞாயிற்றின் செலவு நினைவிடை எழுதலின், அதனை நோக்கி, கல்சேர் மண்டிலம் சிவந்து என்றும், அப்போது தண்ணிய தென்றல் மேனிமேல் வீசுதல் உணர்ந்து, நிலம் தணிய என்றும் கூறினாள். சிறிது போதில் கானற்சோலையிடத்துப் பூக்கள் ஒளிமழுங்க இலைச் செறிவின் பசுமை மாறி இருள் நிறம் படரத் தலைப்படக் கண்டு பல்பூங் கானலும் அல்கின்று என்றாள். அல்குதல் - சுருங்குதல்; ஈண்டுப் பொலிவு, குன்றுதல் மேற்று. களவுக் காலத்தில் பகற்குறிக்கண் வந்து பயிலும் தலைமகன் தேரும் குதிரையும் ஊர்ந்து வருதல், அவ்வொழுக்கத்துக்குத் தீது பயவாமையின் தேரூர்ந்து வந்தமை சுட்டினாள். “தேரும் யானையும் குதிரையும் பிறவும், ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப1” என ஆசிரியர் உரைப்பது காண்க. தலைமகன் பொழிற் கண் விளையாட்டயர்ந்த போது தேர் பூட்டிவிட்டிருந் தமையின் பொழுதுபட வந்த மாலையில் அவன் புறப்பட்டுச் சென்றதை இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி என்றும், உடனிருந்து விளையாடியபோது தோன்றாத காதற் காமம், பிரிவின்கண் மிக்குத் தோன்றி மெய்ம்முழுதும் பரவி வெதுப்பினமை தோன்ற மெய்ம்மலி காமம் என்றும், அதனாற் கையறவு மிகுந்து சொல்லாடற்கு நா எழாமையின் கையெடுத்துத் தொழுது விடைதந்தமை விளங்க, யாம் தொழுது ஒழிய அவர் செல்வாராயினர் என்றும், கானற் சோலையின் கவின் குன்றிய தொப்ப அவனது தேர் சேய்மை யிற் புள்ளிபோல் தோன்றி மறையக் கண்டமை புலப்படத் தேரும் செல்புறம் மறையும் என்றும் உரைத்தாள். காதலுறவு முறுகி வளரும் களவுநெறியில், தலைமகட்கு உயிர்ச்சார்பு அவள் காதலனான தலைமகனும், உடற்சார்பு அவள் பிரிந் துறையும் பெருமனையு மாகலின். உயிர்ச்சார்பு பிரிந்து மறைதலும் உடற்சார்பாகிய பெருமனை யுள்ள ஊரை நோக்கி னாள் என்பார், ஊரொடு என்றும், அது தனக்கு இன்பம் தரும் இடமாகாமை நினைதலும், யாங்காவது கொல் என்றும் இயம்பினாள். ஊரினும் அதனை அடுத்த பொழில், காதலனொடு கூடி விளையாடி இன்புறுதற்கு இடமாயின மையின், அதனைக் கொண்கனொடு இன்னகை மேஎய் யாம் ஆடிய பொழில் என்று இறுதிக்கண் வைத்துச் சிறப்பித்தாள்; தலைமகனோடு விளையாடிய பொழிலைக் காணின் தலைமகனைக் கண்டாற் போலும் நினைவு தோற்று வித்து இன்பம் செய்தலில் ஊரினும் சிறப்புடைத்தாயினும், மாலை வந்த மயங்கிருள் பரந்து மறைத்தொழிதலின் அதுவும் இதுபோது ஊர்போல இன்பப் பயன் செய்யாமைபற்றி ஊரொடு பொழில் யாங்காவது கொல் என்றாள். காதலனொடு விளையாட்டயர்ந்த போது அவனுடைய கோதை மார்பும் அதனை மணந்து கிடந்த கொடும்பூணும் இன்பம் செய்தது நெஞ்சின்கண் நிலைபெறுதலின் அவற்றை விதந்தோதினாள். தேன் ஊறுதலால் வண்டு வேண்டுமளவும் உண்டு இமிரும் மாலையெனக் காதலன் மார்பிற் கோதையைச் சிறப்பித்தாள். தானும் அழிவில் கூட்டத்தால் அவன் அகன் மார்பு அடைய முயங்கி இன்பம் பெறல் வேண்டுமென உள்ளத் தெழும் ஆர்வ மிகுதி புலப்படுத்தற்கு.

நாற்றமும் தோற்றமும்1” என்ற நூற்பாவில் வரும் “நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்” என்பதன் உரையில், “நயம்புரி யிடத்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழாநின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க; அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவும் கூறுதலும், தலை மகன் பகற்குறிக்கண் நீங்கிய வழிக் கூறுதலும் எனப்பலவாம்’ என்று உரைத்து, இதனைக் காட்டி, “இது பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது” என்பர் இளம்பூரணர்.

கண்ணகனார்


களவின்கண் ஒழுகும் தலைமகன் தலைவி யுள்ளத்துக் காதல் மாண்புறுவது கருதி விரைய வரைந்து கோடலை மேற் கொள்ளாது நீட்டித்து வந்தான். தலைவிபால் உளதாய காதல் மிகுதியால் தோழி அவனை வரைவுகடாவுவளாய்க் குறிப் பாகவும் வெளிப்படையாகவும் பன்முறையும் தகுவன கூறினாள். வரைவு நீட்டிக்கும் வகையில் தலைமகற்கு நாடுகாவல் பற்றியும் வினைபற்றியும் பிரிவுகள் தோன்றி இடையீடு செய்தன. இவ் வாற்றால் தலைமகட்கு ஆற்றாமை மிகுதலும் தோழி செங்கடு மொழிகளால் அவளைத்தெருட்டி “அன்புதலை யடுத்த வன் புறை1” யாலும் பிறவாற்றாலும் தெருட்டியது போலத் தலை மகனையும் அச்செங்கடுமொழியால் சில கூறி வரைவு கடாவக் கருதினாள். ஒருநாள் பகற்போதில் தலைமகன் குறிவழி வந்து நின்றானாக அவனைத் தோழி கண்டாள். அவனை நெருங்கி வணங்கிநின்ற தோழி, “வெற்பனே, நன்மை கருதிச் செய்யும் வினையிடையே தீதும் விளையும் எனச் சான்றோர் கூறுப. பண்டு யாம் நின்னைத் தலைப்பெய்து நினது நட்பினைப் பெற்றகாலத்து இதனை அறியாதொழிந்தேம்; அறிந்திருந்தேமாயின், இன்று எம் பணைத்தோள் எழில் இழந்து மெலிவெய்தியிரேம்; இப்போது தோள் மெலிந்து துயருறுகின்றேம்; இதனை நின்னோடு கூறுவதில் பயனும் இல்லை” என்று கூறினாள்.

இக்கூற்றின்கண், தோழி தலைமகன் முன்னின்று செங்கடு மொழியாற் கூறல், “சிதைவுடைத்தாயினும்” தலைமகட் குள தாகும் உறுகண்ணை ஓம்புதல் அவட்கு இயல்பாதல்பற்றி2 அமைவது கண்ட ஆசிரியர் கண்ணகனார் இதனை இப் பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

3படுமலை அடுக்கத்துக் கலித்த வாழைக்
4கொழுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை
ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத்தொடூஉம்
மெல்விரல்5 மோசை போலக் காந்தள்
வள்ளிதழ் தோயும் வான்றோய் வெற்ப
1நன்றி விளைவும் தீதொடு வரும்என
அன்றுநற் 2கறிந்தன மாயின் குன்றத்துத்
தேமுதிர் சிலம்பின் தடைஇய
வேய்மருள் பணைத்தோள் 3அழியலம் மன்னே

இது, தோழி பகுற் கறி மறுத்து வரைவுகடாயது.

உரை
படுமலை அடுக்கத்துக் கலித்த வாழை - ஒலிக்கின்ற மலைப்பக்கத்தில் தழைத்த வாழையினது: கொழுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை - கொழுவிய மடலிடத்தே தோன்றிய கூரிய வாயுடனே குவிந்த பூ; ஒள்ளிழைமகளிர் இலங்குவளைத் தொடூஉம் மெல்விரல் மோசை போல - ஒள்ளிய இழை யணிந்த மகளிரது விளங்குகின்ற வளையுடனே மெல்லிய விரலிடத்தே செறிக்கும் விரலணி போன்று; காந்தள் வள்ளிதழ் தோயும் - காந்தளின் வளவிய இதழிடத்தே தோய்ந்து கிடக்கும்; வான்தோய் வெற்ப - வான் அளாவிய மலையையுடைய தலைவனே; நன்றி விளைவும் தீதொடு வரும் என - நல்லது விளையுமிடத்துத் தீயதும் உடன் தோன்றும் என்பது; அன்று நற்கு அறிந்தன மாயின் - அப்பொழுதே நன்கு அறிந்திருந்தேமாயின்; குன்றத்துத் தேமுதிர் சிலம்பின் தடை இய-குன்றின்கண் தேன்மிக்க பக்கமலையில் வளர்ந்து திரண்ட; வேய்மருள் பணைத்தோள் அழியலம் மன் - மூங்கில் போலப் பருத்த தோள்கள் மெலிவேமல்லேம் அது கழிந்தது, காண் எ-று.

வெற்ப, நன்றி விளைவும் தீதொடு வரும் என அன்று நற்கு அறிந்தனமாயின், இன்று பணைத்தோள் அழியலம் மன்; அது கழிந்தது, அறியாமையான், தோள் அழிந்து வருந்துவே மாயினோம் எனப் பெய்து கூட்டி வினைமுடிவு செய்க. படுதல், ஒலித்தல். அடுக்கம், மலைச்சரிவுமாம். தொடுதல், செறித்தல். மோசை, விரலிடத்து அணியும் அணிவகை நன்மையுடைய தனை நன்றி என்றார். என, பெயர்ப் பொருட்டாய் என்பது என வந்தது; “வினையே குறிப்பே இசையே பண்பே, எண்ணே பெயரொடு அவ்வறு கிளவியும், கண்ணிய நிலைத்தே என வென்கிளவி1” என்பது காண்க. சிலம்பு, பக்கமலை, தடைஇய, தடவென்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. தோள் அழியலம், சினைவினை முதன்மே னின்றது. ‘மன்’, கழிவுப் பொருட்டு.

பகற்குறிக்கண் தலைமகளைத் தலைப்பெய்வான் போந்த தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு அவன் வரைவு நீட்டித்துப் பல்வகை இடையீடுகளால் வரவும் சுருங்கினமை ஏதுவாகத் தலைமகள் ஆற்றாமை மீதூர்ந்து மேனி வேறுபட்டமை கூறி, அவன் புணர்வு மறுத்து வரைவு கடாவுகின்றா ளாகலின், முதற்கண் தலைமகனது தொடர்பால் விளைந்த நலக்கேட்டை வெளிப்படையாக உரைக்கலுற்று, உள்ளுறையால் அவனது தொடர்புண்டாய திறத்தைக் குறித்தற்கு, மலையடுக்கத்துக் கலித்த வாழையின் கொழுமடல் ஈன்ற குவிமுகை ஆங்குள்ள காந்தளின் வள்ளிதழ் தோயும் என்றாள்; என்றது, சால்புடைய உயர்குடியில் தோன்றிய தலைமைத் தோன்றலாகிய நீ எம் பால் போந்து கூடி இன்னருள் புரிந்தனை என்றவாறு. நல்லோ ருடைய கேண்மையை மேற்கொண்டொழுகும் நல்வினை நன்மை விளைவிக்கும் என்பது ஒன்றே எண்ணினமேயன்றி, நெல்விளைப்பப் பதடியும் உடன் தோன்றுதல் போல, நின் தலையளியாகிய நன்றியொடு எமது நலம் தொலை தலாகிய தீதும் உடன்தோன்றும் என்பதை அன்று அறியே மாயினேம் என்பாள். நன்றி விளைவும் தீதொடு வருமென அன்று நற்கு அறிந்தனமாயின் என்றும், அன்று அறியாது மேற்கொண்ட ஒழுக்கத்தால், இன்று நலந் தொலைவு விளைந்தமை காண் என்பாள், எதிர்மறை வாய்பாட்டால் அறிந்தனமாயின் இன்று பணைத்தோள் அழியலம் மன் என்றும் தோழி கூறினாள். இதனால், அம்பலும் அலரும் பெருக இற்செறிப்பு மிக்கதெனப் பகற்குறி மறுத்தவாறாம். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது.

இடைக்காடனார்


மனைக்கண்ணிருந்து நல்லறம் புரிந்தொழுகும் தலைமகன் இன்றியமையாத தொரு வினை காரணமாகத் தலைவியினின்றும் பிரிந்து சென்றான். வினைவயிற்சென்று ஆண்மை துணையாக அரிய செயல்களைச் செய்து பெறும் புகழினும், ஆண்மகற்குச் சிறப்புப் பிறிதில்லை ஆதலின் அவன் வாழ்க்கைத் துணையாகிய தலைமகள் அதற்கு இயைந்து அவன் பிரிந்து சேறற்கு விடை தந்தாள். மணம்புரிந்த சின்னாட் கெல்லாம் இப்பிரிவு தோன்றின மையின், தலைமகட்கு அப்பிரிவு மிக்க மனநோயினை விளை வித்தது. எனினும், வீறுதரும் வினையாண்மை குறித்த பிரிவாதல் பற்றி அவள் தேறி யிருந்தாளாயினும், அவளது இளமையுள்ளம், உடம்புதரு பணியும், அதற்கு இன்றியமையாத முதலாகிய தாய்மைப் பண்பும் முற்பட்டுத் தோன்றி அலைத்தமையின் பெரு வருத்தம் விளைவித்தது. உண்டியிற் குறைதலும், உடம்புநனி சுருங்கலும், கண்படையின்மையும், அவள் மெய்ப்பட்டுத் தோன்றிக் கையறவு பயந்தன. உயிர்த்துணையாகிய அவளுடைய தோழி, தலைமகள் எய்திய மெலிவு கண்டு வருந்தி ஆற்றி யிருத்தற்கு வேண்டும் அறவுரைகளை அவ்வப்போது வழங்கி வந்தாள். அவளது மேனி மெலிவு தலைமகற்குத் தெரியின்; அவன் வருத்தம் மிகுவன் எனவும், அதனால் அவன் மேற் கொண்ட வினை அவலம் எய்தும் எனவும், அதனால் பழியும் வசையும் உண்டாம் எனவும், பல்வேறு வகையாற் கூறி வற் புறுத்தினாள். பின்னர்ச் சிலநாட்கள் கழியவும் தலைமகட்குக் கண்ணுறக்கம் குன்றினமை காரணமாக மேனி மெலிவு மிகுந்து; பசலையால் விளர்த்தது. கனவொடு மயங்கலும் கையறவு படுதலும் நிகழக் கண்ட தோழி கருத்தில் வெம்மையுற்றுத் தோழி தம்மையின்றி நாம் ஒரு நொடியும் வாழ்தல்அமையேம் என்பதை நம் தலைவர் அறியாரல்லர்; அதனால், மேற்கொண்ட வினை முற்றியவுடனே காலம் தாழ்த்தலின்றி வந்து சேர்வர். வினை செய்யு மிடத்தினின்றும் நீங்கின் நேரே அவர் நம் மனையகம் போதருவரே யன்றி வேறு யாங்கணும் செல்லார். வங்கமேறிக் கங்கையாறு பாயும் வங்கநாடு சென்றிருப்ப ரென்று கருது கின்றனையோ? வேறு எவ்வினை செய்வா ரென்று கருது கின்றனை? காடிடையிட்ட நாடு சில கடந்து சென்ற காதலரது காதன்மையும் நம்பால் அவர்க்குள்ள அருண்மிகுதியும் நீ நன்கு உணர்தல் வேண்டுமெனக் கழறிக் கூறி வற்புறுத்தலானாள்.

தோழியின் இக்கூற்றின்கண், தலைமகனை யின்றி உயிர் வாழ்தலமையாத தலைமகளின் சால்பும், தலைமகனது பேரன்பும் எடுத்துக் கூறி காடிறந்து சென்று கடிதின் வினைமுற்றி வரும் கருத்தின ராகிய காதலரைக் கங்கையாற்றில் வங்க மேறிச் சென்றார் போலக் கருதி வருந்துவதும், நம்மை யறியாதே வேறு வினைமேற்கொண்டு வருதல் தாழ்ப்ப ரென்று எண்ணுவதும் அறிவுடைமை யன்று என வற்புறுத்தும் திறம் கண்ட இடைக் காடனார் அதனை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

தம்மல தில்லா நந்நயந் தருளி
இன்னும் வாரா ராயினும் 1சென்னியர்
தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்
நரம்பிசைத் தன்ன 2இரங்குகுரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ
எவ்வினை செய்வர்கொல் தாமே 3வெவ்வினைக்
கொலைவல் வேட்டுவன் வலைபரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய்நூற்
சிலம்பி யஞ்சினை வெரூஉம்
அலங்கல் உலவையங் காடிறந் தோரே

இது பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

உரை
தம்மலது இல்லா நம் நயந்தருளி - தம்மை யல்லது வேறு பற்றுக்கோ டில்லாத நம்மை விரும்பி மிக்க அன்பு கூர்ந்து; இன்னும் வாரார் - இப்பொழுதும் வருகுவரல்லர்; ஆயின் -அதனை ஆராயுமிடத்து; சென்னியர் - பாண்குடியினர்; தெறலருங் கடவுள் முன்னர் - தாம் செல்லும் வழியின்கண் மாற்றுதற் கரிய தெறலையுடைய தெய்வங்களைக் காணின் அவற்றின் முன்பு தங்கி; சீறியாழ் நரம்பு இசைத்தன்ன - சிறிய யாழின் நரம்பினை இயக்கி இசைத்தாற் போல; இரங்கு குரல் குருகின் - ஒலிக்கின்ற குரலையுடைய நீர்க்குருகுகள் வாழும்; கங்கை வங்கம் போகுவர் கொல்லோ - கங்கை பாயும் வங்கநாடு சென்றிருப்பார் கொல்லோ; எவ்வினை செய்வர் கொல் - அன்றி, வேறே எவ்வினையேனும் மேற்கொண்டு செய்கின்றார் கொல்லோ; வெவ்வினைக் கொலைவில் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப்புறவின் சேவல் - வெவ்விய வினை யாகிய கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையிற்பட்டு அதனை அறுத்துக்கொண்டு ஓடிய காட்டில் வாழும் புறாவினுடைய ஆண்; வாய்நூல் சிலம்பி அஞ்சினை வெரூஉம் - வாயால் நூற்றலையுடைய சிலந்தி கூடமைத்துள்ள மரக்கிளையைக் கண்டு அஞ்சி நீங்கும்; அலங்கல் உலவையங் காடு இறந்தோர் - காற்றால் அசைகின்ற மரக்கொம்புகள் நிற்கும் சுரங்களைக் கடந்து சென்ற காதலர் எ-று.

காடு இறந்தோர், தம்மலது இல்லா நம் நயந்தருளி, இன்னும் வாரார்; ஆயின், கங்கை வங்கம் போகுவர் கொல்லோ, எவ்வினை செய்வர்கொல் என்று கூட்டி வினை முடிவு செய்க. அல்லதில் என்னும் வாய்பாடு, ஈண்டு இன்றி யமையாமை குறித்து நின்றது. ஆயினும் என்புழி உம்மை - இசைநிறை. சென்னியர் - பாண்குடியில் ஒரு வகையினர்; “செவ்வரை நாடன் சென்னியம்1” என்பதனால் அறிக. தெறல் - ஒறுத்தல், வள்ளியோரை நாடி நாடும் காடும் கடந்து திரியும் பாணர், சென்னெறியில் தெய்வமுறையும் கோயிலைக் காணின். அதன் முன் இருந்து யாழிசைத்து வழிபடுவது மரபாதலின், சென்னியர் தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ் நரம்பிசைத் தன்ன என்றார். “பராவரு மரபிற் கடவுள் காணின், தொழாநிர் கழியி னல்லது வறிது, நும்மியம் தொடுத லோம்புமின் மயங்குதுளி, மாரி தலையு மவன் மல்லல் வெற்பே2” என்று சான்றோர் கூறுதலால் அறிக. கங்கையாறு இடையறா நீர்ப்பெருக்குடைமை பற்றி அங்கே நீர்க்குருகுகள் நிலைத்து வாழ்தலால், இரங்குகுரற் குருகின் கங்கை என்றார். கங்கை வங்கம் போகுவர் என்றதற்குக் கங்கையாற்றில் வங்கமேறிச் செல்வர் என்று உரைப்பினுமாம். கங்கை யாற்றில் விடப்படும் வங்கம் ஒருமரத்தாலாகிய தோணி என்றும், அதன்கண் ஒருசிலரே போதல் இயலு மாகலின், யாவரும் எளிதில் விரைவில் போதல் கூடா தென்பதற்குக் கங்கை வங்கம் போகுவர் கொல்லோ என்றார் என்று மாம். “போக்கருங் கங்கைப் பெருநீர் போகும் இரியல் மாக்கள். ஒருமரப் பாணியில் தூங்கியாங்குத், தொய்யா வெறுக்கை யொடு துவன்றுபு குழீஇச், செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து3” என்று சான்றோர் உரைப்பது காண்க. ‘கொல்’, அசைநிலை, எவ்வினை என்புழித் தொக்க உம்மையை, விரித்துக் கொள்க. வடநாட்டு ஆரியரொடு இனிய தொடர்பின்மையின், பண்டைநாளைத் தமிழகம், கங்கை பாயும் வங்கநாட்டோடு கடல்வழியாகத் தொடர்பு கொண்டிருந்தமையின் கங்கைச்செலவு பற்றிய குறிப்புத் தொகை நூல்களிற் காணப்படுகிற தென அறிக. வன் கண்மை யுடையார்க்கன்றிக் கொலைத்தொழில் வாயா மையான், வெவ்வினைக் கொலைவல் வேட்டுவன் என்றார்.

பரிந்து போதல் - அறுத்துக் கொண்டு போதல். புறா என்பது புறவு என வந்தது. “பொறி வரிப் புறவின் செங்காற் சேவல், சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகி, அரிமண லியவிற் பரல்தேர்ந் துண்டு1” என்பதனால், பரலுண்டல் புறவின் செயலெனப் பண்டையோர் கருதினமை பெறப்படும். வாயிடத்தே யூறும் ஒருவகைப் பசையினைக் கொண்டு சிலம்பி வலை தொடுத்தல் பற்றி வாய்நூற் சிலம்பி என்றார். இலையில்லாத உலவைக் கொம்புகளிற் கட்டிய சிலம்பி வலை, புறவின் கண்ணுக்கு வேட்டுவன் விரித்த வலைபோலத் தோன்றி அச்சுறுத்தினமையின் சிலம்பி யஞ்சினை வெரூஉம் என்றார். சினையென்றது சிலம்பியின் வயிற்றினின்று வரும் நூல் என்பாரும் உண்டு.

மக்களினம், ஆணும் பெண்ணுமாய்க் காணப்படினும் இரண்டும் தம்மிற் கூடி ஒன்றையொன்று இன்றியமையாத் துணையாகக் கொண்டு வாழ்வதே சீரிதென்பது பண்டைத் தமிழ்மக்கள் கொள்கை. ஒன்றுக்கொன்று துணையாத லின்றி ஒன்றையொன்று அடிமைப்படுத்தி வாழ்வது மாண்புடைய வாழ்வாகா தென்றற்கே, திருவள்ளுவனார் ஒருவனுடைய மனைவியை அவற்கு வாழ்க்கைத்துணை என்று பெயர் கூறிவற்புறுத்தினார். ஆசிரியர் தொல்காப்பியனார், பெருமையும் உரனும் ஆண்மகற்கு வேண்டுமென யாப் புறுத்துப்2” பெண்மகட்குச் “செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும்3” இன்றியமையா என எடுத் தோதி, ஆண்மகன் மனநிலை கலங்கியவழி, “தாய்போற் கழறித் தழீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப4” என்று சிறப்பித்தார். மனைவாழ்வில் தம்மிடையே ஏற்றத்தாழ்வின்றி ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் துணை யாதல் கொண்டே, இருவரும் மக்களொடு துவன்றி முதுமை எய்துமிடத்தும் பிரிவின்றி யிருந்து சிறந்தது பயிற்றற் குரியர் என்றற்குக், “கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயனே1” என்றார். அறம்புரி மனையின்கண், கணவனும் மனைவியுமாய் வாழ்க்கைத்துணையாகும் இருவர், வாழ்க்கை முடியுங்காறும் பிரியும் இயல்பிலர் என்பது பண்டைத் தமிழர் கொண்ட கொள்கையாதல் இதனால் இனிது உணரப்படும். பிற்காலத்தே தமிழகத்துட் புகுந்த ஒன்றி னொன்று ஒவ்வாத சமயக் கருத்துக்களால் கணவற்கு மனைவியை அடிமையாகவும், விற்கவும் ஒற்றிவைக்கவும் கூடிய பொருளாகவும் கருதும் இழிநிலையும், வீடுபேற்றுக் குரிய மெய்யுணர்வுப்பேறு ஆண்மகற்கே யன்றி, அவன் வாழ்க்கைத் துணை யாகிய மனைவிக்கு இல்லை யென்னும் தீநெறியும் தமிழரிடையே பரவித் தமிழரின் நேரிய பண்பாட்டைச் சீரழித்தன; அதன்பயனாகத் தமிழரின் உரிமையுணர்வும், மானநோக்கும், வளர்ச்சியும் நிலைபேறு கொள்ளாமையால், இன்று தமக்கென ஒன்றின்றிப் பிறர் ஏவல்வழி நின் றொழுகும் கீழ்மை, அவரது வாழ்வில் நிலைத்த இடம் பெற்றுவிட்டது. நிற்க, தலைமகன் தன்னை வாழ்க்கைத் துணையாக வரைந்து மணம்புரிந்து கொண்டானாயினும், தனக்கு அவள் வாழ்க்கைத்துணை யானமையை நெஞ்சில் நிலைபெறக் கொண்ட நீர்மையால், தலைமகள் தனக்கு அவனையின்றி வாழ்வில்லை என்பதை நினைவுறுத்துவாள். தம்மலது இல்லா நம் என்றும், தன்னை யின்றி நாம் உயிர் வாழ்தல் அமையேம் என்பதை அவரும் நன்கு உணர்ந்துளார் என்பாள், நம் நயந்து என்றும், அதனால் நமக்கு அவரது அன்பும் தலையளியும் இடையறவின்றி இருத்தல் வேண்டும் என்றற்கு அருளி என்றும், அப்பெற்றியோர் இதுகாறும் வந்திருக்க வேண்டியவர் இன்னும் வந்திலர் என்றும் சொல்லி வருந்தினாள். அவள் கூற்றைக் கொண்டெடுத்து மொழிதலின் இன்னும் வாரார் என்றும், வாராமைக்குக் காரணம் யாது என ஆராய்தல் வேண்டும் என்பாள், ஆயின் என்றும் தோழி கூறினாள். இன்னும் வாராமையின் விரைவில் வருதற்கில்லாத மிக்க சேய்மையில் சென்றிருத்தல் ஒன்று; காற்றினும் கடிதாய்ச் செல்லும் விரைபரி பூட்டிய தேர் இயங்கமாட்டாத நீர்ப் பரப்பிலே சென்றிருத்தல் ஒன்று; “கடல் ஓடாக் கால்வல் நெடுந்தேர்1” என்ப சான்றோர்.

இவ்விருவகைக் கூறும் பொருந் திய நிலம் அறிந்து கூறுவாளாய், கங்கை வங்கம் போகுவர் கொல்லோ என்றாள். தலைமகன் பிரிந்த காலத்துத் தான் நீரற்ற நெடுஞ்சுரங் கடந்து செல்வதாகக் கூறினான் என்பாள், அலங்கல் உலவையங் காடு இறந்தோர் என்றும், அங்கு வெவ்வினை புரிந்தொழுகும் வேட்டுவரும், பரற்கற்களை யுண்டு வாழும் புறாக்களுமே வாழ்தல் உண்டென்றற்கு, வெவ்வினைக் கொலைவல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப்புறவின் சேவல் என்றும், வேட்டுவன் கொலை வல்லுந னாயினும் அவனுடைய வலைபுறவின் சேவலைத் தானும் மீளாவாறு தடுத்தற் குரிய வலியில்லது என இகழ்வாள், வலைபரிந்து போகிய கானப்புறவின் சேவல் என்றும், வலையைப் பரியும் வன்மையுடையதாயினும் சிலம்பி யின் வாய் நூல் வலையைக் கண்டு அஞ்சி நடுங்கும் என நகையாடிக் கூறுவாள், புறவின் சேவல் வாய்நூல் சிலம்பி யஞ்சினை வெரூஉம் என்றும் கூறினாள். இவ்வாற்றால் கங்கையாறு பாயும் வங்கநாடு சென்றார் என எண்ணுதற்கு இடமில்லை என்றாளாயிற்று; இனி, காலவரம் பின்றி நீட்டித்துச் செல்வதொரு வினை மேற்கொண்டனரோ எனின்; காலத்தோடு படாத வினையே உலகில்இல்லை என்றற்கு எவ்வினை செய்வர்கொல் என்றாள். இறைச்சிப் பொருளால் தலைமகன் குறித்த பொழுதில் தவறாது வருவ ரென வற்புறுத்துகின்றா ளாகலின், தோழி இங்ஙனம் கழறிக் கூறினாள் என அறிக. “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும், வன்புறை யாகும் வருந்திய பொழுதே2” என்பது காண்க. வேட்டுவனது வலை பரிந்து போகிய புறவின் சேவல், சிலம்பின் வாய்நூல் வலை கண்டு வெருவும் என்றது, பண்டு களவின்கண் வரைவு சிறிது நீட்டித்தது கொண்டு நீ பெரிதும் ஆற்றாயாயினமை கண்டுளா ராகலின், இப்பொழுது நீட்டியாது குறித்தபொழுதின்கண் வந்து சேர்வர் என்பதாம். இதனாற் பயன் தலைவி ஆற்றியிருப்பாளாவது.

நக்கண்ணையார்


இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் முதலிய இயற்கைநெறியில் தலைமகளை எய்திக் காதலுறவு கொண்ட தலைமகன், தலைவிக்குச் சிறந்த தோழியை அறிந்து, அவளது அன்புடை நட்பைப் பெற்றா லன்றித் தலைவியைத் தன் வாழ்க்கைக்குரிய காதற்றுணையாகப் பெறுதல் கூடாதெனத் தேர்ந்து; அவளுடைய அந்நட்பினைப் பெறல் வேண்டி முயல்வா னாயினான். தலைமகளின் நிழல்போல் தொடர்ந்து திரியும் தோழி, ஏனை ஆயமகளிரின் கூட்டத்தொடும், இன்றேல் தலைவியொடும் சேர்ந்திருப்பதை யன்றித் தனித்து இயங்கல் இல்லாமை கண்டு தலைமகன் மிக்க ஏமாற்ற மெய்தினான். முன்னர் ஒருமுறைக் கிருமுறை கண்டு பயின்றமை பற்றித் தலைமகளைத் தனித்துக் காண்பதும் தலைமகற்கு இயலா தாயிற்று; இவ்வாற்றால் தலைமகன்பால் பெருங்கலக்கம் உண் டாயிற் றெனினும், தலைமகளை எவ்வகையாலேனும் பெற்றே தீர்தல் வேண்டு மென்றெழுந்த வேட்கையும் ஊக்கமும் அவன் நெஞ்சில் நின்று முடுகின. தலைவியின் இளநலமும், குளிர்ந்த பார்வையும், மென்னடையும், குறுநகையும் உள்ளக்கிழியில் உயர்ந்து தோன்றின; அதனைக் காணுமிடத்து ஒருபால் இன்ப மும், பெறற்கருமை நோக்கி ஒருபால் துன்பமும் எய்தி அவனை அலைத்தன. அதனால், அவன், தன் நெஞ்சினை நோக்கி, “இளமை, விழி, நடை முதலிய நலங்கண்டு, அவள் செய்த குறுநகையால் காதற் குறிப்புடைய ளெனப் பிறழவுணர்ந்து, நெஞ்சமே, நீ வருந்தா நின்றனை; அவள் பெறலரிய ளாகலின், இனி அவ்வருத்தத்தோடே வாழ்ந்து போவாயாக” என்றான்.

தலைமகனுடைய இக்கூற்றின்கண், காதற்பிணி கொண்டு வருந்தும் காளையொருவனது இளமையுள்ளம், காதலியின் பெருநலம் நினைந்து விழைவும், பெறலருமையின் வெறுப்பும் எய்தித் தடுமாறினும்; இழத்தொறும் காதலிக்கும் சூதுபோல் துன்பம் உழத்தொறும் அக்காதலையே நினைந்து கைவிடா தொழுகும் திறம் இனிது விளங்கக்கண்ட நக்கண்ணையார் இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார். ஏடுகளில் இப்பாட்டுப் பாட வேறுபாடு மிக்கிருக்கின்றது.

நோஇனி வாழிய நெஞ்சே மேவார்
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த்
1தீத்தலை எஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
2வைகறை நெய்தல் நெல்லிடை மலர
வண்டுமூசு கழனி ஆர்க்கா டன்ன
காமர் பணைத்தோள் நலம்வீ றெய்திய
3மென்னடை மழைக்கட் குறுமகள்
4சின்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே.

இது, பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல் லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லிய தூஉமாம்; இடைச்சுரத்தின்கண் தலைமகன் நலமுள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது உமாம்.

உரை
நெஞ்சே-; இனி நோ வாழி- இனி நீ நோயிடைக் கிடந்து வாழ்வாயாக; மேவார் ஆரரண் கடந்த - பகைவருடைய கொள்ளற் கரிய அரண்களை வஞ்சியாது வென்றுகொண்ட; மாரி வண்மகிழ் - மழைபோல வழங்கும் வளவிய கள்ளையும்; தீத்தலை எஃகின் - தீயைக் காலும் வேற்படையையு முடைய: சேந்தன் தந்தை - சேந்தன் என்பானுக்குத் தந்தையாகிய; தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி - தேன் பொருந்திய விரிந்த மலரால் தொடுக்கப்பட்ட மாலையையும் சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுமுடைய அழிசி என்பானுக் குரிய; வைகறை நெய்தல் நெல்லிடை மலர - வைகறைப் போதில் நெய்தல்கள் நெற்பயிரிடையே மலர்தலால்; வண்டு மூசு கழனி ஆர்க்காடு அன்ன - வண்டினம் மொய்க்கும் கழனிகளை யுடைய ஆர்க்காடு என்னும் ஊரைப்போல; காமர் பணைத் தோள் வீறு எய்திய - விருப்பம் தரும் பருத்த தோள் நலத்தால் தனிச்சிறப்புற; மென்னடை மழைக்கண் குறுமகள் - மெத் தென்ற நடையும் குளிர்ந்த கண்ணும் உடைய இளமகளின்; சின்மொழித் துவர்வாய் நகைக்கு மகிழ்ந்தோய் - சிலவாய சொற்களை வழங்கும் சிவந்த வாயிடைத் தோன்றும் முறுவல் கண்டு இன்பத்தால் மயங்கினை யாகலான் எ.று.

நெஞ்சே, ஆர்க்காடன்ன, தோணலம் வீறு எய்திய குறுமகள் நகைக்கு மகிழ்ந்தோ யாகலான், இனி நோ, வாழி எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நடையும் கண்ணும் உடைய குறுமகள் என இயையும். மேவார், பகைவர், கொள்ளற்கு அருமை பற்றி ஆராண் என்றார். கடத்தல் என்றதற்கு வஞ்சி யாது பொருது வேறல் என்றே பண்டைய உரைகாரர் கூறினர். மகிழ் - கள்வகை; உண்டாரை மயக்குதலின் கள் மகிழ் எனப் பட்டது. இதனால், கள்ளுண்டு மயங்கினாரை மகிழ்ந்தா ரென்றல் வழக்காயிற்று; “மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு1” என்பது காண்க, தீத்தலை எஃகு என்றதற்குத் தீயிடை வடிக்கப்பட்ட எஃகு எனினுமாம். எஃகு, ஆகுபெயர். அரண் கடந்த சேந்தன், வண்மகிழ்ச் சேந்தன், எஃகின் சேந்தன் என இயையும். அரண்கொளல், போர்வலியும், மகிழ், கொடை நலமும், எஃகு, படைநலமும் சேந்தற்குச் சிறப்பாதலைக் காட்டி நின்றன. மலர்ந்து விரிந்த பூவால் தொடுக்கப்பட்டது பற்றி விரிதார் என்றும், மிக்க செல்வமுடைமை தோன்ற இயல் தேர் என்றும் சொல்லிச் சேந்தன் தந்தையாகிய அழிசியைச் சிறப்பித்தார். அதன் அழிசியென ஒருவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தில் இருந்தமையின் அவனின் வேறு படுத்து உணர இவனைச் சேந்தன் தந்தை அழிசி என்றார் போலும். அழிசி என்ற பெயருடையார் பலர் தொண்டை நாட்டிலும் இருந்துள்ளனர்; “சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துச் சுங்கந் தவிர்த்த சோழச் சதுர்வேதி மங்கலமான அழிசியூர்2 என்பதனால் இது தெரிகிறது, ஆர்க்காடு என்ற பெயரால் தொண்டை நாட்டில் பாலாற்றங்கரையிலும், நடுநாட்டில் தென் பெண்ணைக் கரையிலும், சோழநாட்டில் காவிரிக் கரையிலும், பாண்டி நாட்டு வையைக் கரையிலும் பலவூர்கள் உள்ளன. சேந்தன் தந்தையாகிய அழிசியின் ஆர்க்காடு காவிரிக் கரையிலுள்ள தென்று, “காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த, ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை, அரியலம் புகவின் அந்தோட்டு வேட்டை நிரைய வொள்வாள் இளையர் பெருமகன், அழிசி யார்க்காடு3” எனப் பரணர் கூறுவது காண்க. நெய்தல் வைகறையில் மலர்வது; “வைகறை மலரும் நெய்தல் போல1”, என்று பிறரும் கூறுப. நெல் வயலில் நீர் இடையறாது நிற்றலின், அதற்குக் களையாய் நெய்தல் முதலியன தோன்றி மலர்தல் இயல்பு; “தண்ணறுநெய்தல் தளையவிழ்வான்பூ, வெண்ணெல் அரிநர் மாற்றின ரறுக்கும்2” என்பதனாலும் அறிக, சோழநாட்டு ஊர்களுள் அழிசியின் ஆர்க்காடு வீறெய்தி விளங்கியது பற்றி அதனைத் தலை மகள் தோணலத்துக்கு உவமம் செய்தார். துவர் - சிவப்பு: “துவராடை” என்றாற் போல. நகை - காதற் குறிப்புணர்த்தும் புன்னகை; “முகைமொக்குள் உள்ளது நாற்றம் போற் பேதை, நகைமொக்குள் உள்ள தொன்றுண்டு3” என ஆசிரியர் கூறுவது காண்க.

தோழியின் துணைபெற்றா லன்றித் தலைமகளைத் தலைப்பெய்து இருவருள்ளத்து, தோன்றி நிற்கும் காதலுறவு மாண்பு பெறுதல் இல்லை யென்ற துணிவால், தோழியை எய்துதற்கு முயன்ற தலைமகன் அவள்பால் உரனும் அருமையும் மிக்க நிற்பக் கண்டு தலைவி காணத் தான் குறையுற்று நிற்கலுற்றான். தலைமகளும் பெருஞ்செல்வத்து அரும் பண்பு நிறைந்து அச்சமும் நாணமும் அரும்பெருங் கற்பும் பொற்ப நிற்றலின், தலைமகற்கும் தனக்கும் உளதாய தொடர்பினைத் தோழிக்கும் வாயாற் சொல்லுதலோ குறிப்புக்களால் உணர்த்துதலோ செய்யாமையின், தலை மகற்கு மனநோய் மிகுவதாயிற்று. தோழியென்பாளும், அறிவும், அறமும், அன்பும், ஒருங்கு திரண்டு பெண்ணுருக் கொண்டு வந்தாய் போலும் பெருந்தகவுடைய ளாதலின், தலைமகனது வரவு கண்டதும், அவன்பால் பரிவு கொண்டு உரையாடும் பாங்கினளல்லள்; அவளறியத் தலைமகள் தன்உள்ளக் காதற் குறிப்பைப் புலப்படுத்தாது தன்னைக் காத்தொழுகுதலின், தோழி தலைவிபால் அதுபற்றிச் சொல் லாடற்கும் இடமோ முறையோ பெறவில்லை. தலைமகள் காணத் தலைமகன் தோழியைக் காண முயலின், தனது முன்னைத் தொடர்புபற்றித் தோழியைத் தன்னொடு சொல் லாடற்கு ஏற்ற குறிப்பினை வழங்குவள் எனத் தலைமகன் எண்ணினான். பெருநாணும், திண்ணிய தற்காப்புக் குரிய பெருநிறையும் இடைநின்று தடுக்க ஒன்றுமறியாத பெருமடம் உடையளாய்த் தலைமகள் பிறங்கினாள். உரனும் பெருமை யுமுடைய உயர்குடித் தோன்றலொருவன், தாம் உறையும் சூழற்குப் போந்து, தம்முன் தாழ்ந்த இயலும் வீழ்ந்த செயலு முடையனாய் வருதலை நோக்கி அவன் உள்ளத்துக் குறிப்பு யாதா மெனவும் தோழி கேட்டிலள்; தன்னைக் கண்களாற் கண்டு தோழி காணக் குறுமுறுவலும் தலைமகள் செய் யாமையின் தலைமகன் உள்ளம் உடைந்து; நெஞ்சினை நோக்கி நெஞ்சே நோ இனி என்றும், தலைவியின் நடையின் கண் தோன்றிய மென்மையும், கட்பார்வையில் விளங்கிய குளிர்ச்சியும், தன் உள்ளத்தை ஊக்கினமையின் மென்னடை மழைக்கண் குறுமகள் என்றும், பல சொற்களை வழங்காது சில சொற்களை வழங்கித் தற்காத்து ஒழுகும் சால்பு கண்டு சின்மொழி என்றும், அவற்றைக் கேட்டு வியந்து நோக்கி இன்புற்ற தன் செயல் கண்டு தன் சிவந்த வாயை மடித்துத் தலைவி முறுவலிப்பது கண்டு பெருமகிழ்ச்சி எய்தினமை பற்றித் தலைமகன் நெஞ்சை நோக்கி, துவர்வாய் நகைக்கு மகிழ்ந்தோய் என்றும், நகைமொக்குளில் காதற் குறிப்பு வெளிப்பட்டமையின், இரந்து பின்னின்றொழுகும் இப் பின்னிலையை வெறாது முயல்வாயாக என்பான், வாழி என்றும் கூறினான். வைகறைப்போதில் நெய்தல் மலர்தலும், வண்டினம் மூசித் தேன் உண்டு மகிழ்வது போல நீயும் இவள் நகைப்பதம் பெற்று இவள் தோளிடத்துப் பெறும் நலத்தை எய்தலாம் என்பான், வைகறை நெய்தல் நெல்லிடை மலர வண்டுமூசும் என்றும், தலைவியின் தோளிடைப் பெறும் நலம் ஒப்புயர்வற்ற தென்றற்கு ஆர்க்கா டன்ன காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய குறுமகள் என்றும் கூறினான். மேவார் அரண் கடந்த விறலும், மகிழ் வழங்கும் வள்ளன்மை யும் உடைய சேந்தனையும், விரிதா ருடைமையான் அன்பும், இயல்தேர் உடைமையான் வலியுமுடைய அழிசியையும் கூறி யது, தலைவிபால் தோன்றிய காதற்குறிப்பும் தோழிபால் நிலவிய உரனும் புலப்படுத்தி நின்றன.

உலோச்சனார்


களவின்கண் தலைமகளைக் குறியிடத்தே கண்டு காதலுறவை மாண்புற வளர்த்து வரும் தலைமகன், அவ்வழியிற் பெறும் இன்பத்தை நயந்து வரைந்துகோடற் குரிய முயற்சியை நீட்டித்து வருவானாயினான். அக்காதலுறவு தோன்றிய அன்றே, தோழி, இருவரும் விரைய வரைந்துகொண்டு மனையறத்தால் மாண் பெய்த வேண்டுமென எண்ணத் தலைப்பட்டாள். கல்வி, அறிவு, ஒழுக்க மெனும் வலிய தூண்களிற் பிணிக்கப்பட்டிருக்கும் மக்களுள்ளம் என்னும் யானை, காமக் காதல் என்ற மதம் கொண்ட வழி, அப்பிணிப்பை அறுத்துக்கொண்டு செல்லும் மதுகையுடையது. ஆனால், தலைமக்களது உள்ளம் அக்கல்வி அறிவு முதலியவற்றின் வழிநின்று ஒழுகுவதல்லது, கடலினும் பெருகிக் கைம்மிக்க வழியும் காதலுணர்வு, அவற்றின் கட்டினை அறுத்தேகும் அடல் உடையதன்று. அவர்களுடைய மனத் திட்பம், கல்வி கேள்வி களாலாகிய அறிவுத்திட்பத்தை நோக்க மெல்லிதாகும்; அதனால் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் அவர் அறிவு அறைபோகி, உள்ளத்தை அலைக்கும் காதற்காமத்தின் பின்செல்வ தில்லை. இதனைத் தோழி நன்கு அறிவா ளெனினும், கடும்புனல் இடைப்பட்ட புணைபோல், உயிர் முறைவழிப் படூஉம் என்பது அறிஞர் கண்டுரைத்த உண்மை யாதலின், அதன் செயல்வகைக்கு அஞ்சி இருவரையும் மணத்தால் ஒன்று படுத் தற்குரிய நினைவு, சொல், செயல்களையே தோழி மேற்கொண் டிருப்பள்; வாய்க்குமிடந்தோறும் தலைமகன் உள்ளம் வரை வின்கண் செல்லுமாறு குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவள் அறிவுறுத்துவள். ஒருநாள் தலைமகன் தலைவிமனையின் சிறைப்புறமாக வந்து நிற்றலைத் தோழி கண்டாள். சிறைப்புறம் போதருதலும், சிறிதுபோது தலை மகளைக் கண்டு அளவளாவி நீங்குதலும், வாழ்க்கையின்ப மாகாமையின்; அவனை வரைந்து கொள்வான் தூண்டக் கருதி, அவன் நின்ற சிறையில் கண் காணலாகாத ஓரிடத்தே தலைவியை நிறுத்தி, அவளொடு உரையாடுபவள் போல, அவன் செவியிற்படுமாறு, “நேற்றிரவு தலைமகன் தேரொடு போந்த செய்தி இவ்வூரவர்க்குத் தெரிந்து விட்டது; அவர்கள் இவ்வூரிடத்தே ஒரு தேர் வந்து செல் கிறது என அலர் கூறுவாராயினர். அதனை நம் அன்னையும் கேட்டனள். உடனே, மனைக்குட் புகுந்தவள், அங்குள்ள பலமகளிருள் என்னையே உற்று நோக்கினாள். அவள் நோக்கம் நம்மைப் புறம்போக விடாது இல்லிடத்தே செறித்தல் வேண்டும் என்று கருதும் மனக்கோளை எனக்கு நன்கு அறிவித்தது. ஆகவே, நாம் நாளைக் கழிக்கானற்குச் சென்று கழிப்பூக் கொய்தல் இல்லையாம். அஃதொன்றே நாம் நம் காதலரைக் கண்டு இன்புறுதற் கேற்ற வாய்ப்பாதலின், அஃதொழிந்தவழி நாம் தலைமகனைக் காண்டலின்றி மேனி நலம் குன்றி வேறு பாடெய்தல் ஒருதலை, அஃது ஒருபுறம் என்னை வருத்தினும், நாம் இற்செறிப்புண்டது அறியாது தலைமகன் தேர் போந்து, பெறுதற்குரிய இன்பம் பெறாதுவறிது பெயர்தலை நினைக்கும் போது, என் உள்ளம் பெரிதும் அஞ்சுகின்றது” என்று கூறினாள்.

தோழியின் இக்கூற்றின்கண், அலர் அச்சமும், இற்செறிப்பும் கூறித் தலைமகளை எதிர்ப்படல் அருமை காட்டித் தலைமகனை வரைவு கடாவுவதும், வறிதுபெயர்தல் தலைமகன் உள்ளத்தில் எத்தகைய நினைவுகளை எழுப்பி எச்செயலை விளைவிக்குமோ என அஞ்சுமுகத்தால், அவனை வரைவின்கண் கடிது முடுக்கு வதும் கண்ட உலோச்சனார் அவற்றை இப்பாட்டின்கண் தொடுத்துப் பாடுகின்றார்.

சிறுவீ ஞாழல் தேன்றோய் ஒள்ளிணர்
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை 1வளமனை முற்றத்
2தொண்பொற் சுண்ணத்தின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
எல்லிவந் தன்றோர் தேரெனச் சொல்லி
அலர்எழுந் தன்றிவ் வூரே பலருளும்
3என்நோக் கினளே அன்னை நாளை
மணிப்பூ முண்டகம் கொய்யே மாயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே 4மணிக்கழி
நறும்பூங் கானல் வந்தவர்
வறுந்தேர் 5பேர்தல் அதனினும் அரிதே

இது, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுப்பான் சொல்லியது.

உரை
சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர் - சிறிய பூக்களை யுடைய ஞாழலின் தேன் சொரியும் ஒள்ளிய பூங்கொத்துக்கள்; நேரிழை மகளிர் வார் மணல் இழைத்த - அழகிய அணி களையுடைய இளமகளிர் நீண்ட மணற்பரப்பில் அமைத்த; வண்டற்பாவை வளமனை முற்றத்து - வண்டற் பாவைக்குரிய வளவிய மனை முற்றத்தின் கண்; ஒண்பொன் சுண்ணத்தின் ஐதுபடத் தாஅம் - ஒள்ளிய பொற் சுண்ணத்தைப் போல மென்மையாக உதிரும்; கண்டல் வேலிக் காமர் சிறு குடி - கண்டல்களை வேலியாகவுடைய அழகிய சிறு குடியின் கண்; எல்லி வந்தன்று ஓர் தேர் எனச் சொல்லி - இரவில் ஒரு தேர் வந்த துண்டெனச் சொல்லி; இவ்வூர் அலர் எழுந்தன்று - இவ்வூர்க் கண் அலர் எழுவதாயிற்று; பலருளும் என்னே நோக்கினள் அன்னை - அது கேட்டு இங்குள்ள மகளிர் பலருள்ளும் என்னையே வரைந்து நோக்கினாள் நம் அன்னை; நாளை மணிப்பூ முண்டகம் கொய்யேம் - நாளை நாம் சென்று இன்றுபோல் நீலமணி போலும் நீர் முள்ளி முதலியவற்றின் பூக்களைக் கொய்து விளையாடுதல் இல்லையாம்; ஆயின்-ஆதலால்; அணிக்கவின் உண்மை அரிது - அழகிய நம் மேனி நலம் கெடாதிருப்பது அரிதாம்; மணிக்கழி நறும்பூங் கானல் வந்து - கரு மணி போல் தெளிந்த நீரையுடைய கழியின் கரையில் அமைந்த நறிய பூக்களையுடைய கானற்சோலைக்குப் போந்து; அவர் வறுந்தேர் பேர்தல் அதனினும் அரிது - காதலர் தேர் நம்மைக் காணாமல் வறிது செல்வது நலக் கேட்டினும் பொறுத்தற் கரியது காண் எ-று.

சிறுகுடி, எல்லி தேர் வந்தன்று எனச் சொல்லி, இவ்வூர் அலர் எழுந்தன்று; பலருளும் அன்னை என் நோக்கினள்; நாளை முண்டகம் கொய்யேம்; ஆயின், அணிக்கவின் உண்மை அரிது; கானல் வந்து அவர் வறுந்தேர் பேர்தல் அதனினும் அரிது எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இணர், மகளிர் இழைத்த பாவை, முற்றத்து, ஐதுபடத் தாஅம் சிறுகுடி, கண்டல் வேலிச் சிறுகுடி, காமர் சிறுகுடி, என இயையும். ஞாழல் சிறுவீயுடைய தென்பதைச் “சிறுவீ ஞாழல் துறையு மார் இனிதே1” என்று பிறரும் கூறுதல் காண்க. பூக்கட்குத் தேனுடைமை இயற்கை யாதலின், தேன்தோய் ஒள்ளிணர் என்றார்; புதுமையும் மணமும் கவினும் விளங்கித் தோன்றுதல் பற்றி ஒள்ளிணர் எனப்பட்டது. வண்டற்பாவை, கோரைப் புல்லாலும் பிறவற்றாலும் செய்யப்படும் பாவை. பாவையை நிறுத்தற்கு விளையாட்டு மகளிர் அமைத்த மணல்வீடு வளமனை எனப்பட்டது. ஞாழலின் பூந்துணரினின்றும் உதிரும் பூந்துகள் பொற்சுண்ணம் போறலின் ஒண்பொற் சுண்ணத்தின் என்றார். நீராடற்குச் செல்லும் இளமகளிர் சுண்ணப்பொடிசெய்து கொண்டு போதல் பண்டை நாளைய மரபு. ஞாழற் சிறுவீயின் துணர் உதிர்த்தலின் அதன் பொடி பெருக இராமையின் ஐதுபடத் தாஅம் என்றார். கண்டல் - கடற்கரைப் பகுதியில் நிற்கும் மரவகையுள் ஒன்று, என் நோக்கினளே என்றவிடத்து ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. முண்டகம் - முள்ளிச் செடி, தலைமகளை உளப்படுத்தலின், கொய்யே மாயின் எனப் பன்மை கூறப்பட்டது. அணிக்கவின் என்றவிடத்து அணி, அணிவகைகளாற் பிறக்கும் செயற்கை யழகையும், கவின் இயற்கை யழகையும் சுட்டி நின்றன என்க. உண்மையோ அரிது என்றது - உளதாதல் இல்லை யென்பதும். என்றது. வறுந்தேர் என்றது, ஊர்வான்பால் உளதாகும் வறுமை ஊர்தியாகிய தேர்மேல் ஏற்றிக் கூறப்பட்ட தென்க. அது -நலக்கேடு. அருமை - விளைவின் பொறுத்தற் கருமை சுட்டிற்று.

வரைவு நீட்டித் தொழுகும் தலைமகனைக் குறிப்பாக அலரச்சம் கூறி வரைவு கடாவுகின்றா ளாகலின், கண்டல் வேலிக் காமர் சிறு குடி எல்லி வந்தன்றோர் தேர் எனச் சொல்லி; அலர் எழுந்தன்று இவ்வூர் என்று தோழி கூறினாள். தலைமகன் போந்து களவின்கண் தலைமகளை காண்டற் கேற்ற இடமும் அவள் உறைதலால் வாய்ந்த சிறப்பும் சுட்டி, கண்டல் வேலிக்காமர் சிறுகுடி என்றும் முன்னாள் தலைமகன் போந்து இரவுக் குறிக்கண் தலைவியைத் தலைப் பெய் தமையின் எல்லி வந்தன்று தேர் எனச் சொல்லி என்றும், அலர் கூறுவோரைப் பொதுப்படக் கூறுத லன்றி இன்னோர் என வரைந்து கூறல் மரபன் மையின் ஊர்மே லேற்றி, அலர் எழுந்தன்று இவ்வூர் என்றும், கூறினாள். அலர் கூறுப்படுதற் கேற்ற செவ்வியும், ஒழுக்கமு முடையயோர் பலரும் உள ராயினும், இவ்வலர் நம்மைக் குறித்ததாகக் கொண்டு அன்னை என்னையே வரைந்து நோக்கினள் என்பாள். பலருளும் என்நோக்கினளே அன்னை என்றாள். பலருளும் என்றது - ஆயமகளிர் பலருளும் என்றுமாம். இதனால், நாளை நாம் மனைப்புறத்தே செல்லாவாறு செறிக்கப்படுவது ஒருதலை யென்றற்கு. நாளை மணிப்பூ முண்டகம் கொய்யேம் என்றும், இற்செறித்தவழித் தலைமகனைக் காண்டல் கூடாமையின் மேனிநலம் கெடுவதும், காப்புச் சிறை மிகுவதும், பிறவும் தோன்றி வருத்து மென்பாள். ஆயின் அணிக்கவின் உண்மையோ அரிது என்றும், இங்கே இவை நிகழ்தலை அறியாமை யால் தலைமகன் போந்து கூட்டம்பெறாது வறிது பெயர்குவன் என்றும், உள்ளுறையால் அவனது நன்றியைப் பெற்ற நமக்கு நன்றன்று என்றும் குறிக்கின்றமையின்; அவர் வறுந்தேர் பேர்தல் அதனினும் அரிது என்றும் கூறினாள். பேர்தல் - பெயர்ந்து போதலால் உளதாகும் துன்பம் என்க. வார்மணற்கண் மகளிர் இழைத்த பாவையின் வளமனை முற்றத்தில் ஞாழலின் ஒள்ளிணர்ப் பூந்துகள் படிந்து அழகுசெய்யும் என்றது, யாம் விளையாடிய கானற்சோலை யிடத்துப் போந்து எமக்குத் தலையளிசெய்து சிறப்பித்தனை எனத் தலைமகற்கு உள்ளுறுத் துரைத் தவாறு, இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது.

பரணர்


களவின்கண் தலைமகளது காதலுறவு பெற்று இரவுக்குறியில் வந்தொழுகும் தலைமகனது உள்ளத்தை வரைவின்கண் செலுத்தக் கருதிய தோழி; அவனை இரவின்கண் வருதலைத் தவிர்க்குமாறு வேண்டினள்; இரவின்கண் காவலருமையும், தலைமகன் வரும் நெறியின் கொடுமையும், கூட்டத்துக்கு இடையூறாவதை நன்கு விளக்கினள். முடிவில் அவள் தலைமகளைநோக்கிப் புலியினம், களிறு வேட்டுத் திரியும் காட்டிடைக் கரடிகள் நாண்மேய லாரும் வழிகளைக் கடந்து காதலர் இரவின்கண் வருதல் மிக்க வருத் தத்தைத் தருதலின்; அவரது அவ்வரவினை மறாது ஊக்குவது எனக்கு மிக்க அச்சத்தைத் தருகிறது என்றாள். அதனைக் கேட்ட தலைமகள், உண்மை யுணர்ந்து இரவுக்குறிக்கண் தலைமகன் போதரக் கண்டு இன்புறுபவள், தோழி கூறியதனை எடுத்துக்கூறி அவன் இரவின்கண் வருதலை மறுத்துரைப்பாளாயினள். தலைவி யின் அன்புடை நன்மொழியை ஏற்ற தலைமகன், இரவுக்குறி மறுத்தமை கேட்டு ஆற்றானாகி, “இரவின்கண் மலைச்சுரத்து நெடுவழியைக் கடந்து வருதலின் ஏதம் நினைந்து வருந்து கின்றாய்; அரிவையே, கொல்லிப் பாவை இளவெயில் தன் மேனியிற் பட்ட பொழுது நல்ல நிறமும், அழகும், ஒளியும், பெற்று விளங்குவது போல நீ விளங்குகின்றாய்; நின்னுடைய மாண்பு மிக்க நலம் நினைந்து வருதலால் இருள்மிக்க நள்ளிரவுப் போதிலும் அந்நெறி எமக்கு ஊறு விளைவியாத இனிமையுடைய தாகுங் காண்” என்று தெருட்டினான்.

தலைமகனுடைய இக்கூற்றின்கண், தலைவியின் கற்பு நலத்தில் அவனுக் கிருக்கும் நன்மதிப்பும், அவன்பால் அவள் உள்ளத்தில் உறைந்திருக்கும் காதல் மிகுதியும் இனிது விளங்கக் கண்ட பரணர் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
1மரம்பயில் அடுக்கம் மலியப் பூழியர்
உருவத் 2துருவையின் நாண்மேயல் ஆரும்3
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை
நீநயந்து வருதல் எவன்எனப் பலபுலந்
4தழுதனை உறையும் அம்மா அரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின்
5மாணலம் உள்ளி வரின்எமக்
6கேம மாகுதல் 7எண்ணும்என் நெஞ்சே

இஃது, இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

உரை
குருதி வேட்கை உருகெழு வயமான் - குருதி யுண்ணும் விருப்பமும் கண்டார்க்கு அச்சமும் தரும் வலியுமுடைய புலி; வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் - மனவலி மிக்க உடல் வன்மையும் இளமையுமுடைய களிற்றினைக் கோறற்கு வரவு நோக்கி யிருக்கும்; மரம்பயில் அடுக்கம் மலிய - மரங்கள் அடர்ந்த மலைப்பக்கம் முற்றும்; பூழியர் உருவத் துருவையின் - பூழிநாட்டவருடைய நிறமுடைய யாடுகள் பரந்து மேய்வது போல; நாண்மேய லாரும் - நாட்காலை யுணவு நாடி மேயும்; மாரி எண்கின் மலைச்சுர நீளிடை - மாரிக்காலத்து இரவின் கண் கரடிகள் நிறைந்த மலைக்காட்டு நெடிய வழியை; நீ நயந்து வருதல் எவன் என - நீ விரும்பி வருதலால் யாது விளையும் என்று; பல புலந்து அழுதனை உறையும் அம்மா அரிவை - பலபட மொழிந்து வருந்தி அழுதுகொண் டிருக்கும் அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையே; பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரை - பழங்கள் நிறைந்த பலாமரங்கள் செறிந்துள்ள கொல்லிமலையின் மேலைப்பகுதியில்; பூதம் புணர்த்த புதிது இயல் பாவை - பூதத்தால் புதுவதாகச் செய்து நிறுத்தப்பட்ட பாவை; விரிகதிர் இளவெயில் தோன்றி யன்ன - விரிகின்ற கதிர்களையுடைய இளஞாயிற்றின் பொன் வெயிலிற் காணப்பட்டாற் போலும்; நின் மாண்நலம் உள்ளி வரின் - கற்பால் மாட்சிமைப்பட்ட நின் நலத்தை நினைந்து வருகின்றே னாதலால்; எமக்கு ஏமமாகுதல் என் நெஞ்சு எண்ணும் - அந்நினைவே எமக்கு இனிய துணையாமென என் நெஞ்சு எண்ணாநிற்கும், காண் எ-று.

நீளிடை நீ நயந்து வருதல் எவன் எனப் பலபுலந்து உறை யும், அரிவை, இளவெயில் தோன்றியன்ன நின் மாணலம் உள்ளிவரின் எமக்கு ஏமமாகுதல் என் நெஞ்சு எண்ணும், ஆதலால் நீ கவலற்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆமான், வேழம் முதலிய விலங்குகளைத் தாக்கி அவற்றின் குருதியை அருந்துவதில் பெருவிருப்புடைமை பற்றிப் புலியை குருதி வேட்கை உருகெழு வயமான் என்றார்; “மரையா வலம்படத் தொலைச்சி, ஒண்செங் குருதியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த1” எனப் பிறரும் கூறுதல் காண்க. உரு, உட்கு; அச்சம், வயமான், புலி, வலிமிகு முன்பு - மனவலியால் உடலிடைச் சிறக்கும் மெய்வன்மை, பார்த்தல் - ஈண்டு வரவு நோக்கி யிருத்தல். மலிதல், நிறைதல், பூழியர், பூழிநாட்டவர்; மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலுகாவின் தென் கீழ்ப்பகுதி. உருவத் துருவை - சிவந்த நிறமுடைய ஆடுகள். நாண்மேயல் - விடியலில் உண்ணப்படும் மேய்ச்சல். மாரிக் காலத்தில் வெளிப்போந்து திரியும் கரடியை மாரி எண்கு என்றார். மலைச்சுரம் - மலையின்மேலும் அடியிலும் பக்கத் திலும் பரந்துள்ள காடு. பயம் - பழம். நாட்காலையில் ஞாயிற் றின் ஒளி பொன்னிறங் கொண்டு திகழ்தலின் இளவெயிலைச் சிறப்பித்தார். ‘விரிகதிர்’, வினைத்தொகை கொல்லிப்பாவை - பொன்னாற் செய்யப்பட்ட தென்றும், இளவெயிலின் பொன் னொளியில் அது மிக்க ஒளிகொண்டு திகழு மென்றும் கூறுவாராய், “தாவில் நன்பொன் தைஇய பாவை விண்டவழ் இளவெயில் கொண்டுநின் றன்ன1” என்று இவரே பிறாண்டுக் கூறுதல் காண்க. வரின் - என்பது வருதலால் என்னும் பொருட்டு. ஏமம் - இன்பத்துணை; இன்பக்காவலுமாம்.

வயமான் மழகளிறு பார்க்கும் மரம்பயில் அடுக்கம் மலிய நாண்மேய லாரும் எண்கின் மலைக்சுர நீளிடை நீ நயந்து வருதல் எவன் என்றது; தலைவி கூற்றினைக் கொண்டெடுத்து மொழிந்தது. வயமான் மழகளிறு பார்க்கும் அடுக்கம் என்றும், எண்கின் மலைச்சுர நீளிடை என்றும் கூறியது தலைமகன் வரும் நெறியின் ஏதம் காட்டியது; நீ நயந்து வருவது எவன் என்றது - இரவுக்குறி வருதலை மறுத்தவள் அவர் வரும் வழியின்கண் உளவாகும் ஏதத்தை நினையாது வருதலையே நயந்து வருதல் எமக்கு மிக்க அச்சம் தருதலின், இன்பப் பயன் இல்லை யென்றும், எனவே அதனை இனி விலக்குவதே செயற்பால தென்றும் கூறுவாள், நீ நயந்து வருதல் எவன் என்றும் தலைவி கூறினாள். நெறியின் ஏதம் கூறுமிடத்தும் - தலைவன் நயந்த இரவுக்குறியை மறுக்குமிடத்தும் நெஞ்சு கலுழ்ந்து அழுது நின்றமையின், அதனையே எடுத்துப் பல புலந்து அழுதனை உறையும் அம்மா அரிவை என்று தலை மகன் கூறினான். அழுது வருந்துதற்குரிய ஏது ஒன்று மில்லை யெனத் தெளித்தற் பொருட்டு அவள் கூற்றையே கொண்டெடுத்து மொழிந்தான். தெறுவெயில், மிகுபெயல், கடுங்காற்று முதலிய எவற்றாலும் மாயா இயற்கைத்தாகிய பாவை போன்ற நின்மாண்நலம் உள்ளி வருதலால், எம்மையும் அவ்வெயில் முதலியனவும் கொடு விலங்குகளும் தீது செய்யா என்றும், அவை எமக்கு இன்பத்துணை யாய்க் காவல் புரியும் என்றும் தெருட்டுவான், நின் மாண்நலம் உள்ளி வரின் எமக்கு ஏமமாகுதல் என்றும், இவ்வாறு என் நெஞ்சம் எண்ணுதலின் வேறு கூறுதல் மிகை என்பான், ஏமமாகுதல் எண்ணும் என் நெஞ்சே என்றும் கூறினான்.

“பண்பிற் பெயர்ப்பினும்2” என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஆற்றிடை யுறுதலும்” என்றதற்குத் “தலைவியும் தோழியும் வருவழி அருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழும்” எனக் கருத்துரைத்து, இப்பாட்டை எடுத்தோதி, “தலைவி ஆற்றி னது அருமை கூறியதற்குத் தலைவன் கூறியது” என்பர் நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும். இனி, இளம் பூரணர், “இருவகைக் குறிபிழைப் பாகியவிடத்தும்1” என்ற நூற்பாவின் கண் “வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும்” என்பதற்கு இப்பாட்டையே காட்டுவர்.

நற்றாமனார்


மணம் புணர்ந்து மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலைமகன் தன் மனைவியின் நீங்கிக் காடிடையிட்டும் நாடிடையிட்டு முள்ள வேறு நாடுகட்குச் சென்று பொருளீட்டு தலும் வினைசெய்து புகழ் ஈட்டுதலும் உண்டு. களவுக்காலத்தில் காதல் சிறத்தல் வேண்டி வரைவினை நீட்டித்து, நாடுகாவற் பொருட்டும், வேறு வினைகுறித்தும், வரைபொருள் குறித்தும், பிரிதல் ஆண்மகற்கு இயல்பாகலின், பிரிவின் கண் ஆடவரினும் மகளிர்க்கு ஆற்றாமை மிகுதல் இயல்பு. மேலும், மனையின் நீங்கிப் புறத்தே செல்லும் ஆடவர் உள்ளத்து நின்று வருத்தும் பிரிவு நோயைப், புறவுலகம், பரந்து விளங்கும் தன்பால் உள வாகும் சிறந்த காட்சிகள் பலவற்றை நல்கி அந்நோயை மாற்றி மறப்பிக்கும்; மனையுறை மகளிர்க்கு மாண்புடைய கணவன் கண்ணாகப் புறவுலகக் காட்சி எய்துவதன்றி வேறு வாயில் இல்லை. அதனால் கணவன் இல்வழி உலகினைக் காணும் வாய்ப்பு இன்றாதலாம். இருட்டறையுள் கிடக்கும் குருட்டாவைப் போலும் துன்பநிலை மகளிரைச் சூழ்ந்துகொள்ளும்; ஆகவே, பிரிவுத்துன்பம் மகளிரை வருத்துவது மிகுதி என்பது உலகு முழுதும் பரவிய உண்மையாக நிற்கிறது. கண் முதலிய கருவி களின் வாயிலாக உலகப்பரப்பை உணர்ந்துகொள்ளும் பெரு விழைவால், மக்கள் அவர் தம் உறுப்புகள் இளமைப் போதில் பெரிதும் துடிக்கிற தென்றும், அவ்விளமையும் ஆணும் பெண்ணு மாய்க் கூடி யுறையுங்கால், அவர்கள் கூட்டத்தால் உலகவாழ்வின் உண்மைகள் பல அவர்கள் உள்ளத்துக்கு விளங்கித் தோன்று தலின்; அக்காலை ஒன்றினொன்று பிரியின் அறிவுவேட்கையும், உலக இன்பநாட்டமும் மிக்கெழுந்து அலைத்தலின், இரு பாலார்க்கும் ஆற்றாமை மிகுகின்ற தென்று அறிஞர் கூறுவர். அன்றியும், உடம்புதரு பணியின்கண் ஆண்மையினும் பெண்மை மிக்க பொறுப்புடைய தாகலின், அதற்கு இயையப் பெண்மை யுடல் தாய்மைப்பேறு குறித்து வளர்ந்து அதற்குரிய செவ்வி எய்துங்கால் உடம்புதரு வேட்கைவயப்பட்டு ஆண்மையின் துணையைப் பெரிதும் அவாவி நிற்கும்; அக்காலையில் ஆண்மை பிரியு மாயின் பெண்மைபால் அவலம் பெருகி அல்ல லுறுத்தும். இன்னோரன்ன ஏதுக்களால் தலைமகன் பிரிவின் கண் ஆற்றாது அருந்துயர்ப்பட்ட தலைமகள் “வாடைக்காற்று வந்தலைக்கும் பனிக்காலத்து வருவல்” என்று சொல்லிப் பிரிந்த தலைவன் வரவினை ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தாள். முன்பனிக்காலம் வந்தது; வாடைக்காற்றும் தன் வரவு தவறாமல் வந்து அலைக்கத் தொடங்கிற்று “காதலர் குறித்த பனிப்பருவத்து வாடை வந்ததே; இனி, அவர் வந்திலரே” என்று தலைமகள் நினைந்து வருந்தலுற்றாள். நெடும் புனலுள் வீழ்ந்தார்க்குச் சிறுகொம்பும் பற்றுக்கோடாய்த் தோன்றுதல் போலப் பெருந்துயரால் வருந்துவோர்க்கு மலையும் கடலும்; மரமும் செடியும்; மாவும் புள்ளும்; ஞாயிறும் திங்களும்; மழையும் காற்றும்; யாவும், “உறுப் புடையது போல், உணர்வுடையது போல், மறுத்துரைப்பது போல்” நிறுத்திப் பேசப்படும் பொரு ளாம். அதனால், தலைமகள் வாடைக்காற்றை நோக்கி, “பெருந் தண் வாடையே, ஈங்கையின் துய்த்தலைப் பூவின்கண் ஒட்டி நிற்கும் நீர்த்துளிகள் எங்கும் பரந்து துளிக்க நீர் நிறைந்த பழனங் களிலும், வயல்களிலும், மருத நிலங்களிலும், தோய்ந்து வருகின் றாய்; நினக்கு யாம் யாதொரு தீதும் செய்ததில்லேம்; தனது பிரிவால் என் வளை நெகிழுமாறு உடம்பு மெலிவித்த காதலர் பொருள் காதலித்துப் பிரிந்தன ராகலின், களைகணாவார். பிறரின்றி ஒருபால் ஒடுங்கியிருந்து பிரிவுத்துய ருழக்கும் என்னை வருந்தா தொழிவாயாக” என்று அவலித்தாள்.

தலைவியது இக்கூற்றின்கண், தலைமகன் பொருள் குறித்துப் பிரிந்தானாக, அவனை யின்மை ஒருவருமே யில்லாத வெறுமை யாதலும், அவள் எய்திய துன்பம் வேறு எவ்வகையாலும் நீங்காத பெருமை யுடைத்தாதலும் தோன்றக் கண்ட நற்றாமனார் அவற்றை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

அட்டாக் குகுவின் வட்டுமுகை ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ நிறைநீர்ப் 1பழனப் புலந்துழைஇ ஆனா
2மருநிலந் தழூஉம் பெருந்தண் வாடை
நினக்குத் தீதறிந் தன்றோ விலமே3
பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெங் காதலர்
அருஞ்செயற் பொருட் பிணிப் பிரிந்தன ராக
ஆருமில் ஒருசிறை இருந்து
பேரஞர் உறுவீயை வருத்தா தீமே

இது பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் வாடைக்குச் சொல்லியது.

உரை
அட்டு அரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கை - உருக்கிய அரக்கினாலாகிய வட்டுப் போன்ற மொட்டுக்களை யுடைய ஈங்கையின்; துய்த்தலைப் புதுமலர்த் துளி தலைக்கலாவ - மேலே துய்யினையுடைய புது மலரில் நின்ற பனித்துளி எங்கும் பரந்து குளிர்ப்ப; நிறைநீர்ப் பழனப் புலம் துழைஇ-நிறைந்த நீரையுடைய பழனங்களைச் சார்ந்த வயற்புலங்களிற் படிந்து; ஆனா-அதனோடு அமையாது; மருநிலம் தழூஉம் பெருந்தண் வாடை-உழாது விடப்பட்ட கரம்பு நிலத்திலும் பரந்து வருகின்ற மிக்க தண்ணிய வாடைக் காற்றே; நினக்குத் தீது அறிந்தன்றோ இலம் - நினக்கு யாம் ஒரு தீங்கும் செய்தோ மில்லை; பணைத் தோள் எல்வளை ஞெகிழ்த்த எம் காதலர்-பருத்த தோளிடத்து அணிந்து விளங்குகின்ற வளைகள் கழன்று உகுவித்த எம்முடைய காதலர்; அருஞ்செயற் பொருட்பிணிப் பிரிந்தனராக - செய்தற்கரிய பொருள் பற்றிய வேட்கையால் எம்மிற் பிரிந்து சென்றா ராகலின்; ஆருமில் ஒருசிறை இருந்து - துணையாரும் இல்லாத ஓர் இடத்தே இருந்துகொண்டு; பேரஞர் உறுவீயை வருத்தாதீமே - பெருந்துன்பம் உழக்கும் என்னை வருந்தா தொழிக எ-று.

ஈங்கைப் புதுமலர் துளிதலைக் கலாவ, புலம் துழைஇ ஆனா மருநிலம் தழுஉம் வாடை, நினக்குத் தீதறிந்தன்றோ இலம்; ஆகலின், காதலர் பிரிந்தனராக, பேரஞர் உறுவியை வருத்தாதீமே எனக் கூட்டி வினைமுடிவு செய்க. செவ்வரக்கா லாகிய வட்டு அட்டாக்கு உருவின் வட்டு எனப்பட்டது. ஈங்கை மலர் துய்யுடைய தென்பது. “முட்கொம் பீங்கைத் துய்த்தலைப் புதுவீ1” என்று வழங்குவதனாலு மறிக. கார் மழையால் நிலம் குளிர்ந்த நீர்நிலைகள் நிறைந்து வயற் புறங்களில் நீர்நின்று குளிர்ந்திருத்தலின் நிறைநீர்ப் பழனப் புலம் என எடுத்தோதி ஈண்டுத் தவழ்ந்து வரும் வாடைக் காற்றை நோக்கிப் பாடுதலின், பழனப் புலம் துழைஇ ஆனா என்றும்; கரம்புகளில் வளர்ந்திருக்கும் புற்பரப்பையும் தழுவி மிகவும் குளிர்ந்து வருதல் பற்றி மருநிலம் தழூஉம் பெருந் தண் வாடை என்றும் கூறினார். மருநிலம் ஆனிரைகளின் மேய்ச்சலுக்காகப் புல் வளர்தற் கென்று விடப்படும் கரம்பு நிலம்; இது விடுநில மென்றும் வழங்கும் ‘விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து”2 என வருதல் காண்க. நீர்நிலை, விளைபுலம், விடுபுலம் ஆகிய எங்கும் பரந்து குளிர்ந்து வடகிழக்கிலிருந்து வரும் காற்றைப் பெருந்தண் வாடை என்றார் அரிதின் முயல் வார்க்கன்றிப் பெறலாகாமை பற்றி அருஞ்செயற் பொருள் என்றும். பொருள் காதலித்தார்க்கு வேறு தமது உடம்பு உயிர்களை யுள்ளிட்ட எப்பொருளிடத்தும் காதல் தோன்றாமையின் பொருட் பிணி என்றும் கூறினார். பேரஞர் உறுவி. பெருந்துயர் எய்தி வருந்துபவள். இது தலைவி தன்னைப் பிறள் போல் கூறியது.

புது மணம் புணர்ந்து தலைமகனது அழிவில் கூட்டத்து ஆரா இன்பத்தைத் தலைப்பட்ட சின்னாட்கெல்லாம் பிரிவு தோன்றி வருத்து தலால் உளதாய தன் வேறுபாட்டை ஊரவர் கண்டு அலர் கூறுகின்றன ரென்னும் குறிப்பால், ஈங்கைப் புதுமலரிடத்துத் துய்த்தலையிற் பனித்துளிகள் எங்கும் கலந்து பரவ வாடை செய்கின்றது எனத் தலைமகள் கூறினாள். கற்புநெறி யாதலின் அதனால் தலைவன் உரைத்த சொல்லைத் தேறி வரவு நோக்கி யிருத்தற் குரிய மன நிறையை வாடையின் தட்பம் அசைவித்தல் தோன்ற, நிறை நீர்ப் பழனப் புலம் துழைஇ என்றும்; தனிமையுற்று வருந்தி யுறையும் தன் மனைக்குள் புகுதல் கூடா தாயினும் புகுந்து வருத்துதல் பற்றி, ஆனா மரு நிலம் தழூஉம் என்றும்; பெருமையும் தட்பமும் உடைய நினக்கு இது பொருந்தாது என்றதற்குப் பெருந்தண் வாடை என்றும் கூறினாள். இவ்வண்ணம் என்னை வருத்து தற்கு யான் ஒரு சிறுதீதும் செய்திலேன் என்பாள், நினக்குத் தீது அறிந்தன்றோ இலம் என்றாள். அறிந்திலென் என்னாது பன்மையிற் கூறியது, என் காதலர்தானும் யான் அறியச் செய்ததிலர் என்றதற்கு, அருஞ்செயற் பெரும்பொருள் பற்றிக் காதலர் பிரிந்த அற்றம் நோக்கி வருதல் நின் பெருமைக்குப் பொருந்தாது என்றற்குக் காதலர் அருஞ்செயற் பொருட் பிணிப் பிரிந்தனராக என்றும்; களைகணாவார் இன்றித் தனித்து ஒருபுடை யிருந்து வருத்தமுற்று மெலியும் என்பால் இரக்கமின்றித் துயர்செய்வது மிக்க தண்மையுடைய நினக்கு ஆகாது காண் என்றற்கு யாருமில் ஒருசிறை யிருந்து பேரஞர் உறுவியை வருத்தாதீமே என்றும் கூறினாள். இதனாற் பயன் அயாவுயிர்த்தல்.

மதுரை மருதன் இளநாகனார்


திருமணத்துக் குரிய செவ்வி யெய்திய மகளிரைக் குறிஞ்சி முதலாகிய நிலங்களில் வாழ்ந்த பழந்தமிழ்மக்கள் மிக்க விழிப்புடன் பேணி வந்தனர். இளமகளிரின் தூய இளமையுள்ளம் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு அறிந்து, வாழ்க்கைக் கேற்ப வளமையும் வன்மையும் பெறுதல் வேண்டி, அவர்களின் கண்ணும் கருத்தும் ஒன்றிய பயிற்சி பெறுவித்தலின் நன்கு சிறந்திருந்தனர். பெருஞ் செல்வத் தருமை மகளாயினும், உலகில் வாழப் பிறந்தவ ளென்ற கருத்தால் தினைக்காவல் முதலிய செயல் வகைகளில் அவர்களை இருத்தி நல்லறிவு பெறுவிப்பது பண்டைத் தமிழர் வழக்காறு. இன்றும் காடுடைய நாட்டில் வாழும் பழந்தமிழர்பால் இவ்வழக்கம் இருந்து வருகிறது. இம்முறைமையால் தமிழ்த் தலைமகள் தினைக் காவல் மேற்கொண்டு, புனத்தின்கண் அமைத்த உயரிய பரண்மேல் தன் உயிர்த்தோழியுடன் இருந்துவருவள். பகற்போதில் பரண்விட்டு இறங்கித் தினைப்புனத்தைக் சூழ்வந்து கிளி முதலிய புள்ளினம் போந்து தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லாவாறு, கவணும் தட்டையும் கையில் ஏந்திக் காவல் புரிவள். ஒழிந்த காலத்தில் அருவியில் நீராடியும், பொழில்களில் மலர்களைக் கொய்து கண்ணியும் தழையும் தொடுத் தணிந்தும் விளையாட்டயர்வள். அக்காலை அவளை யொத்த இளமகளிர் போந்து கூடிக் கொள்வர். அம்மகளிரிடையே இளமை நலம் படைத்த ஆண் மக்களும் கலந்திருப்பர்.

கள்ள மறியா வெள்ளையுள்ளம் படைத்த இளமை, அவ்விளையாட்டால் மாசுபடாது இயற்கை அறத் துறையில் இயங்காநிற்கும். ஆணும் பெண்ணும் கலந்தது உலகிய லாதலின், விளையாடும் ஆயத்திடை ஆண்மக்கள் விலக் குண்ணவில்லை. இந்நெறியில் தலைமகள் தினைக்காவல் புரிந்து ஒழுகுகையில், தலைமகனுடைய தொடர்பு அவட்கு உண் டாவதும் இயல்பு. அத்தொடர்பு காதலாய் மாறி ஒருவரை யொருவர் இன்றியமையா வண்ணம் பிணிப்பது முண்டு. மனை யுறையுங் காலத்தே விளையாடும் பூம்பொழிற்கண் ஒருவரை யொருவர் தனிமையிற் கண்டு காதலுறவு கொண்டு களவு நெறியில் அக்காதலை வளர்த்து வருங்கால், தலைமகள் தினைப் புனம் செல்வதும், தலைமகன் அவ்விடத்தே போந்து தினைக்கா வற்குத் துணை செய்வதுடன், விளையாடற் கேற்ற விருப்புடைய துணைவனாதலும் உண்டு. தினைமுற்றியவழித் தலைவி தினைப் புனத்தின் நீங்கி மனையகம் சென்று சேர்வள். தலைமகள்காத் தோம்பிய தினைப்புனம் சென்று நன்கு விளைந்தது கண்ட அவளுடைய தமர், மனையகம் சென்று சேருமாறு பணித்தனர். தங்கள் செலவைத் தலைமகற்கு அறிவித்தல் வேண்டுமென்ற ஆர்வம் தலைமகட்கு உண்டாவது இயற்கை; அவள் வழிநின் றொழுகும் உயிர்த்தோழி தலைமகன் தினைப்புனத்தின் ஒருபால் வந்து நிற்பதைக் கண்டு அவற்குத் தமது செலவைத் தெரிவிக்க எண்ணினாள்; தினைவிளைவு காண்பான் போந்து பெருவிளைவு கண்டு மகிழும் தமர் தமது களவை அறிகுவர் என்று அஞ்சித் தலைமகட்கு உரைப்பாளாய் “தோழி, நாம் பரணின் நீங்கி, மந்தியும் ஏறமாட்டாத உயர்ந்த மரங்கள் நிறை பக்கத்தே விளையாட்டயர்ந்த அற்றம் நோக்கி, தன்பிடியொடு கூடி யுறையும் யானை போந்து தினைப்புனத்தை மேயாது ஒதுங்கி நின்றது. பெருங்கதிர்களைத் தாங்கி நின்ற தினைக் கதிர்களைக் கிளிகள் கவர்வதைக் கைவிட்டன. இவ்வண்ணம் நமது புனங் காவற்கு ஊறுசெய்யாது நன்றி புரிந்த யானைக்கும் கிளிகட்கும் யாம் இன்று என்ன கைம்மாறு செய்யவல்லேம்; புனங்காவல் முடிவில் மனையகம் சேரும் இந்நிலையில் நாம் அவற்றிற்கு நன்றி கூறுதல் கடனன்றோ” என்று மொழிந்தாள்.

தோழியின் இக்கூற்றின்கண், புனத் தருகிருந்து மரம் பயில் பொழிலின்கண் தலைமகன் காதலுறவு பெற்று அதனை விளை யாட்டின் வாயிலாக வளர்த்துப் போந்தமையும், இனி மனையகம் சென்று சேர்தலால் அவனை தலைக்கூட லருமையும் கூறிக் குறிப்பால் அவனை வரைவுகடாவினமையும் தோன்றக் கண்ட இளநாகனார், இப்பாட்டின் கண் அவற்றைத் தொடுத்துப் பாடுகின்றார்.

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாது செய் வாங்கொல் 1யாமே கயவாய்க்
கன்றுடை மருங்கிற் பிடி புணர்ந் தியலும்
வலனுயர் மருப்பின் 2நிலனீள் தடக்கை
அண்ணல் யானைக் கன்றியும் கன்மிசைத்
தனிநிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம்பயில் ஒருசிறைக்
குன்ற 3வெற்பனொடு நாம் விளையாட
இரும்புகவர் கொண்ட ஏனற்
பெருங்குரல், கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே.

இது சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீ இயது.

உரை
தோழி-; வாழி-; அம்ம- யான் கூறுவதனைக் கேட்பாயாக; யாம் கைம்மாறு யாது செய்வாங்கொல் - நாம் கைம்மாறு யாதனைச் செய்யவல்லேம்; கயவாய்க் கன்றுடை மருங்கிதன் பிடி புணர்ந்தியலும் - பெரிய வாயையுடைய கன்றினைப் பக்கத்திலே கொண்ட பிடியானையுடன் கூடி இயங்கும்; வலன் உயர் மருப்பின் நிலம் நீள் தடக்கை - வெற்றியால் உயர்ந்த மருப்பையும் நிலத் திடத்தே நீண்டு தொங்கும் பெரிய கையையு முடைய; அண்ணல் யானைக்கு அன்றியும் - பெரிய களிற்றி யானைக்கே யன்றி; கன்மிசைத் - தனிநிலை இதணம் புலம்ப - மலைமேல் உயரிய தோ ரிடத்தே நிலைபெற அமைத்த பரண் தனிமையுற நீங்கி; போகி - சென்று; மந்தியும் அறியா மரம் பணில் ஒருசிறை - மந்தியும் ஏறி யறியாத உயர்ந்த மரங்கள் நெருங்கிய ஓரிடத்தே; குன்ற வெற்ப னொடு நாம் விளை யாட - குன்று களும் மலைகளும் பொருந்திய மலைநிலத் தலைவனுடன் நாம் கூடி விளையாடாநிற்ப; இரும்பு கவர் கொண்ட ஏனல் - இரும்பாலாகிய அரிவாளால் அரிந்து கொள்ளப்பட்ட தினையின்; பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளிக்கு - பெரிய கதிர்களைக் கொள்ளாதொழிந்த சிறிய பச்சைநிறமுடைய கிளிகளுக்கு எ-று.

தோழி, வாழி, அம்ம, ஒருசிறைப் போகி, வெற்பனொடு நாம் விளையாட, ஏனல் பெருங்குரல் கொள்ளா யானைக் கன்றியும் சிறுபசுங் கிளிக்கு யாம் யாது கைம்மாறு செய்வாங் கொல், கூறுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. கன்றொடு கூடிய பிடி மருங்கு அகலாது உறைவது பற்றிப் பிடி புணர்ந் தியலும் யானை என்றார். கன்றுக்காதல், பிடிக் காதல், ஊறு நேராதவாறு காத்தல் கருத்தாமென அறிக. வலன் - வெற்றி; வலியுமாம். இவ்வண்ணம் அன்புகொண் டொழுகுதலின் அண்ணல் யானை எனப்பட்டது. கல் - மலை பரந்துள்ள தினைப்புனம் முற்றும் காணவேண்டுதலின் தனிநிலை இதணம் என்றார். இதணம் - பரண், மரங்களைச் சிறப்பித் துயர்த்தற்கு மந்தியு மறியாமரம் என்றார். “மந்தியு மறியா மரம்பயி லடுக்கத்து1” என்று பிறரும் கூறுதல் காண்க. இரும்பு - இரும்பினாலாகிய அரிவாள் மேனிற்றலின் ஆகு பெயர். விரும்பு கவர் கொண்ட ஏனல் - என்றற்கு மிக்க விருப்பத்தை உண்டாக்கும் ஏனல் என்றலு மொன்று. உருவிற் சிறிதாயினும் தினையின் பெருங்கதிர் கோடலையே கிளி விரும்பிச் செய்யு மாகலின் பெருங்கதிர் என்றும், சிறுபசுங்கிளி என்றும் சிறப்பித்தார்.

தினைவிளைவு கண்ட தமர், தலைமகளைக் காவலின் நீக்கித் தம் மனைக்கட் சென்று சேரப் பணித்தமையையும், அதன்பின் தலைமகள் இல்லின் கட் செறிக்கப்படுதலையும், சிறைப்புறம் நின்ற தலைமகற்குக் குறிப்பாய் உணர்த்தும் கருத்தின ளாகலின் தோழி, அம்ம வாழி தோழி என்றும், கைம் மாறு யாது செய்வாம் என்றும் கூறினாள். யாவருக்கு எனவும் அவர் செய்த எவ்வுதவிக்கு எனவும் தலைமகள் உள்ளத்தும் தலைமகன் உள்ளத்தும் ஆராய்ச்சி நிகழத் தலைப் பட்டமை கண்ட தோழி, நாம் காத்த தினை இனிது விளைய வும், தமர் கண்டு மகிழவும் ஏது, புனத்தினுட் புக்குத் தினையை மேய்ந்து அழியாதொழிந்த அண்ணல் யானையின் அன் புடைச் செயல் என்பாள். கயவாய்க் கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்தியலும் வலனுயர் மருப்பின் நிலன்நீள் தடக்கை அண்ணல் யானை என்றாள். தினைப்புனம் புகுதாமையின் அண்ணல் யானை என்றும், அதற்குக் காரணம் கன்றுடைப் பிடியின் மருங்கினின்றும் அகலாது ஒழுகினமை என்றற்குக் கயவாய்க் கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்தியலும் என்றும், யானையின் வன்மையும் ஆற்றற் பெருமையும் உணர்த்துதற்கு வலுனுயர் மருப்பின் என்றும், நிலனீள் தடக்கை என்றும் சிறப்பித்தாள். யானை முதலிய விலங்குகள் புகுந்து அழிவு செய்யாமையின், தினைக்கதிரும் இரும்பாலாகிய அரிவாளா லன்றி அறுக்க முடியாத அளவு வளம்படப் பெருத்து விளைந்திருந்தமை தோன்ற இரும்பு கவர் கொண்ட ஏனல் பெருங்குரல் என்றும், அதனால் சிறுகிளிகளால் கதிர்கள் கொள்ளப்படாமை பற்றி, பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளி என்றும் கூறினாள். அண்ணல் யானைக்கும், சிறு பசுங்கிளிக்கும் நாம் யாது கைம்மாறு செய்யவல்லேம் என்றும்; இதனால் நாம் குன்ற வெற்பனொடு கூடிப்பெற்ற விளையாட்டின்பம் இடையீடு படாது இயன்ற தென்றும்; இனி இற்செறிக்கப் படுதலின் யாம் யாது செய்வே மென்று தலைமகன் உணரக்கூறினாள். கன்றினைப் பேணி யுறையும் பிடியானையின் பொருட்டு அண்ணல் யானை அதனைப் பிரியாது புணர்ந்தியலும் என்றதனால், தலைமகள் தனக்குரிய வாழ்க்கைத்துணையாய் மனையறம் புரிதற்பொருட்டுத் தலைமகன் அவளை வரைந்து கோடல் வேண்டு மெனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறு.

பெருங்குன்றூர் கிழார்


தலைமகளது காதலுறவு பெற்றுக் களவின்கண் ஒழுகி வரும் தலைமகன், அவள் உள்ளத்தே காதலுணர்வு சிறந்து மாண்புறுவது கருதி வரைவினை நீட்டித்து வந்தான். வருபவன் குறியிடத்தே வந்து நீங்கும்போ தெல்லாம், தோழி அவனை எதிர்ப்பட்டுக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் வரைவு கடாவி வந்தாள். அவனது கருத்தை உணராமையான் தலைமகளும் அவனது அழிவில் கூட்டத்தில் ஆர்வமிக்கு அதனைப் பெறலாகாமையின் பெரிதும் வருந்துவா ளாயினாள். அவளுடைய வருத்தம் கண்ட தோழிக்கு ஆற்றாமை மிகுந்தது. அவட் குண்டாகும் வருத் தத்தைப் போக்குதல் தோழிக்குக் கடனாதலால், அவள் உள்ளத்து உரன் வீறுகொண்டது. ஒருநாள் தலைமகனைத் தோழி குறி யிடத்தே எதிர்ப்பட்டு, “புலம்பனே, பேரருளாளனாகிய நீ இப்போது அருளிலனாய் ஒழுகுதல் கொடுமையாகும்; நெல் வயலில் வளர்ந்து மலர்ந்திருக்கும் நெய்தல், நெல்லை அரிவோ ருடைய அரிவாள் உறுதலால் நனைந்து நீர் துளிப்பது போல, நின்னை நயந் துறையும் தலைவியின் கண்கள் அழுகையால் நனைந்து நீர் துளித்த வண்ணம் இருக்கின்றன; அதனைக் கண்டும் நீ அவள்பால் அருள்புரியாமை நன்றன்று” என்று கூறினள்.

தோழியின் இக்கூற்றின்கண், தலைவியின் வேட்கை மிகுதியை அவள் சொரியும் கண்ணீராற் காட்டி அவனை வரைதலைக் கருதாது நீட்டித்தலை உள்ளுறையால் குறிப் பித்தமை கண்ட பெருங்குன்றூர் கிழார், அதனை இப்பாட்டின் கண் அமைத்துப் பாடுகின்றார். தலைமகன் பால் ஆகாதன தோன்றக் கண்டவழி அதனை எடுத்துக்காட்டி நெறிப்படுத்தும் தோழியின் உரனுடைமை ஆசிரியர் உள்ளத்தைப் பணி கொள்வது ஈண்டு நோக்கத்தக்கது.

அருளாய் ஆகலோ கொடிதே 1இருணிறக்
குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்
2தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப 3கண்டி சின் பொறையன்
கல்லென் புள்ளின் கானலந் தொண்டி
நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்றெனப்
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீரலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும்நீ நயந்தோள் கண்ணே.

இது, களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

உரை
அருளாய் ஆகலோ கொடிது-அருளாது ஒழிகுவை யாயின் அது மிகவும் கொடிய செயலாம்; இருள் நிறக் குருளை நீர்நாய்-கரிய நிறத்தையுடைய நீர்நாயின் குட்டி; கொழுமீன் மாந்தி-தான் உறையும் கழியின்கண் வாழும் கொழுவிய மீன்களை யுண்டு; தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் -தில்லைமரங்கள் நின்ற கானற் சோலையின்கண் படுத் துறங்கும்; மெல்லம்புலம்ப - மென்புலமாகிய நெய்தல் நிலத் தலைவனே; கண்டிசின் நீயே - காண்பாயாக; பொறை யன்-சேரமானாகிய பொறையனுடைய; கல்லென் புள்ளின் கானலம் தொண்டி - கல்லென்ற ஒலியையுடைய புள்ளினம் வாழும் கானற் சோலைகளையுடைய தொண்டிநகர்க்கண் உள்ள வயற்பகுதிகளில்; நெல் அரி தொழுவர் கூர்வாள் உற் றென-நெற்க திரை அறுக்கும் களமருடைய கூரிய வாள் உறுதலால்; பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் - பலவாகிய இதழ்கள் பொருந்திய குவியாது விரிந்திருக்கும் நெய்தற்பூ; நீர் அலைத் தோற்றம் போல - நீரில் நனைந்து தண்ணீர் துளித்துத் தோன்றுவது போல; ஈரிய கலுழும் - கண்ணீரால் நனைந்து நீர் துளித்து அழாநிற்கும்; நீ நயந்தோள் கண் - நீ காதலித் தொழுகும் இவள் கண்கள் எ-று.

மெல்லம் புலம்ப, தொழுவர் கூர்வாள் உற்றெனக் கூம்பா நெய்தல் நீரலைத் தோற்றம் போல நீ நயந்தோள் கண்கள் ஈரிய கலுழு மாகலின், நீ அருளாயாகல் கொடிது, நீ கண்டிசின் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நீர்நாயின் குருளை கரு நிறம் உடைமை பற்றி இருணிறக் குருளை யெனப்பட்டது. குருளை - குட்டி, தில்லை - ஒருவகை மரம்; இதன் தளிர் துறவிகளின் சடைபோலத் தோன்றும் என்பர். “தில்லை யன்ன புல்லென் சடை1” என்பது காண்க. பொதும்பு, புதர், பள்ளி கொள்ளும் என்பது ஒருசொல்லாய் உறங்கும் என்னும் பொருள்பட வந்தது. பொறையன் - சேரமான்களில் பொறை நாட்டுக் குரியவன், பொறைநாடு நெடும்பொறை நாடு, குறும்பொறை நாடு எனக் பிற்காலத்தே இரண்டாய்ப் பிரிந்து இயன்றது; குறும்பொறை நாடு இப்போது குறும்பர் நாடு என மருவி வழங்குகிறது; நெடும்பொறை நாடு2 கல்வெட்டுக் களில் காணப்படுகிறது. கண்டிசின் - ‘சின்’ முன்னிலைக்கண் வந்தது, தொண்டி நகர்க்கு அணிமையிலுள்ள கானற் சோலை யில் புள்ளினம் நிறைந்து ஆரவாரம் செய்தல் பற்றி, கல்லென் புள்ளின் கானல் என்றார். தொழுவர் - நெல் அறுக்கும் உழவர்; களமர் எனவும் கூறப்படுவர், கூர்வாள் - கூரிய வாயை யுடைய அரிவாள், மாலையில் கூம்புதலின், பகற்போதில் கூம்பாது நிற்கும் நெய்தல் கூம்பா நெய்தல் எனப்பட்டது. நீர் அலைத் தோற்றம், நீரில் நனைந்து நீர்த்துளி சொரியத் தோன்றும் நிலை, நயந்தோள், செயப்பாட்டு வினைப்பொருட் டாய செய்வினை; செயப்படு பொருளைச் செய்தது போலக் கூறிய தென அறிக.

களவே விரும்பி வரைதலை நீட்டித் தொழுகுதலால் ஆற்றாளாகிய தலைமகள்பொருட்டுத் தலைமகனைக் குறி யிடத்தே எதிர்ப்பட்டு வரைவு கடாவும் தோழி, வெளிப் படை, குறிப்பென்ற இருவகையாலும் வரைவுகடாவவும் தெருண்டு வரைய முயலாமையால், உள்ளத்தே வெம்மை மிகுந்து உரைத்தலின், எடுத்த எடுப்பிலே அருளா யாகலோ கொடிது என்றாள். அருளுவை யாயின் இத்துணை நாள் எம்மைத் துயரெய்தி வருந்த விடாது வரைதற்குரியன செய் திருப்பாய்; அதனை இன்றுகாறும் செய்யாமையின் எம்மை வரைவால் அருளும் குறிப்புடையை யல்லை யென்பாள்; அருளாய் என்றும், அக்குறிப்பு மிக்க அன்புடையார் செய்யும் செயலன் றென்பாள் அருளாய் ஆகல் கொடிது என்றும் கூறினாள். உள்ளுறையால், வரைவால் அருள்புரியும் கருத் தின்றி களவிற் போந்து இவள்பால் பெறப்படும் நலனுகர்ந்து சென்று நின் மனைக்கண் மடிந்தொழுகுகின்றாய்; அது நின் அருள்நிலைக்கு ஆகாது என்பாள். இருணிறக் குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித் தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும் மெல்லம்புலம் என்றாள். யான் கூறுவ தனை நீ ஏலா தொழியினும் நீயே தலைவி ஆற்றாது புலம்பி யழும் நிலையைக் கண்ணாற் காண்பாயாக என்பாள்.. கண்டிசின்என்றாள். நெல்லரியும் தொழுவருடைய கூர்வாள் உறுதலால், கூம்பர் நெய்தல் நீரில் நினைந்து தோன்றும் என்றது; நலன் நுகர்வான் போதரும் நின், வரையாது நீட்டித்த லாகிய கொடுமையால் தலைமகள் துயருற்று வருந்து வாளாயினாள் என்றவாறு; “இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும், உவம மருங்கில் தோன்று மென்ப” என்பதனால், தோழி துனித்துக் கூறுதல் அமையும் என்க. தன்னால் விரும்பப்பட்டோர் துயருற்று வருந்த விடுதல் தலைமக்கட்கு நேரிதன்மையின், அதனை அவர்தாம் நேரிற் காணின் ஆவன செய்து உடனே அதனை மாற்றுவ ரென்பது பற்றி நீ கண்டிசின் என்றும்; நின்னை எதிர்ப்படும் போதெல் லாம் நின்பால் உள்ள பெருங்காதலால் தன் துயரை மறைத்து, இன்முகமும் மலர்ந்த நோக்கமும் காட்டி மகிழ்கின்றாளாகலின், நீ அறிந்தினல் இப்போது காண் என்றற்கு, ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண் கண்டிசின் என்று கூறினாள். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு விரைய வரைவானாவது.

வெள்ளைக்குடி நாகனார்


மனையறம் புரிந்தொழுகும் தலைமக்கள் வாழ்வில், தலை மகன் பொருள்குறித்துத் தன் மனைவியிற் பிரிந்து செல்வா னாயினன். தலைமகன் நெடுஞ்சேய்மையிலுள்ள நாட்டுக்குச் சென்றிருந்தமையின் அவனிட மிருந்து செய்தி வருவது அரு கிற்று. அவனது நலமும் வரவும் உரைக்கும் தூது வாராமையால் தலைமகட்கு ஆற்றாமை மிகுந்தது. தோழி முதலாயினோர் எத்துணையோ அறங்களையும், அன்புறு நிகழ்ச்சி களையும் எடுத்தோதி அவளை வற்புறுத்தினர்; எனினும் அவளுடைய காதலுள்ளம் அமைதி பெறாது ஆற்றாமையால் அல்லல் உழந்தது. அன்று மாலைப்போதில் முழுத்திங்கள் விண்ணிலே எழுந்து தன் தண்ணிய வெண்ணிலவைத் தரைமீது சொரியலுற்றது. பிரிந்த காதலர்க்கு வெண்ணிலவும், தண்பொழிலும், தென்றற்காலும், காமநோயை மிகுவித்துத் தம்மாற் காதலிக்கப்பட்டாரை நினைந்து வருந்தச் செய்வது இயற்கை. அதனால், தலைமகட்குக் காதல்வேட்கை கைம்மிகுந்தது. ஆகவே, அவள் திங்களை நோக்கி, “நிறைமதியே, கலைநிறைவும் நடுவுநிலையும் உடையை யாதலின் நின்னை ஒன்று இரந்து கேட்கின்றேன்; என் காதலர் சென்றுறையும் இடம் இப்பொழுது அறியேன்; அதனால் என் நெஞ்சமும் ஆற்றாது அலமருகின்றது; என்பால் அருள்கூர்ந்து அவர் உறையும் இடத்தினை எனக்கு இயம்பு வாயாக; நின் ஒளி பரவாத உலகம் யாண்டும் இன்மையின் அவர் உறையுமிடத்தை நீ நன்கு அறிந்திருக்கின்றாய்” என்றாள். அவள் கூற்றுக்கு வானுறையும் திங்கள் ஒன்றும் விடை வழங்கவில்லை. தலைமகட்குத் திங்கள்பால் வருத்தமும் வெகுளியும் தோன்றின. “என் காதலரைப் பிரிந்தமையால் என் தோள்கள் நாடோறும் மெலிவதுபோல் நீயும் நாடோறும், நெஞ்சறிய அறிந்த தொன்றனை உரையாது பொய்த்தலால், அறிகரி பொய்த்தாரைப் போலத் தேய்ந்து போகின்றாய்; அது நினக்குத் தகுவதன்று காண்” என்று தனக்குள்ளே வருத்தத்தோடு முனிந்துரைப்பா ளாயினள்.

தலைவியது இம்மொழியின்கண், காதல் கைம்மிக்குக் கையற வெய்திய தலைவியின் நினைவும் சொல்லும் இயங்கும் திறம் இனிது தோன்றக் கண்ட, வெள்ளைக்குடி நாகனார் இப் பாட்டின் கண் அதனைத் தொடுத்துப் பாடுகின்றார்.

பங்கு செறிந்தன்ன 1அங்கட் குடவயின்
பால்முகந் தன்ன 2வால்வெண் ணிலவின்
3மால்பிட அறியா 4மானுறு மதியம்
சால்பும் செம்மையு 5முடையை ஆதலின்
நிற்கரந் துறையும் உலகம் இன்மையின்
எற்கரந் துறைவோர் உள்வழி காட்டாய்
நற்கவின் இழந்தஎன் தோள்போற் சாஅய்ச்
சிறுகுபு சிறுகுபு சேறி
அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே.

இது, நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.

உரை
பங்குசெறிந்தன்ன - வானத்தின்கண் ஆழ்ந்த வளை யமைத்து அதன்கட் பதிய வைத்தாற் போன்ற; அங்கண் குடவயின் பால் முகந்தன்ன - அழகிய குடத்தின்கண் பாலைக் கறந்து வைத்தாற் போன்ற; வால் வெண்ணிலவின் - மிகவும் வெண்மையான நிலவை யுடைய; மால்பு இட அறியா மரன் உறு மதியம் - ஏணிக் கெட்டாத மரத்தின் உச்சியின்கண் தோன்றும் முழுமதியமே; சால்பும் செம்மையும் உடையை யாதலின் - கலைநிறையும் நடுநிலைச்செலவு முடையை யாதலி னாலும்; நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின் - நின்னை அறியாது மறைந்துகிடக்கும் நிலப்பகுதியான உலகம் எங்கும் இன்மையாலும்; எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய் - யான் அறியாவண்ணம் உறையும் காதலர் உள்ள இடத்தைக் காட்டுகின்றாயில்லை; நற்கவின் இழந்த என் தோள்போல்-நல்ல அழகிழந்து மெலியும் என் தோள்களைப்போல; சாஅய்ச் சிறுகுபு சிறுகுபு சேறி-மெலிந்து சிறிது சிறிதாகத் தேய்ந்து செல்கின்றாய்; அறிகரி பொய்த்தலின்-அறிந்ததொன்றனைக் கூறாது பொய்த்தலால்; அது ஆகுமோ-அத்தேய்வு நிகழ் கின்றது கொல்லோ; அஃது ஆகாது, காண் எ-று.

மதியமே உடையையாதலின், உலகம் இன்மையின், உள்வழி காட்டாய்; அறிகரி பொய்த்தலின், தோள்போல் சாஅய்ச் சிறுகுபு சிறுகுபு சேறி; அது ஆகுமோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. பங்கு - மண்சுவர்களிலும் நிலத்திலும் அமைந்த ஆழ்ந்த அளை; இது வங்கு என்றும் வழங்கும். வானத்தே இயங்கும் மதியம் வீழாமல் புதையுண்டது போலத் தோன்றுதல் பற்றிப் பங்கு செறிந்தன்ன என்றார் போலும் செறித்தன்ன எனற்பாலது மெலிந்து நின்றது. வால் வெண் ணிலவு, “வால்வெள்ளேறு” என்றாற் போல வந்தது. பங்கு செறிந்தன்ன மதியம், பால் முகந்தன்ன நிலவின் மதியம், மரனுறு மதியம் என இயையும். மால்பு - கண்ணேணி, மரத்தின் உச்சிக்கண் தங்கியதுபோலத் தோன்றக் கண்டு கூறுதலின் மானுறு மதியம் எனப்பட்டது. சால்பு - நிறைவு; ஈண்டுக் கலைகளின் நிறைவு மேனின்றது. உலகம் - நிலத்தின் பகுதியான நாடு; “மைவரையுலகம்;” என்றாற்போல. காட்டாய், எதிர் மறை முன்னிலை முற்றுவினை, அறிகரி, அறிந்த சான்று. அதி கரி பொய்த்தல் பெருங்குற்றம் என்க; “அதிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை1” என்ப பிறரும்.

தலைமகன் பிரிவின்கண் தோன்றிய வேட்கை கைம்மிக்கு அரற்றும் நெஞ்சினளான தலைமகள், விண்ணில் தோன்றும் முழுத்திங்களைக் கண்டு அதனோடு உரையாடலுற்றவள், “மதியமே, வானத்தின்கண் நன்கு செறிவுற்றுக் குடத்திடை நிறைந்த பால்போல் மிகவும் வெள்ளிய நிலவு கொண்டு விளங்குகின்றாய் என உயர்சொற் கிளவியால் பங்கு செறிந் தன்ன என்றும், அங்கட் குடவயின் பால் முகந்தன்ன வால்வெண் ணிலவின் மதியம் என்றும் பாராட்டினாள். கலை நிரம்பிய - சான்றோர் மாட்டு உளவாய சால்பும் செம்மையும் நின்பால் சிறக்க உண்டெனப் புகழ்வாள், சால்பும் செம்மையும் உடையை என்றாள். வானத்திடத்தே இயங்கு மாயினும் மரத்தின் உச்சிக்கண் தங்கினாற் போலத் தோன்றும் எளிமையை வியப்பாள் போல மானுறு மதியம் என்றாள். மரத்தின் உச்சிக்கண் தோன்றினும் மக்கள் மால்பிட இயலாத உச்சி என்னும் ஒட்பம் விளங்க மால்பிட வறியா மான் எனப்பட்டது. கலை நிறைந்து விண்ணிடத்தே நின்று செம்மை திறம்பாது நிலவுப்பொழிந்து, மரத்தின் உச்கிக்கண் தங்கினாற் போல எளிமைக்காட்சி வழங்கும் மதியமே எனத் தலைவி புகழ்ந்தது; தனது வேண்டுகோட்கு இரங்கித் தன் காதலன் உறையும் இடத்தைத் தனக்குக் கூறல் வேண்டு மென்றற்கு. மதியம் அதனை உரையாமையால், அவள் உள்ளத்தே புலவி கொண்டு என்பால், அருள் கொண்டு அவர் உறையும் பீடம் கண்டு பொய்ம்மை கலவாது உரைப்பாய் என்பாள். சால்பும் செம்மையும் உடையை யாகலின் என்றும் வானத்தை நோக்க நிலவுலகு இடம் சிறிதாகலினாலும், மதியத்தின் நிலவொளி நிலவுலகு முழுதும் பரந்து விளங்குதல் பற்றியும் நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின் என்று வேண்டி நின்றே னாக. நீ என்பால் இரங்கி அவர் உறைவிடம் கூறா யாயினை என்பாள் என் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய் என்றாள். அறிந்த தொன்றனை உரையா தொழிதல் அதிகரி பொய்த்த குற்றமாம் என்றும், அக்குற்றம் செய்தோர் எய்தும் தீங்கினை நீயும் எய்துகின்றாய் என்பாள். என் தோள் போர் சாஅய்ச் சிறுகுபு சிறுகுபு ரேறி என்றும் கூறினாள். என் தோள் நலம் சிறுகித் தேய்தல் என்னொருத் திக்கே தீதாகும்; நின்பால் உளதாகும் தேய்வு நினக்கும் உலகிற்கும் ஆகாது; நீ அறிகரி பொய்த்தலின் நினக்குத் தேர்வு உளதாயிற்று; அவ்வாறு ஆகுமாறு ஒழுகுதல் நினக்குத் தகவன்று என்பாள். அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே என்றாள். அயாவுயிர்த்தல் இதனால் தலைவிக்கு உளதாகும் பயன்.

நக்கீரர்


காதற் காமத் தொடர்புடைய தலைமக்களிடையே கள வின்கண் மேற்கொள்ளும் செயல்வகை யாவும் காதல் மாண் புறுவது குறித்தும் அது சிறந்தவழி வரைந்து கற்பு நெறியைக் கைக்கொள்வது குறித்துமே யாகும். அதுபற்றியே கற்பென்பது களவின் வழித்து எனக் கட்டுரைத்தனர். கற்பின்கண் இருவரும் பெறுவது அழிவில் கூட்டம். அதுவே இம்மை வாழ்வின் பய னாம் என்பது பண்டைநூற் கொள்கை. களவின்கண் இயற்கைப் புணர்ச்சி தொடங்கிப் பகற்குறி இரவுக்குறி முதலிய துறைகளாற் பெறப்படும் கூட்டம், பிரிவு இடையிட்டமையின் அழிவில் கூட்டமாகாது என்றும், அதனால், அழிவில் கூட்டம் பெறு வதையே தலைவியின் இளமை நெஞ்சம் அவாவி நிற்குமென்றும் அறிக. திருமணத்துக்குரிய செவ்வி எய்திய மகளிர், மணத்தற் குரிய ஆடவர் எவர்க்கும் பொதுவாய் இலங்குதலின், ஒருவர் பால் காதற்றொடர்பு உளதாயவழி அப்பொதுமை நீங்குதலால், இன்னாற்கு இவள் உரிய ளாயினாள் என்ற சிறப்பு உண்டாக்கு வது வரைவு. பலர் கண்டு கருத்தைச் செலுத்த நிலவும் பொதுமை, சிறந்தார் ஒருவருடன் தொடர்புண்டாயவழிக் கற்புடைத் தலைமகட்குப் பெருவருத்தத்தைச் செய்யு மாகலின் அவள் அப்பொதுமை நீக்கும் வரைவினையே களவின்கண் பெரிதும் நாடுவள். அது பற்றியே வரைவு வேட்கையை “ஒருதலை உரிமை” வேண்டல் என ஆசிரியர் எடுத்துரைத்தார். தலை மகளினும் தலைமகன் தனித்தியங்கும் தகுதியுடைய னாகலின், அவனுள்ளம் தன்பால் வீழ்ந்தாய்போலப் பிறாண்டும் வீழ்தற்கிட னுண்மை நினைந்து தன்னிற் பிரிந்து போவனோ என்ற அச்சம் வேறு தலைமகளின் நெஞ்சின்கண் தோன்றும். களவு நிகழ்ச்சி களால் காதல் சிறந்தவழி, உடனே நிகழ்தற்குரிய வரைவு நீட்டியாது நிகழ்தல் நன்று. நீட்டிக்குமாயின், தலைவியின் உள்ளம் பேரச்சமும் பெருங் கலக்கமும் எய்தி வருந்தும்; இன்பத் துறையில் தனியியக்க மின்மையின், மகளிரைப் பூவே யனையர் என்றும், பரந்த இயக்க முண்மையின் ஆடவரை வண்டோ ரனையர் என்றும் பண்டையோர் கருதினர்; தேனுண்ட வண்டு பூவின் நீங்குதல் போலத், தன் நலன் நுகர்ந்த தலைமகன் தன்னின் நீங்குவனோ என மகளிர் அஞ்சினர். அதனால் வரைதற்கு முன்னர் அவ்வச்சம் பெருகி அவருடைய உள்ளத்தை வருத்துவது இயல் பாயிற்று. அறம் கருதாத ஆடவர் பலர் வரையா தொழிந்த தவற்றால், உயிர் துறந்த மகளிரும் வரைவில் மகளிரா னோரும் பலர். தலைமகன் வரைவு நீட்டித்தானாயின், அச்ச மிகுதியால் தலைமகள் அவனை வெகுண்டு வற்புறுத்தற்கும் அஞ்சுவள். தலைமகன் வரைதற்கு முன்னே இன்றியமையாத பொருள் குறித்துப் பிரிந்து சென்றான். செல்லுவோன் தலைமகள் பால் விடை பெறுங்கால் தான் மீண்டு வரும் காலத்தையும் குறித்துச் சென்றான். குறித்த பருவம் வந்தது; அவன் வரவு தாழ்த்தது; அதனால் வரைவு நீட்டிப்ப தாயிற்று. தலைவியின் உள்ளம் அச்சமும், அவலமும், எய்தி உயிர் விடுதலன்றி வேறு வாயிலின்மையை எண்ணத்தலைப்பட்டது. அதனை உணர்ந்த தோழி தலைமகனது உள்ளத்தின் ஒருமையை எடுத்தோதி வற்புறுத்துவாளாய், ‘தொடி நெகிழ்ந்து ஓடுமளவில் என் தோள்கள் மெலிந்தன; நுதலும் பசந்து வண்ணம் வேறுபட்டது; கண்களும் ஆற்றாமையால் அழுது நனைந்தன; இனி உயிர்விடுத லல்லது செயல் வேறில்லை என்று சொல்லி வருந்துகின்றாள். தோழி, இனி அழுதலை ஒழிக; நம் தலைவர் கார்ப்பருவத்தே வருவர் எனக் குறித்துச் சென்றதை மறந்தாய் போலும்; அதோ பார்! கார்முகில்கள் நின் கூந்தல் போல் கருத்து, மகளிர் கையில் அணிந்த பொற்றொடி போல மின்னிப், பல முரசுகள் ஒருங்கே கூடி முழங்குதல் போல முழக்கம் செய்து, மன்னர் மதில்மேல் நிறுத்திய தோற்கிடுகு போல, நம் தலைவர் சென்ற நாட்டின்கண் தழைந்து செல்கின்றன; அவற்றைக் கண்டதும் நம் காதலர் தாம் குறித்த பருவம் வந்தமை எண்ணி விரைந்து போந்து வரைந்து கொள்வர், காண்” என வற்புறுத்தினாள்.

தோழியின் இக்கூற்றின்கண், தலைவி ஆற்றாமையால் மொழிந்த வற்றைக் கொண்டெடுத்துக் கூறி, தமது கற்புத் துணையாக மனையிருந்து வாழும் மகளிர் பலரைக் காட்டி அவர் தொடிபோல மழை முகில் மின்னுதல் உரைத்துக் கார்முகில் வரவுணர்த்தி ஆற்றுவிப்பது கண்ட நக்கீரர், இப்பாட்டின்கண் அதனை அமைத்துப் பாடுகின்றார்.

தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே
பீரிவர் மலரிற் பசப்பூர்ந் தன்றே
கண்ணும் தண்பனி வைகின 1மன்னோ
தெளிந்தன மன்ற தேயர்என் உயிரென
ஆழல் வாழி தோழி நீநின்
தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் 2உண்டுறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோற்
பொலந்தொடி போல மின்னிக் 3கணங்கொள்பு
இன்னிசை முரசின் இரங்கி மன்னர்
எயிலூர் பஃறோல் போலச்
சென்மழை தவழுமவர் நன்மலை நாட்டே.

இது, வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்று வித்தது.

உரை
தோள் தொடி நெகிழ்ந்தன - என் தோள்கள் தொடி கழன்று ஓடுமாறு மெலிந்துவிட்டன; நுதல் பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்று - என் நெற்றியும் பீர்க்கொடியிற் பூத்த பூப்போலப் பசந்தொழிந்தது; கண்ணும் தண்பனி வைகின - கண்களும் தண்ணிய நீர்த்துளிகளைச் சொரிவன வாயின; தெளிந்தனம் மன்ற - அவர் நம்மை மறந்தாரென்பதைத் தெளிய உணர்ந்துகொண்டோம்; தேயர் என் உயிரென - தேய்ந்து கெடுக என் உயிர் என்று புலந்து; நீ ஆழல் - நீ வருந்தாதே, கொள்; தோழி-; வாழி-; நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் - நின்னுடைய தாழ நீண்ட தழைத்த கூந்தலைப் போல; வீழ்ந்த காலொடு - வானினின்று நிலத்தளவு காறும் கால் வீழ்த்துக் கொண்டு; வண்டுபடு புதுமலர் உண்டுறைத் தரீஇய - வண்டு மொய்க்கப் புதிது மலர்ந்த பூக்களை நீர் கொள்ளும் துறைக்கண் கொணர்ந்திட்ட; பெருருமட மகளிர் முன்கைச் சிறுகோல் பொலந் தொடி போல - மிக்க மடப் பத்தையுடைய மகளிர் முன்கையிலணிந்த சிறிய திரண்ட பொற்றொடியைப் போல; மின்னி - ; கணங் கொள்பு - கூட்டமாய்த் திரண்டு; இன்னிசை முரசின் இரங்கி - இனிய ஓசையையுடைய முரசுபோல முழங்கி; மன்னர் எயிர் ஊர் பல்தோல் போல - மன்னர்கள் தம் மதில்மேல் நிறுத்திய பலவாகிய தோற்கிடுகுகளைப் போல; செல்மழை - செல்லும் கார்முகில்கள்; அவர் நன்மலை நாட்டுத் தவழும் - அவர் சென்றிருக்கும் நல்ல மலைநாட்டில் தவழா நிற்கும், காண் எ-று.
தோள் தொடி நெகிழ்ந்தன, நுதல் பசப்பூர்ந்தன்று, கண் பனி வைகின, தெளிந்தனம் மன்ற, தேயர் என் உயிர் எனத் தோழி ஆழல்; வாழி; நன்மலைநாட்டு மழை, மின்னி, இரங்கி, தவழுமாகலான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தோள் தொடி நெகிழ்ந்தன, நுதல் பசப்பு ஊர்ந்தன்று என்பன. இடத்துநிகழ் பொருளின் வினை இடத்தின்மேல் நின்றன வாம். பீர் இவர் மலர் என்றார், பீர்க்கங் கொடியின் மேற்பட நின்று மலர்ந்து விளங்குதலின். ஊர்தல் - பரத்தல், தண்பனி - ஈண்டுக் கண்ணீர் மேற்று, ‘மன்னும்’ ‘ஓவும்’ அசைநிலை, நம்மை மறந்தாரென் பதைத் தெளிந்தனம் என்க. மன்ற - தெளிவுப்பொருட்டு, தேயியர், தேயர் என நின்றது, புலந் தென்பது சொல்லெச்சம், முழந்தாள் அளவும் தாழ்ந்து நீண்ட கூந்தல் என்றற்குத் தாழ்ந்தொலி கதுப்பு என்றார். நீராடப் போந்த இளமகளிர், தமக்கு நற்கணவர் வாய்த்தற் பொருட்டு நீர்த்துறைக்கண் பாவை நிறுத்திப் புதுமலர் சூடி வழி படுவது மரபாகலின், அவ்வியைபு தோன்ற வண்டுபடு புதுமலர் உண்டுறைத் தரீஇய பெருமட மகளிர் என்றார். மழை மின்னுக்குப் பொலந்தொடியின் ஒளி உவமம். பொலம் - பொன், கணம் - கூட்டம், மகளிர் பாவை நோன்பு அயரு மிடத்து முரசுகள் ஒருபால் முழங்குதலின், அவற்றின் இனிய முழக்கத்தை ஈண்டு உவம மாக்கினார். தோல் - தோற்கிடுகு. மதின்மேல் நிறுத்தப்பட்ட தோற்கிடுகுகள் கருமுகில் படிந் தாற் போலத் தோன்றும் என அறிக.

தலைமகன் வரைவு நீட்டிப்பது கண்டு ஆற்றாளாகிய தலைமகள், தான் மேனி வாடி மெலியுந் திறத்தைத் தோழிக்குக் காட்டுவாள்; தோள் தொடி நெகிழ்ந்தன என்றும், பசலை பாய்ந்தமையை நுதல் பீரிவர் மலரிற் பசப்பூர்ந்தன்று என்றும், ஒருதலை உரிமை வேண்டி நிற்கும் உள்ளத்தில்எழும் அச்சத்தாற் கருத்தழிந்து கையறவு எய்தும் திறத்தை, கண்ணும் தண்பனி வைகின மன்னோ என்றும், தலைமகன் குறித்த கார்ப்பருவம் வந்தும் அவன் வாராமை கண்டு அவன் தன்னை மறந்துவிட்டான் எனத் தான் தெளிந்தமை தோன்ற, தெளிந் தனம் மன்றதேயர் என் உயிரென்றும்; எனவே, தான் உயி ரோடு வாழ்தலால் இனிப் பயன் இன்மையின் இறத்தலே தக்க தென்பாள் தேயர் என் உயிர் என்றும் தலைமகள் கூறினாள். இவ்வாறு மெலிவு காட்டியும், அச்சம் உணர்த்தியும், தான் இறந்துபாடு விழைதலைத் தலைவிபால் கேட்டதோழி, தலைவர் குறித்த கார்ப்பருவம் இப்பொழுதுதான் தொடங்கு கிறது; இப்பொழுது காண் கார்முகில்கள் எழுந்து காதலர் சென்றுறையும் மலைநாட்டுக்குச் செல்கின்றன; அவற்றைக் கண்டதும் அவர் குறித்த சொல் நினைந்து தவறாது வருவர் என்று சொல்லி ஆற்றுவிப்பாளாய்; நின் கூந்தல் உச்சிமுதல் அடிகாறும் தாழ்ந்து வீழ்ந்திருத்தல் போலக் கார்முகில் வானத்திலிருந்து நிலங்காறும் கால் வீழ்ந்திருப்பது காண் என்பாள்; நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த கால் என்றும், விடியலில் இளமகளிர் நல்ல கணவன் வாய்த்தற் பொருட்டுப் புதுமலர் கொண்டு நீர்த்துறை சென்று பாவை நோன்பு புரியும் திறத்தை நற்குறியாகக் காட்டுவாளாய், வண்டுபடு புதுமலர் உண்டுறைத் தரீஇய பெருமட மகளிர் என்றும், அவர் முன்கையில் அணிந்த பொற்றொடி மின்னுதல் போலக் கார்முகில் மின்னும் என்பாள், பொலந் தொடி போல மின்னி என்றும்; பாவைநோன்புக்கு மங்கலமாக முரசுகள் பல முழங்குதல் காட்டி இன்னிசை முரசின் இரங்கி என்றும் கூறினாள். மன்னர் தம் எயில் காப்பாக நிறுத்திய தோற்கிடுகுபோல, இம்மழைமுகில் அவர் உறையும் நாட்டு நன்மலையில் தவழ்ந்து தோன்றும் என்பாள், மன்னர் எயிலூர் பஃறோல் போலச் செல்மழை தவழும் அவர் நன்மலை நாட்டே என்றாள்; மலைமுடியில் தவழும் மழைமுகில் மன்னர் எயில்மிசை நிறுத்திய கிடுகுபோலத் தோன்றிக் காப்புடமை புலப்படுத்துவது போல, அவர் நாட்டில் தோன் றும் இம்மழை நம் உயிர்காத்தற்குரிய காப்பாதலைக் குறிப்பாய் உணர்த்திற்று; ஆகவே நீ அழுதல் வேண்டா என்பாள். ஆழல் என்றும், மழைமுகிலைக் கண்ட மாத்திரையே நொடிப் போதும் தாழ்க்காது போந்து நின்னை வரைந்துகொள்வ ரென்பது இம்மங்கலக் குறிகளால் ஒருதலை யெனத் துணி விக்கின்ற தென்பாள் வாழி என்றும் கூறினாள். இவ்வாற்றால் தலைவி ஆற்றியிருப் பாளாவது பயன்

கயமனார்


களவு நெறியில் காதலுறவு கொண்டு ஒழுகிவரும் தலை மக்களிடையே காதல் சிறந்து ஒருவரை யொருவர் இன்றி யமையாத அளவில் பெருகியதும், தலைமகன் தலைமகளை வரைந்து கோடற்கு முயற்வானாயினன் நொதுமலர் வரைவு வேண்டல் முதலிய இடையீடு களால் வரைவு இனிது நிக ழாமைக் குரிய சூழ்நிலை தோன்றிற்று. தலைமகளும் இரவினும் பகலினும் தலைமகனைத் தலைக்கூடாத வகையில் இற்செறிப்பு மிகுதலால் பெரிதும் கலங்கி வருந்துவாளாயினள். இவ்வாற்றால் உடன் போக்கல்லது வேறு வாயிலின்மையைத் தலைமகன் உணர்ந்தான். தலைவியும், தோழியும் ஓர்ந்து போக்குக் குடன் பட்டனர். குறித்ததோர் நாளீரவில் தலைமகன் தலைமகளைத் தான்னூர்க்குக் கொண்டுசென்று அங்கே சான்றோர் சான்றாக அவளை வரைந்து கொண்டான். இரவின்கண் தலைமகள் தலைமகனோடு உடன்போயினாள் என்ற செய்தி இதற்கிடையே தாய்க்கும், தமர்க்கும் தெரிந்தது. தலைமகளைத் தேடிச் சென் றோருள் செவிலியும் ஒருத்தி. அவள் வழியிடையே உடன் போக்காகிய ஒழுக்கத்தை மேற்கொண்டு எதிரே இருவர் வரு வதைக் கண்டாள். தொடக்கத்தில் அவ்விருவரையும் தன் மகளும் அவள் கணவனும் என்று நினைந்து மயங்கி மகிழ்ந்த செவிலி, உண்மை வேறாதல் கண்டு ஏமாற்றமுற்றாள். ஆயினும், எதிர்வந்த மகளை நோக்கி, “முன்னாள் இவ்வாறே புணர்ந்துடன் போகிய என் மகளை யொப்பாய், எதிரே என் மகள் செல்லக் கண்டாய் கொல்லோ? அவள் வாலெயிறும் சில்வளையும் பல் கூந்தலு முடையள்; அவள் தந்தையின் ஊர் இது; அவளைத் தேடி வந்தேன் யான்; உரைமின்; உம்மைத் தொழுது கேட்கின்றேன்” என்று வினவுகின்றாள்.

செவிலியின் இக்கூற்றின்கண், தகவுற வளர்த்த தாயொருத்தி யின் தாய்மையுள்ளம், தன் மகள் தன்னை அறியாமல் பிரிந்தவழி எய்தும் துன்ப நிலையும், காணாது வருந்தும் தனக்குக் “கண்டேன்” என்பார்பால் உண்டாகும் அன்புமிகுதியும் விளக்கித் தோன்றக் கண்ட கயமனாரது புலமையுள்ளம் வியப்பெய்த இப்பாட்டு உருவாகி வெளிவந்தது. இப்பாட்டு ஏனோ ஏடுதோறும் பாட வேறுபாடு பல பெற்றுளது.

1சேயென வரூஉம் மதவலி யாவுயர்ந்
தோமை நீடிய கானிடை அத்தம்
2முன்னா உம்பர்க் கழிந்த என்மகள்
3அன்னாய் கண்படு பான்றனிர் அன்றே
கொன்னூர் இடவயின் தொழுவேன் உரைமோ4
கோடேந் தல்குல் அரும்பிய திதலை
5வார்ந்திலங்கு வையெயிற்றுப் போதொடு பொலிந்ததார்ச்
சில்வளைப் பல்கூந் தலளே அவளே
மையணல் எருத்தின் 6மொய்வலித் தடக்கை
வல்வில் 7அம்பின் ஒல்கா வண்மகிழ்த்
தந்தை தன்னூர் இதுவே
8வந்தேன் யானே பொலிக 9நும் புகழே

இது பின்சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.

உரை
சேயென வரூஉம் மதவலி - முருகெனக் காண்போர் கருதுமாறு வருகின்ற வலிமிக்க காளையே; யா உயர்ந்து ஓமை நீடிய கானிடை - யா மரங்கள் உயரவளர்ந்தும் ஓமைமரங்கள் விரியப் பரந்து முள்ள காட்டின்கண்; அத்தம் முன்னா - அரியவழி யென்று கருதாது; உம்பர்க் கழிந்த என்மகள் அன்னாய் - மேலே காளையொருவனுடன் புணர்ந்து சென்ற என் மகளைப் போல்வாய்; கண்படுபு ஆன்றனி ரன்றே - நும்போற் செல்லும் அவர்களைக் கண்டீர் அன்றோ; கொன்னூர் இடவயின் தொழுவேன் - அவளையின்றிப் பொலிவிழந்த இவ்வூரிடத்தே யிருந்து உம்மைத் தொழு கின்றேன்; உரைமோ - கண்டீராயின் உரைப்பீர்களாக; கோடு ஏந்து அல்குல் - பக்கம் உயர்ந்த அல்குலையும்; அரும்பிய திதலை - மெல்லியவாய்த் தோன்றிய திதலையையும்; வார்ந் திலங்குவையெயிற்று - ஒழுங்குற விளங்கும் கூரிய பற்களையும்; போதொடு பொலிந்த தார் - புதுப்பூக்களால் அமைந்த மாலையையும்; சில்வளைப் பல்கூந்தலள் - சிலவாய வளை களையும் பலவாய கூந்தலையு முடையவள்; அவள்-; மையணல் எருத்தின் மொய்வலித் தடக்கை - கரிய வீசையும் தாடியும் கூடிய கழுத்தினையும் மிக்க வலிபடைத்த பெரிய கையையும்; வல்வில் அம்பின் - வலிய வில்லொடு சேர்ந்த அம்பினையும்; ஒல்கா வண்மகிழ் - குறையாத வளவிய கள்ளினையுமுடைய; தந்தை தன்னூர் இதுவே - அவள் தந்தையின் ஊர் இதுவே யாகும்; யான் வந்தேன் - யான் அவளைத் தேடிப் போந்தேன்; நும் புகழ் பொலிக - எனக்கு உரைப்பதால் உங்கள் புகழ் பொலிவுறுக எ-று.

மதவலி, என் மகளன்னாய், கண்படுபு ஆன்றனிர் அன்றே; தொழுவேன், உரைமோ; அவள் கூந்தலள்; தந்தை தன்னூர் இது; யான் தேடி வந்தேன்; நும்புகழ் பொலிக எனக்கூட்டி வினைமுடிவு செய்க. சேய், முருகன், சேயென என்றமையின், கண்டோர் சேயெனக் கருதுமாறென உரைக்கப்பட்டது. ‘முன்னா’, எதிர்மறை வினையெச்சம் ஈறுதொக்கது. செய்யா என்னும் வாய்பாட்டதாகக் கொண்டு முன்னி எனினுமாம். கண்படுபு - காண்டற்கு, கண்படுபு ஆன்றனிர் என்றது காண் டற்கு அமைந்தீர் என்றவாறு. ‘கொன்’, பயனின்மை, கோடு - பக்கம், அரும்புதல் - சிறிதே தோன்றல், திதலை - தேமல், வார்ந் திலங்கல் - உயர்வுதாழ்வின்றி ஒழுங்காக அமைதல். வையெயிறு கூறியது, இளமைநலம் புலப்படற்கு. அணல் - வாயிதழின் மேலும், முக வாயிலும், கழுத்திலும், செறிந்திருக்கும் கரிய வீசையும் தாடியும் குறித்து நின்றது. முதுமை யெய்தாமை தோன்ற மையணல் என்றார். மொய்வலி - மிக்கவலி, ஒல்கு தல் - சுருங்குதல். மகிழ் - கள், வண்மகிழ் கூறியது செல்வ மிகுதி யுணர்த்தற்கு.

மகட் போக்கிய தாய் மனங்கலங்கி அவளைத் தேடிச் செல்லுமிடத்தே எதிரே ஆணும் பெண்ணுமாய் இளையோர் இருவர் வரக் கண்டு, ஆடவன் கையில் வேலேந்தி மெய்வன்மை இனிது விளங்கக் கண்கவர் வனப்புடன் தோன்றியது பற்றி, சேயென வரூஉம் மதவலி என்றாள். அவனுடன் போந்த நங்கையைக் காண்டலும், செவிலிக்குத் தன்மகளான தலைவி நினைவு நெஞ்சின்கண் எழுந்தது; ஒத்த உருவும், ஒத்த இளமை யும், ஒத்த ஒழுக்கமும் கொண்டிருந்தமை கண்ட வியப்பால், உம்பர்க் கழிந்த என்மகள் அன்னாய் என்றாள். உம்பர் - மேலிடம்; அஃதாவது அவ்விருவரும் கடந்து போந்த நெடுஞ் சுரம். அஃது யாமரங்களும், ஓமைமரங்களும் செறிந்து விளங்கிய கானம் என்றும்; அதனிடையே நடந்து வருதலை நினைப்பினும் நெஞ்சு வருந்தும் என்றும் கூறுவாள். யா உயர்ந்து ஓமை நீடிய கானிடை யத்தம் முன்னா என்றாள். அவன் தலைமகனையும் அவள் தலைமகளையும் முறையே காண்பதல்லது இருவரும் இருவரையும் ஒருங்கே காணா ரென்பது பற்றி இருவரையும் நோக்கி, கண்படுபு ஆன்றனி ரன்றே என்று வினவினாள். வழியிடை இயக்குவோரை இன்னார் இப்பெற்றியர் எனக் காண்டல் தொழிலன்மையின், கண்டீர் கொல்லோ என்று வினவிற்றிலள் என அறிக. தலைமகளை இல்லாத ஊர், பயனாகிய பொலிவிழந்து வருத்தம் தருவது பற்றிக் கொன்னூர் இடவயின் என்றும், இருத்தாலாற்றாது தேடி அலமருகின்றே னாகலின் என்னை அருளி உரைமின் என்பாள் தொழுவேன் என்றும், உரைமோ என்றும், செவிலி கூறுகின்றாள். கோடேந்தல்குல் முதலிய மகளின் நலங்களை எடுத்தோதினாள், குறிப்புணர்ந்து கண்டமை கூறுவ ரென்ற வேட்கையால்; தந்தையின் மெய் வன்மையும் வண்மையும் கூறியது; நும்மை எம்மனையிடத்தே வைத்து விருந்தோம்புவல் என்றற்கு. மகளைத் தேடி வந்து வருந்தினமை தோன்ற வந்தேன்யானே என்றும், என் வருத்தம் கண்டு இரங்கி அருளிக்கூறின் நுமக்குப் பேரறமாய்ப் பெரும்புகழ் உண்டாகும் என்பாள் பொலிக நும் புகழ் என்றும் கூறினாள்.

மதுரைத் தமிழ்ச் சங்க ஏட்டில், இப்பாட்டின் துறைக் குறிப்பில், “தந்தையூர் இது வென்றது, அவள் விருந்தோம்பத் தங்கிப் போகலாம் என்றவாறு என்றது; எனது ஆற்றாமை கண்டால் சொல்லுவார்க்கு அறமுண் டென்றவாறு; பொலிக நும் பெயரே என்று பாடங்கொண்ட மையின், பெயரென்பது, சொல்லுக்கு மறுமாற்றம். பொலிக நும்புகழ் என்றுமாம்” என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.

பேரிசாத்தனார்


திருமணம் புரிந்துகொண்டு கற்புநெறியில் சிறந்த வாழ்வு நடாத்தி வருகையில் தலைமகன் கடமை காரணமாகத் தன் மனைவியிற் பிரிந்து சென்றான். பிரிவின்றி யமைந்த இன்பக் கூட்டத்தையே மனைவாழ்வின் பயனாகக் கருதியிருந்த தலை மகட்குத் தலைமகனது பிரிவு மிக்க துன்பத்தைப் பயந்தது. உண்டிமறுத்தும், உடம்புநனி சுருங்கியும், கண்படை யின்றியும், கனவொடு மயங்கியும், தலைமகள் பெரிதும் வருந்துவது கண்ட தோழி, மனைவாழ்வின் இயல்பும், மனைத்தக்காள்பால் இருத்தற் குரிய கற்பு நெறியும் எடுத்துக் கூறித், தலைமகன் வருந்துணையும் அவன் வற்புறுத்துச் சென்ற சொற்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஆற்றியிருத்தற் குரியர்; அதனை நினையாது வருந்து தல் நன்றன்றென வற்புறுத்தினாள். அவளை நோக்கின தலைமகள் “தோழி, யான் ஆற்றேனல்லேன்; தலைமகனது இன்ப முயக் கத்தைப் பெறாத போது, ஆண்டுத் தோன்றும் பனைமரத்தில் கூடமைத்து வாழும் வெண்குருகு அன்றோ என் உள்ளத்தின் திண்மையைச் சிதைக்கின்றது; எங்ஙன மெனில் மீன்வேட்டுச் சென்ற தன் துணைக்குருகு வாராமையால் கூட்ட கத்துத் தனித்துறையும் பெடைக்குருகு அதனை நினைந்து நள் ளிரவுப் போதிலும் நரலுதலை ஒழிவதில்லை; அதனைக் கேட்குந்தோறும் என் உள்ளமும் பிரிந்துறையும் காதலரை நினைந்து வருந்தாநிற்கும்; நாம் இவ்வாறு ஆற்றியிருக்கத் துணிந்தே மாயினும் சூழ்நிலை நம் உள்ளத் திண்மையை உடைத்து உருகுவிக்கின்றது, காண்” என்றாள்.

தலைமகளது இக்கூற்றின்கண், தோழி உரைக்கும் வன்புறை தன்பால் வன்மையின்மையை எடுத்துக்காட்டுவதாக எண்ணித் தன்பால் வன்மையுண்மை கூறலும், அவ்வன்மை வெண்குருகின் குரலால் சிதைதலும் அமைந்திருக்கும் நலம் கண்ட பேரிசாத்த னார் இப்பாட்டின்கண் அமைத்துப் பாடுகின்றார்.

ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடற் குடம்பைப் பைதல் வெண்குருகு
நள்ளென் யாமத் துயவுதோ றுருகி
1அள்ளல் அன்னஎன் உள்ளமொ டுள்ளுடைந்
2துளனே வாழி தோழி வளைநீர்க்
கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்
3வாங்குதலைத் தூண்டில் ஊங்கூங் காகி
வளிபொரக் கற்றை 1சாஅய நளிசுடர்
நீனிற விசும்பின் மீனொடு புரையப்
பைபய இமைக்கும் துறைவன்
மெய்தோய் முயக்கம் காணா வூங்கே

இது, வன்புறை எதிரழிந்தது.

உரை
ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை - உயர்ந்த மணல் பரந்த இடத்தே நின்ற நெடிய கரிய பனைமரத்தின்; வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண்குருகு - விரிந்த மடலின் கண் அமைந்த கூட்டில் தங்கித் தன் துணைக்குருகினை நினைந்து வருந்து தலையுடைய வெள்ளிய நீர்க்குருகு; நள்ளென் யாமத்து உயவு தோறு - நள்ளென்னும் நடுவீயாமத் தில் நரலுந்தோறும்; உருகி - கேட்டு நெகிழ்ந்து; அள்ளல் அன்ன என் உள்ளமொடு - சேறுபோற் குழம்பிய எனது உள்ளத்துடனே; உள் உடைந்து - ஒருமை சிதைந்தும்; உளன் - உயிரோடே இராநின்றேன், காண்; தோழி-; வாழி-; வளைநீர்க் கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் - சங்குகள் வாழும் கடலின்கண் வலிய சுறாமீனை எறிந்த வளைந்த திமிலேறிச் செல்லும் பரதவருடைய; வாங்கு தலைத் தூண்டில் ஊங்கு ஊங்கு ஆகி - வளைத்து இழுக்குமாறு அமைந்த தலையை யுடைய தூண்டிலுக்கு ஏற்ப ஆங்காங்கே அலைந்து தோன் றும்; வளிபொர - காற்று அலைத்தலால்; கற்றை சாஅய நளிசுடர் - கதிர்க்கற்றை நுணுகிய பெரிய சுடர் விளக்குகள்; நீனிற விசும்பின் மீனொடு புரைய - நீலநிறமான விசும்பின்கண் விளங்கும் விண்மீன்களைப் போல; பைபய இமைக்கும் துறை வன் - விட்டுவிட் டொளிரும் துறையினை யுடைய தலை மகனது; மெய்தோய் முயக்கம் காணாவூங்கு - மெய்யுறத் தழுவிப்பெறும் முயக்கத்தைப் பெறாதவிடத்து எ-று.

தோழி, வாழி, துறைவன் முயக்கம் காணாவூங்கு, வெண் குருகு உயவுதோறும் உருகி, உள்ளமொடு உள்ளுடைந்து உளன்; என் வன்மை இருந்தவாறு என் எனக் கூட்டி வினை முடிவு செய்க. பனையின் அடிப்பகுதி தோன்றாவாறு மணல் பரந்து சூழ்ந்திருத்தலின் மணல் உடுத்த பெண்ணை என்றும்; மணற்குள் மறைந்து புதைந்தொழியாது நெடிதுயர்ந்து நிற்றல் பற்றி நெடுமாப் பெண்ணை யென்றும் சிறப்பித்தார்; வீங்கு மடல் - பெரிய அகன்ற மடல், குடம்பை - கூடு. பைதல் - துன்பம். வெண்குருகு - கொக்கு நாரை முதலிய நீர்வாழ் குருகு, உயவுதல் - துன்புற்றுக் கூவுதல்; “புலம்புகொள எறிபருந்து உயவும்1” என்பது காண்க; உயவுக்குரலை “உயாவிளி2” என்றலும் வழக்கு. உள்ளத்தின் வன்மை அதன் ஒருமைப்பா டாகலின் அதனை உள் என்றார். உடைந்தென்புழி, உம்மை விகாரத்தால் தொக்கது. மிக்க வன்மையும், கொடுமையு முடைய தாகலின் கடுஞ்சுறா எனப்பட்டது. கடலில் இயங்கு வோர்க்குச் சுறாவால் பெருந்தீங்கு உண்டாதல் பற்றி அதனைப் பரதவர் கொன்றமையின் கடுஞ்சுறா எறிந்த பரதவர் என்றார். வளைந்திருப்பதனால் கொடுந்திமில் என்று வழங்குகிறது. வாங்குதல் - வளைதல். வளைத்துக் கோடற் கியைய வளைதல் தூண்டிற்கு அமைதலால் வாங்குதலைத் தூண்டில் என்றார். விளக்கொளி காணின் மீன்கள் அதனருகே தொகுதல் இயல்பாகலின்; இரவில் மீன் வேட்டம் புரிவோர் விளக்குகளைக் கொண்டு சேறல் கூறினார். கடற் பரப்பில் ஆங்காங்குச் சென்று மீன்பிடிப்போர் கொண்ட விளக்குகள் காற்று அலைத்தலால் கரையிலிருந்து காண் போர்க்கு விண்மீன் போல் விட்டு விட்டு ஒளிர்வது பற்றி நீனிற விசும்பின் மீனொடு புரைய என்றார். பைய இமைத்தல் - விட்டுவிட்டு விளங்குதல்; மெய்தோய் முயக்கம், “வளியிடைப் போழப் படாமுயக்கு3” எனத் திருவள்ளுவனார் கூறும் முயக்கம் என அறிக.

பல்வேறு அறவுரை அறிவுரைகளால் வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் தன்பால் ஆற்றாமை மிக்கதற்குக் காரணம் கூறலுற்று அண்மையில் மணற்குன்றில் நிற்கும் நெடிய பனைமரத்தைக் காட்டி; அதன் மடலிடத் தமைந்த கூட்டில் வாழும் வெண்குருகு நள்ளிரவில் தன் துணைக் குருகை நினைந்து வருந்தி உயாவிளி பயிற்றும் திறத்தை உரைப்பாளாய்; ஓங்குமணல் உடுத்த தெடுமாப் பெண்ணை வீங்கு மடற் குடம்பைப் பைதல் வெண் குருகு நள்ளென் யாமத்து உயவு தோறு என்றாள். தான் மனையகத் துறை யிலும் நெடும்பனை தன் கண்ணிற் காண நிற்பது கூறற்கு ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை என்றும், அதன் மடன்மேற் சிறிது போது தங்கிச் செல்வதின்றி ஆங்குக் கூடு அமைத்து, அதன்கண் இனிது உறையாது பிரிவால் வருத்த முற்று வதியுமாறு தோன்ற வீங்குமடற் குடம்பைப் பைதல் வெண் குருகு என்றும், யாவரும் உறங்குதற் குரிய நள்ளிர விலும் உறங்காது அக்குருகு தன் துணையை நினைந்து நரலுதல் விளங்க, நள்ளென் யாமத்து உயவுதோறு என்றும் கூறினாள். வெண்குருகின் உயவுக் குரல், துணைக்குருகை நினையுந் தோறும் எழுதலின் உயவுதோறு என்றும், அதனைக் கேட்குந்தோறும் தன் உள்ளமும் பிரிந்த காதலரை நினைந்து நிலைகலங்கி மெலிகிற தென்பாள், உருகி என்றும், அவ்வாறு மெலிவுற்றது நிறையிழந்து குழம்பினமையின், அள்ளல் அன்ன உள்ள மொடு என்றும், உள்ளத்தின் புறநிலை குழம்பினும் அகத்தே உறைத்து நின்று காதலர் உரைத்த சொல்லைப் பற்றி யிருத்தற்கு ஏதுவாகிய திண்மை சிதைந்தமை விளங்க உள்ளுடைந்து என்றும், காதலரது பிரிவின்கண் இந்நிலையெய்திய யான் இறந்துபடுதற் குரிய ளாகவும் இறவாது உயிர்தாங்கி யிருத்தற்கு ஏது என்பா லுள்ள வன்கண்மை காண் என்பாள், உளனே என்றும், துறைவன் மெய்தோய் முயக்கம் காணாவூங்கு என்றும் கூறினாள். தலைமகள் பிரிவால் தான் பெறா தொழிந்தது அவனது முயக்கமாகலின், அதனையே விதந்து மெய்தோய் முயக்கம் என்றாள் என்க. பரதவருடைய மீன்பிடித்தற் பொருட்டு எடுத்த வளிபொரக் கற்றை சாஅய நளிசுடர் ஊங்கூங் காகி விசும்பின் மீனொடு புரையப் பைபய இமைக்கும் என்றதனால், காதலர் பொருட்டுத் தாங்கிய என் மேனிநலம் பிரிவுத்துயர் அலைத்தலால் கண்ணும் நுதலும் பசந்து நுணுகி உளது போலவும் இலதுபோலவும் தோன்றா நிற்குமென உள்ளுறைப் பொருள் பெறப்படுதல் காண்க. இதனால் தலைவி ஆற்றாமைக் குரிய காரணம் காட்டி அயாவுயிர்ப்பா ளாவது பயன்.

கூடலூர்ப் பல் கண்ணனார்


பல்கண்ணனார் என்பது இச்சான்றோரது இயற்பெயர். இப்பெயர் பண்டைநாளில் மக்களிடையே பயில வழங்கியுளது. தாமற் பல் கண்ணனார் என்றொரு சான்றோர் புறநானுற்றுச் சான்றோரிடையே காணப்படுகின்றார். தாமல் என்பது தொண்டை நாட்டுப் பாலியாற்றின் கரையில் காஞ்சிமா நகர்க்கு மேற்கிலுள்ள தோர் ஊர். பல்கண்ணன் என்ற பெயருடையார் பலர் தொண்டை நாட்டில் இடைக்காலச் சோழவேந்தர் காலத்தும் இருந்துள்ளனர்; செங்கற்பட்டு மாவட்டத்துக் குன்னத்தூர்க் கல்வெட்டொன்று1 பல்கண்ணன் வியாகரண தானன் கூத்தாடுந் தேவன் என்றும், தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவன வட்டத்து முன்னூர்க் கல்வெட்டு ஒன்று,2 இறையூர்ப் பல்கண்ணன் தாமன் திருவகத் தீச்சுர முடையான் என்றும் கூறுவதால் அறிகின்றோம். இதனால் இப்பல்கண்ணனாரையும் தொண்டைநாட்டுச் சான்றோராகக் கருத இடமுண்டாகின்றது. இவருடைய கூடலூரும் தொண்டை நாட்டுக் கூடலு ராகலாம். இவருடைய பாட்டுக்கள் மருதத்திணை பொருளாக அமைந்தவை. இவர் பாடியவாகப் பாட்டுக்கள் வேறு தொகை நூல்களில் இல்லை. இவரைப் பற்றி வேறே குறிப்பொன்றும் கிடைத்திலது.

மனையறம் புரிந்தொழுகும் மாண்புடைய தலைமகன் வாழ்வில் அவனுக்குப் புறத்தொழுக்கம் உண்டாகிறது. அதனால் தலைமகட்கு வருத்தமும் தலைமகன்பால் வெகுளியும் தோன்று கின்றன. பரத்தையர் சேரிக்கண் அவர்களுடைய ஆடல் பாடல் அழகுகளை நயந்து தலைமகன் உறைந்தொழுகுவது மனைக்கண் இருந்து செய்தற் குரிய நல்லறத்துக்கு ஊறும் புகழுக்கு மாசும் விளைவிப்பது காணாது; அவ்வரைவிலா மகளிர்க்கு அருளுவான் போல இருந்தது தலைமகள் உள்ளத்தில் புலவியை எழுப்பிற்று. தலைமகனுடைய இன்பத்துறைக்கு வாயிலாகப் பாணரும், விறலியரும், அந்நாளில் பணிபுரிந்தனர். பரத்தையர்க்கும், தலைமகற்கும், தலைமகட்கும் இடையே தூதுசெல்வதும்; பரத்தையரோ, தலைமகளோ தலைமகன்பால் சினங்கொண்டு வாயில் மறுக்கின்; தலைமகன் பொருட்டுத் தகுவன கூறி, அவர் பிணக்கம் தீர்த்துக் கூட்டுவதும் பாணர் முதலாயினார்க்குப் பணிகளாகும். தலைமகனது பரத்தமை யறிந்து தலைவி புலந்தமை கண்ட பாணனொருவன், அவன் பொருட்டு வாயில் வேண்டித் தலைமகள் மனைக்கு வந்தான். தலைமகன் விரும்பும் மகளிர்பால் செல்லும் பாணன், அவர் நயக்குமாறு இனிய சொற்களைக் கூறுவதுடன், தலை மகனுடைய குணஞ்செயல்களையும் அன்பின் திறத்தையும் பலபடியாகப் பாரித்துரைப்பான். அதனால், அவன் கூறுவனவற்றுள் பெரிதும் பொய்யே நிறைந் திருக்கும். ஒருமுறை இருமுறை அவன் சொற்களை உண்மை யெனக் கொண்ட மகளிர், சின்னாட்களில் தலைமகன் புறத் தொழுக்கத்தால் அவை பொய்யாதல் காணின், அவனை வைவ தும், அவரது வசை கேட்கும் பாணன் பொறுத்துத் தனக்குரிய பணியை நெகிழாது செய்வதும் தலைவனது பரத்தமை யொழுக்கத்தில் பரக்கக் காணப்படும். இவ்வாற்றால், தலை மகன் விடுப்பப் போந்த பாணன் தலைமகள் மனையை யடைந்து; தலைமகனுடைய பேரன்பும், பெருமாண்பும் எடுத்தோதினான். தன் கணவன் புகழைக் கேட்டதில் தலைமகட்கு வேட்கை மிக்க தெனினும், அவன் கூறுவன பலவும் பொய் யென்பதையும் அவள் மறந்தாளில்லை. அந்நாளில் ஊர்களில் விழாக்கள் நடை பெறு மாயின் அதனை அவர்கள் முதற்கண் ஊர் முதல்வர்க்குத் தெரி விப்பர். ஊர் முதல்வர் அரசராயின், அவ்வரசர் ஆணையை வள்ளுவன் என்பான் யானைமேல் இருந்து முரசு முழக்கி அறிவிப்பான். பிறராயின் அவராணையை ஊர்க்குயவன் தெருவழியே சென்று தெரிவிப்பன். தலைமகன் பொருட்டுப் பாணன் வந்து தலைமகளை வாயில்வேண்டி நிற்கையில், ஊர்க் குயவன் விழா அறைந்து போந்தான். விழா நிகழ்ச்சிக்குத் தான் மனைக்கண்ணிருந்து செய்வன செய்தல் உலகியலாதல் பற்றித் தலைமகன் பாணனை வாயில்வேண்டி விடுத்ததல்லது உண்மை யன்பினா லன்று எனக் கருதினாள்தலைமகள்; அவளுடைய கண்கள்சிவந்தன; வாயிதழ் துடித்தன; அவளுடைய குறிப்பறிந்த தோழி, “ஊர்க்கு விழா அறிவிக்கும் குயவனே” எனக் குயவனைக் கூஉய், “விழா நிகழ்ச்சியை ஊரவர்க்கு அறிவிக்க வன்றோ செல்கின்றாய்; அறிவிக்குமிடத்து, நல்யாழ் இசைக்கும் பாணன் செயலால் மகளிர் பலர் அல்லலுறுகின்றனர்; ஆகவே மகளிர் எவரும் கூறும் பொய்ம்மொழிகளைக் கேளாது விலக்குமின் என அறிவிப்பாயாக” என்று மொழிந்தாள்.

தோழியின் இக்கூற்றின்கண், பரத்தைமை பூண்டொழுகும் தலைமகன், ஊரில் விழா நிகழும் காலத்துத்தன் மனைக்கண் இருந்து ஆவண செய்தல் வேண்டும் என்ற உலகியல் பற்றித் தன் மனைக்கண் புகுவான் தலைமகளை வாயில் வேண்டுவதும், அவன் பரத்தைமையை மறைத்துப் பாணன் தலைமகனது அன்பினை விதந்து மொழிவதும், அவள் வாயில் மறுப்பதும் விளங்குதல் கண்ட பல்கண்ணனார் அதனை அமைத்து இப் பாட்டினைப் பாடுகின்றார்.

1கண்ணிக் கட்டிய கதிர் அன்ன
ஒண்சூரல் நொச்சித் தெரியல் சூடி
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
சாறென நுவலும் முதுவாய் குயவ
இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல்அமன்ற 2தீம்புனற் பழனக்
கழனி யூர்க்குப் போவோ யாயின்
கைகவர் நரம்பிற் 3பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வையெயிற்
றைதகல் அல்குல் மகளிர் இவன்
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே.

இது, தோழி தலைமகளது குறிப்பறிந்து வாயிலாகப் புக்க பாணன் கேட்பக் குயவனைக் கூஉய் இங்ஙனம் சொல்லாயோ என்று குய வற்குச் சொல்லியது.

உரை
கண்ணிக் கட்டிய கதிர அன்ன - தலையிற் சூடப்படும் கண்ணியிடத்தே வைத்துக் கட்டிய வயந்தகக் கதிர்போல; ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி - ஒள்ளிய கொத்துக்களை யுடைய நொச்சியால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்து; ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் - ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின் கண்ணே; சாறு என நுவலும் முது வாய்க் குயவ - விழாக்கோள் என்று ஊரவர்க்கு அறிவிக்கும் அறிவுடைய குயவனே; இதுவும் ஆங்கண் நுவன்றிசின் - யான் கூறும் இதனையும் விழாக்கோளுடனே உரைப்பாயாக; ஆம்பல் அமன்ற தீம்புனல் பழனக் கழனி ஊர்க்குப் போவோய் ஆயின் - ஆம்பல்கள் நிறைந்த தீவிய புனலையுடைய பழனங் களைச் சார்ந்த கழனிகளையுடைய ஊர்க்குள் செல்கின்றா யாகலின்; கைகவர் நரம்பின் பனுவல் பாணன் - கைவிரலால் அசைத்துப் பாடும் நரம்புகளையுடைய யாழிற் பாடவல்ல பாணனாவான்; செய்த அல்லல் பல்குவ - வாயிலாய் வந்து ஒழுகுவதனால் வருத்தங்கள் பலவாய்ப் பெருகுகின்றன வாதலால்; வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் - கூரிய பற்களையும் மெல்லிதின் அகன்ற அல்குலையுமுடைய மகளிராகிய நீவிர்; இவன் பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் என - இப்பாணன் உரைக்கும் பொய் நிறைந்த கொடுஞ்சொற்களை நம்புதல் ஒழிமின் என்று எ-று.

குயவ, போவோய், ஆயின், இதுவும் நுவன்றிசின்; பாணன் செய்த அல்லல் பல்குவ; ஆதலால், மகளிராகிய நீவிர் கொடுஞ்சொல் ஓம்புமின் என என்று கூட்டி வினைமுடிவு செய்க. எயிறும் அல்குலு முடைய மகளிர் என்க. மகளிர், அண்மை விளியாக முன்னிலைப்படுத்துக. கண்ணிக்கட்டிய தெரியல் - கண்ணியிடத்தே தொடுக்கப்பட்ட பூக்களின்மேல் நெற்கதிர் போல நிற்கக் கட்டிய சூட்டுவகை; அதனை வயந்தகம் என்ப. செந்நெல்லின் “வயங்கிய ஒருகதிர், அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணிநுதல், வகைபெறச் செரீஇய வயந்தகம் போல்தோன்றும்1” என்பது காண்க. கதிர, அகரம் சாரியை. கண்ணி கட்டிய என்று கொண்டு “கண்ணி கட்டல் அரும்பு தோன்றுதல்” என்றலும் ஒன்று. ஒருசில பூக்களைத் தொடுப்புக் கொரு தொகுதியாக மாலை தொடுப் போர், ஒவ்வொரு தொகுதியையும் கண்ணி என்பவாகலின், கட்டிய என்றற்குக் கண்ணி கண்ணியாக தொடுத்துக் கண்ணிய கட்டிய என்று உரைப்பினுமாம். அழகிய பூக்களைத் தெரிந் தெடுத்துத் தொடுப்பதுபற்றி மாலைக்கு தெரியல் என்பது பெயராயிற்று அகன்ற நெடிய தெருக்களுக்கு ஆற்றை உவமம் செய்தல் மரபு. சாறு விழா முதுவாய் - அறிவுடைமை குறித்து நின்றது. ‘இது’, சுட்டு; செய்யுளாகலின் முற்பட வந்தது. பழனம் - நீர்நிலை. கைவிரலால் அசைத்து இசைக்கும் நரம்பினையுடைய யாழைக் கைவர் நரம்பு என்றார். பனுவல் - வாய்ப்பாட்டு. அல்லல் - துன்பம். பல்குதல் - பலவாய்ப் பெருகுதல். ஐ - மென்மை, பொய் பொதிந்து மனத்தின் செம்மையை மாற்றுதல் பற்றிப் பொய்பொதி கொடுஞ் சொல் என்றார் ஓம்புமின் இதுவும் ஆங்கண் நுவன்றிசின் என்க. ‘மாது’, ‘ஓ’. அசைநிலை.

தலைமகளின் குறிப்புவழி நின்று வாயில்வேண்டி வந்த பாணனை மறுக்கின்ற தோழி, கூறுவதனைக் கேட்டல் வேண்டிக் குயவனைச் சிறப்பிக்கின்றா ளாகலின், அவன் அணிந்த நொச்சிமாலையை விதந்து, கண்ணிக் கட்டிய கதிரவன்ன ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி என்றும், தன்பொருட் டன்றி ஊரவர் ஆணைமேற்கொண்டு தெருவழியே விழாநிகழ்ச்சியை அறிவித்துச் செல்வது கொண்டு, ஆறு கிடந்தன்ன அகனெடுந் தெருவில் சாறென நுவலும் முது வாய் குயவ என்றும் கூறினாள். சாறென நுவலுமிடத்து யான் கூறும் இதனையும் உடன் கூறுதல் எளிதாம் என்பாள்; இதுவும் ஆங்கண் நுவன்றிசின் என்றாள். ஆம்பல் என்றது பரத்தையராகவும், அவ்வாம்பல் அமன்ற பழனக் கழனியைப் பரத்தையர் வாழும் சேரியாகவும் கொள்க. பரத்தையர்க்குத் தூதும் வாயிலுமாய்ச் சிறந்து நிற்றலின், அவர் வாழும் பகுதியைக் குறிப்பால் உணர்த்தினாள். குலமகளிர் வாழும் பகுதிக்கும் தலைமக்கள் பொருட்டு வாயில் வேண்டிச் சேறல் பாணர்க்கு இயல்பு; ஆயினும் ஈண்டுப் பாணனைப் பரத்தை யரும் ஒருவுதல் வேண்டுமென்றற்கு இவ்வாறு தோழி குறித்தாள் என்க. எத்திறத்துயிரும் இசைக்கு உருகுமாதலின் அவ்விசையால் மகளிர் உள்ளத்தைப் பாணன் நெகிழ்விப்பன் என்பது பற்றி, கைகவர் நரம்பிற் பனுவற் பாணன் என்றும்; அவன் கூறியசொற்களைக் கேட்டு வாயில்நேர்ந்த மகளிர் பலர், பின்னர்த் தம் காதலன் பாணனால் புணர்க்கப்பட்ட பரத்தையர் மனைவயிற் பிரிந்தமையால் வருத்த மெய்தினர் என்றும்; பரத்தைய ருள்ளும் ஒருத்தியை விட்டு, வேறொருத் தியைத் தலைநின் றொழுகுமாறு தலைமகனை இயக்கி, அவர்க்கும் துன்பம் விளைவிக்கின்றா னென்றும் கூறுவாள், பாணன் செய்த அல்லல் பல்குவ என்றும் கூறினாள். வையெயிறு கூறியது. இளமை யுணர்த்தற்கு. இளமையால் பாணனுடைய சொல்லின்கண் அமைந்த பொய்ம்மையையும், கொடுமையையும் உணர்தலாகாமை பற்றி அவரை எடுத்து மொழிந்து இவன் பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் என்றாள். இதனாற் பயன் வாயின் மறுத்தல்.

1.  துறைநன் கிருந்த - பா
2.  துனிதீர்ந்து - பா; துனிதுறந்து - பா
3.  அகம் - 91
4.  தொல். பொ. 22
5.  A.R. No. 140 of 1929
6.  A.R. No. 31 of 1938
7.  A.R. No. 126 of 1938
8.  பைங்கிளி - பா
9.  செய்தல்வேண்டுமால் - பா
    சொல்லல் வேண்டுமால் - பா
10. மருங்கிற்சேறி - பா
11. அகம் 399.
12. தொல் பொ. 111
13. வேம்பின் பெருநிலை கொன்று -
14. வாயா வேட்டம் - பா
15. பிணவு - பா
16. பேழ்வாயேற்றை - பா
17. யயலது - பா
18. னெறிக - பா
19. துறையும் - பா
20. அகம் 147
21. குறுந். 375
22. ஐங். 44
23. மேற்படி. 51
24. T.A.S. Vol. I.P. 292
25. அஞ்சிலோதி - பா
26. முருகு - 82
27. கெழீஇய-பா
28. னறாஅ-பா
29. தசைஇயுள் ளொழிந்த-பா
30. நற்-147
31. செல்வலி தூக்கலின்-பா கடுவெளிதாக்கலின்-பா
32. கௌவையொடு மலைந்த பா
33. வழிவழிப்பட்ட - பா காதலர் பின்றை வழிப்பட்ட - பா
34. அகம். 365
35. குறள். 1147
36. மையாரேனற்-பா
37. குறவர்-பா.
38. நாடன்-பா.
39. தொடர் பெவன் விடுதியோ, விட்டனன்-பா.
40. முருகு 208-9
41. பழமொழி 126
42. A.R. No.403 og1937-38
43. றன்னவோவிந்-பா
44. றுணிதலற்றத்-பா
45. நிலையெனவொருவேனாகி-பா
46. அகம் 324
47. ரீஇ மெலிந் தொழியப் - பா
48. தாதை-பா
    இதுமனை மருட்சி; மகணிலையுரைத்ததூஉமாம்-பா
49. தொல். சொல் 356
50. புறம் 248
51. மேற்படி. 399
52. தொல். பொ. 153
53. மேற்படி 245
54. தொகைமீன்-பா
55. வள்வாய்ச்சுறவொடு வயமீன் கெண்டி-பா
56. ரிகுமணலிழியும்-பா
57. அகம் 172
58. மேற்படி 265
59. அகம் 240
60. மேற்படி 187
61. செய்கோ-பா
62. பொற்ப-பா
63. தரிமாவழங்கும்-பா
64. மணிநிறத்தருவித்-பா
65. செறிந்த-பா
66. புறம் 246 2. நற் 351
67. பதிற் 26 4. அகம் 139
68. குறள் 1268
69. யிரத்திப் பசுங்காய் பொற்பக்-பா
70. திதியன்-பா
71. புரம் 24
72. சேரமன்னர் வரலாறு பக் 75-6
73. சிலப்-17
74. புரம் 143
75. தொல் பொ. 146
76. பச்சூன்கொண்டு-பா
77. வள்ளுகிர்முணக்கவும்-பா
78. புலரவும்-பா
79. துனைபெயல்-பா
80. போற்றி-பா
81. புறம் 219
82. அகம் 57
83. புறம் 221
84. சிறிது தணிந்துயிரினள் இன்னீர்-பா
85. லுண்டு சினீரென - பா
86. உலப்பின்று பெறினும்-பா
87. கேட்டிசினல்லனோ-பா
88. நற் 305 2. அகம் 23
89. குறுந் 138
90. துணர்க-பா
91. அழுவவேய் மீண்டநாப்பண், அளவமீண்ட வழுவப்பிண்ட நாப்பண்-பா
92. வேற்றிலை-பா
93. மடப்பிணை-பா
94. மாச்சினைச்சிறந்த-பா
95. நறும்பழம்-பா
96. சென்றுக்கன்றே-பா
97. திருண்முகையிருந்த-பா
98. குறுந் 17
99. அகம் 397
100. புறம் 109
101. அகம் 328
102. மேற்படி 148
103. மேற்படி 85
104. திணை. ஐம். 10
105. நற் 158
106. பதிற். 55 4. குறுந் 3
107. தொல் 111
108. புள்ளுடன் -பா
109. அன்னருன்னார் - பா
110. கூறுப - பா, கூறுவர். பா
111. நற் 276
112. அகம் 98
113. நல்குசினை பொலியத் - பா
114. இவ்வடிபின் முன்னாக ஏடுகளில் பிறழ்ந்து காணப்படுகிறது. இணருறுபுடைவ
    தன்னைபயும் - பா
115. மறிந்நிசினோரென - பா
116. அகம் 229
117. நற் 224
118. அகம் 5
119. மேற்படி. 117
120. புறம் 293
121. நற் 97
122. ணாந்தர - பா
123. இன்முகப் பெருங்கலை-பா
124. நன்மேயலாரும் -பா
125. கருங்கலைக்கடும்பாட்டு வருடையொடு - பா
126. நீழல்வருகுவன்- பா
127. கூவிளம்- பா
128. புலவிய கொளீஇயர், புலவிகோளிய இயர் - பா
129. ஐங் 201
130. புறம் 19
131. அகம் 287
132. மேற்படி. 21
133. புறம் 236
134. நற் 251
135. ஐங் 276
136. அகம் 282
137. ஷெ. 178
138. முருகு - 191 - 10. அகம் 328
139. தொல். பொ.120
140. செழுஞ்செய்பேதை - பா செழுரூசெய்பேழை - பா
141. சிறுதாழ் செறித்த - பா
142. வாலழயீர்ந்தடி - பா
143. வகையிற் - பா
144. வருகதில்விருந்தே சிவப்பானண்று - பா
145. சிவப்பார்ந்த - பா
146. சிறியமுள்ளெயிறு - பா
147. முகங்காண்கும்மே - பா
148. தொல். சொல் 320
149. நற் - 80
150. மேற்படி. 165 2. தொல் சொல். 372
151. சிலப்: 5, 22, 3 2. தொல். பொ. 144
152. ஷெ.ஷெ. 24
153. றம்மநீ - பா
154. சொல்லுப - பா
155. வாழ்கநின் கண்ணி - பா
156. கரையிவணொழிய - பா
157. வெவ்விருந்தயரும் மனைவி- பா
158. தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது
159. குறள் 1037
160. குறள். 1268
161. மேற்படி. 1103
162. நகையுறா - பா
163. மற்றென நின்று - பா
164. மறைந்தவையாடி - பா
165. போற்றுமாறே - பா
166. குறுந். 335
167. மதுரை 63
168. குறள் 636
169. தொல் பொருள் 124
170. இரைத்தேர் குருகின் - பா
171. செம்பே ரிரணை யலவற் பார்க்கும் - பா
172. நினக்குப் பெருந்துயரம் - பா
173. புறம் 218
174. நற் 390
175. அகம் 260
176. நற் 191
177. நற்.4
178. அகம் 280
179. அகம் 392
180. யானுமற் றாற்றேன் - பா
181. குமிழியின் யிழிதரும் - பா
182. The Brahminy Kite
183. நற் 335
184. அகம் 305
185. குறிஞ்சி 219
186. குறுந். 160
187. தொல். பொ. 112 நச்சி மேற்
188. அகம். 50
189. மேற்படி. 391
190. A.R. No. 474 of 1925, 239 of 1931, 82 of S.I.I. Vol.I
191. னம்மலை - பா
192. கூடினீடின்று -பா
193. வதன்கட்பாசறை – பா
    4.  துஞ்சுகளிறெடுப்பும் - பா
194. தொல். பொ.604
195. நற். 36
196. மேற்படி. 345
197. நல்லிடம்-பா
198. கருங்களி-பா
199. துணைதரும்-பா

200. தெஞ்சிய; தச்சீனம்-பா
201. பணைக்காறானும்-பா
202. வல்லேனெஞ்சம்-பா
203. அகம். 21
204. தொல். பொ.கற்பு 44
205. Coorg Ins. Vol ix No.1. 10.
206. தவன்வரி-பா.
207. பேணாக்-பா.
208. னார்கைச்-பா.
209. நிறைந்வ-பா.
210. தலையிட்டேகும்-பா
211. P.S. Ins. No. 135
212. Ibid no. 269.
213. யாயி னினக்கியான் - பா.
214. நீகண்டிசினால்-பா.
215. அழுங்க லான்றிசின்-பா.
216. டஃதால்-பா.
217. கலி 132
218. அகம் 313
219. முருகு. 208
220. அகம்32
221. அகம். 32
222. மேற்படி. 268
223. தொல் பொ. 112
224. சென்று-பா
225. தம்வினைமுற்றி-பா
226. நம்மனை-பா
    4.  நாமோ-பா
227. யாமத்தும்-பா
228. நாலடியார் 165
229. நற். 125.
230. S.I.I. Vol. v No. 791
231. A.R.No. 113 of 1924 2. A. R. No. 127 of 1932 - 33.
232. வடுவின்று நிறைந்த மான்றேர்த் தெண்கிணை - பா.
233. தோன்றிய - பா.
234. செத்நீர்ப்பொதூவினைச் செம்மன் மூதூர் - பா.
235. தேஎந்த, நொத்த - பா.
236. புறம். 387
237. மேற்படி 382
238. மேற்படி 289
239. மேற்படி 383
240. மேற்படி 394
241. குறள். 1107
242. நற் 397
243. உயவு நெஞ்ச மொடு - பா
244. ஊடலு முடையமோ வுயர்மணற்சேர்ப்ப- பா
245. திரைமுதிரரைய - பா
246. மறத்தனுமக்கே - பா
247. குறள் 1316
248. தொல். சொல். 321
249. மேற்படி எழுத்து 234
250. அகம் 100
251. தொல். பொ. 39
252. திருந்துவாய்- பா
253. உதிர்தரு - பா
254. போரமை கதவம்- பா
255. பயில்பட- பா
256. நடுநா ளொண்மணி - பா
257. வளியன்யான் - பா
258. பெரும்பாண் 326
259. நற்றமனார் - பா.
260. A.R. No. 141 of 1923.
261. தோளே தொடிகோட்பானா - பா. தோளே தொடிநெகிழ்ந்தனவே – பா

262. யாகின்று - பா
263. நாமுறு துயரம் - பா
264. காமுறு - பா
265. தோய்மடற் சின்னீர் - பா
266. கேமாஞ் சிறிதே - பா.
267. நற். 243. 2. புறம், கட.
268. அகம். 8. 4. மேற்படி 250.
269. புறம். 300.
270. குறுந். 226.
271. தொல். பொ. 111.
272. தலைப்படுதும் - பா
273. வருகுறி - பா
274. விவ்வே - பா
275. டவணையாகென - பா
276. ஏயண்மன் யாயும் - பா
277. யாவயின் - பா
278. நிலறதொடி - பா
279. கூறலினியானஃது - பா
280. திணைமா 150:2
281. நற் 206
282. மேற்படி 204
283. கலி 112
284. ஆகம் 32
285. தொல். பொ. 120
286. இனிதுமன் றம்ம - பா
287. நம்மொடு - பா
288. இப்பாட்டுக் கதப்பிள்ளையார் பாடியதென அச்சுப்பிரதியும் மதுரைத் தமிழ்ச்சங்க ஏடும் குறிக்கின்றன.

    1.  “கேட்டிசின் வாழி தோழியி தொன்று” என்பது இதன் முதலடியாகப் புதுப்பட்டி ஏட்டில் உள்ளது.
    2.  

289. பன்னிய – பா

290. குறள். 1102
291. அகம் 351
292. குறள் 1237
293. பொருந். 86
294. குறள். 948
295. தொலைந்த - பா
296. வல்லை - பா
297. “செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே. வன்புறை குறித்த தவிர்ச்சியாகும்” என்ற நூற்பா சில ஏடுகளில் இங்கே எழுதப்பட்டுள்ளது.

298. நற். 318
299. அகம். 249
300. “என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே” (212:6) எனத் திருநாவுக்கரசர் நெஞ்சினையும் உள்ளத்தையும் வேறுவைத்துரைப்பது காண்க.

301. குன்றுபோல் குப்பை - பா
302. பூவுடனெறிதறா தொடலை தைஇ - பா
303. தைஇக் - பா
304. இழையணி யல்குல் விழவாடு மகளிர் - பா
305. முழங்கும் - பா
306. அகம் 273
307. மேற்படி. 270 2. கலி. 131
308. சிலப் 5:70 உரை
309. தொல். சொல். 401
310. றேயினையுரைஇயளே - பா
311. மாதோ - பா
312. நுகர்ந்த சாரனல்லூர்
313. முழனின் மண்ணார் கண்ணின் இம்மென விமிரும் - பா
    மண்ணார் கண்ணின் என்ற தொடர் கிடைத்த ஏடுகளிற் காணப்படவில்லை.

314. குறள் - 1032
315. புறம் 143
316. பிங்கலந்தை 1392
317. புறம் 135
318. பரி : 10
319. கலி 140
320. குறள் 20 2. மேற்படி 18-9
321. பதிற் 55 4. நற். 153
322. அகம் 374
323. ரைம்பால் தகைபெற வாரி - பா
324. புலர்விடத் - பா புலர்பிடத் - பா
325. பூங்கணாயம்
326. பெருந்தேர் - பா
327. மகனெடுந்தெருவிற் - பா
328. மருளுவயினும் - பா
329. அகம் 178
330. தொல் சொல்.275
331. குறள் 1102
332. மேற்படி. 1097
333. பழமொழி 153
334. நற்.80
335. A.R.No. 225 of 1911
336. இருஞ்செம்முடிய - பா
337. மருங்குறீண்டி - பா
338. தவசியர் - பா
339. வினக்கே பருந்துடை - பா
340. பாண்டிலொடு பொருந்த - பா
341. பல்புகழ் - பா
342. விரியொலி கூந்தல் - பா
343. முருகு. 72
344. குறுந். 161
345. கம்ப - பால வரை 56
346. நற். 361
347. A.R.No. 84 of 1931
348. A.R. No. 202, 205 of 1932
349. A.R. No. 284 of 1930
350. வயங்குபெயர்-பா
351. பாணிகொண்ட-பா
352. வொடுங்கு நிலை-பா
353. யேமார்த்தல்கும்-பா
354. மீளும்-பா
355. குறுந். 332
356. அகம். 24
357. மேற்படி. 274
    2.  பெரும்பாண்: 177-9
358. அகம். 94
359. மேற்படி 394
360. மேற்படி. 394 6. புறம் 54
361. பழமொழி 282
362. குறள் 81
363. மேற்படி. 1268
364. ஐதேகாமம் யானே யொய்யென-பா
365. கிள்ளெனக்-பா
366. வழுவிலளம்மா-பா
367. கேட்ட சின்னாள்-பா
368. வுயிரா-பா
369. கதுப்பென்னேனே-பா
370. இஃது அச்சுப் பிரதியில் இல்லை
371. பரி.9: 13-4
372. புறம் 90.
373. இறை அ.பொ. 22. உரை
374. புறம் 353
375. அகம் 219
376. மேற்படி. 367
377. மேற்படி. 21
378. நற் 184
379. ஐந். ஐம். 33.
380. பெரும்பாண் 428-35
381. மணி 28: 166-8
382. மேற்படி 28: 156
383. மஞ்சுபு-பா
384. இந்த அடி அச்சப் பிரதியில் இல்லை
385. போதா-பா
386. சாரற்-பா
387. பிணவுப் புலி வழங்கு மணங்கருங் கவலை, அவிரற லொழுகும்-அச்சுப்பிரதியில்
    காணும் பாடம்

388. பகுவாய் இரும்புலி பா
389. னோகோயானே-பா
390. ஏதத்திற்குக் கவன்று; சிறைப்புறமாகத் தலைவி சொற்றது-பா
391. மலைபடு. 6
392. பதிற். 41
393. அகம் 111
394. னாம வெங்கேண்மை–பா
395. யமைந்தே தில்லா-பா, ஐதேய்ந் தில்லா-பா
396. ணியுநம்-பா
397. சேறி-பா
398. வருமால்-பா
399. வம்மவாயவர்-பா
400. கலி. 10 2. குறுந். 400
401. அகம் 15 117
402. அகம் 234
403. திரிதரும்-பா
404. வழங்குக சுடரென-பா
405. அருளிக் கூறும்-பா
406. நல்லே மென்றும் கிளவி வல்லோன்-பா
407. நற் 223
408. குறுந் 17 2. புறம் 3
409. தொல், எழுத்து. 351
410. அகம் 325
411. கூறி-பா
412. மலர்பூக் கொய்து-பா
413. நினைவிலை, கனவின்-பா
414. பொய்யலந்தோ-பா
415. லளியை நீயே-பா, லளியநம் புனத்தே-பா
416. பகலே சிறைப்புறமாகத் தோழிபடைத்து மொழி கிளவியால் வரைவுகடாயது-பா

417. புறம் 12 2. தொல். சொல் 113
418. நடன தடிய 397
419. தொல். பொ. 218
420. மேற்படி, மேற்படி. 109.
421. தொடங்கிய-பா.
422. புரிந்த-பா.
423. வீங்குநிலை-பா.
424. வருந்தேன்றோழி-பா. வருந்தெவன்-பா.
425. ஐங். 381. 2. அகம். 221.
426. மேற்படி 172.
427. தொல். பொ. 184.
428. தொல். பொ. 75-6.
429. கலி 6.
430. அகம். 92.
431. கட்கண் நோக்கி-பா.
432. மூக்கினுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி-பா.
433. பூணாறுகுரூஉச்சுவற்-பா.
434. கடுமான்பரிய கதழ்பரிகடைஇ-பா., கதழனிகடைஇ-பா.
435. இயற்றேர்க் கொண்கனொடு-பா.
436. அகம். 145
437. மேற்படி. 45. 2. மேற்படி. 124.
438. தொல் பொ 212.
439. மேற்படி, மேற்படி. 221.
440. நகை நன்குடையன் - பா.
441. மிகுவலி - பா.
442. வஃதியாம் - பா.
443. என்னதும் - பா.
444. தன்னுடைக்கலிமா கடைஇ வத்தெஞ்சேரித் - பா.
445. வீடுதுமோ - பா.
446. வஞ்சக் - பா. வஞ்சான் - பா.
447. கதம்பெரிதுடையன் - பா.
448. அகம் 197.
449. தொல். பொ. 634.
450. மேற்படி 638
451. மேற்படி, மேற்படி. 639
452. அகம். 370.
453. தொல் பொ. 111.
454. கலி. 105.
455. கழூஉஞ்சாரல் - பா. கமழுமாங்கண் - பா.
456. கடுவன் - பா.
457. செல்குறிக் கருங்காற் - பா.
458. கடுவனொடு - பா.
459. குன்றநாடன் - பா.
460. தொல். பொ. 621-2. 2. க்ஷ பொ. 120
461. குறுந். 27.
462. அகம். 47
463. மேற்படி 143
464. மேற்படி 143
465. லியங்குகுரல்-பா.
466. கையறவு தந்தன்று-பா.
467. அளியன்-பா.
468. அகம் 378
469. குறுந். 17
470. தொல். பொ.167
471. கண்ணகர் -பா
472. செம்பு சோர்பனையின் - பா
473. விண்டொழிந்து - பா
474. துண்டலனித்து - பா
475. னுடம்பே - பா
476. லிற்போர் - பா
477. கலங்கிய - பா
478. போகீப் - பா
479. புறம். 1
480. பதிற். 65
481. அகம் 373
482. பதிற். 26
483. பதிற். 32 4. மேற்படி 15
484. A.R. No. 334 of 1930
485. கேளாது - பா
486. பொருதலிற் புகர்படுநெஞ்சம் - பா
487. நீரடுநெருப்பின் - பா
488. ராயினோ நன்றே -
489. நிலம் பரத்தொழுகும் -பா
490. புறம் 190
491. புறம் க்ஷ
492. தொல். பொ. 210
493. S.I.I.Vol. V.No. 520
494. Ibid No.702
495. S.I.I. Vol. VIII No.684
496. டோரையுமாடாய் - பா
497. றொடலையும் புனையாய் - பா புரியாய் - பா
498. வருங்கழி -பா
499. முறுவலுந் திறந்தன - பா
500. ழுண்கணும் பரந்த பனியே - பா
501. எதிர்ப்பட்டுக் கூடலுறும் - ம. ச. ஏடு
502. தொல். பொ.98
503. மேற்படி. பொ.102
504. லார்ந்த ராயினும் - பா
505. விடரக முழங்கும் - பா
506. யிறுத்த தெங்கோடு - பா
507. தீண்டுதொழில் - பா
508. யாற்றயலணங்கிய - பா
509. மராஅத்த - பா
510. யம்பூந் தாதுக்கன்ன - பா
511. நற் 224 2. மேற்படி. 243
512. இந்த அடி செட்டியார் ஏட்டிலும் தேவர் ஏட்டிலும் காணப்பட்டது.

513. கான்கொல்லும்மே - பா
514. குருதி பருகிய - பா
515. புறம் 333
516. தொல். சொல் 222
517. குறள் : 879
518. கழிப்பிணமாயின் - பா
519. வல்லமாயினம் - பா
520. யமர்ந்த தேரே - பா
521. வந்துண்சுணங்கின் - பா
522. கூந்தற்செம்பொற் - பா, தேம்பாயோதி - பா
523. திருநுதற்யொலிந்த தேம்பாயோதி - பா, திலகவாணுதற்றிருமுகத் தமன்ற - பா.

524. தொல். பொ. 102.
525. Coorg Ins. Vol. I No. 10
526. நேர்கோ ணெடுவழி - பா
527. ரேகுவனர் பசிப்ப - பா
528. தோன்வலியாப்ப - பா
529. வீண்டுநம் வரவினை - பா
530. காதல் - பா,
531. தொல் பொ. 29
532. குறள் - 972
533. தொல். பொ. 32
534. அகம் .4
535. சிவந் 547
536. நற் 185 2. குறள் 440
537. தினைமா 150 : 5
538. ஐங் 6 2. குறள் 1268
539. றெழுதரு புன்கண்மாலை - பா
540. தந்தை நீடுபுகழ் நெடுநகர் - பா
541. வீயாநெடுவீழ் - பா
542. வழிநா ளூசலிற் - பா
543. வல்லை யாகுதல் ஒல்லுமோ - பா
544. உடன்போதுவல் என்றாட்குத் தலைமகன் சொற்றது.
545. அகம் 254
546. மேற்படி. 47
547. மேற்படி. 306
548. குறள் 59
549. வருந்துமனனளிய தாமே - பா
550. பெருங்கடல் - பா
551. புன்னைத் தமியொண் கைதை - பா; புன்னை லிரித்த முன்றுறை – பா

552. மூழ்கிய - பா
553. படுசுடர் - பா
554. காய்ந்தொழுகு - பா
555. வைகறை - பா; வைகுறு வனப்பின்
556. புறவிற றனாது -பா
557. யயாவுறுகாலை-பா
558. முடைத்தளீஇ; முடைக்குழீஇய-பா
559. புறம் 35
    2.  மேற்படி. 160
560. அகம் 337
561. குறுந் 272
562. புறம் 271
563. காணவன்-பா
564. மருமை நற்குரைப்ப-பா
565. வென்னான்-பா
566. ஒல்கா தொழிமதி, ஒல்காதொழிமிக-பா
567. புறம் 143
568. வனப்பின் - பா
569. மகலினிதியாமும் - பா
570. றனையேமதன்றலை - பா
571. பொலந்தோடிப்புதல்வனும் - பா
572. பிரிகோ - பா
573. நற் 245 2. மேற்படி. 214
574. குறள் 39 4. ஐங் 265
575. தொல் பொ. 144
576. பதிற் 52 2. புறம் 24
577. A.R. No.231 of 1932-33
578. வெண்குரு கோப்பி-பா
579. பைதீர் பாண-பா
580. மாணலமிழந்த-பா
581. The Book of Indian Birds - Salim Ali. Int. XIII
582. நற் 310 2. மேற்படி. 200
583. ணிறாலுறப் - பா
584. மிச்சிலை - பா
585. ணேரிருணடுநாள் - பா
586. சிலப். 24
587. வருவ மென்னும் - பா
588. பகுவாய்ப் பல்லி - பா
589. வீநறுமுல்லை - பா
590. னெல்லிப் பரீஇயர் - பா
591. தைஇய - பா
592. சிறுகுடிப் பாக்கத் தெம் - பா
593. புறம் 375
594. தொல். பொ. 146
595. S.I.I. Vol. V.No.705
596. ததைஇ - பா
597. கொழுநர்க்காக்கம்-பா
598. வொள்வாண் மலையன்-பா
599. உண்மையதெவனோ-பா
600. புறம் 248
601. ஆரிய வர்த்தம் வேறு; அது கங்கைபாயும் நாடு
602. புறம் 125
603. A.R. No.629-32 of 1912.
604. தொல். பொ. 40
605. நிலஞ்செலச் செல்லாக் - பா
606. பெண்டிரீ னஞ்சித் தீரிய-பா
607. னம்லிட்டு-பா
608. வீழ்ந்தன நிகர்ப்பத் - பா
609. படுத்தல்-பா
610. தொல். பொ. 572
611. தொல் எழுத்து 204
612. அகம் 311
613. நற் 255
614. ஐங் 14
615. அகம் 327
616. வெண்மண லழுவத்து-பா
617. கான்முனையகைய-பா
618. பெய்த்திணிது-பா
619. வளர்த்தது-பா, வளர்த்து-பா
620. நும்மினும் -பா
621. நலனே-பா
622. விளரிசை கடுப்ப-பா
623. நிறைபடு நீழல்-பா
624. ஐங். 5
625. பொருந 214-5
626. சிலப் 8: 42
627. அகம் 103
628. தொல் சொல் 276
629. தொல் பொ 238
630. மேற்படி, மேற்படி. 111
631. மேற்படி, மேற்படி. 242
632. மேற்படி, மேற்படி 557
633. வுணர்ந்த வரிய வன்னையைக் - பா
634. குறள் 167
635. முருகு 43-4
636. லீற்றுக்குலை - பா
637. தாளம் போத்தை-பா
638. யுறையவும்-பா
639. துயங்சினை-பா
640. அற்றுமாகுமஃ தறியா தோர்க்கே-பா
641. வீழ்ந்த கொண்டி மல்லன் மார்பு-பா
642. இவ்வடி அச்சுப்பிரதியில் இல்லை. பலர்புகழ் நன்னகர்; பலர்படி மூதூர்-பா

643. மடுத்தனன்-பா
644. புல்லுமற் றெவனொ-பா
645. தொல். பொ. 516
646. பொருந 208
647. குறள் 809
648. நற் 18
649. ஐங் 171
650. ஐங் 84
651. கொள்கை யழிமணற்-பா
652. சுடுவான் போல நோக்கும்-பா
653. பொருந 215
654. தொல் பொ 39
655. S.I.I. Vol V No.1407
656. 190 of 1894 at Tiru Vallam
657. விட்டதெ னலத்தோ னவ்வயிற்-பா
658. தவட்கவன்-பா
659. காதலனென்னுமோ-பா
660. டொரைத்த யானை-பா
661. குவைஇ-பா
662. யாழோர்த்தன்ன-பா
663. யொழிக்கின் பாடொராங்கு-பா
664. குன்றுகெழு நாடன் முறையிணுரே-பா
665. குறள் 983
666. தொல் சொல் 504
667. குறுந் 330
668. அகம் 276
669. குறள் 1130
670. மகிழ்தலை-பா
671. கண்டிசின்-பா
672. மந்நாளே-பா
673. புறம் 240
674. கலி 145
675. தொல். பொ. 232
676. கலி. 14
677. கரைபெயர்-பா
678. தேரோ-பா
679. மன்னோ-பா
680. மாதவத் தெளிந்த-பா
681. திறந்தே-பா
682. கலி. 103
683. இப்பாட்டின் அடிகள் ஏடுதோறும் சிதைந்து வேறுபட்டுக் காணப்படுவதுவியப்பாகவுளது.

    2.  மூக்குடம்பை - பா

684. பலர்ப்பெற னசைஇதம்-பா
685. நலத்தை நம்பி விடலொல்லானே - பா
686. அன்னியும் பெரியனவனும் விழுமியன்-பா; அன்னியொடு பொரீஇய வவனும் விழுமியன்-பா

687. இருபெருவேந்தர்-பா
688. கழியுமிவ் விருவரதிகலே-பா, நும்மிருவரதிகலே-பா
689. அகம் 255
690. AR.No.316 of 1927-8
691. A.R.No.136 of 1933-4
692. A.r.No.316 of 1927
693. A.R.No.265 of 1926
694. A.R.No.215 of 1917
695. அகம் 126
696. அகம். 45 145
697. மேற்படி. 286
698. தொல். பொ. 173
699. தொல். பொ. 150
700. தொல்கி - பா
701. நோக்கிய பேடை - பா
702. கையற வந்த மையன் மாலை - பா
703. இரீஇய வாகலின் - பா
704. தண்பெய றுளிப்ப - பா
705. “இதுவும் உம்பற்காட்டு இளங்கண்ணனார் பாடியது” என்ற குறிப்பு இங்கே காணப்படுகிறது.

706. Rural Birds - Charles Dixon
    2.  அகம். 346
707. Ornithologists. The Book of Indian Birds - Salim Ali Inter Aix.
708. தொல். பொ. 28
709. Madras Epigraphy Annual Report for 1906, Para 34.
710. தொல். பொ.204
711. நிற்புறங்காக்கும் - பா
712. முறங்கினன் - பா
713. கெடுத்துப் பெறுநன் கலம் - பா கெடுத்துப்படு நன்கலம் - பா
714. வறுத்தலைப் பெருங்களிறு - பா பெருந்தலைப் பெயர்களிறு - பா
715. தமியன் வந்தோன் - பா. தனியன் வந்தோன் - பா.
716. மதுரை 381
717. குறுந் 60 2. தொல். பொ. 112
718. தொல். பொ.114
719. தந்நாட்டு - பா
720. மின்னாதாகும் - பா
721. மடவமன்ற - பா
722. அறுநீர் நெய்தல் - பா
723. தொல் பொ 238
724. செருமிரு மொய்ம்பிற் - பா
725. செருமிகு மொய்ம்பிற் - பா
726. யருஞ்சுரஞ் சென்றனணெருநல் - பா
727. மென்றனிர் - பா 4. அணியியற் குறுமகன் - பா
728. தொல். சொல் 150
729. நற். 293 2. புறம் 272.
730. தொல். பொ. 36
731. மேற்படி. மேற்படி. 276
732. பரியுடை நன்மான் - பா
733. ளலங்குலைக்காந்தள் - பா
734. தேனுடைநெடுவரை - பா
735. வினைமாண்பாவை - பா
736. A.R. No. 321 of 1924
737. நற் 192
738. சித்திரமடல்
739. தொல். பொ.103
740. கல்லிற் றோண்டிய - பா; கல்லுற் றீண்டல - பா
741. நீர்கொண்டு - பா.
742. வோதியின் - பா.
743. பாண்யாழ்க் கடைய - பா. பாணியாழ்க் கடைஇ யாங்கு - பா.
744. நாமவெங் காதலர் - பா.
745. அகம். 230
746. பெரும்பாண். 11
747. குறுந். 232
748. மேற்படி. 37.
749. கொழீயக் - பா
750. சிவந்து சினந்தணிய- பா
751. பல்குற்றன்றே-பா
752. ஊரே-பா
753. வோதை வண்டிமிரும்-பா
754. கோதை மார்பன்-பா
755. பெரும்பூண் - பா
756. மேவிநாமாடிய - பா
757. தொல். சொல் 457
758. புறம் 392
759. தொல். பொ. 212
760. தொல். பொ. 112
761. தொல் பொ. 114
762. மேற்படி, மேற்படி. 289
763. படுநீர்ச்சிலம்பிற்- பா
764. கொடுமடல்-பா
765. மோகி-பா
766. நன்றி விளையிற்றீதொடு வருமென - பா
767. கறிந்தன ளாயிற் - பா
768. ளழியலம்மன்னே-பா
769. தொல் சொல் 260
770. தென்னெறித் -பா
771. வின்நாற்குருகின் - பா
772. வேள்விப -பா
773. பெரும்பாண் 103
774. மலைபடு 230-3
775. பெரும்பாண் 431-5
776. அகம். 273
777. தொல், பொ 93
778. மேற்படி, மேற்படி. 209
    4.  மேற்படி, மேற்படி. 173
779. மேற்படி, மேற்படி. 192
780. குறள் 496
781. தொல். பொ. 234
782. தீதலையெஃகின்-பா.
783. வண்டுமூசு நெய்த னெல்லிடைமலரு மரியலங் கழனி யார்க்கா டன்ன-பா.

784. வலைமாண் மழைக்கண்-பா.
785. மென்மொழித் துகிர்வாய்-பா.
786. குறுந். 165
787. A.R. No. 399 of 1923
    . 3. குறுந் 258.
788. ஐங். 188 2. மேற்படி. 1901.
    3.  குறள். 1274
789. வனமுலை முற்றத் - பா.
790. தொண்பொறிச் சுணங்கின் - பா
791. என்னே நோக்கின என்னை - பா.
792. மணிநீர் - பா.
793. போதல் - பா.
794. நற். 31
795. மரம்பயில் சோலை - பா.
796. துருவினாண்மேயலாகும் - பா.
797. மேயல்பரக்கும் - பா.
798. தழுதனளுறையும் - பா.
799. ஆய்நலம் - பா.
800. கேமமாகு மலைமுத லாறே - பா.
801. லெண்ணுமானெஞ்சே - பா.
802. அகம். 3
803. அகம் 212
804. தொல் பொ. 103
805. மேற்படி, மேற்படி 105.
806. புனிற்றுப் புலம்-பா
807. இரும்புறந்-பா.
808. தேவர் ஏட்டிலும் புதுப்பட்டி ஏட்டிலும், இலமே என்றதன்பின் ஒரு சீர் இருந்து சிதைந்து போயிருக்கிறது.

809. அகம் 306
810. மணி 13 - 51
811. நாமே-பா.
812. வீலநீர்த்தடக்கை-பா.
813. குன்றவெற்பினும் விளையாட-பா.
814. யிருநீர்-பா. யிருங்கழி-பா
815. திதலையம் பொதும்பிற்-பா
816. யான்கண்டி சினே-பா
817. புறம் 252
818. A.R. No. 213 of 1924
819. பல்கநீரிடையிடைப்-பா.
820. பசுவெண்ணிலவின்-பா.
821. மால்பீடு அறியா-பா; மால்பிடரறியா - பா
822. நிறையுறுமதியம் - பா.

823. முடையைமாதோ - பா.
824. குறுந் 184
825. வன்னோ-பா.
826. கணங்கொள-பா.
827. ரொண்டுறை-பா.
828. சேயின் வரூஉம். சேஎய் வரூஉம் - பா
829. முன்னாளும்பர் - பா.
830. கண்படநீராழ்ந்தன்றே தந்தை - பா.
831. னுரைப்பின்; னுண்பல - பா.
832. வாஅர்ந்திலங்கு வாலெயிற்றுப் பொலிந்ததார் - பா.
833. முன்புற்றடக்கை - பா.
834. லம்பினெய்யா - பா.
835. வந்தேன் வாழி; ஈன்றேன்யானே - பா.
836. நும்பெயரே - பா.
837. உன்னியன்னவென் - பா; உன்னிலன்னவுள்ள மொடு - பா
838. துன்ளேன் - பா
839. வாங்கு விசைத்தூண்டில் - பா
840. தாஅய் - பா.
841. அகம் 81.
842. மேற்படி. 19.
843. குறள் 1108
844. A.R. No. 229 of 1929-30
845. A.R. No 65 of 19191
846. கண்ணிகட்டியா - பா
847. தீம்பெரும் பழனத்துப் பொய்கையூர்க்குப் போவோ யாகிற் – பா

848. பொய்வல் ஏணன் - பா